வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியின் நிர்ணயக் காரணிகளில் ஒன்றாக விளங்கும் நன்னீர் மூலங்கள் இவ்விரு மாகாணங்களையும் விவசாயம் சார் பொருளாதாரம் நிலவும் பிராந்தியங்களாக உருமாற்றக் காரணமாகியுள்ளன. மழைக் காலத்தில் அதிகம் பெறும் நீரைச் சேமித்து வைப்பதன் மூலம், இவ்விரு மாகாணங்களின் 60 சதவீதமான மக்கள் விவசாயம் சார் தொழில் முனைவுகளை தமது நிரந்தர ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். இதனால் இவ்விரு மாகாணங்களின் எழுச்சிமிக்க பொருளாதாரத் தொழில் மூலங்களை உருவாக்குவதில் நீர்ப்பாசனத்துறை காத்திரமிக்க பங்களிப்பை வழங்கி வருகின்றது எனலாம்.
கிழக்கு மாகாணத்தில் 28 பாரிய குளங்களும், 45 நடுத்தரக் குளங்களும், 1613 சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் காணப்படுவதுடன், வடக்கு மாகாணத்தில் 13 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும், 45 மத்தியதரக் குளங்களும், 1740 சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், 1605 சிறிய குட்டைகளும் காணப்படுகின்றன. இவை கிழக்கு மாகாணத்தில் 356,131 ஏக்கர் நிலத்திற்கு நீர் வழங்கும் மூலங்களாகவும், வடக்கு மாகாணத்தில் 269,140 ஏக்கர் நிலத்திற்கு நீர் வழங்கும் மூலங்களாகவும் காணப்படுகின்றன. இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் விவசாயப் பொருளாதாரத்தில் பிரதான பங்கு குளங்களால் சேகரிக்கப்படும் நீரினால் மட்டுமே இடம்பெறுகிறது. நீரின் சேகரிக்கப்பட்ட அளவு மட்டுமே நீர்ப் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில்லை. நீர்ப் பொருளாதாரத்தில் நீரின் பெறுகையளவு (Water Serving) எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவு முக்கியத்துவம் நீரின் பயன்பாட்டுக்கும் காணப்படுகிறது. நீரைப் பெறுவது எவ்வளவு தூரம் அதிகரிக்கப்படுகிறதோ, அதன் சேமிப்பு எவ்வளவு தூரம் அதிகரிக்கப்படுகிறதோ, அதே அளவு அதனைப் பயன்படுத்துவதும் உச்சத்திறன் கொண்டதாக அமையவேண்டும். இது இரண்டிலுமே பல்வேறு குறைபாடுகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்றன.
வடக்கு – கிழக்கின் நீர் மூலங்களும், நீர் பெறுகையும்
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நீர் பெறுகையானது, வடகீழ்ப் பருவகால மழையினால் பெறப்படும் நீரை குளங்களுக்கு எடுத்துவரும் ஆறுகளின் மூலம் இடம்பெறுகிறது. வடக்கு மாகாணத்தில் நீர் வரவை உறுதி செய்யும் ஆறுகளாக மா ஓயா, சூரியனாறு, சவராறு, பழட்டியாறு, முனிடலாறு, கோடலிக்கல்லாறு, பேராறு, பாலியாறு, மருதப்பிளியாறு, தேராவிலாறு, பிரமந்தனாறு, நெத்தலியாறு, கனகராயனாறு, களவலிப்பாறு, அக்கரயானாறு, மண்டக்கல்லாறு, பல்லவராயன்கட்டாறு, சிப்பியாறு, பறங்கியாறு, நாயாறு, அருவியாறு, கல்லாறு, மோதரகமாறு ஆகிய 24 ஆறுகள் காணப்படுகின்றன. இதில் 164 கிலோமீற்றர் நீளமானதும், 3246 சதுர கிலோமீற்றர் நீரேந்துப் பிரதேசத்தைக் கொண்டதுமான அருவியாறும், 134 கிலோமீற்றர் நீளமானதும், 1024 சதுர கிலோமீற்றர் நீரேந்துப் பிரதேசத்தைக் கொண்டதுமான மா ஓயாவும், 86 கிலோமீற்றர் நீளமானதும், 906 சதுர கிலோமீற்றர் நீரேந்துப் பிரதேசத்தைக் கொண்டதுமான கனகராயனாறு ஆகிய 3 பிரதான ஆறுகளே வட மாகாணத்தின் பிரதான நீர்மூலங்களாக உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் 35 ஆறுகள் காணப்படுகின்றன. மாவட்ட ரீதியாக ஆறுகளை நோக்கும் போது, திருகோணமலையில் மகாவலி ஆறு – கந்தளாய் பாலம் போட்டாறு – பானோயா – பன்குளமாறு – குஞ்சிக்கும்பனாறு – புலக்கட்டியாறு – யானோயா ஆகிய 8 ஆறுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றேல் ஓயா – தும்பங்கேணியாறு – மணற்பிட்டியாறு – பதாதியாறு – வெற்றியாறு – மகலவெட்டுவானாறு – முந்தானையாறு – மீயாங்கல்லாறு – மதுறுஓயா – புளியம்போட்டாறு – கிருமிச்சியோடை – பொடுகடஆறு – மண்டலாறு – மகறாச்சியாறு ஆகிய 15 ஆறுகளும், அம்பாறை மாவட்டத்தில் கல்ஓயா – நாமலோயா – அம்பலன ஓயா – பல்லனோயா – ஒக்காலோயா – கலுக்கலோயா – முன்டினியாறு – வெலிஓயா – இட ஓயா – கரண்டோயா ஆகிய 11 ஆறுகளும் காணப்படுகின்றன.
திருமலையில் 13,117 ஏக்கர் அடி நிலப்பரப்பிலும், மட்டக்களப்பில் 4,851 ஏக்கர் அடி நிலப்பரப்பிலும், அம்பாறையில் 2,498 ஏக்கர் அடி நிலப்பரப்பிலும் நீரேந்துப் பிரதேசங்கள் காணப்படுவதுடன், மழைக்காலங்களில் திருமலையில் 31,073 கன அடி நீரும், மட்டக்களப்பில் 3,644 கன அடி நீரும், அம்பாறையில் 1,208 கன அடி நீரும் ஒரு போகம் ஒன்றின் போது சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் மகாவலி தவிர்ந்த ஏனைய வடக்கு – கிழக்கு ஆறுகளில், செப்டெம்பர் தொடக்கம் ஜனவரி வரையுமான பெரும் போகத்தில், வடகீழ்ப் பருவப்பெயர்ச்சி காற்றின் மூலம், பெருமளவான நீர் பெறப்படுகிற ஏனைய பருவ மாறுதல்கள் மூலம், சிறியளவு ஒடுக்கல் மழையும் பெறப்பட்டு வருகிறது.
இந்த ஆறுகளின் மூலம் பெறப்படும் நீரில் 30 சதவீத நீரையே சேகரித்து வைத்துக்கொள்ளக் கூடிய இயலளவு காணப்படுவதால் மிகுதி நீர் கடலுக்குச் செல்கிறது. பருவகால மழை மூலம் கிடைக்கப்பெறும் நீரைச் சேகரித்தல், பல புதிய குளங்களை அமைத்தல், அணைக்கட்டுகளை உயர்த்துதல், நீர் வரத்தை உயர்த்தும் வகையில் ஆறுகளைச் சுத்தப்படுத்துதல், ஆற்றோரங்களைப் பாதுகாத்து நீர் வரத்தை உறுதிசெய்தல், நீரேந்து பிரதேசக் காடுகளைப் பராமரித்தல், தவறான முறையில் ஆறுகளை மறிப்பதை நிறுத்துதல், ஆறுகளில் சேரும் வண்டல் மண்ணைச் சரியான அளவில் அகற்றுதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம், வடக்கு – கிழக்கின் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். ஆறுகளை மையமாகக் கொண்ட குளங்களை முகாமை செய்து, நீரைச் சேமிப்பதிலும் பாதுகாப்பதிலும் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் மத்திய, மகாணப் பிரிவுகளும், கமநல சேவைத் திணைக்களமும் ஈடுபட்டுள்ளன. வடமாகாணத்தில் தேசிய நீர்பாசனத் திணைக்களத்தினால் மன்னார் மாவட்டத்திலுள்ள கட்டுக்கரைக் குளம் – அகத்தி முறிப்புக் குளம் – வியாடிக் குளம் ஆகியவையும், வவுனியா மாவட்டத்திலுள்ள பாவற்குளம் – முகத்தான் குளம் – ஈருபெரியாறுக்குளம் – மருதமடுக்குளம் – இராசேந்நதிரக் குளம் – கல்லாறுக் குளம் ஆகியனவும் நிர்வகிக்கப்படுவதுடன், மீதமுள்ள அனைத்து நடுத்தர, சிறிய குளங்களும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. இதேபோல் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையிலுள்ள கந்தளாய்க் குளம் – வெண்டர்சன் குளம் – மொறவேவா – அல்லை விஸ்தரிப்புத் திட்டம் – வநெல – ஐறைந்ஐனவேவா – மகாதில்வேவா – யான் ஓயா அணைக்கட்டு ஆகியனவும், மட்டக்களப்பில் உன்னிச்சைக்குளம் – றுகாம்குளம் – வாகனேரிக்குளம் – நவக்கிளிக்குளம் ஆகியனவும், அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரம் – நாமல் ஓயா – பல்லன ஓயா – இகால் ஓயா – அம்பலன் ஓயா – பன்னலகம் – றம்புக்கன் ஓயா – றொட்டை – கலுக்கல் ஓயா ஆகிய குளங்களும் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முகாமை செய்யப்படுகிறது.
இந்த நீர் முகாமைத்துவ ஏற்பாடுகளில், வட மாகாணத்தில் விசேடமாக உப்புநீர் அணைக்கட்டுகளும், நீரேரி அபிவிருத்தித் திட்டங்களும் மேலதிகமாகக் காணப்படுகின்றன. வறண்ட பிரதேசத்தின் நீர் மூலங்கள் என்ற வகையில், வடமராட்சி நீரேரி, உப்பாறு நீரேரி ஆகிய இரண்டும் கடல் நீரேரிகளை மறித்து நன்நீரை முகாமைத்துவப்படுத்தக் கூடிய வாய்ப்புள்ளதாக அமைந்திருக்கின்றது. வடிகாற் திட்டம் என்றவகையில் வழுக்கியாறு வடிகால் திட்டமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகிறது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான நீரேந்துப் பிரதேசங்களும், நீர் வரும் ஆறுகளும் காணப்படும் போதும், பருவகாலங்களில் பெறப்படும் மழையின் போது மட்டுமே நீர் வரத்து உண்டாகுவதனால், நீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்தும் பொறிமுறையே பிரதானமாக அமைந்திருக்கின்றது. இந்த வகையில் நீர் வளத்தை முறையாகச் சேமித்துப் பயன்படுத்துவது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்றன.
1. நீர்ப்பாசன வரத்தை உறுதிசெய்யும் ஆறுகளின் முகாமைத்துவம்.
2. நீரேந்துப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் காடழிப்பு முற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்.
3. நீர்ச் சேமிப்புக் குளங்களை அபிவிருத்தி செய்வதற்குத் தேவைப்டும் அதிக முதலீடும், முதலீட்டு வாய்ப்பின்மைகளும்.
4. நீர் வழங்கலுக்கெனப் பாவிக்கப்படும் பரவல் நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற குளங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவு காணப்படாமை.
5. நீர்ச் சேமிப்பை அதிகரிப்புச் செய்வதற்காகத் தேவைப்படும் புதிய வாய்ப்புகள் பற்றிய ஆய்வுகளின் பலவீனங்கள்.
நீர்ப்பாசன வரத்தை உறுதிசெய்யும் ஆறுகளின் முகாமைத்துவம்
பருவகால மழையைப் பெற்று, ஆண்டு முழுவதும் நீரைச் சேமிக்கும் குளங்களிலிருந்து முழுமையான பயனைப் பெறுவதற்கு, குளங்களின் நீர் வரத்தை உறுதி செய்யும் ஆறுகளினைச் சுத்தப்படுத்தி வைத்திருத்தல், இயற்கையின் சார்புக்கேற்ப அவற்றை இயங்க வைத்தல் ஆகிய செயற்பாடுகள் நடைமுறையில் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளன. நீண்ட காலமாக ஆறுகள் சுத்தப்படுத்தப்படாமையால் குளங்களுக்கான நீர் வரத்து குறைவடைந்ததுடன், பொருத்தமற்ற பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்படுகின்றது. நீர் வரத்துக் குறைவதனால், பல குளங்கள் அவற்றின் இயலளவு மட்டத்திற்கும் அதிகமாக நீரைப் பெறமுடியாது உள்ளன. புதிதாகத் திட்டமிடப்படும் குளங்களும் கூட, நீர் வரத்துக் குறைந்து பராமரிப்பின்றிக் காணப்படுகின்றன.
நீரேந்துப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் காடழிப்பு முற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்
நீரைப் பெறும் அளவானது, நீரேந்துப் பரப்பில் காணப்படும் காடுகளின் அளவினாலும் கால நிலைக்குச் சார்பான தன்மையினாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு மோதல் காரணமாக நீரேந்துப் பரப்பின் காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. யுத்தத் தேவைகளுக்காக வகைதொகையின்றி வெட்டப்பட்ட மரங்களும், காடுகளின் அழிப்பும் நீரேந்துப் பரப்பிலுள்ள மழைக்காடுகளை சிதைவுக்குள்ளாக்கியுள்ளன. நீண்ட கால மரங்களும் சட்டவிரோத மரக் கடத்தல்காரர்களினால் அழிக்கப்படுவதனால், மழைக்காடுகளின் பசுமைப் போர்வைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது பருவ காலங்களின் மழைபெறும் அளவைக் குறைத்துள்ளது. இதனால் குறித்த பிரதேசங்கள் எல்நினோ – வால்நினோ தாக்கங்களினால் அதிக மழைப்பொழிவு, அதிக வறட்சி என்றவாறான பாதிப்புகளுக்கும் உட்பட்டு வருகின்றன. அதிக மழை, தொடர்ந்து ஒரு சில மணித்தியாலங்களில் கிடைக்கும்போது, நீரைச் சேமித்து வைப்பதற்காகச் செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளுமே பாதிப்படைகின்றன.
நீர்ச் சேமிப்புக் குளங்களை அபிவிருத்தி செய்வதற்குத் தேவைப்படும் அதிக முதலீடும், முதலீட்டு வாய்ப்பின்மைகளும்
வடக்கு கிழக்கில் காணப்படும் பெருமளவான குளங்களில் நீர்ச் சேமிப்பை உயர்த்தும் இயலளவு மேம்பாட்டை செய்வதற்கான விரிவான வாய்ப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக குளங்களின் அணைக்கட்டுகளை உயர்த்துவதன் மூலம் நீர்க் கொள்ளளவை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன ஏற்று நீர்ப்பாசன வசதிகளை அதிகரிப்பதன் மூலம் பெருமளவான மேட்டு நிலங்களுக்கு நீர் வசதியை வழங்கக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன. ஆனால் நீர்க் கட்டுகளை உயர்த்துதல், மடைகளை விரிவாக்கல், நீர் விநியோக வழிகளில் புனரமைப்பைச் செய்தல், நீர்ப்பாசனப் பொறிமுறை மாற்றம் மூலம் ஏற்று நீர்ப்பாசனத்தை ஏற்படுத்தல் போன்ற பல பாரிய திட்டங்களுக்கு அதிகளவு மூலதனம் தேவைப்படுகின்றது. இந்த மூலதனத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, நீர்ப்பாசனப் பொருளாதாரம் பலவீனமடைந்து வருகிறது.
நீர் வழங்கலுக்கெனப் பாவிக்கப்படும் பரவல் நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற குளங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவு காணப்படாமை
வட கிழக்கு மாகாணங்களின் நீர் வழங்கல் முறைமையாகவுள்ள பரவல் நீர்ப்பாசன முறைமையில் (Gravity Irrigation), வெள்ளம் பள்ளம் நோக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எல்லாக் குளங்களுமே கட்டளைப் பிரதேசம் (Command Area) எனப்படும் பகுதிகளுக்கு மட்டுமே நீரை வழங்குவதனால், அந்தப் பகுதிகளில் காணி உடமையுள்ளவர்கள் மட்டுமே நீர்ப்பாசன விவசாயிகளாக வர முடிகிறது. அதிக பணமுள்ளவர்கள் ஏக்கர் கணக்கான காணிகளில் விவசாயம் செய்வதனால், நீரின் கிடைப்பனவுக்கேற்ப சமூக நன்மையும் வாழ்வாதார வளர்ச்சியும் பரவல் செய்யப்படுவதில்லை. காணியுடமையுள்ள நிலச்சுவாந்தர்கள் மேலும் மேலும் வசதியடைந்து செல்கின்றனர். பெருந்தொகையான வறிய மக்கள் இந்த வளங்களுடன் எவ்வித தொடர்புபடுத்தலும் இன்றிக் காணப்படுகின்றனர். ஒதுக்கீட்டுக் கொள்கை ஒன்றின் மூலம், செய்கை நிலமற்ற விவசாயிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வீத நீர்ப்பங்கை வருடாந்தம் வழங்க வேண்டும். அல்லது ஏற்று நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை முன்மொழிந்து கொள்வதன் மூலம் நீரின் உரிமையை அதிக விவசாயிகளுக்குப் பரவலாக்கலாம். பரவல் நீர்ப்பாசன அபிவிருத்திக் கட்டமைப்புகளுக்கு அதிக முதலீடு தேவைப்படும் நிலையில், உடனடி அபிவிருத்தியை உருவாக்கி கொள்வதில் பல சிரமங்கள் காணப்படுகின்றன. அதே போல், யுத்தத்தினால் சேதமடைந்த நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளில், பிரதான குளத்தின் அணைக்கட்டுகளும், வாய்க்கால்களும் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆனால் விநியோக வாய்க்கால்களும், வயலுக்குச் செல்லும் பாதைகளும் இன்னமும் புனரமைப்புச் செய்யப்படவில்லை. இதனால் குளங்களில் சேகரிக்கப்படும் நீரின் மெய்ப் பயன்பாடு குறைவாகக் காணப்படுவதுடன், உத்தம பயன்பாட்டுக்கு பதிலாக, நீர் இழப்பும் வீணடிப்பும் இடம்பெறுவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
நீர்ச் சேமிப்பை அதிகரிப்புச் செய்வதற்காகத் தேவைப்படும் புதிய வாய்ப்புகள் பற்றிய ஆய்வுகளின் பலவீனங்கள்
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நீர்ப்பாசன அபிவிருத்தியில் இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள், நீர் வீணடிப்பு – நீர்ப் பயன்பாட்டுக் குறைபாடுகள் பற்றியும், நீரின் கொள்திறனை அதிகரிக்கும் வாய்ப்புகள் பற்றியும் பேசுகின்ற போதும், இவை நவீனமயப்படுத்தப்படாத ஆய்வுகளாகவே காணப்படுகின்றன. குறிப்பாக வட மாகாணத்தின் குடி நீர்த் தேவை குறித்தும், நிலத்தடி நீரின் அபிவிருத்தி குறித்தும் முன்மொழியப்பட்ட கலாநிதி ஆறுமுகத்தின் ஆனையிறவு கடல் நீரேரி அபிவிருத்தி முன்மொழிவு, குடாநாட்டுக்கு குடி நீரைக் கொண்டு செல்லும் அருவி ஆறுத் திட்டம், பூநகரிக் குளப் புனரமைப்பு, வன்னேரித் தேவன் குள இணைப்பு, வடமராட்சி நீர்த் திட்டம் போன்றனவெல்லாம் பெருமளவு நிதியுடன் சாத்திய வள ஆய்வாகச் செய்யப்பட்டு, பின்னர் கிடப்புக்குச் சென்றுள்ளன. மீளவும் அபிவிருத்தி பற்றிச் சிந்திக்கும் போது, சாத்திய வள ஆய்வுக்காக மீண்டும் நிதி விடுவிப்புச் செய்ய வேண்டியிருக்கும்.
தொடரும்.