மருத்துவர் கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். கிறீன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆங்கில மருத்துவ நூல்களை சுதேச மருத்துவர்கள் (சித்த மருத்துவர்கள்) வாங்கி, படித்துப் பயனடைந்தனர். சுதேச மருத்துவர்களிற் சிலர் தங்கள் பிள்ளைகளை மருத்துவர் கிறீனிடம் ஆங்கில மருத்துவம் பயில அனுப்பினர். இவை தனது பணிகுறித்த மனநிறைவை மருத்துவர் கிறீனுக்கு ஏற்படுத்தியது.
கிறீன் முதற் 10 ஆண்டுகளில் 4 மருத்துவ அணி மாணவர்களைப் பயிற்றுவித்தார். ரி. கொப்கின்ஸ், ஜி.எம். ரெய்டு, சி. மக்கின்ரையர், எ. மக்ஃபார்லாண்ட் ஆகியோர் கிறீனது மருத்துவக்கல்லூரியின் 3ஆவது அணியிலும் (1853 – 1856), ஜே. எச். பெய்லி, ஏ. பிலான்ச்சாட், ஜே. பி. ஹாவார்ட், எவ். இலற்றிமர், ஜே. வில்சன், ஜே . ரொப்ஸ், ஜே. பிளட், டி.பி. மான் ஆகியோர் 4 ஆவது அணியிலும் (1855 – 1858) பயின்றனர்.
மருத்துவர் கிறீன் அமெரிக்க மிஷனுக்கு 1857 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ஓராம் நாள் அனுப்பிய 6 மாதகால அறிக்கையில் மானிப்பாயிலுள்ள டிஸ்பென்சரியில் கடந்த 6 மாதத்தில் 1003 பேருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டதையும் தன்னுடைய 4 ஆவது அணியைச் சேர்ந்த 8 மாணவர்களும் மருத்துவக்கல்வியில் சிறந்து விளங்குவதையும் அவர்கள் அடுத்த ஆண்டு மருத்துவக் கல்வியைப் பூர்த்திசெய்து மருத்துவர்களாக வெளிவருவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவ்வறிக்கையில் பிரித்தானிய அரசாங்கம் கோப்பித் தோட்டங்களில் மருத்துவசேவையை வழங்கும் தகுதிவாய்ந்த மருத்துவர்களுக்கு மாதாந்தம் ஊதியமாக 7 தொடக்கம் 12 பவுண்ஸ் வழங்கத் தீர்மானித்திருந்ததையும் விவரித்திருந்தார்.
முதற் பத்து ஆண்டுகளில் (1847-1857) கிறீன் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய பணிகள் சில:
கிறீன் மானிப்பாயில் மேலைத்தேச மருத்துவமனையைத் தாபித்து 10 ஆண்டுகளில் ஏறத்தாழ இருபதாயிரம் பேருக்குச் சிகிச்சை வழங்கினார். ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குச் சத்திரசிகிச்சையை மேற்கொண்டார்.
1848 இல் மானிப்பாயில் இலங்கையின் முதலாவது மேலைத்தேச மருத்துவக் கல்லூரியையும் போதனா மருத்துவமனையையும் தாபித்து 20 தமிழர்களை மருத்துவர்களாக்கினார்.
சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக் அவர்கள் யாழ் நகரத்தில் 1850ஆம் ஆண்டு ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழக மருத்துவமனையை (யாழ். போதனா மருத்துவமனை) தாபிக்க மருத்துவர் கிறீன் அவர்களே காரணமாக விளங்கினார்.
19ஆம் நூற்றாண்டு மருத்துவ உலகில் விசேட மருத்துவ நிபுணத்துவத் துறைகள் மற்றும் உப மருத்துவ நிபுணத்துவத் துறைகள் எவையுமே அறிமுகமாகாத காலம்.
இன்று மருத்துவ உலகில் விசேட மருத்துவ நிபுணர்கள் ஆற்றும் தனித்துவமான மருத்துவப்பணியை அன்று மருத்துவர் கிறீன் யாழ்ப்பாணத்தில் தனியொருவராக ஆற்றியுள்ளார். கிறீன் ஒரு மருத்துவ வல்லுநராக(Physician) மட்டுமன்றி சத்திரசிகிச்சை நிபுணராகவும் (Surgeon), மகப்பேற்று மருத்துவ நிபுணராகவும் (Obstetrician), என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணராகவும் (Orthopaedic Surgeon), ஒட்டு உறுப்பு சத்திரசிகிச்சை நிபுணராகவும் (Plastic Surgeon) கடமையாற்றியுள்ளார்.
தமிழில் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்ல புலமையாளரானார். ஆங்கிலத்திலிருந்த மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
மேலைத்தேச விஞ்ஞானக் கல்வி தமிழர்கள் மத்தியில் அறிமுகமாகாத காலத்தில் தமிழில் விஞ்ஞான மற்றும் மருத்துவக் கலைச்சொற்களை கிறீன் உருவாக்கினார்.
கிறீன் அமெரிக்காவுக்குத் திரும்புதல்
யாழ்ப்பாணத்தில் 10 ஆண்டுகள் பணியை நிறைவு செய்து கிறீன் 1857ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ஆம் திகதி அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார். இரு குளிர்காலங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து தனது உடல் நலத்தைத் தேற்றியபின்னர் யாழ்ப்பாணம் திரும்புவதற்கு கிறீன் தீர்மானித்திருந்தார்.
ஒக்ரோபர் 5ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து பாய்மரக் கப்பலில் புறப்பட்டு 23ஆம் திகதி சென்னையை அடைந்தார். பிரித்தானியாவுக்குச் செல்லும் கப்பல் புறப்படுவதற்காக 2 மாதங்கள் சென்னையில் கிறீன் காத்திருக்க வேண்டியேற்பட்டது. சென்னையில் இருந்த காலத்தில் உடற்கூற்றியல் பற்றிய பிரபல்யமான நூலான “The House I Live In” என்பதையும் தாய் சேய் நலன் பற்றி ஆங்கிலத்தில் பிரபல்யமாக விளங்கிய “The Mother and Child” என்ற தொகுப்பையும் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டார். 1857ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஆகரா(Agra) என்ற பாய்க்கப்பலில் சென்னையிலிருந்து புறப்பட்ட கிறீன் ஆபிரிக்காவின் நன்னம்பிக்கை முனை, அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட செயின்ட் ஹெலினாவைக் கடந்து 1858 ஆண்டு ஏப்பிரல் ஓராம் திகதி இலண்டனை அடைந்தார். கிறீன் கடற் பயணத்தின் போது படங்களை வரைவதிலும் மொழிபெயர்ப்புப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.
1858 ஆம் ஆண்டு ஏப்பிரல் 13 ஆம் திகதி கிறீன் இலண்டனிலிருந்து அமெரிக்காவிலுள்ள பிறதேசங்களுக்கு மிஷனரிகளை அனுப்பும் அமெரிக்க மிஷன் சங்கத்தின் (ABCFM) தொடர்பாடல் செயலாளர் ரூபஸ் அன்டர்சனுக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்காவிலுள்ள தனது நண்பர்களின் நிதியுதவியுடன் இலண்டனிலிருந்து பாரிசுக்கும் பிற ஐரோப்பிய நகரங்களுக்கும் குறுகியகாலப் பயணம் செய்யும் தனது எண்ணத்தைத் தெரிவித்திருந்தார்.
அந்தக்கடிதத்திலே கிறீன் கேட்டிருந்த முக்கிய விடயம்: தான் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ள நூல்களான இரண வைத்தியம் (Science and Art of Surgery) மற்றும் கெமிஸ்தம் (Chemistry) ஆகியவற்றை அச்சிடுவதற்கு நிதியுதவி செய்யக் கூடியவர்களுக்கு ஒரு கடிதத்தை அன்டர்சன் அவர்கள் அனுப்பினால் அவர்களைச் சந்திப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் நிதியுதவி கிடைக்கும் பட்சத்தில் குறிப்பாக இந்நூல்களில் உள்ள விளக்கப்படங்களின் மரச்செதுக்கு அச்சுக்களை ஐரோப்பாவில் சிறந்தமுறையில் செய்யமுடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
கிறீன் சென்னையில் தங்கியிருந்த காலப்பகுதியில் சென்னையிலிருந்த எடின்பரோ மருத்துவ மிஷனரிச் சங்கத்தின் (Medical Missionary Society in Edinburgh) கிளையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். மருத்துவர் கிறீன் இலண்டனை அடைந்த போது எடின்பரோ மருத்துவ மிஷனரிச் சங்கத்தின் செயலாளரிடமிருந்து அன்பான அழைப்பிதழ் கடிதம் ஒன்று கிறீனுக்கு வந்தது. 1858 ஆம் ஆண்டு யூலை மாதம் எடின்பரோவில் நடைபெறவிருக்கும் பிரித்தானிய மருத்துவச் சங்கத்தின் (British Medical Association) வருடாந்த மகாநாட்டில் கலந்துகொள்ளுமாறும் கௌரவ விருந்தினருக்கான உரையாற்றுமாறும் மருத்துவர் கிறீன் அழைக்கப்பட்டிருந்தார்.
கிறீன் எடின்பரோவில் நடைபெற்ற பிரித்தானிய மருத்துவச் சங்கத்தின் வருடாந்த மகாநாட்டில் ஆற்றிய உரையின்போது தாய்மொழியில் மருத்துவ விஞ்ஞானத்தை கற்பிப்பதன் அவசியம் குறித்துத் தனது எண்ணங்களையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
மருத்துவ விஞ்ஞானத்தை பிறமொழியினர் மத்தியில் அவர்களது தாய்மொழியில் அறிமுகப்படுத்தும் போது வெறும் மொழிபெயர்ப்பு என்பது பயனற்றது என்றும் பல்வேறு ஆசிரியர்களதும் கருத்துக்களை ஒருங்கு சேர்த்து, நன்கு திட்டமிட்டு, அடிப்படையான ஆய்வுக்கட்டுரைகளுடன் தேவையானவற்றைச் சேர்த்தும் நீக்கியும் இடங்களை, வசனங்களை மாற்றியும் தேவையான விளக்கப்படங்கள் மற்றும் சொற்றொடர்களுடன் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலும் வட்டார மொழியில் மருத்துவ விஞ்ஞான நூல்களை வெளியிடுவது பயனுள்ளதென்றும் ஒவ்வொரு புத்தகமும் இலகுவான மொழிநடையில் மருத்துவக் கோட்பாடுகளை ஐரோப்பியர்கள் புரிந்துகொள்வது போல் தமிழர்களாகிய இந்துக்கள் விளங்கத்தக்கவாறு இருக்கவேண்டும் என்றும் மருத்துவர் கிறீன் எடின்பரோ மகாநாட்டில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
லிவப்பூலிலிந்து யூலை 7ஆம் திகதி பாய்மரக் கப்பலில் புறப்பட்ட கிறீன் யூலை 21 இல் நியூயோர்க் நகரையடைந்தார். 1858 ஆம் ஆண்டு யூலை மாதம் 28 ஆம் திகதி வெளிவந்த நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை, கிறீன் நாடு திரும்பியமையை தனிப்பட்ட பத்தியொன்றில் (Column) பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.
“பதினொரு வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து மருத்துவர் சாமுவேல் பிஷ்க் கிறீன் புதன்கிழமை கங்காருவில்(கப்பலின் பெயர்) நாடு திரும்பினார். இந்தக்காலப்பகுதியில் கிறீன் மிஷனரி பணியில் ஈடுபட்டதுடன் மருத்துவக் கல்லூரியை நிறுவி அந்நாட்டவர்களுக்கு மருத்துவம் பயிற்றுவித்தார். அத்துடன் மருத்துவ நூல்களை சுதேச மொழியிலும் மொழிபெயர்த்தார்.”
அமெரிக்காவுக்குத் திரும்பிய கிறீனை மருத்துவர் ஒருவர் உடனடியாகப் பரிசோதித்து அவருக்கு எவ்வித நோய்களும் இல்லையென்று தெரிவித்தார். கிறீன் நியூயோர்க்கில் வசித்த தனது சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்தித்து உரையாடிய பின்னர் தனது சொந்த ஊராகிய கிறீன் கில்லிற்குச் (Green Hill) சென்று 82 வயதான தனது தந்தையாருடன் குளிர்காலத்தைக் கழித்தார்.
தொடரும்.