கடந்த சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதிலும் அந்நியச் செலாவணியை உழைத்துக் கொடுப்பதிலும், 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களின் மீதான தீர்வைகள் அகற்றப்படும்வரை அரசாங்க வரிவருவாயின் பெரும்பங்கினை உழைத்துக் கொடுப்பதிலும் பெருந்தோட்டங்கள் குறிப்பிடத்தக்களவு பங்களித்து வந்தன. இத்துறையினது பொருளாதாரப்பங்களிப்பில் அண்மைக்காலங்களில் சற்றுத்தளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளபோதும் அது இன்னும் பொருளாதாரத்திற்குக் கணிசமான பங்கினை அளித்து வருகின்றது என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
இத்துறையில் தொழில்புரியும் தொழிலாளர்கள் நாட்டினது சனத்தொகையில் மிகமோசமான வறுமையின் பிடிக்குள் சிக்கியுள்ள ஒருபிரிவினராக இனங்காணப்பட்டுள்ளனர். தேயிலை, இறப்பர்த் தோட்டங்களில் பணிபுரிந்து அங்கேயே வாழ்ந்துவரும் அவர்கள் சமூக – பொருளாதார ரீதியான தனிமைப்படுத்தல், இத் தோட்டங்கள் பிரதான தெருவமைப்புக்களிலிருந்து தொலைதூரங்களில் மலைப்பாங்கான பிரதேசங்களில் அமைந்துள்ளதால் ஏற்படும் புவியியல்ரீதியான தனிமைப்படுத்தல், அவர்கள் செய்யும் தொழில் ஏனையோரால் கௌரவமான தொழிலாக ஏற்றுக்கொள்ளப்படாமை, மொழிரீதியாக அவர்கள் ஓரங்கட்டப்படல் போன்றவற்றாலேயே இவ்வித மோசமான வறுமைநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிரமமான வேலைவாய்ப்புக்கள், இலவசவீட்டுவசதி, அடிப்படைச் சுகாதாரவசதிகள் போன்றன கிடைக்கக்கூடியதாக இருந்தபோதும், பாதுகாப்பான குடிநீர்வசதியும், சமையல் எரிவாயும் இல்லாமையால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
தோட்டத்தொழிலாளர், தமது உடல் உழைப்பினை விற்பதில் தங்கியிருக்கும் காணியுரிமையற்ற ஒரு குழுவினராவர். நாளாந்த வேதனங்களை உழைக்கும் அவர்களினது மாதாந்தவருமானமானது நாளாந்தவருமானத்தின் அளவு, ஒரு மாதத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் வேலைநாட்களின் எண்ணிக்கை, அவ்வாறு வேலைவழங்கப்படும் நாட்களில் உண்மையிலேயே எத்தனைநாட்களுக்கு அவர்கள் வேலைக்கு சமுகமளிக்கின்றனர் என்பவற்றில் தங்கியிருக்கும். மறுபக்கத்தில், வேலைக்குசமுகமளிக்கும் நாட்களின் எண்ணிக்கையானது அவர்களது சொந்தஉடல்நலன், குடும்பத்தில் இருக்கும் ஏனையோரது சுகயீனங்களும் வேறுபிரச்சினைகளும், காலநிலைத்தன்மை, அவர்களது சமூகக் கடப்பாடுகள் என்பவற்றில் தங்கியிருக்கும். மாதாந்தவருமானத்தை நிர்ணயிக்கும் கடைசி இரண்டு காரணிகளும் மாதத்திற்குமாதம் தளம்புவதால் அவர்களது மாதாந்தவருமானங்களும் தளம்பலுக்கு உள்ளாகின்றன. தோட்டத்தொழிலாளர் தமது உணவுத்தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கு அவர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த வருமானம் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. மந்தைவளர்ப்பு, காய்கறிச்செய்கை என்பவற்றின் மூலம் ஓரளவு மேலதிக வருமானத்தை உழைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தபோதும், தொழிலாளர் குடும்பங்களில் ஒருசிலவற்றிற்கு மட்டுமே அவ்விதவாய்ப்பு கிடைக்கக்கூடியதாக உள்ளது. எனவே, தமது உணவுத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு பெரும்பாலான வீட்டுத்துறையினர் தோட்டவேலையின் மூலம் கிடைக்கும் மாதாந்தவருமானங்களிலேயே தங்கி இருக்கவேண்டியுள்ளது. தோட்டத்தொழிலாளரது வருமானங்கள் வழமையாகவே ஏனைய துறைசார்ந்த தொழிலாளர்களது வருமானங்களிலும் பார்க்க குறைந்தமட்டத்திலேயே இருந்துவந்துள்ளன. பெருந்தோட்டங்களின் ஆரம்பக்காலந்தொட்டே வேதனங்களைக் குறைந்தமட்டத்தில் பராமிப்பதற்கு தோட்டமுகாமையாளர் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வந்துள்ளனர். இலங்கையில் அரசதுறையில் பணிபுரியும் பயிற்சியற்ற தொழிலாளரது வருமானம் ரூபா 1516/- ஆகவும், முறைசாரா இறப்பர் உற்பத்தித்துறையில் அது ரூபா 825/- ஆகவும், தேயிலை முறைசாரா உற்பத்தித்துறையில் ரூபா 797/- ஆகவும், நெல் உற்பத்தித்துறையில் ரூபா 1012/- ஆகவும், கட்டடநிர்மாணத்துறையில் ரூபா 1079/- ஆகவும் உள்ளநிலையில் தேயிலைத் தோட்டத்துறையில் அது ரூபா 819/- ஆக உள்ளது.
கிராமிய சிறுநிலவிவசாயிகளோடு ஒப்பிடும்போது தோட்டத்தொழிலாளர் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கு நடைமுறையிலிருக்கும் சந்தைவிலைகளில் வெளிச்சந்தையில் உணவுப்பண்டங்களைக் கொள்வனவு செய்யவேண்டியநிலையில் உள்ளனர். இதனால் சந்தையில் அதிகரித்துச்செல்லும் விலைவாசிகள் அவர்களது உணவுப்பாதுகாப்பில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. 2002 க்கும் 2017க்குமிடையே பணஅடிப்படையில் அவர்களது நாளாந்தவேதனம் 396.6 வீதத்தால் அதிகரித்தநிலையில் மெய்வேதனமானது 223.1 வீதத்தாலேயே அதிகரித்தது. இக்காலப்பகுதியில் விலைவாசிகள் அதிகரித்தமையே இதற்கான காரணமாகும். எனவே, பணவேதனத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு மெய்வேதனத்தில் அதேயளவு அதிகரிப்பை ஏற்படுத்தத் தவறியது. அதாவது, பணவேதனத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு கொள்வனவு சக்தியில் அதேயளவு அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை.
பெருந்தோட்டத்துறையிலே காணப்படும் மானுடச்சீரழிவு இன்னொரு மோசமான பிரச்சினையாகும். ஊட்டச்சத்தின்மையும் அதனோடு தொடர்புள்ள நோய்களும் இத்துறையில் உயர்மட்டத்தில் உள்ளன. இரத்தச்சோகை, தொற்றுநோய்களான வயிற்றோட்டம், சுவாசப்பையுடன் தொடர்புள்ள நோய்கள், மூட்டுவாத – இதய நோய்கள் என்பன இவற்றுள் முக்கியமானவையாகும். இத்துறையில் நிலவுகின்ற மோசமான சமூக – பொருளாதாரநிலைகளும் மோசமான வேலைநிலைமைகளும் இதற்கான காரணங்களாகும்.
மேற்படி மோசமான சமூக – பொருளாதாரநிலைமைகள் காணப்படும் அதேவேளையில் தோட்டத்தொழிலாளர்களுள் பெரும்பாலானோர் சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்த வந்தேறுகுடிகளாக இருப்பதால் அவர்கள் அரசாங்க நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு அரசாங்க சமூகநல செயற்றிட்டங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பெருந்தோட்ட வீட்டுத்துறையினருக்கு ஓரளவு கிரமமான வருமானத்தை உழைப்பதற்கான வாய்ப்பு இருப்பதோடு, தோட்டமுகாமையாளரால் பல்வேறு நலன்வசதிகள் செய்துகொடுக்கப்படுவதைக் காரணமாக வைத்தே அவர்கள் அரசாங்க உணவுப்பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். ஆனால், முகாமையாளரால் செய்து கொடுக்கப்படும் நலன்வசதிகள் பெரிதும் தரங்குன்றியவை என்பது கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. மேலும், தனியொரு தொழிலாளியின் மாதாந்த வருமானத்தில் குடும்பத்தாரது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளமுடியாததால் குடும்பத்தில் வயதிற்கு வராத ஏனையோரும் சிலசந்தர்ப்பங்களில் பிள்ளைகளுங்கூட ஊழியப்படையில் சேரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். விசேடவினைத்திறன் இல்லாத இத்தொழிலாளர்கள் தமது உடல்உழைப்பினை விற்பவர்களே என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும். வாழ்க்கைச்செலவு அதிகரித்துச்செல்லும் நிலையில் உற்பத்தித்திறனில் காணப்படும் தேக்கநிலை, அதிகரித்துச் செல்லும் உற்பத்திச்செலவு என்பவற்றால் அவர்களது நாளாந்த வேதனங்களை உயர்த்துவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. தோட்டத்தொழிலாளர் வீட்டுத்துறையினரிடையே 1980/81இல் 2.35 ஆகவிருந்த தங்கியிருப்போரின் விகிதாசாரம் 1996/97இல் 2.68 வீதமாக உயர்ந்து பின்னர் 2016 இல் 1.8 வீதமாக வீழ்ச்சியடைந்தது. ஒரு குடும்பத்தில் 2.36 ஆகவிருந்த வருமானம் உழைப்போரின் விகிதாசாரம் 2016 இல் 2.0 ஆக வீழ்ச்சியடைந்தது. தோட்டவேலையில் ஆர்வமிழந்த இளைஞர்கள் வேலையின்றி இருப்பதனாலேயே இவ்வீழ்ச்சி ஏற்பட்டது. மேற்படி அபிவிருத்திகள் தோட்ட வீட்டுத்துறையினரிடையே உணவுப் பாதுகாப்பைப் பாதித்துள்ளன.
உணவுக்கான பாதுகாப்பு என்பது யாது?
சுறுசுறுப்பானதும் சுகாதாரமானதுமான ஒரு வாழ்க்கைக்குத் தேவையான, போதுமானதும், பாதுகாப்பானதும், சிறந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டதும், மக்களுக்கு விருப்பமானதுமான உணவுகள் சமூகத்தில் எல்லாமக்களுக்கும் எல்லாவேளைகளிலும் கிடைக்கக்கூடியதாக இருப்பதையே உணவுப்பாதுகாப்பு என்பது குறிக்கும். எனினும், சிறந்த ஊட்டச்சத்தினை உறுதிசெய்வதற்கு உணவுப்பாதுகாப்பு மட்டும் போதுமானதன்று. சிறந்த உடல்வளர்ச்சி, அபிவிருத்தி என்பவற்றை உறுதிசெய்யக்கூடிய சுகாதாரப் பராமரிப்புமுறைகள், நீரினது போதுமான கிடைக்குந்தன்மை என்பனவும் முக்கியமாவையாகும். உணவு, சுகநலப்பராமரிப்பு, சுகாதாரம் என்ற மூன்றுமே சிறந்தஊட்டச்சத்துக்கான அடிப்படையான உள்ளீடுகளாகும். இவை இல்லாதவிடத்து ஊட்டச்சத்தின்மை, பசி-பட்டினி, சுகயீனம் என்பன ஏற்படலாம். இந்தவிடயத்தில் ஊட்டச்சத்தின்மையால் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய பெண்கள், குழந்தைகள், சிசுக்கள் ஆகியோருக்கு போதுமான கவனிப்பும் பராமரிப்பும் இருப்பது இன்றியமையாததாகும்.
வீட்டுத்துறையினரின் உணவுப்பாதுகாப்பை நிர்ணயிக்கும் காரணிகள்
வீட்டுத்துறை உணவுப்பாதுகாப்பை நிர்ணயிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- சந்தைமட்டத்தில் அல்லது சமூகமட்டத்தில் போதுமான அளவு உணவுப்பண்டங்கள் கிடைக்கக்கூடியதாக இருத்தல்
- அவ்வாறு கிடைக்கப்பெறும் உணவை வீட்டுத்துறையினர் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல். இது உணவு உட்பட ஏனைய நுகர்வுப்பொருட்களினது விலைகளினதும் வீட்டுத்துறையினரின் வருமானத்தினதும் ஒரு தொழிற்பாடாகும். வீட்டுத்துறையினருக்கு போதுமான வருமானம் இருப்பதோடு, குடும்பத்தில் அதனை உழைப்பவர்கள் யார், அவ்வருமானத்தின் மீதானகட்டுப்பாடு யாரிடம் இருக்கின்றது என்பதும் முக்கியமானவையாகும். ஆண்கள் உழைக்கும் வருமானமும் பெண்கள் உழைக்கும் வருமானமும் வீட்டுத்துறையினரின் நலனின்மீது வித்தியாசமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பது அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- உட்கொள்ளப்படும் ஊட்டச்சத்துக்களை சரியானமுறையில் பயன்படுத்திக்கொள்வதில் அந்த உணவை உட்கொள்பவரின் உடலினது இயலுமை (இது அவரது தேக ஆரோக்கியத்தில் தங்கியிருக்கும்) ஒரு முக்கியமானபங்கு வகிக்கும்.
- சிறந்த ஊட்டச்சத்தையும் உணவுப்பாதுகாப்பையும் உறுதிசெய்வதில் வீட்டுத்துறையைச் சேர்ந்த பெண்களின் பங்கு முக்கியமானது. உணவுப்பாதுகாப்பை நிர்ணயிக்கும் மேலே குறிப்பிட்ட நான்கு அம்சங்களையுமே நிர்ணயிப்பதில் அவர்களுக்கு ஒரு முக்கியமானபங்கு உண்டு என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
பெருந்தோட்டச் சமூகத்தின் உணவுப் பாதுகாப்பு
ஏற்கனவே கூறியதுபோன்று எல்லாமக்களுக்கும் எல்லாச்சந்தர்ப்பங்களிலுமே போதுமானதும், பாதுகாப்பானதும், ஊட்டச்சத்து நிறைந்ததுமான உணவு பௌதீக ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் கிடைக்கக்கூடியதாக இருப்பதே உணவுப்பாதுகாப்பு ஆகும். உணவு, சுகநலன் பராமரிப்பு, சுகாதாரம் என்ற மூன்றுமே சிறந்த ஊட்டச்சத்திற்கு அடிப்படையானவையாகும். இவை இல்லாதவிடத்து ஊட்டச்சத்தின்மை, பசி – பட்டினி, கவனிப்பாரற்றநிலை என்பன தலைதூக்கும். உணவுப்பாதுகாப்பானது மொத்தக் குடும்பமட்டத்தில் மட்டுமன்றி, தனிமனிதமட்டத்திலும் உறுதிப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக, வீட்டுத்துறைகளில் பெண்களும், பெண்பிள்ளைகளும் ஊட்டச்சத்தின்மைக்கு உள்ளாகுவதைக் காணக்கூடியதாக உள்ளது. வீட்டுத்துறைமட்டத்தில் உணவுபாதுகாப்பு இருக்கவேண்டுமாயின் உணவுபற்றாக்குறைக்கு ஆளாகக்கூடிய பெண்கள், பிள்ளைகள், சிசுக்கள், முதியோர் ஆகியோருக்கு ஊட்டச்சத்துநிறைந்த போதுமானஅளவு உணவு கிடைப்பது உறுதிசெய்யப்படவேண்டும்.
பெருந்தோட்டத்துறையினருக்கு உணவின் கிடைக்குந்தன்மை
பெருந்தோட்டவீட்டுத்துறையினர் ஏற்றுமதிக்காக ஒன்று அல்லது இரண்டு பயிர்களை உற்பத்திசெய்வதில் ஈடுபட்டுளளதால் அவர்கள் தமக்குத் தேவைப்படும் உணவின் பெரும்பகுதியை வெளிச்சந்தைகளிலேயே கொள்வனவு செய்யவேண்டிய கட்டாயத்திலுள்ளனர். எனவே, சந்தையில் இந்த உணவுப்பொருட்களின் கிடைக்குந்தன்மையை உறுதி செய்துகொள்வது முக்கியமானதாகும். நாடு தழுவியரீதியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பங்களில் பெருந்தோட்டமக்களே கூடுதலான பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். உதாரணமாக, 1974/75 காலப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல தோட்டமக்கள் ஊட்டச்சத்துபோதாமை காரணமாக உயிரிழக்க நேரிட்டமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இறக்குமதிகள் தாராளமயமாக்கப்பட்டதன் பின்னர் போதுமான உணவுப்பொருட்கள் சந்தையில் கிடைக்கக்கூடியதாக இருப்பதால் கடந்த சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டப்பிரதேசங்கள் உட்பட நாட்டில் எந்தவொரு பகுதியிலும் உணவுத்தட்டுப்பாடு பதிவுசெய்யப்படவில்லை. என்றாலும், தோட்டங்கள் தொலைதூரங்களில் மலைப்பாங்கான பிரதேசங்களில் இருப்பதாலும், இப்பிரதேசங்களுக்குப் போதுமான போக்குவரத்துவசதிகள் இல்லாததாலும் கடைத்தெருக்களில் கொள்வனவு செய்யும் உணவுப்பண்டங்களை தமது வீடுகளுக்குக் கொண்டுசேர்ப்பதில் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். அவர்களது வீடுகளுக்கு அண்மையிலுள்ள கடைகளில் அவற்றைக் கொள்வனவுசெய்யும் பொழுது உயர்ந்த விலைகளைச் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். 1970ம் ஆண்டிற்கு முன்னர் அரிசியும் கோதுமை மாவும் உணவுப் பங்கீட்டுத்திட்டத்தின் கீழ் தோட்டமுகாமையாளரால் தொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன. அந்த ஆண்டில் அது உணவுமுத்திரைத்திட்டமாக மாற்றப்பட்டதால் தொழிலாளர் குடும்பங்கள் பல அத்திட்டத்தின் நன்மைகளை இழந்தன.
வீட்டுத்துறைவருமானத்திலும் உணவுப்பாதுகாப்பிலும் பெண்களின் பங்கு
வீட்டுத்துறை குடும்ப அங்கத்தவர்களுக்கான உணவைத் திட்டமிடுதல், அதனைத் தயாரித்தல், பரிமாறுதல் போன்றவற்றிற்கு பெண்களே பொறுப்பாக இருப்பதால் உணவின் மீதான செலவீட்டில் அவர்கள் முக்கிய கவனம் செலுத்துகின்றனர். எனவே, வீட்டுத்துறையின் வருமானம், அதன் உபயோகம் என்பவற்றில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாட்டிலேயே வீட்டுத்துறையினரின் உணவுப்பாதுகாப்பு தங்கியிருக்கும் எனலாம். நல்லஊட்டச்சத்து, உணவுப்பாதுகாப்பு என்பன தொடர்பான சரியான தீர்மானங்களை அவர்களே தேடிக்கொள்வர். ஆண் ஆதிக்கம் நிறைந்த பெருந்தோட்ட வீட்டுத்துறைகளைப் பொறுத்தவரை, வருமானம், அதனைச்செலவழித்தல் என்பவற்றில் ஆண்களே கூடிய ஆதிக்கம் செலுத்துகின்றனர். இத்துறையில் பொதுவாகப் பெண்களே கூடியவருமானத்தை உழைத்தபோதிலும் குடும்பவருமானத்தைப் பயன்படுத்துவதில் பெண்களுக்குப் போதியகட்டுப்பாடு இருப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில் அவர்களது மாதாந்தசம்பளங்கூட ஆண்களாலேயே கையேற்கப்படுகின்றது. இவ்வருமானத்தில் ஒரு பகுதியை அவர்கள் மதுஅருந்துதல், புகைத்தல் என்பவற்றில் செலவிட்டு விடுகின்றனர். பெருந்தோட்டத்துறையில் உணவுப்பாதுகாப்பு இன்மையால் பாதிக்கப்படுபவர்களுள் பெண்கள், குடும்ப ஆதரவு இல்லாத வயதுமுதிர்ந்த ஆண்களும் பெண்களும், திருமணமாகாத பெண்கள், விதவைப் பெண்கள், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோரை இங்குக் குறிப்பிடலாம். விதவைப் பெண்களதும், இளைப்பாறிய பெண்களதும் நிலைமை இதை விடவும் மோசமானதாகும்.
உணவு உதவி வழங்கும் திட்டங்கள்
அண்மைக்காலம்வரை அரசாங்க முகவர் நிறுவனங்களும் உள்நாட்டு – வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு உணவுஉதவித்திட்டங்களை அமுலாக்கிவந்தன. அரசாங்க உணவு உதவித்திட்டங்கள் பொதுவாக இரண்டு நோக்கங்களைக் கொண்டனவாக இருந்தன. உணவின் கிடைக்குந்தன்மையினை உறுதிப்படுத்துதல், மற்றது, கர்ப்பிணிப் பெண்களினதும் சிறார்களினதும் ஊட்டச்சத்துநிலையை மேம்படுத்தல்.
இத்திட்டங்களுள் பின்வருவன முக்கியமானவையாகும்:
- உணவுமானியத்திட்டம்
- பாடசாலை சிறுவர்களுக்கு மதியஉணவு வழங்கும் திட்டம்
- கொலகெந்த உணவுத்திட்டம்
- திரிபோஷ பங்கீட்டுத்திட்டம்
இவற்றுள் முதலிரண்டும் நிதிப்பிரச்சினை, பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் என்பன காரணமாக கைவிடப்பட்டுவிட்டன. Care International நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட திரிபோஷ திட்டம் அரசாங்க சுகாதாரத்திணைக்களத்தினால் கையேற்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. உணவு மானியத்திட்டம் உணவுமுத்திரைத்திட்டமாக மாற்றப்பட்டது. உணவு பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவோருக்கு உணவுவழங்கும் சமூகநலன் வசதிகள் தோட்டத்துறையில் மிகஅரிதாகவே உள்ளன. தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், சமூக – பொருளாதார உட்கட்டமைப்புக்களை ஏற்படுத்தவும், சிறுதொழில்களுக்கு உதவவும் அறிமுகம் செய்யப்பட்ட சமுர்த்தித்திட்டம் கிராமங்களிற் போன்று தோட்டங்களிலே செயற்படுவதில்லை. சமுர்த்தி உதவியானது குடும்பவருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதனால், ஒரு குடும்பத்தில் ஒன்றிற்கு மேற்பட்டோர் வருமானம் உழைக்கும் பெருந்தோட்டக் குடும்பங்களில் குடும்பவருமானம் சற்றுஉயர்வாக இருப்பதால் அவற்றிற்கு சமுர்த்திஉதவி வழங்கப்படுவது இல்லை. விதவைகளும் முதியோரும் தமது பிள்ளைகளின் குடும்பங்களோடு வாழ்வதால் அவர்களுக்கும் இந்த உதவி கிடைப்பதில்லை. நாட்டின் மொத்தசனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்குக் கிடைக்கும் சமுர்த்திஉதவி தோட்டங்களில் 6.0 வீதமானோருக்கு மட்டுமே கிடைக்கப்பெறுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உணவின் கிடைக்குந்தன்மை ஒரு முக்கிய பிரச்சினையாக இல்லாதநிலையில், தோட்டப்புற வீட்டுத்துறைமக்கள் உணவுப் பொருட்களை சந்தையில் கொள்வனவு செய்துகொள்வதற்காக தமது வீட்டுத்துறை வருமானத்தை அல்லது கொள்வனவுசக்தியைஉயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர். குறைந்தமட்டத்தில் தளம்பிக் கொண்டு இருக்கும் வருமானத்திற்கு மத்தியில் மேலதிக கொள்வனவுசக்தியை உழைத்துக் கொள்வதற்காக அம்மக்கள் பல்வேறு வழிகளைக் கையாளுகின்றனர்:
- சிறுவர்ஊழியம்: வெளியிடங்களுக்கு பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவதன் மூலம் மேலதிகவருமானத்தை உழைத்தல். இது பிள்ளைகளது கல்வியையும் ஏனைய அடைவுகளையும் பாதிக்கின்றது.
- மேலதிகவேலைசெய்வதன் மூலம் பெண்கள் தமது வருமானத்தை உயர்த்திக்கொள்ளுதல் (உ+ம்) மேலதிக கொழுந்துபறித்தல்.
- ஓய்வுநாட்களிலும் வேலைநேரம் முடிந்தபின்னரும் தோட்டங்களுக்கு வெளியே மரக்கறிச்செய்கை, மந்தைவளர்ப்பு, சிறுவியாபாரநடவடிக்கை போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் மேலதிக வருமானத்தை உழைக்க முயலுதல்.
- வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளில் உணவுப் பொருட்களை கடனுக்குக் கொள்வனவுசெய்தல். ஆனால் இதற்கு ஒரு எல்லை உண்டு.
- குடும்ப ஆபரணங்களை அடகுவைப்பதன் மூலம் பணத்தை திரட்டிக்கொள்தல். ஆனால் இதற்கும் ஒரு எல்லை உண்டு. அதாவது குடும்ப ஆபரணங்களை அடகுவைப்பதன் மூலம் தொடர்ந்து பணத்தை இவ்வாறு திரட்டிக்கொள்ள முடியாது.
- ஓய்வுபெற்றோரும் வீட்டுத்துறை வருமானத்திற்கு உதவுவதற்காக ஏதாவதொரு தொழிலைச்செய்தல். போதியவருமானம் இல்லாத சிலகுடும்பங்கள் தமது உணவுநுகர்வில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தமுயலும். ஆனால் இது அவர்களது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தனிப்பட்ட வீட்டுத்துறையினரால் இவ்வித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் உணவுப்பாதுகாப்பின்மை, அதனாலேற்படும் ஊட்டசத்துஇன்மை, இரத்தச்சோகை என்பன குறிப்பாக பெண்கள், பிள்ளைகள் என்போரிடையே சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. உணவுப்பாதுகாப்பில் பருவகாலவேறுபாடுகளும் காணப்படுகின்றன. பொதுவாக, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வறண்டகாலநிலை காரணமாக தோட்டங்களில் வேலைநாட்கள் குறைக்கப்படுவதால் அவர்களது மாதாந்த வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு அது உணவுப்பிரச்சினையை ஏற்படுத்தும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களது உணவுப்பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு அரசாங்கமும் சர்வதேச தாபனங்களும் விசேட செயற்றிட்டங்களை அமுல்படுத்துவது இன்றியமையாததாகும்.
தொடரும்.