வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே, குழுக்களாக மனிதர்கள் கூடி வாழத் தொடங்கிய காலத்தில் இருந்தே, மனித இனக்குழு ஒன்றின் சகல முன்னெடுப்புக்களிலும் பெண்களின் பங்களிப்பே முக்கியமானதாக இருந்திருக்கிறது. தத்தமது கூட்டத்தை வழிநடத்துபவளாக பெண்ணே இருந்திருக்கிறாள். உடல் வலுவிலும், உணவுத்தேடலுக்கான உழைப்பிலும், ஆணுக்குச் சமமாகவும் சில தருணங்களில் ஆணை விஞ்சியே பெண்ணின் செயற்பாடுகள் இருந்துள்ளன. “வருவிருந்து அயரும் விருப்பினள்” (புறம்.326:12) எனும் புறநானூற்றுப் பாடல் வேட்டைச் சமூகத்தில் உணவுப்பங்கீடு செய்வதில் அவளுக்கிருந்த நிர்வாகத்திறனின் தொடர்ச்சியைப் புலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. தாய்வழிச்சமூகம் மேற்கொண்ட இயற்கை வழிபாட்டில் பெண் முதன்மைப்படுத்தப்பட்டதும், பெண் தெய்வ வழிபாடுகளும், அந்தத் தெய்வங்களுக்குரிய இயல்புகளும் பெண்ணின் சிந்தனையைப் பரந்துபட்ட வகையில் காட்டியுள்ளன.
தந்தைவழித் தலைமையில் நிலவுடைமைச் சமுதாயம் தோற்றம் பெற்ற காலங்களிலும், பொதுவுடைமைச் சிந்தனையோடு திகழ்ந்த பெண்களை தெய்வநிலையில் முதன்மையாக வழிபட வைத்து, அவற்றுக்கான சடங்குகளில் அவளை ஈடுபடுத்தி ஆணைச் சார்ந்து வாழும் இரண்டாம் நிலைக்கு தள்ளியதனை அறிய முடிகின்றது. (முனைவர் பூ.மு.அன்புசிவா) இவற்றை சங்க இலக்கிய நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர். உதாரணமாக கொற்றவை, கொல்லிப்பாவை, இயக்கி, அணங்கு, தவ்வை என்னும் பெண் தெய்வங்கள் வேட்டைக் கால தொடக்கத்தில் இருந்து சிறப்பிக்கப்படுகின்றன. இவ்வாறான பண்பாட்டு அசைவுகளுக்கு, உலகில் இன்றும் பரந்துள்ள ஜப்பானின் ஜனு, ஆபிரிக்காவின் குங் சான், கனடாவின் இனுவிட் மற்றும் மேட்டிசு முதலான பழங்குடிகளும், இந்தியப்பழங்குடிகள் மற்றும் இலங்கையின் பூர்வகுடிகளான வேடர் சமூகம் போன்றனவும் எம் கண் முன் நிற்கும் சான்றுகளாகும். உலக வரலாற்றுப் போக்கின் மிகச் சமீபமான நிலவுடமைப் பொருளாதாரகாலம் வரைக்கும் நிலைமையிதே.
வேட்டைச்சமூகப் பெண்களின் உடல் பற்றிய புரிதலும், மனம் பற்றிய உணர்தலும் நம்முடைய இன்றைய அறிதலினின்று வேறானது. நாடோடியாக வாழ்ந்த மக்கள், தங்களுக்கென ஒரு இடத்தைத் தேர்வு செய்து இனக்குழுச் சமூகமாக வேளாண் மக்களாக மாறிய பொழுது உடலமைப்பு, இனவிருத்தி, வாரிசுகளைக் காப்பது போன்ற நிலைகளில் பெண் என்பவள் இல்லத்திற்கு இன்றியமையாதவளாக மாறிவிட்டாள். நிலவுடைமைச் சமூகமாக நிலைபெற்ற இந்தக் காலத்தில் தான் பெண்ணின் உடல் மீதும், உளத்தின் மீதும் ஆதிக்கம் செய்யும் எண்ணம் ஆணுக்கு ஏற்படுகிறது. பொருளாதாரத் தேவைக்காக வேறு பல தொழில்களைச் செய்யவும், அதற்காகக் குடும்பத்தை விட்டு ஒரு ஆண் பிரிந்து செல்லவும் அவசியம் அமைந்தது போலவே அவனுடைய வாரிசுகளைக் காத்து, குடும்பத்தை நிலைப்படுத்தும் செயலை ஒரு பெண் ஏற்றுக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு பெண் பல்வேறு தருணங்களுக்காக தன்னுடைய ஆண் துணையில் தங்கியிருக்க வேண்டி நிலை உண்டாகிற்று. சங்க கால இலக்கியங்களில் சுவை காண விரும்புவோரும் தலைவி, தலைவனுக்காகக் காத்திருத்தல் என்ற பாடல்களை விட்டுச் செல்வதில்லை.
இக்காலத்தில் இருந்து தான் கடவுள் மற்றும் மதக்கோட்பாடுகள் படிப்படியாக உருவநிலைப்பட்ட தன்மைக்குச் செல்கின்றன. பெண்ணினின் சுயத்தை பலவாறும் இருட்டடிப்புச் செய்த பங்கு இந்தக் காலப்போக்கில் ஆண் நிலைச்சிந்தனையுடன் கட்டமைக்கப்பட்ட உலக மதக்கற்பிதங்கள் அனைத்திற்கும் உண்டு. என்னதான் தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு பெண், மதத்தின் புனிதங்களைக் கட்டிக்காக்கின்றேன் என்று நினைத்து விரதம் இருந்தாலும் சரி, அதன் கோட்பாடுகளைப் படித்துத் தேர்ந்தாலும் சரி அவர் ஒரு அர்ச்சகராக முடியாது. அதே போல் ஒரு பௌத்தப் பெண் தனது மதக்கொள்கைகளைக் கற்று துறவ நிலைக்குச் சென்றாலும் கூட ஒரு பிக்குணி, விகாரையொன்றில் அதிகாரத்தினைச் செலுத்த முடியாது. ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் சரி அவர் இஸ்லாத்தின் சகல விடயங்களையும் கரைத்துக் குடித்திருந்தாலும் சரி அவரால் ஒரு பள்ளிவாசலின் மௌலவி ஆக முடியாது. கிறிஸ்தவப் பெண்ணொருவர் தன் மதக்கோட்பாட்டைக் கற்று துறவறம் சென்றாலும் சரி அவரால் ஒரு தேவாலயத்தின் சகல அதிகாரங்களையும் கைக்கொள்ள முடியாது. இவ்வாறான நிலைப்பாடுகள் தான் உலகப்பொது மதங்கள் அனைத்திலும். ஆனால் வேடர் சமூகத்தினரின் வழிபாட்டில் ஆரம்ப காலம் தொடக்கம் இற்றைவரைக்கும் பெண்ணுக்கான நிலையென்பது வேறு.
வேடர் வழிபாட்டில் பெண்கள்
ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் வேடர்களின் வழிபாடானது பெண்மயப்பட்டதாக, வழிபாட்டு முறைகளில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுவதாகவே உள்ளது. முன்னோர்களின் வழிபாட்டில் இருந்து அடுத்தபடியாக வேடர்கள் மாறிக்கொண்ட வழிபாடானது பெண் தெய்வங்களை மையப்படுத்தியே நிகழ்ந்துள்ளது. அவ்வகையில் வேடர் சடங்கு மையங்களின் பிரதான தெய்வமாக செம்பக நாச்சி, செம்பு நாச்சி, கொம்பு நாச்சி, தெய்ய நாச்சி, அந்தன் குமாரி, மொக்காட்டுத்தெய்வம், மாநீலி (நூற்றுக்கு மேல்), குடா நீலி (நூற்றுக்கு மேல்), கிரியம்மா, பூச்சாண்டி முதலானவற்றையும் (இவற்றிற்கு உருவம் இல்லை.), பிற்காலத்தில் வந்து சேர்ந்த பத்தினி (கண்ணகி) வழிபாட்டையும் குறிப்பிடலாம். இடத்திற்கு இடம் இவற்றில் மாறுபாடும் காணப்படும். இதில் இன்னும் அழுத்தமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் குறித்த வழிபாடுகளிலே ஆண் தெய்வங்களாகக் கொள்ளப்படுபவைகள் அனைத்தும் பெண் தெய்வங்களுக்கான துணைப்பரிவாரங்களாகவே கொள்ளப்படுகின்றன.
இன்றும் வேடர் வழிபாட்டினை முன்னின்று நடாத்தும் வேடர் சமூகப் பெண் மதகுரு ஒருவரின் கருத்து இவ்வாறு அமைந்தது.
களுவோ வித்தனம்மா தொழுவோ வித்தனம்மா
களுவன்னீ…… தொழுவன்னீ….. லே பூஞ்சி தப்புரம்மா
பூனொச்சிமுனையோ….
கல்குடாவோ….
தொப்பிகலையோ……ஓ….
சீம்பிலாகல் மாப்பாரே தெய்யநாச்சி…”
வேட்டுவப் வழிபாட்டுப் பாடல் ஒன்று. (மட்டக்களப்பு – களுவன்கேணி – ஜெயராணி )
“நாங்க தெய்யநாச்சியதான் (பெண் தெய்வம்) தலைத்தெய்வமா வெச்சிருக்கம். எங்கட அப்பா இறந்த பிறகு நான் தான் சடங்க செய்து வாரன். அப்பாக்கு முதல் அப்பாட அம்மாதான் செய்து வந்தவ. அவட பூட்டி முறையான குடற்புரி ஆச்சிதான் இந்த தேவாதி முறைகள இந்த ஊருக்குள்ள கணகாலமா ஆதரிச்சு வந்ததாம் எண்டு அப்பா சொல்லுவாரு. இப்ப நான் ஒரு பொம்புளையா எல்லாம் செய்து வாரன். இந்த சடங்கு மையத்தின் பிரதான தேவாதியும் நான் தான்.” (மட்டக்களப்பு- களுவன்கேணி- நடராசா ஜெயராணி)
இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வேடர் வழிபாட்டு முறைகள் ஒரு சில இடங்களில் பத்தினி தெய்யோ என்ற பதத்துடன் உருவ வழிபாட்டுடன் இணைந்து கொள்கின்றன. இதன் விளைவாக வேடர் சடங்கு அம்சங்களுடன் பத்ததி முறை எனப்படுகின்ற கிராமிய வணக்க முறைகளும் இணைந்து கொள்கின்றன. இவ்வாறு இச்சடங்காற்றுகைகள் காலத்திற்கு ஏற்றால் போல் மாற்றமுற்றாலும், பெண்களைச் சடங்கோடு இணைத்துக் கொள்ளுதல் என்பதில் எதுவித மாற்றங்களும் இல்லை. மடைப்பெட்டி எடுத்துவரல், நெல்லுக்குற்றுதல், கண்ணிமார் பிடித்தல் முதலான சடங்கின் பிரதான அம்சங்கள் யாவும் பெண்மையப்பட்டதாகவே இன்றும் காணப்படுகின்றன.
வேடர் பெண்களின் பல்லாளுமைகள்
வழிபாட்டு அம்சங்களில் எவ்வாறு பெண்கள் தனித்துவமாகக் காணப்படுவார்களோ அதுபோலவே வேறு துறைகளிலும் அவர்கள் நிகரற்ற நிபுணத்துவம் கொண்டோராக, தனித்த சிறப்பு உடையவர்களாகவே காணப்படுவர். உதாரணமாக ஒரு வேட மதகுருவாகக் காணப்படும் பெண்ணொருவர் கைதேர்ந்த மருத்துவிச்சியாகவும் காணப்படுவார். சிறந்த கூத்துப்பாடல், காவியப்பாடல், காவடிப்பாடல் முதலானவற்றையும் பாடக்கூடியவராகவும் கலையம்சம் நிறைந்தவராகவும் காணப்படுவார். அதே சமயம் கைமருந்து, சித்த வைத்தியம், நாட்டு வைத்தியம், மருத்துவ மந்திர நடவடிக்கைகள் முதலானவற்றிலும் சிறந்து விளங்குவார். இவ்வாறு மேற்சொன்ன சகல துறைகளிலும் தாடனம் கொண்ட வேட மருத்துவிச்சி (லட்சுமி) மூதாட்டி ஒருவரின் கருத்துக்கள் இவ்வாறு அமைந்திருந்தன.
“மன! எங்கட காலம் வேற உங்கட காலம் வேற. இப்ப எல்லாத்துக்கும் இங்கிலீசு மருந்து. எல்லாரும் வருத்தம் தாற நோவுக்கு மருந்து தேடுராங்களே ஒழிய வருத்தத்த அடியோட ஒழிக்க மருந்து தேடுறாங்க இல்ல. வெறும் வருத்தத்தோட நோவ மட்டும் இல்லாமல் ஆக்கி என்ன நன்ம கிட்டப்போகுது? நான் ஒரு புள்ளைக்கு சுகமில்லாம (மாதவிடாய்) நிண்டு பொயித்தெண்டால் அடுத்த மாதம் இருந்தே வைத்தியத்தத் தொடங்கிடுவன். புள்ள புறகு கண்ட கண்ட மாதிரி எல்லாத்தையும் தின்ன ஏலாது. அவக்கெண்டு சில பத்தியச் சாப்பாடுகள் இரிக்கி. அதத்தான் குடுக்கனும். மூணூ மாசம் கழிய மட்டும் புள்ளைய கவனமா பார்க்கம். ஆறு மாசத்துக்குப் புறகு நான் எண்ட வேலையத் தொடங்கிடுவன். தாயும் சேயும் நலமா இரிக்கிறது நாம கவனிக்குறதுலதான் இரிக்கி. முதலாவது வேலையா ஆமணக்கு எண்ண போட்டு இரண்டு நாளைக்கு ஒருக்கா நல்லா நீவி (மசாஜ்) விடுவன். பெறு மாசம் வர மட்டும் இந்த வேலையச் செய்யனும். அப்பதான் தாய்ட வயிறு நல்லா இழகி புள்ள இறுக்கமில்லாமல் புறக்கும்.
இப்படி எண்ட காலத்துல நான் 650 பிரசவம் பார்த்து இரிக்கன். ஆனால் போன பத்து வருசத்துக்கு முதல் ஆஸ்பத்திரியால வந்து என்னை இனிமேல் மருத்துவிச்சி வேல பாக்கக்கூடாது எண்டு போட்டாங்க. மீறி செய்தா மறியலுக்குப் போக வரும் எண்டாங்க. ஆனா மனே நான் இடைக்கிடைக்க அவசரம் எண்டு ஆரும் வந்து கூப்பிட்டா போறதுதான். ஆரு வந்து என்ன தண்டன தந்தாலும் பரவால்ல. ஆனா மனே இவங்க எல்லாரும் எங்கட மருத்துவம் இனி சரிவராது எண்டு சொல்லுறாங்க. ஆஸ்பத்திரியில என்னதான் புதுப்புது மருத்துவம் வந்தாலும் தாயும் சாகுது, புள்ளையும் சாகுது. ஆயுதம் போட்டு புள்ளைய எடுக்கக்குள்ளையே கொல்லுதுகள், வவுறு நோகத்தொடங்கி உடனயே வெட்டு, புள்ளயையில கொடி சுத்திக்கிடந்தா வெட்டு, அதவிடப் புதினம் நாள் பார்த்து திகதி பாத்து வெட்டி எடுக்குதுகள். இப்படியான புறப்பெல்லாம் இந்த பூமி தாங்குமா மனே? ஆனா இதெல்லாம் குத்தமில்ல. நாம பூமியோட வானத்தோட சேர்ந்து பாக்குற மருத்துவம் குத்தம். இத ஆரிட்ட சொல்லுற? இந்தா நீ கேக்குறதால எல்லாம் சொல்லுறன். நான் ஒருமுற வைத்தியம் பார்க்கக்குள்ள தாய்க்கு ரெண்டு புள்ள. அது ரெண்டும் தல கால் மாறிக் கிடக்கு. தாய்க்கு பன்னீர் குடமும் உடைஞ்சித்து. நான் ஆமணக்கு எண்ணைய போட்டு நீவி நீவி ரெண்டு புள்ளையையும் வெளில எடுத்தன். ஒண்டு தலையால புறந்திச்சி, இன்னொண்டு காலால புறந்திச்சி. இப்ப ரெண்டுக்கும் கல்யாணம் நடந்து புள்ள இரிக்கி. அதான் சொன்னனே எங்கட காலம் வேற. உங்கட காலம் வேற. ”
இவ்வாறான பல விடயங்களை ஒரே மூச்சில் கதைத்து முடித்தார் அந்த 90 வயது மூதாட்டி. அவர் மருத்துவிச்சியாக மட்டும் இல்லாமல் வேடர்களின் மதகுருப் பெண்ணாகவும் இருந்துள்ளார். இன்றும் தனியாக ஒரு சடங்காற்றுகையினை வழி நடத்தும் திறன் வாய்க்கப் பெற்றவர். அவரது கிராமத்தின் சடங்கு நிகழும் காலங்களில் அனைத்துச் சடங்கு மையங்களுக்கும் ஒரு முதுசமாக அழைக்கப்படுகிறார்.
இவற்றைப் போலவே தமது வேடர் மரபின் சகல விடயங்களை உள்வாங்கிக் கொண்டும், நவீன சிந்தனையைத் தகுந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டும் தமது சமூகத்திற்குச் சேவை புரிந்து வருகின்ற பல பெண்கள், வேடர் சமூகங்களில் இன்றும் உண்டு. அவ்வாறான ஒரு பெண்தான் விமலாதேவி. அவர் தனது சமூகத்தில் ஒரு யுக சந்திப்பெண்ணாக உள்ளார். தம் சமூகத்தின் சகல வழிபாட்டு நடைமுறைகளையும் நன்கறிந்தவர், நாட்டு மருத்துவம் தெரிந்தவர், மந்திரமுறைகள் மற்றும் மருத்துவ மந்திர முறைகள் அறிந்தவர், சிறு குழந்தை வைத்தியம் அறிந்தவர், கூத்துப்பாடல்கள், சடங்குப்பாடல்கள், கும்மிப்பாடல்கள் முதலான நாட்டார் கலைகளில் தேர்ச்சி கொண்டவர். சமுர்த்தி மற்றும் மாதர் சங்கம் முதலான சமூக அமைப்புக்களில் அங்கத்துவம் வகிப்பவர். அவர் கூறும் போது,
“நான் வேடப்பொம்புளதான். நிறையப் பேருக்கு வேடர் எண்டால் கொத்துக் கட்டித்து, அம்பும் வில்லும் கொண்டு திரியுற ஆக்கள் எண்டுதான் நினைப்பு. ஆனா இப்ப அப்பிடி இல்ல. நான் ஒரு வேடப்பெண். ஓ.எல் வரைக்கும் படிச்சனான். வன்செயல் காலம் அதுக்கு மேல படிக்க விடல. எங்கட குஞ்சம்மா, குஞ்சப்பா மாருட்ட இருந்து எங்கட நடைமுறைகள படிச்சுக் கொண்டனான். நான் ஒரளவுக்கு படிச்சன் எண்டதால எங்கட நடைமுறைகள மறந்து போற ஆளில்ல. இப்பையும் என்னால சடங்குல எல்லா வேலையும் செய்ய ஏலும். நான் உருவம் தான் மாறி இருக்கேனே தவிர நானொரு வேடப்பெண். உருவம் காலத்துக்கு ஏத்தமாதிரி மாறலாம் தம்பி. ஆனால் வறுகத்தனம் (பரம்பரை இயல்பு ) எப்பயுமே மாறாது.” என்கிறார்.
இந்த நிலைமை, இலங்கையின் கிழக்குப் பிரதேசமெங்கும் வாழும் வேடர் சமூகங்களிடையே இன்றும் பரவலாகக் காணப்படுகின்றது. இவர்களின் சமூகக்குழுக்களில் இடையே ஒரு மங்கல நிகழ்வாக இருந்தாலும் சரி, அமங்கல நிகழ்வாக இருந்தாலும் சரி அந்த நிகழ்வை ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் வழி நடத்தும் தலைமைத்துவப் பண்பும், அதிகாரமும் அக்குழுக்களிடையே வாழும் வயதான மூதாட்டிகளுக்கே உண்டு. அவர்கள் இருந்த இடத்தில் இருந்தே நிகழ்வுக்கான சகல கட்டளைகளையும் பிறப்பித்துக் கொண்டே இருப்பார்கள். அவரின் கட்டளையை ஏற்று ஆண்களும், பெண்களும் என சகலரும் செயற்படுவர். குறித்த நிகழ்வும் திட்டமிட்டபடி நடந்து முடியும். நிகழ்வின் இடையே ஏதும் பிரச்சினைகள், முரண்பாடுகள் ஏற்படின் அதைத் தீர்த்து வைக்கும் நபராகவே அம்மூதாட்டி காணப்படுவார். வேடர் சமூகம் அல்லாத சமூகக்கட்டமைப்புக்களிலும் இப்பண்பு உண்டு. நாம் உலகில் மூலைமுடுக்கெல்லாம் பெண்ணியம் என்று தேடித்திரிகின்றோம்; பேசுகின்றோம்; அவற்றைச் சிலாகிக்கின்றோம். ஆனால் நம்முடன், நமக்கருகில் இருக்கும் இவ்விடயங்களைப் பார்க்க, பேச ஏன் முற்படுவதில்லை?
தொடரும்.