இந்தியாவில் சமூக அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான வரலாறு படைத்தல் சாத்தியப்பட்டு இருக்கவில்லை என்ற கருத்து மேலெழக் காரணமாக அமைந்த ஒரு விடயம், நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு உரியதாக அல்லாத இயற்கை வழிபாட்டு அம்சங்களின் நீடிப்பு நிலவுவதனாலாகும். குரங்கையும் பசுவையும் இந்துக்கள் வழிபடுவதாக அமைந்த வழக்காறுகள், இன மரபுக் குழுப் பண்புகள் மாற்றம் பெறாமல் அப்படியே இன்னமும் நிலவுவதன் பேறு என முடிவுகட்டினர். நிலப்பிரபுத்துவத்துக்கான நிறுவனமயப்பட்ட ஒரு கடவுள் கோட்பாட்டை உடைய மதமாக, இந்து சமயம் இல்லை என்றவகையிலும், இயற்கை வழிபாட்டுக்குரிய இன மரபுக் குழு வாழ்முறை, இங்கே சில வடிவங்களில் இன்னமும் நீடிப்பதும், இந்தியா சமூக மாற்றங்களுக்கு ஆட்படவில்லை என்பதன் வெளிப்பாடுகள் என்பதோடு ‘நிலப்பிரபுத்துவம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கவில்லை. நிலம் தனியார் உடைமையாக அன்றிக் கிராமப் பொதுச் சொத்தாக இருந்து வந்துள்ளது’ என்றும் கருதப்பட்டது.
‘தனிவகையான நிலப்பிரபுத்துவம் இங்கு ஏற்பட்டுள்ளது – அத்தகைய சமூக அமைப்பு மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் வர்க்கப் போராட்டங்கள் இங்கே நிகழ்ந்து வந்துள்ளன’ என்று இந்தியச் சமூகவியலாளர்கள் எடுத்துக் காட்டி உள்ளனர். நிலப்பிரபுத்துவ அமைப்பின் விசேடித்த அம்சம் குறித்த அவர்களது கருத்துகள் சரியாக உள்ள போதிலும் வர்க்கப் போராட்டத்தின் வாயிலாக சமூக மாற்றம் இங்கு ஏற்பட்டது என்பதில் தவறிழைத்தனர். முழுச் சமூக சக்திகள் (திணைகள்) இடையேயான அதிகாரக் கைமாறுதலை ஏற்படுத்தும் போராட்டங்கள் ஊடாக நடந்தேறிய பண்பாட்டுப் புரட்சி வடிவம் தமிழகத்தின் பக்திப் பேரியக்கத்தில் துலக்கமுற வெளிப்பட்டதைப் போன்று வேறெங்கும் தெளிவுற அமைந்திருக்கவில்லை.
பிராமண மதத்தின் முன் முயற்சியாக அன்றி வணிகச் சாதியினரான காரைக்காலம்மையார் தொடக்கிவைத்த பக்தி வடிவத்தை இயக்கமயப்படுத்துவதில் சமூகப் புரிந்துணர்வுமிக்க வெள்ளாளரான நாவுக்கரசர் வகித்த தலைமைப் பாத்திரத்தையும் வெறும் துணை – நட்பு சக்தியாகப் பிராமணர் கையாளப்பட்டமையையும் முந்திய அமர்வில் பார்த்துள்ளோம். அத்தகைய தமிழக அனுபவத்தின் வாயிலாகவே இந்து சமயத்தின் தாற்பரியங்களைத் தெளிவுறப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. சமூக – பொருளாதார – அரசியல் மேலாதிக்கத்தைத் தமது தலைமையில் வென்றெடுத்த வெள்ளாளர்கள் ஏனைய சாதியினர்களை ஒன்றுபடுத்தியதன் வாயிலாக அதனைச் சாதித்ததைப் போலவே பிராமணர்களையும் அரவணைத்திருந்தனர். தாம் வென்றெடுத்த தமக்கான மேலாதிக்கத்தைக் கருத்தியல் ரீதியாக ஏற்புடையதாக்கும் வண்ணம் ஆன்மிகத் தலைமை வெள்ளாளரால் வழங்கப்படிருந்ததே அன்றி பிராமணியத்தின் மேலாதிக்கத்துக்கு உரியதாகப் பக்தி இயக்கம் தொடங்கப்படவோ முன்னெடுக்கப்படவோ இல்லை. தமது தேவையின் நிமித்தம் பிராமணச் சமூக சக்திக்குத் தாம் வழங்கும் பண்பாட்டுத் தலைமையின் வீரியத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; அன்றைய இருப்பில் அதை உணர்ந்துகொள்ள வாய்ப்பும் இல்லை!
ஏற்பட்டு வந்த நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவில் வெள்ளாளச் சாதியின் மேலாதிக்கத்தை ஆன்மீகத் தளத்தில் வலியுறுத்தும் பிராமணியத்தின் தகுதிப்பாட்டை முனைப்புறக் காட்டுவதற்கு பிராமணர்களுக்கு உரிய இடத்திலும் மேலான அங்கீகாரத்தை அன்றைய அரசியல் – சமூக – பண்பாட்டுத் தலைமைச் சாதியான வெள்ளாளர்கள் வழங்கி இருந்தனர். பிரமன் முதலிய வேதக் கடவுளர்களைக் காட்டிலும் தமிழ்க் கடவுளர்களாக மேற்கிளம்பிய ‘தென்னாடுடைய சிவனும்’ தமிழர் வீரயுக இலக்கியத்தில் இடம்பெற்ற திருமாலும் மேலானவர்கள். முழுமுதல் கடவுளர்கள் எனும் உணர்வு நிலையை வெளிப்படுத்த வகை செய்ததில் வெள்ளாள மேலாதிக்கத்தின் தாற்பரியத்தை இனங்காண இயலும். தமது அதிகாரத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு சாதிகளது மத நம்பிக்கைகளைத் தொடர அனுமதித்ததைப் போலவே பிராமணர்கள் தமக்கான பிராமண மதத்தின் சில கூறுகளைத் தம்மளவில் தொடர்வதனையும் அங்கீகரித்தனர்.
சாதிகளது சமயங்களைத் தமக்கான சிவ (சைவ) , விஷ்ணு (வைணவ) எனும் முழு முதல் கடவுளர்களுக்குப் பணிந்த வகையில் ஆட்படுத்திக் கொண்டதைப் போலன்றி பிராமணரது வேத மதத்துக்கு அதீத புனிதத்தை வழங்கியமையும் அதன் சமூகப் பெறுமானமாக, நிலப்பிரபுக்களாக சம ஆசனம் வழங்கும் வண்ணம் நிலங்களைத் தானம் பண்ணிக் கொடுத்து கூட்டுத் தலைமைச் சக்தியாக ஆக்கிக்கொண்டிருந்தமையும் காரணமாக பின்னர் வெள்ளாளச் சமூக சக்தி இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டது. வெள்ளாளரது நேரடி அரசியல் அதிகாரத்தை விஜயநகரப் பேரரசிடம் இழந்த பின்னர் பிராமணச் சமூக சக்தி கூடுதல் அதிகாரத்தை உடையதான மேலாதிக்கத்தைக் கையகப்படுத்திக் கொண்டது.
இருப்பினும், சாதியவாதக் கருத்தியலைத் தொடர்ந்தும் பயன்படுத்தும் வகையில் தமிழின் ஆதிக்க சாதிகள் (வெள்ளாளர் என்பதுடன் நிலவுடைமையில் ஏறத்தாழச் சமநிலையில் உள்ளவை) பிராமணப் புனிதத்துக்கு எதிராகச் சென்றுவிடவில்லை. இன்று இந்தியா முழுமையிலும் ஒவ்வொரு பிரதேசத்துக்குமான ஆதிக்க சாதிகள் பிராமணச் சமூக சக்தியுடன் கூட்டமைத்தபடியேதான் சுரண்டல் அமைப்பைப் பேணி வருகின்றன. இதன் அரசியல் வடிவமாக வெளிப்பட்டுள்ள இந்துத்துவத்துக்கு பிராமணத் தலைமையாக அன்றி இடைச்சாதித் தலைமை அவசியப்பட்டுள்ள பின்னணி கவனிப்புக்குரியது. மணிப்பூரில் இன்னமும் பழங்குடி மக்கள் (இன மரபுக் குழுவாகவே வாழும்) நிலைக்குரியவர்கள் ஒருவரோடு ஒருவராக மோதுவதைத் தடுக்க முற்படாமல் அவற்றுள் மேலாதிக்கம் பெற வாய்ப்புள்ள தரப்புடன் கூட்டமைக்கும் இந்துத்துவத்தை அம்பலப்படுத்துவதன் வாயிலாக வர இருக்கிற 2024 தேர்தலில் ‘இந்துத்துவத்தின் இடைச்சாதித் தலைமை வேட்பாளரை’ (இன்றைய பிரதமரை) தோற்கடித்துவிட இயலும் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது. அந்த எண்ணத்துடனான பரப்புரைகளில் இந்துத்துவத்தை அம்பலப்படுத்துவதாகக் கருதி இந்து சமய அடிப்படைகளையே தாக்கும் பரப்புரைகளால் அந்தத் தலைமை மீளெழுச்சி பெறும் வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.
இந்து சமயத்தின் இயங்கு தளம்
விரிந்து பரந்த இயற்கைச் சூழல் சார்ந்த தத்தமது வதிவிடங்களில் வாழ்ந்துவந்த இன மரபுக் குழுக்கள் தமக்கேயான வழிபாடு, நம்பிக்கைகள் சார்ந்த சமயங்களைப் பின்பற்றுபவர்களாகவும் மேலாதிக்கம் பெற்ற திணைக்குரிய பரம்பொருளின் ஆளுகைக்குள் தமது கடவுளர்கள் இருப்புகொள்வதனை ஏற்பவராகவும் வாழ அனுமதிக்கப்பட்டன. அத்தகைய பல்வகைமைக்குரிய கடவுளர்கள் இணக்கத்துடனும் மோதல்களுடனும் ஊடாடும் களமாக இந்து சமயப் புராண-இதிகாச-ஐதீக கதைகள் துலங்கக் காண இயலும். ஆரம்ப காலச் சுரண்டலில் நான்காம் வர்ணமான சூத்திரர்களது உழைப்பு அபகரிக்கப்படுவது மட்டுமே போதுமானதாய் அமைந்திருந்த நிலைக்கு அப்பால் உற்பத்தித் திறன் மேலும் பெருக்கமடைந்து சுரண்டல் கள விரிவாக்கம் சாத்தியப்பட்ட போது தீண்டாமைக்குரிய அவர்ணர்கள் (வர்ணமற்றோர்) அல்லது ஐந்தாவது பிரிவினர் எனக் குறிப்பிடப்படும் ‘பஞ்சமர்’ என்று விலக்கப்பட்டவர்கள் வரலாற்று அரங்கில் தோற்றம் பெற்றனர். அவர்களது கடவுளர்களும் பரம்பொருளின் (முழு முதல் கடவுளின்) அதிகார வரம்பைக் கடக்க இயலாதவர்கள் என்பதனை நிலப்பிரபுத்துவக் கால இந்து மதம் ஏற்படுத்திக் கொண்டது மட்டுமன்றி, சாதிகளாக்கப்படாது முற்றாகவே தூரப்பட்டு வாழ்ந்ததனால் ‘பழங்குடியினர்’ என அழைக்கப்பட்ட ஆறாவது பிரிவினரது வழிபாட்டு அம்சங்களின் மீதும் மேலாதிக்கங்கொள்ள இடமுள்ள களமாகவே இந்து சமயம் இயக்கம் பெற்றுள்ளது. முரணுறும் அத்தகைய சமூகங்களது கடவுளர்கள் இடையே வேறுபாடுகளும் மோதல்களும் இயல்பானவை.
அடிநிலை மக்கள் பிரிவினரது கடவுளர்களை ஆட்படுத்தி மேலாதிக்கம் செய்கிற ஆதிக்க சாதியினரின் முழுமுதல் கடவுளர்களும் தமக்குள் பல்வகை முரண்களை உடையவர்களே. தமிழகத்தின் பெருநிலக்கிழார்களது சமயமாக சைவ நெறியும் சிறு நிலப்பிரபுக்களுக்கானதாக வைணவமும் எழுச்சி பெற்றன. வட இந்தியா முதல் ஆந்திரா வரையில் பெரு நிலப்பிரபுக்கள் வைணவ மதத்தையும் சிறு நிலவுடைமையாளர்கள் சைவத்தையும் தத்தமக்கான மதமாக வரித்துக்கொண்ட வாழ்முறை அமைந்தது. சைவ – வைணவ மதங்களின் முழுமுதல் கடவுளர்கள் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் சார்ந்த புராணக் கதைகள் பொதுவானவையாக இந்துச் சமூகங்கள் முழுமைக்கும் பரவலடைந்தன. எவர் முழுமுதல் கடவுள் என்பதைச் சார்ந்த சிற்சில வேறுபாடுகள் பிராந்தியங்கள் இடையே ஏற்பட்டது உண்டு.
வட இந்தியாவின் வைணவ நெறியில் விஷ்ணுவின் ஒரு அவதாரம் இராமர் (இராமரை அத்தகைய வழிபாட்டு நாயகர் ஆக்கியது தமிழக வைணவ மத ஆழ்வார்களும் கம்பரும் என சுவீரா ஜெய்ஸ்வால் எடுத்துக்காட்டி உள்ளார் – அதுபற்றி பின்னர் பார்க்கலாம்). இராமரால் வதம் செய்தழிக்கப்பட்ட இராவணன் சிவ பக்தனான பிராமணன் என்றவகையில் பிராமணனைக் கொன்ற பிரமஹஸ்தி தோசம் நீங்கும் பொருட்டு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து இராமர் வழிபட்ட இடமாக இராமேஸ்வரம் போற்றப்படுகிறது (இலங்கையை இராவணன் ஆட்சி புரிந்ததாக கம்பராமாயணம் எடுத்துக்காட்டியதன் பேறு தமிழகத்தின் இராமேஸ்வரம்; வால்மீகி இராமாயணத்துக்கு உரிய ‘இராமேஸ்வரம்’ இதே காரணத்துடன் வட இந்தியாவிலும் உண்டு. ‘லங்கா’ என்பது நீர் சூழ்ந்த தீவு என்ற நிலப்பரப்பு என்பது வட இந்தியப் புவியியல் – மொழியியல். தமிழின் இராமர், சோழப் பேரரசால் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட கடல் சூழ்ந்த இலங்கைக்கு இராவணனை வதம் செய்யச் செல்ல நேர்ந்து ‘இராமர் பாலம்’ உருவாக்க வேண்டியிருந்தது. வட இந்தியாவில் ஆற்றோட்டங்களால் சூழப்பட்டு அடங்கிய சிறு தீவான லங்காவுக்கு அமைக்கப்பட்ட சிறிய பாலம் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. இன்று இந்தியா முழுமைக்குள் இலங்கை கொண்டுவரப்பட வேண்டி உள்ளதால் இராவணனைச் சிங்கள மன்னனாகக் காட்டும் ‘ஆய்வுகளின் அரசியல்’ மேற்கிளம்புவதற்கான அவசியம் ஒன்றும் ஏற்பட்டுள்ளது).
வருடந்தோறும் மாசி மாதம் சிவராத்திரி விரத நாளில் சிவனது அடி – முடி தேடிய கதை ஒன்று வாசிக்கப்படுவதுண்டு. திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையே எவர் பெரியவர் என்ற வாதம் முற்றிப்போன போது அவர்கள் முன் சிவன் தோன்றி தனது அடியைத் தேடுவதற்கு திருமாலையும் முடியைத் தேடப் பிரமனையும் பணித்தார். பன்றி உருவெடுத்துப் பாதாளம் அடைந்தும் சிவனது அடியை அடைய இயலவில்லை எனத் திருமால் திரும்பியபோது முடியைக் கண்டுகொண்டதாக பிரமன் பொய்யுரைத்துக் கோயில் வழிபாட்டுக்கும் பொருத்தமற்றவர் எனப் புறமொதுக்கப்பட்டார். தமிழ்க் கடவுள் முருகன், பிரமனுக்குக் குட்டுப்போட்ட கதையும் அவரது ஒரு தலையைக் கொய்துவிட்டதான மற்றொரு புராணக் கதையும் பிராமணர்களுக்கான பிரமன் புறக்கணிக்கப்பட்ட வாழ்முறையே நீடித்துள்ளது என்பதையே காட்டுகிறது. ஆக, சூத்திரக் கடவுளர்களான சிவன், திருமால், முருகன் ஆகியோர் முன்னிலையில் பொய்யுரைப்பவராகவும் குட்டுப்படுபவராகவும் விளங்கும் பிரமனுக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகப் பிராமணனைக் கொல்வது போன்று கதைகளில் மீளெழுச்சிக்கான வெளிகளை வைத்தவாறே பிராமணர்கள் தம்மை அடக்கி வாசித்து மேலாதிக்கம் நோக்கி வளர்ந்து வந்துள்ளனர்.
நிலப்பிரபுக்களான ஆதிக்க சாதிக் கருத்தியலாளர்கள் புராணக் கதைகளை மேற்கொண்டு தமது மேலாண்மையை வெளிப்படுத்த இடமுள்ளதாயினும் ஆன்மீகப் புனிதம் வழங்கப்பட்ட பிராமணரது அங்கீகாரம் பெறப்பட வேண்டிய அவசியம் இருந்தது. இத்தகைய மேலாதிக்க சக்திகளை மேவியதாக ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையே உழைக்கும் மக்களது கடவுளர்கள் எழுச்சி பெறுகிற போது அத்தகைய நாட்டார் கடவுளர்களை முழுமுதல் கடவுளரின் வழித்தோன்றல்களாகக் காட்டுகிற புராணக் கதைகளையும் உருவாக்கினர். முழுமுதல் கடவுளர்களான சிவன், விஷ்ணு போன்றோர் பலவேறு நாட்டார் வழிபாட்டு மூர்த்தங்களின் இணைப்பில் உருவானவர்கள் என்பது பற்றி முன்னர் பார்த்துள்ளோம். நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலவுடைமையாளர்களுக்கு பலதுறைத் தொழில் வல்லுநர்களும் கீழ்ப்படிந்து ஒரு குடைக்கீழ் கட்டமைக்கப்பட வேண்டியிருந்த சூழ்நிலை காரணமாக ஒரு பரம்பொருள் ஏனைய இன மரபுக்குழுக்களின் (சாதிகளின்) கடவுளர் மேல் ஆதிக்கம்பெற்றவராக இருப்பது அவசியம் ஆயிற்று. அத்தகைய மேலாதிக்க முழுமுதல் கடவுளரான சிவன், விஷ்ணு போன்றோர் பல்வேறு பிரிவினரின் கடவுளர்களது இணைப்பால் உருப்பெற்றது மட்டுமன்றி தொடரும் வரலாற்று இயக்கத்தில் தோற்றம்பெறும் சாதிகளது நாட்டார் தெய்வங்களைப் பரம்பொருளின் உருத் தோற்றங்கள் எனக் காட்டவும் வேண்டி இருந்தது. அந்த முழுமுதல் கடவுளின் உருவாக்கப் பண்பு அதற்கும் வழிசமைத்துக் கொடுத்துள்ளது!
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவர்
தமிழர் வரலாற்றுத் தொடக்கத்தை சங்க இலக்கியம் என அறியப்படும் வீரயுகப் பாடல்கள் வாயிலாக அறிந்து வந்துள்ளோம். கிரேக்க, ரோம் முதல் வட இந்திய (சமஷ்கிருத) சமூகங்களது வீரயுகப் பாடல்களுடன் தமிழ் வீரயுகப் பாடல்கள் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக க.கைலாசபதியின் “தமிழர் வீரயுகப் பாடல்கள்” என்ற முனைவர் பட்ட ஆய்வேடு (ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கப்பட்ட நூல்) தமிழர் வரலாற்றுத் தொடக்க சமூக உருவாக்கம் குறித்து பல திறவுகோல்களை வழங்கி இருந்தது. அதன் தூண்டுதலுடன் கா. சிவத்தம்பி “பண்டைத் தமிழ் நாடகம்” என்ற முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தார்.
இருவரும் தமக்கான முனைவர் பட்ட ஆய்வை பிரித்தானியப் பேராசிரியர் தோம்சனிடம் மேற்கொண்டிருந்தனர். அந்தப் பேராசிரியர் கிரேக்க இலக்கியத்திலும் ஒப்பியலாய்விலும் நவீன சமூக உருவாக்கத்துக்கான மார்க்சியப் பிரயோகத்திலும் ஆழக் கால்பதித்தவர். பலவேறு சமூகங்கள் வெளிப்படுத்திய வீரயுகப் பாடல்கள் ஒன்றோடொன்று தொடர்பற்ற வெவ்வேறு பிராந்தியங்களுக்கு உரியனவாயினும் ஒரே குறிக்கோளுக்கான உந்துதலுடன் எழுந்தவை என்றவகையில் பல பொதுப் பண்புகளைக் கொண்டுள்ளன. முன்னதாக அவற்றிடையே நிலவியிருந்த சமத்துவ வாழ்நிலையைத் தகர்த்து ஏற்றத்தாழ்வான சுரண்டல் அமைப்பு தோற்றம் பெறுவதற்கான போராட்டங்களில் வீரர்களை உத்வேகப்படுத்தி ஈடுபடவைக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உரியன அந்தப் பாடல்கள். அதனூடாக வென்று அடக்கப்பட்ட பலர், கடும் உழைப்பில் உழல்பவர்கள் எனவாகும்போது அவர்களால் விளைவிக்கப்பட்டனவற்றை அபகரித்துச் சுகமனுபவிப்போராக வெற்றிபெற்றோர் வந்தமைவர். உழைப்பவர்களையும் அவர்களுக்குப் பொதுவில் சொந்தமாக அமைந்த நிலபுலங்களையும் தமக்கானவையாக வென்றெடுத்து ஆண்டான்கள் – ஆதிக்க சாதியினர் என உருவாகிவிட்ட ஆள்வோர் இவ்வகை ஏற்றத்தாழ்வான வாழ்முறையே இயல்பானது எனவும் அது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி என்ற வகையில் அதற்கென வகுக்கப்பட்ட சட்ட திட்டங்கள் – நீதி நியாயங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வது அவசியமெனவும் போதிக்கும் அற இலக்கியங்கள் உருப்பெற வழிவகுத்தனர்.
முன்னதாக வீரயுகக் காலகட்டத்தில் முன்னேறித் தாக்கி அழிக்கும் யுத்தவெறி சான்றாண்மைக்கு அடையாளம். ஏற்றத்தாழ்வான வாழ்முறை வழக்காறான பின்னர் அறப்போதனை இலக்கியங்களைக் கற்றுப் பரப்புரை செய்வோர் சான்றோர்கள். வீரத்துக்கு இழுக்கு ஏற்படின் நாணம் கொள்வது முந்திய காலப் பண்பு. சமத்துவக் காதல் உணர்வில் உடன்போக்கு வாழ்வியல் கொண்டு விளங்கிய பெண்களை அடுப்படிக்குள் முடக்கும் காலமாற்றத்துடன் அடங்கி ஒடுங்கும் பெண்மையின் பண்பாக நாணத்தை இலக்கியங்கள் கையாள முற்பட்டன. மண்ணை வென்றெடுக்கவும் வீட்டின் பணியாளாகப் பெண்ணை அடக்கி ஆளவும் ஏற்ற சமூக மாற்றத்துக்கான போரில் பங்கேற்பதற்கு வீரர்களை தூண்டும் வகையில், வெற்றிபெற்றால் கிடைக்கப்போகும் நிலவுலக வாழ்வு காட்டப்பட்டது. மார்பில் வேலேந்தி வீரமரணம் எய்தினால் விண்ணுலகில் பெரும்பேறுடைய சுவர்க்க போகங்கள் கிடைக்கும் என்பதையும் வீரயுகப் பாடல்கள் எடுத்துரைத்தன!
“தமிழ் வீரயுகப் பாடல்கள்” எனும் ஆய்வில் க. கைலாசபதி இத்தகைய உலகப் பொதுவான பண்புகள் சங்க இலக்கியம் எனப்படும் தமிழர் வீரயுகப் பாடல்களில் எவ்வகையில் வெளிப்பட்டிருந்தன எனக் காட்டியதோடு அறநெறிக்கால இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எத்தகையன என்பதனை வேறு கட்டுரைகள் வாயிலாகவும் எடுத்துக்காட்டி இருந்தார். இதனை இன்னொரு தளத்தில் பிரயோகிப்பதாகத் தனது ஆய்வை “பண்டைக்காலத் தமிழ் நாடகம்” எனும் பொருளில் முன்னெடுத்திருந்த கா. சிவத்தம்பி, ‘வீரயுகத்துக்கான மற்றொரு பண்பு தமிழ் வீரயுகப் பாடல்களின் பெறுபேறாக ஏன் மேற்கிளம்பவில்லை?’ என்ற கேள்வியை எழுப்பினார்; அதற்கான விடையைக் கண்டறிய இயலவில்லை எனும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
வட இந்தியாவின் வீரயுகப் பாடல்களுக்குரிய சிலர் காவியத் தலைவர்கள் ஆகியுள்ளனர். மிகமிகக் குறைந்த அளவு பாடலகளில் மட்டும் பேசப்பட்ட இராமன் மிகப்பெரும் காவியநாயகனாக வால்மீகி இராமாயணத்தில் வெளிப்பட்டதோடு பின்னர் கடவுள் அவதாரமாகவும் பரிணமித்தார். கிரேக்க, ரோம் வீரயுக நாயகரும் காவிய நாயகர்களாயினர். இத்தகைய காவியங்கள் வீரயுகப் பாடல்கள் போன்று வாய்மொழி இலக்கியத் தாக்கம் உடையன. அவைபோன்ற காவியங்கள் ஏன் தமிழில் தோற்றம்பெறவில்லை என்பதே கா. சிவத்தம்பி எழுப்பி இருந்த கேள்வி.
தமிழ் வீரயுகப் பாடல்களில் இராமர் பேசுபொருளானதுடன் மற்றொரு இதிகாசமான மகா பாரதத்தில் குருசேத்திர யுத்தத்துடன் தமிழரசருக்கான ஊடாட்டமும் பேசப்பட்டன. அல்லி – அருச்சுனன் கதையும் பிரசித்தம். தமிழ் வாழ்வியலின் வீரயுக எழுச்சியுடன் இணையாக எமக்குரிய சுயமான காவியம் தோற்றம்பெறாமல் சமஸ்கிருத இலக்கியத்துக்குரிய காவியங்களுடன் எமது வீரயுகப் பாடல்கள் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டது ஏன்?
வென்றடக்குதல் அல்லது வீர மரணமெய்தி விண்ணுலகச் சுவர்க்க போகப் பேறடைதல் என்பதைச் சார்ந்த காவிய நாயகர் வரிசைக்கு வட இந்தியக் காவியங்களை நாடிய தமிழ் இலக்கியத் தளம் வணிகம் சார்ந்த அறப் போதனைக்கு உரிய காப்பியங்களைத் தானே உற்பத்தி செய்துள்ளது. கணவனால் கைவிடப்பட்ட கண்ணகியை, ஒரு முலையைத் திருகியெறிந்த பெண் எனும் வீரயுகப் பாடல்களும் அவற்றுடன் தொடர்புபட்டு வழக்காறாக இருந்துவந்திருக்கக் கூடிய நாட்டார் கதைகளையும் அடிப்படையாக கொண்டு இளங்கோ அடிகள் ‘சிலப்பதிகாரம்’ எனும் காப்பியத்தில் படைத்துள்ளார்.அதன் தலைமைப் பாத்திரங்களான கோவலன் – (கண்ணகி) – மாதவி ஆகியோரது மகளான மணிமேகலையை நாயகியாகக் கொண்டு பௌத்த தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரின் ‘மணிமேகலை’ என்ற காப்பியமும் தொடர்ந்து உருவாகி உள்ளது.
வீரயுக நாயகர்களை விடவும் வணிக ஊடாட்ட நாயகர்கள் தமிழ்க் காப்பியங்களின் பாடுபொருளாக இயலுமாக இருந்துள்ள தமிழ்ப் பண்பாட்டுக் குணாம்சம் ஆய்வுக்கு உரியது. இந்த வேறுபாட்டுக்கான அடிப்படை, தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கமாக அமைந்த வரலாற்றுத் தொடக்கத்துடன் தொடர்புடையது. விவசாய விரிவாக்கப் பேறான பண்பாட்டு எழுச்சிக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே வணிக விருத்தியின் பேறான பண்பாட்டு எழுச்சி கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதலாகச் சாத்தியப்பட்டு அதற்கான கருத்தியல் அடித்தளத்தை ஆசீவகம் ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்துக்கான தனித்துவமிக்க இந்த வரலாற்றுத் தொடக்கம் ஆய்வுலகின் கவனத்துக்குக் கொண்டுவரப்படாமை காரணமாகப் பல தெளிவீனங்கள் தொடர்வனவாயுள்ளன.
இன்னொரு அம்சமும் கவனிப்புக்குரியது. ஒரு வீரனான இராமனை ஏனைய சமூகங்களில் வெளிப்பட்டது போன்ற பொதுப் பண்புடன் காவிய நாயகனாக வெளிப்படுத்த இயலுமாக சமஸ்கிருதப் பண்பாட்டுத் தளம் அமைந்திருந்தது. சுவர்க்கப் பேறைக் கடந்து இராமரை வானுறையும் தெய்வமாகத் தமிழகமே வெளிப்படுத்தியது என்பதிலுள்ள சமூக – பண்பாட்டு உருவாக்கக் கூறு நுனித்து ஆராயத்தக்கது. ஒவ்வொரு சமூகமும் தமக்கான வாழ்வியல் அனுபவ எல்லை சார்ந்தே கடவுளைத் தரிசனம் கொள்ளும். தமிழர் சமூகத்தின் பண்பாட்டு உருவாக்கத்துடன் ஊடாடிய கடவுள் கோட்பாட்டில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவர் எனும் அடிப்படை வலுவுடையதாக அமைந்திருந்த காரணத்தால் உயர் விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்த இராமரை விஷ்ணுவின் அவதாரமாக முழுமைப்படுத்தி வெளிப்படுத்துவதற்கான உந்துதலைத் தமிழியலால் வழங்க இயலுமாகி உள்ளது எனக் கருத இடமுண்டு!
சமயமல்லாத சமயம்
சமணமும் பௌத்தமும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவரை வானுறையும் தெய்வமாகத் தரிசிப்பன. சிந்துவெளிப் பண்பாட்டின் யோக நிலைக் கடவுளை இந்துக் கடவுளாக கருதிய போதிலும் சமண அறிஞர்கள் அவரை முதலாவது தீர்த்தங்கரராக (ரிஷப தேவராக) காட்டுகிற நிலையும் உண்டு. மகாவீரர் (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) 24 வது தீர்த்தங்கரராக கொள்ளப்படுகிற சமண மரபில் தீர்த்தங்கரர்கள் அனைவரும் உலகுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்து விண்ணுலகக் கடவுளர்களாக வழிபடப்பட்டவர்களே. மகாவீரருக்குச் சம காலத்தவரும் அவரைவிடவும் மூத்தவருமான மற்கலியேவை 24 ஆவது தீர்த்தங்கரரென வலியுறுத்தும் ஆசீவகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதலாகத் தமிழகத்தில் இயங்கி வந்துள்ளது.
வால்மீகியின் இராமாயணம் மட்டுமன்றி சமண – பௌத்த நோக்கிலான இராமாயணங்களும் வழக்கிலுள்ளன. அவை வலியுறுத்தும் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவராக அன்றி வேள்விக்குப் பாதுகாப்பு வழங்குபவராக இராமர் விளங்கும் காரணத்தால் அவரை வானுறையும் தெய்வமாக சமண – பௌத்த – இராமாயணங்களால் முன்னிறுத்த முடிந்திராது. வேள்வியைத் தடுத்து முனிவர்களைத் தண்டித்த இராவணனைப் போற்றும் பிரதிகளும் அவற்றுள் அடங்கி உள்ளன. அந்தவகையில் இராமரை இந்து மதத்தின் கடவுள் அவதாரமாக வெளிப்படுத்தும் தமிழ்ப் பக்தி இயக்கப் பங்களிப்பு கவனிப்புக்கு உரியது. சுவீரா ஜெய்ஸ்வால் ‘The Making of Brahmanical Hegemony (Studies in Cast, Gender and Vaishnava Theology)’ எனும் நூல் வாயிலாக ஆழ்வார்களே இராமரின் கடவுள் அவதார மகிமையை வெளிப்படுத்திக் காட்டி இருந்தனர் என்பதனை எடுத்துக்காட்டி உள்ளார். இந்த அம்சமே இந்து மதத்துக்கான அவதார புருசராக இராமரைத் தரிசனங்கொள்ள உதவியது (Suvira Jaiswal, pg. 154 – 172). நிலப்பிரபுத்துவம் உச்ச நிலையடைந்த சூழலில் உருவான கம்பராமாயணத்துடன் வால்மீகியை ஒப்பிட்டு தமிழில் இராமர் எவ்வகையிலான ‘முழுமைப்பட்ட’ வடிவமைப்பை வந்தடைந்துள்ளார் எனக் காட்டும் ஆய்வுகளை அறிவோம்.
தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கம் வள வழிபாட்டுக் கடவுளரை விடவும் ஆசீவகம் முன்னிறுத்திய ‘உலக வாழ்வின் வழிகாட்டியை முன்னுரிமையுடன் வணங்குதல்’ எனும் சமத்துவ ஊடாட்ட வணிக எழுச்சியுடன் தொடர்புடையது என்ற வகையில் சமூக நலனுக்காகப் போராடி மடிந்தவர்களை நடுகல் நட்டு வழிபடுதல் தமிழ் வீரயுகத்தின் அடித்தளப் பண்பாக அமைந்திருந்தது. பின்னரான சாதிய இறுக்கத்துக்கான நிலப்பிரபுத்துவக் கால உச்சத்தில் தத்தமது சமூகங்களின் வீரர்களான காத்தவராயன், மதுரை வீரன் போன்றோர் அந்தந்தச் சாதியினரது வழிபடு தெய்வங்களாயினர்.
இவ்வகையில், ஒவ்வொரு சாதிகளுக்குமான முதன்மைத் தெய்வ வழிபாடு ‘தனித்த சமயக்கூறைக்’ கொண்டிருந்த போதிலும் ஏனைய கடவுளர்களை இவர்கள் வழிபடத் தடையுமில்லை; ஏனையோர் இவர்களது தெய்வத்தை வழிபட இயலாது என்றுமில்லை. ஒவ்வொரு சாதியும் தனக்கான நாட்டார் வழிபாட்டுச் சமயக் கூறுகளுடன் இயங்குவதன் அடிப்படையில் ‘நாட்டார்’ சமயங்களே இங்கு உள்ளன; ‘இந்து சமயம் என ஒன்றில்லை’ எனக் கூற இயலுமாகி உள்ளது. உயர் சாதிக் கடவுளர்களான சிவனையும் விஷ்ணுவையும் சைவசித்தாந்த – திவ்வியப் பிரபந்த (விசிஷ்டாத்வைத, துவைத) அடிப்படையில் தனித்து வழிபடுகிற சைவர்களும் வைணவர்களும் மிகமிகக் குறைந்த தொகையினரே. ஆதிக்க சாதியினருக்கான உழைக்கும் மக்களும் தங்களுடன் ஊடாடி மறைந்தவரைக் குலக் கடவுளராக வழிபடும் நாட்டார் தெய்வக் கோட்பாட்டு வழிப்பட்டோரே!
இத்தகைய ஒரு அம்சத்தைக் கவனங்கொண்டு மற்றொன்றைப் புறமொதுக்கும்போது முழுமைப்பட்ட சமூகப் புரிதலற்றவராவோம். காத்தவராயன், மதுரை வீரன் ஆகியோர் அவரவர்களுக்கான சமூக ஆளுமைகள் என்றபோதிலும், வழிபடு தெய்வங்களாகிவிட்ட அவர்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்ட நாட்டார் பாடல்கள் வாயிலாக சிவனது அல்லது ஆதிக்க சாதியினரது வழித்தோன்றல்களான அந்த ஆளுமைகள் ஏதோவொரு காரணத்தால் சேரி வாழ்வுக்கு ஆட்பட்டனர் என்பதாகச் சித்திரிக்கப்பட்டு விட்டனர். ஒவ்வொரு சாதிச் சமயங்களது சுதந்திரம் அனுமதிக்கப்பட்ட அதேவேளை அவற்றை மேலாதிக்க சாதிய-வர்க்கச் சமயத்துக்கு ஆட்பட்டதாக (ஒரு பரம்பொருளுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதாக) வடிவமைத்துக்கொண்டதன் மூலமாக ‘சமயங்களின் சமயமாக’ இந்து மதம் இயங்க இயலுமாகி இருந்ததனைக் கவனங்கொள்ளாது இருந்துவிட இயலாது.
இந்து சமயம் தனியொரு மதமல்ல; அது பல சமயங்களது தொகுப்பில், ஒரு மேலாதிக்க ஆற்றலாகிய முழு முதல் கடவுளால் இயக்கப்படும் பன்மைப் பரிமாண இயங்கு தளம். சமூக மாற்றச் செல்நெறியுடன், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்புக்கு உரிய விசேடித்த வடிவில் இத்தகைய இந்து சமயம் உருப்பெற்றமையை, வட இந்திய வரலாற்றில் கண்டுணர இயலவில்லை. அது குறித்த அலசல், தமிழின் வழங்கலூடாகப் பெறும் தெளிவு எத்தகைய முக்கியத்துவம் உடையது எனக் கண்டறிய உதவும். அடுத்த சந்திப்பில் அது பற்றிப் பேசலாம்!
தொடரும்.