கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை: அறிமுகம்
Arts
26 நிமிட வாசிப்பு

கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை: அறிமுகம்

October 17, 2024 | Ezhuna

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.

I

தென்னாபிரிக்காவில் காந்தியும் பீஜி, மொறிசியஸ் முதலான நாடுகளில் மணிலாலும் புலம்பெயர்ந்த இந்தியரின் விடுதலைக்கான போராட்டங்களைத் தலைமைதாங்கி முன்னெடுத்ததுபோல இலங்கையில் இந்தியத் தொழிலாளரின் மீட்சிக்கான போராட்டங்களை கோ. நடேசய்யர் முன்னெடுத்துள்ளார். தஞ்சாவூரின் தென் ஆற்காட்டில் வளவனூர் கிராமத்தில் ஜனவரி 14, 1887 அன்று பிறந்த அவர் 1920 ஆம் ஆண்டு முதல் மரணிக்கும் வரை (நவம்பர் 07, 1947) இலங்கையில் வாழ்ந்துள்ளார். பத்திரிகை ஆசிரியர், சட்ட நிரூபண சபை – அரசாங்க சபை உறுப்பினர், தொழிற்சங்கவாதி – தொழிற்சங்க ஸ்தாபகர், அரசியல் விமர்சகர், படைப்பாளர், பதிப்பாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல தளங்களில் ஆக்கபூர்வமாக இயங்கியுள்ள அவர், மலையகத் தமிழர் வாழ்விலும் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் அசைவிலும் கனதியான தாக்கங்களைச் செலுத்தியுள்ளார்.

நடேசய்யரின் தொழிற்சங்கம் மற்றும் சமூக அரசியற் செயற்பாடுகள் குறித்துக் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் வெளிவந்துள்ளன. குமாரி ஜயவர்த்தன (1972, 2015), சாரல்நாடன் (1988, 1998), அந்தனி ஜீவா (1990), எஸ். நடேசன் (1993), ஏ.பி. கணபதிப்பிள்ளை (2011), ரஷேல் குரியன் (2015) முதலானோரின் ஆய்வுகள் அவ்வகையில் குறிப்பிட்டுக் கூறத்தக்கன. மு. நித்தியானந்தன் நடேசய்யர் குறித்தும் மலையகம் குறித்தும் எழுதியுள்ள கட்டுரைகளில் நடேசய்யரின் பங்களிப்புகள் பலவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

மேற்படி ஆய்வுகள் நடேசய்யரின் பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், புதிய மூலங்கள் சிலவற்றைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றில் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. அதேவேளை, இவர்களுடைய ஆய்வுகளில் இடம்பெறுகின்ற மூலத்தரவுகளைத் தாண்டி நடேசய்யரின் ஆளுமையை, பங்களிப்பை வெளிப்படுத்துகின்ற ஆய்வுகள் மிகமிக அரிதாகவே வெளிவந்துள்ளன. இந்த இடைவெளிகளுக்கு நடேசய்யரின் எழுத்துகள் யாவும் முறையாக ஆவணப்படுத்தப்படாமையும் பேணப்படாமையும் முதன்மையான காரணங்களாக விளங்கியுள்ளன.

நடேசய்யரின் நூல்கள் திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கப்பட்டுள்ளன. “அவரின் நூல்களைப் பெருந்தோட்ட நிர்வாகமே விலைக்கு வாங்கி எரித்துள்ளது” (Nadesan, 1993: 90); பெரியகங்காணிமார்கள் பலர் நடேசய்யரின் நூல்களைத் தொழிலாளர்களிடம் சென்றடையா வண்ணம் தடுத்துள்ளனர். இதனை நடேசய்யரே தொழிலாளர் சட்ட புஸ்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நடேசய்யருக்குப் பின் அவர் முன்னெடுத்த சமூக, அரசியற் செயற்பாடுகள் முடங்கிவிட்டன. அவருடன் தொடர்புபட்ட எவரும் அவரை முன்னிலைப்படுத்தி அரசியற் சமூக களத்தில் மேற்கிளம்பவில்லை. “நடேசய்யரைப் போன்றவர்களின் முக்கியத்துவம் பின்னால் வந்த பல போலித் தலைவர்களாலும் அவர்களின் துதிபாடிகளாலும் மூடிமறைக்கப்பட்டுள்ளது” (இயக்கம்: டிசம்பர், 1977). அவரின் நூல்களும் நீண்டகாலமாக மறுபிரசுரம் பெறவில்லை. இந்நிலையால் நடேசய்யருடைய நூல்களின் புழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டதெனலாம். பிற்பட்ட காலத்தில் குமாரி ஜயவர்த்தன ‘இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சி’ குறித்த ஆய்வில் நடேசய்யரின் பங்களிப்பினை விரிவாக மதிப்பிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்பின்பே நடேசய்யர் பற்றிய உரையாடல் மெல்ல மெல்ல வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. மலையக மக்கள் இயக்கம் ‘நடேசய்யரை மலையகத்தின் தொழிற்சங்க முன்னோடி’ என முன்நிறுத்தி இயக்கம் பத்திரிகையில் நல்லதொரு அறிமுகக் கட்டுரையை 1977 ஆம் ஆண்டு பிரசுரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சாரல்நாடன், அந்தனி ஜீவா முதலானோரின் அரிய முயற்சிகளால் நடேசய்யர் குறித்த தகவல்கள் தமிழ்ச் சூழலில் பரவலாக அறிமுகமாகின. இருப்பினும் நடேசய்யரின் எழுத்துகளைத் தொகுக்கும் முயற்சியோ நூல்களை மறுபதிப்பு செய்யும் முயற்சியோ இடம்பெறாததால் அவரின் மூல எழுத்துகள் பரவலான புழக்கத்துக்கு வரவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் அந்தனி ஜீவாவின் முயற்சியால் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம்’ இரண்டாம் பதிப்பாக (2018) வெளியிடப்பட்டது. அவ்வெளியீட்டுக்குப் பின்பே இலங்கைத் தமிழ்நாடக வளர்ச்சியில் நடேசய்யரின் பங்களிப்புப் பரவலான வெளிச்சத்துக்கு வந்தது.

அந்தனி ஜீவாவின் முயற்சியைத் தொடர்ந்து நடேசய்யரின் ‘கதிர்காமம்’ என்ற நூலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மறுபதிப்பாக (2021) வெளியிட்டது. அதன்பின்னர் நடேசய்யரின் 75 ஆவது நினைவு ஆண்டையொட்டி ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ (2022), ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ (2022) ஆகிய நூல்களை இக்கட்டுரை ஆசிரியர் (எம்.எம். ஜெயசீலன்) மறுபதிப்புச் செய்ததுடன் தேசபக்தனில் வெளிவந்த நடேசய்யரின் தன் வரலாற்றுப் பதிவான ‘எனது வாழ்க்கையின் நோக்கம்’ என்ற தொடரையும் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். பெ. சரவணகுமார் நடேசய்யரின் ‘ஒற்றன்’ (2022), ‘இந்தியா – இலங்கை ஒப்பந்தம்’ (2022) ஆகிய நூல்களை மறுபதிப்பாகக் கொண்டுவந்ததுடன் 2023 ஆம் ஆண்டுக்கான இர. சிவலிங்கம் ஞாபகார்த்த நினைவுப் பேருரையை, ‘மலையகத்தின் சமூக உருவாக்கத்தில் கோ. நடேசய்யரும் அவரது அறியப்படாத எழுத்துக்களும்’ என்ற தலைப்பில் நிகழ்த்தினார். அதனை இர. சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு சிறு நூலாக வெளியிட்டுள்ளது. இம் மறுபதிப்புகளிலும் அவற்றையொட்டி எழுதப்பட்டவற்றிலும் இடம்பெறும் புதிய தரவுகள் நடேசய்யரின் பங்களிப்புகளை விரிந்த தளத்தில் உரையாடுவதற்கான வெளியினைக் கட்டமைத்துள்ளன; ஏலவே நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளின் காணப்படும் சில தெளிவின்மைகளைத் தெளிவுபடுத்திக்கொள்ளவும் அவற்றின் போதாமைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் இப்புதிய தரவுகள் வழிசமைத்துள்ளன. உதாரணமாக, ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற நூல் குறித்த பதிவுகளைச் சுட்டிக்காட்டலாம்:

நடேசய்யர் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்றொரு சிறுநூலை வெளியிட்டுள்ளார் என்ற தகவல் குமாரி ஜயவர்த்தன அவர்களின் நூலில் இடம்பெற்றுள்ளது (1972: 344). நடேசய்யர் குறித்த விரிவான தகவல்களைத் தந்துள்ள சாரல்நாடனின் பதிவுகளில் இந்நூல் குறித்த வெளிப்படையான குறிப்புகள் எவையும் இடம்பெறவில்லை. இருப்பினும் ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ குறித்த பதிவில் நடேசய்யர் ‘தொழிலாளர்களின் உரிமைகளும் கடமைகளும்’ என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரமொன்று வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்பதிவு இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும், தொழிலாளர் சட்ட புஸ்தகம் ஆகிய நூல்கள் குறித்துச் சில ஐயங்களைத் தோற்றுவிப்பதாக அமைந்துள்ளது. அப்பதிவின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு:

“நடேசய்யர் தனது வழமையான போக்கிலிருந்து விடுபட்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டார். தொழிலாளர் சட்ட புஸ்தகம் என்ற பெயரில் 1929 இல் வெளிவந்த அந்தப் புத்தகத்தைப் பற்றி நடேசய்யர் தனது பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார்… இந்நூலினை வாசித்தறிந்த தொழிலாளர்கள் மூன்று தோட்டங்களில் துரைமார்கள் மிரளும் அளவிற்குக் குழப்பம் விளைவித்தனர்… தன்னுடைய சட்ட புஸ்தகம் அனைத்தையும் பெரிய கங்காணிகள் விலை கொடுத்து வாங்கித் தொழிலாளர்களிடம் போகாது பதுக்கிக் கொண்டதைக் கவனித்த நடேசய்யர், தொழிலாளர்களைச் சந்தித்து உரையாற்றும் கூட்டங்களில் ‘தொழிலாளர்களின் உரிமைகளும் கடமைகளும்’ என்ற தலைப்பில் சட்ட புஸ்தகத்திலுள்ள முக்கிய அறிவுரைகள் சிலவற்றை அச்சடித்துத் துண்டுப்பிரசுரங்களாக விநியோகித்தார்… தன்னை அத்தனை எளிதில் எதிரிகள் வெல்ல முடியாது என்ற நிலைமை உருவாகியிருப்பதை உணர்ந்த நடேசய்யர், மீண்டும் சட்ட புஸ்தகத்தை அச்சில் நூல் வடிவில் கொண்டு வந்தார். 1939 இல் வெளியிடப்பட்ட அந்த நூல் தொழிலாளர்களின் அமோக ஆதரவைப் பெற்றது…” (சாரல்நாடன், 1988: 136-140).

இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் என்ற சிறுநூல், 1928 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதை தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முதற் பதிப்பிலிருந்து கண்டுகொள்ள முடிகிறது. இந்நூலினுடைய விரிவாக்கமாகவே 1939 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள தொழிலாளர் சட்ட புஸ்தகம் அமைந்துள்ளது. அந்நூலின் முன்னுரையில் இடம்பெறும், “1928-ம் வருஷம் நான் ஒரு புஸ்தகம் வெளியிட்டிருந்தேன். அப்புஸ்தகங்கள் தொழிலாளர்களிடம் சேராமல் பல பெரிய கங்காணிமார்களும் முயற்சி எடுத்தார்கள். 1928ம் வருஷத்திற்குப் பிறகு சட்டங்களில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. புதிய சட்டங்கள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் இப்புஸ்தகத்தில் சேர்த்திருக்கிறேன்” (நடேசய்யர்: 1939) என்ற குறிப்பும் அதனை உறுதிசெய்கின்றது. இந்நிலையால், சாரல்நாடனின் மேற்படி முடிவை மாற்றி எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மீனாட்சியம்மாள் படைப்புகள் பற்றிய கண்டுபிடிப்புகளும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் புதிய வெளிச்சங்களை ஏற்படுத்தியுள்ளன. சான்றாக, ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்’ பற்றிய புதிய செய்திகளைக் குறிப்பிடலாம். அந்நூலில் உள்ள பாடல்கள் மீனாட்சியம்மாளால் எழுதப்பட்டவையாகும். அது குறித்த சாரல்நாடனின் பதிவு பின்வருமாறு அமைந்துள்ளது:

“1937ஆம் ஆண்டு கொழும்பு கமலா பிரஸ்ஸிலிருந்து இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம் என்ற நாடக நூலை அய்யர் வெளியிட்டார். அதில் மீனாட்சியம்மையால் இயற்றப்பட்ட பல பாடல்கள் இணைக்கப்பட்டிருந்தன… மீனாட்சியம்மை 1936இல் முழுநேர அரசியல் பிரசாரகராகிவிட்டிருந்தார். அதன் உச்சகட்டமாக 1937 அக்டோபர் 31இல் காலிமுகத்திடலில் அவரது பாடலியற்றும் திறமைக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த அய்யர், அவரது திறமையை அதே ஆண்டில், தான் வெளியிட்ட நாடக நூலில் பயன்படுத்திக்கொண்டார்” (2015: 32)

இங்கு 1937 இல் மீனாட்சியம்மாளின் பாடலியற்றும் திறமைக்குக் காலிமுகத்திடலில் (பிரேஸ் கிரேடிலிக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டம்) பெரும் வரவேற்பு கிடைத்தபின்பே நடேசய்யர் அதே ஆண்டில் தான் வெளியிட்ட நாடக நூலுக்கு மீனாட்சியம்மாளின் பாடல்களைப் பயன்படுத்திக்கொண்டார் என்ற கருத்தினைச் சாரல்நாடன் பதிவுசெய்துள்ளார். ஆனால், மேற்படி நாடகம் அச்சில் வெளிவர முன்பே அதன் பாடல்கள் மட்டும் 1931 ஆம் ஆண்டு ‘இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு’ என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இந்நாடகத்தை 1928 ஆம் ஆண்டே நடேசய்யர் வெளியிடத் திட்டமிட்டிருந்துள்ளார். நடேசய்யரின் ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற சிறுநூலில் அவரின் ‘சுந்திரம் அல்லது அந்தரப்பிழைப்பு’ என்ற நூல் குறித்த விளம்பரம் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்நூலில் இடம்பெறும் விளம்பரத்திற்கு அமைய ‘சுந்திரம் அல்லது அந்தரப்பிழைப்பு’ என்ற நூல் வெளிவரவில்லை. சிறிய இடைவெளிக்குப்பின் 1937 ஆம் ஆண்டு ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம்’ என அந்நூல் வெளிவந்துள்ளது. திட்டமிட்டபடி அந்நூலை வெளியிட முடியாமற்போனதால் அதில் அடங்கியிருந்த பாடல்களை மட்டும் ‘இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு’ என இரண்டு பாகங்களாக முதலில் வெளியிட்டுள்ளனர். ‘இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு’ முதற்பாகத்திற்கு மீனாட்சியம்மாள் எழுதியுள்ள முன்னுரையில் இடம்பெறும் பின்வரும் குறிப்புகளும்,

“இலங்கைத் தோட்டங்களில் வேலைசெய்யும் 8 லட்சம் இந்தியத் தொழிலாளர் நிலைமையைப் பற்றி சாதாரண சனங்கள் அறிய வேண்டியது மிக்க அவசியமாகிவிட்டது. இத்தகைய பிரசாரத்திற்கு நாடகங்களே தக்க சாதனங்களாகும். அந்நோக்கம் பற்றியே தோட்டத் தொழிலாளர் நாடகம் ஒன்று எழுதப்பெற்று வருகின்றது. அந்நாடகத்தில் சேர்க்கப்பெற்றுள்ள சில பாடல்களைச் சேர்த்து, ஓர் சிறு புஸ்தகமாய் இப்புஸ்தகம் பிரசுரிக்கப் பெற்றிருக்கிறது.”

அதன் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் “… தொழிலாளர் நாடகம் கூடிய சீக்கிரம் வெளியிடும் வண்ணம் இப்புஸ்தகங்களை வாங்கி என்னை ஆதரிப்பீர்கள் எனக் கருதுகிறேன்” என்ற குறிப்பும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

நடேசய்யர் மற்றும் மீனாட்சியம்மாள் எழுத்துகள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளால் மேற்கூறியவாறான புதிய வெளிச்சங்கள் ஏற்பட்டுள்ளன. இவை நடேசய்யரின் பங்களிப்பினை மீள் உரையாடலுக்கு உட்படுத்தவேண்டிய தேவையைத் தோற்றுவித்துள்ளன. அத்தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்வதாக அமையவுள்ள இத்தொடர், கிடைக்கப்பெற்றுள்ள புதிய தரவுகளின் பின்புலத்தில் நடேசய்யரின் நூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் அறிமுகப்படுத்துவதையும் அவற்றை மதிப்பிடுவதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நடேசய்யரின் முதலாவது நூலான ‘கணக்குப் பதிவு நூல்’ 1914 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அவரின் இறுதி நூலான ‘கதிர்காமம்’ அவர் இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் 1946 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அதனால் இத்தொடருக்குக் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ என்ற (உப) தலைப்பு இடப்பட்டுள்ளது.

II

பெருந்தோட்ட நிர்வாக அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்ட தொழில்நிலைமை, மிகக்குறைந்த ஊதியம், அதிதீவிர சுரண்டல், சமூகநலச் செயற்பாடுகளின்மை, கடுமையான கட்டுப்பாடுகள் முதலானவற்றைக் கொண்டிருந்த பெருந்தோட்ட அமைப்பு, தொழிலாளர்களின் மேல்நோக்கிய சமூகப் பெயர்ச்சியை இறுக்கமாக மட்டுப்படுத்தியது. இந்நிலையால் இலங்கையில் குடியேறி பல தசாப்தங்கள் கடந்தபின்பும் இந்தியத் தொழிலாளர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. ஏறக்குறைய இலங்கையில் குடியேறி ஒரு நூற்றாண்டு கடந்தபின்பே (1920 களில்) அவர்களின் வாழ்க்கை நிலைமையில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

குடியேற்ற நாடுகளில் வாழ்கின்ற இந்தியர்கள் குறித்த இந்தியாவின் அக்கறை மற்றும் தலையீடு, சர்வதேச ரீதியில் நிகழ்ந்தேறிய மாற்றங்கள், உழைக்கும் வர்க்க எழுச்சி முதலானவை இலங்கைப் பெருந்தோட்டத் தொழிலாளர் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அடித்தளங்களை இட்டன; பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் குறித்த உரையாடல்கள் பரவலாக மேற்கிளம்பத் தொடங்கின; இந்திய அரசு குடியேற்ற நாடுகளில் வாழும் தொழிலாளர்களைக் கருத்திற்கொண்டு சிறப்புச் சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுவந்ததுடன் தொழிலாளர் நலன்களைப் பேணுமாறு இலங்கைக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தது; இலங்கையிலும் தொழிலாளர் நலனைக் கருத்திற்கொண்ட புதிய சட்ட ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன; இந்தியர்களுக்கெனத் தனியான அரசியல் பிரதிநிதித்துவம் இலங்கையில் வழங்கப்பட்டது; பெருந்தோட்டக் கல்வியில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டது. இத்தகைய மாற்றங்கள் இடம்பெறத் தொடங்கிய சூழலிலேயே அம்மக்களுக்கான விடியலில் கோ. நடேசய்யர் தலைமை தாங்கிச் செயற்படத் தொடங்கியுள்ளார்.

நடேசய்யர் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலத்தில் காலனித்துவ எதிர்ப்பையும் சுதேசிய முன்னேற்றத்தையும் கருத்திற்கொண்டு இயங்கியுள்ளார். வங்காளப் பிரிவினையை அடுத்து வேகம்பெற்ற இந்திய விடுதலையுணர்வினால் உந்தப்பட்ட அவர், ஆங்கிலப் பொதுக்கல்வியைத் துறந்து, கைத்தொழில் கல்வியை நாடியுள்ளார். முதலில் சென்னை ‘கவர்ன்மெண்டால்’ முன்னெடுக்கப்பட்ட நெசவுக் கைத்தொழில் பயிற்சிபெற்று, அத்தொழிலில் சிலகாலம் இருந்துள்ளார். பின்னர் வியாபாரக் கல்வியில் டிப்ளோமா பெற்று தஞ்சை கலியாண சுந்தரம் உயர்தரக் கலாசாலையில் வியாபாரப் பயிற்சிப் போதனாசிரியராகக் கடமையாற்றியுள்ளார். அக்கல்லூரியில் கடமையாற்றுங் காலத்தில் பிறமொழியிலுள்ள சகல சாஸ்திரங்களும் தமிழ்மொழியில் வெளிவருவதால் தமிழ்மொழியும் தமிழ்ச் சமூகமும் விருத்தியடையும் என்ற நோக்கில் கணக்குப் பதிவு நூல், கணக்குப் பரிசோதனை நூல், இன்ஷியூரன்ஸ், ஆயில் என்ஜின், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிர்வாகங்களும் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

“மேற்படி நூல்கள் சென்னை கவர்ன்மெண்டாரால் அங்கீகரிக்கப்பட்டிருந்தபோதும் தமிழ் மக்களுடைய ஊக்கங்குறைவால் அவை நாவல்கள் போல விற்று நல்ல வருவாயைத் தரவில்லை” (தேசபக்தன் – 03.09.1924) என்று அக்காலத்து வாசிப்புச் சூழலைப் பதிவுசெய்துள்ள நடேசய்யர், வருவாய் கிடைக்காத போதிலும் தான் தொடர்ந்து அம்முயற்சியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தில் துப்பறியும் நாவல்கள் மிகுந்த பிரபல்யம் பெற்றிருந்துள்ளன. எண்ணிக்கையளவில் அதிகம் வெளிவந்துள்ள அந்நாவல்கள் விற்பனையிலும் முன்னணி வகித்துள்ளன. அதனையே நடேசய்யர் நாவல்கள் போல் தன் நூல்கள் விற்பனையாகவில்லை என்கிறார். இப்போக்கினை மனங்கொண்டே அவர் ‘ஒற்றன்’ என்ற துப்பறியும் நாவலை எழுதியுள்ளார் எனலாம். நூல்களாக வெளியிடுவதைக் காட்டிலும் பத்திரிகைகளில் தகவல்களை வெளியிடுவது அதிக பயனளிக்கும் எனக்கருதி வியாபாரம், கைத்தொழில், விவசாயம் முதலான விடயங்களைத் தாங்கிவரும் ‘வர்த்தக மித்திரன்’ என்ற பத்திரிகையை அவர் 1915 ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ளார்.

எழுத்து முயற்சிகளுக்கு அப்பால் சுதேசிய வியாபாரிகளின் நலன்களைப் பேணும் வகையில் அவர்களுக்கான சங்கங்களை உருவாக்கும் பணியில் நடேசய்யர் ஈடுபட்டுள்ளார். ஐரோப்பிய முதலாளிமார்கள் தமக்குள் உருவாக்கியுள்ள வியாபாரிகள் சங்கங்கள் போல சுதேசிய வியாபாரிகளும் சங்கங்களை அமைத்துத் தம்முடைய நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது விருப்பாக இருந்துள்ளது. அவ்விருப்பின் அடிப்படையில் தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், திருவாரூர், குற்றாலம் முதலான இடங்களில் சுதேசியர்களுக்கென வர்த்தகர் சங்கம், வர்த்தகர் குமாஸ்தாக்கள் சங்கம், மில்காரர் சங்கம், வர்த்தக வங்கி முதலான அமைப்புகள் உருவாக அவர் காரணகர்த்தாவாகத் தொழிற்பட்டுள்ளார்.

காலனியக் காலத்தில் ஐரோப்பிய வியாபாரிகள் சுதேசிய வியாபாரிகளின் முயற்சியை நேரடியாகவும் சூழ்ச்சிகளாலும் வீழ்த்தி, வியாபார ஆதிபத்தியத்தினைத் தம் கையில் வைத்துக்கொள்ள முயன்றுள்ளனர். அதற்குக் காலனிய அரசும் துணைநின்றுள்ளது. பாரதி தன் சுயசரிதையில் எந்திர ஆலை அமைத்துத் தொழில்செய்ய முயன்ற தன் தந்தை வறுமை அடைந்தமை பற்றிக் குறிப்பிடும்போது, “ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன்” என ஐரோப்பியர் செய்த சதியினாலேயே தன் தந்தை வறுமையடைந்தார் எனப் பதிவுசெய்துள்ளார். அக்காலத்தில் ஆங்கிலேயரின் பொருளாதாரக் கொள்கைகளும் ஐரோப்பிய முதலாளிமார்களின் நடவடிக்கைகளும் சுதேசிய வியாபாரிகளுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் பாதகமாகவே அமைந்திருந்துள்ளன. அத்தகைய சூழலில்தான் நடேசய்யர் சுதேசிய வியாபாரிகளின் நலன்களைப் பேணுவதற்காக அவர்களுக்கான சங்கங்களை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இங்கு சுதேசிய வியாபாரிகள் நலன் என்பது வியாபாரிகளின் நலன் என்ற எல்லைக்கு அப்பால் காலனிய எதிர்ப்பின் ஒரு வடிவமாக விளங்கியுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களிலும் வியாபாரிகள் சங்கங்களை அமைத்த நடேசய்யர், இலங்கையிலும் தென்னிந்திய வியாபாரிகள் சங்கமொன்று தோற்றம் பெறுவதற்குத் தூண்டுகோலாக இருந்துள்ளதோடு அச்சங்கத்தின் முதலாம் வருட நிறைவு விழாவில் கலந்து கொள்ளவே 1919 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளார். அதன்போது தஞ்சாவூர் காங்கிரஸ் கமிட்டியின் வேண்டுகோள்படி தோட்டத் தொழிலாளரின் பொருளாதார நிலைமையை நேரில் சென்று ஆராய்ந்த அவர், அதனை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 1920 இல் மீண்டும் இலங்கைக்கு வந்த அவர், கண்டி பெரிய கங்காணிமார்கள் சங்கத்தினர், அவர்கள் சார்பாகச் சில செயற்பாடுகளை முன்னெடுக்கும்படி கேட்டுக்கொண்டதால், தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கை நிலைமையை ஆராய்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டுள்ளார். அக்காலத்தில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் தேவை அதிகம் உணரப்பட்டதால் ‘தேசநேசன்’ பத்திரிகையை 1921 ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ளார்.

நடேசய்யர் இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதி (1920 – 1947) இலங்கை வரலாற்றிலும் இலங்கைவாழ் இந்தியர் வரலாற்றிலும் முக்கியமான மாறுதல்கள் பல ஏற்பட்ட காலமாகும். புதிய அரசியல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தல், நாட்டின் நிர்வாகத்தில் சுதேசியரின் பங்குபற்றலை அதிகரித்தல், முதலில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையும் பின்னர் சர்வசன வாக்குரிமையும் வழங்குதல், சிங்கள – தமிழ் அரசியல் தலைமைகளின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்ட இலங்கைத் தேசிய காங்கிரஸ் பிளவுபடல், இலங்கைத் தொழிலாளர் சங்கம் (Ceylon Labour Union) உருவாக்கப்படல், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் உதயமாதல், இலங்கைவாழ் இந்தியருக்கு முதன்முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படல், இந்தியர் மீதான எதிர்ப்புணர்வு பெருகுதல், அரசியல் கட்சிகள் தோற்றம் பெறல், இந்தியப் பின்புலத்துடன் இலங்கைவாழ் இந்தியருக்கான பெரும் அமைப்பாக இலங்கை – இந்தியக் காங்கிரஸ் உருவாக்கப்படல், இலங்கைக்குச் சுதந்திரத்தை வழங்குவதற்கான செயற்பாடுகளை பிரிட்டிஸ் அரசு முன்னெடுத்தல் என முக்கியமான நிகழ்வுகள் பல இக்காலத்தே அரங்கேறியுள்ளன. 1929 இல் ஏற்படத் தொடங்கிய உலகப் பொருளாதாரப் பெருமந்தம், இரண்டாம் உலக மகாயுத்தம் முதலானவையும் இலங்கையின் அரசியல், பொருளாதார நகர்வில் தாக்கங்களை ஏற்படுத்தின. 

மேற்படி அசைவுகளையும் அவற்றினால் சமூக, அரசியல் மட்டங்களில் ஏற்பட்டுவந்த மாற்றங்களையும் உள்வாங்கியுள்ள நடேசய்யர், அவற்றின் பின்புலத்தில் தன் அரசியல் இயக்கத்தை முன்னெடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அதனால் நடேசய்யரின் அரசியல், சமூக செயற்பாடுகள் இலங்கை வரலாற்றின் முக்கியமானதொரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாகவும் ஒரு சிறுபான்மை இனத்தின் சமூக, அரசியல் எழுச்சியின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளன.

இலங்கையில் ‘தேசநேசன்’ பத்திரிகையின் ஆசிரியராக முதலில் பணியாற்றிய நடேசய்யர், மிகக் குறுகிய காலத்தில் சட்டநிரூபண சபை உறுப்பினராகவும் நகரத் தொழிலாளர் அமைப்பின் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். M.A. அருளானந்தன், டாக்டர் E.V. ரட்ணம் முதலான இலங்கைத் தேசிய காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் நட்பு, லாரி முத்துகிருஸ்ணா, குடியேற்ற நாடுகளில் வாழும் இந்தியர்களின் விடுதலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த மணிலால் முதலானவர்களுடனான தொடர்பு, A.E. குணசிங்கா முதலான தொழிற்சங்கவாதிகளுடனான உறவு முதலானவை நடேசய்யரின் சமூக, அரசியற் செயற்பாடுகள் வேகம் பெறுவதற்குத் தொடக்க காலத்தில் துணையாக அமைந்தன எனலாம். அத்துடன் மீனாட்சியம்மாளின் துணையும் அவரின் சமூக, அரசியற் பங்களிப்பும் நடேசய்யரின் செயற்பாடுகள் வீச்சாக வியாபகமடைய பெரிதும் துணைநின்றுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கெனத் தொழிற்சங்கத்தை உருவாக்குதல், அத்தொழிலாளர்களிடையே தொழிலாளர் வர்க்க உணர்வை வளர்த்தல், அவர்களை அரசியல் மயப்படுத்தல் முதலானவற்றில் ஈடுபட்ட முன்னோடியாக நடேசய்யரே விளங்குகிறார். அவர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரேயே பெருந்தோட்டத் தொழிலாளரின் துயர்மிகுந்த வாழ்க்கை நிலைமை குறித்த தம்முடைய அதிருப்திகளைச் சிலர் தெரிவித்துள்ளதோடு இன்னும் சிலர் அம்மக்களின் துயர வாழ்வை ஆதாரங்களுடன் வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்தியுள்ளனர். ஆனால், அத்தொழிலாளர்களை அணிதிரட்டி, அவர்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. அதேவேளை, “தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களிலுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் ஏராளமான குறைகளை நகர்ப்புறத் தொழிலாளர் தலைவர்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் தோட்டங்களில் தொழிற்சங்கவாதத்தைப் புகுத்தவோ நகர்ப்புறத் தொழிலாளர்களையும் தோட்டத் தொழிலாளர்களையும் கூட்டு நடவடிக்கைகளில் இணைக்கவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை” (Jayawardena, 1972: 332). நடேசய்யரே 1931 ஆம் ஆண்டு ‘அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்’ என்ற பெயரில் தொழிற்சங்கமொன்றை உருவாக்கி, ஸ்தாபன நிலைப்பட்ட வகையில் அம்மக்களை வலுப்படுத்தியுள்ளார். தொழிலாளர்களின் விடுதலைப் போராட்டத்தைப் புதிய தளத்தை நோக்கி நகர்த்தியதில் அத்தொழிற்சங்க உருவாக்கம் முதன்மையான இடத்தைப் பெறுகிறது.

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் அரசியல் அசைவுகளையும் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமையையும் நன்கு அவதானித்து வந்துள்ள நடேசய்யர், இலங்கைவாழ் இந்தியர் தம்மை இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்யவேண்டும், அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளார். அவ்வகையில் மலையகத் தேசியத்தின் எழுச்சிக்கான தொடக்க வித்துகளை இட்ட முன்னோடியாக அவரை அடையாளப்படுத்தலாம்.

மலையகப் படைப்பிலக்கிய வரலாற்றில் தொடக்கநிலை முயற்சிகளை மேற்கொண்ட முன்னோடியாகவும் நடேசய்யர் விளங்குகிறார். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலே மலையகத்திலிருந்து ஏட்டிலக்கிய முயற்சிகள் ஆங்காங்கு இடம்பெறத் தொடங்கின. பலர் பாடலாக்க முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களது படைப்புகளில் மலையகத் தமிழரின் வாழ்வியல் அம்சங்கள் முனைப்பு பெறவில்லை. பக்தி, இயற்கை அழகு போன்றன பற்றியனவாக அவை அமைந்துள்ளன. நடேசய்யர், மீனாட்சியம்மாள் ஆகியோரின் இலக்கியப் படைப்புகளிலேயே மலையகத் தமிழரின் வாழ்வியல் அம்சங்கள் முதன்முதல் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

இலக்கியத்தைப் பிரச்சாரக் கருவியாகக் கொண்டு மக்களை அரசியல் சமூகச் சக்தியாகக் கட்டியெழுப்பும் பணியை நடேசய்யரும் மீனாட்சியம்மாளும் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நடத்திய ‘தேசபக்தன்’ முதலான பத்திரிகைகளில் அவ்வப்போது பாடல்களும் கவிதைகளும் வெளியிடப்பட்டுள்ளன. நடேசய்யர் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் இலக்கிய ஆக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் உதிரியாக எழுதியுள்ள கவிதைகளும் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு’ நாடகமும் அதற்குச் சான்றாக உள்ளன.

நடேசய்யர் எழுதிய இராமசாமி சேர்வையின் சரிதத்தை மலையகத்தின் முதற் சிறுகதையாகக் கூறுவர். இருப்பினும் அக்கதையில் சிறுகதைக்குரிய வடிவச் செம்மை முழுமையற்றிருப்பதோடு நடேசய்யரும் அதனைச் சிறுகதை என்ற பிரக்ஞையுடன் எழுதியதாகத் தெரியவில்லை. மலையக இளைஞர்களைத் தட்டி எழுப்பும் நோக்கில் அவர் எழுதிய ‘நீ மயங்குவதேன்’ என்ற நூலின் இறுதியாக ‘இராமசாமி சேர்வையின் சரிதம்’ இடம்பெற்றுள்ளது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதை நோக்காகக் கொண்டு பத்துக் கட்டளைகளைப் பத்து அத்தியாயங்களில் விபரித்துள்ள நடேசய்யர், அக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் இளைஞன் எவ்வாறு வாழ்வில் வெற்றிபெறுவான் என்பதற்கு உதாரணமாக இராமசாமி சேர்வையின் சரிதத்தைக் கூறியுள்ளார். அது உண்மைச் சம்பவத்தின் விபரிப்பு என்பதை அதன் இறுதியில், அந்நூலை வெளியிட நிதியுதவி புரிந்தவர்களாக இராமசாமி சேர்வையின் குடும்பத்தினர் குறிப்பிடப்படுவதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

நடேசய்யரின் நாடக முயற்சி இலங்கையின் நாடக வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் உடையதாக விளங்குகிறது. சமூக, அரசியல் விடயங்களைக் கருப்பொருளாகக் கொண்டு மக்களின் மொழியில் நாடகமாக்கும் முன்னோடி முயற்சியாக அவரது இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம் அமைந்துள்ளது. அந்நாடகத்திலுள்ள மீனாட்சியம்மாளின் பாடல்கள் நாடகத்துக்கு மிகுந்த கனதியைச் சேர்த்துள்ளன. அந்நாடகம் எங்கும் அரங்கேற்றப்பட்டதா என்று அறியமுடியவில்லை. ஆனால், அரங்கேற்றம் செய்வதற்காகவே அது எழுதப்பட்டுள்ளது என்பதை நடேசய்யரின் குறிப்புகளும் நாடகத்தின் அமைப்பும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

தன்னுடைய முதலாவது இலங்கைப் பயணத்தின்போதே (1919) பெருந்தோட்டங்களுக்குப் பயணம் செய்து, அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமையைத் துண்டுப்பிரசுமாக வெளியிட்டுள்ள நடேசய்யர், தொடர்ந்தும் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டு வந்துள்ளார். ஆங்கிலத்தில் அமைந்த நூல்களும் துண்டுப்பிரசுரங்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் அவலங்கள், நடைமுறையில் இருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்சார் சட்ட ஏற்பாடுகளின் போதாமைகள், பெருந்தோட்ட முறைமையின் குறைபாடுகள், அதிகாரிகளின் அராஜகங்கள், பெருந்தோட்டத்துறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் முதலானவற்றைப் பிரிட்டிஷ் இலங்கை – இந்திய அரசுகள், பிரிட்டிஷ் அரசு முதலானவற்றுக்கும் அரசாங்க அதிகாரிகள், பெருந்தோட்ட உடைமையாளர்கள், நிர்வாகிகள், அரசியல்வாதிகள் முதலானோருக்கும் அறியப்படுத்துவதை இலக்காகக்கொண்டு எழுதப்பட்டவையாகும்.

தமிழில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களும் நூல்களும் தோட்டத் தொழிலாளரை இலக்குக் குழுவாகக் கொண்டே பெரிதும் எழுதப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தல், அவர்களை அணிதிரட்டல், தொழிலாளர்களிடையே சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பல், வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு வழிகாட்டல், விடுதலைக்காகப் போராடத் தூண்டல், தொழிற்சங்கச் செயற்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தல், தொழிலாளர்களை அரசியல்மயப்படுத்தல் முதலானவை அவற்றில் மேலோங்கியுள்ளன.

பத்திரிகை எழுத்துகளிலும் இலக்கிய ஆக்கங்களிலும் தொழிலாளர் சட்டங்களையும் அவற்றின் போதாமைகளையும் வெளிப்படுத்தி வந்துள்ள நடேசய்யர், அச்சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் ஏட்டளவில் மட்டும் இடம்பெறுவதைக் கண்டித்துள்ளார். இந்நிலைக்கு அச்சட்டங்கள் தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வு இன்மையும் ஒரு காரணமெனக் கூறும் அவர் அக்குறைபாட்டை நீக்கும் வகையில் ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ (1928), ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ (1939) ஆகிய சட்ட வழிகாட்டி நூல்களை எழுதியுள்ளார். அவரின் ‘இந்தியா – இலங்கை ஒப்பந்தம்’ (1941) என்ற நூலும் ஒரு வழிகாட்டி நூலாகவே அமைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளரிடையே விழிப்புணர்வும் சமூக சீர்திருத்தமும் ஏற்பட்ட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி அவற்றுக்கான செயற்பாடுகளை மேற்கொண்டுவந்துள்ள நடேசய்யர், அத் தொழிலாளர்களிடையே தன்நம்பிக்கையை வளர்த்து சுய முன்னேற்றத்துக்கு ஊக்கப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ‘நீ மயங்குவதேன்’, ‘வெற்றியுனதே’ முதலான நூல்கள் அதற்குச் சான்றாகும். இளைஞர்களின் அக எழுச்சியைத் தூண்டுவதாக அமைந்துள்ள அந்நூல்கள் மிகவும் எளிமையான வகையில் எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. வெற்றியடைந்த பெரியோர்கள் பலரின் வாழ்க்கைச் செய்திகளை நூலின் பொருண்மையோடு இணைத்து வெளிப்படுத்தியுள்ள நடேசய்யர், சாதாரண வாழ்க்கைச் சம்பவங்களைச் சான்றாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிகளை விளக்கிக் காட்டியுள்ளார்.

நடேசய்யர் பிற்காலத்தில எழுதிய ‘அழகிய இலங்கை’ (1944), ‘கதிர்காமம்’ (1946) என்ற இரு நூல்களும் அவர் முற்காலத்தில் எழுதிய நூல்களிலிருந்து பல்வேறு வகையில் வேறுபட்டுள்ளன. தொடக்கத்தில் வியாபாரம், கைத்தொழில் முதலியன தொடர்பான நவீன விடயங்களைத் தமிழில் தந்த அவர், இலங்கையில் குடியேறி சமூக, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியதும் சமூக, அரசியல் எழுத்துகளுக்கே அதிக முதன்மை கொடுத்து வந்துள்ளார். ஆனால், பிற்காலத்தில் வெளிவந்துள்ள மேற்படி இருநூல்களும் அவற்றிலிருந்து மாறுபட்டு இலங்கையையும் கதிர்காமத்தையும் அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளன.

நடேசய்யர் தன் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் துறையாகவும் சமூக, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான துணைக்கருவியாகவும் இதழியலைக் கொண்டியங்கியுள்ளார். நூல்களாக வெளியிடுவதைக் காட்டிலும் பத்திரிகைகளில் தகவல்களை வெளியிடுவது அதிக பயனளிக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்து அதன்படி செயற்பட்டுவந்துள்ள அவர், எழுத்துத் துறையில் இயங்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் இறுதிக் காலம் வரை இதழியலுடன் பிணைந்த வாழ்க்கையை முன்னெடுத்துள்ளார். அவர் ‘வர்த்தக மித்திரன், தேசநேசன், தேசபக்தன், தோட்டத் தொழிலாளி, வீரன், சுதந்திரன்’ முதலான தமிழ்ப் பத்திரிகைகளிலும் ‘தி சிட்டிசன், ஃபோர்வார்ட்’ முதலான ஆங்கிலப் பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார்.

நடேசய்யர் அரசியற் களத்தில் தீவிரமாக இயங்கிய காலத்திலேயே அவருக்கு எதிரான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானதாக அவரைப் பார்ப்பனர், பார்ப்பன ஆதரவாளர் எனும் முத்திரை குத்தல் அமைந்துள்ளது. இலங்கையில் இயங்கிய இந்திய அமைப்புகளும் துரைமார் சங்கத்தினரும் அதனை அழுத்தமாக முன்வைத்து வந்துள்ளதோடு தமிழகத்திலும் அதன் பிரதிபலிப்பு வெளிப்பட்டுள்ளது. பெரியாரும் ‘தேசபக்தன்’ பத்திரிகை பற்றிய பின்வரும் குறிப்பில் நடேசய்யரைப் பார்ப்பனச் சிமிழுக்குள் அடக்கியுள்ளார்:

“…திரு. நடேசய்யரை ஆசிரியராகக் கொண்ட தேசபக்தன் தாங்கி வரும் கட்டுரைகள் ஒரே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மாட்டு அன்போடும் அபிமானத்தோடும் எழுதி வருவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். வெளிப்படையாகக் கூறப்புகின் தேசபக்தனும் பார்ப்பனப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டான் என்றே கூறவேண்டும்… கறுப்பு நிறங்கொண்ட ஆட்டை வெள்ளாடு என்பது போல பார்ப்பனப் பக்தனாயிருப்பவன் ‘தேசபக்தன்’ என்று பெயர் பூணி தமிழர்களைப் பாழ்படுத்த முயலுவதை நாம் கண்டிக்காமலிருக்க முடியவில்லை. ஆதலால் இதை இனித் தமிழ் மக்கள் ஆதரிப்பது கொள்ளிக்கட்டை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வதாகும்” (குடி அரசு, 08.08.1926).

நடேசய்யரின் செயற்பாடுகளையும் எழுத்துகளையும் அவதானிக்கின்றபோது அவரிடம் பார்ப்பனச் சார்பைவிட தோட்டத் தொழிலாளர்மீதான நேயம் மிகுதியாக வெளிப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. அத்தொழிலாளர்களுள் அதிகமானவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நடேசய்யர் சட்டநிரூபண சபைக்குத் தெரிவானபோது அவரை வாழ்த்தும் விதத்தில் ‘தமிழ்நாடு’ பத்திரிகை எழுதியுள்ள பின்வரும் குறிப்பு, பெரியாரின் மதிப்பீட்டுக்கு முற்றிலும் மாறாக அமைந்துள்ளமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கதாகும்:

“… இலங்கைத் தோட்டங்களில் இந்தியக் கூலிகள் படும் துயரங்களை நீக்கும் பொருட்டு ஸ்ரீமான் நடேசய்யர் செய்திருக்கும் பெரிய அரிய காரியங்கள் யாவரும் அறிந்த விஷயம். ஐயர் பிராம்மணராயினும் வேற்றுமை புத்தியும் ஜாதிக்கர்வமும் கடுகளவும் அவரிடம் கிடையாதென்பதை 1917ம் வருஷத்திலிருந்து நாம் கவனித்து வந்திருக்கிறோம். குருகுலப் போராட்டம் நடைபெற்றுவந்த காலத்தில் ஸ்ரீமான் ஐயர் தமது தேசபக்தன் பத்திரிகையில் போராட்டத்தை ஆதரித்து எழுதி வந்தது நண்பர்கள் அறிந்த விஷயமேயாகும். பிராம்மணர்களிலும் ஜாதி அகம்பாவமற்றவர்கள் உண்டு என்பதற்கு அய்யரை உதாரணமாகக் கூறலாம்…” (தேசபக்தன், 23.12.1925).

நடேசய்யரின் செல்வாக்கு அதிகரிக்கின்றபோது, அவரைப் பார்ப்பனரென வெளியொதுக்கும் முயற்சிகள் மேலும் மேலும் வியாபகமடைந்துள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது. தேர்தல் காலங்களில் நடேசய்யரை வீழ்த்தும் பிரதான ஆயுதமாகப் ‘பார்ப்பன முத்திரை’ கைக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய அவதூறுகளுக்கான எதிர்வினைகளை நடேசய்யரும் மீனாட்சியம்மாளும் அவ்வப்போது நிகழ்த்தி வந்துள்ளனர். சான்றாக, சாரல்நாடன் சுட்டிக்காட்டியுள்ள மீனாட்சியம்மாளின் பின்வரும் பாடல் வரிகளைக் குறிப்பிடலாம்:

“பார்ப்பான் பார்ப்பானென்று நீங்கள்
பல தடவை சொன்னாலுமே
பார்ப்பான் அல்ல வென்று அய்யர்
பறையடித்துச் சொல்லலையே…
பனையைச் சேர்ந்தானோ அல்லது
பழங்கள் விற்றானோ
தொழிலாளர் கஷ்டங்களை
தொலைக்க பாடுபட்டவரை
பழியாகப் பேசி நீங்கள்
பச்சை நோட்டீஸடித்து மெத்த
பசப்புவதேனோ சும்மா
உசுப்புவதேனோ” (சாரல்நாடன், 2015: 26).

நடேசய்யர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுள் தனிமனித இயக்கமாக அவரது அமைப்பை நடத்தினார் என்பதும் ஒன்றாகும். சி.வி. வேலுப்பிள்ளை அதனை, “மக்களுடைய கருத்துகள் மாறும் என்பதனை அவர் உணரத் தவறினார். அவருக்கு நல்ல ஆலோசனை கூறுவோர் இருக்கவில்லை. ஆமாம் போடுபவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவருடைய ஸ்தாபனம் ஒரு திட்டவட்டமான கொள்கையுடையதல்ல. ஆனால், தான் மட்டும் தனியாய் நின்று நாடகத்தை நடத்தினார். அவருடைய சம்மேளனம் – அவர் ஏறிச் சென்ற அந்த இரதம் – 1947ம் ஆண்டில் நொருங்கிச் சிதைந்தது” (2022: 33) எனச் சுட்டிக்காட்டியுள்ளார். நடேசய்யருக்குப் பின்னர் அவர் கட்டியெழுப்பிய அமைப்பு இயக்கமற்று மறைந்தமை சி.வி. இன் கருத்துகளை நியாயப்படுத்தும் வலுவான காரணியாக அமைந்துள்ளது.

நடேசய்யர் தோட்டத் தொழிலாளரின் நலனை மையப்படுத்தி சமூக, அரசியல் செயற்பாடுகளை விரிந்த தளத்தில் முன்னெடுத்திருந்தாலும் சிங்களத் தொழிலாளர்கள், வடக்கு – கிழக்குப் பிராந்தியத்தில் இருந்த தமிழ்த் தொழிலாளர்கள் முதலானவர்களுடனும் அவர்களுடைய தொழிற்சங்கங்களுடனும் இணைந்து செயற்படுவது, நகரத் தொழிலாளர் சங்கங்களுடனான உறவைக் கட்டியெழுப்புவது, ஒட்டுமொத்தத் தொழிலாளர் விடுதலையை அவாவுவது முதலானவற்றில் அக்கறை செலுத்தாததுடன் இலங்கைவாழ் இந்திய மக்கள் சார்ந்த ஏனைய அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதிலோ இந்திய அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுவதிலோ ஆர்வம் காட்டவில்லை. இந்தத் தனித்த இயக்கம் வர்க்க விடுதலைப் போராட்டத்தில் முழு வெற்றியைப் பெற்றுத்தருவதில்லை. அத்துடன் அது எதிர்நிலையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.

நடேசய்யரின் சமூக, அரசியல் செயற்பாடுகள் மீது மேற்படியான விமர்சனங்கள் நிலவினாலும் இற்றைவரையான மலையக அரசியல், சமூக வரலாற்றில் அம்மக்களின் நல்வாழ்வுக்கென அக்கறையுடன் செயற்பட்ட ஒப்பற்ற தலைவராக அவரே விளங்குகிறார். அவருடைய செயற்பாடுகளினாலேயே நூற்றாண்டு காலமாக மலையகத் தமிழரின் வாழ்வை மூடியிருந்த இருள் மெல்ல மெல்ல அகற்றப்பட்டது; அம்மக்களின் வாழ்வும் பிரச்சினைகளும் புதிய தளத்துக்கு நகர்த்தப்பட்டன. தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் பிற்காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு எல்லாம் வளமானதொரு அத்திபாரத்தை அவரே இட்டுள்ளார். அதனாலேயே மலையகத்தின் நிர்மாணச் சிற்பியாக அவர் நிலைபெற்றுள்ளார் – நினைவுகொள்ளப்படுகிறார்.


ஒலிவடிவில் கேட்க

3536 பார்வைகள்

About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)