ஆரம்பத்தில் பத்து உடன்பிறந்தார் குலத்தோரை அடையாளம் காண சிங்கள வரலாற்றாசிரியர்கள் தடுமாறியிருக்கிறார்கள். ஏனெனில், அனுராதபுர மன்னன் மூத்தசிவனுக்குப் புதல்வர்களாக பத்து உடன்பிறந்தார் இருந்தார்கள் (மகாவம்சம் 11:5-6). கொத்ததாமூக்கல், போவத்தகல் கல்வெட்டுகளை முதலில் படித்தபோது செனரத் பரணவிதானவும் அதிலுள்ள உதியன், அபயன் ஆகிய பெயர்களை மூத்தசிவனின் பத்து மைந்தருடையது என்றே கருதினார் (Paranavitana, 1970:l-li). எனினும் பின்னாளில் அவர்கள் தனி அரசகுலம் என்று கருத்தை மாற்றிக்கொண்டார்.
மூத்தசிவனின் பத்து மைந்தர்களில் இளையவன் அசேலன். அவன் தன் தமையனை வென்று அனுராதபுர அரசை 22 ஆண்டுகள் (பொமு. 237 – 215) அபகரித்த சேனன் – குத்தகன் எனும் இரு குதிரை வணிகர் மைந்தரைக் கொன்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தான்.
சேனன், குத்தகன் இருவரதும் தந்தை மகாவம்சத்தில் அ`ச்`சநாவிக (assanāvika – குதிரை நாவாய்க் காரன்) என்று குறிப்பிடப்படுவதால் (மகாவம்சம் 21:11) அவர்கள் தென்னகத்திலிருந்து வந்து குதிரை வணிகம் செய்தோர் என்று ஊகிக்கிறார்கள். ஆனால் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், கீழைக்கரையில் முதல் அரசை அமைத்தவனாக கூத்திகனைப் பாடும் (கமலநாதன் & கமலநாதன், 2005: 1, 11-13). மகாவம்சத்துக்கு மாறாக கூத்திகனின் மகனே சேனன் என்றும் அது சொல்லும். கூத்திகன் தென்னகத்திலிருந்து குடிகளை வரவழைத்து குடியேற்றி இங்கு “மேட்டுக்களப்பு” எனும் அரசை அமைத்தான். எனினும் சேனன் – குத்தகனை நினைவுகூருமாற் போல், மகாவம்சம் பின்னோர் இடத்தில் கீழைக்கரையில் இருந்த “சேனகுத்தகாமம்” எனும் ஊரொன்றைச் சொல்கிறது (சூளவம்சம் 58:41-47). உண்மையிலேயே சேன – கூத்திகர்களுக்கும் கீழைக்கரைக்கும் உறவேதும் இருந்ததா என்பதை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. எனினும் கீழைக்கரைக்குத் தெற்கே கதிர்காமத்துக்கு அருகே உள்ள சிற்றாலைப்பர்வத (சிதுல்பவ்வ) மலையில் குதிரையேற்றம் பழக்கும் பெருமகன் திசையன் என்பவன் பற்றிய பிராமிக் கல்வெட்டு கிடைப்பதாலும், மட்டக்களப்பு போரதீவுப்பற்று களுமுந்தன்வெளியிலும் (உரு. 01), ஏறாவூர்ப்பற்று இலாவணையிலும் நாகர் கால குதிரையின் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாலும் (பத்மநாதன், 2016:157, 307) அக்கால கீழைக்கரை மக்கள் குதிரையையும் குதிரை வணிகத்தையும் அறிந்திருந்தனர் என்பதை உறுதிப்படுத்தலாம்.
மூத்த சிவனின் மைந்தர்களில் ஒருவனும் தேவானாம்பிரிய திசையனின் தம்பியுமான மகாநாகன், தெற்கு உரோகணத்தில் மாகாம அரசை அமைத்தபோதும், அவனது மகனான யத்தாலய திசையன் பற்றி மகாவம்சத்தில் விரிவான தகவல்கள் இல்லை. ஆனால் மொனராகல மாவட்டத்தின் மடுல்ல பிரதேசத்தில் தம்பகல்லுக்கு அருகே கினிவல்கொடையில் கிடைத்த தெய்யன்னகேம பிராமிக் கல்வெட்டிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரூகம பிராமிக் கல்வெட்டிலும் அவன் “மகாரா|சா யதலக திசையன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அவன் உரோகணத்தின் முதன்மை அரசனாகவே விளங்கினான் என்பதை அறிந்துகொள்ளலாம். பத்து உடன்பிறந்தார் தோன்றிய கதிர்காம சத்திரிய அரசுடனான முதலாவது முரண்பாடு இவன் காலத்திலேயே ஏற்பட்டிருக்க வேண்டும்.
அந்த முரண்பாடு யத்தாலய திசையனின் மகன் கோட்டபயன் காலத்தில் பத்து உடன்பிறந்தாரில் பெரும்பாலானோரைக் கொன்றொழிக்குமளவு பெரும் குரோதமாக வளர்கிறது. இந்தக் கோட்டபயன் மகன் காக்கைவண்ண திசையனுக்குப் பிறந்தவனே மகாவம்சத்தின் கதாநாயகனான துட்டகாமணி (பொமு 161 – 137).
காக்கைவண்ண திசையன் காலத்தில் வடக்கே அனுராதபுரம் எல்லாளனின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அவன் காக்கைவண்ண திசையனின் தந்தைவழிக் கொள்ளுப்பாட்டனாகிய அசேலனைக் கொன்று முடிசூடியிருந்தான். எல்லாளன் ஆட்சியின் காரணமாகவே மூத்தசிவன் வம்சத்தில் (உரு. 02) வந்த ஏனையோர் அனுரையைக் கைவிட்டு உரோகணத்தில் பல்வேறு சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்திருக்க வேண்டும்.
எல்லாளனின் ஏகபோக அனுராதபுர அரசன்றி, தென்னிலங்கையிலும் உரோகணத்திலும் ஏராளமான சிற்றரசுகள் இக்காலத்தில் நீடித்தன என்பதை கல்வெட்டுகளிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது (Ranawella, 2018:54). அந்த அரசரில் முக்கியமானோர் நாம் போன அத்தியாயத்தில் கண்ட பத்து உடன்பிறந்தார் குலத்தின் மூன்றாம் தலைமுறை அரசர்கள். அவர்கள் பாணமைப்பற்று (போவத்தகல்), அக்கரைப்பற்று (சாகாமம்), ஏறாவூர்ப்பற்று (குசலான்மலை), விந்தனைப்பற்று (கெனன்னேகல்) உள்ளிட்ட கீழைக்கரையை ஆண்டு வந்தார்கள். குமுக்கனாற்றுப் படுகையை ஆண்டு வந்த மூத்தவன் சர்வனின் பேரன் ஆய் மகாதிசையன், கல்லோயாவின் தென்பகுதியை ஆண்டு வந்த உபராசன் நாகனின் மருகன் வழிப் பேரன் காமணி திசையன், முந்தனை ஆற்றுப் படுகையை ஆண்டு வந்த உபராசன் நாகனின் மகன் வழிப் பேரன் காமணி திசையன், என்போரை இவர்களில் குறிப்பிடத்தக்க சமகாலத்தவராகச் சொல்லலாம்.
எல்லாளன் இவற்றில் எந்தவொரு அரசையும் வெல்ல முயன்றதாக கல்வெட்டு – இலக்கியச் சான்றுகளெதுவும் கிடைக்கவில்லை. எனவே கீழைக்கரையின் பத்து உடன்பிறந்தார் குலத்துடனும், உரோகணத்தில் இருந்த மூத்தசிவன் வம்சத்தினருடனும் ஏனைய சிற்றரசுகளுடனும் எல்லாளன் நல்லுறவிலேயே நீடித்திருக்கிறான் எனலாம்.
உரோகணத்தின் மாகாமம் காக்கைவண்ண திசையன் ஆட்சியில் அனுரைக்குச் சமனான செல்வச் செழிப்புடன் விளங்கியதை மகாவம்சமும் சொல்வதால் துட்டகாமணியின் அனுரைப் படையெடுப்புக்கு முழுத் தீவையும் தனது ஆட்சியின் கீழ் கொணரவேண்டும் என்ற பேராசை ஒன்றே காரணமாக இருந்தது என்பதை ஊகிக்க முடிகின்றது. ஆனால் மகாவம்சம் சித்தரிப்பது போலன்றி, அனுரையை துட்டகாமணி வெல்வதற்கான வழியை வகுத்ததிலும் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததிலும் அவனது தந்தை நுண்ணரசியல் செய்திருப்பதாகவே புரிந்துகொள்ள முடிகின்றது. அனுராதபுரத்துக்கு பூர்விகமாக உரிமைகொண்டிருந்த மூத்தசிவன் வம்சத்தாரை அங்கிருந்து அகற்றி உரோகணக் காடுகளில் அலையவிட்ட வன்மத்தை அதன் மூலம் காக்கைவண்ண திசையன் ஆற்றிக்கொள்ள முடிந்திருக்கும் எனலாம்.
மாகாமத்து மூத்தசிவன் வம்சத்தினருக்கு பிறவிப் பகையாக விளங்கிய பத்து உடன்பிறந்தார் குலத்தினர் இதில் எல்லாளனுக்கே சார்புநிலை எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே முதற்கட்டமாக அவர்களை வெல்ல காக்கவண்ண திசையன் தன் மூத்த மகன் சத்தாதிசையனை இறக்காமத்துக்கு அருகே தீகவாவியில் தங்க வைத்திருக்கிறான். எந்த இலக்கியத்திலும் விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றபோதும், பெரும்பாலும் சத்தாதிசையனின் தீகவாவி வருகைக்குப் பின்னர், கீழைக்கரையை ஆண்ட பத்து உடன்பிறந்தார் குலம் வலுவிழந்திருக்கவேண்டும், அல்லது அவனோடு போரிட்டு மறைந்திருக்கவேண்டும்.
சத்தாதிசையனின் முகாம் அமைந்திருந்த தீகவாவி, இன்று கல்லோயா என்று அழைக்கப்படும் கல்லாறு, பைந்தாறு, செங்கற்படை ஆறு, களியோடை என்று மூன்று கிளையாறுகளாகப் பிரியும் மல்கம்பிட்டிக்குத் தென்கிழக்கே, களியோடை எனும் தெற்குக் கிளையின் தென்கரையில் அமைந்துள்ளது. தொடர்ச்சியான வெள்ளப்பெருக்குகள், வண்டல் மண் படிவால் இந்த சிற்றாறுகள் அவ்வப்போது திசை மாறியிருக்கலாம். எவ்வாறெனினும், கல்லாற்றின் இந்த மூன்று கிளைகளூடும் நுழையும் படகுகள் சந்திக்கும் புள்ளியாக தீகவாவி இருந்ததால் அது வணிக நகராக வளர்ச்சி கண்டது எனலாம்.
தீகவாவியை அடுத்து உள்ள மல்கம்பிட்டியில் மண் எடுத்துத் தான் மேட்டுக்களப்பை நிரப்பி கூத்திகன் மட்டக்களப்பு நகரை அமைத்தான் என்கிறது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். பூர்வசரித்திரத் தொன்மத்திலுள்ள இந்த ‘மட்டுக்களப்பு’ நகர் உண்மையில் தீகவாவி தான் என்றுகொண்டால், தீகவாவி நகரின் தோற்றத்தை கூத்திகனுக்கும் சத்தாதிசையனுக்கும் இடையேயுள்ள நூறாண்டு இடைவெளியில் பொருத்திப் பார்க்க முடிகின்றது.
தீகவாவியைச் சூழ கல்லாற்றின் இரு கரைகளிலும் தொன்மையான வணிகம் செழித்த குடியிருப்புகள் அமைந்திருக்கின்றன. இந்தப் பகுதியில் குடுவில், மல்வத்தை, களியோடை, முள்ளிக்கொளுந்துமலை முதலிய இடங்களில் பல பிராமிக் கல்வெட்டுகள் வாசிக்கப்பட்டுள்ளன. தீகவாவிக்குத் தென்மேற்கே ஏழு கி.மீ தொலைவில் அமைந்துள்ள குடுவில்லில் “தீகவாவி வணிகர்களின்” மைந்தரை மணந்திருந்த “தமிழச்சி திசை” என்பவளின் குகை அமைந்திருந்தது (IC 1, 480). மல்வத்தையில் கிடைத்த ஒரு பிராமிக் கல்வெட்டில், சித்திரா தேவியின் வரி சேகரிப்பாளரும் பெருமகன் உதியனின் மகனுமான பெருமகன் சு|சாதன் என்பவன் பற்றிக் கூறப்படுகிறது (IC 1, 471). வரி வசூலிக்குமளவு வணிக நடமாட்டமிக்க இடமாக தீகவாவிப் பகுதி இருந்தது என்பதற்கான சான்று இது.
நிற்க, காக்கைவண்ண திசையன் இறந்த பின்னர் மகாகாம அரியணைக்காக சகோதரர்களான சத்தாதிசையனும் துட்டகாமணியும் போரிட்டிருக்கிறார்கள். இறுதியில் பிக்குகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்த வேண்டி நேரிட்டது. துட்டகாமணி முடிசூட, சத்தாதிசையன் மீளவும் தீகவாவிக்கே அனுப்பப்படுகிறான். துட்டகாமணி அனுரைக்குப் படையெடுத்து எல்லாளனை வெல்வது அதன்பிறகே நிகழ்கிறது.
ஆனால் துட்டகாமணியின் அனுரைப் படையெடுப்பு, மகாவம்சத்துக்கும் முந்தைய “சிகளவத்துப்பகரண” நூலில் சற்று வேறுபட்டுச் சொல்லப்படுகிறது. இலங்கையை ஆளும் முப்பத்திரண்டு தமிழ் அரசர்களை வென்று அதன் ஆட்சியை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதாக சூளுரைத்து சிற்றாலைப் பர்வதத்தில் பிக்குகளுக்கான மாபெரும் அன்னதானமொன்றை ஏற்பாடு செய்த துட்டகாமணி, தீகவாவியில் இரு தமிழ் அரசர்களை வென்றபின்னர் அம்பாரகம எனும் ஊரை அண்மித்த “மகா அம்பலப்பிட்டியாங்கன” எனும் இடத்தில் முகாமிட்டு மகாகங்கை ஆற்றின் கரையோரமாக அனுரை நோக்கிப் படைகளுடன் பயணித்தான் (Ranawalla, 2008:62).
“சிகளவத்துப்பகரண” சொல்லும் சம்பவத்தைக் கொண்டு, தீகவாவியில் துட்டகாமணி வென்ற தமிழ் அரசர்களை பத்து உடன்பிறந்தோர் குலத்தைச் சேர்ந்த இரு அரசர்களாகவும், அம்பாரகமத்தை இன்றைய அம்பாறையாகவும், மகாகங்கையை மகா ஓயாவாகவும் அடையாளம் காண்பது ஆர்வமூட்டுகிறது.
துட்டகாமணியின் படையிலிருந்த பத்து பெருவீரர்களில் ஒருவன் பெயர் நந்திமித்திரன். “பெருமகன் நந்தியின் மைந்தன் மித்திரன்” என்று அவன் பெயர் பாணமைப்பற்று தென்குடும்பி மலையிலுள்ள பிராமிக் கல்வெட்டொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே துட்டகாமணியின் காலத்திலேயே பாணமைப்பற்று பகுதி பத்து உடன்பிறந்தார் குலத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிவிட்டது என ஊகிக்கலாம்.
துட்டகாமணியின் இறுதிக்காலத்தில் தீகவாவியில் அவனது இளவல் சத்தாதிசையனால் விகாரம் ஒன்று கட்டப்படுகிறது. அதுவே இன்றுள்ள தீகவாவி விகாரம் (உரு.03) என அடையாளம் காண்கிறார்கள். மூத்தசிவன் வம்சத்தில் வந்த துட்டகாமணியும் அவன் தம்பி சத்தாதிசையனும் மீண்டும் அனுரை அரியணையில் அமர்ந்த பின்னர், அதுவரை தனியரசுகளாகக் காணப்பட்ட உரோகண அரசுகள் அனுரை அரசின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அனுரை அரசனுக்கு அடுத்து அரசுரிமை பெறும் இளவரசன் (உபராசன்) “ஆப்பா” என்ற பெயரில் உரோகணத்தை நிருவகிக்க வேண்டும் என்ற வழமை உண்டானது.
சத்தாதிசையனுக்குப் பின்னர் (பொமு 137 – 119) அவன் இளைய மகன் தூலத்தனன் (பொமு. 119) அனுரையில் முடிசூடப்பட்டான். ஆனால் உரோகணத்தை ஆண்டுவந்த மூத்த மகன் இலாஞ்ச திசையன் (பொமு 119 – 109) படையெடுத்து வந்து தம்பியை வென்று ஒன்பது ஆண்டுகள் அனுரையை ஆண்டான்.
உரோகணத்தில் இலாஞ்ச திசையன் தீகவாவியிலேயே உபராசனாக இருந்திருக்கிறான் என்பதற்குச் சான்று, தீகவாவிக்கு அருகே விந்தனைப்பற்றின் இராசக்கல் மலையிலுள்ள அவனது பெயர் பொறித்த ஒரு கல்வெட்டு (Paranavitana, 1970:33). திசையனின் மகன் ஆய் திசையன் பொறித்ததாக அதே மலையில் காணப்படும் இன்னும் இரு கல்வெட்டுகளும் சத்தாதிசையனின் மகனான இதே இலாஞ்சதிசையன் பொறித்தவை தான் என இனங் காண்பார்கள். இராசக்கல்லின் அருகே வக்கி எல்லையில் கிடைத்த இன்னொரு கல்வெட்டும் இலாஞ்ச திசையன் பெயரைக் குறிப்பிடுகிறது.
இலாஞ்ச திசையன் மறைந்தபிறகு சத்தாதிசையனின் மூன்றாவது மகன் கல்லாடநாகனும் (பொமு 109 – 103), அவனுக்கும் பின்னர் நான்காவது மகன் வட்டகாமணி அபயனும் (பொமு 103) அனுரையை ஆண்டு வருகிறார்கள். இவர்களது காலங்களில் கீழைக்கரை உள்ளிட்ட உரோகணத்தின் ஆட்சி நிலவரம் தெளிவாக அறியக்கூடவில்லை. ஆனால் அனுரையின் அடுத்த ஆட்சிக்குரிய உபராசன் உரோகணத்தை ஆளும் வழக்கம் காணப்பட்டதாக அறியமுடிவதால், இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் உரோகணத்தை உபராசர்களாக ஆண்டு வந்தனர் எனலாம். இவர்களது காலத்திலும் சத்தாதிசையனால் அரசிருக்கையாக உருவாக்கப்பட்ட தீகவாவியே கிழக்கு உரோகணத்தின் தலைநகராக விளங்கியது என ஊகிக்கமுடிகின்றது.
வட்டகாமணி அபயன் காலத்தில் உரோகணத்தில் அவனுக்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுகின்றது. அதை முன்னெடுத்தவன் உரோகணத்தில் நகுலநகரத்தில் வாழ்ந்த பிராமணன் திய்யன்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தெற்கே திய்யனின் கிளர்ச்சி பரவ, வடக்கே தென்னகத்திலிருந்து ஏழு தமிழ் வீரர்கள் அவன் மீது போர் தொடுக்க மாதோட்டத்தில் வந்திறங்கியிருப்பதாக செய்தி வருகிறது.
இரு முனைகளிலும் ஏற்பட்ட அழுத்தங்களை வட்டகாமணி இராசதந்திரத்தோடு முகங்கொடுக்க முடிவெடுத்தான். முதலில் உள்ளூர்க்காரனான திய்யனோடு உடன்படிக்கை மேற்கொண்டு அவனோடு இணைந்தான். வட்டகாமணிக்கு ஆதரவாக மாதோட்டம் சென்ற திய்யனின் படைகள் பாண்டியரிடம் தோற்றன. வட்டகாமணியின் சிங்களப்படைகளையும் வென்று பாண்டியப்படைகள் அனுராதபுரத்தைக் கைப்பற்றின. வட்டகாமணி குடும்பத்தாருடன் வெசகிரி எனும் காடுகளுக்குத் தப்பியோடினான்.
ஏழு பாண்டியப் பிரதானிகளில் இருவர் திரும்பிச் செல்ல புலஃகத்த (பழஞ்சாத்தன்?), |பாஃகிய (வாகையன்?), பனையமாறன் (பனையன் மாறன்?), பிலியமாறன் (பழையன் மாறன்?), |தாதிகன் (இருதிசையன்?) எனும் ஐவர் ஒருவர் பின் ஒருவராக இங்கிருந்து ஆண்டனர். சில பாளி நூல்கள் சொல்வதன்படி, இறுதிப் பாண்டியனுக்குப் பின்னர் பதினான்கு ஆண்டுகள் திய்யனும் அனுரையை ஆண்டான். திய்யன் மாதோட்டப் போரில் தோற்ற பின்னர் பாண்டியருக்குக் கீழ்ப்படிந்து அனுரையிலேயே தங்கியிருந்ததால் அது சாத்தியமாயிற்று என்று பரணவிதான அனுமானிப்பார். அல்லது அவன் பழையபடி உரோகணத்திலேயே தங்கியிருந்து பாண்டியர் காலத்தில் சுயாட்சி செலுத்தி வந்திருக்கலாம்.
இதில் சுவையான விடயம் என்னவென்றால், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் முக்குவர் மரபு எனும் தலைப்பின் கீழ் படையாட்சி குடி எனும் சமூகப் பிரிவினருக்குரியதாக பதிவு செய்யப்பட்டுள்ள பாடலொன்று தான்:
“கொண்டல் எனும் திசை தனது என மனதொடு குடி படை வைத்து அரசன்
பண்டு முறைப்படி ஆண்டனர் திறை பெறு வாலகம்பாகு ஒருவன்
தண்டு தளத்தொடு சென்றனர் கண்டு மனைக்கு அதிபர்
விண்டுதிறை பணம் என்றுமில்லாமலே வேண்டினதால் அகமகிழ் குகனே.”
“கிழக்குத் திசையை குடியும் படையும் வைத்து பழைய முறைப்படி அரசாண்டு வரும் போது தாங்கள் திறை கேட்ட வாலகம்பாகு என்பவன் தனது படைத்தளங்களோடு வந்து தன்னிடம் திறைப்பணம் கோரக்கூடாது என்று வேண்டியமையால் [அவன் கூறியதை ஏற்றுக்கொண்டு] அகம் மகிழ்ந்த பெருமைக்குரிய குகன் குலம் தாங்கள்.”
வாலகம்பாகு என்பது வட்டகாமணி அபயனின் சிங்களப்பெயர். திய்யன் வட்டகாமணிக்கெதிராக கிளர்ச்சி செய்து கிழக்கு உரோகணத்தின் சுயாட்சியைப் பெற்றுக்கொண்டதும் இறுதியில் வட்டகாமணி திய்யனோடு சமாதானம் செய்துகொண்டதுமே இப்பாடலின் அடிநாதம். பிராமணனான திய்யனுக்கும் இன்று முக்குகர் சமூகத்தைச் சேர்ந்தோராக தம்மை இனங் காட்டிக்கொள்ளும் படையாட்சி குடியினருக்கும் இடையே இருந்த தொடர்பு எத்தகையது என்பது தெரியவில்லை. ஆனால், குலப்பாடல்கள் வழியே நினைவுகூரப்பட்டு வந்த குறித்த சம்பவம் ஏதோ ஒரு காலத்தில் இந்த சமூகப் பிரிவினரின் பெருமைக்குரிய விடயமாக வாய்மொழிப் பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை வியப்போடு நாம் உறுதிசெய்துகொள்ள முடிகின்றது.
அடிக்குறிப்புகள்
- மகாவம்ச உரைநூலின் படி, அபயன், தேவானாம்பிரிய திசையன் (பொமு 307 – 267), உதியன் (பொமு 267 முதல் ), மகாசிவன் (பொமு 250கள்), மகாநாகன், மத்தாபயன், சூர திசையன் (பொமு 237 வரை), கீரன், மித்திரன், அசேலன் (பொமு 215 – 205) ஆகிய பதின்மர். இவர்களில் மூத்தசிவனுக்குப் பின்னர் இரண்டாவது மைந்தன் தேவானாம்பிரிய திசையனே முடிசூடுவதால், மூத்தவன் அபயன் இளவயதிலேயே மறைந்துவிட்டான் போல தென்படுகின்றது. மத்தாபயன், கீரன், மித்திரன் ஆகியோராலும் அரசிருக்கையை அலங்கரிக்க இயலவில்லை. மகாநாகன் தெற்கே மகாகாமத்தில் அரசை நிறுவியவன்.
2. பருமக அசருய தி
சஃக ||சய உப`சிக |குரய லெனெ (parumaka asaruya tisaha upasika guraya lene). குதிரை பழக்குநர் பெருமகன் திசையனின் மனைவி அடியவள் குரையின் குகை (IC 1 : 606 Paranavitana, 1970, p. 46).
3. parumaka nadika putasa parumaka mitasa lene mahasudassane sagasa dine. பருமக ந|திக புதச பருமக மித
ச லெனெ மஃக சுதச்
சனெ ச|க
ச |தினெ. பெருமகன் நந்தியின் புதல்வன் பெருமகன் மித்திரனின் குகையான மகாசுதர்சனம் சங்கத்துக்கு வழங்கப்பட்டது (IC 1 No. 498).
4. devanapiya maharajha gamini tisaha puta lajhaka rajhaha [i]da pa[tita]pita site lene paca visati. |தெவநபிய மஃகர||ச |கமிணி தி`சஃக புத ல||சஃக இ|த ப[தித]பித சிதெ லெனெ பச விசதி. தேவர்கள் அன்பன் [சத்தா] திசைய மகாராசாவுடைய மைந்தன் இலாஞ்ச திசையன் இங்கு தாபித்த இருபத்தைந்து குளிர்ந்த குகைகள் (IC 428).
5. அவர்களை பாண்டிய அரசர்களாக இனங்காண்பார்கள். எவ்வாறெனினும் ஒரே நேரத்தில் ஏழு அரசர் படையெடுத்து வருவது சாத்தியமில்லை என்பதால், இவர்களை பாண்டியப் படையில் முக்கிய பிரதானிகளாக இருந்தவர்கள் என்று கருதலாம். இவர்களுக்கும் உரோகணத்தில் பாண்டிய வம்சத்தில் வந்த பத்து உடன்பிறந்தார் குலத்துக்கும் பிராமணன் திய்யனுக்கும் இருந்த தொடர்பு தெளிவில்லை. ஒருவேளை துட்டகாமணியின் காலத்தின் பின்னரும் பத்து உடன்பிறந்தார் குலம் கிழக்கு உரோகணத்தில் நீடித்ததெனில் அவர்களுக்கு ஏற்பட்ட ஒடுக்குமுறை அல்லது அழிவுக்குப் பகரமாகவும் தெற்கே அவர்களது ஆதரவாளரை இணைத்து திய்யனும் வடக்கே பாண்டியரும் வட்டகாமணிக்கு எதிராக படையெடுத்திருக்கலாம்.
உசாத்துணை
- கமலநாதன், சா.இ. கமலநாதன், கமலா. (2005). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், கொழும்பு – சென்னை:குமரன் புத்தக இல்லம்.
- பத்மநாதன், சி. (2016). இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழரும் (கிமு 250 – கிபி 300). கொழும்பு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
- Paranavitana, S. (1970). Inscriptions of Ceylon: Volume I, Ceylon: Department of Archaeology.
- Ranawella, G.S. (2018). History of the Kingdom of Rohana: From the Earliest Times to 1500 AC. Colombo: Ministry of Higher Education and Department of Archaeology.
இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.
தொடரும்.