அபிவிருத்திக் காரணங்கள்
வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் குறிப்பாக 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பூரணப்படுத்தப்பட்ட பல்வேறு வகையிலான வீதி சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களான ‘கார்பெட்’ தெருக்களின் நிர்மாணம், உள்ளூர் வீதி அமைப்புகள், புகையிரத வீதி நிர்மாணம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக வடிகால் பாங்குகள் குழப்பமடைந்து பல பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலைமைகள் உருவாக்கப்பட்டு இருப்பதைக் காண முடிகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டினுடைய புகையிரதப் பாதைகள் மழைநீரைக் கடத்தும் அல்லது மடை மாற்றும் பொறிமுறைகளைக் கொண்டு அமைக்கப்படவில்லை. உதாரணமாக அரியாலையிலிருந்து கோண்டாவில் வரையான புகையிரதப் பாதையில், 4 இடங்களில் மட்டுமே புகையிரதப் பாதையின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு நீர் செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. கனமழைக் காலத்தில் தேங்குகின்ற நீரை கடத்துவதற்கு போதுமான அமைப்புகளாகவும் இவை காணப்படவில்லை. இன்னொரு வகையில் கூறுவதானால், குளக்கட்டு ஒன்றை அமைத்தது போன்ற நிலைமையிலேயே புகையிரதப் பாதை நிர்மாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக செறிவான மழை கிடைக்கின்ற காலப் பகுதிகளில் வெள்ளநீர் வடிகால் அமைப்புகளுடன் கலந்து கடலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலையில், அனர்த்தத்தை ஏற்படுத்துவதைக் காணமுடிகின்றது.
வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வுச் செயற்பாடுகளின் காரணமாகவும் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆற்றங்கரையோரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வின் காரணமாகவும், இயற்கையாக வெள்ள நீர் வடிந்து செல்வதற்கான பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற மண், கல் மற்றும் கிரவல் அகழ்வுகளும், வடக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தங்களை அதிகரித்துள்ளன. ஆற்றங்கரையோரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அகழ்வுச் செயற்பாடுகளின் காரணமாக ஆற்றுச் சமவெளியினுடைய எல்லை விரிவாக்கப்பட்டு, அந்த ஆற்றினுடைய நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்துவதைக் காண முடிகின்றது. குறிப்பாக பாலியாறு, பறங்கியாறு, கனகராயன் ஆறு, பேராறு பகுதிகளில் இந்த நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக பல்வேறு பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதனைக் காண முடிகின்றது. அகழ்வுச் செயற்பாடுகளின் காரணமாக இயற்கையான வடிகால் அமைப்புகளின் தன்மை குழப்பம் அடைந்து குறிப்பிட்ட பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்கள் நிகழ்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
2009 இன் பின்னர் பல்வேறு வகைப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகள் புவியியல் நிலைமைகளை (மண், தரைத்தோற்றம் மற்றும் காலநிலை) கருத்திற் கொள்ளாமலே மேற்கொள்ளப்பட்டன. வடமாகாணத்தில் பருவ ரீதியாகக் கிடைக்கும் மழைவீழ்ச்சியின் மூலம் பெறப்படும் நீரானது குளங்களையோ அல்லது ஆறுகளையோ அல்லது கடலையோ சென்றடைவதற்கு இயற்கையான பல வடிகாலமைப்புத் தொகுதிகள் வடமாகாணத்தில் காணப்பட்டன. மழைவீழ்ச்சி மூலம் கிடைக்கும் நீரானது இவ் வடிகால்கள் மூலம் குளங்களை, ஆறுகளை, கடலைச் சென்றடைவதுண்டு. இதனால் வடமாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள அபாயம் தவிர்க்கப்பட்டடு வந்தது. ஆனால் 2009 இற்குப் பின்னர் வடமாகாணத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், மதில்கள், அமைக்கப்பட்ட போக்குவரத்துப் பாதைகள் (பெருந்தெரு மற்றும் புகையிரதப் பாதை) போன்றன இந்த இயற்கையான வடிகாலமைப்பினை பாதித்துள்ளன; அல்லது இயற்கையான வடிகால்களுக்கு தடையேற்படுத்தியுள்ளன. இதனால் மழை நீரானது தடுக்கப்பட்டு அப்பகுதியில் வெள்ள அனர்த்தங்கள் உருவாக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் கட்டுமானத் தேவைகளின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட தரை உயரமாக்கல் செயற்பாட்டினாலும் வெள்ளநீர் வடிந்தோடக் கூடிய வாய்ப்புகள் குறைவடைந்துள்ளன.
பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள்
இயற்கை அனர்த்தங்களைத் தடுக்க முடியாது. ஆனால், இயற்கை அனர்த்தப் பாதிப்புகளை உரிய நடவடிக்கைகளினூடாகக் குறைக்க முடியும். இத்தகைய தடுப்பு நடவடிக்கைகளை 03 பிரிவுகளாக வகைப்படுத்தலாம்:
- வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்.
- வெள்ளபெருக்கின் போது கடைப்பிடிக்க வேண்டியவை.
- வெள்ளப் பெருக்கின் பின்னர் செய்ய வேண்டியவை.
- வெள்ளப் பெருக்கின் முன்னரான நடவடிக்கைகள்
வெள்ளப் பெருக்கின் முன்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
வெள்ளத் தடுப்புச் சுவர்களை அமைத்தல்: கடல் நீரேரிகள், பெரிய வெள்ள வாய்க்கால்களில் மழைக் காலங்களின் போது நிரம்புகின்ற மேலதிக நீர் குடியிருப்புகளுக்குச் சென்று பாதிப்பினை ஏற்படுத்தாத வண்ணம், தடுப்புச் சுவர்கள், அணைகள் என்பவற்றினை அமைத்தல் வேண்டும். இதன் மூலம், நீரேரிகளின் மேலதிக நீர், குடியிருப்புக்குள் சென்று பாதிப்பினை ஏற்படுத்துவதனைக் குறைக்கலாம்.
வெள்ளப்பெருக்குக் காலங்களை அறிந்து கொள்ளல்: வடக்கு மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்குச் சாதகமான நிலைமைகளை அறிந்து கொள்ளல் வேண்டும். சூறாவளி, புயல், தாழமுக்கம் மற்றும் அதிக மழைக் காலங்களைப் பற்றி அறிந்து, அத்தகைய சந்தர்ப்பம் ஏற்படுவதன் மூலம் உருவாகும் ஆபத்துகள் பற்றி விழிப்புணர்வுடன் இருந்தல் அவசியமாகும்.
வடிகால்களைச் சீராக்குதல்: வட மாகாணத்தில் வெள்ளம் ஏற்படக் கூடிய காலங்களுக்கு முன்னதாக மாகாணத்தின் சிறிய, பெரிய வடிகால்களை துப்பரவு செய்து, வெள்ளம் வடிந்தோடும் வகையில் அவற்றைப் புனரமைப்பதுடன், தூர்ந்து போயுள்ள குளங்கள், குட்டைகளைத் தூர்வாரி அவற்றின் நீர்க் கொள்ளளவை அதிகரித்துக் கொள்ளுதல் வேண்டும்.
தாவரங்களின் விதானங்களின் அளவைக் குறைத்தல்: வெள்ளம் ஏற்படக்கூடிய காலங்களுக்கு முன்பதாக தாவரங்களின் (குறிப்பாகப் பெரிய மரங்கள்) விதானங்களின் அளவைக் குறைத்துக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் வடக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பின் பிரகாரம் வங்காள விரிகுடாவில் ஏற்படும் அமுக்கக் குறைவே (தாழழுக்கம், புயல், சூறாவளி) வெள்ளப் பெருக்கு ஏற்பட பிரதான காரணமாக இருப்பதனால், அக் காலத்தில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும். தாவரங்களின் விதானம் அதிகமாக இருக்கும் போது அவை காற்றின் வேகத்தால் முறிந்தோ, அல்லது வேருடன் சாய்ந்தோ விழுந்து ஆபத்தினை ஏற்படுத்தும். எனவே தாவரங்களின் விதானங்களை (Canopy) குறைத்து அவை வீழ்வதைத் தடுக்கலாம்.
வெள்ள அபாயப் படம் (Flood hazard map) ஒன்றினை அமைத்தல்: வடக்கு மாகாணத்தின் வெள்ள அபாயப் படம் ஒன்றினைத் தயாரித்து, வெள்ள நீர் தேங்கக்கூடிய பகுதிகளையும், நீர் தேங்காத பகுதிகளையும் அடையாளப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும். இதன் மூலம் கொள்ள அனர்த்த காலங்களின் போது மக்களை அனர்த்தப் பகுதியிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்த முடியும்.
திட்டமிட்ட கட்டுமானப் பணிகள்: வடக்கு மாகாணத்தில் போருக்கு பின்னரான புனரமைப்பு வேலைகள் தீவிரம் பெற்றுள்ளன. ஆனால் இவற்றில் பல, முறையான அனுமதியின்றியும், திட்டமிடப்படாமலும் அமைக்கப்படுகின்றன. நீர் வடிந்தோடும் தாழ்வான நிலங்களில் கட்டடங்களும், மதில்களும் அமைக்கப்படுகின்றன. இத்தகைய தடைகள், குறித்த பகுதியில் வெள்ளம் தேங்குவதற்கு உதவுகின்றன. எனவே இத்தகைய கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது வெள்ளம் வடிந்தோடுவதற்கான மாற்று வழிகளை அமைத்தல் வேண்டும். உதாரணமாக வீட்டு மதில்களை அமைக்கும் போது, நீர் வடிந்தோடக் கூடிய பகுதியை அடையாளம் கண்டு, அங்கு நீர் வழிந்தோடக்கூடிய துளை இட்டு, மதில்களை அமைத்தல் வேண்டும்.
குறுக்கு அணைகள் அமைத்தல்: வடக்கு மாகாணத்தின் உப்பாறு, கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், நாயாறு, மன்னார், தொண்டமனாறுக் கடல் நீரேரிகளிலும், கடற்கரைப் பகுதிகளிலும், நீர் குடியிருப்புகளுக்குள் உட்புகும் பகுதிகளை அடையாளம் கண்டு அப்பகுதியில் குறுக்கு அணைகளை அமைத்தல் வேண்டும்.
அனர்த்த காலங்களில் எடுத்துச் செல்ல வேண்டிய பை: எத்தகைய அனர்த்த காலங்களிலும் எழுத்துச் செல்ல வேண்டிய பை ஒன்றினைத் தயாராக வைத்திருத்தல் வேண்டும். இதனுள் முக்கியமான ஆவணங்களையும், மிகப் பெறுமதியான (நகை, பணம்) பொருட்களையும் வைத்திருத்தல் வேண்டும். அனர்த்தம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட பின்னர் காலதாமதம் இன்றி, இதனை எடுத்துச் செல்லும் வகையில் இது இருத்தல் சிறப்பானது.
அனர்த்த மீட்புக் குழுக்களை உருவாக்கல்: ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவு தோறும் அனர்த்த மீட்புக் குழுக்களை உருவாக்குதல் வேண்டும். இக் குழுவில் அர்பணிப்பும், சேவை மனப்பான்மையும் கொண்ட இளைஞர்களை உள்ளீர்த்து, அவர்களுக்கு அனர்த்த காலத்தில் செயற்பட வேண்டிய முறைகள் பற்றி போதிய பயிற்சிகளை வழங்கி, அவர்களை அனர்த்த காலச் சேவைக்காக எப்போதும் தயாராக வைத்திருத்தல் வேண்டும். இதனைவிட ஒவ்வொரு பிரதேச செயலர், கிராம சேவகர் பிரிவுகளிலும் அனர்த்த மீட்புக்கு ஒருங்கிணைக்கக்கூடிய வகையில் குழு ஒன்றினை அமைத்துச் செயற்படல் வேண்டும். இதற்குப் பொறுப்பாக பிரதேச செயலகத்தின் நிறைவேற்று உத்தியோகத்தரில் ஒருவரினை நியமிக்கலாம். 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம், கிராம சேவகர் பிரிவு தோறும் இக் குழுவினை அமைக்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிராம சேவகர் பிரிவுகள் தோறும் அனர்த்த காலத்தின் போது மக்களைத் தங்க வைப்பதற்கான புகலிடங்களை அமைத்தல் வேண்டும். இதன் மூலம் எத்தகைய அனர்த்தக் காலத்திலும் மக்களைத் தக்கவைக்கலாம்.
நவீன முன்னெச்சரிக்கை நிலையங்களை அமைத்தல்: யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் அனர்த்த முன்னெச்சரிக்கைக் கோபுரங்களை அமைத்தல்.
- வெள்ள அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்
- அனர்த்தம் பற்றிய நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து, அதற்கேற்பச் செயற்படல் வேண்டும். இதற்காக வானொலி மற்றும் செய்தி ஊடகங்களினூடாகத் தகவல்களை அறிந்து கொள்ளல் வேண்டும்.
- வெள்ளம் குறிப்பிட்ட உயரத்துக்கு வருவதற்கு முன்னர் நீர் உட்புகுந்தால் பாதிக்கப்படக்கூடிய பொருட்களை உயரமான இடத்துக்குக் கொண்டு செல்லல் வேண்டும்.
- குழந்தைகளையும் முதியோர்களையும் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்துதல் வேண்டும். வெள்ள நீர்மட்டம் அதிகரிப்பதற்கிடையில் மாற்று வலுவுள்ளோரையும், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோரினையும் வெள்ள ஆபத்திலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்துதல் வேண்டும்.
- வெள்ள அனர்த்தத்தின் போது இயலுமான வரையில் மின்சார சாதனங்களின் பாவனைகளைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
- தேவைப்படும் சந்தர்ப்பத்தில் பிரதேசத்தில் உள்ள அனர்த்த மீட்புக் குழுக்களைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெறலாம்.
- வெள்ள அனர்த்தத்தின் போது வெள்ள அனர்த்தப் பகுதிகளிலிருந்து இயலுமான வரை விலகியிருத்தல் நன்மை பயக்கும். எனினும் வெள்ள அனர்த்தப் பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு நகர்வதற்கு, பாதுகாப்பான பாதைகளைத் தெரிந்து அதனூடாகவே நகருதல் வேண்டும்.
3. வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நடவடிக்கைகள்
பொதுவாக இயற்கை அனர்த்தத்தின் பின்னர், தொற்றுநோய்களினால் பலர் இறந்திருக்கின்றனர். இத்தகைய பாதிப்புகளில் இருந்து பாதுகாப்புப் பெற பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுதல் பொருத்தமானதாக இருக்கும்:
- உரிய அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களைவிட்டு, வீடுகளுக்குத் திரும்பக் கூடாது.
- குடிநீர் தொடர்பில் அதிக கவனம் எடுத்தல் வேண்டும். சுத்தமான குடிநீரைப் பெறுவதுடன், குடிநீர் பெறும் இடத்தினையும் துப்புரவாக வைத்திருத்தல் வேண்டும்.
- பாதுகாப்பானவை என்று தெரிந்த பின்னரே, உணவுப் பொருட்களை உட்கொள்ளல் வேண்டும்.
- மலசலகூடம், மற்றும் வீட்டுச் சூழலை துப்புரவாகவும், கழிவுகள் சேராவண்ணமும் பேணுதல் வேண்டும்.
- பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர், பொது மருத்துவ மாது போன்றோரின் ஆலோசனையுடன் தொற்றுநோய்த் தடுப்பு முறைகளைக் கையாளுதல் வேண்டும்.
- பிரதேசத்தின் மின்சாரம், தொலைத் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக பொது மக்கள் ஒத்துழைப்பும், உதவிகளும் புரிந்து இயன்றளவு விரைவில் அவற்றை மேம்படுத்தி மீளமைத்தல் வேண்டும்.
- அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
இயற்கை அனர்த்த முகாமைத்துவத்தில் குறைவாக்கல் வட்டமும் முக்கியமான ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. குறைவாக்கல் வட்டம் என்பது தயார்ப்படுத்தல் (Preparedness), பொறுப்பெடுத்தல் (Response), மீளமைத்தல் (Recovery), குறைத்தல் (Mitigation) என்னும் நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது.
குறைவாக்கல் வட்டத்தில் தயார்ப்படுத்தல் எத்தகைய அனர்த்தம் ஏற்படும் போதும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகத் தயார்ப்படுத்துவதைக் குறிக்கும். தயார்ப்படுத்தல் என்பது அனர்த்தம் ஒன்றின் போது மக்களை வெளியேற்றல், பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைத்தல், தேவையான வசதிகளை மேற்கொள்ளல், மீள் வாழ்க்கைக்குத் திரும்பும் வரை அவ் இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் என்பவற்றைக் குறிக்கும். பொறுப்பெடுத்தல் (Response) என்பது அனர்த்தம் ஒன்றின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு, நிவாரண மற்றும் புனர்வாழ்வு – புனரமைப்பு முறைகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு தனிநபரும், அமைப்புக்களும் (அரசு, அரச சார்பற்ற) பொறுப்பெடுப்பதனைக் குறிக்கும். பொறுப்பெடுத்தல் மூலம் ஒவ்வொரு துறைசார்ந்த வேலைகளையும் ஒவ்வொரு அமைப்புகளும் பொறுப்பெடுக்கின்றன. இலங்கைப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையின்படி, இலங்கையில் தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும், அனர்த்த காலங்களின் போது பொறுப்பெடுக்க வேண்டிய அமைப்புகள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பின்வரும் அமைப்புகள் காணப்படுகின்றன:
- தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்.
- வடக்கு மாகாண சபை
- மாவட்டச் செயலகங்கள்
- மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள்
- பிரதேச செயலகம்
- மாநகர சபை, நகரசபை, பிரதேச சபை போன்ற உள்ளூராட்சி அமைப்புகள்
- பொலிஸ்
- ஆயுதப்படையினர்
8.1 தரைப்படையினர்
8.2 விமானப்படையினர்
8.3 கடற்படையினர்
- சமூக நிறுவனங்கள்
- வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம்
- மின்சார சபை
- ஸ்ரீலங்கா ரெலிக்கொம்
- தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
- பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் பணிமனை
- சமூக சேவைகள் திணைக்களம்
மீளமைத்தல் என்பது அனர்த்தம் ஒன்றின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைத்தலைக் குறிக்கும். இது கல்வி, சுகாதாரம், போக்குரத்து, தொடர்பாடல், வாழ்வாதாரம் போன்ற அனைத்துத் துறைகளையும் மீளமைப்பதனைக் குறிக்கும்.
மேற்கூறிய தயார்ப்படுத்தல், பொறுப்பெடுத்தல், மீளமைத்தல் என்பவற்றின் ஒழுங்குமுறையான நடவடிக்கைகளின் ஊடாக அனர்த்தத்தினைக் குறைக்க முடியும் என்பதனை குறைத்தல் (Mitigation) என்பது குறிக்கின்றது. இவை ஒரு வட்டவடிவில் தொழிற்படுகின்றன. மேற்கூறிய நடவடிக்கைகளின் போது அவை பற்றிய மதிப்பீடும் முக்கியமானதாகும். இடர் மதிப்பீட்டினை பின்வரும் சமன்பாட்டின் மூலம் கணித்துக் கொள்ளலாம்.
Rh = h x rh
Rh = அழிவை ஏற்படுத்தக்கூடிய இடர் (Hazard Specific Risk)
h = இடர் நிகழும் சாத்தியப்பாடு (Probability)
rh = இடரால் ஏற்படும் தாக்க மட்டம் (Level of Impact of Specific Hazard)
இத்தகைய அபாய மதிப்பீடு, மீளமைத்தல் என்பதனுள் அடங்கும். இதன் மூலம் புனர்வாழ்வு, புணர்நிர்மாணம் போன்றவற்றை இலகுவாக மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ள அனர்த்தங்களின் போது மேற்படி குறைவாக்கல் வட்டமும், அபாய மதிப்பீடும் மிக முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. உலகின் பல நாடுகளில், அனர்த்த முகாமைத்துவத்தின் மேற்படி விடயங்களின் அவசியமும் முக்கியமும் வலியுறுத்தப்படுகின்றன.
வடக்கு மாகாணத்தின் அண்மைய 15 ஆண்டுகளை அதன் முன்னுள்ள 100 ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், கடந்த 15 ஆண்டுகளில் இயற்கை அனர்த்தங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன. யுத்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை அனர்த்தங்களின் அழிவுகளைக் குறைக்க நாம் முயலவேண்டும். இக் கட்டுரையின் முதல் பந்தியில் குறிப்பிட்டது போல, இயற்கை அனர்த்தங்களை நாம் தவிர்க்க முடியாது; ஆனால் அவற்றின் மூலம் ஏற்படும் அழிவுகளைக் குறைக்க முடியும். எனவே இதனை உணர்ந்து இயற்கை அனர்த்தம் ஒன்றை எதிர்கொள்வதற்கான வலுவுடன் இருக்க வேண்டியது தனிநபர்களினதும், சமூக, அரச அரச சார்பற்ற அமைப்புகளினதும் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை உணர்ந்து நாம் அனைவரும் விழிப்புடன் செயற்பட்டு அனர்த்தம் ஒன்றின் அழிவுகளைக் குறைத்துக் கொள்ளல் வேண்டும். இல்லாவிட்டால், இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் அழிவுகள் மோசமானதாக இருக்கும்.
தொடரும்.