அறிமுகம்
இயற்கை அனர்த்தப் பாதிப்புகளுக்கு இடம், காலம் என்பன ஒரு போதும் தடையாக இருப்பதில்லை. இவை எங்கும் எப்போதும் தோன்றலாம். அனர்த்த வாய்ப்புகள் குறைவானதென கருதப்பட்ட பல பகுதிகளில் அண்மைக் காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிகிறோம் (Wen et al., 2021). இவ் இயற்கை அனர்த்தங்களில் காலநிலை அனர்த்தங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றவையாக மாறியுள்ளன. உலகளாவிய ரீதியில் உள்ள காலநிலை மாற்றத்தின் விளைவாக காலநிலை அனர்த்தங்கள் அடிக்கடி தோன்றுகின்ற அதேவேளை, இவற்றினுடைய அழிவுகளும் அதிகமானவையாகக் காணப்படுகின்றன. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இவ் இயற்கை அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் வடக்கு மாகாணத்திலும் அதிகமாகவே உள்ளன. வடக்கு மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காலநிலை அனர்த்தங்களாக சூறாவளி, வெள்ளப்பெருக்கு, வரட்சி என்பனவற்றைக் குறிப்பிடலாம். இக் கட்டுரை வட மாகாணத்தின் வெள்ள அனர்த்தம் பற்றியே குறிப்பிடுகின்றது.
இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது வேறான காலநிலைப் பண்புகளைக் கொண்ட வடமாகாணத்தின் காலநிலைப் பண்புகளை எதிர்வு கூறுவது அவ்வளவு சுலபமான விடயமன்று. எனினும் கடந்த 120 ஆண்டுகால காலநிலைத் தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில் சில விடயங்களை எதிர்வு கூற முடியும். அந்த அடிப்படையில் மழை வீழ்ச்சி, வெள்ளப் பெருக்கு என்பவற்றினை ஓரளவுக்கு எதிர்வு கூற முடியும். ஆனால் அனைவரும் நினைப்பது போல், வானிலை மற்றும் கால நிலை நிகழ்வுகள் எதிர்வு கூறப்பட்டால், அதன்படி நிச்சயமாக நடைபெற வேண்டும் என்ற விதி இல்லை. ஏனெனில் உலகளாவிய ரீதியிலான காலநிலை மாற்றமும், எதிர்வு கூறப்படும் இடத்தின் வளிமண்டல இயல்புகளும், ஏனைய இடங்களின் வளிமண்டலக் குழப்பங்களும், கடல் – தரைப் பண்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்களும், இவ் எதிர்வு கூறலை மாற்றக்கூடிய வாய்ப்பு உண்டு.
இந்த வகையில் இந்தக் கட்டுரை கடல் மற்றும் தரைப் பகுதி வெப்ப வேறுபாடுகள், மழை வீழ்ச்சிப் போக்கு, வங்காள விரிகுடாவின் அமுக்க வேறுபாட்டு நிலைமைகள் என்பனவற்றை கருத்திற் கொண்டும், ஏனைய பொருளாதார – சமூகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டும் எதிர்வரும் 70 நாட்களுக்குள் (இக் கட்டுரை 2014 இல் எழுதப்பட்டது) வடமாகாணம் முழுவதும், அல்லது ஏதாவது ஒரு மாவட்டம், குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு, எதிர்கொள்ளவுள்ள வெள்ள அபாயத்தின் சாத்தியக் கூறுகளை விளக்குவதாக உள்ளது. அந்த வகையில் பின்வரும் விடயங்கள் வெள்ள அபாயத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
கால ரீதியான வாய்ப்புகள்
வடக்கு மாகாணத்தின் கடந்த முப்பது ஆண்டுகால வரலாற்றில் வெள்ளப் பெருக்கின் பாதிப்புகள் அதிகமாக இருந்துள்ளன. மாகாணத்தின் புவியியல் அமைப்பும் இதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கான பிரதான மூலமாக மழையே காணப்படுகின்றது. இலங்கையின் ஏனைய பகுதிகள் போல நிரந்தரமான ஆறுகள், வடக்கு மாகாணத்தில் காணப்படவில்லை. எனவே வெள்ளப் பெருக்கிற்கான பிரதான காரணம் மழையே ஆகும். வடக்கு மாகாணத்திற்கு பின்வரும் மூன்று வழிகளில் மழை கிடைக்கின்றது:
- வடகீழ்ப் பருவக்காற்று
- மேற்காவுகை
- சூறாவளி, தாழமுக்கம்
வடக்கு மாகாணத்தின் ஆண்டுச் சராசரி மழைவீழ்ச்சியாக 1240 மி.மீ மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கால ரீதியாகவோ அல்லது இட ரீதியாகவோ சமமானதாகக் காணப்படவில்லை. கால ரீதியாக வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் 20 முதல் டிசம்பர் 10 வரையும், மார்ச் 20 முதல் ஏப்ரல் 20 வரையும் அதிக மழை கிடைக்கின்றது. இதனைவிட செப்ரெம்பரின் இறுதிப்பகுதி, யூலையின் நடுப்பகுதியிலும் மழை கிடைக்கின்றது. இதனைவிட அண்மைய 10 ஆண்டு காலத் தரவுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தின் ஆண்டுச் சராசரி மழை வீழ்ச்சியான 1240 மி.மீ இன் பெரும்பகுதி, வங்காள விரிகுடாவில் ஏற்படுகின்ற தாழமுக்கத்தினாலேயே கிடைக்கின்றது. அமுக்க வீழ்ச்சி, அதாவது சராசரி அமுக்கத்திலிருந்து எவ்வளவுக்கு குறைகின்றதோ, அதே அளவுக்கு வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கின்ற மழை வீழ்ச்சியிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது சில சமயங்களில் புயலாகவோ, சூறாவளியாகவோ விருத்தியடைந்தால், அதுவும் வடக்கு மாகாணத்தின் மழை வீழ்ச்சியில் செல்வாக்குச் செலுத்துவதனைக் காணலாம். வங்காள விரிகுடாவில் ஏற்படுகின்ற தாழமுக்க வேறுபாடுகளினால், வடக்கு மாகாணத்திற்கு, மொத்த மழை வீழ்ச்சியில் 90 சதவீதத்திற்கும் மேல் மழை கிடைக்கின்றது எனலாம்.
வடமாகாணம், இரண்டாவது இடைப் பருவக்காற்றுக் காலத்திலும் வடகீழ்ப் பருவக்காற்று காலத்திலும், வங்காள விரிகுடாவில் ஏற்படுகின்ற வளியமுக்க குறைவின் விளைவான தாழமுக்கத்தின் காரணமாக மழையைப் பெறுகின்றது. தாழமுக்கம் ஒன்று விருத்தியாவதற்கு தேவையான மிக முக்கியமான காரணிகளில் வெப்பநிலையும் ஒன்றாகும். ஒரு இடத்தின் வெப்பநிலையில் ஏற்படுகின்ற அதிகரிப்பின் விளைவாக, அவ்விடத்தில் வளியானது விரிவடைந்து, தாழமுக்கம் ஒன்று உருவாகின்றது. புவியைப் பொறுத்தவரை, மாறன் மண்டலம் வரைக்கும், உயரம் கூட, வெப்பம் குறைவடையும்; அமுக்கமும் குறைவடையும். உலகம் முழுவதிலும் கடல்மட்ட உயரமான 0.00 m இல், வளியமுக்கமானது 101.3 Pa ஆகவே காணப்படும். இதற்குரிய சராசரி வெப்பநிலையும் 15°C ஆகும். ஆனால் உயரத்தில் எவ்வித மாற்றமும் இல்லாது, வெப்பநிலையில் ஏற்படுகின்ற மாற்றம், சடுதியான வளியமுக்க மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதியிலிருந்து வங்காள விரிகுடாவின் வளி வெப்பநிலை 27°C என்ற சராசரி அளவிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வெப்பநிலை, தாழமுக்கம் ஒன்று கடற்பகுதியில் உருவாகுவதற்கு தேவையான அளவு ஆகும். மேலும், வடகீழ்ப் பருவக்காற்று மூலம் கொண்டு வரப்படும் வெப்பநிலையும், புவி மற்றும் வளிமண்டலத்தினால் வெளியிடப்படும் நெட்டலை கதிர் வீச்சும், வளிமண்டலத்திற்குள் சுழற்சி முறையில் பரிமாற்றப்படும் மறைவெப்பமும், தாழமுக்க உருவாக்கத்தினை தூண்டுகின்றன. கடந்த பல தசாப்தங்களாக, வடக்கு மாகாணத்தின் மழை வீழ்ச்சியைத் தீர்மானிப்பதில், வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கக் காலப் பகுதிகளிலேயே வடமாகாணம் வெள்ள அனர்த்தத்தை எதிர் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது (அட்டவணை 11.1).
கடந்த 100 ஆண்டுகளின் சராசரிகளின் அடிப்படையில், இந்த இரண்டு பருவங்களின் போதும், வங்காள விரிகுடாவில் 6 – 9 வரையான தாழமுக்கங்கள் ஏற்படுவதுண்டு. எனினும் நவம்பர் 20 தொடக்கம், அடுத்த ஆண்டின் ஜனவரி 20 வரையான காலப்பகுதியில், இந்த 09 தாழமுக்கங்களில் ஆகக் குறைந்தது 5 தாழமுக்கங்கள் ஏற்படுவதுண்டு. இதனால் தான் வடமாகாணம் தன்னுடைய மொத்த மழைவீழ்ச்சியில் (1250 மி.மீ.) கிட்டத்தட்ட 750 மி.மீ. இனை இக் காலப்பகுதியில் பெற்றுக்கொள்கின்றது. இந்த 2014 ஆம் ஆண்டின் இரண்டாவது இடைப்பருவத்தில் 02 தாழமுக்கங்கள் வங்கக் கடலில் உருவாகியுள்ளன. அதன் மூலம் வடமாகாணம் 300 மி.மீ. கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெற்றுள்ளது. எனினும் அடுத்து வரும் 70 நாட்களுக்குள் ஆகக் குறைந்தது 03 தாழமுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகக் குறைந்தது 02 தாழமுக்கங்கள் ஏற்பட்டாலே, வடமாகாணம் சராசரியாக 350 மி.மீ. மழை வீழ்ச்சியைப் பெறும். ஏற்கனவே 90% மழை வீழ்ச்சியைப் பெற்ற வடமாகாணத்திற்கு, இந்த 350 மி.மீ. மழை வீழ்ச்சி வெள்ள அனர்த்தத்தினை உருவாக்கப் போதுமானதாகும்.
வடக்கு மாகாணத்தில் மழைக்கால நாட்கள் என்பது மிகக் குறைவாகும். இது 41 நாட்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் மொத்த மழை வீழ்ச்சியில் 85% இற்கும் அதிகமான பங்கு, 10 அல்லது 12 நாட்களுக்குள்ளேயே கிடைத்துவிடுகின்றது. குறுகிய நாட்களுக்குள் கிடைத்துவிடுகின்ற அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. மண்ணின் ஊடுபுகவிடும் அளவுக்கு (infiltration capacity) அதிகமான மழைவீழ்ச்சியும், போதிய ஒழுங்கான வெள்ள வடிகால் முகாமைத்துவம் இல்லாத காரணத்தினாலும், கிடைக்கின்ற அதிகளவான மழை வீழ்ச்சி வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துகின்றது. வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தக்கூடிய கன மழை வீழ்ச்சிக்குரிய காலமாக, பெரும்பாலும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலம் காணப்படுகின்றது. இதனைவிட, மார்ச் 18 தொடக்கம் மார்ச் 30 வரையான காலத்தையும் குறிப்பிடலாம்.
வடக்கு மாகாணத்தின் காலநிலை மாற்ற ஆய்வுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தினுடைய மழை நாட்களின் எண்ணிக்கை, கணிசமான அளவு குறைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், நிகழ்கின்ற காலநிலைக் காலத்தில் மழை நாட்களில் எண்ணிக்கை சராசரியாக 42 ஆகவே காணப்படுகின்றது. அதேவேளை, ஆண்டு மொத்த மழை வீழ்ச்சியின் அளவில், அவ்வளவு பெரிய வேறுபாடுகள் கண்டறியப்படவில்லை. எனவே ஆண்டு மொத்த மழை வீழ்ச்சியின் அளவுகளில் எத்தகைய மாற்றமும் ஏற்படாது, மழை நாட்களின் எண்ணிக்கை குறைவடைகின்றமை, ஒரு நாளுக்கான செறிவை அதிகரித்து இருக்கின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மொத்த மழை வீழச்சியில் 40% அளவு எட்டு நாட்களுக்குள்ளேயே கிடைத்து விடுகின்றது. சில சந்தர்ப்பங்களில் வங்காள விரிகுடாவில் ஏற்படுகின்ற தாழமுக்க வேறுபாடுகளின் காரணமாக, குறிப்பிட்ட சில நாட்களுக்குள் கிடைக்கின்ற கனமழை, வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்திவிடுகின்றது. தொடர்ச்சியாக ஓரளவுக்கு மழை கிடைத்து, அதன் பின்னர் ஒரு நாளைக்கு 100 மில்லி மீற்றர் என்ற அளவில் மழை கிடைத்தால், அது ஒரு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைகின்றது. தொடர்ச்சியாக மழை கிடைப்பதன் காரணமாக, நிலம் நிரம்பு நிலையை அடைந்ததை அடுத்துக் கிடைக்கின்ற 50 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை, வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில், குறிப்பாக குருநகர் – நாவாந்துறை – பாசையூர் போன்ற பிரதேசங்களிலும், மன்னார் தீவினுடைய பல பகுதிகளிலும், வெள்ள அனர்த்தங்களை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. எனவே வடக்கு மாகாணத்தினுடைய வெள்ள அனர்த்தத்தைத் தூண்டுவதில், குறுகிய நாளில் கிடைக்கின்ற, அதாவது சில மணி நேரங்களில் கிடைக்கின்ற அதிக கனமழை பெரும் பங்காற்றுகின்றது எனலாம். ஆனால், இக் காலத்தில் மட்டுமே வடக்கு மாகாணத்தில் வெள்ளப் பெருக்கிற்கான வாய்ப்புள்ளது எனக் கருத முடியாது. ஏனெனில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்படுகின்ற காலங்களிலும், அதன் வீரியத்தைப் பொறுத்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய கோட்டிற்கு சூரியன் உச்சம் கொடுக்கும் காலப் பகுதிகளில் கிடைக்கும் நேரடியான கதிர்வீச்சின் மூலம் பெறப்படும் அதிக வெப்பம், வங்காள விரிகுடாவில் தாழமுக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனைவிட அயன இடை ஒருங்கல் வலயத்தின் நகர்ச்சி (Movement of the Intertropical Convergence Zone – ITCZ), அருவித்தாரை சுற்றோட்டம் (Jet stream), பருவக்காற்றின் உடைவு (break of the monsoon), பருவக்காற்றின் பின்வாங்குகை (Retreat of the monsoon) போன்ற காலத்திலும் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டு வடக்கு மாகாணத்திற்கு அதிக மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனினும் வடக்கு மாகாணத்தின் கடந்த கால வரலாற்றில் (தரவுகளின் படி), நவம்பரின் 12 ஆம் திகதிக்குப் பின்னரும் (நவம்பர் 12 – 29), மார்ச்சின் பிற்பகுதியிலுமே அதிக மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்று, வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.
இட ரீதியிலான காரணங்கள்
வடக்கு மாகாணத்தில் இயற்கை அனர்த்தங்களை தூண்டுவதில், தரை உயரம் கணிசமான அளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. வடக்கு மாகாணத்தினுடைய மொத்த நிலப்பரப்பில் 37% பகுதி கடலில் இருந்து 10 மீற்றருக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது. ஒப்பீட்டளவில், தட்டையான நிலப்பரப்பை கொண்டதான வடக்கு மாகாணத்தின் தரை உயரத்தன்மை, கடுமையான மழை வீழ்ச்சியின் காரணமாக பல பிரதேசங்களின் வெள்ள அனர்த்தத்தைத் தூண்டுவதை அவதானிக்கலாம் (படம் 11.2, 11.3, மற்றும் 11.4). அந்த அடிப்படையில், மன்னார் மாவட்டமும், யாழ்ப்பாணக் குடா நாட்டின் நகரை அண்மித்த பகுதிகளும், ஏனைய பிரதேசங்களின் கடல் நீரேரிகளை அண்மித்த பகுதிகளும், தரை உயரம் குறைவான பிரதேசங்களாக உள்ளமையால், கன மழைக் காலங்களின் பொழுது வெள்ள அனர்த்தப் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. பொதுவாக தாழ்நிலப் பிரதேசங்கள் ஆண்டு தோறும் வடகீழ்ப் பருவக் காற்றின் உச்சக் காலப் பகுதியில், வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வதனை அறிந்து கொள்ள முடியும்.
படம் 11.2. 1992 முதல் 2002 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் வெள்ள அனர்த்தங்களின் இட ரீதியிலான பரம்பல் பாங்கு
படம் 11.3. 2002 முதல் 2012 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் வெள்ள அனர்த்தங்களின் இட ரீதியிலான பரம்பல் பாங்கு
படம் 11.4. 2012 முதல் 2022 வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் வெள்ள அனர்த்தங்களின் இட ரீதியிலான பரம்பல் பாங்கு
படம் 11.5. கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்த வாய்ப்புள்ள இடங்கள்
வடக்கு மாகாணத்தினுடைய கடல் நீரேரிகளை அண்மித்த பிரதேசங்களிலும், ஆற்று வடிநிலங்களை அண்மித்த பிரதேசங்களிலும், சமவெளிகளை அண்மித்த பிரதேசங்களிலும், மேலும் சில குறிப்பிட்ட தாழ்நிலப் பிரதேசங்களிலும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில், யாழ்ப்பாணத்தின் (படம் 11.7) நகரப் பகுதிகள், உப்பாறு கடல் நீரேரி, தொண்டமானாறு கடல் நீரேரி, யாழ்ப்பாணக் கடல் நீரேரியை அண்மித்த பிரதேசங்கள், கிளிநொச்சியில் (படம் 11.5) ஆனையிறவு கடல் நீரேரி, மண்டைக்கல்லாறு கழிமுகப் பகுதி, தேராவிலாறுக் கழிமுகப் பகுதி, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதி, முல்லைத்தீவு மாவட்டத்தில் (படம் 11.6) கொக்கிளாய் கடல் நீரேரி, நந்திக் கடல் நீரேரி, பேராறு வடிநிலப் பிரதேசம், கனகராயனாற்று மத்திய ஆற்று வடிநிலப் பிரதேசம் (ஆற்றங்கரைகளிலும்), பாலியாற்றங்கரைப் பகுதி, மன்னார் மாவட்டத்தில் (படம் 11.8) மன்னார் கடல் நீரேரியை அண்மித்த பகுதி, மன்னார் தீவின் கரையோரப் பகுதி, பாலியாற்றுக் கழிமுகப் பகுதி, அருவி ஆற்று கழிமுகப் பகுதி (குறிப்பாக அரிப்பு, குஞ்சுக்குளம் உட்பட்ட கீழ்ப் பிரதேசங்கள்) பறங்கியாற்றின் கழிமுகப் பகுதி, வவுனியா மாவட்டத்தில் பாவற்குளத்தின் நீரேந்துப் பிரதேசம், கனகராயன் ஆற்றின் உற்பத்திப் பிரதேசம், பாலியாற்றின் உற்பத்திப் பிரதேசம் போன்ற இடங்களில் அதிக அளவிலான வெள்ள அனர்த்தங்கள் நிகழ்வதைக் காணமுடிகின்றது.
இந்தப் பிரதேசங்களின் கடல் நீரேரிகளில் அல்லது ஆறுகளில், வெள்ள நீர்மட்டம் உயர்ந்து அதன் கரைகளை மேவி, அயலில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுவதாலும், அதிக மழை கிடைக்கும் காலங்களில் வெள்ளம் ஏற்படுகிறது. அந்த அடிப்படையில் கடந்த கால வரலாறுகளின் அடிப்படையில், இந்த ஆற்று வடிநில – ஆற்றுப் படுக்கை – ஆற்று முகத்துவாரப் பகுதிகளிலும், கடல் நீரேரிகளை அண்மித்த பகுதிகளிலுமே மிகக் கூடுதலான அளவு வெள்ளம் உண்டாகிறது.
இட ரீதியான வாய்ப்புகளைப் பார்க்கும் போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப்பகுதிகளில் ஏனைய மூன்று பகுதிகளுடன் ஒப்பிடும் போது குறைவான மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. இதனாலும், தீவுப்பகுதியின் புவியியல் காரணமாகவும் (அதாவது ஒவ்வொரு தீவும் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளதாலும், குடியிருப்புகள் நெருக்கமற்றுக் காணப்படுவதனாலும், கட்டுமான அமைப்புகள் குறைவாக உள்ளமையாலும்), தீவுப் பகுதியில் வெள்ளப் பெருக்கிற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றது. எனினும், கடல் மட்ட உயர்வு காரணமாக ஏற்படும் வெள்ளப் பெருக்கு (இதுவரை இல்லை) சில சமயம் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
படம் 11.6. முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்த வாய்ப்புள்ள இடங்கள்
அதிக மழையினால் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் வடமராட்சியும் பாதிக்கப்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பாக, வடமராட்சியின் கீழ்ப் பகுதிகள், அதாவது கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள், அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொண்டமனாறு கடனீரேரி இப் பகுதியில் காணப்படுவதனால், மழைக் காலங்களில் நிரம்பும் மேலதிக நீர், குடியிருப்புகளுள் புகுந்து அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. கப்பூது, கரணவாய், அந்தணத்திடல், மண்டான், கரவெட்டி போன்ற பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வடமராட்சியின் மத்திய பகுதி ஏனைய பகுதிகளை விட ஓரளவுக்கு உயரம் கூடியதாகக் காணப்பட்டாலும், இடையிடையே உள்ள தாழ்நிலங்களில், அதிக மழையின் போது நீர் தேங்கி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தென்மராட்சியினைப் பொறுத்தவரை, உப்பாற்றின் மேற்குக் கரையில் மறவன்புலவு, கைதடி, நாவற்குழி, மட்டுவில், சரசாலை போன்ற பிரதேசங்கள் காணப்படுகின்றன. இதனால் உப்பாற்றில் நிரம்பும் வெள்ளம் அருகில் உள்ள வயற் பகுதிகளுக்குள் சென்று பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. தாழ் நிலமாக உள்ள மிருசுவிலுக்கும் உசனுக்கும் இடைப்பட்ட பகுதியிலும், சாவகச்சேரிக்கும் தச்சன் தோப்பிற்கும் இடைப்பட்ட பகுதியிலும், வெள்ளம் தேங்கி நின்று அருகிலிருக்கும் குடியிருப்புகளைப் பாதிக்கின்ற வாய்ப்புகள் காணப்படுவதாக பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிடுகின்றார்.
வலிகாமம், பெரிய நிலத் திணிவைக் கொண்டுள்ளது. இங்கு மாரி காலத்தில் தோன்றுகின்ற பருவகாலச் சிற்றாறுகள் காலப்போக்கில் வெள்ளப் பெருக்குகள் தோன்றுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணுகின்றன. குறிப்பாக வழுக்கையாற்றுக்கு அண்மையிலுள்ள பிரதேச செயலகங்களான சண்டிலிப்பாய், சங்கானை போன்றவற்றின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. நந்தாவில் பகுதியும் ஏனைய பகுதிகளை விட உயரம் குறைந்ததாக உள்ளமையினால் இங்கும் வெள்ள அபாயம் உள்ளது. உப்பாறு, தொண்டமனாறு போன்றவற்றினை தனது இரண்டு பக்க எல்லைகளாகக் கொண்டிருக்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலர் பிரிவின் இடைக்காடு, இளவாலை, அச்சுவேலி, வாதரவத்தை, நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், கல்வியங்காடு, இருபாலை போன்ற தாழ் நிலங்களிலும், மழைக்காலத்தில் இவ்விரண்டு கடல் நீரேரிகளிலும் தேங்கும் மேலதிக நீர், குடியிருப்புகளுக்குள் புகுந்து வெள்ளப் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும்.
படம் 11.7. யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்த வாய்ப்புள்ள இடங்கள்
வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தில் மழைவீழ்ச்சி தொடர்ச்சியாக கிடைக்கின்றமை, வெள்ள அனர்த்த நிலைமைகளைத் தூண்டுகின்ற மிக முக்கியமான காரணியாகும். வடமாகாணத்தில் ஏற்கனவே கிடைத்துள்ள மழைவீழ்ச்சியின் விளைவாக, நிலமானது நிரம்பு நிலையில் உள்ளது (Saturated). எனவே, தொடர்ந்து வரும் காலப் பகுதியில் (வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தின் நடுப் பகுதியிலும் பிற்பகுதியிலும்) கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது தரைக்கீழ் நீராகச் செல்லாது, மேற்பரப்பில் தேங்கி, வெள்ளத்தினை உருவாக்கக் கூடிய சூழல் ஏற்படும். இந்த நிலையானது வடமாகாணத்தின் கல்லியல் (Geology) மற்றும் நில முகாமைத்துவ நடவடிக்கைகள் (Land Management Activities) என்பவற்றுடன் தொடர்புபட்டு இடத்துக்கிடம் வேறுபட்டாலும், நில அமைப்பின் அடிப்படையில் பெரும்பாலான உள்நாட்டுத் தாழ் நிலங்கள் (Inter lowlands) நீர் நிரம்பிய நிலையில் உள்ளமையினால், வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
படம் 11.8. மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்த வாய்ப்புள்ள இடங்கள்
இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால்கள் தடைப்பட்டமையும், தூர்ந்து போய் உள்ளமையும், துண்டாடப்பட்டமையும் வடக்கு மாகாணத்தில் வெள்ள நிலமை தூண்டப்பட முக்கிய காரணிகளாகும். வடக்கு மாகாணத்தில், மழை நீர் குளங்களுக்கு அல்லது நீர்த் தேக்கங்களுக்கு வழிந்து செல்லக்கூடிய வகையிலான பல்வேறு வகைப்பட்ட இயற்கையான மற்றும் செயற்கையான வடிநில அமைப்புகள் காணப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட புகையிரதப் பாதை நிர்மாணம், பெருந்தெருக்கள் நிர்மாணம், கட்டிட அமைப்புக்களின் நிர்மாணம் போன்ற பல்வேறு வகைப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக வடக்கு மாகாணத்தினுடைய இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால் அமைப்புகள் சிதைந்து போயுள்ளமையைக் காண முடிகின்றது. இதனால், கனமழை கிடைக்கின்ற காலப் பகுதிகளில், நீர் வடிந்து போக இடமில்லாததால், தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதைக் காண முடிகின்றது. அகழ்வுச் செயற்பாடுகள் மற்றும் கட்டுமானச் செயற்பாடுகளின் காரணமாக, குளங்களுக்கு அல்லது நீர்த் தேக்கங்களுக்குச் செல்ல வேண்டிய நீர், குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்குவதை அவதானிக்க முடிகிறது.
தொடரும்.