ஆங்கில மூலம் : ஜயதேவ உயன்கொட
சோவியத் சமஷ்டி அரசு
சோவியத் சமஷ்டி அரசு அதன் தோற்றகாலம் முதலாக பல்தேசியங்களின் அரசு (Multinational State) என்ற இயல்பைக் கொண்டதாய் இருந்தது. அந்தச்சமஷ்டி அரசில் பலதேசிய அரசுகள் இணைக்கப்பட்டிருந்தன என்பதையே பல்தேசியங்களின் அரசு என்ற தொடர் குறிப்பிடுகிறது. சோவியத் சமஷ்டியில் 15 யூனியன் குடியரசுகள் சுயவிருப்பப்படி இணைந்திருந்தன. ‘பல்தேசியங்கள்’ என்ற சொல் சோவியத் யூனியனின் 1977 அரசியல் யாப்பிலும் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த அரசியல் யாப்பின் இயல்பினை ‘ஒருங்கிணைத்த சமஷ்டியான பல்தேசியங்களின் அரசு என்ற சொற்தொடர் விளக்குவதாக இருந்தது. 1970 களில் சோவியத் யூனியன் 15 யூனியன் குடியரசுகளையும் 20 சுயாதீனமான குடியரசுகளையும், 10 தேசிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது. சோவியத் அரசியல் யாப்பு யூனியன் குடியரசுகளிற்கு விரிந்த சுயாட்சி அதிகாரத்தை வழங்கியது. அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ‘தேசியங்களிள் பிரிந்து போகும் உரிமை’ வாசகம் சோவியத் அரசியல் யாப்பின் தனித்துவமான அம்சமாக விளங்கியது. 1977ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் 72ஆம் உறுப்புரை “USSR” இல் இருந்து சுயவிருப்புப்படி பிரிந்து செல்லும் உரிமையை உறுதி செய்தது. தேசிய இனங்கள் ‘சுய விருப்பின்படி கூட்டாக இணைதல்’ என்ற கருத்து 1924ஆம் ஆண்டிலேயே சோவியத் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டிருந்தது. 1924 ஆண்டு அரசியல் யாப்பின் ‘அறிமுகம்’ என்ற பகுதியில் காணப்படும் வாசகங்கள் சில வருமாறு:
‘சமத்துவமான உரிமைகளுடன் மக்களின் சுய விருப்பப்படியான கூட்டிணைவு’.
‘ஒவ்வொரு குடியரசுக்கும் தம் சுய விருப்பத்தின் படி யூனியனில் இருந்து பிரிந்து செல்லும் உரிமை உள்ளது’.
‘தற்போதுள்ள குடியரசுகளும், எதிர்காலத்தில் தோன்றும் குடியரசுகளும் யூனியனில் இணைந்து கொள்ளலாம்’.
கம்யூனிஸ்ட் கட்சியில் ரஷ்யர்கள் பெரும் எண்ணிக்கையிலும், ரஷ்யர் அல்லாத சிறுபான்மையினத்தினர் சிறிய அளவிலும் இருந்தனர்.1924இல் லெனின் சோவியத் சமஷ்டியை உருவாக்கியபோது கட்சியின் பெரும்பான்மை ரஷ்யர்களுக்கும், சிறுபான்மை ரஷ்யர்கள் அல்லாதவர்களுக்கும் இடையில் வரலாற்றுச் சமரசம் ஒன்றைச் செய்தார் (Smith 1995:159). இந்தச் சமரசத்தின் படி சமஷ்டி அரசை ஒற்றைத்தன்மையுடைய கட்சி நிர்வகிப்பதென முடிவு செய்யப்பட்டது. இச்சமரசம் ஊடாக சோவியத் நாட்டின் தேசிய இனங்கள் செறிந்துள்ள பிராந்தியங்கள் பண்பாட்டுத்துறையிலும் நிர்வாகத்திலும் குறிப்பிடக்கூடிய அளவு சுயாதீனத்தைப் பெற்றன. பழைய ரஷ்ய சாம்ராஜ்யத்தின் இந்தப் பகுதிகள் தமது இறைமை, சுதந்திரம் என்ற கோரிக்கைகளை விட்டுக் கொடுத்து இவ்வகைச் சுயாதீனத்தைப் பெற்றன. பிராந்தியங்கள் ‘யூனியன் குடியரசுகள்’ என்ற பெயரைப் பெற்றன. இருந்த போதும் பிராந்தியங்கள் பெற்ற சுயாதீனம் சோவியத் ரஷ்யாவின் நீடித்த நிரந்தர இயல்பாக இருந்தது என்று கூற முடியாது.
1919 ஆம் ஆண்டளவிலேயே பிராந்தியங்களின் சுயாதீனம் என்பதற்கு மாறாக அவை ஒருநாள் மீள இணைப்புப் பெறவேண்டும் என்ற ஒரு எதிர்ப்பார்ப்பும் போல்ஷெவிக் கட்சிக்குள் ஒரு வாதமாக முன்வைக்கப்பட்டது என்பது சுவாரசியமானதொரு விடயம். 1919 மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு செயல் திட்டமுன் மொழிவு சுயநிர்ணய உரிமையை ஏற்று உறுதி செய்தது. அது பிரிந்து செல்லும் உரிமையையும் உறுதி செய்தது. இருப்பினும் இச்செயல்திட்ட முன்மொழிவில், ரஷ்யர் அல்லாதோர் வாழும் பகுதிகளில் கம்யூனிஸ்டுகளின் அமைப்பும் செல்வாக்கும் மீள் இணைப்புக்கான இயக்கம் நோக்கிய உந்துதலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. சோவியத் அரசியல் யாப்புகளில் இடம் பெற்ற பிரிந்து போகும் உரிமை பற்றிய உறுப்புரை முக்கியத்துவம் அற்றது. சோவியத் அரசு தன்னுடன் இணைந்திருந்த அலகுகளுக்குள் மாற்றுக் கருத்தையோ எதிர்ப்புக்களையோ சகித்துக் கொள்ளத்தயாராக இருக்கவில்லை. பெரும்பாலான அரசியல் விமர்சகர்களின் அபிப்பிராயமும் இதுவே ஆகும்.
1980களில் சோவியத் சமஷ்டி வீழ்ச்சியடைந்தது வரையான காலப்பகுதியில் அதனை ஒன்றாக இணைத்து வைத்திருந்த காரணிகள் எவை? மேற்குலக விமர்சகர்கள், சோவியத் அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியமான பாத்திரத்தை வகித்தது. அது யூனியனை பிரிவுபடாமல் ஒன்றிணைத்து வைத்திருந்ததில் முக்கியமான பங்கு வகித்தது என்று கூறுவர். சோவியத் சமஷ்டியை, தீவிரமான மத்தியப்படுத்தல் இயல்புடைய ஒரு கட்சி ஆட்சிமுறை நிர்வகித்தது. போல்செவிக் கட்சியென்று முன்னர் அழைக்கப்பட்டதும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டதுமான கட்சியின் அதிகாரம் மேலோங்கியது. சுயநிர்ணய உரிமையை நடைமுறையில் எந்தவொரு குடியரசும் பிரயோகிப்பது சாத்தியமில்லாமல் போயிற்று. குடியரசுகளின் இனக்குழுமங்களின் மேலோர் குழுக்களை கட்சி இயந்திரத்துடன் இணைத்து ஊடுருவல் மூலம் தம் அதிகாரத்தை சோவியத் அரசின் நிர்வாகிகள் பலப்படுத்தினர். இவ்வாறு அவர்களின் கட்டுப்பாடு அதிகரித்த காரணத்தால் குடியரசுகளில் பிரிந்துபோகும் கோரிக்கை தோன்றவில்லை. இல்லாவிடில் அக்குடியரசுகள் பிரிந்து போக முடிவு செய்திருக்கலாம், இனக்குழும பிராந்தியங்களின் உத்தியோகத்தர்களது நியமனம் பதவி உயர்வு, பதவிநீக்கம் ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம் மத்திய அரசு உள்ளூர் பிராந்திய மட்டத்தில் கட்சியினதும், அரசினதும் தலைமைப்பதவிகளில் இருந்த அரசியல் தலைமையின் விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டது. அத்தோடு உள்ளூர் பிராந்திய நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளுக்கு வெளியாட்களை (பெரும்பாலும் ரஷ்யர்களை) நியமிப்பதன் மூலம் மத்தியின் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கவும், மத்தியில் இருந்து பிறப்பிக்கப்படும் கொள்கை முடிவுகளை விரைவில் செயற்படுத்தவும் வழிசெய்தனர் (Smith 1995-158) என்று ஒரு விமர்சகர் கூறியிருப்பது கவனிப்புக்குரியது. கருத்தியல் ரீதியிலும், தந்திரோபாய ரீதியிலும் கட்சி முக்கியம் பெற்றதாகவும் இருந்தது. கட்சி இயந்திரத்தின் ஒழுங்கமைப்பு சோவியத் யூனியனில் ஐக்கியத்தைப் பேணியது. கருத்தியல் நிலையில் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கருத்து இனக்குழும உணர்வுகளையும் இனக்குழும விசுவாசத்தையும் கடந்த பொது உணர்வாக வளர்க்கப்பட்டது. சோவியத் மக்கள் அவர்கள் எந்தத் தேசிய இனத்தையோ, இனக்குழுமத்தையோ சேர்ந்தவர்களாக இருந்தாலும் ‘உழைக்கும் மக்கள்’ என்னும் வர்க்கம் என்ற முறையில் ஒன்றுபட்டவர்கள் என்றும் நோக்கப்பட்டனர். அவர்களின் இனக் குழும பண்பாட்டு அடையாளங்கள் அல்ல ,உழைப்பாளர் என்ற வர்க்க அடையாளமே முக்கியம் எனக் கருதப்பட்டது. சோவியத் அரசு உள்ளடக்கத்தில் சோஷலிச அரசாகவும் வடிவத்தில் தேசிய அரசாகவும் இருந்தது. அதன் சோஷலிச உள்ளடக்கம் என்ற அம்சம் வர்க்க அடிப்படையிலான ஒன்றிணைதல் அழுத்தம் பெறக் காரணமாயிற்று.
அபிவிருத்தியில் சமத்துவத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சோவியத் அரசு சமூக பொருளாதார சமத்துவம் மறுபங்கீடு என்பனவற்றில் கூடிய அக்கறை செலுத்தியது. இவை சமஷ்டிக்கொள்கையில் உள்ளடக்கப்பட்டன. பிராந்தியங்களுக்கிடையேயும், குடியரசுகளுக்கிடையேயும், பொருளாதார நவீனத்துவம் மூலம் சமூக நலனையும், சமத்துவத்தையும் வளர்ப்பதும், உத்தியோக முறையிலான அரசுக்கொள்கையாக விளங்கின. குறைந்த விருத்தியுடையனவும், பின்தங்கியனவுமான இனக்குழுமங்களின் பிராந்தியங்களுக்கு வளங்களையும், முதலீடுகளையும் மறுபங்கீடு செய்தல் சோவியத் சமஷ்டியின் மிகச் சிறந்த பண்பாக விளங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி சிறுபான்மை இனத்தவர்களின் பண்பாடு, கல்வி, சமூக உரிமைகள் என்பனவற்றில் நிறைந்த கரிசனை காட்டியது. அரசும் இவ்விதமே அக்கறை செலுத்தியது, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய விடயங்களில் பின்தங்கிய பகுதிகளிற்கு சலுகைகள் வழங்கப்பட்டன.
தேசிய இனங்களின் பண்பாட்டை நிறுவன ஆதரவு மூலம் பாதுகாக்கும் திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன. உள்ளூர் புத்திஜீவிகளையும், சிறப்புத் தேர்ச்சியுடையவர்களையும் கட்சியிலும், அரச நிர்வாகத்திலும் சேர்த்துக் கொள்ளும் திட்டம், ஸ்டாலினுக்குப் பிற்பட்ட காலத்தில் சிறப்பாகச் செயற்படுத்தப்பட்டது.
குருசேவ்விற்குப் பிந்திய சோவியத் யூனியனில் 1970களில் இனக்குழுமப் பிரச்சினைகள் வெளிப்பட்டன என்று அரசியல் அவதானிகள் குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும் சோவியத் கொள்கை வகுப்பாளர்கள் அக்காலத்தில் இதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இனக்குழும முரண்பாடுகள் வெளித்தெரியாமல் உள்ளடங்கிப் போயிருந்தன. இவை பழைய ரஷ்ய சாம்ராஜ்யத்தில் இருந்து புரட்சிக்குப் பிந்திய ரஷ்யாவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட முரண்பாடுகளாகும். இவை 1960களிலும் 1970களிலும் ரஷ்யர் அல்லாத குழுவினரிடையே வெளிப்படத் தொடங்கின (Rakowska – Harmstone, 1977). நவீனமயமாக்கல் துரிதமாக்கப்படுதல், குடியரசுகளின் பண்பாட்டு மறுமலர்ச்சி என்ற இரண்டும் இனக்குழுமங்கள் மத்தியில் இனக்குழும அடையாள உணர்வுகளை வலியுறுத்தும் போக்கைத் தூண்டின. கல்வி கற்று முன்னிலைக்கு வந்த பிரிவினர்கள் தமது இனக் குழுமத்தின் சார்பில் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். 1970களில் சமூக அரசியல் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இனக்குழும உணர்வும், சிக்கல்களும் தீவிரமடைந்தன. இருப்பினும் அக்காலத்தில் இருந்து வந்த முறைமையின் ஒழுங்கு விதிகளைப் பேணி ஒழுகும் மனப்பான்மை நிலவியதால் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தன. கூடியளவு சுயாதீனத்தைக் கோரும் சக்திகள் அக்காலத்திலேயே தலைகாட்டின. சோவியத் ஆட்சியாளர்களும் இனக்குழும பிரச்சினைகளை உதாசீனம் செய்யும் போக்குடையவர்களாய் அக்காலத்தில் செயற்படவில்லை என்பது முக்கியமான விடயம்.
பிரஷ்னேவ் காலத்தில் (1962- 1888) நாட்டின் ரஷ்யர் அல்லாத இனங்களின் குடியரசுகளின் பிரச்சினைகளில் சமசரம், இணக்கப்பாடு என்பனவற்றை மொஸ்கோ ஆட்சியாளர்கள் கடைப்பிடித்தனர். இனக்குழுமங்கள் மத்தியில் அமைதியின்மையினை அவதானித்த ஆட்சியாளர்கள் இனக்குழுமத் தலைவர்களை கட்சிக்குள் உள்ளீர்க்கும் புதிய தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்தனர் என்று கிரஹாம் சிமித் (1998) கூறியுள்ளார். சோவியத் யூனியனில் சோஷலிச நவீனத்துவத்தின் பயனாக அவசியதேவையாக அமைந்த பல பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை இந்தத்தந்திரோபாயம் தடைசெய்தது. ‘அமைப்பியல் பொருளாதார மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் மத்திய அரசின் விருப்பின்மை (Smith 1995:160) பிரஷ்னேவ் காலத்தில் வெளிப்பட்டது. அக்காலத்தில் சோவியத் நாட்டின் ஒட்டுமொத்த உத்தியோகக் கொள்கைளை நெறிப்படுத்துவதாக பழமைவாதம் விளங்கியது. பின்னடைந்து தேக்கமுற்றிருந்த பொருளாதாரத்தை மறுசீரமைப்புச் செய்வதற்குப் பதிலாக மத்தியில் இருந்து உதவிகள் மட்டுமே கிடைத்தன, பிரஷ்னேவ் காலத்தில் குடியரசுகளிற்கிடையே ஏற்பட்டுக் கொண்டிருந்த சமத்துவமின்மையும் உணரப்பட்டது. பால்டிக் குடியரசுகளும், மத்திய ஆசியக் குடியரசுகளும் ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியனவாய் இருந்தன.
கோர்பசேவ் சீர்திருத்தங்கள் 1980 களில் கொண்டுவரப்பட்ட போது அதன் தாக்கம் விசித்திரமான முரண்பாடுகளை வெளிப்படுத்தியது. கோர்பசேவ் கிளாஸ் நொஸ்ட் (திறந்த கொள்கை), பிரஸ்ரொய்க்கா (மீள்சீரமைப்பு) என்ற இரட்டைக் கொள்கைகளை அமுல்படுத்தினார். சோவியத் யூனியனில் பொருளாதார அரசியல் சீர்திருத்தங்கள் ஒரு வரலாற்றுத் தேவையாக உருவாகியிருந்த பின்னணியில் கோர்பசேவ்வின் இரட்டைக்கொள்கைகள் காலம் கடந்த நிலையில் வந்து சேர்ந்தன. கோர்பசேவ் இந்தச் சீர்திருத்தங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளை, சமஷ்டி அரசை உடையச் செய்யும் புதிய சக்திகளை அந்தச்சீர்திருத்தங்கள் தோற்றுவித்தன. 1985 இல் கோர்பசேவ் பதவியேற்ற சமயத்தில் சோவியத் குடியரசுகள் சிலவற்றில் இனக் குழும அரசியல் உறுதியற்ற தளம்பல் நிலைமையை உருவாக்கியிருந்தது. கட்சியிலும் குடியரசுகளின் அரச நிர்வாக அமைப்புகளிலும் முக்கியமான இடம் பிடித்திருந்த புதிய உயர்குழாம் இனக்குழும் அரசியல் இயக்கத்தின் முன்னணியில் செயற்பட்டுக் கொண்டிருந்தது. கோர்பசேவ் கஜகஸ்த்தான் குடியரசில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடக்கிவைத்தார், உள்ளூர் கட்சிச் செயலாளர் ஊழல் குற்றச்சாட்டு, அதிகார துஸ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவரிடத்திற்கு ரஷ்யர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன் பயனாக ரஷ்ய எதிர்ப்புக் கலகங்கள் 1986 -1987 இல் அங்கு ஏற்பட்டன.
இனக்குழும மோதல்கள் பிரஸ்ரொய்க்கா மறுசீரமைப்புத் திட்டத்திற்கு மட்டுமல்ல, சோவியத் அரசின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக மாறிவிட்டன என்பதைக் கோர்பசேவ் 1980ஆம் ஆண்டில் ஒப்புக் கொண்டார். கோர்பசேவ் ‘மேல் இருந்து சீர்த்திருத்தம்’ என்ற கொள்கையை அமுல்படுத்திக் கொண்டிருந்த போது அவரது கொள்கைக்கு எதிராகத்தோன்றிய எதிர்ப்பியக்கம் கீழ் இருந்து சீர்திருத்தம் என்ற வடிவத்தைப் பெற்றதோடு இவ்வியக்கம் சோவியத் சமஷ்டி அரசுக்கு எதிரான இனக்குழும எதிர்ப்பாகவும் வெளிப்பட்டது. நகார்ணோ-கற்பாக் பிரச்சினையும் இக்கட்டத்திலேயே தலைதூக்கியது. நகார்ணோ- கற்பாக்பகுதி அஜர்பைஜான் குடியரசின் எல்லைக்குள் இருந்தது. அங்கு ஆர்மீனியர்கள் செறிந்து வாழ்ந்தனர். இப்பகுதியை ஆர்மீனியாவுடன் இணைக்கும்படி ஆர்மினியக் குடியரசின் அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்தனர், ஜோர்ஜியாவிலும் இனக்குழும உணர்வு கிளர்ந்தெழுந்தது. ஜோர்ஜியா குடியரசுக்கு கூடிய சுயாட்சி அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது (White, 1993:166-167). இவ்வாறாக கோர்பசேவ் மேலிருந்து கீழ்நோக்கிக் கொண்டு வந்த சீர்திருத்தங்களின் பதில்விளைவாக கீழிருந்து மேல்நோக்கிய இனக்குழும புரட்சிகள் கிளம்பி எழுந்தன. இப் புரட்சிகள் எல்லாக் குடியரசுகளிற்கும் பரவின. 1990 களில் பால்டிக் குடியரசுகள் தமது சுயாதீனத்தை வலியுறுத்தும் வகையில் இனக் குழும அணிதிரட்டலைச் செய்தன. இதன் விளைவாக அவை ரஷ்யச் சமஷ்டியில் இருந்து விலகிச் சுதந்திர நாடுகளாக ஆகின.
இனக்குழும முரண்பாடுகள் தீவிரம் பெறுதல்
சமஷ்டி, சோஷலிசம் என்ற இரண்டையும் சோவியத் யூனியன் தழுவிக்கொண்ட போதும், அங்கு இனக்குழும அரசியல் ஏன் மேற்கிளம்பியது? புலமைத்துறையினரின் நூல்களிலும், கட்டுரைகளிலும் இதற்கு இரண்டு வகையான விளக்கம் தரப்பட்டுள்ளது. நவீனமயமாதல் செயல்முறை சோவியத் முறைமைக்குள் தவிர்க்க முடியாத வகையில் இனக்குழும அரசியலைப் புகுத்தியது. அதன் பயனாக சோவியத் சமஷ்டி சீர்குலைந்தது என்ற வாதத்தை முன்வைக்கின்றது. Rakowska-Harmstone (1977) இந்தக் கருத்தை அடிப்படையாக கொண்டு விளக்கம் தந்துள்ளார். அவரது நவீனமயமாதல் வாதத்தை பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட நவீனமயமாதல் கொள்கை சோவியத் பொருளாதார வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாயிற்று. கைத்தொழில் மயமாக்கம், கூட்டுப் பண்ணைமயமாக்கம், தொடர்பாடல், சமூக சேவைகள் என்பனவற்றின் விருத்தி என்பன சோவியத் சமூகத்தை தலைகீழாக மாற்றி மறுகட்டமைப்புச் செய்தன.
இவ்வாறான நவீனமயமாதலினால் எல்லா இனக் குழுமங்களும் நன்மை பெற்றன. இவ்வினக் குழுமங்களில் இருந்து நவீன உயர் குழாம்களும் தோற்றம் பெற்று, அதிகாரக்கட்டமைப்பில் தம்மைச் சேர்த்துக்கொண்டன. இருப்பினும் நவீனமயமாதலின் பயன்களின் பங்கீட்டில் இனக்குழுமங்களிடையே சமத்துவம் காணப்படவில்லை. நவீன மயமாதலால் இனக்குழுமங்களிற்கிடையே இருந்துவந்த ஏற்றத் தாழ்வுகள் மறையாமல் மேலும் நீடித்ததோடு குழுமங்களிற்கிடையே சமத்துவமின்மையும் ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்தன. பால்டிக் குடியரசுகளும், ஐரோப்பியக் குடியரசுகளும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் அபிவிருத்தியையும் பெற்றன. ஆனால் மத்திய அரசுக் குடியரசுகளில் ஒப்பீட்டளவில் பின்னடைவு இருந்தது. ரஷ்ய உயர்குழாத்தோடு ஒப்பிடும்போது ஏனைய குடியரசுகளின் உயர் குழாம்களின் வளர்ச்சி பின்தங்கியதாக இருந்தது. ரஷ்யர்களை விட பிற இனத்தவர்கள் தாம் ஒடுக்குமுறைக்குள்ளாவதையும், இரண்டாம் தரப் பிரஜை என்ற நிலையில் இருப்பதையும் உணர்ந்தனர். எதிர்பார்ப்புக்களின் உயர்வு, குரோத உணர்வு வளர்வதற்குக் காரணமாயிற்று.
எல்லைப்புறக் குடியரசுகளின் இனக்குழும உயர் வகுப்பினர்கள் தமது புதிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு கருவியாக இனக்குழும ஒருங்கிணைவை உபயோகித்தனர். தமது மக்களை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டினர். இவ்வாறாக பழைமையான இனக் குழும உணர்வு புதிய அரசியல் அர்த்தமும் மதிப்பும் பெறுவதாயிற்று.
சோவியத் யூனியனில் ஏற்பட்ட பண்பாட்டு நவீனத்துவமும் விசித்திரமான முரண்பாடு ஒன்றைத் தோற்றுவித்ததை Raakowska – Hamstone குறிப்பிட்டுள்ளார். சோவியத் கொள்கையாக இனக்குழுமச் சமஷ்டி ஊக்குவிக்கப்பட்டு தேசியப்பண்பாடுகள் விருத்தியுற்றன. பிரதான இனக்குழுமங்களின் தேசியப் பண்பாடுகள் வளர்க்கப்பட்டன. தேசிய மட்டத்தில் சோஷலிசம் என்ற உள்ளடக்கம் கொண்டிருந்த போதும் எல்லா முக்கியமான தேசிய இனங்களும் தத்தம் பண்பாடுகளை வளர்ச்சி பெறச் செய்தன. இத்தேசியப் பண்பாடுகள் எல்லா இனக்குழுமங்களிற்கும் பொதுவான சோஷலிசப் பண்பாட்டை வளர்க்கும் என்றும், பிற இனக்குழுமங்களுடன் நட்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தேசிய மொழிகள் வளர்ச்சியடைந்தன. கல்வியின் ஊடகமாக உள்ளூர் மொழிகள் இருந்தன. அழிந்து போகும் நிலையில் இருந்த மொழிகள் பாதுகாப்பை பெற்று மறுமலர்ச்சியும், வளர்ச்சியும் பெற்றன. பண்பாட்டுப் பன்மைத்துவமும், இனக்குழுமப் பண்பாட்டு வளர்ச்சியும் ஊக்கம் பெற்றன அத்தோடு எல்லாவற்றுக்கும் பொதுவான சோஷலிசப் பண்பாட்டை உட்புகுத்துதல் ரஷ்யமயமாக்கம் (Russification) எனக் கருதப்படலாயிற்று, சோவியத் யூனியனின் பொது மொழியாக ரஷ்யன் மொழி விளங்கியது. அதனை நாகரிகத்தின் மொழியாக கருதும் மனப்பாங்கு வெளிப்பட்டது. தேசிய மொழிகளின் மறுமலர்ச்சியால் எழுந்த இனக்குழுமப் பண்பாட்டு அழுத்தம் காரணமாக ரஷ்ய மயமாக்கல் என்னும் சோவியத் கொள்கைக்கு எதிரான உணர்வுகள் தோன்றின.
இனக்குழும உணர்வுகளின் மறுமலர்ச்சியும், அதன்பயனாக சோவியத் யூனியன் அழிவுற்றுச் சிதறியதையும் பற்றிய இரண்டாவது வாதம், சோவியத் யூனியனில் ஜனநாயகம் இல்லாது மறைந்தது தான் இனக்குழும மோதல்கள் கட்டுப்பாட்டை இழந்து போனமைக்கு காரணம் என்று கூறியது. சோவியத் அரசியல் முறை, ஒரு கட்சி ஆட்சியாகவும் சர்வாதிகார இயல்புடையதாகவும் இருந்தது. ஸ்டாலினிச ஆட்சியில் இரக்கமற்ற சர்வாதிகார அரசு உருவாக்கப்பட்டது. இருப்பினும் ஸ்டாலினிக்கு பிற்பட்ட காலத்தில் அந்த முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. சோவியத் அரசு ஒரு கட்சி அரசாகவே தொடர்ந்தது. 1980களில் கோர்பசேவ்வால் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தச் சீர்திருத்தங்கள் நிர்வாகச் சீர்திருத்தங்களாகவே இருந்தன. அரசியல் பன்மைத்துவத்தைக் கொண்டு வரக் கூடிய சீர்திருத்தங்களாக அவை இருக்கவில்லை. ஒரு கட்சி ஆட்சியின் கீழ் சமூகத்தில் நிலவிய சமத்துவமின்மைகள் மூடி மறைக்கப்பட்டன. இந்நிலையில் இனக் குழும ரீதியில் மக்களை ஒன்று சேர்த்து எதிர்ப்பை வெளியிடுதலே ஒரே ஒரு வழியாக இருந்தது. காலப்போக்கில் இவை எதிர்ப்பு நடவடிக்கைகளாகவும், கிளர்ச்சிகளாகவும் வெளிப்பட்டன.
யுகோசிலாவியா
மேற்குநாட்டு அரசியல் விஞ்ஞானிகளின் பார்வையில் யுகோசிலாவியா உண்மையான சமஷ்டியரசு என்றும் அது அந்நாட்டின் தேசிய இனங்களிற்கு கூடியளவு பிராந்திய சுயாதீனத்தை வழங்கிய ஒரு சமஷ்டி என்றும் கருதப்பட்டது (Bertsch 1977), யுகோசிலாவியா சோஷலிச சமஷ்டியாக இருந்தது. அதற்கும் சோவியத் யூனியனிற்கும் பல வித்தியாசங்கள் இருந்தன. அந்நாடு உருவாக்கம் பெற்ற சில ஆண்டுகளுக்குள் சோவியத் முகாமில் இருந்து அது விலகி மேற்குலகுடன் இணைந்து கொண்டது. யுகோசிலாவியா சர்வதேச நாணய நிதியத்திலும் GATT என்ற உலக வர்த்தக அமைப்பிலும் சேர்ந்து கொண்டது. யுகோசிலாவியாவின் சோஷலிச மாதிரியும் சோவியத்யூனியன் மாதிரியில் இருந்து வேறுபட்டது. அங்கு மத்தியப்படுத்தப்பட்ட திட்டமிடுதலும், அலுவலர் ஆட்சிமுறையின் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. யுகோசிலாவியா சுயநிர்வாகம் (Self management) என்ற மாதிரியை நடைமுறைப்படுத்தியது. அம்முறையில் பொருளாதாரமும், பொது நிர்வாகமும் பரவலாக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளும் நிறுவனங்களும், அலுவலகங்களும் தாமாகவே சுயமாக இயங்கக்கூடியனவாக மாற்றப்பட்டன. இருந்தபோதும், சோவியத் யூனியனிற்கும் யுகோசிலாவியாவிற்கும் பொதுவான ஒற்றுமை ஒன்று இருந்தது. யுகோசிலாவியா இனக்குழும சமஷ்டியைக் கொண்டதாக இருந்தது. அங்கு எல்லா மக்களையும் இணைக்கும் பொதுவான பிணைப்பாக சோஷலிசம் விளங்கியது. யுகோசிலாவிய மக்கள் அரசியல் ரீதியில் வெவ்வேறு சமஷ்டி அலகுகளில் இணைக்கப்பட்டு இருந்தபோதும் சோஷலிசம் அவர்களுக்குப் பொதுவான பிணைப்பாக இருந்தது. யுகோசிலாவியாவின் சமஷ்டிமுறை, சமஷ்டி அலகுகளிற்கு சோவியத் யூனியனை விடக் கூடியளவு சுதந்திரத்தை வழங்கியது.
1945இல் அது உருவாக்கப்பட்ட பொழுது அது தீவிரமான மத்தியப்படுத்தல் கொண்ட தேசமாக இருந்தது. விரைவில் அது சமஷ்டியாக மாறியது. காலப்போக்கில் கொன்பெடரல் அரசு (Confederal State) என்று சொல்லக்கூடிய நிலைக்கு அது மாற்றம் பெற்றது. சுயநிர்ணய உரிமை என்ற கருத்தையும், பிரிந்து போகும் உரிமை என்பதையும் யுகோசிலாவியா ஏற்றுக் கொண்டது. அதன் அரசியல் யாப்பின் முதலாவது உறுப்புரை யுகோசிலாவியாவின் குடியரசை ‘ஒரு மக்கள் சமஷ்டி அரசு’ என்றும் ‘சமத்துவமான மக்களின் சமுதாயம்’ என்றும் அவர்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்களாதலால் ‘பிரிந்து போகும் உரிமை’ உடையவர்கள் என்றும் வரையறை செய்தது. யுகோசிலாவியச் சமஷ்டி குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியில் உருவானது என்பது முக்கியமானது. முதலாவது உலக யுத்தத்தின் முடிவில் செயற்கையாக உருவான அரசுருவாக்கமாக அதனைக் கருத முடியும். அன்றைய வரலாற்றுச் சூழ்நிலையின் விளைவு யுகோசிலாவிய அரசு, ஒட்டோமன், ஆஸ்திரியா – ஹங்கேரி என்ற இரு சாம்ராஜ்ஜியங்களின் உடைவினால் ஐரோப்பாவின் அரசியல் நிலவரைப்படம் மாற்றமுற்றது. போரில் வெற்றி பெற்ற பெரும் வல்லரசுகள் சேர்த்து முதலாவது யுகோசிலாவிய அரசைத் தோற்றுவித்தன. இவ்விதம் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது யுகோசிலாவிய அரசு தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவ்வரசின் கீழ் வாழ்ந்த சேர்பியர், குரோசியர் பொஸ்னிய முஸ்லிம்கள், மசிடோனியர், ஆகிய பல்வேறு இனக்குழுமத்தைச் சேர்ந்தோரிடையே தீவிர மோதல்கள் நிகழ்ந்தன. யூகோசிலாவிய அரசைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சேர்பியர்களின் உயர்குழாத்தின் ஆதிக்கத்தால், இனச்சுத்திகரிப்பு, சிறுபான்மை இனக்குழுமங்களை ஒடுக்குதல் ஆகிய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. யுகோசிலாவியாவின் இனக்குழுமங்களின் உயர் வகுப்பினர்களின் மத்தியில் இரண்டாம் உலகயுத்தகாலத்தில் வன்முறை மோதல்கள் இடம்பெற்றன. இந்த மோதல்களின் மத்தியில் டிட்டோ தலைமையில் அதிகாரத்திற்கு வந்த கம்யூனிஸ்டுகள் யுகோசிலாவிய அரசைப் பாதுகாத்தல் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தனர். (D’ Souma) 1994) டிட்டோவின் கம்யூனிஸ்ட் கட்சி சோஷலிசம், சமஷ்டி என்ற இரண்டு அடிப்படைகளில் யுகோசிலாவிய அரசை மீளக் கட்டியமைப்பதற்கு முடிவு செய்தது.
1980களில் சோஷலிச சமஷ்டி அரசான யுகோசிலாவியா எதிர் கொண்ட பிரச்சினைகளுக்கும், அக்காலத்தில் சோவியத் யூனியன் எதிர் கொண்ட பிரச்சினைகளுக்கும் அதிக வேற்றுமை இருக்கவில்லை. இனக்குழும – தேசிய பகைமை உணர்வு நாட்டில் அதிகரித்தது. இந்நிலையில் சமஷ்டி அலகுகளை ஒன்றிணைத்து வைத்திருப்பது மிகவும் கடினமான ஒரு பணி. சமஷ்டி அரசு இப்பணியை நிறைவேற்றும் வலுவுடையதாய் இருக்கவில்லை. சோவியத் யூனியனை விட யுகோஸ்லாவியாவில் சமஷ்டி அலகுகளிற்கு கூடியளவு சுயாதீனம் இருந்தது. யுகோசிலாவிய அரசு இறுதியில் பிளவுண்டது. இதற்கான காரணங்கள் எவை என்ற கேள்விக்கான பதிலாக ஒற்றைக் காரணி விளக்கத்தை கூறுதல் முடியாது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பலகாரணங்கள் இருந்தன. இது போன்றே யுகோசிலாவியாவின் உடைவுக்கும் பிளவுக்கும் பின்னணியாக பல காரணிகள் செயற்பட்டன. யுகோசிலாவியாவின் நவீன கால வரலாறு, யுகோசிலாவியா என்ற பல்தேசிய அரசு, பூகோளச் சூழ்நிலையில் உருவாகியிருந்த வரலாற்றுப் பின்புலம், ஆகியவற்றின் மூலமே அதன் உடைவுக்கான காரணங்களை விளங்கிக் கொள்ள முடியும்.
யுகோசிலாவியாவின் பிரச்சினைகள் பற்றிய மார்க்சிய விளக்கங்களில் ஒன்றின் படி,1980களில் யுகோசிலாவியாவின் அரசியல் நெருக்கடிகளுக்கும் அதன் பொருளாதார நெருக்கடிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு எடுத்துக் காட்டப்பட்டது. உதாரணமாக Michel Chossudovsky (1996) இவ்வகை விளக்கம் ஒன்றைக் கூறியுள்ளார். 1983 – 84 ஆண்டுகளில் சர்வதேச நாணயநிதியம் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை யுகோசிலாவியாவில் அமுல்படுத்தியது. இத்திட்டம் டிட்டோவுக்குப் பிந்திய யுகோசிலாவியாவின் சமூக அரசியல் சமநிலையைக் குலைத்தது. 1983 இல் சர்வதேச நாணய நிதியத்தின் சமநிலைப்படுத்தல் பொதி (Stabilization Package) செயற்படுத்தப்பட்டதன் விளைவாக பணவீக்கம் தீவிரவேகத்தில் அதிகரித்தது. முதலீடுகள் வீழ்ச்சியுற்றன. கைத்தொழில் உற்பத்தி வீழ்ச்சியுற்றது. மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக 1990ஆம் ஆண்டின் பின்னர் சர்வதேச நாணயநிதியத்தினதும், உலகவங்கியினதும் கொள்கைப் பொதி அமுல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக வரவு செலவுத்திட்டப்படியான செலவுகள் குறைக்கப்பட்டன. இதனால் பெல்கிரேட்டில் உள்ள மத்திய அரசு மாநிலக் குடியரசுகளிற்கு ஒதுக்கிய மாற்றல் கொடுப்பனவுகள் (Transfer Payments) குறைக்கப்பட்டன. மத்திய அரசுக்கும் குடியரசுகளுக்கும் இடையே பகைமை உணர்வையும், சமஷ்டியில் இருந்து பிரிந்துபோக வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்க இது காரணமாயிற்று (Chossudovsky. 1996:521). சர்வதேச நாணய நிதியமும், உலக வங்கியும் யுகோசிலாவியாவின் சோஷலிச பொருளாதாரக் கட்டமைப்பைத் தகர்ப்பதில் இறுதியில் வெற்றிக் கண்டன என்றும் Chossudovsky கூறுகிறார். யுகோசிலாவியாவின் நெருக்கடி அதிகரித்த போது வல்லரசுக்கள் தலையிட்டன. குறிப்பாக ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அமெரிக்கா நேட்டோ ஆகியன அரசியல் தலையீட்டில் இறங்கின. யுகோசிலாவியாவின் உடைவையும் அழிவையும் அவை நெறிப்படுத்தின.
யுகோசிலாவியாவின் இனக்குழுமங்களின் பகைமைக்கு நீண்ட கால வரலாறு உள்ளது. அவற்றிடையான மோதல் தீவிரமானதாக இருந்தது. இப்பின்னணியில் யுகோசிலாவியா உருவாகிய பின்னர் உள்ள குறுகிய காலத்திற்குள், அதனை ஒற்றுமைப்படுத்தி, ஒரு தேசிய அரசாக அதனை நிலைபெற வைப்பது, சாத்தியமற்றதாக இருந்தது என்று கூறும் இன்னொரு விளக்கம் உள்ளது. இனக் குழும இணக்கப்பாடின்மை (Ethnic discordance) என்ற இந்த விளக்கம், யுகோசிலாவியா என்ற சமஷ்டி அரசை தோற்றுவிப்பதற்காக முன் வந்தவர்களிடையே பொதுவான வரலாறு (shared history) என்ற உணர்வு இருக்கவில்லை, அவர்களுக்கு ஒரு வரலாறு இருந்ததென்றால் அது ஆழமாக வேர்விட்ட பகையுணர்வின் வரலாறாகத்தான் இருந்தது என்று கூறியது.
யுகோசிலாவியா ஒரு செயற்கையான அரசுருவாக்கம், அது இரண்டு உலகயுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தின் குறிப்பிட்ட வகை வரலாற்று நிலைமைகளின் கீழ் தோன்றியது. யுகோசிலாவியாவின் சோஷலிச நிர்மாணத்திட்டம் எதிர்கொண்ட முக்கியமான சவால், புரட்சிக்கு பிந்திய சமூகத்தில் பலமான அரசியல் அடையாள உணர்வையும் ஐக்கியத்தையும் நாட்டில் ஏற்படுத்துவதாகும். அதற்கு பழைமையான குரோத உணர்வுகளை ‘மீளவும்’ கிளப்பாதிருக்கக்கூடிய அரசியல் அடையாள உணர்வு உருவாக்கப்பட வேண்டியிருந்தது. (Doder:1993) ஒரு அரசாக அல்லது நாடாக ஒன்று சேர்வதற்கு முன்வந்த இனக்குழுமங்களுக்குப் பொதுவான அரசியல் என ஒன்று இருக்கவில்லை, அவற்றிடம் ‘பொதுவான துன்பங்கள், இன்னல்கள்’ என்ற வரலாற்று அனுபவமே இருந்தது (Doder, 1993:07) யுகோசிலாவியாவை ஒன்றுபட்ட புதிய தேசமாக வைத்திருக்கக்கூடிய வலுவை சோஷலிசம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் பொதுவான அரசியல் பிணைப்பு என்ற நோக்கத்தை எய்துவதற்கான செயல்திட்டங்கள் பல டிட்டோவின் காலத்தில் செயற்படுத்தப்பட்டன. வெறும் யுகோசிலாவிய சோஷலிசத்தால் அவ்வாறான பிணைப்பை வழங்க முடியவில்லை. யுகோசிலாவியாவில் பொதுவான அடையாள உணர்வை வளர்ப்பதற்கு அரசியல் அறிவூட்டலோ அல்லது கைத்தொழில் மயமாக்கம் ஊடான அபிவிருத்தியோ உதவவில்லை. அது ‘எளிதான ஒரு செயலாகவோ, நிச்சயமாக நிறைவேற்றக்கூடிய ஒன்றாகவோ’ இருக்கவில்லை (Sekulic, Mussey and Hodson 1994:95). பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபடுதல், சமூகத்தின் நவீன மயமாக்கம் என்பன தேசியவாதத்தைப் பலமிழக்கச் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இதற்கு மாறாக சோஷலிசம் பிரச்சினைகளையும், பின்னடைவுகளையும், எதிர்கொண்ட போது குடியரசுகள் மத்தியில் பொருளாதார அரசியல் போட்டியும் பூசலும் அதிகரித்தது. தேசியவாத உணர்வும் கிளர்ந்தெழுந்தது (Sekulic Massey and Hodson: 1994).
இவ்விடத்தில் ஒரு முக்கியமான கேள்விக்கான விடையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். யுகோசிலாவிய சமஷ்டி அந்நாட்டில் இனக்குழும அடையாள உணர்வுகளை மீளவும் பலப்படுத்துவதற்கு உதவியது ஏன்? இனக்குழும அடிப்படையில் யுகோசிலாவியா பிளவுபடுவதை ஏன் தடுக்க முடியவில்லை? யுகோசிலாவிய விடயத்தில் தரப்படக்கூடிய பொதுவான விடை சோவியத் யூனியனின் உடைவுக்கான காரணம் யாது என்பதற்குரிய விடையை ஒத்ததாகவே இருக்கும். இனக்குழுமத்தை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி யுகோசிலாவியாவிலும், சோவியத் ரஷ்யாவிலும் இனக்குழும அடையாள உணர்வுகளை மிகுவிக்கும் ஆபத்தைக் கொண்டிருந்தன. இவ்விரு உதாரணங்களும் சமஷ்டி முறை இனக்குழுமங்களை ஐக்கியப்படுத்தி வைப்பதில் தவறிவிட்டதென்ற வரலாற்று அனுபவத்தை தருகின்றன. உள்நாட்டு நெருக்கடியில் இருந்து அரசு தன்னை மீட்டுக்கொள்ள முடியாமல் திணறியதால் இத்தோல்வி ஏற்பட்டது. சமஷ்டி ஒரு அரசு முறை என்ற வகையில் நோக்கும் போது அது இருபக்கமும் கூர் உடைய வாள் போன்றது. சமஷ்டி அரசை உருவாக்குமுன்னர், நாட்டில் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒரு ஒற்றுமையும் இருத்தல் அவசியம். சமஷ்டியை உருவாக்கிய பின்னர் அது ஒற்றுமையின் ஊடாக பன்மைத்துவத்தை பேணுகிறது. யுகோசிலாவியா, சோவியத் யூனியன் என்ற இரண்டினதும் அனுபவம் ஒரு உண்மையைத் தெளிவுபடுத்தியது. பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையைப் பேணுதல் வெற்றி பெறவேண்டுமாயின் நாட்டை ஒன்றிணைக்கும் போது இன்னொரு நிபந்தனையும் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும். பன்மைத் தேசிய அரசுக்கான பலம்மிக்க கீழ்க் கட்டமைப்பு (Under Structure) உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும். சோஷலிசமும், கம்யூனிஸ்ட் கட்சியும், அத்தகைய கீழ்க் கட்டமைப்பை இவ்விரு நாடுகளுக்கும் வழங்கத் தவறிவிட்டன. இது போன்றே சோவியத் யூனியனின் மத்தியதிட்டமிடல் முறையும் பன்மைத் தேசிய அரசுக்கான கீழ்க் கட்டமைப்பை உருவாக்கத் தவறியது. யுகோசிலாவியாவின் சுயநிர்வாகம் (SELF – Management) என்ற முறையும் இது போன்ற குறைபாட்டை உடையதே. பலம் மிக்க பன்மைத்துவமும் பலமற்ற ஐக்கியமும் என்பதே இவ்விருநாடுகளும் எதிர் கொண்ட வரலாற்றுப் பிரச்சினை. இரத்தஞ் சிந்தாத வழிமுறைமூலம் இதில் இருந்து விடுபடுவதற்கு யுகோசிலாவியாவால் இயலாமல் போயிற்று.
1980களில் நெருக்கடிகளின் பின்னர், யுகோசிலாவியாவிலும், சோவியத் யூனியனிலும் நடந்து முடிந்தவை ஒன்றில் இருந்து மற்றது வேறுபட்ட வகையில் அமையலாயின. யுகோசிலாவிய சமஷ்டி உடைந்தது. தனிச் சமஷ்டிக் குடியரசுகளில் மிகப் பெரியதான ரஷ்யா தனியாகப் பிரிந்து நின்று ஒரு புதிய சமஷ்டியை உருவாக்கிக் கொண்டது. அது ரஷ்ய சமஷ்டி எனப் பெயர்பெற்றது. ஏனையவை தனி நாடுகளாயின. முன்னைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியில் மீண்டும் அதிகளவு சுதந்திரத்தைக் கொண்ட அலகுகள் ஒன்றிணையும் சமஷ்டி முறை தொடரலாயிற்று.
முடிவுரை
சமஷ்டியை ஒரு அரசியல் யாப்பு மாதிரி என்றும், அரசு வடிவம் என்றும் பார்க்கும் போது, யுகோசிலாவியாவிலும், சோவியத் யூனியனிலும் அம்முறை வீழ்ச்சியுற்றதில் இருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியவை யாவை? ஒரு நாட்டிற்குள்ளே நடைபெறும் சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களின் போது, அம்மாற்றங்களின் மத்தியில் நெகிழ்ச்சித் தன்மையுடையதாக ஒரு அரசுவடிவம் (State form) செயற்படவேண்டும். அந்த அரசு வடிவம் சீர்திருத்தம், புத்தாக்கம் என்ற இரண்டிற்கும் தயாராகவும், நெகிழ்ந்து கொடுப்பதாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறில்லாமல் குறித்தவகையான ஒரு அரசு வடிவம் சர்வரோக நிவாரணியாக இருக்கும் என்று கருதுவது தவறு, எவ்வாறிருப்பினும் யுகோசிலாவியா, சோவியத்யூனியன் என்ற இருதேசங்களுக்கும் ஏனைய பலதேசங்களுக்கும் சமஷ்டி தான் மிகச் சிறந்த தெரிவாக இருந்தது என்றும் குறிப்பிடலாம். இக் கட்டுரையில் நாம் எடுத்துக் கூறியவற்றில் இருந்து வெளிப்படும் இன்னொரு உண்மையாதெனில், சோஷலிசத்தின் கீழ் ஏற்பட்ட துரித நவீன மயமாக்கலின் போது ஏற்பட்ட புதிய சமூக அரசியல் நிலைமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதென்பதை எந்தவொரு சமஷ்டி முறையினாலும் நிறைவேற்றியிருக்கக் கூடிய காரியமல்ல. சிறுபான்மைத் தேசிய வாதங்களின் பலத்தை, அரசு முறையொன்றை ஈடாகவைக்கும் அவற்றின் ஆற்றலை, முதலாளித்துவம் என்றால் என்ன, சோஷலிசம் என்றால் என்ன, சகல நாடுகளும் எதிர் கொண்டே ஆக வேண்டும் என்பது புலனாகிறது. கூடியளவு சுயாதீனம் அல்லது தனிநாடாகப் பிரிந்து போதல் என்ற கோரிக்கைகளுடனான இனக்குழுமங்களின் அணிசேர்க்கையும், இயக்கங்களும் உலகில் பல்வேறு சூழமைவுகளிலும் ஏற்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டிலும் ஏற்பட்டுள்ளன. ஒன்றிற்கு ஒன்று மாறான எதிர்மறைச் சூழ்நிலைகள் சில வருமாறு:
- முன்னேறிய முதலாளித்துவம் – குறைவிருத்தி முதலாளித்துவம்
- முதலாளித்துவம் – சோஷலிசம்
- சமஷ்டி முறை – ஒற்றையாட்சி முறை
- அதிகாரப்பகிர்வு – மத்தியப்படுத்தல்
இவ்வாறான வேறு வேறு சூழ்நிலைகள் யாவற்றிலும் தனிநாடாகப் போவதற்கான உணர்வு முனைப்புடன் செயற்பட்டது என்பதைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டின் மானிட வரலாற்றில் இவ்விடயம் பற்றி ஒரே ஒரு கதைதான் உள்ளதென்று கருத முடியாது. பல கதைகள் உள்ளன. நாடுகள் பல அரசுமுறைகளைப் பரீட்சித்ததற்கும், பலவிதப்பட்ட விளைவுகளை எதிர்கொண்டதற்கும் உதாரணக் கதைகள் பல உள்ளன. யுகோசிலாவியாவிலும் சோவியத் யூனியனிலும்,
- இருவேறு சோஷலிச மாதிரிகள் இருந்தன.
- அங்கு இருவேறு சமஷ்டிகளும் இருந்தன.
அந்நாடுகளின் வரலாற்றில் இருந்து ஒரு முக்கியமான வரலாற்று உண்மை பெறப்பட்டுள்ளது. அரசுகள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றன. அவை எழுகின்றன, வீழ்கின்றன. இந்தத் தொடர்ச்சியான மாற்றச் செயல்முறையை நிர்ணயிப்பது அவ்வரசுகளின் அரசியல் யாப்பு வடிவமன்று, அரசுகள் எதிர் கொள்ளும் எண்ணிறந்த பல சக்திகளே இச்செயல்முறையைத் தீர்மானிக்கின்றன.
தொடரும்.