வணிகம் ஆரம்பிக்க அவசியமான நான்கு தூண்கள்
Arts
10 நிமிட வாசிப்பு

வணிகம் ஆரம்பிக்க அவசியமான நான்கு தூண்கள்

September 20, 2023 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை”
-திருக்குறள் (512)-

மு.வரதராசனார் விளக்கம்: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

எமது பரம்பரைத் தமிழர்களின் வரலாற்றை பார்த்தோமென்றால் அவர்கள் கடலோடி மலையேறி (இப்போது விமானம் ஏறி) நாடுகள் கடந்து தமக்கும், தமது குடும்பத்திற்கும், அதனுடன் அவர்களது சமூகத்திற்கும் பணம் உழைக்க மிக்க சிரமப்பட்டு அவர்களது குறிக்கோள்களை அடைந்தார்கள். அதன்படி பார்க்கும்போது முன்னைய அரச காலங்களில் உலகத்தில் கிழக்கு மேற்கு நாடுகள் என்று அவர்கள் போகாத நாடுகள் இல்லை. பின்பு ஈழத்தில் வாழும் தமிழரைப்பார்த்தால், அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்குள், யாழ்ப்பாணத்து மூதாதையினரை ஆராய்ந்தால் அவர்கள் எனது ஊரான வடக்கின் முனையான பருத்தித்துறையிலிருந்து தெற்கில் காலி மற்றும் மாத்தறை வரை சென்று வியாபாரம் செய்து வளத்தை பெருக்கினார்கள். 

எமது நாட்டின் போரின் காரணத்தாலும், பொருளாதார சிக்கலாலும் கடந்த நாற்பது ஆண்டு காலமாக எமது ஈழத்தமிழ் மக்கள் உலகமெல்லாம் பரவி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் பலர் மிக்க நன்றாக தொழில் செய்து கோடீஸ்வரர்களாக மாறி இருக்கிறார்கள். உதாரணமாக, இன்றைய சிங்கப்பூரின் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஓர் ஈழத்தமிழ் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார். 

இன்னொரு உதாரணம், இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தைத் தயாரித்தவர் ஈழத்திலிருந்து ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர் சுபாஸ்கரன். அப்படி எத்தனையோ உதாரணங்களை முன்வைக்க முடியும். இவர்கள் போலவே நானும் எனது பயணத்தை, யாழ் குடாநாட்டின் ஓர் கிராமமான புலோலியில் பிறந்ததிலிருந்து ஆரம்பித்து, உள்நாட்டு போரின் போது ஆபிரிக்காவினூடாக ஐக்கிய அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து, படித்து, அதன் பின் உலகப்பிரபலமான சிலிக்கன் பள்ளத்தாக்கில் ஓர் வெற்றிகரமான தொடர் தொழில் முயற்சியாளராக ஆகியிருக்கிறேன். ஆரம்ப வியாபார தொழில்களில் (Startups) வெற்றி பெற நிறைய அதிஸ்டம் தேவை. அதிஸ்டத்தை கொண்டுவர சில செயல்களை திட்டமிட்டுச் செய்ய வேண்டும். அவற்றில் நான்கு விடயங்களை இங்கு கூறுகிறேன்.

  1. மக்கள்/குழு (People): ஓர் பிரமாண்டமான செயலையோ பொருளையோ உருவாக்குவதற்கு முதலாவது தேவையானது ஒரே மனப்பான்மை கொண்ட குழுவினர். முதலில் பிரதான குழு (Core Team) ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த குழுவில் வணிக நுட்பம் கொண்ட ஒருவரும், தொழிநுட்பம் நன்றாக தெரிந்த ஒருவரும், அதற்குப் பின் வணிகத் தேவையையும் தொழில்நுட்ப அறிவையும் வைத்து வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்து வாங்கக் கூடிய பொருட்களை வடிவமைத்து உருவாக்க கூடியவர்களும் தேவை. பின்பு குழுவை மேலும் உறுதிப்படுத்த தொழில் அறிவும் மன அமைப்பும் கொண்ட உறுப்பினர்களை சேர்ப்பது மிகவும் முக்கியம்.

எனது அனுபவத்தில், எனது இரண்டு நிறுவனத்திலும் சிறந்த ஆரம்ப குழுவினரும், அதன் பின் வேலைக்குச் சேர்த்த பிரதான குழுவினரும் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தார்கள். அவர்கள் பல வித்தியாசமான வாழ்க்கை பின்னணியிலிருந்து வந்ததால் அதை எங்களது வலிமையாகப் பாவித்தோம். இதைப்பற்றி நான் முன்னர் ஓர் கட்டுரையில் ‘பன்முகத்தன்மை’ என்று எழுதியிருக்கிறேன். அதற்கு உதாரணங்களாக பின்வருவனவற்றைச் சொல்லலாம். ஒருவர் வியட்னாம் போரின் போது ஐக்கிய அமெரிக்காவுக்கு அகதியாக வந்து பின் பெரிய பல்கலைகழகத்தில் பொறியியல் படித்தவர். இன்னொருவர் தாய்வானிலிருந்து கனடாவுக்கு வந்து அமெரிக்காவுக்கு வந்தவர். மற்றவர் லெபனானிலிருந்து புலம்பெயர்ந்தவர். சிலரின் பெற்றோர் ஈழத்திலிருந்து பல நாடுகளுக்குப் போய் கடைசியாக அமெரிக்காவில் குடியேறியவர்கள். இவர்களது பன்முதத்தன்மையான ஆற்றல், பிரச்சனைகளுக்கு முடிவு கூறும் முறை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

2. கூட்டுவணிகம் (Partnership): தொழில்நுட்ப நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு ஆலோசனைகளோடு வருவது சுலபம். ஆனால் அப்படியான ஆலோசனைகளால் உருவாக்கப்படும் பொருட்களை பாவனையாளர்களும் வாடிக்கையாளர்களும் காசு கொடுத்து வாங்குவார்களா என்பதை ஆராய்ந்து தொழில் நிறுவனங்களை ஆரம்பிப்பது முக்கியம். வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளையும், அதனை தீர்க்கும் முறைகளையும் ஆரம்பத்திலேயே அறிந்து பல பிழைகளைத் தவிர்ப்பதற்கு கூட்டுவணிகம் உதவுகிறது. இப்படிக் கூடிச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருடன் தொடர்புகளை அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களிடமிருந்து சூழல், சந்தை மாற்றங்களை ஆரம்பத்திலேயே அறிந்து அதற்கேற்ப பொருட்களை உருவாக்க முடியும்.

எனது இரண்டாவது நிறுவனத்தில் சில முக்கிய உலகளாவிய நிறுவனங்களிலிருந்து முதலீடுகளை எடுத்திருந்ததை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். எமது நிறுவனத்தின் பொருட்கள் நன்றாக இருந்தாலும் அப்பொருளை அந்த நிறுவனத்தின் மற்றைய பொருட்களோடு சேர்த்து விற்க சில மாற்றங்கள் தேவைப்பட்டன. அவர்களுடன் பொருட்களை சேர்த்து உருவாக்கியதால் அவர்களுக்கும் அந்த பொருளின் வெற்றியில் பங்கிருந்தது. அதன்படி அனைவருக்கும் வெற்றி (Win-Win) நிலைமை உருவாக்குவதன் மூலம் கூட்டாக எல்லோரும் வெற்றி பெற முடிந்தது.

3. உற்பத்தி (Product): உற்பத்தியைச் செய்ய முக்கியமாக மூன்று விடயங்கள் நன்றாக அமைய வேண்டும். ஆக்கப்படும் உற்பத்திகள் பற்றிய அடிப்படை அறிவு, அதன் விளைவுகள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதை கல்வியின் மூலமும், அதில் வேலை செய்த அனுபவத்தின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். அதன் பின் வாடிக்கையாளர்களுடன் பேசுவதன் மூலம் அவர்களது தேவையை அறிந்து கொள்ளலாம். ஆரம்பத்திலிருந்தே வாடிக்கையாளர்களுடன் உரையாடுவதன் மூலம் தேவையில்லாத பிழைகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும். கடைசியாக குழுவினர்களைச் சேர்க்கும் போது இப்படியான உற்பத்திகளை செய்யக்கூடிய ஆற்றலும், அனுபவமும், மனப்பான்மையும் உள்ளவர்களை அணியில் சேர்க்க வேண்டும்.

எனது ஓர் நிறுவனத்தில், ஆரம்பத்தில் உருவாக்கிய உற்பத்திகள் தேவையான நல்ல அம்சங்களைக் கொண்டிருந்தபோதும் அதில் சில குறைகளும் இருந்தன. அக் குறைகளை நிவர்த்தி செய்வது எமது உற்பத்திகளுக்கு அவசியமானதாக இல்லாவிட்டாலும், எமது வாடிக்கையாளர்களுக்கு அது அவசியமானதாக இருந்தது. ஆகவே, சில மாற்றங்களைச் செய்ததன் மூலம், அவர்களிடம் ஏற்கனவே இருந்த உற்பத்திகளுடன் எமது உற்பத்திகளையும் இணைத்து இலகுவாக வேலை செய்யக்கூடியதாக இருந்தது. அதனால் அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். கோடிக்கணக்கான பணத்திற்கு அந்த உற்பத்திகளை விற்க உதவியும் செய்தார்கள்.

  1. செயல்முறை (Process): ஆரம்ப தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குவதற்கு சிறந்த குழு இருக்கலாம். பொருட்களை வாங்க வாடிக்கையாளர் இருக்கலாம். திறமையான நுணுக்கத்துடன் தொழில்நுட்பமும் இருக்கலாம். ஆனால் இறுதியில், திட்டமிட்டபடியே உரிய காலகட்டத்தில், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் உற்பத்திகளை கொடுப்பது தான் வியாபாரத்தை மேம்படுத்த வைக்கும். அப்படி, மேம்படுத்த தேவையானதுதான் செயல்முறை. செயல்முறை என்பது, ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு, பொருட்கள் ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு தேவைப்படும் என கவனித்து, அதற்கு தேவையான வளங்கள், கருவிகளை அணிக்குக் கொடுத்து, சொன்ன நேரத்திற்கு பணிகளை முடிப்பது ஆகும். `

எனது அனுபவத்தில் ஓர் வெற்றியான நிறுவனத்திற்கும் வெற்றி பெறாத நிறுவனத்திற்கும் உற்பத்தி செய்யும் வழிமுறைதான் பிரதான வித்தியாசம். செய்ய இருக்கும் பணிகளை சிறிய பங்குகளாகப் பிரித்து, அவற்றை செய்யும் காலங்களைக் கணித்து, அதற்கான முடிவுப் பெறுபேறுகளை தெளிவாகப் புரிந்து, தொடர்ந்து கவனிக்க வேண்டும். இது, இடையில் வரும் சிக்கல்களை முன்னரே அறிந்து, அதற்கான திருத்தங்களைச் செய்து, தேவையில்லாத காலதாமதங்களை தவிர்க்க வழிசெய்கிறது. இதனால் வாடிக்கையாளர் திருப்தியடைவர். வருமானம் கிடைக்க தாமதமும் ஏற்படாது.

வணிகத்தை ஆரம்பிப்பதென்பது ஓர் சுலபமான வேலை இல்லை. அதன் பாதையில் செல்லத் தொடங்குவதற்கு, தகுந்த மனப்பாங்கும் மனவுறுதியும் தேவை.  பின்னர், மேலே கூறியிருக்கும் நான்கு விடயங்களான குழு, கூட்டுவணிகம், உற்பத்தி, செயல்முறை என்பவற்றை திட்டமிட்டு அனுசரிப்பதன் மூலம் எதிர்பாராத இழப்புக்களைத்  தவிர்க்கலாம். அதன் மூலம் வணிகத்தை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பலாம்.

நான் மேலே கூறியவாறு, எனது தாயின் தந்தையார் வடக்கிலிருந்து தெற்கிற்குச் சென்று கடை வைத்து, பல விவசாயப் பொருட்களை யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கிற்கு அனுப்பினார். இப்படி ஆயிரக்கணக்கான தமிழ் வர்த்தகர்கள் பணம் உழைத்தார்கள். அவர்கள் காலத்தையும், அதைச் சுற்றிய பிரச்சனைகளையும் ஆராய்ந்து வணிகத்தைச் செய்தார்கள். நான் அறிந்தபடி, அக்காலத்தில் கிராமத்தில் பலருடன் சேர்ந்து குழுவாக வணிகம் தொடங்குவார்கள். அதை வாங்கக்கூடிய வாடிக்கையாளர்களுடன் நட்பு வைத்திருப்பார்கள்; திட்டமிடுவார்கள். வாடிக்கையாளர்களுடைய தேவைகளை அறிந்து, உற்பத்திகளை விவசாயம் மூலமோ அல்லது சிறு கைத்தறி நிலையத்திலோ உருவாக்குவார்கள். கவனமாகச் சிந்தித்துப் பார்த்தால், நான் மேலே கூறிய நான்கு தூண்களையும் பின்பற்றியே இவர்கள் வணிகம் செய்திருக்கிறார்கள் என்பது புலப்படும். அதையே நான் ஐக்கிய அமெரிக்காவிலும் பின்பற்றி வெற்றிபெற்றேன் என்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்