இந்தியாவின் சமஷ்டி மாதிரி - பகுதி 1
Arts
15 நிமிட வாசிப்பு

இந்தியாவின் சமஷ்டி மாதிரி – பகுதி 1

January 12, 2024 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : றேக்கா சாக்சன

சமஷ்டி, பாராளுமன்ற முறை என்ற இரண்டும் இந்திய அரசியல் முறைமையின் அடிப்படையான கூறுகளாகும். ஒன்றுக்கொன்று முரண்பாடான இத் தத்துவங்களில் பாராளுமன்ற முறை (PARLIAMENTARISM ), பாராளுமன்றத்தின் அதியுயர் அதிகாரத்தை வலியுறுத்துவது. சமஷ்டி (FEDERALISM), அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படுவதை முதன்மைப்படுத்துவது. இவ்வாறாக மத்தியப்படுத்திய பாராளுமன்ற அதிகாரமும் அதிகாரப் பரவலாக்கமும் என்ற இரண்டு கூறுகளும் ஒன்றிணைந்து இருத்தல் இந்தியாவிற்கு அவசியத் தேவையாக இருந்தது. இந்தியாவின் பிரமாண்டமான பரப்பளவு, அதன் பிராந்திய பன்மைத்துவம் (REGIONAL DIVERSITY) என்பன இப் பண்பைத் தேவைப்படுத்தின. 1947 இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்பும் கூட இத்தேவை இருந்து வந்துள்ளது.

States of India

இந்தியா, கனடா, அவுஸ்திரேலியா என்ற மூன்று நாடுகளும் சமஷ்டி முறையை ஏற்றுக் கொண்டதோடு பிரித்தானியாவின் பாராளுமன்ற முறையையும் அரசியல் யாப்பில் ஏற்று உள்வாங்கிக் கொண்டன. பொதுநலவாயத்தின் வரலாற்றில் முதன்முதலாக சமஷ்டி, பாராளுமன்ற முறை என்ற இரண்டையும் இணைத்துக் கொண்ட மூன்று நாடுகள் இவை எனலாம். இந்திய சமஷ்டியும், கனடாவின் சமஷ்டியும் பலமான மத்தியைக் கொண்ட (STRONG CENTER) அதிகாரமுடைய நிறுவனமாக பாராளுமன்றத்தைக் கொண்டிருந்தன. இந்நாடுகள் வெஸ்ட்மினிஸ்டர் முறைக்கு (WESTMINSTER SYSTEM) நன்கு பழக்கப்பட்டிருந்தமையால் இந்தவகையான சமஷ்டி முறையை (கலப்பு முறையை) ஏற்பதற்கான தூண்டுதல் இருந்தது. கனடாவும், இந்தியாவும் சமஷ்டி முறையை ஏற்ற போதும் சமஷ்டி முறை எமக்குத் தேவைதான் ஆனால் முழுமையாக அது தூய சமஷ்டியாக இருக்க வேண்டியதில்லை என்று கருதின எனலாம் (FEDERAL IS NECESSARY BUT NOT NECESSARILY FEDERAL).  சமஷ்டி எண்ணக்கருவை இவ்விரு நாடுகளும் மிகுந்த முன்யோசனையுடன் ஏற்றுக் கொண்டன. கனடாவிலும், இந்தியாவிலும் பண்பாட்டு வேற்றுமைகளும் பிராந்திய வேறுபாடுகளும் மிகுதியாக இருந்தமையால் சமஷ்டி பொருத்தமானதொரு முறை என அவை முடிவு செய்தன. அவுஸ்திரேலியாவில் பண்பாட்டு வேறுபாடுகள் முக்கியம் பெற்றிருக்கவில்லை. ஆனால் அதன் புவியியல், ஒரு கண்டம் என்ற அளவுக்குப் பரந்ததாக இருந்தமையால் அங்கு பிராந்திய அடிப்படையிலான அடையாளங்கள் வளர்ச்சியுற்றிருந்தன. அவுஸ்திரேலியாவும், பிராந்திய அடையாளங்களுக்கு எற்புடைமை அளித்துச் சமஷ்டி முறையைத் தழுவிக் கொண்டது.

தேசிய ஐக்கியம்

கனடாவிலும், இந்தியாவிலும் பண்பாட்டு வேறுபாடுகள் மிகுதியாகக் காணப்பட்டதால் தேசிய ஐக்கியத்தை (NATIONAL UNITY) பேணுதல் வேண்டுமென்ற ஆதங்கம் இருந்து வந்தது. இக்காரணத்தால் இவ்விரு நாடுகளும் அதிகாரப் பலம் மிக்க மத்திய அரசையுடைய சமஷ்டி முறையை உருவாக்கின. அவுஸ்திரேலியாவிற்கு இத்தேவை இருக்கவில்லை. இந்தியாவில் பாக்கிஷ்தான் பிரிவினையால்  எழுந்த அவலநிலை, பலம் பொருந்திய மத்தியின் தேவையை உணர்த்தி நின்றது. சுதந்திரம் அடைந்த பின்னர் சமஷ்டிச் சட்டகத்திற்குள், திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி (PLANNED ECONOMIC DEVELOPMENT) என்னும் தந்திரோபாயத்தைக் கையாள வேண்டுமென இந்தியாவின் தேசியவாத உயர் குழாம் (NATIONALIST ELITE) விருப்பம் கொண்டிருந்தது.

1935 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு

இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சி பலமான மத்தியைக் கொண்ட மத்தியப்படுத்தப்பட்ட நிர்வாக முறையாக (CENTRALISED ADMINISTRATIVE SYSTEM ) இருந்து வந்தது. இத்தகைய முறைக்குள் சமஷ்டி ஒழுங்கமைப்பைப் புகுத்தும் முயற்சி 1935 இல் மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் 1935 (THE GOVERNMENT OF INDIA ACT 1935 ) என்ற அரசியல் யாப்புச் சட்டம் இதனைத் தொடக்கி வைத்தது. ஆயினும் இந்தியாவின் சமஸ்தானங்கள் இச்சமஷ்டி ஒழுங்கில் இணைந்து கொள்ளச் சம்மதம் தெரிவிப்பதில் தயக்கம் காட்டின. இதனால் 1935 அரசியல் யாப்பின் படி பிரித்தானியாவின் நேரடி ஆட்சிக்குட்பட்டிருந்த மாகாணங்கள் (PROVINCES) மட்டுமே இணைந்தன. அம் மாகாணங்களில் அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய மாகாண அரசுகள் உருவாக்கப்பட்டன. 1935 சட்டம், மாகாண அரசுகளை இயங்க வைத்தது. அதேவேளை அதன் மத்தி (மாநில அரசுகளின் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மத்திய அரசு) செயற்பாடு உடையதாக இருக்கவில்லை. அது பின்போடப்பட்டது. இருந்த போதும் 1950 ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியா, பாராளுமன்ற முறையிலான மத்தியமயப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பு முறையை உருவாக்கிக் கொள்வதற்கு 1935 அரசியல் யாப்புச் சட்டம் அடித்தளம் இட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் இருநிலையிலும் இயங்கும் அரசாங்கங்கள் (TWO LEVELS OF GOVERNMENT) செயற்பாட்டிற்கு வந்தன. அவற்றிற்கிடையிலான அதிகாரங்களை எல்லை வகுத்துக் கூறும் மூன்று அட்டவணைகள் (THREE LISTS) அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டன. இந்த மூன்று அட்டவணைகளும் முறையே;

  1. மத்திய அரசின் நியாயாதிக்கம் (FEDERAL JURISDICTION),
  2. மாநிலங்களின் நியாயாதிக்கம் ( PROVINCIAL JURISDICTION),
  3. ஒருங்கிணை நியாயாதிக்கம் (CONCURRENT JURISDICTION)

என்பனவற்றை வகுத்துரைத்தன. புதிய அரசியல் யாப்பு பல திருத்தங்களையும் சேர்த்துக் கொண்டது.

மொழிவழி மாநிலங்கள்

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் இனத்துவ – மொழிவழிக் கோரிக்கைகள் (ETHNIC-LINGUISTIC DEMANDS) அதிகரித்தன; தீவிரம் பெற்றன. இந்தியாவின் தேசியத் தலைமை, பிராந்தியங்களிலிருந்து வந்த கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க முன்வந்தது. ஆயினும் தொடக்கத்தில் ஒருமொழி மாநிலக் கோரிக்கைகள் (UNI-LINGUAL STATES) நிராகரிக்கப்பட்டன. பன்மொழி மாநிலங்கள் முறையே தொடர வேண்டும் என்று கருதப்பட்டது. அம் முறையே தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதவும் எனவும் நோக்கப்பட்டது. 1935 இல் மாநில அரசுகள் மறு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதன் விசாரணை அறிக்கை 1955 இல் வெளியாயிற்று. அவ்வறிக்கையிலும் பன்மொழி மாநிலங்கள் முறையே தொடர வேண்டும் என்றும், அவசியமேற்பட்டால் அல்லாது மொழிவழி மாநிலங்கள் கோரிக்கைகளுக்கு இடமளித்தல் கூடாது எனக் கூறப்பட்டது.

Nehru

1950 களில் தென்னிந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேற்கு இந்தியாவிலும், வட இந்தியாவிலும் 1960 களில் மாநிலங்களின் மறுசீரமைப்பு இடம்பெற்றது. 1970 களில் வடகிழக்கு இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டன. (இக்கட்டுரையை எழுதும் வேளையில்) புதிய மாநிலங்களின் உருவாக்கம் பற்றிய கோரிக்கைகள் பரிசீலனையில் இருந்தன (உதாரணம்: தெலுங்கானா – ஆந்திர மாநிலம், விதர்ப்பா – மகாராஷ்டிரா). உத்தரப் பிரதேசத்தில் உத்தராஞ்சல் மாநிலமும், பிகாரில் ஜார்கன்ட் மாநிலமும், மத்தியப் பிரதேசத்தில் சதிஸ்கார் மாநிலமும் 2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்தியாவின் எல்லைகள் இனிவரும் காலங்களில் எவ்வாறெல்லாம் மாறப்போகின்றன என்பது உறுதியாகக் கூறமுடியாத விடயம்.

சமஷ்டிக் கட்டமைப்பு

இந்தியாவின் சமஷ்டிக் கட்டமைப்பு (FEDERAL STRUCTURE) பற்றி அடுத்து நோக்குவோம். அரசியல் யாப்பு, பாராளுமன்ற முறையிலான  சமஷ்டி முறையை உருவாக்கியது. பாராளுமன்ற முறையில் நிறைவேற்று அதிகாரம் (EXECUTIVE POWER) தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சட்டசபையிடம் (LEGISLATURE) பொறுப்பளிக்கப்பட்டிருக்கும். இந்திய ஒன்றியத்தின் (UNION) பாராளுமன்றம் லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளைக் கொண்டது. லோக்சபா உறுப்பினர்கள் நேரடியாக வாக்காளர்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர். ராஜ்யசபா என்னும் இரண்டாவது சபை (FEDERAL SECOND CHAMBER) நேரடியாக அல்லாத முறையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டமைவது. மாநில சட்டசபைகளின் உறுப்பினர்களும் ராஜ்யசபா உறுப்பினர்களின் தேர்தலில் வாக்காளர்களாகப் பங்கேற்பர். மாநிலங்கள் சிலவற்றில் இருசபைகள் உள்ளன. வேறு சில மாநிலங்கள் ஒருசபை (UNI-CAMERAL) மட்டும் உடையனவாக உள்ளன.

ஜனாதிபதியும் ஆளுநர்களும்

இந்திய சமஷ்டி அரசின் தலைவராக ஜனாதிபதி விளங்குகின்றார். ஜனாதிபதியை, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் மற்றும் ராஜ்யசபா, மாநில சட்டசபைகள் என்பனவற்றின் உறுப்பினர்களும் தெரிவு செய்வர். மாநிலங்களின் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் நிறைவேற்றுத் துறையால் (UNION EXECUTIVE) நியமிக்கப்படுவர். ஜனாதிபதியும், மாநிலங்களின் ஆளுநர்களும் பெயரளவுத் தலைவர்கள் (NOMINAL HEADS), சடங்கியல் தன்மையுடைய கடமைகளைச் செய்பவர்கள் எனவும் கருதப்படுவர். ஆயினும் இத் தலைவர்களுக்கு தற்துணிவு அதிகாரத்தை உபயோகிக்கும் சில சந்தர்ப்பங்களும் எழுவதுண்டு. குறிப்பாகத் தேர்தல் முடிந்த பின்னர், அதிலும் பெரும்பான்மையுடைய ஒரு கட்சி இல்லாதவிடத்து, அல்லது பல கட்சிகள் சேர்ந்த கூட்டு ஆட்சியமைக்க முன்வரும் பொழுது, பிரதமரை அல்லது முதலமைச்சரை நியமிக்கும் தற்துணிவு அதிகாரம் பிரயோகிக்கப்படுதல் கூடும். ஒன்றிய அரசின் பிரதமரும் அவரது அமைச்சரவையும், மாநில அரசுகளின் முதலமைச்சர்களும், அவர்களது அமைச்சரவைகளும் இந்தியாவின் உண்மையான நிறைவேற்று அதிகாரம் (REAL EXECUTIVE AUTHORITIES) உடையனவாய்; ஒன்றியம், மாநிலங்கள் என்ற இரு நிலைகளிலும் செயற்படுகின்றன.

நீதித்துறை

இந்திய சமஷ்டி அமைப்பின் நீதித்துறை (FEDERAL JUDICIARY) படித்தர அமைப்புடைய ஒன்றிணைந்த பொது அமைப்பாக விளங்குகின்றது. நீதிபதிகளை ஒன்றிய நிறைவேற்றுத்துறை நியமனம் செய்கிறது. நீதிபதிகளின் பதவி நீக்க நடைமுறை பற்றி அரசியல் யாப்பின் உறுப்புரை 124 (2), 124 (4) என்பன விளக்கிக் கூறியுள்ளன. பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஜனாதிபதி பதவி நீக்கத்தைச் செய்வார். இத் தீர்மானங்கள் இருசபைகளிலும் தனித்தனியாக சமூகமளித்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருத்தல் வேண்டும்.

அகில இந்திய சேவைகள்

இந்தியாவின் சமஷ்டி முறையின் தனித்துவமான இயல்புகளில் அகில இந்திய சேவைகள் (ALL INDIA SERVICES) முக்கியம் வாய்ந்ததொன்றாகும். இப்போது அங்கு மூன்று சேவைகள் செயற்பாட்டில் உள்ளன.

  1. இந்திய நிர்வாக சேவை (IAS)
  2. இந்திய பொலிஸ் சேவை (IPS)
  3. இந்திய வனத்துறைச் சேவை (IFS)

இவற்றை விட மத்திய சேவைகள், மாநில அரசுச் சேவைகள் ஆகியனவும் உள்ளன. ஒன்றிய பொதுச் சேவை ஆணைக்குழுவினால் (UPSC) அகில இந்திய சேவை உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படுவர். இச் சுதந்திர அமைப்பு உத்தியோக ஒன்றிய அரசு கல்விக் கழகங்களில் (ACADEMIES) பயிற்சி வழங்குகிறது. பின்னர் உத்தியோகத்தர்களுக்கும் மாநில அரசுப் பதவிகளில் வேலையின் ஊடான பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டோருக்கு மாநில அரசுகளில் நீண்டகாலம் பணியாற்ற இடமளிக்கப்படுகிறது. இடையிடையே அவ் உத்தியோகத்தர்கள் மத்திய அரசுக்கும் பணிக்காக விடுவிக்கப்படுவர்.

சமஷ்டி முறையின் முக்கியமான சேவைகளில் ஒன்று இந்தியத் தேர்தல் ஆணைக்குழு (உறுப்புரை 324) ஆகும். இவ் ஆணைக்குழு ஒன்றிய அரசின் தேர்தல்களையும், மாநில அரசுகளின் தேர்தல்களையும் நடத்தும் பொறுப்புடையது. கணக்காய்வு கட்டுப்பாட்டாளரும், கணக்காய்வு நாயகமும் (COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA )  (உறுப்புரை 148 ) ஒன்றிய அரசினதும், மாநில அரசுகளதும் கணக்குகளைக் கணக்காய்வு செய்பவராய் விளங்குகின்றார். இதனை விட ஒன்றிய நிதி ஆணைக்குழு (FINANCE COMMISSION ) ( உறுப்புரை 280 ) என்றொரு அமைப்பு உள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமனம் செய்யப்படும். இவ் ஆணைக்குழு, கிடைக்கும் நிதி வருவாயை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பங்கீடு செய்தல் பற்றிய தத்துவங்களையும் நடைமுறைகளையும் இந்திய அரசியல் யாப்பு ஏற்பாடுகளுக்கு அமைவாகச் செய்யும்.

அடுக்கு அரசாங்கம்

இந்திய அரசியல் முறைமையின் மூன்றாம் அடுக்கு அரசாங்க நிறுவனங்களாக கிராம, நகர மட்ட உள்ளூராட்சி அமைப்புக்கள் விளங்குகின்றன. நகர மட்டத்தில் முனிசிப்பல் சபைகளும் கிராம மட்டத்தில் பஞ்சாயத்துப் போன்ற அமைப்புக்களும் இயங்குகின்றன. உள்ளூராட்சி, மாநில அரசுகளின் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட அமைப்புக்களாகும். 1992 இல் கொண்வரப்பட்ட அரசியல் யாப்பு திருத்தச் சட்டங்கள் 73,74 என்பன அந் நிறுவனங்களுக்கு அரசியல் யாப்புச் சட்ட அந்தஸ்தை வழங்கின. இத் திருத்தங்களின் படி மாநில அரசினால் உள்ளூராட்சி நிறுவனங்களிற்கும்  பகிர்ந்தளிக்கக் கூடிய அதிகாரங்கள் விபரித்துக் கூறப்பட்டுள்ளன.

அரசுகளுக்கிடையிலான உறவுகள்

இந்திய சமஷ்டி முறையில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே உறவுகளை (INTER-GOVERNMENTAL RELATIONS) பேணுவதற்குரிய நிறுவன அமைப்புக்கள் உள்ளன. இவ் நிறுவன அமைப்புகள் ஒரு மாநிலத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான உறவுகளை (INTRA GOVERNMENTAL) பேணிவளர்க்கவும் உதவுகின்றன. 

1.1990 ஆம் ஆண்டின் உறுப்புரை 263 இன் படி INTER STATE COUNCIL (ISN) என்னும் அமைப்பு இயங்குகிறது.

2.1952 இல் அமைச்சரவைத் தீர்மானத்தின் படி உருவாக்கப்பட்ட NATIONAL DEVELOPMENT COUNCIL (NDC) இயங்கி வருகிறது. இது ஐந்து ஆண்டுத் திட்டங்களைத் தயாரித்து நிறைவேற்றி வருகிறது.

3.ஒன்றிய அரசு மட்டத்திலும், மாநில அரசுகள் மட்டத்திலும் பணியாற்றும் பிரதம மந்திரி ஒன்றிய அரசின் முக்கிய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அவர்களது செயலாளர்கள் ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றுகூடிக் கலந்து பேசும் மாநாடுகள் (CONFERENCES) காலத்திற்கு காலம் இடம்பெறுகின்றன.

மேற்குறித்த நிறுவன அமைப்புக்கள் பொதுவான விடயங்கள் குறித்த பேரம் பேசல்கள், கொள்கைகளின் சமரசமான இணக்கம், நிறைவேற்றுதலில் (அமுலாக்கம்) ஒருங்கிணைப்பு என்பனவற்றைச் சாத்தியமாக்கியுள்ளன. மேலே குறித்த அரசுகளிற்கிடையிலான உறவுகள் (INTER-GOVERNMENTAL RELATIONS), நிறுவனங்களின் சிறப்பியல்பு ஒன்றைக் குறிப்பிடுதல் அவசியம். இந்த சந்திப்பு அரங்குகளில் (Forums) Inter State Council (ISC) மட்டும் அரசியல் யாப்பின் படி (உறுப்புரை 263) உருவாக்கப்பட்டதாகும். ஏனையவை அரசியல் யாப்பினால் அல்லது சட்டங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை நிறைவேற்றுத்துறையின் தீர்மானங்களால் அல்லது முன்முனைவுகளால் உருவாக்கப்பட்டவை. அவற்றின் செயற்பாட்டில் முறைசாராத் தன்மையும் (Informality) உள்ளன. ISC உட்பட்ட இந்த அமைப்புகளின் கூட்டங்களின் முடிவுகள் கருத்தொருமையின்படியும், தவிசாளரின் தீர்மானப்படியும் நிறைவேற்றப்படுகின்றன.

அவசரகால ஏற்பாடுகள்

இந்திய அரசியல் யாப்பின் முக்கியமான இயல்புகளில் ஒன்று அதில் காணப்படும் அவரசரகால ஏற்பாடுகள் (Emergency Provisions) ஆகும். அரசியல் யாப்பின் படி மூன்று வகையான அவசரகால நிலைகள் தோன்றுவதற்கு இடம் உள்ளது. அரசியல் யாப்பினை வரைந்த குழுவின் தலைவரான டாக்டர் B.R அம்பேத்கர் அரசியல் யாப்பு அவையில் (Constituent Assembly) பேசும்போது இது பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவின் சமஷ்டி அரசியல் முறைமையை இம் மூவகை அவசர காலநிலைமைகளும் ஒற்றையாட்சி அல்லது பாராளுமன்ற முறையின் தன்மைக்கு மாற்றிவிடுகின்றன என அம்பேத்கார் குறிப்பிட்டார். அரசியல் யாப்பு எதிர்பார்க்கும் மூன்று அவசரகால நிலைகளாவன;

  • அந்நிய ஆக்கிரமிப்பினால் அல்லது உள்நாட்டுக் கிளர்ச்சியால் அல்லது இரண்டும் ஒன்று சேர்ந்து விடும் நிலை காரணமாக எழும் அவசர காலநிலை (உறுப்புரை 352),
  • அரசியல் யாப்பு இயந்திரம் (அதன் நிறுவனங்கள்) செயலிழந்து போவதால் எழும் அவசரகாலநிலை (உறுப்புரை 356),
  • ஒன்றியமோ அல்லது மாநிலமோ நிதி நெருக்கடியால் செயலிழத்தல். அதனால் எழும் அவசரகால நிலை (உறுப்புரை 360).
Ambethkar

இவ்வாறான மூன்று சந்தர்ப்பங்களிலும் யூனியன் அரசு அரசாங்கம் ஒன்றை பதவி நீக்கலாம் அல்லது மாநில சட்ட சபையைக் கலைக்கலாம் அல்லது மாநில அரசு ஒன்றின் அதிகாரங்களைக் கையேற்கலாம். தேவையேற்படின் ஒரு மாநில அரசாங்கத்தைக் கலைக்காமல் அதனைப் பதவியில் இருக்கவிட்டு அதிகாரங்களை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளலாம். இதனாலேயே அவசரகாலநிலையில், இந்தியா ஒற்றையாட்சி நாடாக மாறிவிடுகிறது அல்லது பாராளுமன்ற முறை அரசாங்கத்தின் தன்மையைப் பெற்றுவிடுகிறது என B.R அம்பேத்கர் குறிப்பிட்டார்.

இந்திய அரசியல் அமைப்பின் அசமத்துவப் பண்புகள்

இந்தியாவின் சமஷ்டியை அசமத்துவ சமஷ்டி (Asymmetrical Federalism) என்று அழைப்பர். இவ்வாறு அசமத்துவம் – சமத்துவம் இன்மை (Asymmetry) மாநில அரசுகளிற்கிடையே இருப்பதால் அசமத்துவ சமஷ்டி என அது அடைமொழி சேர்த்து அழைக்கப்படுகிறது. இந்தியா என்னும் பன்மைத்துவ தேசத்திற்கு (Multicultural Nation) அச்சம் தரும் பிசாசு போன்றும், பாதுகாப்பை வழங்கும் மீட்பர் போன்றும் அசமத்துவம் விளங்குவது அதன் புதிர் நிறைந்த நகை முரண் ஆகும்.

அசமத்துவம் என்றால் நடைமுறையில் அதன் பொருள் யாது? ஒரு பிரதேசம் அல்லது மாநிலம் அல்லது இந்திய அரசின் ஒரு அலகு, மற்ற அலகுகளை விட தனித்துவமான அரசியல் யாப்பு அந்தஸ்தைப் பெறுவதே அசமத்துவம் எனப்படும். இந்திய சமஷ்டியில் நான்கு வகையான அசமத்துவங்கள் காணப்படுகின்றன.

முதலாவது அசமத்துவத்திற்கு சிறந்த உதாரணம், இந்திய மாநிலங்கள் ராஜ்யசபாவில் பெறும் பிரதிநிதித்துவத்தில் காணப்படும் வேறுபாடு ஆகும். சனத்தொகையில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திலிருந்து 31 உறுப்பினர்கள் ராஜ்யசபையில் பிரதிநிதிகளாக உள்ளனர். ஆனால் வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா, மிசோராம், மணிப்பூர் என்பனவும் புதுச்சேரி, கோவா என்பனவும் ராஜ்யசபாவில் ஒரேயொரு உறுப்பினர் பிரதிநிதித்துவத்தை உடையனவாக உள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் அச் சமஷ்டியில் இணைந்திருக்கும் அரசுகளுக்கிடையே இத்தகைய வேறுபாடு கிடையாது. ஐக்கிய அமெரிக்கா போன்ற நிலையை வெளிப்படையான சமத்துவம் (Formal Equality) எனலாம். இந்திய சமஷ்டியின் உறுப்புரை 4 (1), 80 (2) என்பனவற்றை அரசியல் யாப்பின் 4 ஆவது அட்டவணையுடன் சேர்த்து வாசிக்கும்பொழுது இந்தவகை அசமத்துவம் அரசியல் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இரண்டாவது வகை அசமத்துவம் சில மாநிலங்களின் நிர்வாகத்தோடு தொடர்புடைய விசேட பிரச்சினைகளோடு சம்மந்தமுடையவை. இவ்வகை அசமத்துவமும் மூன்றாகப் பிரித்து நோக்கத்தக்கது.

அ. பழங்குடிகள் வாழும் பிரதேசங்கள் பற்றியவை.

ஆ. குறித்த மாநிலங்களுக்கு உள்ளே உள்ள பிராந்திய வேறுபாடுகள் (Intra Regional Disparities) தொடர்பானவை.

இ. மகாராஷ்டிரா, குஜராத், அசாம், மணிப்பூர், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம், கோவா ஆகிய மாநில அரசுகளின் சட்டமன்றங்களின் (State Assemblies) ஆசனங்களைத் தீர்மானித்தல், அம் மாநிலங்களின் சட்டமும் ஒழுங்கும் பிரச்சினைகள் தொடர்பானவை. 

north states india

உதாரணமாக மகாராஷ்டிரா அல்லது குஜராத் ஆளுநர் தமது மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்காகத் தனியான அபிவிருத்திச் சபைகளை (Separate development boards) அமைக்க வேண்டும் என்றும், அவற்றுக்கு நீதியான முறையில் அபிவிருத்திக்கான நிதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் உறுப்புரை 371 கூறுகிறது. மேலும் அப் பகுதிகளின் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும்; தொழில்நுட்பக் கல்வி, தொழிற்பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் இவ்வுறுப்புரை கூறுகிறது. 371 ஆம் உறுப்புரையில், மகாராஷ்டிரா, குஜராத் ஆளுநர்களுக்குரிய ‘விசேட பொறுப்பு’ (Special Responsibility) இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பழங்குடி மலைப் பிரதேசவாசிகளின் நலன்களைக் கவனிப்பதற்கான, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றக் குழுவை உருவாக்குவதற்கு 371 உறுப்புரையின் B, C பிரிவுகளின்படி இந்திய ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு பிராந்தியங்கள் பின்தங்கிய பகுதிகளாகும். இப் பின்தங்கிய பகுதிகளின் மக்களுக்கு அரசாங்கத்துறையில் தொழில் வழங்குதல், கல்வி தொடர்பாக நியாயமான சந்தர்ப்பங்களும் வசதிகளும்’ (Equitable Opportunities and Facilities) என்பன உறுப்புரை 371 F மற்றும் I என்பனவற்றால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு ஆந்திராவின் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்காக மத்திய பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிக்கிம், கோவா போன்ற சிறிய மாநிலங்களின் சட்டசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கை ஆகக் குறைந்தது முப்பது உறுப்பினர்களுக்கு குறையாதவாறு இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது (உறுப்புரை  371 F,I). இவ்வுறுப்புரை ‘சமாதானம் தொடர்பான விசேட பொறுப்பையும், பல்வேறு மக்கட் பிரிவினரதும் சமூக, பொருளாதார, முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் ஒழுங்குகளைச் செய்வதையும்’ மாநிலத்தின் ஆளுநரது பொறுப்பாகக் குறிப்பிடுகின்றது.

அருணாசலப் பிரதேசத்தின் ‘சட்டமும் ஒழுங்கும் தொடர்பான விசேட பொறுப்பு’ ஜனாதிபதிக்குரியதென உறுப்புரை 371 H குறிப்பிடுகிறது. அவ்விடயத்தில் ஜனாதிபதி மந்திரி சபையைக் கலந்தாலோசித்து தமது ‘சொந்தத் தீர்ப்பின்படி’ (Individual Judgement) செயற்படுவதற்கும் இவ்வுறுப்புரை அதிகாரமளித்துள்ளது.

இந்திய சமஷ்டியில் காணப்படும் மூன்றாவது அசமத்துவம் ஒன்றியப் பிரதேசங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் (Union Territories) சம்மந்தப்பட்டதாகும். ஒன்றியப் பிரதேசங்கள் மத்தியின் ஆட்சியின் கீழ் உள்ள பிரதேசங்களாகும். எல்லாமாக ஏழு ஒன்றியப் பிரதேசங்கள் (U.T) உள்ளன. இவை  வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை. இவை தனி மாநிலங்களாக ஆக்கப்படுவதற்குப் போதுமான அளவு புவி இடப்பரப்பைக் கொண்டிருக்கவில்லை. இவற்றின் பண்பாட்டுத் தனித்துவம் காரணமாக, அருகிலுள்ள மாநிலங்களுடன் இணைக்கவும் முடியவில்லை.

மாநிலங்களுக்கிடையே நிலவிய சர்ச்சைகள், டெல்லி என்னும் தேசியத் தலைநகரத்திற்கு தேவைப்பட்ட விசேட தேவைகள், கரையோரப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட புவியியல் அமைவிடம் போன்ற வெவ்வேறு காரணிகள் ஒன்றியப் பிரதேசங்களை உருவாக்குவதில் பங்குகொண்டன.

ஆரம்பத்தில் இப் பிரதேசங்கள் ஒன்றிய அரசினால் நியமிக்கப்பட்ட நிர்வாகியால் நேரடியாக ஒன்றிய அரசினால் நிர்வகிக்கப்பட்டன. இவை ஒன்றிற்கேனும் சட்டசபை கிடையாது. இவை பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில் ஆகக் குறைந்தது ஒரு உறுப்பினரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன.

உறுப்புரை 241 (1) மற்றும் (4) இன் படி, அயல் மாநிலம் ஒன்றின் நியாயாதிக்கத்தை விரிவாக்கி உள்ளடக்குவதன் வழி அல்லது தனியாக ஓர் உயர்நீதிமன்றத்தை உருவாக்குவதன் வழி பாராளுமன்றம் நீதி நிர்வாக ஒழுங்கை மேற்கொள்ளலாம்.

புதுச்சேரி, டெல்லி என்ற புதுவகையான மாநிலங்கள் பின்னர் உருவாக்கப்பட்டன. 1962 இன் 14 ஆவது திருத்தச்சட்டப்படி புதுச்சேரி உருவாக்கப்பட்டது. 1991 இன் 69 ஆவது திருத்தச் சட்டத்தின்படி டெல்லி ஒன்றியப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இவை இரண்டும் இரண்டாவது சபை என்று ஒன்று இல்லாத ஒரு சபையை உடைய (Uni-cameral) சட்ட சபைகளாக உருவாக்கப்பட்டன. இச் சட்டபை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். புதுச்சேரி சட்டசபையின் உறுப்பினர்களில் சிலர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். வேறுசில உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுபவர்கள். புதுச்சேரியிலும் டெல்லியிலும் மந்திரிசபைகள் உள்ளன. இவை சட்டசபைக்கு பொறுப்புக்கூற வேண்டியன. இவ்விரு ஒன்றியப் பிரதேசங்களினதும் அரசுத் தலைவர், மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட துணை ஆளுநர் ஆவர். அரசாங்கத்தின் முறைசார் நிறைவேற்றுச் செயற்பாடுகளை துணை ஆளுநர் நிறைவேற்றுவார். டெல்லியின் முதலமைச்சர் துணை ஆளுநரின் விதப்புரையின்படி ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். டெல்லி தேசியத் தலைநகராக இருப்பதால் முதலமைச்சர் நியமனம் ஜனாதிபதியால் செய்யப்படுவதாக கருதலாம். டெல்லி சட்டசபை ஒருங்கிணை நியாயாதிக்கத்தை (Concurrent Jurisdiction) மட்டும் உடையது. அது இயற்றும் சட்டங்கள் இந்தியப் பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களுடன் முரண்படுமிடத்து பாராளுமன்றம் இயற்றிய சட்டமே செல்லுபடியாகும். புதுச்சேரி, லோக் சபாவிலும் ராஜ்ய சபாவிலும் ஒவ்வோர் உறுப்பினரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. டெல்லி, லோக் சபாவில் ஏழு உறுப்பினர்களையும், ராஜ்ய சபாவில் மூன்று உறுப்பினர்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறது.

டெல்லி ஒரு மாநிலம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஆயினும் அதற்கு காணி, பொலிஸ், சிவில் சேவை என்பன போன்ற முக்கிய விடயங்களில் அதிகாரங்கள் இல்லை. அவை மத்திய அரசால் கையாளப்படுகின்றன. ஏனைய விடயங்களில் டெல்லி அரசாங்கம் ஒருங்கிணை நியாயாதிக்கத்தையே கொண்டுள்ளது. இதனால் அதனை முழுநிறைவான மாநிலமாக அல்லாது பாதி மாநிலமாகவே கருதவேண்டும். ஆகையால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து (Statehood) வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது. புதுச்சேரி மாநில அரசு காணி, பொலிஸ், சிவில் சேவைகள் என்பன தொடர்பான நியாயாதிக்கம் உடையதாக இருந்து வருகிறது. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

13104 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்