ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் - பகுதி 3
Arts
25 நிமிட வாசிப்பு

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 3

August 22, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன

பெரிய வெள்ளி உடன்படிக்கை (GOOD FRIDAY AGREEMENT)

Ulster party

வட அயர்லாந்தின் உல்ஸ்ரர் யூனியனிஸ்ட் கட்சி (ULSTER UNIONIST PARTY) அப் பகுதியின் பெரும்பான்மை கட்சியாகும். அது சமாதானச் செயல் முறையில் பங்கேற்றது. பிரித்தானியாவும் அயர்லாந்தும் ஒரு தீர்வைக் கொண்டு வரும் எனவும் தனது பங்கேற்பு அதற்கு உதவும் என்றும் இக் கட்சி நம்பியது. ஆனால் அயர்லாந்தின் இரண்டாவது பெரிய கட்சியான ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி (DEMOCRATIC UNIONIST PARTY)  சமாதானச் செயல் முறையில் இருந்து வெளிநடப்புச் செய்தது. ஆயுதக்களைவு செய்யப்படாமையை எதிர்த்தே அது வெளிநடப்புச் செய்தது. பேச்சுவார்த்தையானது ஐக்கிய இராச்சிய அரசாங்கமும் அயர்லாந்து அரசாங்கமும் பெரிய வெள்ளி உடன்படிக்கையில் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி கையெழுத்திடும் நிகழ்வுடன் முடிவுற்றது. பலகட்சிகளின் கூட்டத்தில் இரு அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்ட முடிவுகளின்படி இந்த உடன்படிக்கை அமைந்தது.

அதன் முக்கியமான முடிவுகளாவன :

  1. பெரிய பிரித்தானியாவுடன் இணைந்திருப்பதா அல்லது தனி நாடாகப் பிரிந்து இறைமையுள்ள அயர்லாந்தாக இருப்பதா என்பது, அயர்லாந்து தீர்மானிக்க வேண்டிய விடயமாகும்.
  2. வட அயர்லாந்தையும் தெற்கு அயர்லாந்தையும் இணைத்த ஐக்கிய அயர்லாந்தாக உருவாகுவதைத் தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையை, அயர்லாந்து மக்களே சுயமாக, சுதந்திரமாக இரு பகுதியினரதும் சம்மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
  3. வட அயர்லாந்து மக்களின் குறிப்பிடத்தகுந்த அளவு மக்கள் தொகையினர் அயர்லாந்துத் தீவின் பெரும்பான்மையினரான மக்களின் நியாயமான விருப்பமான, ஒன்றிணைந்த அயர்லாந்திற்கு ஆதரவாக இருந்தபோதும், வட அயர்லாந்தின் பெரும்பான்மை மக்கள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து இருப்பதையே விரும்புகிறார்கள். ஆதலால், வட அயர்லாந்தின் அந்தஸ்து பற்றி எவ்வித மாற்றத்தையும் செய்வது தவறானது. அத்தகைய மாற்றம் வட அயர்லாந்து மக்களின் பெரும்பான்மையின் சம்மதமின்றிச் செய்ய முடியாது.
  4. மேலே 1 ஆம் 2 ஆம்  பிரிவுகளில் குறிப்பிட்டபடி ஐக்கிய அயர்லாந்து உருவாகுவதற்கு, எதிர்காலத்தில் அயர்லாந்துத் தீவு மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பார்களேயானால், இருநாட்டு அரசாங்கங்களினதும் பாராளுமன்றத்தில் அதற்கான சட்டத்தை நிறைவேற்றி, அயர்லாந்துத் தீவு மக்களின் அபிலாசையை நிறைவு செய்யும் கடப்பாடு இரு அரசாங்கங்களுக்கும் உள்ளது.

மேற்குறித்தவை சமாதானச் செய்முறையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் நன்மையான அல்லது ‘இருதரப்பிற்கும் வெற்றி’ (WIN- WIN) என்ற நிலையைத் தோற்றுவித்தன. எத்தரப்பும் தோற்கவில்லை என்ற நிலை உருவானது. அயர்லாந்துக் குடியரசுடன் வட அயர்லாந்து இணையக்கூடிய சாத்தியத்தை உடன்படிக்கை மறுக்கவில்லை. ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்து இருப்பதா அல்லது அயர்லாந்து குடியரசுடன் இணைவதா என்பதை வட அயர்லாந்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. பிரித்தானியாவினதும் அயர்லாந்தினதும் யாப்புக்களில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய உறுப்புரைகளும் வரைவாகத் தரப்பட்டிருந்தன.

goodfriday agreement signed

வட அயர்லாந்தின் ஜனநாயக நிறுவனங்கள்

உடன்படிக்கையில் வட அயர்லாந்தின் ஜனநாயக நிறுவனங்களின் அமைப்பு, செயற்பாடு என்பன பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. வட அயர்லாந்தின் பாராளுமன்றம் (ASSEMBLY) 180  உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும். அவர்கள் தனிமாற்று  வாக்கு முறை (SINGLE TRANSFERABLE VOTE – STV) மூலம் பல அங்கத்தவர் தொகுதிகளில் (MULTI-MEMBER CONSTITUENCIES) இருந்து தெரிவு செய்யப்படுவார்கள் என உடன்படிக்கையில் குறிப்பிட்டப்படிருந்தது. வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கான தொகுதிகள் 06 உறுப்பினர்களை தெரிவு செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகள் வட அயர்லாந்தின் எல்லாச் சமூகங்களையும் (COMMUNITIES) பங்கேற்புச் செய்வதற்கும் அவையாவற்றினதும் நலன்களைக் காப்பதற்கும் அவசியமானவை என்று கருதப்பட்டது.

குழுக்களில் தவிசாளர்கள், மந்திரிகள், குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரின் தெரிவில் சமூகங்களின் விகிதாசாரங்களின் படி சமநிலைப்பலம் பேணப்படும். வட அயர்லாந்தின் பாராளுமன்றமும் ஏனைய நிறுவனங்களும் ஐரோப்பிய யூனியனின் மனித உரிமைகள் சமவாயத்தை (CONVENTION ON HUMAN RIGHTS) மீறக்கூடாது. அதேபோல் வட அயர்லாந்து இயற்றும் உரிமைகள் சட்டத்தையும் மீறக்கூடாது. வட அயர்லாந்துக்கு ஒரு மனித உரிமை ஆணைக்குழுவும் சமத்துவ ஆணைக்குழுவும் (EQUALITY COMMISSION) நியமிக்கப்படும்.

எல்லாச் சமூகங்களினதும் கருத்துக்களையும் கேட்டறிவது மட்டுமல்லாமல் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவுகளை எடுக்கும் புத்தாக்க நடைமுறைகளை உடன்படிக்கை அறிமுகம் செய்தது. இத்தகைய முடிவு எடுத்தல் (DECISION MAKING) CROSS COMMUNITY BASIS முடிவுகள் என அழைக்கப்படும்.

உதாரணமாக அ) பாராளுமன்றம் அவைத்தலைவரைத் தெரிவு செய்தல், ஆ) முதலமைச்சரையும் பிரதி முதலமைச்சரையும் தெரிவு செய்தல், இ) வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு என்பன போன்ற முடிவுகளில் எல்லாச் சமூகங்களும் பங்கேற்புச் செய்வதை உறுதி செய்தல் என்பன இவ்வகையில் அடங்கும். இவ்வாறான முடிவுகள் எடுக்கும்போது,

  • PARALLEL CONSENT –  சமாந்தர சம்மதம்
  • WEIGHTED MAJORITY –  பெறுமதியிட்ட பெரும்பான்மை 

போன்ற உத்திமுறைகள் பயன்படுத்தப்படும். சமாந்தர சம்மதம் என்பதை விளக்குவதற்கு ஒரு உதாரணத்தை கூறலாம். ஒரு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது யூனியனிஸ்ட் கட்சியின் பெரும்பான்மை வாக்குகளும் தேசியவாதிகளின் (NATIONALISTS) பெரும்பான்மை வாக்குகளும் கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும். பெறுமதியிட்ட பெரும்பான்மை வாக்குகளுக்கு உதாரணம், ஒரு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது யூனியனிஸ்ட் உறுப்பினர்கள் 40 வீதத்தினரும் தேசியவாதிகளில் 40 வீதத்தினரும் சமூகமாயிருந்து வாக்களித்து மொத்த வாக்குகளில் 60 வீதமான வாக்கைப்பெற்று நிறைவேற்றுதல்.

(CROSS COMMUNITY BASIS) முடிவெடுத்தலை செயற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வின் போதே தமது சார்பு எது என்ற அடையாளத்தை (உதாரணம் – யூனியனிஸ்டா அல்லது தேசியவாதியா அல்லது வேறு ஏதேனும் ஒன்றா) உறுப்பினர்கள் தெரிவித்தல் வேண்டும்.

வட அயர்லாந்துப் பாராளுமன்றம் வட அயர்லாந்துக்குரிய அதிகார விடயங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்டதாக உள்ளது. அப் பாராளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் கூட இராஜாங்க செயலாளரின் (SECRETARY OF STATE) சம்மத்துடன் சட்டங்களை இயற்றலாம்.

வடக்கு  / தெற்கு மந்திரிகள் சபை (NORTH / SOUTH MINISTERIAL COUNCIL)

வடக்கு / தெற்கு மந்திரிகள் சபை என்ற அமைப்பு வட அயர்லாந்தினதும் அயர்லாந்துக் குடியரசினதும் மந்திரிகளை உள்ளடக்கிய ஒரு சபையாகும். இச்சபை வட அயர்லாந்தின் நிர்வாக விடயங்களில் சம்பந்தப்பட்டவர்களான இருதரப்பு மந்திரிகளும் ஒன்றிணைந்து ஆலோசிப்பதற்கும்  செயற்படுவதற்குமான சபையாகும். அயர்லாந்து அரசாங்கத்துடன் ஆலோசனைக் கூட்டுறவு மூலம் எல்லை கடந்த தொடர்புகள் (CROSS BORDER RELATIONS), இருதரப்பிற்கும் பொதுவான நலத்திட்டங்கள் என்பவற்றை செயற்படுத்த இச்சபை உதவும். இச்சபையின் முடிவுகள் உடன்படிக்கையின் படி நிறைவேற்றப்படும். இச்சபையில் வட அயர்லாந்தின் முதலமைச்சர், பிரதி முதலமைச்சர், தொடர்புடைய அமைச்சர்கள் என்போர் உறுப்பினராக இருப்பர். அயர்லாந்து அரசாங்கத்தின் சார்பில், பிரதம மந்திரியும் தொடர்புடைய அமைச்சர்களும் பங்குகொள்வார்கள். வடக்கு  / தெற்கு கூட்டுறவுச் செயற்பாடுகளுக்குரியனவாக பின்வரும் விடயங்கள் உள்ளன.

  1. கால்நடை, சுகாதாரம், பயிர் நோய்
  2. ஆசிரியர்களின் தகைமை பரிமாற்றம்
  3. தந்திரோபாயப் போக்குவரத்து திட்டமிடல்
  4. சூழல் பாதுகாப்பு, சூழல் மாசடைதல்
  5. நீர் வளங்கள் தரம் பேணல்
  6. கழிவு முகாமைத்துவம்
  7. உள்ளூர் கால்வாய் போக்குவரத்து
  8. எல்லை கடந்த தொழில் செய்யும் தொழிலாளர் விவகாரம்
  9. மோசடித் தடுப்பு
  10. சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு
  11. சந்தைப்படுத்தல்
  12. ஆராய்ச்சியும் உற்பத்திப் பொருள் மேம்பாடும்
  13. ஐரோப்பிய யூனியன் திட்டங்களில் பொருத்தமுடையவை
  14. நன்னீர் மீன்பிடி, மீன் வளர்ப்பு, கடல் போக்குவரத்து
  15. சுகாதாரத்துறை, விபத்து அவசர சிகிச்சை
  16. நகர அபிவிருத்தியும் கிராம அபிவிருத்தியும்

பிரித்தானியா – அயர்லாந்து சபை (BRITISH – IRISH COUNCIL)

பிரித்தானியாவிற்கு அயர்லாந்து தீவுகளுக்கும் இடையிலான பொதுவான விடயங்கள் பற்றி கலந்தாலோசித்து பரஸ்பர நன்மை தரும் விடயங்களில் நடவடிக்கை எடுப்பதற்காக பிரித்தானிய – அயர்லாந்து சபை (BIC) என ஒரு சபை இருக்கும் என உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரத்தானிய – அயர்லாந்து சபையின் உறுப்பினர்களாக பிரித்தானிய அயர்லாந்து அரசாங்கங்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனைவிட வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றின் அதிகாரப் பகிர்வுடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பிரித்தானிய இராச்சியத்தின் பகுதிகளான ISLE OF MEN (மான்தீவு), CHANNEL ISLAND ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பொருத்தமானவிடத்து உள்ளடக்கப்படலாம்.

உடன்படிக்கையில், எல்லா துணைப்படைக் குழுக்களினதும் ஆயுதங்களைக் களைதல் முக்கியமான விடயமாக குறிப்பிடப்பட்டது. இதனை கண்காணிப்பதற்காக சர்வதேச உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவை நியமிப்பதெனக் குறிப்பிடப்பட்டது.

1998 நவம்பர் 19 ஆம் திகதி நடத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பில் வட அயர்லாந்து, அயர்லாந்துக் குடியரசு ஆகிய இரு பகுதி மக்களாலும் பெரிய வெள்ளி உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வட அயர்லாந்தில் 71.1 வீதத்தினர் ஆதரவாக வாக்களித்தனர். அயர்லாந்து குடியரசில் அதனிலும் கூடிய பெரும்பான்மையான 94.4 வீதத்தினர் ஆதரித்து வாக்களித்தனர். சர்வசன வாக்கெடுப்பில் ஆதரவைப் பெற்ற பின்னர் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றம் 1998 இல் வட அயர்லாந்துச் சட்டத்தை இயற்றியது.

அயர்லாந்துச் சட்டத்தின்படி அயர்லாந்து பாராளுமன்றம் ‘கைமாற்றப்பட்ட விடயங்கள்’ (TRANSFERRED MATTERS) தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் உடையதாக உள்ளது. ஒதுக்கப்பட்டது அல்லது விதிவிலக்கானது என குறித்துரைக்கப்படாத எந்த விடயமும் (ANY MATTER IS NOT AN EXPECTED OR RESERVED MATTER) ‘கைமாற்றப்பட்ட விடயம்’ என வரையறை செய்யப்பட்டிருந்தது.

வெஸ்ட் மினிஸ்டரால்  ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் இரு வகைப்படும்.

  1. EXCEPTED MATTER  – விதிவிலக்கான விடயங்கள்
  2. RESERVED MATTER – ஒதுக்கப்பட்ட விடயங்கள்

இவற்றில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு.

விதிவிலக்கான விடயங்கள் :

முடி, பாராளுமன்றம், சர்வதேச உறவுகள், பாதுகாப்பு, குடிவரவும் பிரஜா உரிமையும், வரிவிதிப்பு, தேசிய காப்புறுதி (INSURANCE), தேசிய பாதுகாப்பு, அணுசக்தி, வான்வெளி ஆராய்ச்சி இவை கைமாற்றப்பட முடியாதன. இவற்றை கைமாற்றுவதாயின் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஒதுக்கப்பட்ட  விடயங்கள் :

இவை எதிர்காலத்தில் கைமாற்றப்படலாம். கைமாற்றப்படகூடிய ஒதுக்கப்பட்ட விடயங்களில் சில வருமாறு : கப்பற்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கடல் வளங்கள், தபாற்சேவை, ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாடு, வெளிநாட்டு வர்த்தகம், தொலைத்தொடர்பு முதலியன.

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கும் அதிகாரப் பகிர்வை பெற்ற பகுதிகளுக்கும் இடையே 2001 டிசம்பர் மாதம் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் (MEMORANDUM OF UNDERSTANDING) சிவெல் வழக்காறு (SEWEL CONVENTION) வட அயர்லாந்திற்கும் பொருந்துவதாயிற்று.

அதிகார பகிர்வு நடைமுறையில் முன்னேற்றம்

1998 இல் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.

  • உல்ஸ்ரர் யூனியனிஸ்ட் கட்சி (UUP) – 28 ஆசனங்கள்
  • ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி (DUP) – 20 ஆசனங்கள்
  • ஐக்கிய இராச்சிய யூனியனிஸ்ட் (UK UNIONIST PARTY) –  05 ஆசனங்கள்
  • சுதந்திர யூனியனிஸ்டுகள் – 03 ஆசனங்கள் 

குடியரசு சார்பானவர்களில்,

  • ஜனநாயக தொழிற்கட்சி (SDLP) – 24 ஆசனங்கள்
  • சின்பியன் – 18 ஆசனங்கள்
  • கூட்டணி(ALLIANCE) – 06 ஆசனங்கள்                                                                       
  • வட அயர்லாந்துப் பெண்கள் கூட்டணி (NIWC) – 02 ஆசனங்கள்

பெரிய வெள்ளி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. 1998 தேர்தலுக்கும் 2003 தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 2006 இல் ஸ்கொட்லாந்தில் எல்லாத் தரப்பினரும் பங்கு பற்றிய பேச்சுவார்த்தையின் முடிவில் புனித அன்ட்ரூஸ் உடன்படிக்கை (ST.ANDREWS AGREEMENT) நிறைவேற்றப்பட்டது. இந்த உடன்படிக்கை நிறைவேறியபின் 2007 மே 8 ஆம் தேதி மூன்றாவது தேர்தல் வட அயர்லாந்தில்  நடத்தப்பட்டது. தேர்தலின் முடிவில் வண. இயன் பெய்ஸ்லி (REV.IAN PAISLEY) முதலமைச்சராகவும், மார்டின் மக்கின்ஸ் (MARTIN MCGUINNESS) பிரதி முதலமைச்சராகவும் பதவியேற்றனர். பெய்ஸ்லி,  ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியைச் (DUP) சேர்ந்தவர். மார்ட்டின் மக்கின்ஸ், சின்பியன்  தலைவர். இருவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிரான தீவிரவாதிகள். பெரிய வெள்ளி உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட 1998 இல் இவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்பது கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத விடயமாக இருந்தது. வட அயர்லாந்து 2007 இல் அமைதிப் பாதையில் முன்னேற்றிக் கொண்டிருந்ததன் அடையாளம் இதுவெனலாம்.

வேல்ஸ்

இங்கிலாந்து நாட்டின் அரசர்கள் வேல்ஸ் பகுதியை அடிமைப்படுத்த நீண்ட காலம் முயற்சி செய்து வந்தனர். இறுதியாக 1282 இல் எட்வார்ட் வேல்ஸ்சை கைப்பற்றி ‘வேல்ஸ் இளவரசன்’ என்ற பட்டத்தை சூடிக்கொண்டார். வேல்ஸ் நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான புரட்சிகள் இடைவிடாது தொடர்ந்தன. 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசு வேல்ஸ்சை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் சட்டங்களான 1536, 1542 ஆகியவற்றை இயற்றியது. வேல்ஸின் நிர்வாகத்தை ‘வெல்ஸ்’ மொழியில் நடத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. 1707 இல் வேல்ஸ்  பெரிய பிரித்தானியாவின் பகுதியாயிற்று. 1801 இல் வேல்ஸ் ஐக்கிய இராச்சியம் (UNITED KINGDOM) என்ற அரசின் பாகமாக்கப்பட்டது. 1746 இற்கும் 1967 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் இங்கிலாந்திற்கு பிரயோகமாகும் அதேவேளை, தாமாகவே வேல்ஸ் சட்டங்களாகவும்  கருதப்பட்டன.

wales (1)

ஆங்கிலேயர்களின் மேலாதிக்கம் அதிகரித்தபோதும், வேல்ஸ் மக்கள் தமது மொழியையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்து வந்தனர். 20 ஆம் நூற்றாண்டில் பாடசாலைகளில் வெல்ஸ் மொழி கற்பிக்கப்பட்டது. குறிப்பாக வடமேற்கு வேல்ஸ் பகுதியில் பாடசாலைகளில் வெல்ஸ் மொழி கற்பிக்கப்பட்டது. வெல்ஸ் மொழியில் தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைக் கல்வித்திட்டத்தில் வெல்ஸ் மொழி  இணைப்புற்றது. 1993 ஆம் ஆண்டின் வெல்ஸ் மொழிச் சட்டம், நீதிமன்றுகளில் வெல்ஸ் மொழி பேசுவோர் தம் மொழியிலேயே வழக்குகளை தொடர்வதற்கு உரிமை வழங்கியது. அதேபோல பொதுத்துறை அலுவலகங்கள் யாவற்றிலும் வேல்ஸ் மக்கள் தங்கள் அலுவல்களை வெல்ஸ் மொழியில் நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. வெல்ஸ் மொழிக்கும் ஆங்கிலத்துக்கு சமத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டது

18 ஆம் நூற்றாண்டில் வேல்ஸ் பகுதியில் மெதடிஸ்ட் கிறிஸ்தவம் மறுமலர்ச்சியடைந்து  மக்களிடையே பரவியது. மெதடிசம் ஓர் மறுப்பு கொள்கைச் சமயமாகும். வேல்ஸ் 18 ஆம் நூற்றாண்டில் தொழிற் புரட்சியின் தாக்கத்திற்கு உள்ளானது. 19 ஆம் நூற்றாண்டில் தென்கிழக்கு வேல்ஸ் பகுதியில் கரிச்சுரங்கத் தொழில், இரும்புக் கைத்தொழில் என்பவற்றின் முன்னேற்றத்தினால் கைத்தொழில் வளர்ச்சி துரிதமாக ஏற்பட்டது. அத்தோடு சனத்தொகையும் விரைவாக அதிகரித்தது. 20 ஆம் நூற்றாண்டில் கைத்தொழில் துறையின் வீழ்ச்சியால் வேல்ஸின் தேசியவாத உணர்வுகள் தூண்டப்பட்டன. 1940 களில், அரசியலில் லிபரல்களின் இடத்தை  தொழிற்கட்சி பெற்றுக்கொண்டு முன்னிலைக்கு வந்தது. பிளெய்ட் சிம்றுவின் (PLAID CYMRU) தேசியக்கட்சி 1960 களில் தன் ஆதரவுத்தளத்தை விரிவாக்கி முன்னிலைக்கு வந்தது.

1974 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தொழிற்கட்சி அரசாங்கம், வேல்ஸ்சுக்கு அதிகாரப்பகிர்வை வழங்குவதில் அக்கறை கொண்டது. ஸ்கொட்லாந்துக்கு ஒரு சட்டசபையையும் வேல்ஸ்சுக்கு ஒரு சபையையும் அமைக்க முடிவாயிற்று. 1979 மார்ச் முதலாம் திகதி நடைபெற்ற சர்வசன வாக்கெடுப்பில் 20% வாக்காளரின் ஆதரவு மட்டுமே இதற்கு கிடைத்தது. மொத்த வாக்காளர்களில் 58.8% பங்குபற்றினர். இச் சர்வசன வாக்கெடுப்பு, தொழிற்கட்சியின் ஆதரவு வீழ்ச்சி கண்டிருந்த ஒரு தருணத்தில் நடைபெற்றது. சர்வசன வாக்கெடுப்பு நடந்து ஒரு மாதத்தின் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அக்கட்சி ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் தச்சரின் பழமைவாதக் கட்சி வெற்றி பெற்றது. மார்க்கிரேட் தச்சரதும் மேஜரதும் ஆட்சிக் காலத்தில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமற் போயிற்று. பழமைவாதக் கட்சியின் ஆட்சியில் வேல்ஸ்சின் கைத்தொழில் வலயம் பேரழிவுக்கு உட்பட்டது. வேலையின்மை அதிகரித்தது. வட வேல்ஸ் பகுதியில் பிளெய்ட் சிம்று (PLAID CYMRU) வின் தேசியக் கட்சி தன் பலத்தை அதிகரித்தது.

1997 மே மாதம் நடைபெற்ற தேர்தலின் போது ரோனி பிளயரின் (TONY BLAIR) தொழிற்கட்சி, வேல்ஸ்சிற்கு அதிகாரப் பகிர்வுடைய சட்டசபையை வழங்குவதாக நம்பிக்கையளித்தது. 1997 செப்டம்பர் இல் நடைபெற்ற சர்வசன வாக்கெடுப்பில் 50.3% மக்கள் அதிகாரப் பகிர்வுக்குச் சாதகமாக வாக்களித்தனர். இங்கிலாந்திற்கு அயலில் உள்ள வேல்ஸ் பகுதிகள் அதிகாரப் பகிர்வை நிராகரித்து வாக்களித்தன.

வேல்ஸ் அரசாங்கச்சட்டம் (GOVERNMENT OF WALES ACT) 1998 இல் இயற்றப்பட்டது. இச் சட்டத்தின்படி வேல்ஸ்சிற்கு ஒரு தேசியச் சட்டமன்றம் (NATIONAL ASSEMBLY) அமைக்கப்பட்டது. இச் சட்டமன்றத்திற்கு தனி அங்கத்தவர்கள் தொகுதிகளில் இருந்து 40 பேர் தெரிவு செய்யப்பட்டனர். பட்டியல் முறையின்படி பிராந்தியங்களில் இருந்து 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். வேல்ஸ் சட்டமன்றத்தில் நிர்வாகத்திற்கும் சட்ட ஆக்கத்திற்குமான முறைசார் (FORMAL) பிரிப்பு இருக்கவில்லை. கட்டளைகள், பிரமாணங்கள் என்ற வகையிலான துணைநிலைச் சட்டவாக்கம் (SECONDARY LEGISLATION) தொடர்பான கையளிக்கப்பட்ட அதிகாரம் (DELEGATED POWER) உடையதாக  வேல்ஸ் சட்டமன்றம் விளங்கியது. முதனிலைச் சட்டங்களை இயற்றுதல் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கு உரியதாக இருந்தது. இருப்பினும் சட்டமன்றம் குறிப்பிடத்தக்களவுக்குச் சுயாதீனம் உடையதாக இருந்தது.

வேல்ஸ் பகுதிக்கான இராஜாங்க செயலாளரின் (SECRETARY OF STATE FOR WALES) நிர்வாக அதிகாரங்கள் சட்டமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் பின்வருவன.

  • விவசாயம், வனத்துறை
  • மீன்பிடியும் உணவும்
  • பண்டைய நினைவுச் சின்னங்களும் வரலாற்று முக்கியத்துவமுடைய கட்டங்களும் 
  • பண்பாடு (அருங்காட்சியகங்கள், கலைக் கட்டடங்கள், நூலகங்கள்)
  • பொருளாதார விருத்தி
  • கல்வியும் பயிற்சியும்
  • சூழல்
  • சுகாதாரமும் சுகாதார சேவைகளும்
  • நெடுஞ்சாலைகள், வீடமைப்பு, கைத்தொழில்
  • உள்ளூராட்சி
  • சமூக சேவைகள், விளையாட்டு, பொழுதுபோக்கு
  • சுற்றுலாத்துறை
  • நகர, கிராம திட்டமிடல்
  • போக்குவரத்து
  • நீர் விநியோகம், வெள்ளப் பாதுகாப்பு
  • வெல்ஸ் மொழி

2002 ஆம் ஆண்டில் அதிகாரப் பகிர்வு ஒழுங்கமைப்புச் செயற்பாடு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக றிச்சார்ட் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. சீர்திருத்தம் வேண்டிய விடயங்கள் குறித்து பல சிபாரிசுகளைச் செய்தது. அச் சிபாரிசுகளில் சில வருமாறு.

  1. சட்டமன்றத்தின் கூட்டிணைவு (CORPORATE BODY) என்ற அந்தஸ்தில் இருந்து மாற்றி சட்டமன்றம் என்ற அந்தஸ்தை வழங்குதல்.
  2. சட்டமன்றத்திற்குப் பதில் நிர்வாகத்துறை,  சட்டவாக்கத்துறை என்ற நிறுவன அமைப்புகளை உருவாக்குதல்.
  3. 80 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையை உருவாக்குதல். அச் சட்டசபையின் உறுப்பினர்கள் தனிமாற்று வாக்கு முறையிலான விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி தெரிவு செய்யப்படுவர். இச் சட்டசபை 2011 அளவில் முதனிலைச் சட்டவாக்க அதிகாரம் உடையதாய் மாற்றமுறும்.

2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வேல்ஸ் அரசாங்கச் சட்டம் றிச்சார்ட் ஆணைக்குழுவின் சிபாரிசுகள் பலவற்றை உள்ளடக்கியதாய் இருந்தது. வேல்ஸ் அதிகாரப்பகிர்வின் படிமுறை வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாய் 2006 சட்டம் விளங்கியது. இச் சட்டம் வேல்ஸ்சில் மூன்று தனித்துவமான அரசியல் நிறுவன அமைப்புகளை உருவாக்கியது.

  1. வேல்ஸ்சின் தேசிய அசெம்பிளி (NATIONAL ASSEMBLY FOR WALES).  இது கூட்டிணைப்பு அல்லாத நிறுவன அமைப்பு (UNINCORPORATED BODY).
  2. முதலமைச்சரின் தலைமையிலான வேல்ஸ் அசெம்பிளியை அமைத்தல். அதனை நிர்வாக அதிகாரம் உடையதாக்குதல்.
  3. தேசிய அசெம்பிளி ஆணைக்குழுவை அமைத்தல். அதனை கூட்டிணைவு அமைப்பாக (BODY CORPORATE) அமைத்தல். இந்த அமைப்பு முற்கூறிய அசெம்பிளிக்கு ஆதரவு தரும் கருமங்களை ஆற்றுவதாக இருத்தல்.

1999 இல் வேல்ஸ் அசெம்பிளிக்கு நடைபெற்ற தேர்தலின்  முடிவுகள் பின்வருமாறு.

  • வெல்ஸ் தொழிற்கட்சி – 28 ஆசனங்கள்
  • பிளய்ட் சிம்று (PLAID CYMRU) – 17 ஆசனங்கள்
  • வெல்ஸ் பழமைவாதக்கட்சி – 09 ஆசனங்கள்
  • வெல்ஸ் லிபரல் தேசியவாதிகள் – 06 ஆசனங்கள்

2003 ஆம் ஆண்டு தேர்தலில் வெல்ஸ் தொழிற்கட்சி 30 ஆசனங்களை பெற்றது. சிம்றுவின் ஆசனங்கள் 12 ஆகக் குறைந்தன. வெல்ஸ் லிபரல் ஜனநாயகவாதிகள் 6 ஆசனங்களை பெற்றனர். 2007 தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

  • வெல்ஸ் தொழிற்கட்சி – 26
  • பிளய்ட் சிம்று – 15
  • பழமைவாதிகள் – 12
  • லிபரல் ஜனநாயகவாதிகள் – 06
  • கட்சி சாராத தனி அங்கத்தவர் – 01

வேல்ஸ் நிர்வாகத்துறையில் தொழிற்கட்சியும் பிளய்ட் சிம்றுவும் முறையே 5 பதவிகள், 3 பதவிகள் எனப் பதவிகளைப் பங்கிட்டுக்கொண்டுள்ளனர். தொழிற்கட்சியின் HYWEL RHODRI MORGAN, வேல்ஸ் முதலமைச்சராகவும் (2000 ஆண்டு முதல் 2003 வரை) அக்கட்சியின் CARAWAY HOWELL TONES, பிரதமராகவும் இருந்துள்ளனர்.

1997 முதல் வேல்ஸ்சின் அதிகாரப் பகிர்வுக்கான ஆதரவு அதிகரித்துச் செல்வதை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இன்னும் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தின் செல்வாக்கு வேல்ஸ்சில் இருந்து வருவதைப் பற்றிய உணர்வு இருந்து வருகிறதாயினும் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தைப் போன்ற சட்டவாக்க மன்றம் வேல்ஸ்சிற்கு வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது. 1997 இற்கும் 2003 இற்கும் இடையிலான கருத்துக்கணிப்பு மாற்றங்கள் பின்வருமாறு.

chart 1 (2)

ஏறக்குறைய 14% வீதத்தினர் வேல்ஸ் தனித்த சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்து வந்துள்ளனர். மேற்படி புள்ளிவிபரங்கள் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதை காட்டுகின்றன. 2010 பெப்ரவரி மாதம் பி.பி.சி நடத்திய கருத்துக்கணிப்பிலும் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அதிகரித்திருப்பதை அறிய முடிந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய படிப்பினைகள்

ஐக்கிய இராச்சியம் இன்று அடைந்துள்ள அரசியல் முன்னேற்றத்திற்கு, 

  1. பிரித்தானியாவின் அரசியல் பண்பாடு (POLITICAL CULTURE)
  2. புதுமைகளை புகுத்துவதில் உள்ள விருப்பமும் உறுதியும் 

என்று இரு பண்புகள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன.

ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவான ஐ ஆர் ஏ (IRA) அதிகாரப் பகிர்வுத் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்ததோடு ஆயுதப் போராட்டத்தை கைவிடுவது என்ற தீர்மானத்தை எடுத்தது மிக முக்கியமான திருப்பமாகும். வட அயர்லாந்தின் தேசியவாதிகள் சிவெல் வழக்காறு போன்ற எவ்வித வாக்குறுதிகளும் இல்லாமலே அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். சிவெல் வழக்காறு, பெரிய வெள்ளி உடன்படிக்கையின் பின்னரேயே நடைமுறைக்கு வந்தது. அயர்லாந்து அரசும் அமெரிக்க அரசும் நேரடியாக உடன்படிக்கையில் சம்பந்தப்படுவதும் உடன்படிக்கையின் வெற்றிக்கு சாதகமான செல்வாக்கை பிரயோகித்தது. தேசியவாதிகள் பிரித்தானியாவின் அரசியல் மரபுகளில் நம்பிக்கை வைத்தனர். அதிகாரப்பகிர்வு மூலம் தரப்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்படமாட்டா என்பதை நம்பினர். சிவெல் வழக்காறு இருந்திருக்காவிட்டால் ஸ்கொட்லாந்து மக்கள் அதிகாரப்பகிர்வை ஏற்றிருக்கமாட்டார்கள். அவ்வகையில் சிவெல் வழக்காறு ஒரு புத்தாக்கமான அரசியல் நடவடிக்கையாகும்.

வட அயர்லாந்திற்கும் வேல்ஸ்சிற்கும் சிவெல் வழக்காறு  பிரயோகிக்கப்பட்டமை ஒரு முன்னேற்றமான அரசியல் நடவடிக்கையாகும். ஸ்கொட்லாந்துச் சட்டம் (SCOTLAND ACT), அயர்லாந்துச் சட்டம் (IRELAND ACT) என்று இரண்டு அதிகாரப்பகிர்வை, முறையே ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து என்பனவற்றிற்கு வழங்கின. இப்போது இச் சட்டங்கள் காரணமாக ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றம்  ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து என்பன தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை இழந்துவிட்டதா? சிவெல் வழக்காறு சட்டம் அன்று. ஆனால் பிரித்தானியாவின் அரசியற் பண்பாடு (POLITICAL CULTURE) உயர்வானது. சிவெல் வழக்காறை மீறி வெஸ்ட் மினிஸ்டர், பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களில் அப்பகுதிகளின் சம்மதம் இன்றிச்சட்டம் இயற்றமாட்டாது.

ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றில் அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு பிரதான கட்சிகள் யாவும் பங்களிப்பை வழங்கின. பிரதான இரு கட்சிகளான தொழிற்கட்சியும் பழமை பேணும் கட்சியும் நாட்டின் நன்மை கருதிப் பொதுவான விடயங்களில் ஒற்றுமையாக செயற்படும் மனப்பாங்கையும் அணுகுமுறையையும் (BIPARTISAN APPROACH) கடைப்பிடித்தன. லிபரல் ஜனநாயக கட்சியும் தீர்வு ஒன்று அடையப்பட வேண்டும் என்பதில் சாதகமான கருத்தைக் கொண்டிருந்தது. அதிகாரப்பகிர்வை குழப்பிச் சிக்கலை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறவில்லை.

கட்சிகள் புத்தாக்கமான நடைமுறைகளைப் பற்றிச் சிந்திக்கவும் செயற்படவும் தயாராக இருந்தன. ஆயுதக்களைவு செயற்படுத்த முடியாத சிக்கலுடையதாகத் தோன்றியபோது சர்வதேச ஆணைக்குழு அமைப்பது சிபாரிசு செய்யப்பட்டது. தேசியவாதிகள் பகிரங்கமாக ஆயுதங்களைக் கையளிப்பதை விரும்பவில்லை. அதை அவர்கள் தமக்கு அவமரியாதை அளிப்பதாகக் கருதினர். யூனியனிஸ்டுகள் ஆயுதக்களைவைப் பகிரங்கமாக நடத்தப்படுவதை வற்புறுத்தவில்லை. அவர்கள் சர்வதேச ஆணைக்குழுவிடம் அப்பொறுப்பை அளிப்பதை விரும்பினர்.

வட அயர்லாந்தில் யூனியனிஸ்ட் பெரும்பான்மையினராக உள்ளதால் வெஸ்ட் மினிஸ்டர் மரபின்படி ஆட்சி அதிகாரம் பெரும்பான்மையினரிடமே இருக்கும். ஆகையால் நிர்வாக அதிகாரத்தில் தேசியவாதிகளிற்கு பங்கேற்பு இல்லாவிடில் அவர்கள் எந்தவித உடன்பாட்டிற்கும் வரமாட்டார்கள். வட அயர்லாந்தின் நிர்வாகத்தில் பலகட்சிகளும் பங்கேற்கும் முறை (MULTI- PARTY EXECUTIVE) முன்மொழியப்பட்டது. யூனியனிஸ்டுகளையும் தேசியவாதிகளையும் ஒருங்கே சந்திக்கவைத்துப் பேச வைப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. வட அயர்லாந்தில் தொடக்கத்தில், இரு கட்சிகளின் மிதவாதிகள்கூட இணைந்து செயற்பட முன்வரவில்லை. காலப்போக்கில் இக் கட்சிகளின் தீவிரவாதிகள் கூட ஒன்றாகச் செயற்படுகிறார்கள். ஒருவரோடு ஒருவர் சிரித்துப் பேசுகிறார்கள். உடன்பாடு நன்முறையில் செயற்படுவதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்?

jayampathi

மனித உரிமைகள் சட்டம், அரசியல் யாப்புச் சட்டம் ஆகிய துறைகளில் புலமையாளராக விளங்குகின்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியலில் B.SC பட்டத்தைப் பெற்றபின்னர் சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டத்தைப் பயின்றார். இவர் சட்டத்துறையில் நிபுணத்துவம் மிக்கவராக சிறப்புப்பெற்றார். பொதுநிர்வாகவியல் துறையில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் MPA பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 2015 – 2020 காலத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் Institute of constitutional studies நிறுவனத்தின் பணிப்பாளரும் ஆவார்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7969 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)