ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் - பகுதி 1
Arts
20 நிமிட வாசிப்பு

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 1

August 5, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ன

POWER SHARING : THE INTERNATIONAL EXPERIENCE என்ற நூலை அரசியல் யாப்புக்கான கற்கை நிறுவனம், இலங்கை – ராஜகிரிய என்ற அமைப்பு 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்நூலின் பதிப்பாசிரியர்கள் ரஞ்சித் அமரசிங்க மற்றும் ஜயம்பதி விக்கிரமரட்ன ஆவர். இந்நூலில் ரஞ்சித் அமரசிங்க ஸ்பெயின் நாட்டின் அசமத்துவ அதிகாரப் பகிர்வு குறித்த ஒரு கட்டுரையை எழுதிச் சேர்த்திருந்தார். அதனை தமிழாக்கம் செய்து எழுநாவில் முன்னர் பிரசுரித்தோம். இவ்விதழில் ஐக்கிய இராச்சியம் பற்றிய விக்கிரமரட்ன எழுதிய கட்டுரையைத் தருகிறோம். சமஷ்டி முறைமை பற்றிய இத்தொடரில் ஆறு நாடுகளின் அரசியல் அதிகாரப் பகிர்வு முறை பற்றி விளக்க இருப்பதாக முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இவற்றோடு தகுநல் பொருத்தப்பாடு இருப்பதால் ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரப் பகிர்வு முறையையும் இத்தொடரில் ஏழாவது நாடாக அறிமுகம் செய்வதாக எண்ணியுள்ளோம்.

ஒற்றையாட்சி நாடு எனப் பெயர் பெற்றுள்ள ஐக்கிய இராச்சியம் (UK) இன்று சமஷ்டி முறைக்கு நிகரான அரசியல் யாப்பு முறைமையை நோக்கி முன்னேறிச் செல்கிறது. அந்நாட்டில் 1998 இல் ஸ்கொட்லாந்துச் சட்டம் (Scotland Act) இயற்றப்பட்டது. இந்தச்சட்டம் ஸ்கொட்லாந்துக்கென தனியான பாராளுமன்றம் ஒன்றை அமைப்பதற்கும் அதற்குச் சட்டவாக்க நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவும் வகை செய்தது. இதையடுத்து வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பகுதிகளும் அதிகாரப் பகிர்வு (Devolution) முறை மூலம் சுயாட்சியை வலுப்படுத்தும் செயல்முறையில் முன்னேறிச் செல்கின்றன. மேற்குறித்த நூலின் பத்தாவது அத்தியாயம் Devolution in the United Kingdom: Unitary in Theory Otherwise in Practice என்ற தலைப்பில் அமைந்துள்ளது. இக்கட்டுரையை எழுதியவர் ஜயம்பதி விக்கிரமரட்ன ஆவார். அவரின் கட்டுரையைத் தழுவியும் சுருக்கியும் இவ்வாக்கம் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

Federalism in UK

ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு

ஒற்றையாட்சி நாடென அழைக்கப்படும் அரசின் நடைமுறை வேறுவிதமானது (Unitary in Theory Otherwise in Practice) என்று கூறும் இக் கட்டுரையாசிரியர் ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வில் அடையப்பட்ட முன்னேற்றத்தை விளக்குகிறார். வெளித்தோற்றத்தில் கண்டுகொள்ளாத, காணத் தவறும் யதார்த்த உண்மைகளை இக் கட்டுரை தெளிவுற எடுத்துரைக்கிறது. ஐக்கிய இராச்சியம் (ஐ.இ) ஒற்றையாட்சி அமைப்பைக் கொண்டது. அதற்கு எழுதப்பட்ட அரசியல் யாப்பு என ஒன்றும் கிடையாது. இதனால் அந்நாட்டு பாராளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அரசியல் யாப்புக்கு முரண்படாதனவா என்று அவற்றின் வலிதுடமையைப் பரிசோதிப்பதற்கு வழிமுறைகள் எதுவும் அங்கு கிடையாது. அங்கு உள்ளூராட்சி என்ற வகையில் அரசு செயற்படுகின்றது என்பது உண்மையே. ஆயினும் ஐக்கிய இராச்சியம், ஒற்றையாட்சி முறையின் மூலவடிவம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. கால மாற்றத்தால் அங்கு ஏற்பட்ட மாறுதல்கள் பலவாகும். ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகியன அதிகாரப் பகிர்வு செயல் முறையின் பல படிநிலைகளில் முன்னேறிச் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆனால் இங்கிலாந்திற்கு அதிகாரப் பகிர்வு இல்லை. இங்கிலாந்திலே அமைந்திருக்கும் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றம் எழுதப்பட்ட யாப்பு ஒன்று இல்லாவிடினும் வழமைகளுக்கு (Conventions) மதிப்பளிக்கிறது. அதிகாரப் பகிர்வு மூலம் ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் என்பன ஒரு விடயத்தில் அதிகாரம் பெற்றிருந்தால் அந்த விடயத்தில் தலையிடும் வகையில் சட்டமியற்றுவதில்லை என்ற உடன்பாட்டை அந்நாட்டுப் பாராளுமன்றம் வழமையாகப் பேணி வருகிறது. இதனை இக் கட்டுரையின் பிறிதோர் இடத்தில் விளக்கிக் கூறுவோம்.

ஸ்கொட்லாந்து

Battle of Bannockburn (1)

ஸ்கொட்லாந்து 843 தொடக்கம் ஐக்கியப்பட்ட சுதந்திர இராச்சியமாக இருந்து வந்தது. 1296 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் முதலாம் எட்வாட் மன்னர் அந்நாட்டை வெற்றிகொண்டு அதன் சுதந்திரத்தைப் பறிக்க முனைந்தாரேனும் 1314 ஆம் ஆண்டில் Bannockburn என்ற இடத்தில் நடை பெற்ற போரில் இங்கிலாந்தின் படைகளை ஸ்கொட்லாந்தினர் தோற்கடித்தனர். 1328 இல் எடின்பேர்க் – நோதாம்டன் உடன்படிக்கையின் படி இங்கிலாந்து, ஸ்காட்லாந்தின் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டது. 1603 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து அரசரான ஆறாம் யேம்ஸ் இங்கிலாந்தின் அரசராக முடி சூட்டப்பட்டார். இரு பகுதிகளுக்கும் ஒரே அரசர் என்ற நிலை இதனால் அவ்வேளையில் உருவானது. எனினும் 1707 ஆம் ஆண்டு வரை ஸ்கொட்லாந்து இறைமையுடைய தனி நாடாகவே இருந்து வந்தது. 1707 இல் ஒன்றிணைந்த பெரிய பிரித்தானிய இராச்சியம் (United Kingdom of Great Britain) உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. The treaty of union என்னும் இவ் உடன்படிக்கை ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றத்தாலும் அங்கீகரிக்கப்பட்டது. அவ்வேளை ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பேர்க்கில் கலகம் வெடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கலகக்காரர்களுக்கு அஞ்சி, உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோர், இரகசியமாக அதனை நிகழ்த்தி ஸ்கொட்லாந்தை ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக ஆக்கினர்.

treaty of union

தனித்துவ அடையாளங்களின் தொடர்ச்சி

மேற்குறித்த உடன்படிக்கையின் விளைவாக ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து என இரு பகுதிகளுக்கும் தனித்தனியாக இருந்து வந்த பாராளுமன்றங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டன. வெஸ்ட்மினிஸ்டரில் அமைந்திருக்கும் பெரிய பிரித்தானியாவின் பாராளுமன்றம் தோற்றம் பெற்றது. 1707 இல் இம்மாற்றம் நிகழ்ந்தபோது ஸ்கொட்லாந்தின் நிறுவனங்கள் பல தொடர்ந்து செயல்பட்டு வந்தன. உடன்படிக்கையில் பல புறநடையான விடயங்களும் உள்ளடக்கப்பட்டன.

அ) ஸ்கொட்லாந்தின் சட்டமுறைமை

ஆ) கல்வி முறைமை

இ) ஸ்காட்லாந்தின் பிரிஸ்பிரிட்டேரியன் கிறிஸ்தவ திருச்சபை (Presbyterian Church)

ஈ) உள்ளூராட்சி முறைமை

ஆகியன ஸ்கொட்லாந்துக்கே உரிய தனித்துவ இயல்புகளுடன் தொடர்ந்து செயற்பட்டன. இந்நிறுவனங்கள் ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளில் இருந்து வேறுபட்டனவாய் இருந்து வந்தமை, ஸ்கொட்லாந்தின் தேசிய அடையாளம் தனித்துவத்தோடும் வீரியத்தோடும் நிலைத்து நிற்பதற்குக் காரணமாயிற்று.

தணியாத சுதந்திர வேட்கை

19 ஆம் நூற்றாண்டில் ஸ்கொட்லாந்தின் கைத்தொழில் மயமாக்கம் வேகமாக நடைபெற்றது. இதனால் அந்நூற்றாண்டில் ஸ்கொட்லாந்து தேசியவாதம் தணிவுற்றது. 1870 இல் பாராளுமன்றம், ஸ்கொட்லாந்தின் கல்வி முறைமையில் தலையீடு செய்து ஸ்கொட்லாந்தின் எஞ்சியிருந்த சுயாதீனத்திலும் மூக்கை நுழைத்தது. ஸ்கொட்லாந்தின் சுயாட்சி அச்சுறுத்தலுக்கு ஆளானது. 1885 இல் ஸ்கொட்லாந்திற்கான இராஜாங்க செயலாளர் (Secretary of State) என்ற பதவி உருவாக்கப்பட்டது. இவர் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்தில் ஸ்கொட்லாந்து நலன்களுக்கு ஆதரவாகச் செயற்படுவார் எனக் கூறப்பட்டது. ஆயினும் ஸ்கொட்லாந்துத் தேசியவாதம் மீண்டெழுவதை இதுபோன்ற ஏற்பாடுகளால் தடுக்க முடியவில்லை. பிரித்தானியாவின் திறைசேரிக்கு ஸ்கொட்லாந்தின் வரிப்பணம் மிகையான அளவில் விகிதாசார எல்லைக்கு மேலாகச் செல்வதைச் சுட்டிக்காட்டிய ஸ்கொட்லாந்தியர் தமக்கு கிடைக்கும் நன்மைகள் குறைவு எனக் குற்றம் சாட்டினர். எடுத்துக் காட்டாக இங்கிலாந்தின் பண்பாட்டுக் கழகங்களின் நடவடிக்கைகளுக்கு நிதி கொடுத்து ஊக்குவித்த திறைசேரி, ஸ்கொட்லாந்துக் கழகங்கள் தாமே தமது நிதியை தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது. அயர்லாந்தின் தாயக ஆட்சி (Home Rule) இயக்கம் ஸ்கொட்லாந்தியருக்கு உளத்தூண்டலை வழங்கியது. 

home rule party (1)

ஸ்கொட்லாந்திற்கும் அயர்லாந்துக்கு கொடுப்பது போலவே தாயக ஆட்சி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி 15 ஆண்டு காலத்தில் ஸ்கொட்லாந்திற்கும் தாயக ஆட்சி வேண்டும் என 7 தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அயர்லாந்து பிரிந்து போனால் பாராளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் குறையும். இவ்வாறான உறுப்பினர் எண்ணிக்கை வீழ்ச்சி, தம்மையும் பாதிக்கும் என ஸ்கொட்லாந்தியர்  உணர்ந்தனர்.

லிபரல் கட்சி அயர்லாந்தின் ஹோம் ரூல் கோரிக்கையை ஆதரித்தது. பழமைவாதக் கட்சி, அயர்லாந்து சுயாட்சி பெறுவதால் ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்படக்கூடிய அரசியல் யாப்புசார் குழப்பத்தைச் சரி செய்வதற்காக ஸ்கொட்லாந்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்கத் தயாராக இருந்தது. இவை எதுவும் செயல் வடிவம் பெறுவதற்கு முன்னர் முதலாம் உலக மகா யுத்தம் குறுக்கிட்டது. இவ் யுத்தத்தின் பின்னர் 1920 இல் அயர்லாந்திற்கு சுயாட்சி (ஹோம் ரூல்) வழங்கப்பட்டது. 1921 இல் அயர்லாந்து முழுமையான சுதந்திரத்தை பெற்றது. அயர்லாந்திற்குக் கிடைத்த இந்த சுதந்திரம், ஸ்கொட்லாந்தினர்க்கு ஓர் அகத் தூண்டலைத் தந்தது.

1921 – 1939 ஏற்பட்ட தளம்பல்

முதலாம் உலக யுத்த முடிவில் பிரித்தானியா வித்தியாசமான நாடாகியது. லிபரல்கள் பலமற்றவர்களாக விளங்கினர். பழமைவாதக் கட்சிக்கு மாறான கட்சியாக தொழிற்கட்சி உருவானது. ஸ்கொட்லாந்தியரில் பலர் தொழிற் கட்சியில் இணைந்தனர். ஸ்கொட்லாந்திற்குச் சுயாட்சி வேண்டும் எனக் கூறியோர் ஸ்கொட்டிஷ் தேசிய கட்சி (Scottish national party – SNP) என்னும் கட்சியை 1920 களில் ஆரம்பித்தனர். இக்காலகட்டத்தில் ஸ்கொட்லாந்தியர்கள் என்ன முடிவை எடுக்கலாம் என்பதில் குழப்பமடைந்திருந்ததனர். ஸ்கொட்லாந்து பிரித்தானியா என்ற ஐக்கிய அரசில் இணைந்திருப்பதால் ஸ்காட்லாந்து உற்பத்திகளுக்கு பிரித்தானியாப் பேரரசின் காலனிகளில் சந்தை வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக கனரக உற்பத்தி தொழில் துறை நன்மை பெற்றது.

பெருமந்தம் ஏற்பட்டபோது, பிரித்தானியா சமூக நலன் திட்டங்களை விரிவாக்கியது. இந்த நன்மைகள் ஸ்கொட்லாந்துக்கும் கிடை த்தன. 1939 இல் ஸ்கொட்லாந்துடன் தொடர்புபட்ட திணைக்களங்கள் யாவும் எடின்பேர்க் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. ஆயினும் இந்த இடமாற்றத்தால் அரசின் நிர்வாகத்தில் ஸ்கொட்லாந்தின் பங்களிப்பு உயர்ந்தது எனக்கூற முடியாது.

இரண்டாம் உலக யுத்தம்

A partnership for good (1)

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவில் 1945 இல் முதல் தடவையாக ஸ்கொட்டிஸ் தேசிய கட்சி (எஸ். எம்.பி) பாராளுமன்றத்தில் ஓர் ஆசனத்தை பெற்றுக் கொண்டது. ஆயினும் வெஸ்ட்மினிஸ்டர் நிர்வாகம் ஸ்கொட்லாந்து விடயத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. ஸ்கொட்லாந்தின் தேவைகள் குறித்து தொழிற்கட்சி அக்கறை கொண்டு செயற்பட்டது. றிச்சாட் ஜே பின்லே (Finlay) எழுதிய A Partnership for Good : Scottish Politics and The Union Since 1880 (1997) என்ற நூலில் பல உதாரணங்களைத் தருகிறார். தொழிற்கட்சி ஏற்படுத்திய பல திட்டங்கள் சுயாட்சி இயக்கத்தை வலுவிழக்க செய்தன, பல கைத்தொழில்கள் தேசிய மயமாக்கப்பட்டன, புதிய தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டன, வீடமைப்பு – சுகாதாரம் – சமூகச் சீர்திருத்தம் ஆகிய சமூக நலத் திட்டங்கள் பலப்படுத்தப்பட்டன. இவற்றின் பயனாக பிரித்தானியாவின் அரச கட்டமைப்புக்குள் ஸ்கொட்லாந்தின் நிலை உயர்ந்தது.

1960 களிலும் 70 களிலும் ஸ்கொட்டிஸ் தேசிய கட்சி தன்னை பலப்படுத்திக் கொண்டது. இக்காலத்திலே பொருளாதார நிலைமைகள் மோசமடைந்தமை இதற்கு காரணமாயிற்று. தொழிற்கட்சி இந்நிலையில் அதிகாரப் பகிர்வு வழங்கலாம் எனக் கீழிறங்கி வரவில்லை. அது Scottish Development Agency என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு என்ற ஸ்தாபனத்தை நிறுவியது. அந்த ஸ்தாபனத்தால் ஸ்கொட்லாந்தை உயர்நிலைக்கு மேம்படுத்த முடியவில்லை. பழமைவாத கட்சியினர் அப்போது ஸ்கொட்லாந்திற்கு ஒரு சட்டசபையை (Assembly) கொடுக்கலாம் என முன்மொழிந்தனர்.

1979 இன் சர்வசன வாக்கெடுப்பும் தேசியவாதத்தின் பின்னடைவுகளும்

அதிகாரப் பகிர்வு தொடர்பாக 1979 மார்ச் 7 ஆம் தேதி சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்கொட்லாந்து சட்டசபைக்கு குறைந்த அளவு அதிகாரங்களை வழங்கும் 1978 இன் ஸ்கொட்லாந்து சட்டம் (The Scotland Act of 1978) நடைமுறைப்படுத்தலாமா, இல்லையா? என்பதே சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்பட்ட விடயம். 63.8 % வாக்காளர்கள் மட்டுமே இவ் வாக்கெடுப்பில் பங்கு கொண்டனர். இவர்களில் 51.6% வாக்காளர்கள் ‘ஆம்’ என வாக்களித்தனர். இது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் தொகையில் 40% என்ற எல்லைக்கும் குறைவான ஆதரவு வாக்குகளாக இருந்தது. பாராளுமன்றம் விதித்த நாற்பது வீத எல்லைக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் யோசனை நிராகரிக்கப்பட்டது. அடுத்து வந்த பொதுத்தேர்தலில் ஸ்கொட்டிஸ் தேசிய கட்சி தனது வாக்கு வங்கியில் மூன்றில் ஒரு பங்கை இழந்தது.

மார்கிரேட் தச்சர்

Margaret Thatcher

மார்கிரேட் தச்சரின் (MARGARET THATCHER) பழமைவாத கட்சியினர் ஸ்கொட்லாந்து தேசியவாதம் மீள் எழுச்சி பெற காரணமாக இருந்தனர். அவர்கள் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் ஸ்கொட்லாந்தில் பழமைவாதக் கட்சிக்கு மொத்த வாக்குகளில் 17% மட்டுமே கிடைத்தது. ஸ்கொட்லாந்தில் இருந்து ஒருவர் கூட அவரது அமைச்சரவையில் இருக்கவில்லை. பழமைவாத கட்சியினர் ஆட்சியில் சமூக நலத்திட்டங்கள் கைவிடப்பட்டன. இந் நடவடிக்கை ஸ்கொட்லாந்து அரசியல் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்றே கருதலாம். தொழிற்கட்சி ஸ்கொட்லாந்திற்கு சுயாட்சி கொடுப்பதை எதிர்த்து வந்தமை தவறு என இக்கட்டத்தில் உணர்ந்தது. ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம் பழமைவாதிகளுக்கு (Tories) எதிரான காப்பரணாக விளங்க முடியும் என தொழிற்கட்சியினர் சிந்தித்தனர். பழமைவாத கட்சியை அதிகாரத்திலிருந்து நிரந்தரமாக ஒதுக்கி தள்ளி விடவும் இதுவே வழி எனவும் தொழிற்கட்சி சிந்தித்தது.

கீற்றிங் (Keating) என்ற எழுத்தாளர் இங்கிலாந்திற்கும் ஸ்கொட்லாந்திற்கும் தத்துவார்த்த வேறுபாடு உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் : ஸ்கொட்லாந்தியர் சமூக நல அரசு (Welfare State) என்ற இலட்சியத்தை விரும்புபவர்கள். இங்கிலாந்துக்காரர்கள் பழமைவாதிகள்.

தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் சர்வசன வாக்கெடுப்பும்

1994 தேர்தலில் ரோனி பிளேயரின் தொழிற்கட்சி ஆட்சியை பிடித்தது. ஆயினும் இங்கிலாந்துகாரர்களின் போக்கில் மாற்றமேற்படவில்லை. இத் தேர்தலின் போது தொழிற்கட்சி ஸ்கொட்லாந்து, வேல்ஸ் என்ற இரு பகுதிகளுக்கும் அதிகாரப் பகிர்வு மூலம் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தின் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவித்திருந்தது.

உள்ளூர் மட்டத்திலான விடயங்களை அந்தந்த மட்டத்தில் உள்ள மக்களே கவனித்துக் கொள்வது சிறந்தது என்ற அரசியல் தத்துவம் (Subsidiarity) பிரித்தானியாவுக்கு பொருத்தமானது என்பது அரசியல் கோட்பாட்டளர்களின் கருத்தாகும். ஐரோப்பாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தத்துவப்படியான அதிகார பகிர்வு (Devolution) சமஸ்டியில் இருந்து வேறுபட்டது. இறைமையுடைய வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றம் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் என்ற இரண்டிற்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும். இதனால் பிரித்தானியாவின் ஐக்கியம் பலப்படுத்தப்படும். பிரிவினை என்ற அச்சுறுத்தல் நீங்கும்.

1997 செப்டம்பர் 11 ஆம் தேதி சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 74.3% வாக்காளர்கள் ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் அமைவதை ஆதரித்தனர். இவர்களில் 60% வாக்காளர்கள் வரி அறவிடும் அதிகாரமும் ஸ்கொட்லாந்திற்கு வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த சர்வசன வாக்கெடுப்பு 60.4% ஆதரவாக அமைந்தது.

 ஸ்கொட்லாந்து சட்டம் 1998

1997 டிசம்பர் 17 ஆம் தேதி ஸ்கொட்லாந்து சட்ட மசோதா முன்வைக்கப்பட்டது. அரசியின் அங்கீகாரத்தை பெற்றதும் 1998 நவம்பர் 19 இல் இது சட்டம் ஆகியது. இச்சட்டம் வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியில் ஸ்கொட்லாந்திற்கு பாராளுமன்றம் ஒன்றையும், நிர்வாக அதிகாரத்தையும் (ஸ்கொட்லாந்து மந்திரிசபை) வழங்கியது.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் 129 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அவர்களை ஸ்கொட்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினர் என அழைப்பர். வேட்பாளர்கள் எவர் கூடிய வாக்குகளை பெறுகிறாரோ அவரைத் தெரிதல் என்னும் ‘FIRST PAST THE POST’ முறை பிரதேச அட்டவணை (Regional List) என்ற இரண்டின் கலப்பான தேர்தல் முறையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அதேவேளை வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தொகுதிகளில் இருந்து 73 உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கும் தெரிவாயினர். 8 பிராந்தியங்களில் இருந்து 7 மேலதிக உறுப்பினர்கள் விகிதாசார முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு வாக்காளருக்கு இரு வாக்குகள் இருக்கும். ஒன்றை தொகுதியின் வேட்பாளருக்கும் மற்றயதை தனது பிராந்தியத்தின் கட்சிக்கும் வாக்காளர் தனது வாக்காக அளிப்பார்.

ஒற்றையாட்சி நாடுகளில் அதிகாரம் பகிர்ந்தளிக்கும் போது அதிகாரத்தை பெறும் அலகுக்கு எவ்வெவ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பட்டியலிடப்படும். ஆனால் ஸ்கொட்லாந்து சட்டத்தில் இவ்வாறு ஸ்கொட்லாந்து சட்டசபையின் இயலுமைகள் எவையென பட்டியலிடப்படவில்லை. இது ஒரு தனித்துவமான அம்சமாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் (Reserved Powers) அட்டவணை 5 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. அட்டவணை 4, திருத்தம் செய்ய முடியாதவற்றை பட்டியலிட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் தவிர்ந்த எஞ்சிய அதிகாரங்களை ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் பிரயோகிக்கலாம். ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் ஐரோப்பிய மனித உரிமை சாசனம் (Convention on Human Rights) ஐரோப்பிய சமூகச் சட்டம் (European Community Law) என்பவற்றோடு முரண்படும் சட்டங்களை இயற்ற முடியாது. அட்வகேட் பிரபு ஸ்கொட்லாந்தில் நிகழும் இறப்புக்கள் தொடர்பான குற்றவியல் வழக்குத்தொடுத்தலையும் விசாரிக்கும் அதிகாரத்தையும் உடையவராய் இருப்பார். இவரை இந்தப் பதவி நிலை பொறுப்பில் இருந்து அகற்ற முடியாது.

வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கு பின்வரும் விடயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசியல் யாப்பு, பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, வருவாய், பொருளாதாரம், நாணயம், வர்த்தகமும் தொழிலும் (நுகர்வோர் பாதுகாப்பும் உட்பட), போக்குவரத்து (ஸ்கெட்லாந்தின் போக்குவரத்து நீங்கலாக), ரெயில்வே உட்பட போக்குவரத்தும் பாதுகாப்பும் ஒழுங்கமைப்பும், சமூக பாதுகாப்பு, மருத்துவ ஒழுக்கநடைமுறை, பிறப்புரிமையியல் (GENETICS), ஒலி – ஒளிபரப்பு, வெளிநாட்டு அலுவலகங்கள், சிவில் சேவை, குடிவரவும் தேசியகுடி அந்தஸ்தும் (IMMIGRATION AND NATIONALITY), சக்தி – மின்சாரம் – நிலக்கரி – எண்ணை – எரிவாயு – அணுசக்தி, தொழில்வாய்ப்பு, சமத்துவமான வாய்ப்புகள்.

வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்திற்கு உரியன என ஒதுக்கப்பட்டனவும் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் இயலுமைக்குரியனவுமான அதிகாரங்கள் பின்வருவன : சுகாதாரமும் கல்வியும் பயிற்சியும், உள்ளூராட்சி, சமூகப் பணி (SOCIAL WORK), வீடமைப்பு, திட்டமிடல், சுற்றுலாத்துறை, பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழிலுக்கு நிதி உதவி, போக்குவரத்து துறையின் சில அம்சங்கள், உள்ளூர் வீதிவலையமைப்பு உட்பட பேருந்து சேவைக் கொள்கை, துறைமுகங்கள், சட்டமும் உள்நாட்டு அலுவல்களும் (குற்றவியல் குடியியல் சட்டங்களின் பெரும்பாகம் இதனுள் அடங்கும்), நீதிமன்றங்களும் வழக்கு தொடுத்தலும், பொலிஸ், தீயணைப்பு சேவை, சூழல் பாதுகாப்பு, இயற்கை மரபு உரிமையும் கட்டிட மரபுரிமையும், விவசாயம், வனங்கள், மீன்பிடி, விளையாட்டுக்கள், புள்ளிவிபரம், பொதுப் பதிவேடுகளும் ஆவணங்களும்.

ஸ்கொட்லாந்தில் நிர்வாக அதிகாரம் உடைய மந்திரிகள் சபைக்கு ஸ்கொட்லாந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் இருந்து மந்திரிகள் நியமிக்கப்படுவர். முதலமைச்சர் பாராளுமன்றத்தின் தெரிவுப்படி மகாராணியால் நியமிக்கப்படுவார். ஏனைய மந்திரிகள் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் முதலமைச்சரால் நியமிக்கப்படுவார். ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் மேலதிகமான நிர்வாக அதிகாரங்களை ஸ்கொட்லாந்து மந்திரி சபைக்கு வழங்கலாம். இதனால் ஸ்கொட்லாந்துப் பாராளுமன்றத்தின் நிர்வாக அதிகாரங்களுடன் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் வழங்கக் கூடிய சட்ட வழி அதிகாரங்களையும் (Statutory Powers) ஸ்கொட்லாந்து மந்திரி சபை பிரயோகிக்கலாம். ஸ்கொட்லாந்து நிர்வாகத்துறை விரிந்தளவு அதிகாரங்களை உடையது. அது ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டும். வெஸ்ட்மினிஸ்டர் விதிகள் (Westminster Rules) அதற்கு ஏற்புடையதாக இருக்கும்.

ஸ்கொட்லாந்தின் நிதியின் பெரும்பங்கு ‘Block Grant’ என்ற வகையில் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் இருந்து கிடைக்கிறது. இதை வழங்குவதில் பார்னற் வாய்ப்பாடு (Barneztt Formula) என்னும் முறை பிரயோகிக்கப்படுகிறது. இது புதியதன்று ; 1978 முதல் வழக்கத்தில் இருந்து வந்த முறையாகும். இந்த முறையின் சிறப்பம்சம் ஒன்றை உதாரணம் மூலம் விளக்கலாம். ஐக்கிய இராச்சிய பாராளுமன்றம் சுகாதாரத்திற்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டை ஒரு பில்லியன் பவுன்களால் அதிகரிக்கிறது எனக் கொள்வோம். இந்த வாய்ப்பாட்டின் படி ஸ்கொட்லாந்திற்கு அதன் மக்கள் தொகை விகிதாசாரப்படி 85 மில்லியன் பவுன்கள் அதிகரிக்கப்படும். இதன் பொருள் இங்கிலாந்தின் தலா வீத அதிகரிப்புக்கு சமனான தொகையில் ஸ்கொட்லாந்து பெறும். இவ்வாறு பெற்ற நிதியை சுகாதாரத்துக்கே செலவழிக்கலாம். அல்லது அதிகாரம் பெற்றுள்ள துறைகளின் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

செவெல் வழக்காறு (Sewel Convention)

ஐக்கிய இராச்சியத்தின் அதிகார பகிர்வு முறையின் சிறப்பு அம்சங்களில் ஒன்று அதிகாரப் பகிர்வு மூலம் ஸ்கொட்லாந்து சட்டசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் (Devolved Powers) சம்பந்தப்பட்ட விடயங்களில் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் தலையீடு செய்யும் முறையில் சட்டம் இயற்றமாட்டாது. அவ்வாறு சட்டமியற்றினால் அது ஸ்கொட்லாந்து சட்டசபையின் சம்மதத்துடனேயே செய்யப்படும் என்பதாகும். இது எழுதப்பட்ட அரசியல் யாப்பு விதியாக அல்லாமல், ஐக்கிய இராச்சியத்தில் பின்பற்றப்படும் வழக்காறுகள் (Conventions) என்ற அரசியல் தத்துவம் சார்ந்தாக உள்ளது. இது செவெல் பிரபு என்பவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் ஸ்கொட்லாந்து அலுவல்களுக்கான இராசாங்க அமைச்சராக இருந்தவர். பிரபுக்கள் சபையின் இருந்து மசோதாவின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார் : “A convention to be established that Westminster would not normally legislate with regard to devolved matters in Scottish, without the consent of Scottish parliament” என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் பொதுவாக ஸ்கொட்லாந்துக்கு கையளிக்கப்படும் அதிகாரங்களில் தலையிட்டு சட்டமியற்றாது. அவ்வாறு சட்டம் இயற்றுவதாயின் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் சம்மதத்துடனேயே செய்யும் எனவும் இதை ஒரு வழக்காறாக அரசாங்கம் ஏற்றுப் பின்பற்றும் எனவும் செவெல் கூறினார். இந்த உறுதிமொழி பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கமும் ஸ்கொட்லாந்தின் நிர்வாகத்துறையும் செய்து கொண்ட புரிந்துணர்வு மனுவில் (Memorandum of Understanding) சேர்த்துக் கொள்ளப்பட்டது.

மேற்குறித்த உடன்பாடு பின்னர் ஐக்கிய இராச்சியமும் ஸ்கொட்லாந்து நிர்வாகமும் இணைந்து தயாரித்த சட்ட மூலத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்காறு வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தில் இருந்து ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் போன்றவற்றை பாதுகாப்பதோடு, அதிகாரப் பகிர்வை பெற்ற ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் சம்மதத்துடன் வெஸ்ட்மினிஸ்டர் சட்டம் இயற்றவும் இது வழிவகுத்தது.

செவெல் வழக்காறு பின்னர் வட அயர்லாந்து, வேல்ஸ் என்பனவற்றுக்கும் பொருந்துவதாக விஸ்தரிக்கப்பட்டது. செவெல் வழக்காறுடன் கூடவே டிசம்பர் 2001 முதல் அதிகாரப் பகிர்வு பெற்ற அலகுகளுடன் நிர்வாக விடயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறும் புரிந்துணர்வு மனுவும் (M.O.U) நடைமுறைக்கு வந்தது. ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் என்ற மூன்று அலகுகளுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தின் அளவு வேறுபட்டு இருந்தது.  இவ்வாறு வேறுபட்டிருந்த அதிகாரப் பகிர்வே சமத்துவமின்மை அல்லது அசமத்துவம் என்ற பண்பை உணர்த்தும் சான்றாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

15509 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)