ஆங்கில மூலம் : யொஹான் பொய்றியர் (JOHANNE POIRIER)
அசமத்துவம்
சுவிற்சர்லாந்து அரசியல் யாப்பு அசமத்துவ கட்டமைப்பை (சில கன்டன்களுக்கு கூடிய சுயாட்சியும் வேறு சிலவற்றுக்கு குறைந்த சுயாட்சியும்) உள்ளார்ந்த இயல்பாகக் கொண்டதன்று. ஆயினும் அச் சமஷ்டிச் செயற்பாட்டின் ஊடாக அசமத்துவ அம்சங்கள் வெளிப்பட்டுத் தெரிகின்றன. இது எவ்வாறு நிகழ்கிறது? கன்டன்கள் மிகுந்த சுயாட்சி உரிமையுடையவையாதலால் தமது நிறுவனங்களை தாமே சுதந்திரமான முறையில் அமைத்துக்கொள்கின்றன. இவ்வாறான சுதந்திரம் கன்டன்களுக்கிடையே அசமத்துவத்தை உருவாக்கியிருப்பதற்கான முதலாவது காரணமாகும். இரண்டாவதாக, கன்டன்கள் தமது தகுதிகளுக்கு (Competencies) ஏற்பச் சட்டங்களை இயற்றிச் செயற்படுத்தலாம். இதனாலும் அசமத்துவம் ஏற்படுகிறது. மூன்றாவதாக, கன்டன்கள் மத்திய அரசினால் (பெடரல் அரசு) இயற்றப்பட்ட சட்டங்களைச் செயற்படுத்துவதில் வேறுபாடுகள் உள்ளன. இவை யாவற்றின் காரணமாக வெவ்வேறு அரசியல் முறைகளும் பொதுக்கொள்கைகளும் கன்டன்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவையே சுவிற்சர்லாந்தின் அசமத்துவ கட்டமைப்பின் (Asymmetrical Arrangements) காரணங்களாகும்.
நேரடி ஜனநாயகத்திற்கான நிறுவனங்கள்
குறித்தவொரு அரசியல் யாப்புச் சட்ட முன்மொழிவின் (Constitutional Proposals) போதும் சுவிஸ் வாக்காளர்கள் பொதுசன வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களிக்கும்படி கேட்கப்படுகிறார்கள். குறித்த சில திட்டங்களைச் செயற்படுத்தும் போதும் மக்களின் சம்மதத்தை ‘பொதுசன வாக்கெடுப்பின்’ (Referendum) மூலம் வழங்கும்படி வேண்டப்படுகிறார்கள். சில விடயங்களில் 50,000 பிரஜைகளுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் பொதுசனவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனை ‘Optional Referendum’ எனக் குறிப்பிடுவர். ஏனையவை கட்டாயமாக பொதுசன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும். அரசியல் யாப்புத் திருத்தங்கள் விடயத்திலும், சர்வதேச நிறுவனங்களில் சுவிற்சர்லாந்து இணைந்துகொள்ளும் போதும், பொதுசன வாக்கெடுப்பு கட்டாயமானது. அத்தோடு கன்டன்களில் பெரும்பான்மையானவை அதனை ஆதரிக்க வேண்டும்.
சுவிஸ் சமஷ்டியுடன் ஒரே சமயத்தில் தோன்றிய நேரடி ஜனநாயகத்தை, சுவிஸ் அரசியல்முறையின் ‘இரட்டைச் சகோதரிகள்’ (Twin Sisters) என அழைப்பார். சுவிஸ் மக்கள் தமக்கு இருக்கும் உள்ளூர் மட்ட அதிகாரங்களை (Local Powers) பெரிதும் மதிக்கின்றனர். கீழ் மட்டத்தில் தகுதிகள் (Competencies) இருந்தால், பொதுவிடயங்கள் மீது தம் கட்டுப்பாடு இருக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். ஆகையால் சில தகுதிகளை ‘பெடரல் அரசாங்கத்திற்கு’ (மத்திய அரசாங்கத்திற்கு) மாற்ற வேண்டும் எனக் கோரி வாக்கெடுப்பு நடத்திய வேளைகளில் வாக்காளர்கள் அக்கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் கன்டன்கள் அதிகாரங்களைப் பாதுகாத்துத் தக்கவைப்பதற்கும், நாட்டில் பன்மைத்துவத்தை (Diversity) பேணவும், நேரடி ஜனநாயகம் (Direct Democracy) சிறந்த வழிமுறையாக இருந்துவருகிறது. நேரடி ஜனநாயகம், இருந்துவரும் நிலையை (Status Quo) மாறவிடாது நிலைத்து நிற்பதற்கு உதவுவதால் பிற்போக்குப் பழமைவாதத்திற்கான (Conservatism) கருவியாக உள்ளது என்றும் கூறலாம்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு
தேசிய மட்டத்தில் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை (Protection of Minorities) வழங்கும் உத்தரவாதங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சமயச் சுதந்திரம் ஆகும். இரண்டாவது, மூன்று தேசிய மொழிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகும். முதலாவதான சமயச் சுதந்திரம் விடயத்தில் சில கன்டன்கள் குறிப்பிட்ட சில சமயங்களுக்குச் சார்பான கொள்கைகளைச் செயற்படுத்தலாம் என்ற அதிகாரமும் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாவதான மொழிச் சமத்துவத்தை எடுத்துக்கொண்டால், சுவிஸ் நாட்டின் 18% மக்கள் தொகையுடைய பிரஞ்சு மொழி பேசுவோரும் 10% மக்கள் தொகையை உடைய இத்தாலியன் மொழி பேசுவோரும் ‘பெடரல் அரசாங்க’ நிறுவனங்களில் ஜேர்மன் மொழி பேசுவோருக்கு கிடைக்கும் அந்தஸ்துக்கு நிகரான அந்தஸ்தைப் பெறுகிறார்கள். அத்தோடு பெடரல் சட்டங்கள் யாவும் மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்படுகின்றன. றொமான்ஸ் மொழிக்குத் தேசிய மொழி (National Language) என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. றோமான்ஸ் மொழி பேசுவோர் பெடரல் அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டு தம் அலுவல்களைச் செய்து முடிப்பதற்கு, அவர்கள் இந்த உரிமையை அனுபவிப்பதே காரணம் என்பது சொல்லாமலே புரியக்கூடிய விடயம்.
சிறுபான்மையினருக்கு சமத்துவ உரிமைகள் வழங்குவது தொடர்பாக, பெல்ஜியம் சமஷ்டியையும் சுவிஸ் சமஷ்டியையும் ஒப்பீடு செய்தல் பயனுடையது. பெல்ஜியத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பில் தனியாள் பரிமாணம் (Personal Dimension) உள்ளது. சுவிஸ் நாட்டில் இது பிரதேசமயப்படுத்தல் பரிமாணம் (Territorialised dimension), உடையதாக இருக்கிறது. அதாவது பெரும்பான்மையினர் மத்தியில் வாழும் சிறுபான்மையினர் பெல்ஜியத்தில் ‘தனியாள்’ அடிப்படையிலும், சுவிஸ் நாட்டில் ‘பிரதேச’ அடிப்படையிலும் தமது உரிமைகளைப் பெற்று அனுபவிக்கின்றார்கள். சுவிஸ் நாட்டின் கன்டன்கள் சிறியனவாக இருப்பது, சிறுபான்மையினர் தமது தேவைகளை பிரதேச அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு இலகுவானதாக உள்ளது. இதனைவிட ‘தனித்தனி விடயம் சார்ந்த’ அதிகாரப் பரவலாக்கல் (Subject by subject decentralisation) முறையும் சுவிற்சர்லாந்தில் செயற்பாட்டில் உள்ளது. கல்வி மொழியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பாடசாலைச் சபைகளுக்கும், முனிசிப்பல் சபைகளுக்கும் கல்வி மொழி எதுவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்க முடியும். இவ்விதமான அதிகாரப் பரவலாக்கத்தால், ஒரு குறிப்பிட்ட நகரப் பகுதியிலோ அல்லது இடத்திலோ செறிந்து வாழும் சிறுபான்மையினர், தம் பிள்ளைகளுக்கான போதனா மொழி எதுவெனத் தீர்மானிக்கும் உரிமையைப் பெறுகின்றனர். தம் பகுதியின் பாடசாலை நிர்வாகத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு வகையான புரட்சிகர பிரதேச வகைத் தீர்வையும் (Radical Territorial Solution) சுவிஸ் நாட்டில் பிரயோகிக்கும் வாய்ப்பு உள்ளது. 1978 ஆம் ஆண்டில் பேர்ண் (Bern) கன்டன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யுரா (Jura) என்ற புதிய கன்டன் உருவாக்கப்பட்டது. இதன் பயனாக, முன்னர் பேர்ண் கன்டனுக்குள் சிறுபான்மையினராக இருந்த சமூகக்குழுவினர், 1978 இன் பின்னர் பெரும்பான்மையினராக மாறியுள்ளார்கள்.
சுவிஸ் சமஷ்டி முறையில் ‘செனட்’ சபை பிரதிநிதித்துவத்தில் ‘கோட்டா’ முறை இல்லை. பெடரல் நிர்வாக நிறுவனங்களிலும் மொழி, பண்பாடு, சமயம் என்பனவற்றின் அடிப்படையிலான ‘கோட்டா’ முறை செயற்பாட்டில் இல்லை. ஆயினும் இது ஒரு பாரம்பரிய மரபாக (Tradition) பின்பற்றப்படுகிறது. உதாரணமாக வலைஸ் (Valais) என்ற இருமொழி கன்டன் (Bilingual Canton) செனற்சபைக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்துவரும் வழமையைப் பின்பற்றுகிறது.
விட்டுக்கொடுத்தலும் சமரசமும், கூட்டுறவுச் சமஷ்டி
சுவிஸ் நாட்டில் விட்டுக்கொடுத்தலும் சமரசமும் (Compromise), கூட்டுறவு சமஷ்டி (Cooperative Federalism) என்னும் இரு அரசியல் பண்பாட்டுச் (Political Culture) சிறப்புப் பண்புகள் வளர்ச்சியுற்றுள்ளன. 1999 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு கூட்டுறவு என்னும் தத்துவத்தை (Principle of Cooperation) உறுப்புரை 44 இல் பொறித்துள்ளது.
உறுப்புரை 44
(1) கூட்டிணைப்பில் சேர்ந்துள்ள கன்டன்கள் தமது வேலைகளை நிறைவேற்றும்போது ஒத்துழைப்போடும், ஒன்றையொன்று ஆதரிக்கும் முறையிலும் நடந்துகொள்ள வேண்டும்.
(2) அவை ஒவ்வொன்றும் பரஸ்பர அனுசரணையையும் ஆதரவையும் பிற கன்டன்களுக்கு வழங்குவதோடு நிர்வாகம், நீதி நிர்வாகம் ஆகிய விடயங்களில் ஒன்றுக்கொன்று உதவி செய்தல் வேண்டும்.
(3) கன்டன்களுக்கிடையேயும் கன்டன்களின் கூட்டிணைவுக்கு இடையேயும் எழும் பிணக்குகளுக்கு இயன்றளவிற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்படவேண்டும்.
சுவிற்சர்லாந்தில் சமஷ்டிக் கூட்டிணைவு மரபு (Confederal Tradition) நீண்ட காலமாக இருந்து வந்தது. அந் நாட்டின் கன்டன்கள் கூடிய அளவு சுயாட்சியுடையனவாய் இருந்து வருகின்றன. இத்தகைய அரசியல் வரலாற்றுப் பின்புலமுடைய அந் நாட்டில் பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule), பலவகையான ஒத்துழைப்பு நடைமுறைகள் கன்டன்களுக்கிடையே வளர்ச்சி பெறுவதற்கு உதவியது. இவ் ஒத்துழைப்பு நடைமுறைகள் பல நிறுவனங்கள் ஊடாக வளர்க்கப்பட்டன. இவ்வகை நிறுவனங்களில் கன்டன்களுக்கிடையிலான மாநாடு (Conference of inter Cantonal Government) என்பது முக்கியமானது. இம் மாநாடுகளில் கன்டன் அரசாங்கங்கள் கூடி ஆராய்ந்து பிரச்சினைகள் பற்றிய பொது இணக்கப்பாட்டை உருவாக்குகின்றன. இவ்விதம் பொது இணக்கப்பாட்டை எட்டியபின் மத்திய அரசுடன் (பெடரல் அரசாங்கம்) பேரம் பேசுதல் பயனுடைய ஒருவழியாக உள்ளது. மாநாடு (Conference) என்ற நிறுவனம் ஊடாக பெடரல் அரசாங்கம் தொடர்பாடலை வளர்த்து சட்டவாக்க செயல்முறைக்கு உதவும் தகவல் பரிமாற்றத்தைச் செய்துகொள்கிறது. இது தொடர்பில் 1999 அரசியல் யாப்பின் உறுப்புரை 45 (2) இல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கவனித்தல் பொருத்தமானது.
“(சமஷ்டிக் கூட்டிணைவு) தனது கொள்கைச் செயற்திட்டங்கள் பற்றிய தகவல்களை சரியான நேரத்தில், விரிவாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவற்றின் (கன்டன்களின்) நலன்கள் பாதிக்கப்படும்போது, அவற்றுடன் கலந்தாலோசித்தலும் வேண்டும்.”
வெளிவிவகாரம் குறித்த கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்படும்போது அவை பற்றிய தகவல்களை கன்டன்களுக்கு வழங்கும் கடப்பாடு வலியுறுத்தப்படுகிறது. வெளிவிவகாரம் பெடரல் அரசாங்கத்திற்குரிய அதிகாரமாக இருப்பதால் இக் கடப்பாடு வலியுறுத்தப்படுகிறது. கன்டன் அரசாங்கங்களின் மாநாடுகளில் பெடரல் அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்வது இருதரப்பாருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் சிறப்பாக நடைபெற உதவுகிறது.
சில பொதுவான நோக்கங்களை எய்துவதற்கும், பொதுவான நிறுவனங்களை உருவாக்குவதற்கும் கன்டன்கள் தமக்கிடையே ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம். இவை ‘ஒப்பந்தங்கள்’ என்ற கருத்துடைய ‘சமவாயங்கள்’ (Conventions) என்ற சொல்லால் அழைக்கப்படும். இப்படியான ஒப்பந்தங்களைக் கன்டன்கள் செய்துகொள்வது, அதிகாரம் மத்தியப்படுதல் (Centralisation) என்பதற்கு தகுந்த மாற்று வழியாக உள்ளது. இசைவான செயற்பாடு அவசியமானவிடத்து பெடரல் அரசாங்கம் தலையீடு செய்யும் தேவை ஏற்படும். ஆயின் கன்டன்களிடையான ஒப்பந்தம் செய்துகொள்ளல் முறையான ‘ஒருமித்த செயல்முறை’ எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வெற்றியைத் தரும் என்று கூறுவதற்கில்லை. கன்டன்கள் ஒத்திசைவான முடிவுகளை அடைவதற்கு இங்கு இடமில்லை. கன்டன்கள் ஒரு விடயத்தில் ஒப்பந்தம் மூலம் இணக்கமான தீர்வை காணத்தவறுமிடத்து அவ்விடயம் பற்றிய தகுதி, மாற்றப்படுதல் தவிர்க்க முடியாததாகிறது. ஆகையால் 26 கன்டன்களும் கூடி ஒப்பந்தம் செய்வது சாத்தியமாவதில்லை. இதற்கு மாறாக பிராந்திய அடிப்படையில், சம்மந்தப்பட்ட சில கன்டன்கள் கூடித் தீர்மானம் எடுத்தல் பயனுறுதி வாய்ந்ததாக இருக்கும்.
கன்டன் அரசாங்கங்களுக்கு இடையே முறைசாராத் தொடர்புகள் உள்ளன. இத் தொடர்புகள் பல்வேறு நிறுவனங்கள் ஊடான சிக்கலான வலைப்பின்னல் முறையில் ஒன்றிணைக்கப்படுகின்றன. சுவிற்சர்லாந்து சமஷ்டி முறையில் இத் தொடர்பாடல் வலைப்பின்னல் ஒத்துழைப்பை முழுமைபெறச் செய்கிறது. பின்வரும் விடயங்களில் பெடரல் அதிகாரிகள் ஆலோசனைகளை நடத்த வேண்டும். குறிப்பாக;
- கொள்கை வகுத்தல்,
- பெடரல் சட்டத்தை செயற்படுத்துவதில் கன்டன்களின் பங்கேற்பை உறுதி செய்தல்,
என்பனவற்றில் தொடர்ச்சியான தொடர்பாடல் அவசியமாகவுள்ளது. பெடரல் அரசாங்க அதிகாரிகளும் போட்டி முறையில் செயற்படாமல், ஒத்துழைப்போடு செயற்படுவதால் அரசாங்கச் செயற்பாடுகள் தடையின்றி இயங்குகின்றன. சுவிற்சர்லாந்து சமஷ்டி முறை முழுமையிலும் ‘கூட்டுறவுப் பண்பாடு’ (Culture of cooperation) ஊறிச் செறிந்துள்ளது. இதனால் சமஷ்டிப் பொறிமுறை (Federal Machinery) தடங்கல்கள் இன்றி இயங்கிக்கொண்டிருக்கிறது.
முடிவுரை
சுவிற்சர்லாந்து சமஷ்டி உறுதிப்பாடும் சட்டப்படியான வலிதுடைமையும் (Stability and Legitimacy) உடையதாய் இருந்துவருகிறது. இது சுவிற்சர்லாந்தில் சாத்தியமாய் இருப்பதன் இரகசியம் என்ன?
- ஜனநாயக நிறுவனங்கள் அங்கே நிலைபெற்றுள்ளன. நேரடி ஜனநாயகம் (Direct Democracy) அங்கே செயல்முறையில் உள்ளது.
- கூட்டுறவுச் சமஷ்டி (Cooperative Federalism) அங்கே செயற்படுகிறது.
- அந்நாட்டு மக்கள் வேறுபாடுகளுக்கு மரியாதை (Respect for differences) கொடுத்து ஒழுகுகின்றனர்.
மேற்குறித்த சிறப்பியல்புகளின் ஒன்றிணைந்த கலவையாக, சிறப்புப் பண்புகள் உடையதாக சமஷ்டி நிறுவனக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் ஜனநாயகம் தழைக்க உதவுகிறது. வெறுமனே ‘பெரும்பான்மை ஆட்சியினால்’ (Majority Rule) நாட்டில் உறுதிப்பாடு, சமாதானம், சட்டப்படியான வலிதுடமை (Legitimacy) என்பனவற்றை ஏற்படுத்த முடியாது என்ற பலமான நம்பிக்கை அங்கே மக்களிடம் வேரூன்றியுள்ளது. இவற்றைவிட, அ. சமயச்சுதந்திரம் அரசியல் யாப்பினால் உறுதிசெய்யப்பட்டிருத்தல், ஆ. மூன்று மொழிகளுக்கும் சமத்துவம் வழங்கப்பட்டிருத்தல், இ. நான்காவது மொழியான றொமான்ஸ் என்னும் சிறுபானம்மையினர் மொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருத்தல், ஈ. கன்டன்களுக்கு அதிக அளவான சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருத்தல் ஆகியன சுவிற்சர்லாந்தின் சமஷ்டியின் உறுதித்தன்மைக்கு காரணமாக உள்ளன.
மேலே குறிப்பிட்டவற்றைக்கொண்டு பன்மைத் தேசியங்களின் சமூகங்களிற்கு (Multi – National Societies) சுவிற்சர்லாந்து ‘இப் பூவுலகின் சுவர்க்கம்’ என்ற எண்ணத்தை தருவதாய் உள்ளது. 150 ஆண்டுகளுக்கு மேலாக இது உண்மையே என்பதை அந்நாடு நிரூபித்து வந்துள்ளது. அந்நாட்டின் பண்பாட்டு, சமய, மொழிக்குழுக்களிடையே வன்முறை மோதல்களுக்கான சாத்தியம் அங்கு உள்ளுறையாக (Potential for violent oppositions) இருக்கின்றபோதும், அந்நாடு உலகின் நாடுகள் யாவற்றையும்விட உறுதியுடையதாகவும், உலகின் செல்வந்த நாடுகளில் முன்னிலையில் உள்ளதாகவும் இருந்துவருகிறது. சுயாட்சி (Self Rule), பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule) என்ற இரண்டினதும் கலவையான அரசியல் யாப்பு முறை அந்நாட்டில் சமாதானம் நிலைப்பதற்கு வழிவகுத்துள்ளது. ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல், தகவல் பரிமாற்றம், பொதுசன வாக்கெடுப்பு போன்ற செயல்முறைகள் மூலம் உருவாக்கப்பட்ட ஜனநாயகச் செயல்முறைகளை மதிக்கும் பண்பாடு அங்கு செழித்து வளர்ந்துள்ளது. இதனால் அரசியல் வேறுபாடுகளை சமாதானமான முறையில் நிர்வகிக்க முடிகிறது.
மேலே கூறிய சிறப்புகள் ஒருபுறமிருக்க, சுவிற்சர்லாந்து அரசியல் முறைமையின் முறைகள் சிலவும் கவனிப்புக்குரியவை என்பதை இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியம். அதுவோர் சிக்கலான அரசியல் முறைமை. அதன் செயற்பாடுகள் நடைபெறுவதற்குப் பல்வேறு மட்டங்களில் இணக்கப்பாட்டை பெறுதல் வேண்டும். பெடரல் சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் நிலை அங்கு உள்ளது. அரசியல்வாதிகள் ஒரு மசோதாவை யாவரதும் இணக்கத்தோடு சட்டமாக நிறைவேற்றிய பின்னர் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அது வாக்காளர்களால் தோற்கடிக்கப்படும். அம் மசோதா முன்மொழியப்பட்ட போது அது சட்டமாக்கப்படுதல் தேவையான ஒன்றாக இருந்திருந்தாலும், 10 ஆண்டுகள் கழிந்தபின் அத் தேவை இல்லாது போனால் வாக்காளர்களால் சட்டம் நிராகரிக்கப்படலாம். சமூக சேவைகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் சட்டங்களான குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் (Family Allowance), பிரசவகால விடுவிப்பு முதலிய விடயங்கள் பற்றிய முற்போக்கான சட்டங்கள் நிராகரிக்கப்படுவது தொடர்ந்து இடம்பெறுகிறது.
பெல்ஜியம் நாட்டின் சமஷ்டி முறை அடிக்கடி மாறுதல்களுக்கு உட்பட்டு வந்துள்ளது. உலகின் பிற சமஷ்டி முறைகள் பல பரிமாண வளர்ச்சிப் போக்கில் முன்னோக்கிச் செல்வதில் கஷ்டங்களை எதிர்கொண்டன. ஆனால் சுவிற்சர்லாந்து, இணக்கப்பாட்டை எய்துவதில் முன்னேறிச் சென்றது. 1848 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு, 1874 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பை நோக்கி முன்னேற அத்திவாரம் இட்டது. 1999 இல் சுவிற்சர்லாந்துச் சமஷ்டி நவீனமயப்படுத்தப்பட்டது (Modernized). ஆயினும் அதன் கட்டமைப்பின் அடிப்படையான உள்ளடக்கம் (Fundamental Content) மாற்றியமைக்கப்படவில்லை. அதாவது அதன் சமஷ்டிக் கட்டிட அமைப்பு (Federal Architecture) மாறாது நிலைபெற்றுள்ளது. அரசியல் யாப்பின் மொழிநடை திருத்தம் பெற்றுள்ளது. இலகுவில் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய அரசியல் யாப்பாக அது விளங்குகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளால் நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. சுவிற்சர்லாந்து அரசியல் யாப்பு புதியதாக உள்ளது; சமகாலத்திற்கு பொருத்தப்பாடு உடையதாக உள்ளது; காலமாற்றத்திற்கேற்ப தகவமைத்துக்கொள்வதாகவும் உள்ளது. இவ்வாறு அதனை உருவாக்கும் திட்டம் வெற்றிபெற்றதற்கு காரணம் பிரச்சினைக்குரிய விடயங்கள் சிலவற்றைப் பிற்போட்டமையாகும். ‘தகுதிகளின் பங்கீட்டை மறுவரையறை செய்தல்’ (Distribution of Competencies) இவ்வாறு பிற்போடப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றாகும். சிலர் பெடரல் அதிகாரத்தை அதிகரித்து நாடு முழுமைக்கும் ஒரே சீரான ஒருமித்த நடைமுறைகளைப் புகுத்த வேண்டும் என விரும்புகின்றனர். வேறு சிலர் கன்டன்களின் சுதந்திரம் தொடரவேண்டும் என விரும்புகின்றனர். நிதிச் சமஷ்டி (Fiscal Federalism) சம்பந்தமான பிரச்சினைகளும் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் பற்றிய பிரச்சினைகளும் அடுத்ததாக பிற்போடப்பட்டன. நீதி முறைமையில் (Judicial System) செய்ய வேண்டிய திருத்தங்களும் 1999 இற்குப் பிந்திய காலத்துக்குரியனவாகப் பிற்போடப்பட்டன.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே சமயத்தில் தீர்வு காண முனைந்து, ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முயற்சித்தால் அரசியல் செயல் இழப்பிற்கு வழிவகுக்கும் என்பதை அனுபவம் உணர்த்துகிறது. சில விடயங்கள் தொடர்பாகக் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி சில சீர்திருத்தங்களைச் செய்துகொண்டு பின்னர் மேலதிகப் பிரச்சினைகளைக் கையாளலாம். ஆனால் படிப்படியான மாற்றம் என்ற அணுகுமுறை, மேலோட்டமான திருத்தங்களோடு முடிவடைந்து விடும் ஆபத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு திருத்தங்களும் இடம்பெறும் போது அரசியல் யாப்பில் செய்யவேண்டிய அடிப்படையான சீர்திருத்தங்கள் எவை என்பது பற்றி பேசப்படுவதில்லை. இதனால் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடரும் நிலையே சுவிற்சர்லாந்தில் காணப்படுகிறது என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இறுதியாக சில விடயங்களைக் குறிப்பிடுதல் சாலவும் பொருத்தமானது. மக்களின் அரசியல் நிலைப்பாடுகளில் சமயத்தின் செல்வாக்கு குறைந்துவிட்டது. இரண்டாவதாக, பிரதான மொழிக்குழுக்களிடையே பிளவுகள் தோன்றியுள்ளன போல் தெரிகிறது. பிரஞ்சு மொழிபேசும் பகுதி மக்கள், சமூகப் பாதுகாப்பு (Social Security) பற்றிய விடயங்களில் முற்போக்கான கொள்கைகளை ஆதரிக்கிறார்கள். ஜேர்மன் மொழி பேசுவோர் பகுதிகள், இவ்விடயங்களில் பிற்போக்கான கொள்கையைக் கொண்டுள்ளன. இதேபோன்று ஐரோப்பிய யூனியனில் இணைவது தொடர்பாக பிரஞ்சு, ஜேர்மன் மொழிப் பகுதிகளுக்கிடையே முரண்பட்ட கருத்துக்கள் காணப்பட்டன. முக்கியத்துவம் பெற்றுவரும் இதுபோன்ற பிரச்சினைகள் சுவிஸ் மாதிரி (Swiss Model) எதிர் நோக்கிவரும் சவால்களாகும்.
யொஹான் பொய்றியர் (JOHANNE POIRIER) கனடாவின் McGill பல்கலைக்கழகத்தின் சமஷ்டி முறைமை (FEDERALISM) கற்கைக்கான இருக்கையின் முதலாவது பேராசிரியராக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்றார். அதற்கு முன்னர் 2004-2015 காலப்பகுதியில் அவர் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் பணியாற்றினார். அப்போது ஒப்பீட்டுச் சட்டம், சமஷ்டி முறைமை, ஐரோப்பிய பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய விடயங்களில் பல பாடநெறிகளைக் கற்பித்தார். பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தின் பொதுச்சட்டத்திற்கான நிறுவனத்தின் (CENTRE FOR PUBLIC LAW) இணையப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.
McGill பல்கலைக்கழகத்தில் அரசியல் யாப்புச் சட்டம், ஒப்பீட்டுச் சமஷ்டி என்பனவற்றை கற்பித்து வருகிறார். சுவிற்சர்லாந்து சமஷ்டிமுறை பற்றிய இக்கட்டுரை அவரால் 2004 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிறுவனம் (CPA) வெளியிட்ட The Federal Idea எனும் நூலில் இருந்து இக்கட்டுரை பெறப்பட்டது.
தொடரும்.