மக்கள் மயப்பட்ட வைரவர் வழிபாடு
Arts
16 நிமிட வாசிப்பு

மக்கள் மயப்பட்ட வைரவர் வழிபாடு

April 14, 2024 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

அறிமுகம் 

இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவரை சிவனின் அம்சமாகவும் மகனாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவர் பிரமனின் தலையைக் கொய்தவராகவும், வானவரிடம் கபாலத்தில் இரத்தத்தைப் பெற்றவராகவும், அந்தகாசுரனை வதைத்தவராகவும் சிறுதொண்டர் நாயனாரிடத்துப் பிள்ளைக்கறி பெற்றவராகவும் கூறப்படுகிறார். உக்கிரப் போர்த் தெய்வமாகச் சுட்டப்படுகின்ற இவருக்கு சோதிட நூல்களால் கலக நாளாகக் குறிப்பிடப்படும் செவ்வாய்க்கிழமையே, குறிப்பாகத் தைமாத செவ்வாய்க்கிழமை, உகந்த நாளாகவும் சிவந்த செவ்வரத்தம்பூ உகந்த மலராகவும் பரணி நட்சத்திரம் (போருடன் தொடர்புடையது) உரிய நட்சத்திரமாகவும் கூறப்படுகிறது. 

vairavar with dog

புராணங்கள், இவரை “மஹா வைரவர், கால வைரவர், உக்கிர வைரவர், வடுகநாதர், சட்டைநாதர்” எனப் பலவாறு சித்தரிக்கின்றன. சிவ பராக்கியம் எனும் நூல் அஷ்ட வைரவர்களைக் குறிப்பிடுகிறது. இவ் வைரவரின் தோற்றப் பொலிவு பற்றிப் பல விடயங்கள் கூறப்படினும் பொதுவில் கைகளில் கபாலம், தண்டம், தமருகம், சூலம் என்பவற்றை ஏந்தியரவாகக் கூறப்படுகிறார். உக்கிரப் பார்வை, கோரப் பற்கள், சிலம்பு, சிங்கினி மாலை, பாம்பு போன்றவைகளுடன் கூர்மையான வாள், திரிசூலம், பாசம், அங்குசம், வச்சரம், அக்கினி, கதை, வில், அம்பு, தண்டம், கபாலம், சங்கு, சக்கரம், உலக்கை போன்றவற்றுடன் விளங்குபவராகவும் கூறப்படுகிறார். நாய் வாகனத்தை (தெய்வஞாளி, சுவனம்) உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார். சாதாரணமாக ஒரு மரத்தின் கீழ் திரிசூல வடிவில் இருப்பது முதல் சகல ஆலயங்களிலும் பரிவார தெய்வமாகவும், வைரவர் கோயிலில் கர்ப்பக் கிரக மூர்த்தியாகவும், வீடுகளிலே காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும், எல்லைத் தெய்வமாகவும் வைரவர் வழிபாடு இடம்பெற்று வருகின்றது. இங்கு வைரவர் வழிபாடானது பண்டைய ஐதீகம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடப்பட்டு வருகின்றது. 

ஈழத்தில் வைரவர் வழிபாடு

ஈழத்து நாட்டாரியல் வழிபாட்டில் முக்கிய காவல் தெய்வமாக வைரவர் காணப்படுகின்றார். முத்தலை சூலத்தை வழிபட்ட மக்கள் அதனை காலனித்துவ காலத்தில் அந்நியரின் மேல் உள்ள பயத்தின் நிமித்தம் தேவை ஏற்படும் பொழுது கிறிஸ்தவ சிலுவையாகவும் (இரு தலைகளையும் மடித்து) பாவித்தனர். இச்சூலத்தை திறந்த வெளிகளில் உள்ள வேம்பு, அரசு, நாவல், ஆல், புளி, மருது போன்ற மரங்களில் கீழ் குத்தி வைத்து வழிபட்டனர். இவையே பின்னர் வைரவராக மாறி உருவ வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்துள்ளது. ஈழத்தில் வைரவர் வழிபாடு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையாக நாட்டாரியல் தெய்வமாகவும், பெருந்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றது. ஆகமம் சாராத வைரவர் வழிபாட்டிலே வீடுகளில், கோயில்களில், பயிர்ச்செய்கை நிலங்களில், மயானங்களில் இடம்பெறும் வைரவர் வழிபாடுகள் முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றன. இத் தெய்வத்திற்கு மடை பரவுதல் – வடை மாலை சாத்துதல், பொங்கல், மிருகபலி போன்றன செய்து வழிபடும் மரபு இற்றைவரை காணப்படுகிறது. அத்தோடு வைரவருக்கு பிரதேசப் பண்பாட்டுக் கூறுகளுக்கு இணங்கவும் வழிபாடியற்றப்படுகிறது.

vairavar under tree

காவல் தெய்வங்களை காணிக்குள் வைத்து வழிபடும் முறை பொதுவாக எல்லாப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் ‘வைரவன் பந்தல்’ அமைத்து வழிபடும் முறை மட்டக்களப்பு பிரதேசத்தவரின் தனித்துவமான முறையாகும். வைரவர் வழிபாட்டின் போது ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற வகையில் வீட்டின் புறம்பாக, எதிர்ப்பக்கம் நோக்கிய வகையில் ‘வைரவர் பந்தல்கள்’ அமைக்கப்பட்டிருக்கும். நிரந்தரமாக அமைக்கும் பந்தலினைப் பலமான மரங்களினாலும், கற்களினாலும் வடிவமைப்பார்கள். தற்காலிக பந்தலினை வேம்பு மற்றும் பூவரசம் கம்பினை கொண்டு தட்டுப்பந்தல் வடிவில் அமைத்து தென்னம் ஓலைகளால் வேய்ந்து தென்னங் குருத்துக்களால் சுற்றி வளைத்து அலங்கரிப்பர். வீட்டில் உள்ள வைரவன் பந்தல்களிலே வருடாவருடம் குறித்த பரம்பரையினரை சேர்ந்தவர்களால் வைரவர் சடங்கானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது “வைரவருக்குச் செய்தல்‟ எனப்படும். வீடுகளில் தீய சக்திகளின் பார்வையினால் தமது குடும்பத்திற்கு எந்தவித கெடுதலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவும், தமது வீட்டையும் குடும்ப உறுப்பினர்களையும் வைரவர் காப்பார் எனும் நம்பிக்கையிலும், நோய் நீக்கம், நீண்ட ஆயுள், சந்ததி விருத்தி, தனம், தானியம், செல்வ விருத்தி ஏற்படுவதற்காகவும் பாரம்பரியமாக வைரவர் வழிபாடு இடம் பெறுகின்றது.

வழிபாட்டு முறைகள்

இங்கு பெரும்பாலும் ஆதி வைரவரை அழைத்தே சடங்கு நடாத்தப்படுகின்றது. சில இடங்களில், வீடுகளில் கல்யாண வைரவர், கொங்கை வைரவர், திரிசூல வைரவர், கபால வைரவர், நரசிங்க வைரவர் போன்றோரை அழைத்தும் சடங்கு நடாத்தப்படும். சடங்கு இடம்பெறுவதற்கு முன்னர் தீட்டுக்கள் இன்றி புனிதத் தன்மையைப் பேணும் பொருட்டும், தீய சக்திகளின் பார்வை விலகும் பொருட்டும், மஞ்சள் நீர் தெளித்து வீட்டைக் கழுவி சுத்தம் செய்து சமுத்திர நீர் போன்ற புனித தீர்த்த நீரைத் தெளித்து, வீடு வளவுகளை காவல் செய்து வீட்டினுள் சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றினால் புகையிட்டு வீட்டு முன் வாசலில் வேப்பமிலைப் பத்திரத்தினாலான தோரணம் கட்டுவர். வைரவர் உக்கிரமான தெய்வம் ஆகையால் இரவு வேளைகளிலே இச் சடங்கானது இப்பிரதேசங்களில் நடாத்தப்படுகின்றது. சில இடங்களில் இச் சடங்கு இடம்பெறும் நாள் அன்று “அம்மனுக்குச் செய்தல்” எனும் “சர்க்கரை அமுது படைத்தல்” படையல் சடங்கானது பகல் வேளையும், இரவு வேளைகளில் “பேச்சியம்மனுக்கு” “பள்ளயச்சடங்கும்” நடைபெறும் வழக்காறு உண்டு. இவ் வழக்காற்று முறைகளின் போது உற்றார் உறவினர்கள், அயலவர்கள் குறித்த குடும்பத்தினருடன் இணைந்து சடங்கிற்கான பங்களிப்பினை மேற்கொள்வார்கள். இவ் வேளை சமூகத்தினர் இடையே பரஸ்பர தொடர்பு, ஒற்றுமை முதலான விழுமியப் பண்புகள் விருத்தியடைகின்றன. 

vairavar statue

வீடுகளில் வைரவருக்குச் சிலை அமைத்து வழிபடும் மரபு காணப்படுவதில்லை. திரிசூலம் அல்லது இரட்டைத் திரிசூலம், கல், தென்னம்பாளை, கமுகம் பாளை, செவ்விளநீர், கருங்காலிப் பொல்லு (தண்டம்) என்பன வைரவர் குறியீடாக வைக்கப்பட்டு “மடை வைத்தல்” சிறப்பாக இடம் பெறுகின்றது. வீடுகளில் பூசை வழிபாடானது குறித்த பரம்பரையைச் சேர்ந்த ஒருவரினாலோ அல்லது பூசகரை அழைத்தோ இடம்பெறும். மட்டக்களப்பு தெய்வ வழிபாட்டு முறையில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேடமான மடைப் பொருட்கள் காணப்படுகின்றன. அரிசிமா ரொட்டி, தவிட்டு ரொட்டி, கஞ்சா ரொட்டி போன்ற ரொட்டி வகைகளும், செவ்விளநீர், கரும்பு, கதலி வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்ற நார்ப்பழ வகைகளும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், பாணக்கம், துள்ளுமா, உளுந்து வடை, பூக்கள், வெற்றிலை, பாக்கு, வில்வம் பத்திரம், வேப்பம் பத்திரம் என்பனவும் சிறப்பாக சிவப்பு நிற மலர்கள், கள்ளு, சாராயம் போன்றவையும் வைக்கப்பட்டு மடை அலங்கரிக்கப்படும். ஆதி வைரவரை அழைத்து சடங்கு செய்யும் சில வீடுகளில் கஞ்சா ரொட்டி, கள்ளு, சாராயம் போன்றவற்றை வழிபாட்டின் போது சேர்த்துக் கொள்வது குறைவு. 

ஆனால் ஏனைய சில வைரவ மூர்த்தங்களை அழைத்து வழிபாடு செய்கின்ற இல்லங்களில் மதுப் பொருட்கள் வைத்து வழிபடப்படும் மரபு காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் வைரவருக்கு தேன் வைத்து வழிபடப்பட்டிருந்த முறையே பிற்காலத்தில் மதுப்பொருட்களாக மாற்றமடைந்து இருக்கலாம். ரொட்டி செய்யப்படும் போது சில இடங்களில் தேங்காய்ப்பூ, உப்பு என்பன கலந்தும் சில இடங்களில் தனி மாவினாலும் செய்வர். மணி ஒலி எழுப்புதல், தீபம் காட்டுதல், உடுக்கை ஒலித்தல், வைரவ தோத்திரங்கள், காவியங்கள் பாடுதல் என்பவற்றோடு சில இல்லங்களில் வைரவர் உருக்கொண்டு வந்து கலையாடுதல், வாக்குச் சொல்லுதல் என்பனவும் இடம்பெறும். சடங்கு வழிபாடு நிறைவு பெற்றதும் தண்ணீர் தெளித்து மடை பிரிக்கப்பட்டு பிரசாதங்கள் பகிர்ந்து அளித்தலுடன் வீட்டுச் சடங்கு நிறைவுபெறும். 

வைரவர் சடங்கு வழிபாடுகளில் பொதுவாக மண்டபம் அமைத்தல், மண்டபம் காவல் பண்ணுதல், கும்பம் வைத்து மடைகள் வைத்தல், கலையாடுதல், தேவாதிகளை கட்டுக்கு வைத்து ஆட்டத்தை ஊக்குவித்தல், தேவாதிகளை யாரும் கட்டினால் வெட்டி ஆடுதல், காவியம் பாடுதல், பள்ளயம் அல்லது பலி கொடுத்தல், வழிபடுதல் முதலிய சடங்கு நிகழ்ச்சிகள் இடம்பெறும். வைரவர் சடங்கின் போது தெய்வம் ஆடுதலில் உடுக்கை, தவில், சிலம்பு, அம்மானைக் காய், சாட்டை போன்ற கருவிகள் பயன்படுத்தப்படும். இவ்வேளை வாக்குச் சொல்லுதல், தீய சக்திகளை விலக்குதல், கழிப்புச் சடங்கு, பலியிடுதல் போன்றவை இடம்பெறும். இங்கு பலியிடலுக்காக ஆடு, கோழி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இன்று பலியிடலின் மாற்றீடாக நீத்துப் பூசணிக்காய் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு வைரவருக்குரிய சிறப்பு வாய்ந்த தோத்திரம், காவியம், அகவல், தாலாட்டு என்பன பாடப்படுகின்ற வழக்கம் காணப்படுகின்றது. 

சுடலைக்கு அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவினர் சுடலை வைரவர் வழிபாட்டினை மேற்கொள்வர். இவ் வழிபாட்டின் போது பனை ஓலைகளினால் இழைத்த பெட்டி ஒன்றினுள் கள்ளு, சாராயம், கஞ்சா ரொட்டி, மொந்தன் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைக்கப்பட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு குறித்த ஒரு இடத்தில் மடை வைக்கப்பட்டு தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் ஏற்றி குறித்த குடும்பத்தினைச் சேர்ந்த நபரின் மண்டாட்ட வேண்டுதலுடன் சுய வழிபாட்டு முறையில் வைரவர் வழிபாடு இடம்பெறும்.

வைரவர், ஆகமக் கோயில்களில் பரிவார மூர்த்திகளில் ஒருவராகவும் காவல் தெய்வமாகவும் கூறப்படுகிறார். மகோற்சவ ஆரம்பத்தில் கிராம சாந்தியில் வைரவ வழிபாடு இடம்பெறுகின்றது. ஆலய உற்சவ காலங்களின் போது இக் கிரியையானது குறித்த ஆலயத்தில் உள்ள கிராமத்திற்கு எந்தவித இடையூறும் நேர்ந்திடா வண்ணம் மேற்கொள்ளப்படும். உற்சவம் முடிவடைந்ததும் வைரவர்க்குரிய விசேட அபிடேக ஆராதனையுடன் பூசை இடம்பெறும். வைரவர் கோயிலை காவல் செய்யும் தெய்வம் மாத்திரமல்ல, அவர் சுற்றாடலையும் காக்கின்றார். மகோற்சவ காலங்களில் வைரவரைக் கட்டுதல், வைரவர் சாந்தி செய்தல் முதலானவை நடைபெறுவதையும் அவதானிக்கலாம். 

ஈழத்தில் சிறு தெய்வமாக, பெருந்தெய்வமாக வைரவ வழிபாடு பெருஞ்செல்வாக்குற்றுக் காணப்படுகிறது. இதற்குப் பின்வரும் காரணங்களைச் சுட்டலாம்.

  1. கந்தபுராணச் செல்வாக்கு.
  1. ஈழத்தில் ஆதிக்க மதமான சைவம் (இந்து சமயத்துள்) இருத்தலும், வைரவர் சிவனின் அம்சமாக எடுத்துரைக்கப்படுதலும்.
  1. ஒல்லாந்தர் கால சமய அடக்குமுறை அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிரான குரல்.
  1. சூல வழிபாட்டு முறை – எளிய வழிபாட்டு முறை
  1. சைவ மேனிலையாக்கம் அல்லது சமஸ்கிருத மயமாதல்

“யாழ்ப்பாணக் கலாசாரம், கந்தபுராணக் கலாசாரம்” என்பார் பண்டிதமணி. கந்தபுராணம் முன்னிறுத்தும் சிவகுமாரர்களுள் வைரவர் ஒருவர் என்பதும் அவர் உக்கிர அம்சமாக சுட்டப்படுவதும் இங்கு உற்று நோக்கத்தக்கது. வைரவ வழிபாடு எப்போது ஈழத்திற்கு வந்தது என்பது தெளிவாக உரைக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த ஈழத்தில் சுதேச சமயமான சைவ சமயத்தை நிலைநாட்ட அக்கால மக்கள் பயன்படுத்திய உபாயமாகவும் முக்கிய செயற்பாடாகவும் அமைந்தது திரிசூல வழிபாடாகும். இத் திரிசூல வழிபாடு என்பது பெரிதும் வைரவர் வழிபாடாகவே அமைந்திருந்தது. சுதேச சமய நடைமுறைகளைப் பின்பற்றுதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட அச்சூழலில் மரங்கள், நீர்நிலைகள், விவசாய உற்பத்தி நிலங்கள், சில மறைவிடங்கள் என்பவற்றில் இவ் வைரவ வழிபாடு நிகழ்த்தப் பெற்றுள்ளது.

ஒல்லாந்த அரசின் அடக்குமுறைக்கெதிரான மௌனக் குரலாகவும் குறியாகவும் சூலத்தைக் குறிப்பிடலாம். அதேவேளை பரமனை மதித்திடாத பங்கையாசனனுக்கு நிகழ்ந்ததே ஒல்லாந்தருக்கும் நிகழும் என்பதைக் குறியீடாக சைவ வழிபாட்டினூடு உணர்த்தியிருக்கக் கூடும். வானவர் தலையைக் கொய்ததன் குறியீடான மண்டையோட்டு மாலையைக் குறிப்பதாக அமைந்த உழுந்துவடை மாலையும் குருதி பெற்ற கதையினடையாளமாக சிவப்புநிற செவ்வரத்தம் பூ தரித்தலும் ஒல்லாந்தருக்கான எச்சரிக்கையாகவும் அல்லது சுதேச சமயத்தை ஒடுக்கும் அதிகாரத்திற்கு எதிராக மக்களைக் கொதி நிலையில், உணர்ச்சிப் பிரவாகத்தில் வைத்திருக்கும் செயற்பாடாகவும் வைரவ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்கலாம். தாம் தாம் விரும்பிய நிலையிலும் வகையிலும் மிருகபலி, மடை பரவுதல் தொட்டு ஆகமப் பண்பாடு வரை வைரவ வழிபாடு அகலக் காலூன்றி நிலைத்து நின்றது. ஆகமப் பண்பாட்டை முன்னிறுத்தி சைவ மீட்டுருவாக்கத்தைச் செய்த ஆறுமுகநாவலர் சிவபெருமானின் மகன்களில் ஒருவராக வைரவரைச் சுட்டி அவ் வழிபாட்டை உள்ளீர்த்தமை யாழ்ப்பாணத்தில் அவ் வழிபாட்டுக்கான மேனிலையாக்கத்தையும் ஸ்திர நிலையையும் வழங்கியது.

யாழ்ப்பாணத்தின் அவ்வவ் சமூகத்தின் நோக்கிற்கேற்ப வைரவர் காலவைரவர், வடுகவைரவர், ஆதிவைரவர், கபாலவைரவர், நரசிம்மவைரவர், கிங்கிலியவைரவர் எனப் பலவாறு வழிபடப்பட்டு வருகின்றார். அதேபோல ஆலயம் அல்லது சூலம் அமைந்திருக்கும் இடத்தை வைத்துக் கொண்டு இத்தியடி வைரவர், சுடலை வைரவர், ஆலடி வைரவர் எனப் பலவாறு சுட்டப்படுகிறார். ஆகமக் கோயில்களில் வடுகநாதராகவும், ஷேத்திர பாலகராகவும் காளியின் தலைவராகவும் சுட்டப்படுகிறார். இணுவில், தெல்லிப்பளை, உரும்பிராய், சிறுப்பிட்டி, வடமராட்சி உள்ளிட்ட பல இடங்களில் ஆகம மயப்பட்ட, ஆகம மயப்படாத மிருகபலியோடு கூடிய நாட்டாரியல் பண்புகள் நிறைந்ததான வைரவர் வழிபாட்டு மரபுகள் இன்றுவரை காணப்படுகின்றன.

சமகாலப் பயில்வுகள் 

காலனித்துவ அதிகாரத்திற்கெதிரான, ஒலி வெளிப்படாத, ஆழ ஊடுருவித்தாக்கும் கலகக் குரலாகவே போர்த் தெய்வமான வைரவரும் ஆயுதமான திரிசூலமும் கட்டமைக்கப்பட்டன. ஜனநாயகமான, பேதமற்ற – சாதியக் கட்டுமானம் தாண்டிய மக்கட் தெய்வமாக வைரவர் விளங்குகின்றார். நாவலர் வைரவரை சிவனினம்சமான மகனாக எடுத்துரைத்து மேனிலைத் தெய்வமாக்கினார். இதன்வழி நாட்டாரியல் வழிபாடு, ஆகம வழிபாடு எனும் இருதள மரபிற்குரியதாக, சிறுமரபு – பெருமரபு என வைரவ வழிபாடு மாற்றமுற்றது.  பின் இருபதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், இலவசக் கல்வி, போன்றனவும் நகரமயமாதலும் வைரவ வழிபாட்டை பெருமரபாக்கின. இன விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, போர் என்பன வைரவ வழிபாட்டை மீள் முக்கியத்துவம் பெறச் செய்தன. 1995 இல் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னான மீள் வருகை புதிய அசைவியக்கங்களை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியது. இராணுவக் கட்டுப்பாடு, மின்சாரம், தொழில்நுட்பத் தொடர்பாடல் வசதிகள், பொருளாதாரத் தடைநீக்கம், திறந்த பொருளாதாரம், சடுதியான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் (சட்ட ரீதியாவும், களவாகவும்), பொருளாதார ஏற்றம், கல்வி என்பன அவற்றுள் சில. இதன் வழி வாழ்க்கைத் தரம் உயர்கிறது. யுத்தத்தின் நேரடித் தாக்கம் ஓரளவு குறைந்ததனால், மக்கள் தெய்வமாக யுத்தத்தின் அடையாளமாக இருந்த வைரவரை மக்கள் தம் மனங்கட்கேற்ப, சாந்த சொரூபியாக ‘ஞான வைரவராக’ மாற்றி விடுகின்றனர். ஆகம மரபுவழி ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்படுகின்றன. பிராமணர்கள் பூசை செய்ய  நியமிக்கப்பட்டு அலங்கார உற்சவங்கள் நடைபெறுவனவாக வைரவர் கோயில்கள் மாறின. சில ஆலயங்களில் இரதோற்சவங்களும் நடைபெறுகின்றன.

ஆயினும் சமகாலத்தில் வைரவர் வழிபாட்டில் சுதேச பாரம்பரியங்களில் கலப்புகள் ஏற்படுத்தப்படுகின்றது. இதனால் கலப்புறு பண்பாடு தோற்றம் பெறுகிறது. ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களும், ஆகம விதிமுறைகளுக்கு உட்படாத அம்சங்களும் இணையும் போது இங்கு புதிய கலப்புறு பண்பாட்டம்சங்கள் தோன்றி இரண்டு முறையான வழிபாடுகளையும் ஒரே தளத்தில் இடம்பெறச் செய்கின்றன. வைரவருக்கு உயிர்ப்பலி அதிகமாக கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு சில இடங்களிலேயே உயிர்ப் பலி மேற்கொள்ளப்படுகின்றது.

நகரமயமாதல், உலகமயமாதல், மேனிலையாக்கம் எனும் தளக்கூறுகளின் வழி ஏற்பட்ட சமூக அசைவியக்கமாகவே நாட்டார் பண்பாட்டின் அடையாளமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண வைரவர் வழிபாடு, பெருமரபாக சமஸ்கிருத மயமாதலுக்குள்ளான பெருந் தெய்வமாகி சமூக, சாதி அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கான சமூகக் குறியீடாக சூலக் குறியீட்டைப் புறந்தள்ளி, கருங்கற் தெய்வமாக எழுச்சி பெற்று நிற்பதை இன்று அவதானிக்க முடிகிறது. இம் மேனிலையாக்கம் இன்று வடக்கு, கிழக்கு மட்டுமின்றி இலங்கை முழுவதும் மிகவும் வேகமாக நிகழ்ந்து வருவதைக் காணமுடிகிறது.

நிறைவுரை

சமஸ்கிருத மயமாதலுக்கும் சாதி, வர்க்கப் படிநிலைக்கும் இடையேயான இயங்கு நிலை அவதானத்திற்கு உரிய ஒன்றாகும். அதிகாரமிகு சாதியத்திற்கும் சமஸ்கிருத மயமாதலுக்கும் இடையிலுள்ள உறவுநிலை கெட்டித்த தன்மையுடையதாகும். அதனாலேயே கீழ்நிலையிலிருந்து மேலெழ விரும்பும் குறித்த மனிதர், குறித்த சாதி,  குறித்த வர்க்கம் அதிகார மனிதர்களின் சாதிக்கோ வர்க்கத்திற்கோ சமமாகத் தன் அந்தஸ்தை ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. இம் முயற்சிக்கு அனுசரணை செய்வன பொருளாதாரம், அதிகாரம், சடங்கு எனும் தகுதிப்பாடுகளாகும். இவற்றில் பெரும்பான்மையைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் தன்னதிகாரத்தை – சமூக அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதன் வெளிப்பாடே சுடலை வைரவரும் கிணற்றடி வைரவரும் முச்சந்தி வைரவரும் ‘ஞான வைரவரான’ வரலாறு. ஆகவே இதில் சாதிய, வர்க்க அமைதி கிடைக்கின்றதே அன்றி உண்மையான ஆன்மீக அமைதி  சாத்தியமற்றுப் போகின்றது. 

vairavar kovil

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

15067 பார்வைகள்

About the Author

தி. செல்வமனோகரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)