காலனித்துவ உயரடுக்கு வர்க்கத்தின் (Elite) உருவாக்கம்
Arts
8 நிமிட வாசிப்பு

காலனித்துவ உயரடுக்கு வர்க்கத்தின் (Elite) உருவாக்கம்

October 1, 2024 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

இலங்கை அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் புராதன காலம் தொட்டே சாதியம் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. இதற்கு இந்து மதத்தின் தெய்வீக வடிவம் வழங்கிய தாக்கமே காரணமானது. பெளத்த மதம் சாதியத்துக்கு எதிரான ஒரு சித்தாந்தமாகத்தான் உருவானது. இந்தியாவில் அம்பேத்கார் தலைமையில் சாதியத்துக்கு எதிரான வலுவான இயக்கமாக பெளத்த மதம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இலங்கையில் அரசர்களும் பின்னர் காலனியவாதிகளும் – தங்கள் வர்க்க நலனையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கு சாதியம் வலுவான ஆயுதம் என்பதைப் புரிந்துகொண்டு – பெளத்தத்தில் சாதியத்தை உட்புகுத்தி அதனைப் பயன்படுத்திக் கொண்டனர்.

காலனித்துவத்துக்கு முன்னர் இலங்கைச் சிங்களவரிடையே அரசர் அல்லது சத்திரியர், பமுனு அல்லது உயர்குல மதகுருக்கள் – பிரதானிகள், வெலந்த அல்லது வணிகர் மற்றும் கொவிகம அல்லது வேளாளர் என நான்கு உயர் சாதியினர் இறங்கு வரிசையில் அதிகார உச்சியில் இருந்தனர். இன்று சிங்களவர் மத்தியில் கொவிகம சாதியினரும் இந்துக்கள் மத்தியில் வெள்ளாளரும் தங்களைச் சாதி அடுக்கில் உச்சத்தில் இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் அவர்கள் அன்று அந்தளவுக்கு மதிக்கப்படவில்லை. நிஸ்ஸங்க மல்ல மன்னனின் 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று ‘கொவிகம சாதியினர் ஒருபோதும் உயர் பதவிக்கு ஆசைப்பட முடியாது என’ எச்சரித்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டின் சிங்கள இலக்கியப் படைப்பான ‘பூஜாவலிய’ கொவிகம சாதியில் ஒரு புத்தர் பிறக்க மாட்டார் என்று கூறியது.

இந்த அத்தியாயத்தில், ஐரோப்பியக் காலனித்துவம் இலங்கையில் கால்பதித்து கோலோச்சத் தொடங்கிய (1505 – 1948) நீண்ட 440 வருட காலத்தில் காலனிய ஆட்சியாளர்களால் பழைய சாதிய அடுக்கு தங்கள் நலனுக்கு ஏற்ப எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பது பற்றியும்; அது சுயமாக இலங்கையில் உருவாகிவந்த ஆட்சி முறைமையையும் தலைமைகளையும் அழித்துவிட்டு தனது நலனுக்கு ஏற்றவகையில் புதிய சாதி உருவாக்கத்தையும், அதனடிப்படையில் புதிய காலனியில் உயரடுக்கு (Colonial elite) முறையையும் எவ்வாறு உருவாக்கியது என்பது பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

காலனித்துவ ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட பழைய சாதியமைப்பும் முதலியார் வகுப்பின் தோற்றமும்

போர்த்துக்கேயர் இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது அவர்களுக்கு எதிரான போரில் சுதேச மன்னர்களும் பிரதானிகளும் வணிகர்களுமே (குறிப்பாக முஸ்லிம் வணிகர்கள்) தலைமை தாங்கினர். இவர்களில் முஸ்லிம் வணிகர்களைத் தவிர ஏனைய தலைவர்கள் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால், அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை தாம் கைப்பற்றிய கரையோரப் பகுதிகளில் பெரும் சிரமத்தோடு அழித்தொழித்தனர். இந்தியா பெரிய நாடாக இருந்தபடியால் தமக்கு விசுவாசமான மன்னர்களை பல பகுதிகளில் தேடிப்பிடித்து அவர்களின் சேவையைப் பெறமுடிந்தது. ஆனால் இலங்கை சிறிய நாடாக இருந்தபடியாலும் நீண்டகாலம் கண்டி இராச்சியம் காலனித்துவவாதிகளுக்கு எதிராக நிலைத்து நின்றதாலும் நிலைமை வித்தியாசமாக இருந்தது. சுதேசிகளை ஆள்வதற்கு தமக்கு நம்பிக்கையான ஒரு புதிய அணியினரை உருவாக்க வேண்டிய தேவை போர்த்துக்கேயருக்கு இருந்தது. தமது கிறிஸ்தவ மதத்தை பரப்புவதன் மூலம் அவ்வாறு விசுமான அணி ஒன்றினை உருவாக்கிக்கொள்ள அவர்கள் முயன்றனர். அது மாத்திரம் போதாது என்பதை விரைவில் உணர்ந்த அவர்கள் முதலியார் என்ற புதிய காலனி வகுப்பினரை உருவாக்கினர். 

அவர்கள் கடலோரப் பகுதிகளில் உள்ள பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பூர்வீக மக்களைப் பட்டியலிட்டு இலங்கையின் சாதிய முறையை தமக்கேற்ற விதத்தில் பயன்படுத்திக் கொண்டனர். டச்சுக்காரர்கள், போர்த்துக்கேயர்களின் இந்த நடைமுறையைத் தொடர்ந்தனர். இந்தப் புதிய வர்க்கம் ‘முதலி’ என்பதை ஒரு பரம்பரைப் பட்டமாகப் பயன்படுத்தியது. இருப்பினும், ஆங்கிலேயர்கள் முதலியார் வகுப்பை மற்றொரு அதிகார வர்க்கமாக வளர்த்தெடுத்தனர். முதலிப் பட்டம் என்பது உயர்மட்ட நியமனங்களாக மாற்றப்பட்டன. இந் நடைமுறை 1938 இல் இலங்கை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பூர்வீகத் துறை மூடப்படும்வரை மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது. முதலியார் என்பது தென்னிந்தியத் தமிழில் ‘செல்வத்தில் முதலாவது நபர்’ என்பதைக் குறிக்கும் பட்டப்பெயரில் இருந்து உருவான சொல்லாகும் . 

போர்த்துக்கேயர்களின் காலத்திலும் ஒல்லாந்தார் காலத்திலும் இவர்களுக்கு நிலம் மானியமாக வழங்கப்பட்டதுடன் உள்ளூர்வாசிகளின் உழைப்பை இலவசமாக  – இராஜகாரிய வடிவத்தில் – பெறுகின்ற அதிகாரமும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர் தமிழ் வேளாளர் சாதியிலிருந்து ஒரு சில முதலியார்களை நியமித்தனர். டச்சுக்காரர்களுக்குப் பின் வந்த ஆங்கிலேயர்கள் 19 ஆம் நூற்றாண்டில் பல சாதிகளைச் சேர்ந்த ஏராளமான முதலியார்களை நியமித்து, தமக்கு மிகுந்த விசுவாசத்துடன் சேவை செய்பவர்களாக மாற்றிக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்களை சலாகம அல்லது கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் என பிரகடனப்படுத்திக் கொண்டனர். கண்டி இராச்சியம் 1815 இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் 1818 இல் வெடித்த வெல்லஸ்ஸ கலகத்தை அடுத்து அங்கும் பழைய உயர்சாதியினர் படுகொலை செய்யப்பட்டு அவர்களின் இடத்திற்கும் இவ்வாறே கொவிகம சாதியினர் நியமிக்கப்பட்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் நிலைபெற்ற கொவிகம வெள்ளாளர் சாதியினர்

ஆங்கிலேயர்கள் போர்க்குணமிக்க பாரம்பரிய உயரடுக்கிற்கு எதிராக தமக்கு அடிபணிந்து குற்றேவல் செய்யும் டி சேரம் குடும்பத்தை நம்பி வளர்த்தனர். டி சேரம் குடும்பத்திற்கு அதிக சலுகைகளும் முக்கிய நியமனங்களும் வழங்கப்பட்டன. அதனால் பிரிட்டிஷ் காலத்தில் மேலும் அது அதிகாரத்திலும் செல்வாக்கிலும் வளர்ந்தது. டச்சு – மலாய் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ‘டி சேரம்’ குடும்பம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெகுஜனங்களின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டு அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பமாக வளர்ந்தது. பல உயர்மட்டக் குடும்பங்களை தன்னோடு இணைத்துக்கொண்டு அது தன்னை விரிவுபடுத்திக் கொண்டது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை, தாம் சிங்கள மக்கள் தொகையில் பெரும் பிரிவினரான கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் என நம்பவைத்து தம்மைச் சிங்கள மயமாக்கிக் கொண்டனர். பரவலாகச் சிதறிக் கிடந்த கட்டமைக்கப்படாத சிங்கள விவசாயச் சமூகத்தை இவர்கள் மூலம் நிர்வகிப்பது எளிது என்ற பிரமையை இதனால் தோற்றுவித்தனர். நாளடைவில் இந்தப் போலித் தோற்றமே யதார்த்தமாகிவிட்டது. இவர்களே கொவிகம சாதியை சிங்களச் சமூகத்தில் உயர் சாதியினராக அந்தஸ்தில் உயர்த்தினர்.

டி சேரம் குடும்பத்தின் முதலாவது குறிப்பிடத்தக்க மூதாதையர் 1731 – 1732 காலகட்டத்தில் கண்டிக்கு டச்சு தூதுக்குழுவோடு சென்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆவார். இந்த ஆரம்பகால டி சேரம், தனது சமூக அந்தஸ்துக் காரணமாக பல்லக்கில் பயணம் செய்யத் தகுதியற்றிருந்ததால், 71 வயதாகிவிட்ட போதிலும், முழுப் பயணத்தையும் கால்நடையாகவே செய்து முடிக்க வேண்டியிருந்தது. மைட்லாண்ட் (1805 – 1811), கோர்டன் (1883 – 1890) ஆகிய ஆங்கில ஆள்பதிகளின் ஆட்சிக்காலத்தில், அவர்கள் தமது பிரித்தாளும் கொள்கையைத் திறம்படப் பயன்படுத்தி, சிங்கள உயரடுக்கினரிடையே நிலவிய சாதி விரோதத்தை ஆழப்படுத்தும் விதத்தில் 1897 இல் கொவிகம சாதியினருக்கு மாத்திரமே அனைத்துச் சுதேச தலைவர் நியமனங்களையும் மட்டுப்படுத்தினர். இதன் பின்னர் கொவிகம சாதியினரின் கரம் அரசியலில் ஓங்கத் தொடங்கியது. இவர்கள் திறமைசாலிகளாக இருப்பதை விடவும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசிகளாகவும் பிடித்தமானவர்களாகவும் இருப்பது தகைமையாகக் கருதப்பட்டது.

உதாரணமாக, அன்றைய பிரபல நாளிதழான ‘தி எக்ஸாமினர்’ மார்ச் 30, 1870 அன்று வெளியிட்ட குறிப்பொன்றில், “சியான கோறளை மேற்கின் முஹந்திரமாக நியமிக்கப்பட்டவர் திறமையற்றவர். பிரிட்டிஷ் அரசாங்க அதிபரின் மனைவியான திருமதி லேயர்டிற்கு எட்டு ஆண்டுகள் வீட்டு வேலை செய்வதும், இறைச்சிக் கடையில் இருந்து அவருக்கு நல்ல இறைச்சி வாங்கி வருவதுமே அவருக்கிருக்கும் பணியாகும்.” எனக் குறிப்பிட்டிருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டி சேரம் குடும்பம் முதலியார்களாக வலுவான உறவினர்களின் வலையமைப்பைக் கொண்டிருந்தது. பின்னர், திருமண உறவுகளின் மூலம் இந்த வலையமைப்பு ஒபேசேகர, டயஸ், பண்டாரநாயக்க, இளங்ககோன், டி அல்விஸ், டி லிவேரா, பீரிஸ், சிறிவர்தன மற்றும் சேனநாயக்கா ஆகிய குடும்பங்களுக்கு விரிவடைந்தது. கொவிகம என்று அழைக்கப்படும் இந்த அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள், சிங்களச் சமூகத்தின் பௌத்த கொவிகம பிரிவைச் சேர்ந்த முதலியார், கோறளை மற்றும் விதான (கிராம சேவகர்) ஆகிய பட்டங்களால் ஆங்கிலேயர்களால் பூர்வீகத் தலைவர்களாக நியமிக்கப்பட்டதன் மூலம், இவர்களது வலையமைப்பு மேலும் விரிவடைந்தது.

யாழ்ப்பாண இராச்சியத்தில் முன் – காலனித்துவ காலத்தில் இருந்தே முதலியார்கள் இருந்தனர். யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர், முதலியார் பட்டம் பரம்பரைப் பெயராக நிலவியது. இலங்கையில் முக்கிய சிங்களக் குடும்பங்களைப் போலல்லாமல், தமிழ் முதலியார் குடும்பம் ஒருபோதும் கத்தோலிக்க மதம் அல்லது கிறிஸ்தவத்திற்கு மாறவில்லை. மாறாக இந்து – தமிழ் நிலைப்பாட்டைப் பின்பற்றியது. இதற்கு இவர்களுக்கிருந்த இந்தியப் பண்பாட்டுத் தொடர்பே காரணம்.

கொவிகம சாதியின் எழுச்சிக்கு டி சேரம் குடும்பம் காரணமாக இருந்ததைப் போலவே, 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் வெள்ளாள சாதியின் எழுச்சிக்கு பொன்னம்பலம் – குமாரசுவாமி குடும்பம் காரணமாக இருந்தது. பருத்தித்துறையில் மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குவதற்காக ஆளுநர் நோர்த் தொடங்கிய செமினரியில் குமாரசுவாமி (1783-1836) சேர்ந்ததில் இருந்து பொன்னம்பலம் – குமாரசுவாமி குடும்பத்தின் எழுச்சி தொடங்குகிறது. குமாரசுவாமி 1805 தொடக்கம் தனது உடல்நிலை பாதிக்கப்படும் வரை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.

26 வயதில் முதலியார் பதவியை பரிசாகப் பெற்ற இவர் அதியுயர் அரச நியமனம் பெற்ற யாழ்ப்பாணத் தமிழரானார். 1815 இல் கண்டிய மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் பிடிபட்டபோது ஒரு தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளராக முக்கிய பங்கு வகித்தார். அவர் வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்ற கருத்தும் உள்ளது.

அவரது மூன்று மகன்மார்களான பொன்னம்பலம் குமாரசுவாமி (1849 – 1905), பொன்னம்பலம் இராமநாதன் (1851 – 1930) மற்றும் பொன்னம்பலம் அருணாசலம் (1853 – 1926) ஆகியோர் இலங்கை அரசியலில் வகித்த பாத்திரத்தை இங்கு விளக்க வேண்டியதில்லை.

உசாத்துணை

  1. De Silva, K. M. 1981 A History of Sri Lanka, Delhi: Oxford University Press.
  2. Jayawardena, Kumari 2001 Nobodies to Somebodies. The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka, New Delhi: Leftword Book.
  3. Jiggins, Janice 1979 Caste and Family in the Politics of the Sinhalese, Cambridge University Press.
  4. JRASCB The Journal of the Royal Asiatic Society Ceylon Branch XXI 1909 No. 62.
  5. Malalgoda, Kitsiri 1973 “The Buddhist-Christian Confrontation in Ceylon,”Social Compass 20: 171-200.
  6. Peebles Patrick 1995 Social Change in Nineteenth Century Ceylon.
  7. Roberts, Michael 1973 “Elites and Elite Formation in Ceylon, c. 1830-1930″ in History of Ceylon, Vol. III.
  8. Roberts, Michael 1982 Caste Conflict and Elite Formation: The Rise of a Karāva Elite in Sri Lanka, 1500-1931, Cambridge University Press.
  9. Vythilingam M. 1971 The life of Sir Ponnambalam Ramanathan Volume I.
  10. Twentieth Century Impressions of Ceylon: Its History, People, Commerce, Industries and Resources By A.W. Wright, Asian Educational Services,India; New Ed edition (15 Dec 2007).

ஒலிவடிவில் கேட்க

4927 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)