சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை - பகுதி 2
Arts
17 நிமிட வாசிப்பு

சுவிற்சர்லாந்தின் சமஷ்டி முறை – பகுதி 2

December 11, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : யொஹான் பொய்றியர் (JOHANNE POIRIER)

சுயாட்சி தொடர்பான நிறுவனங்கள்

சுவிற்சர்லாந்து 23 கன்டன்களாகவும், 3 அரைக்கன்டன்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அரைக்கன்டன்களும், ஏனைய 23 கன்டன்கள் போன்று முழுமையான அதிகாரங்களை உடையனவாக உள்ளன. அரைக்கன்டன்கள் ஏனையவற்றில் இருந்து வேறுபடுவது பின்வரும் இரு விடயங்களில் ஆகும்.

அ. அரசுகளின் சபை (Council of states) எனப்படும் செனற் சபையில் அரைக்கன்டன்களுக்கு ஒரு உறுப்பினரையே பிரதிநிதியாக அனுப்பலாம். ஏனைய 23 கன்டன்கள் ஒவ்வொன்றும் இரண்டு பிரதிநிதிகளை அனுப்புவனவாய் உள்ளன.

ஆ. நாடு தழுவிய பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படும்போது அரைக் கன்டன்களின் வாக்குகளின் பெறுமதி ஏனைய கன்டன்களை விட அரைப்பங்கு குறைவானதாகும்.

சுவிஸ் கன்டன்கள் தத்தம் பகுதி நிறுவனங்கள் தொடர்பாக அதிகூடிய சுயாட்சி அதிகாரம் உடையனவாய் உள்ளன. கன்டன்கள் தமக்குரியதான அரசியல் யாப்பைக் கொண்டவை. தமது சொந்த அரசியல் யாப்புக்கு அமைய அவை சட்டசபை, நிறைவேற்றுத்துறை ஆகிய நிறுவனங்களின் அதிகாரப் பகிர்வைத் தீர்மானித்துக் கொள்கின்றன. இவ் வித சுயாட்சி அரசியல் யாப்பு முறையை ஆங்கிலத்தில் ‘Constitutive Autonomy’ எனக் கூறுவர். கன்டன்களை வெறும் நிர்வாக அலகுகளாகக் கருதமுடியாது. அவை சட்டவாக்கம், நிர்வாகம், நீதி ஆகிய எல்லா அதிகாரங்களையும் உட்பொதிந்த உண்மையான அதிகார அலகுகளாக உள்ளன.

கன்டன்களுக்கு அவற்றின் பிரஜைகளால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றங்கள் உள்ளன. கன்டன்களின் நிர்வாகிகளும் (மந்திரிகளும்) பிரஜைகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆனால் சுவிற்சர்லாந்தின் ‘பெடரல் அரசாங்கம்’ (மத்திய அரசு) நிர்வாகத்துறையை பெடரல் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்கிறது. சில கன்டன்களின் நிர்வாகத்துறை 7 உறுப்பினர்களைக் கொண்டனவாக உள்ளன. வேறுசில கன்டன்களில் நிர்வாகத்துறை உறுப்பினரை பொதுவாக்கெடுப்பின் மூலம் நீக்கலாம் என்ற ஏற்பாடு உள்ளது. ஆயினும் இதுகால வரை இம் முறைப்படி யாரும் பதவி நீக்கப்படவில்லை.

open air voting

கன்டன்கள் பலவகைகளில் தனித்துவம் உடையவை. சில கன்டன்களின் அதிகாரம் மத்தியமயப்படுத்தப்பட்டதாய் உள்ளது. வேறு சிலவற்றில் அதிகாரம் முனிசிப்பல் சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு பரவலாக்கப்பட்டுள்ளது. சில கன்டன்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியோடு, வேறு முழுநேரப் பதவிப் பொறுப்புகளும் வழங்கப்படுகின்றன. சில கன்டன்களில் ஒவ்வொரு சட்டமும் பொதுவாக்கெடுப்பினால் (அதாவது ‘Popular vote’ மூலம்) நிறைவேற்றப்படுதல் கட்டாயமானது.

வேறுசில கன்டன்களில் குறிப்பிட்ட தொகைப் பிரஜைகள் பொதுசனவாக்கெடுப்பு வேண்டுமென கோருமிடத்து அவ்வாறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது. சில கன்டன்களில் ‘திறந்தவெளி’ பொதுக்கூட்டங்கள் (Open air assemblies) ஆண்டுதோறும் நடத்தப்படும். அக் கூட்டங்களில் கன்டனின் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.

open air assembly

நீதி நிர்வாக ஒழுங்கமைப்பும் கன்டன்களுக்கு கன்டன் வேறுபடுகிறது. சில கன்டன்களில் நீதிபதிகள் கன்டன் பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுவர். வேறு சிலவற்றில் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். சில கன்டன்களில் விசேட தொழில் நீதிமன்றுகளும் வர்த்தகப் பிணக்குகளைத் தீர்க்கும் நீதிமன்றுகளும் உள்ளன. வேறு சிலவற்றில் அவ்வாறான விசேட நீதிமன்றுகள் இல்லை. சில கன்டன்களில் நிர்வாக நீதிமன்றுகள் உள்ளன. இம் மன்றுகள், சிவில் உத்தியோகத்தர்கள் சட்டங்களை மீறாதவகையில் கடமையாற்றுவதை உறுதி செய்கின்றன. வேறு சிலவற்றில் நிர்வாக நீதிமன்றுகள் செயற்பாட்டில் இல்லை. சிவில் சட்ட நடைமுறை, குற்றவியல் சட்ட நடைமுறை என்பனவும் கன்டனுக்குக் கன்டன் வேறுபடுகின்றன.

கன்டன்கள் உயர் அளவான சுயாதீனத்தை அனுபவிக்கின்றன. ஆயினும் அவை சுவிஸ் அரசியல் யாப்பை மதித்து நடத்தல் வேண்டும். அடிப்படை உரிமைகளையும், மத்திய (பெடரல்) அரசுக்கு வழங்கப்பட்ட தகுதிகளையும் (Competencies) கன்டன்கள் மதித்து நடந்துகொள்ள வேண்டும். பெடரல் நீதிமன்றத்தினால் (Federal Tribunal) கன்டன்களில் சட்டங்களின் வலிதுடமை கேள்விக்கு உட்படுத்தப்படலாம். கன்டன்கள் இயற்றிய சட்டங்கள் அடிப்படை உரிமைகளை மீறுவனவாகவோ, தகுதிகளின் பங்கீட்டிற்கு மாறாக மீறல் செய்வனவாகவோ இருந்தால் பெடரல் நீதிமன்றத்தினால் அவை வலிதற்றதாக்கப்படும். ஆனால் பெடரல் சட்டங்களை அவ்விதம் நீதிமன்றினால் வலிதற்றதாக்க முடியாது. பெடரல் சட்டங்களிற்கு நீதிமன்றின் கட்டுப்பாடு இல்லாவிடினும், சுவிஸ் அரசியல் யாப்பில் பல்வேறுவகையான ‘கட்டுப்பாடுகளும் சமன்படுத்தல்களும்’ (Checks and Balances) உள்ளன.

‘பகிரப்பட்ட ஆட்சி’ (Shared Rule) தொடர்பான 04 நிறுவனங்கள் சுவிஸ் சமஷ்டி முறையில் செயற்படுகின்றன. அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. அரசியல் யாப்புசார் உரிமைகளும் அரசியல் யாப்புத் திருத்தத்தில்  கன்டன்களின் வகிபாகமும்.
  2. சமஷ்டிச் சட்டவாக்கச் செயல்முறையில் பகிரப்பட்ட ஆட்சிச் செயல்முறை.
  3. சமஷ்டிச் சட்டத்தை செயற்படுத்துவதில் கன்டன்களின் வகிபாகம்.
  4. சமஷ்டி அரசாங்கம் அல்லது நிர்வாக அமைப்பு (Federal Executive or Government ).

இனி இவை ஒவ்வொன்றையும் பற்றிப் பார்ப்போம்.

அரசியல் யாப்புசார் உரிமைகளும் அரசியல் யாப்புத்திருத்தத்தில்  கன்டன்களின் வகிபாகமும்

‘பகிரப்பட்ட ஆட்சி விதிகளை’ சமஷ்டி முறையில் செயற்படுத்துவதற்குரிய பிரதான வழிமுறை, அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகளை நாட்டில் உள்ள யாவருக்கும் கிடைக்கக்கூடியதாக உத்தரவாதம் செய்தலாகும். சுவிஸ் நாட்டின் பிரஜை ஒருவர் எந்தக் கன்டனில் வாழ்பவராக இருந்தாலும் பேதமின்றி அடிப்படை உரிமைகளை, அவை தரும் பாதுகாப்பை பெறக்கூடியவராக இருக்கிறார். அவர் பேச்சுச் சுதந்திரம், தாம் விரும்பும் சமயத்தைப் பின்பற்றும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை அனுபவிக்கின்றார். இவை போன்ற அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் சுவிஸ் நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் பேதமின்றிக் கிடைக்கின்றன. இந்த வகை உரிமைகள் ஒற்றையாட்சி நாடுகளில் பிரஜைகளுக்கு கிடைக்கும் சுதந்திரங்களிலிருந்து வேறுபடுவதில்லை.

ஆயினும் சுவிற்சர்லாந்து போன்ற சமஷ்டி முறையில் மேற்குறித்த அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துதல், அவற்றைத் திருத்துதல் ஆகிய செயல்முறைகளில் ஒற்றையாட்சி முறையில் இருப்பதைவிடப் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.

கன்டன்களின் பிரதிநிதிகள் சமஷ்டிச் சட்ட சபை (Federal Chamber) அல்லது செனற் சபையில் தமது பிரதிநிதித்துவத்தின் மூலம் தத்தம் கன்டன்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனைப் ‘பங்கேற்புத் தத்துவம்’ (Principle of Participation) என்று கூறப்படும் கருத்து மூலம் விளக்கலாம். சுவிஸ் அரசியல் யாப்பில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும்; 

  1. சுவிற்சர்லாந்து மக்களின் பெரும்பான்மை அங்கீகாரத்தைப் பெறுதல் வேண்டும்.
  2. பெரும்பான்மையான கன்டன்களின் அங்கீகாரத்தைப் பெறுதல் வேண்டும். 

ஆகையால் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது; முதலாவதான, நாடு முழுவதினதும் வாக்காளரின் வாக்கெடுப்பை நடத்தும்போது ‘ஒரு நபர் ஒரு வாக்கு’ தத்துவத்தின்படி எல்லாருடைய வாக்குகளும் சம மதிப்புடையனவாக கருதப்படும். இரண்டாவதான, கன்டன்களின் அங்கீகாரத்தை பெறுவதற்கான வாக்கெடுப்பில், மிகப்பெரிய கன்டனான சூரிச் கன்டனில் வாழும் வாக்காளரின் வாக்கின் மதிப்பை விட மிகச்சிறிய கன்டனான ‘அப்பென்சில்’ கன்டனின் வாக்காளரின் வாக்கு 40 மடங்கு அதிக மதிப்புடையதாகக் கணிக்கப்படும். இது வழமையான ‘ஒரு நபர் ஒரு வாக்கு’ என்ற சனநாயக தத்துவத்திலிருந்து வேறுபடுவதைக் காணலாம்.

சமஷ்டிச் சட்டவாக்கச் செயல்முறையில் பகிரப்பட்ட ஆட்சிச் செயல்முறை

‘பகிரப்பட்ட ஆட்சி’ சமஷ்டிப் பாராளுமன்றத்தின் ஊடாக செயற்படுத்தப்படுவது இன்னொரு வழியாகும். சமஷ்டிப் பாராளுமன்றம் மக்கள் எங்கு வாழ்கிறார்கள், அவர்கள் எந்தக் கன்டனைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் பார்க்காமல், சமச்சீராகப் பிரயோகிக்கக்கூடிய விகிதங்களைத் தமது தகுதி எல்லைக்குள் செயற்படுத்தலாம். இச் சந்தர்ப்பத்தில் சமஷ்டியின் சிவில் அதிகாரிகள் நாடு முழுமைக்குமான திட்டங்கள், சேவைகள் என்பனவற்றைச் செயற்படுத்துவார்கள். இவ்வாறான நிலையே கனடாவில் காணப்படுகிறது. அங்கு பெடரல் சட்டசபையால் இயற்றப்படும் சட்டங்களுக்கு, மாநில அரசுகளின் பிரதிநிதிகளின் உள்ளீடுகள் இருப்பதில்லை. இதற்கு மாறாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா போன்ற சமஷ்டி நாடுகளில் நேரடியான ‘பகிரப்பட்ட ஆட்சிசெயல்’  (Direct Action) காணப்படுகிறது. இதனை ‘பங்கேற்புத் தத்துவத்தின்’ (Principle of Participation) திருத்தியமைக்கப்பட்ட முறை எனலாம்.

bern

சுவிற்சர்லாந்தின் சமஷ்டியில் பொதுச்சபை உறுப்பினர்கள், தமது கன்டன்களது நலன்களையும் பிரஜைகளது நலன்களையும் பாதுகாக்கின்றனர். இப்பாதுகாப்பு வகிபாகம், அவர்களது சட்டவாக்கச் செயற்பாடு ஊடாக நடைபெறுகிறது. இதனை சட்டவாக்கத்தின் ஏற்றக்கட்டத்தில் ‘Participation in the ascending phase of law’ எனலாம். சுவிற்சர்லாந்துப் பாராளுமன்றத்தின் இரண்டாவது சபை அரசுகளின் சபை (council of states) என அழைக்கப்படுகிறது. இச் சபையில் ஒவ்வொரு கன்டன்களில் இருந்தும் இரண்டு பிரதிநிதிகளும், மூன்று அரைக் கன்டன்களிலிருந்து ஒவ்வோர் பிரதிநிதியும் உறுப்பினர்களாக இருப்பர். இச் சபையின் உறுப்புரிமை ஒரு கன்டனின் சனத்தொகை, அதன் பருமன், அது செல்வச் செழிப்பான பகுதியா, வளம் குறைந்த பகுதியா என்பன போன்றவை கருத்திற் கொள்ளப்படாமல் சமத்துவமான முறையில் வழங்கப்பட்டுள்ளது. இப் பிரதிநிதிகள் கன்டன்களின் பிரஜைகளினால் தெரிவு செய்யப்படுகிறார்களே அன்றி கன்டன்களின் அரசாங்கங்களால் நியமிக்கப்படுவதில்லை. இதனால் கன்டன்களின் அரசாங்கங்கள் இவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க முடியாது. இவர்கள் கன்டன்களின் முகவர்கள் அல்லர். ஆனால் இப் பிரதிநிதிகள், தம்மைத் தெரிவு செய்த கன்டன்களின் பிரஜைகளைப்  பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். செனற் சபையில் சகல கன்டன்களினதும் பிரதிநிதிகள் சம அளவில் உறுப்பினர்களாக அனுமதிக்கப்படுவதால், பெரிய கன்டன்கள் சிறிய கன்டன்கள் மீது தமது கருத்துக்களைத் திணிக்க முடியாது.

சகல சட்டவாக்கப் பிரேரணைகளும் செனற் சபைக்கு (Senate) சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் தேசிய சபை அல்லது பிரதிநிதிகள் சபைக்கு (National Council or House of representatives) வாக்கெடுப்புக்காகச் சமர்ப்பிக்கப்படும். இச் சபை 200 உறுப்பினர்களைக் கொண்ட சபையாகும். இதன் உறுப்பினர்கள் கன்டன்களின் சனத்தொகைக்கு ஏற்ப வேறுபட்ட எண்ணிக்கையில் தெரிவு செய்யப்படுகிறார்கள். சனத்தொகையில் கூடிய சூரிச் கன்டனில் இருந்து 34 பேர் தெரிவு செய்யப்படுகின்றனர். சனத்தொகையில் குறைந்தளவான யூரி போன்ற கன்டன்கள் தேசிய சபைக்கு ஒரு பிரதிநிதியை மட்டுமே தெரிவு செய்கின்றன. சுவிற்சர்லாந்தின் அரசியல் கட்சிகளின் ஆதரவுப் பலம் கன்டன்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் சமஷ்டி மட்டத்தில் மீண்டும் தெரிவு செய்யப்படுவதை விரும்பும் உறுப்பினர்கள், கன்டன்களின் பிரஜைகளின் விருப்புக்களை முதன்மைப்படுத்திச் செயற்படுகின்றனர். இது ‘பகிரப்பட்ட ஆட்சி’ செயல்முறைக்குள் கன்டன்களின் நலன்களும் விருப்புக்களும் இடம்பெறுவதற்கு மறைமுகமாக உறுதிசெய்கிறது. இதனைவிட சுவிஸ் அரசியல் முறை ‘இரட்டைப் பொறுப்பாணை’ (Double Mandate) செயற்படுவதற்கு இடம் தருகிறது. இதன்படி, சமஷ்டிப் பாராளுமன்றம், கன்டன்கள் என்ற இருநிலைகளிலும் பங்குபற்றுகின்றன.

சமஷ்டிச் சட்டத்தை செயற்படுத்துவதில் கன்டன்களின் வகிபாகம்

பகிரப்பட்ட விதிகளில் காணப்படும் பங்குபற்றல் பற்றி மேலே குறிப்பிட்டோம். அடுத்து, பகிரப்பட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் கன்டன்கள் அவற்றைச் செயற்படுத்துவதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதால் நிகழும் பங்குபற்றலைக் குறிப்பிடுவோம். இதை நாம் இறக்கக் கட்டத்தில் பங்குபற்றல் (Participation in the descending phase) என்ற தொடரால் விபரிக்கலாம் (இது முற்கூறிய சட்டவாக்கத்தின் ‘ஏற்றக் கட்டத்தில் பங்குபற்றல்’ என்பதோடு ஒப்பு நோக்கத்தக்கது). கன்டன்கள் (தமது தகுதி எல்லைக்குள்) தாம் ஆக்கிய சட்டங்களையும், சமஷ்டிச் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதைக் காண்கிறோம். இவ்வகையான ‘நிர்வாகச் சமஷ்டி’க்கு (Administrative Federalism) சுவிஸ் சமஷ்டி மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறது. தலைநகர் பேர்னில் உள்ள தேசிய சபையினால் சமஷ்டிச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இவ்வாறு தேசிய சபை இயற்றும் சட்டங்கள் 26 கன்டன்களிலும் உள்ள சிவில் உத்தியோகத்தர்களால் செயற்படுத்தப்படுகின்றன. கன்டன்கள் சமஷ்டிச் சட்டத்தின் நிறைவேற்றுதலில் பங்குபற்றுகின்றன. கன்டன்களின் உத்தியோகத்தர்கள் தத்தம் கன்டன்களின் சட்டத்தையும் செயற்படுத்துகின்றனர்.

மேற்குறித்தவாறான நிறைவேற்றல் முறை, சுவிற்சர்லாந்து சமஷ்டியில் உறுப்பு அலகுகளின் குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்றவாறு செயற்பட அனுமதிக்கிறது. குறிப்பான நிலைமைகள் என்பவை; அ. குறித்த கன்டனின் கலாசார விசேட தன்மைகள், ஆ. அரசியல் இயக்கவிசைகள் என்பவற்றைச் சுட்டுகின்றன. நிறைவேற்றச் செயல்முறையில் பங்குபற்றும் கன்டன்கள் சமஷ்டிச் சட்டத்தின் அம்சங்களை மதித்து நடத்தல் வேண்டும். ஆயினும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சுதந்திரமான முறையில், முறைகளையும் வழிவகைகளையும் தேர்ந்துகொள்ள முடியும். இது சட்டங்களை வினைத்திறனுடன் செயற்படுத்த உதவுகிறது. 1999 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பில் மத்திய அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டிய விடயம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘கோட்டங்கள் தமது சிறப்பான நிலைமைகளை கவனத்தில் கொண்டு செயற்படுவதற்கு பரந்தளவில் இடமளிக்க வேண்டும்’ (Grant the Cantons wide room to manoeuvre and take into account their specificity).

சமஷ்டிச் சட்டவாக்கம் பொதுவான தன்மையுடையது. அது பரந்த நோக்கங்களையும் விதிகளையும் வகுத்துரைக்கிறது. இவற்றைக் கன்டன்கள் செயல்முறையில் நிறைவேற்றி நோக்கத்தை அடைய வேண்டும். உதாரணமாக, பராமரிப்புச் செலவுகளுக்காக எல்லாப் பிரஜைகளினது உடலும் காப்புறுதி செய்யப்படவேண்டும் என சமஷ்டிச் சட்டம் விதிக்கின்றது. இவ்வாறு காப்புறுதி செய்தால் வைத்தியர்களைச் சந்திப்பதற்கும் வைத்தியசாலையில் அனுமதி பெறுவதற்கும் மக்கள் பெருஞ்செலவுகளை செய்யவேண்டியதில்லை. காப்புறுதி செய்யப்படும் முறையைக் கன்டன்கள் சுதந்திரமாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். சேவைகளை வழங்குவதற்கான நிர்வாகக் கட்டமைப்பு, வழங்கப்படும் சேவைகளின் வீச்சு, காப்புறுதியை வழங்குபவர் யார் போன்ற விடயங்களைக் கன்டன்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

சுவிற்சர்லாந்தின் நீதிமுறைமையில் அரசாங்க அமைப்புகளுக்கு எதிராக ‘தடையாணைகளை’ (Injunctions) வழங்கும் ஏற்பாடு இல்லை. எனவே ஒரு கன்டன் அரசாங்கம் சமஷ்டிச் சட்டத்தை அல்லது நடைமுறையைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால், சமஷ்டிச் சபையின் கவனத்திற்கு கொண்டுவரலாம். இவ்வித பிரச்சினைகள் பொதுவாக முறைசாரா முறையிலேயே கையாளப்படுகின்றன. அரசாங்கங்களின் உத்தரவுகளுக்கு எப்பொழுதும் மரியாதை கொடுக்கப்பட்டு உத்தரவுப்படி நடந்துகொள்ளுதல் நடைபெறுகிறது. சமஷ்டி அரசாங்கத்தினதும், கன்டன்களினதும் நிறுவனங்களும் பொறுப்புக்களும் பின்னிப்பிணைந்து காணப்படுவதால் முறைமையைச் சரிசெய்வதற்கு கூட்டுறவு மட்டுமே சிறந்த வழி என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துள்ளனர்.

வேறு வார்த்தையில் கூறுவதாயின், கன்டன்கள், சமஷ்டிச் சட்டமியற்றல் செயல்முறையில் மட்டுமல்லாது, சமஷ்டிச் சட்டங்களை பயன்மிகு செயல்களாக மாற்றி பிரஜைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் வகையிலான நிறைவேற்றுச் செயற்பாட்டிலும் பங்குபெறுகின்றன. சட்டமியற்றுதலில் முன்கூட்டியே ஆலோசனை பெறுதல், செனற் சபையின் ஊடான செயற்பாடு, சர்வசன வாக்கெடுப்பு நடைமுறை ஆகியன சட்டவாக்கத்தில் கன்டன்களின் பங்கேற்புக்கு முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும். ஆகையால் ‘பகிரப்பட்டவிதிகள்’ தொடர்பாகக் கூட குறிப்பிடத்தக்களவு தன்னாட்சி இடம்பெறுகிறது என்பதைக் காணலாம்.

சமஷ்டி அரசாங்கம் அல்லது நிர்வாக அமைப்பு (Federal Executive or Government)

பகிரப்பட்ட ஆட்சியின் இன்னோர் இயல்பு சமஷ்டி அரசாங்கம் அல்லது நிறைவேற்றுத் துறை எனலாம். இதனைச் சமஷ்டிச் சபை (Federal Council) என அழைப்பர். இது 7 பேர் கொண்ட ஒரு குழுவாகும். ஒவ்வொரு உறுப்பினரும் சமஷ்டிப் பாராளுமன்றத்தின் (தேசிய சபை) இரு சபைகளினாலும் தெரிவு செய்யப்படுகின்றனர். ஆகையால் சமஷ்டி சபை உறுப்பினர்கள் பெரும்பாலான கன்டன்களினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் தம்மைத் தெரிவு செய்த சட்டவாக்க சபையான தேசிய சபையாலோ கன்டன்களாலோ நீக்கப்பட முடியாதவர்களாவர். இதன் பொருள் யாதெனில், வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற முறையில் உள்ளது போன்று சுவிற்சர்லாந்தின் நிறைவேற்றுத்துறை (சமஷ்டி சபை) பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியதாக இல்லை என்பதாகும். சமஷ்டி சபையின் தீர்மானங்கள் யாவற்றிலும் கருத்தொற்றுமை எட்டப்படும். அச் சபையின் தலைவருக்கு உச்ச அதிகாரம் எதுவும் கிடையாது. நிறைவேற்றுத் துறையின் தலைமைத்துவம் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாற்றப்படும். நிறைவேற்றுத் துறையின் ஒவ்வொரு உறுப்பினரும் சமஷ்டித் திணைக்களம் ஒன்றின் தலைமைத்துவத்தை வகிப்பார்.

சுவிற்சர்லாந்தின் வெளிநாட்டுக் கொள்கையைச் செயற்படுத்தும் பொறுப்புடையதாக நிறைவேற்றுத்துறை விளங்குகின்றது. சட்டவாக்கச் செயல்முறையைத் தொடக்கி வைக்கும் மூல ஊற்றாகவும் இது விளங்குகிறது. இரண்டாம் நிலைச் சட்டவாக்கத்தை (Secondary Legislation) இது மேற்கொள்கிறது. இரண்டாம் நிலைச் சட்டங்கள் என்பவை பிரமாணங்களைக் (Regulations) குறிக்கின்றன. இவை சட்டத்தில் உள்ளவற்றைவிட நடைமுறை பற்றி விரிவாக எடுத்துக்கூறும் தன்மையுடையவை. இப் பிரமாணங்களில் கூறப்பட்ட விதிகள், பின்னர் கன்டன்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கன்டன்கள் சமஷ்டி அரசாங்கத்தின் (நிறைவேற்றுத் துறையின்) செயற்பாட்டில் நேரடியாகப் பங்கு கொள்வதில்லை. கன்டன்களுக்கு செனட்டில் பிரதிநிதித்துவம் உள்ளது என்பதை மேலே கண்டோம். செனட் ஊடாக வாக்களிப்பதைத் தவிர கன்டன்களுக்கு பெடரல் நிர்வாகத்தில் நேரடிப் பங்கு இல்லை. நிறைவேற்றுத்துறையான சமஷ்டி சபையின் 7 உறுப்பினர்கள் அனைவரும்;

  1. சுவிற்சர்லாந்தின் 4 பிரதான அரசியல் கட்சிகளில் ஒரேயொரு கட்சி உறுப்பினர்களாக இருத்தல்,
  2. மூன்று முக்கிய மொழிக்குழுக்களில் ஒரேயொரு மொழிக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருத்தல்,
  3. யாவரும் ஆண்களாக இருத்தல்,

ஆகிய பக்கச் சார்பான திரிபுகள் இடம்பெறாதவாறு கவனம் செலுத்தப்படுகிறது. இது சட்டத்தின்படியானதாக அல்லாது சம்பிரதாயமாக (By Tradition and not by Law) பின்பற்றப்படுகிறது. கன்டன்களின் பிரதிநிதித்துவத்தில் மூன்று மொழிகளைப் பேசுவோருக்கும் இடம் கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆயினும் எல்லாக் கன்டன்களிலும் இவ்வாறு மூன்று மொழிபேசுவோருக்கும் பிரதிநிதித்துவம் வழங்குதல் நடைமுறைச் சாத்தியமற்றது. பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கல், எல்லாப் பிரதான கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கல் என்பனவும் உறுதிசெய்யப்படுகின்றன. சுவிற்சர்லாந்து சமஷ்டியின் இந்த அம்சத்தை ‘இணக்கமுறை ஜனநாயகம்’ (Consensus Democracy) எனலாம். இவ்வித இணக்கமுறை ஜனநாயகம் அந்நாட்டில் உறுதிநிலையை (Stability) பேண உதவுகிறது. நாட்டின் அரசியல் கட்சிகள் இணக்கமுறை ஜனநாயகத்தை விருப்புடன் பின்பற்ற முன்வருகின்றன. இன்னொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்கும், இன்னொரு மொழியைப் பேசுவோரை ஆதரிப்பதற்கும் அவை முன்வருகின்றன. இதற்கான காரணம் ஒன்று உள்ளது. சட்டவாக்கம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பரந்த அரசியல் ஆதரவு தேவை. இத்தகைய பரந்த அரசியல் ஆதரவு இல்லாவிட்டால் பொதுசன வாக்கெடுப்பின் போது சட்டம் நிராகரிக்கப்படலாம். இவ்வாறு பரந்த அரசியல் ஆதரவு இன்மையால் சட்டங்கள் நிராகரிக்கப்படும்போது ‘அரசியல் செயலிழப்பு’ (Political Paralysis) ஏற்படும் சாத்தியம் உள்ளது. இதனால் சுவிற்சர்லாந்து சமஷ்டி முறையில் பரந்த அரசியல் ஆதரவைப்பெற்று உறுதிநிலையைப் பேணும் வழிவகைகள் பின்பற்றப்படுகின்றன.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7904 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)