ஆங்கிலத்தில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை
இலவச பொது ஊழியம்
சாதி வழமைகளை மீறக்கூடாது என்ற கடும்போக்கிற்கு உதாரணமாக திகழும் இன்னொரு பிணக்கு 1830 ஆம் ஆண்டில் எழுந்ததை சுட்டிக்காட்டலாம். மீன்பிடித்தொழில் செய்வோரில் ஒரு பிரிவினரான திமிலர் என்ற சமூகப்பிரிவினரிடம் மணியகாரர் என்னும் உயர்நிலை அதிகாரி ஒருவர் பொது வேலையை இலவச ஊழியமாக வழங்கும்படி கட்டளையிட்டார். யானைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான இறங்குதுறை அமைப்பதற்கு பனங்குற்றிகள் தேவைப்பட்டன, இப்பனங்குற்றிகளை இலவசமாக ஏற்றிக்கொண்டு வரும்படி இம்மணியகாரர் உத்தரவிட்டார். ஆனால் திமிலர் சமூகப்பிரிவினர் இவ்வுத்தரவுக்கு பணிய மறுத்து எதிர்ப்புத்தெரிவித்தனர். மணியகாரர் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து பழைய வழமையின்படி இச்சேவையை குறித்த சமூகப்பிரிவினர் வழங்க வேண்டும் என வாதாடினார். அதேவேளை தாம் பிரித்தானிய நிர்வாகத்தின் கட்டளையை மீறியதையும் மணியகாரர் ஒத்துக்கொண்டார். அப்போது யாழ்ப்பாணத்தின் கலெக்டராக இருந்த பீ. ஏ. டைக் திமிலர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியை மணியகாரர் தனது சம்பளத்தில் இருந்தே கொடுக்க வேண்டும் எனக்கட்டளையிட்டார், இவ்விதம் மணியகாரரின் முறையற்ற செயலுக்கு பீ. ஏ. டைக் நிவாரணம் வழங்கினார்.
{காதணிகளை அணியத்தடை, இலவச பொது ஊழியம் ஆகிய இரு விடயங்களிற்கு சான்றாதாரம் முறையே SLNA (SRI LANKA NATIONAL ARCHIVES) 20/11/ -54 கலெக்டரின் டையரிக்குறிப்புகள் 10 ஏப்ரல் 1830, SLNA 20/11 -54 – 30 செப்டம்பர் 1830 என்பவற்றில் பதிவாகியுள்ளன.}
கோல்புரூக் ஆணைக்குழு
இலங்கையில் நிர்வாக சீர்திருத்தங்களை பற்றி ஆராய்ந்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட கோல்புரூக் கமரன் ஆணைக்குழு இராஜகாரியம் என்ற இலவச பொது ஊழியத்தை முற்றாக ஒழிப்பதற்கு முடிவு செய்தது. இலவச பொது ஊழியம் பற்றிய தகவல்களை அரசாங்கம் திரட்டியது. பயிர்செய்கை நிலத்திற்கு பயிரிடும் உரிமைக்கு பதிலீடாக இலவச பொது ஊழியம் பெறப்படுகின்றதா? என்ற விபரம் கலெக்டரிடம் இருந்து பெறப்பட்டது. பயிரிடும் உரிமைக்கு பதிலீடாக உடல் உழைப்பை வழங்கவேண்டும் என விதிப்பதை அனுமதிக்கக்கூடாது என அரசாங்கம் முடிவுசெய்தது. இந்த முடிவினை நடைமுறைப்படுத்துவதன் முதற்படியாக யாழ்ப்பாண மாவட்ட கலெக்டர் தமக்கும், தமக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் உத்தியோக நிமித்தம் சுற்றுப்பயணம் செய்யும் போது சுற்றுலா கொட்டகைகள் இலவசமாக அமைத்துக்கொடுக்கும் வழக்கத்தை நிறுத்தினார். முன்னைய வழமைகளின்படி குறிப்பிட்ட சாதியை சேர்ந்தோர் இலவச ஊழியம் செய்து கலெக்டரும், அதிகாரிகளும் தங்குவதற்கான கொட்டகைகளை அமைத்துக்கொடுப்பதுண்டு. இது கலெக்டரின் கட்டளைப்படி நிறுத்தப்பட்டது.
மேற்குறித்த சீர்திருத்தப் பணிகள் இடம்பெற்றபோதும் தமிழ்ச்சமூகத்தின் உள்ளார்ந்த கூறாக சாதி நீடித்து வந்தது. 1830ஆம் ஆண்டில் வட இலங்கையின் உயர்சாதி தலைமைக்காரர் ஒருவர், சமூகத்தில் தாழ்நிலையில் இருக்கும் சாதியினர் தம்மைப் போன்றவர்களுக்கு வழமைகளின்படி கொடுக்கவேண்டிய மரியாதையை இப்போது கொடுப்பதில்லை என அரசாங்க அதிபருக்கு முறையிட்டார். அடுக்கமைவுடைய சாதிக்கட்டமைப்பில் உயர்சாதியினருக்கு தாழ்நிலையில் உள்ள சாதியினர் பலவகையான நடத்தைகள் மூலம் உயர்வு தாழ்வை குறியீட்டு வடிவில் வெளிப்படுத்துவதுண்டு. இதனையே இந்த உயர்சாதி தலைமைக்காரர் குறிப்பிட்டார். ஆயினும் சாதி அந்தஸ்து அடிப்படையிலான நடத்தை முறைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் அங்கீகாரம் கொடுக்க முடியாதென்பதால் அந்தக் காலகட்டத்தில் கலெக்டராக இருந்த பீ. ஏ. டைக் தலைமைக்காரரின் முறையீட்டை ஏற்கவில்லை. ஆனால் நிர்வாக வேலைகளைச் செய்விப்பதற்கு தலைமைக்காரர்கள் அவசியமானவர்களாக இருந்ததால் அவர்களை திருப்திப்படுத்த வேண்டியவராகவும் டைக் இருந்தமையால், ‘நீங்கள் விரும்பினால் ஆளுநருக்கு முறையீடு செய்யலாம்’ என்று தலைமைக்காரரிடம் கூறினார்.
அன்றைய காலத்தில் பிரித்தானிய அரச இயந்திரத்தை இயக்குபவர்களாக கிராமமட்டத்தில் கீழ்நிலையில் பல தலைமைக்காரர்கள் இருந்தனர். இவர்களோடு பல கிராமங்கள் உள்ளடக்கிய பெரும்பகுதிகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரிகளாக தலைமைக்காரர்கள் சிலரும் இருந்தனர். இவ்விருவகை தலைமைகாரர்களையும் திருப்திப்படுத்தாமல் பிரித்தானியர் நிர்வாகத்தை இயக்க முடியாத நிலை இருந்தது.
நிர்வாகத்தின் இன்றியமையாத பகுதியினராகவும், அரசின் முகவர்களாகவும் விளங்கிய தலைமைக்காரர்களை புறந்தள்ளி மாகாண நிர்வாகத்தை இயக்க முடியாது என்பதைப் பிரித்தானியர் உணர்ந்தனர். இந்தக் காரணத்தால் தலைமைக்காரர்களுக்கு உரிய மரியாதையை வழங்குதல் வேண்டும் என பிரித்தானிய நிர்வாகம் விரும்பியது. ‘கடந்த சில ஆண்டுகளில் உயர்நிலைத் தலைமைக்காரர்களின் நடத்தையில் மாற்றத்தை அவதானிக்கமுடிகிறது. அவர்கள் தமக்கு மரியாதை தரப்பட வேண்டும் என முறையிடுகின்றனர்’ என்று அரசாங்க அதிபர் 1844இல் குடியேற்ற நாட்டு செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டார்.
கச்சேரி வளவில் கட்டப்பட்ட கிணறு
உயர்நிலை தலைமைக்காரர்கள் கச்சேரிக்கு வரும்பொழுது தண்ணீர் குடிப்பதற்கு எல்லோருக்கும் பொதுவான கிணற்றைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இதன்போது தாம் அவமதிப்புக்கு உட்படுவதாக கருதினர். தீட்டுப்பட்ட நீரை குடிக்கவேண்டியிருப்பதாக அவர்கள் முறையிட்டனர். அரசாங்க அதிபர் அவர்களுக்கு தனியான கிணறு ஒன்றை வெட்டுவித்து கொடுத்தார். தலைமைக்காரர்களின் சுயமரியாதை பேணப்படவேண்டும், அவர்களுக்குரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என அரசாங்க அதிபர் கருதினார். (SLNA – 8/133 – NO 355 குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு எழுதிய கடிதம்) பழமையான வழமைகளும் சாதிப்பாகுபாடும் தொடரக்கூடாது என அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவித்தல் கிடைத்ததும், அரசாங்கக் கொள்கைகளைச் சிறிதும் வழுவாது நடைமுறைப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாகவிருந்த அரசாங்க அதிபர், அம்மைநோய் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விபரங்களைப் பதிவுசெய்யும்போது நபர்களின் சாதிப்பற்றிக் குறிப்பிடுதல் ஆகாது என அறிவித்தார். அரசாங்க அதிபர் வடமாகாணத்தின் வருவாய் அதிகாரியுமாவார். அவர் வருவாய் அதிகாரி என்ற முறையில் உயர்நீதிமன்றத்திற்கு, மாகாணத்தின் மஜிஸ்திறேட் நீதிமன்றங்களின் வழக்கு விபரங்கள் பற்றிக் குறிப்பிட்ட படிவங்களில் தகவல்களை அனுப்பவேண்டியிருந்தது. அவற்றில் மனுதாரர், எதிராளி ஆகிய தரப்பினரின் விபரங்களை பதியும்போது சாதி பற்றியும் குறிப்பிடவேண்டியிருந்தது. இது 1845ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு முரணாக இருப்பதையும், வேறு எந்தப் பதிவேடுகளிலும் தாம் சாதிப்பெயர்களைக் குறிப்பிடுவதில்லை எனவும், அரசாங்க அதிபர் சுட்டி காட்டினார். (SLNA – 6/1917B – NO 213 அரசாங்க அதிபர் குடியேற்றநாட்டு செயலாளருக்கு யூலை 20, 1847இல் எழுதிய கடிதம்)
பருத்தித்துறைச் சம்பவங்கள்
1849ஆம் ஆண்டு மார்ச் மாதம் பருத்தித்துறையிலுள்ள புலோலி என்ற கிராமத்தின் இரும்புவேலை செய்யும் கொல்லர் சாதியினரால் அரசாங்க அதிபருக்கு முறைப்பாடு ஒன்று அனுப்பப்பட்டது. அந்த முறைப்பாட்டில் கிராமத்தில் தமக்கு எதிராக நிலவும் சாதி ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் விபரித்திருந்தனர். அரசாங்க அதிபர் இது தொடர்பில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. தலைமைக்காரராக அப்பகுதியில் கடமையாற்றுபவர் தம் சாதியில்லாத உயர்சாதியினராக இருப்பதால் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதிப் பிரச்சினை பற்றிய இந்த விடயத்தை தாம் விசாரிக்கலாமா அல்லது தலையிடாமல் விலகியிருப்பது மேலானதா என்று தம் இக்கட்டான நிலை பற்றி அரசாங்க அதிபர் குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு தெரிவித்தார். சாதி ஒரு நாற்றமெடுக்கும் விடயம் அதில் இருந்து தூரநிற்பதே மேல் என அரசாங்க அதிபர் கருதினார் என்றே இதிலிருந்து தோன்றுகிறது.
மேற்குறிப்பிட்ட சம்பவம் உயர்சாதி வேளாளர்களுக்கும், அவர்களுக்கு அடுத்த படிநிலையில் இருப்போர் எனக்கூறத்தக்கவருக்கும் இடையிலானது. பருத்தித்துறைப் பகுதியில் சலவைத்தொழிலாளர், முடித்திருத்துவோர் ஆகியோருக்கும் வேளாளருக்கும் இடையிலான பிணக்கு ஒன்றும் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. தமது தொழில்களைச்செய்வதற்கு உயர்சாதியினர் தடைவிதிப்பதாக இவர்கள் முறையிட்டனர். இவ்வாறான அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்பதை கண்டறிந்த அரசாங்க அதிபர் அப்பகுதி தலைமைக்காரர்கள் நீதியாக நடப்பதற்கு தவறியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார். இரும்பு வேலை செய்யும் சாதியினர் அனுப்பிய முறைப்பாட்டு கடிதத்திலும், தம்சாதியைச் சேர்ந்த ஒருவர் தலைமைக்காரராக இருந்திருந்தால் தாம் அவருக்கு முறையிட்டிருப்போம். அவர் தம்முறைப்பாடுகளை அனுதாபத்தோடு கேட்டிருப்பார் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த சம்பவங்களின் அடிப்படையில், 1850ஆம் ஆண்டைத் தாண்டும் வேளையிலும் இத்தகைய நடைமுறைகள் நீடித்தன என்பதை அவதானிக்க முடிகிறது. (SLNA – 6 2097 – NO 250 அக்டோபர் 1ஆம் திகதி 1851 கடிதம் இன்னும் சில)
நீதிமன்ற வழக்குகள்
இந்தக் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்குநாட்டின் சமத்துவக் கருத்துக்கள் உட்புகுந்திருந்தன. இருந்த போதும் சாதிப்பிரிவினைகளும் சாதி நடைமுறைகளும் நீடித்தன. வெவ்வேறு சாதிக்குழுக்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. அத்தகைய பிணக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டாலும் அவை இயல்பான நிகழ்வுகளாக இருந்தன. 1862ஆம் ஆண்டு வெவ்வேறு சாதிக்குழுக்களிடையே சாவகச்சேரியில் மோதல்கள் இடம்பெற்றன. அவ்வேளை நிர்வாகத் துறையினர் அம்மோதல்களில் தலையிடாது விலகிநின்று கொண்டு, நீதிமன்றத்தையே அப்பிணக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும்படி விட்டனர். ஊர்காவற்துறையில் றோமன் கத்தோலிக்கத்தைச் சேர்ந்த இருபிரிவினருக்கிடையே இறந்தவர்களின் உடலை புதைத்தல் தொடர்பான பிணக்கு ஒன்று எழுந்தது. “சுதேச வழமைகள் தொடர்பான இந்த விடயத்தில் தலையிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை” எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் நிவாரணத்தை பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
அரசாங்க அதிபரின் 1862ஆம் ஆண்டு கடிதத்தில் சாதிய பிணக்குகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. (SLNA – 10/ 1454 – 421 NO 293) இவை போன்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் வர்க்க முரண்பாடுகள் எழுந்தன என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 1863ஆம் மே மாதத்தில் மட்டும் இதுபோன்ற மூன்று சச்சரவுகள் எழுந்தன.
தச்சுத் தொழில் செய்பவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் மகளின் திருமணத்திற்கு பந்தல் ஒன்று அமைத்து, அதற்கு வெள்ளைச் சீலை கட்டிக்கொண்டாடினார். உயர்சாதியினரான ஊரவர்கள் சிலர் இவ்வாறு அவர் கொண்டாடுவதை எதிர்த்ததோடு பலாத்காரத்தை உபயோகித்து குறிப்பிட்ட நபரை தடுத்து திருமணவிழாவைக் குழப்புவதற்கு முனைந்தனர். இதில் தலையிட்டு அமைதியை பேணுவதற்கு தலைமைக்காரரால் இயலாமல் போயிற்று. இந்நிலையில் உதவி அரசாங்க அதிபர் அவ்விடத்திற்கு நேரில் வந்து சமூகம் கொடுத்ததனால் அந்த விழா உயர்சாதியினரால் குழப்பப்படாமல் நடைபெற்றது.
பிரித்தானியர் உத்தியோக முறையில் சாதியை ஒருபோதும் அங்கீகரிக்காதபோதும், யாரும் சட்டத்தின் முன் சமம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கவில்லை, பல சந்தர்ப்பங்களில் விட்டுகொடுப்புகள் இடம்பெற்றன. அமைதியாக ஆட்சியை நடத்துவதற்காக சாதிபேதம் காட்டும் நடைமுறைகளை பொறுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. பந்தல் ஒன்றை ஒருவர் அமைத்த பின்னர், அதற்கு வெள்ளை கட்டுவதாயின் முதன்மைத் தலைமைக்காரரிடம் விண்ணப்பம்செய்து அனுமதி பெற்ற பின்னர்தான் சலவைத் தொழிலாளி வெள்ளை சேலைகளை கட்டிப் பந்தலை அலங்கரிக்க முடியும் என்ற விதிமுறையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. குறித்த தரமும், அந்தஸ்தும் உடைய வேளாளர் உயர்சாதியினருக்கு மட்டுமே எவ்வித அனுமதியும் பெறாமல் சுதந்திரமாகப் பந்தல் அமைத்து வெள்ளை சேலை கட்டும் உரிமை இருந்தது.
மஜிஸ்திரேற்றுக்கள் சாதிப் பிணக்குகள் விடயத்தில் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் நெகிழ்வுப்போக்கையே கடைப்பிடித்தனர் என அரசாங்க அதிபர் டைக் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார். ‘சட்டத்தை மதிக்காமல் நடப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கு முன்னுதாரணமாக அமையக்கூடிய கடும்தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என நான் கருதுகின்றேன். தாழ்ந்த சாதியினர் எனக் குறிப்பிடப்படுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இப்பொழுது எல்லோரையும் சமத்துவமாக நடத்தும் நிலை உள்ளது. சட்டம் வழங்கும் இச்சுதந்திரத்தை தனிநபர் தடையின்றி அனுபவிக்க வழிசெய்யவேண்டும்’ என டைக் குறிப்பிட்டார். நீதிமன்றுகள் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடும்தண்டனைகளை விதிப்பதன் மூலம் இத்தகைய சட்டமீறல்களைத் தடுக்கலாம் எனவும் அவர் கருதினார்.
டைக் அரசாங்க அதிபராக பதவி ஏற்பதற்கு முற்பட்ட காலமான 1820களில் நீதிமன்றங்கள் உயர்சாதி வேளாளர்களிற்கு சாதகமான சில தீர்ப்புக்களை வழங்கின. உயர்சாதியினரின் சாதிவழமைகளுக்கு ஏற்புடமையும் அங்கீகாரமும் வழங்குவதாக இத்தீர்ப்புகள் அமைந்தன. டைக் அரசாங்க அதிபராகப் பதவியேற்றபின்னர் சாதிப்பாகுபாடு காட்டப்படுவதை அரசாங்கம் அலட்சியம்செய்யமுடியாது என்பதை வலியுறுத்தினார். இதனால் அவர் காலத்தில் நிர்வாக மட்டத்தில் மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்படலாயிற்று (அருமைநாயகம் 1976).
குறிப்பு : ‘CASTE IN NORTHERN SRI LANKA AND BRITISH COLONIAL ADMINISTRATIVE PRACTICE IN THE MID 19TH CENTURY : COMPROMISE AND EXPEDIENCY, என்ற தலைப்பில் 1988 ஆம் ஆண்டு Sri Lanka journal of social sciences (j. s. s) 1988 11 (1&2) என்னும் இதழில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளைஅவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்
தொடரும்.