உணவில் யாழ்ப்பாணத்து பழங்கள்
எமது நாட்டு தட்பவெப்பநிலைக்கு பழவகைகள் இன்றியமையாததாக இருக்கின்றன. குறிப்பாக பல்வேறு பருவ காலநிலைகளைக் கொண்ட எமது நாட்டில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காலநிலைக்கும், காலநிலை மாறுபாட்டால் ஏற்படக்கூடிய உபாதைகளுக்கும் ஏற்ப பழவகைகள் பருவ காலங்களில் இயற்கையாகவும் விவசாயத்தின் மூலமாகவும் கிடைக்கின்றன.
கூடுதலாக வெப்பகாலங்களில் பழங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. மாம்பழம், பலாப்பழம், விளாம்பழம், அன்னமுன்னாப்பழம், சீதாப்பபழம், ஈச்சம்பழம், வத்தகப்பழம், வெள்ளரிப்பழம், இலந்தைப்பழம், வில்வம்பழம், நாவற்பழம், பனம்பழம், நாரைத்தோடை, கொய்யாப்பழம், முந்திரிகைப்பழம் எனப் பல்வேறு உள்ளூர்ப் பழவகைகள் காணப்படுகின்றன. வாழைப்பழம், பப்பாசிப்பழம் போன்ற பழவகைகள் ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியனவாக இருக்கின்றன.
பழங்கள் அதிகளவில் இனிப்பான மாப்பொருளையும், உயிர்ச்சத்துக்களையும், கனிமங்களையும் மற்றும் நார்ச்சத்தையும் இவற்றுடன் அதிகளவிலான தாவர இரசாயனங்களையும் கொண்டவை. இதனால் பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும், வளர்சிதை மற்றங்களைத் தடுப்பதிலும், உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கும் இன்றியமையாதனவாகக் காணப்படுகின்றன. அத்துடன் பழங்களை அதிகம் உட்கொள்ளும்போது எமது நாளாந்த நீர்த்தேவையையும் பூர்த்தி செய்யப்படுகின்றது.
சில பழவகைகள் எமது வழக்கில் “கிரந்தி” என்ற வகைப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றன. இவை சில ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடியன. எனினும் எல்லோருக்கும் இவை ஒவ்வாமையை ஏற்படுத்துபவனவாக அமையாது. அத்துடன் உட்கொள்ளும் அளவு, உட்கொள்ளும் கால அளவு என்பவற்றிலும் இது தங்கியுள்ளது. எனவே அவற்றை உட்கொண்டு பார்த்து அதன் பிற்பாடு விலக்குதல் நன்று. இவ்விடயத்தில் ஆஸ்துமா, தோல் நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் கூடுதல் கவனமெடுத்தல் அல்லது தவிர்த்தல் நன்று.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் தொற்றா நோய்களால் அவதிப்படுபவர்களாகக் காணப்படுகின்றார்கள். குறிப்பாக நீரிழிவு, அதிஉடற்பருமன் போன்ற நோய்நிலைகளில் பழவகைகள் உண்ணலாமா? என்ற சந்தேகம் உள்ளது.
பெரும்பாலானவர்கள் மேற்படி நோய் நிலைகளில் பழங்கள் உண்ணலாமா, வேண்டாமா, என்று சிந்திக்கின்றார்களே அன்றி எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது பற்றி அலட்டிக்கொள்வதில்லை. பழங்களில் நார்ச்சத்து, உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் அதிகமாக காணப்பட்டாலும் சுக்குரோசு (Sucrose) என்கின்ற மாச்சத்து அதிகமாகவே காணப்படுகின்றது. சுக்குரோசின் அடிப்படை அலகுகளாக குளுக்கோசும் (Glucose), புறக்ரோசும் (Fructose) காணப்படுகின்றன. எந்தளவுக்கு இனிப்பு அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு சுக்குரோசு அதிகமாகக் காணப்படுகின்றது. நீரிழிவு, அதிஉடற்பருமன், கொலஸ்திரோல் நோயுள்ளவர்களுக்கு அதிகளவு இனிப்புள்ள பழங்கள் ஆகாது. கர்ப்பப்பைக் கட்டிகள் உள்ளவர்களுக்கும் அதிகளவில் ஆகாது.
பொதுவாக ஒருவருக்கு உடலின் நாளாந்த தேவைக்காக, பழங்கள் 100g – 250g வரை தேவையுள்ளது.. உலர் பழங்களாயின் 4 மேசைக்கரண்டி தேவையுள்ளது. எனவே தேவைக்கு அதிகளவான மாச்சத்து உட்கொள்ளப்படும் பொழுது ஈரல் அதிகம் தொழிற்பட வேண்டியிருக்கின்றது. ஈரலானது மேலதிகமான மாப்பொருளை கொழுப்பாக மாற்றிச் சேகரித்தல், அவற்றைச் சேமிக்கும் (தோலுக்குக்கீழ்) இடத்துக்கு கொண்டுசெல்ல கொலஸ்திரோலை (கெட்டகொலஸ்திரோல் – LDL) உருவாக்கல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. ஈரலைச்சுற்றியும் கொழுப்பு படிவடைகின்றது. இதற்கும் மதுவகைகளால் ஏற்படும் கொழுப்புப்படிவுக்கும் தொடர்பில்லை. இரண்டு நிலைகளும் சேரும்போது கொழுப்பு படிவு விரைவாக இடம்பெறும். பாதிப்பு அதிகமாகும்.
பழங்களை பழச்சாறாகப் பருகும்போது இவ்விதமான பாதிப்புக்கள் இன்னும் அதிகமாகும். ஏனெனில் பழச்சாறுகளில் நார்ச்சத்து வடிகட்டப்படுவதாலும், பழச்சாறுக்கு மேலதிகமாக சீனியும் சேர்க்கப்படுவதாலும் இரத்தத்தில் குளுக்கோசின் அளவு சட்டென்று அதிகரித்துவிடுகின்றது.
வளரும் சிறுவர்கள், உடல் நலிந்தவர்கள் பழங்களை அதிகம் உள்ளெடுத்தல் வேண்டும். ஏனையவர்கள் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப அளவோடு பழங்களை உண்ணுதல் வேண்டும். இயற்கையாக உள்ளூர்களில் கிடைக்கும் பழங்களை உண்ணுதல் விரும்பத்தக்கது. மலச்சிக்கல் ,மூல நோய், புற்றுநோய் உள்ளவர்கள் அதிகம் பழங்களை உண்ணவேண்டும். பழங்களை உண்ணும்போது ஒரேவகையான பழங்களை உண்ணாது வகைவகையான வேறுபட்ட பழங்களை உண்ணுதல் நன்று. குறைந்தது ஒருநாளைக்கு இரண்டு வேறுபட்ட பழங்களை உண்ணுதல் வேண்டும்.
- பழங்கள் உண்பதால் ஏற்படும் நன்மைகள்
- அதிகளவு நீரைக் கொண்டுள்ளது. உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது.
- தேவையான குளுக்கோசைக் கொண்டிருப்பதால் தேவையான சக்தியைத் தரக்கூடியது.
- அதிகளவு நார்ச்சத்தைக் கொண்டது. சமிபாட்டுத் தொகுதி சிறப்பாக தொழிற்பட உதவும். கொலஸ்திரோல் அகத்துறிஞ்சலைக் குறைக்கும், உடலில் நச்சுக்கள் சேர்வதைக் குறைக்கும்.
- உயிர்ச்சத்துக்கள் கனியுப்புக்களுக்கான சிறந்த மூலங்கள். முக்கியமாக பொற்றாசியத்தை அதிகளவில் கொண்டுள்ளன.
- அதிகளவு கற்ப இரசாயனங்களையும் (Antioxidants), தாவர இரசாயனங்களையும் (Phytochemicals) அதிகம் கொண்டவை. இதனால் ஆரோக்கியமாக இருக்க உதவுவதுடன் நோயணுகாது இருக்க உதவுகின்றன.
வத்தகப்பழம் – கெக்கரிப்பழம்
“வத்தகப் பழங்கு ளிர்ச்சி மன்னிடும் பைத்தி யம்போம்
சத்திபோம் பித்தந் தீருந் தவறிலாக் கொடியீ தல்லால்
ஒத்தகக் கரியும் வெம்மை யொழித்துச்சீ தளமுண்டாக்கம் …”
– பக்.70, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
வத்தகப்பழமானது உடலுக்குத் குளிர்ச்சியை தரும், பித்தம் தணியும், சத்தி நிற்கும். கெக்கரிப்பழம் உடற்சூட்டினைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். இவை இரண்டும் அதிக வெப்பமான காலங்களில் எமது பிரதேசங்களில் கிடைக்க கூடியன. அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து பாதுகாக்கக் கூடியன.
வத்தகப்பழமானது தனது நிறையில் 91% நீரினைக் கொண்டிருப்பதுடன் குறைந்தளவு கலோரிகளையும் கொண்டது. அத்துடன் இதன் தோற்பகுதியுடன் சேர்ந்த வெள்ளைநிற தசைப்பகுதியானது குறிப்பிடத்தக்களவு தாவர இரசாயனமான Arginine கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பு நிலையைக் (Insulin resistance) குறைக்கக்கூடியது. இதனால் நீரிழிவு உள்ளவர்கள் அளவுடன் உண்ணலாம்.
வெள்ளரிவிதை – காய் – பழம் – பிஞ்சு
“வித்துத்தான் சலவ டைப்பை விலக்குங்காய் வாத மாக்கும்
மெத்திய பழத்தாற் பித்தம் வீடிடுந் நீரும் போகும்
உத்தம மான பிஞ்சா லோங்கிடுஞ் சிறுநீர் போகும்
வைத்திடிக் குணங்க டாமே வளரும்வெள் ளரியின் றன்மை”
-பக். 70, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
வெள்ளரி வித்தானது சல அடைப்பு போன்ற சிறுநீர் ரோகங்களைக் குறைக்கும். வெள்ளரிக்காய் வாதத்தைப் பெருக்கும்.வெள்ளரிப்பழம் பித்ததோசத்தை சீராக்கி உடற்சூட்டைத் தணித்திடும். சிறுநீர் இலகுவாகப் போக உதவிடும். வெள்ளரிப்பிஞ்சுக்கு சிறுநீர் பெருகிடும்.
வாழைப்பழம்
யாழ்ப்பாணப் பாரம்பரியத்துடன் வாழைப்பழம் அல்லது வாழை பின்னிப்பிணைந்து காணப்படும் ஒன்றாகும். மங்கல, அமங்கல பாரம்பரிய நிகழ்வுகள், பாரம்பரிய உணவாக ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துள்ள பல உப வகைகளைக் கொண்டுள்ள ஒரு பழ வர்க்கமாகும்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பயன்படுவதும் விரும்பி உண்ணக்கூடிய பழமாகவும் காணப்படுகின்றது. நன்றாக பழுத்த வாழைப்பழம் ஒன்றில் 22% மாப்பொருள் காணப்படுகின்றது. அதிகளவில் நார்ச்சத்து, பொற்றாசியம், மங்கனீஸ், உயிர்ச்சத்துக்கள் B6, C ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.
வாழைக்கிழங்கு – பழம் – கப்பற்பழம்
“மருவிய கிழங்கு வெட்டை மேகத்தை மாற்று மென்ப
பெருகிய கனியே வாதம் பித்தமே சேட மோடு
சருவிய கரப்பன் சேர்க்குஞ் சார்க்கப்பற் கனிதாம் மந்தம்
மருவிடும் வாத மாதி மதுரமு மாகு மன்றே”
-பக்.76, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
வாழையின் கிழங்கு சமையலுக்கு நமது பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்டதொன்று. இன்று அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றது. வாழைக்கிழங்கானது உடற்சூடு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கக்கூடியது. நன்கு கனிந்த வாழைப்பழம் (பொதுவாக) வாதம், பித்தம், கபம் ஆகிய உயிர்த்தாதுக்களை அதிகரிப்பதோடு தோல் நோய்களையும் கூட்டும். கப்பல் வாழைப்பழம் மந்தம், சோம்பல், மலக்கட்டை ஏற்படுத்தி தொடர்ந்து வாதத்தை ஏற்படுத்தும் மதுரச்சுவையாகும்.
கதலிப்பழம், இதரைப்பழம் – பூ
“கதலியின் கனியே விக்கல் கக்கலுந் தீர்க்கு மென்ப
சிதைவிலா விதரை வாழைச் செழுங்கனி யெழு பித்தம்
உதரத்தில் வாயு வோடுட் காய்ச்சலு மொழிக்கு மிப்பூ
மதிநிகர் முகமின் னார்க்கு வளர்த்திடுங் கருப்பந் தன்னை”
-பக்.76, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
“இதரை வாழைப் பழத்தி லெழுபித்தத்
துதர வாயுவுட் காய்ச்ச லொழிக்கும்பூச்
சிதையு நீருணக் கெர்ப்பந் தரித்திடும்
கதலி விக்கலுங் கக்கலுந் தீர்க்குமால்”
-பக்.06, சொக்கநாதர் தன்வந்திரியம்-
யாழ்ப்பாணத்து நூல்களான பதார்த்த சூடாமணி மற்றும் சொக்கநாதர் தன்வந்திரியம் போன்ற நூல்களில் கதலி மற்றும் இதரை வாழைப்பழங்கள் மற்றும் வாழைப்பூ தொடர்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன. கதலி வாழைப்பழமானது விக்கல், வாந்தி என்பனவற்றைத் தீர்க்கும். இதரை வாழைப்பழமானது அதிகரித்த பித்தம் இதனால் ஏற்படும் உடல் எரிவு, மூலம், வயிற்றுப்புண், வயிற்றில் வாயு சேரல் இவற்றோடு உட்காய்ச்சல் என்பனவற்றைப் போக்கும். இதரை வாழைப்பூ கர்ப்பச்சிதைவு ஏற்படாது கர்ப்பத்தினை வளர்த்திடும். அதேபோல் வாழைப்பூச்சாறு ஆனது முறைப்படி உட்கொள்ள கர்ப்பம் தரித்திட உதவும்.
மாதுளம் பழம் (ஊர் மாதுளம் பழம்)
“…. மாதுளம் பழத்தால்
தோன்றிய பித்தமூலஞ் சொல்கபம் வரட்சி மேகம்
ஆன்றிடு மெரிவு தாக மறை கிறு கிறுப்பும் போமே”
-பக் 76-77, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
மாதுளம்பழத்துக்கு பித்தத்தினால் ஏற்படும் மூலம், சளி, உடல் வரட்சி, மேகரோகங்களால் ஏற்படும் எரிவு, தாகம், தலைச்சுற்று என்பன குறையும். அதிகளவிலான நார்ச்சத்து, உயிர்ச்சத்துக்களான B9 (Folate), C, K ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.
நாரத்தம் பழம் – தமரத்தம் பழம் (விளிம்பிப்பழம்)
“ஆகுநா ரத்தை தன்னி னருங்கனி யிரத்த பித்தம்
பாகமார் சேற்ப பித்தம் பரிவுறு மென்பர் மேலோர்
தாகமே வாந்தி பித்தந் தமரத்தைக் கனியே யுண்ணப்
போகுமென் றிசைப்ப ரம்மா பொருவிலா முனிவர் தாமே”
-பக்.76, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
நாரத்தம்பழம் உடலில் இருந்து குருதி வெளியேறும் நிலைகளை (உதாரணமாக மூலம், பெண்களில் மாதாந்தம் ஏற்படும் பெரும்போக்கு போன்ற நிலைகளில்) இரத்தம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும். அதிகரித்த கபம், பித்தம் தோசங்கள் குறையும். தாகம், வாந்தி, அதிகரித்த பித்தம் என்பன தமரத்தம்பழம் உண்ணக் குறைவடையும்.
முந்திரிகைப் பழம்
“…. முயர்ந்தமுந் திரிகை மேவும்
தீதிலாக் கனிவ ரட்சி சேர்கய மேகம் பித்தம்
வாதையாந் தாக மோட்டு மலசுத்தி தானு மாக்கும்”
-பக்.77, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
முந்திரிகைப் பழமானது நீரிழிவினால் ஏற்படும் உடல் வரட்சியுடன் உடல்மெலிவு, பித்த நோய்கள், தாகம் என்பவற்றைப் போக்குவதுடன் மலத்தினையும் இலகுவாக போக்கும்.
பொதுவாகப் பழங்கள் இனிப்புத்தன்மை அதிகமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் அதிகளவில் உள்ளெடுக்க முடியாது. ஆனால் முந்திரிகைப்பழமானது நீரிழிவில் மட்டுமன்றி அதி இரத்த அழுத்தம், கொலஸ்திரோல் போன்றவற்றிலும் பயன்தருகின்றது. இதற்கு முந்திரிகைப்பழத்தில் உள்ள தாவர இரசாயனங்களே காரணமாகின்றன. முக்கியமாக Resveratrol எனும் இரசாயனம் நீரிழிவினைக் கட்டுப்படுத்துகின்றது. முந்திரிகைப்பழத்தின் Glycemic Index, Glycemic load என்பன குறைந்த அளவினைக் கொண்டது. இதனால் முந்திரிகைப்பழம் உண்ணும்போது குருதியில் குளுக்கோசின் அளவு அதிகரிக்காது. ஒருவர் ஒருநாளைக்கு ஒரு 120 கிராம் முந்திரிகைப்பழம் உண்ணலாம். அத்துடன் முந்திரிகைப்பழத்தில் உள்ள தாவர இரசாயனங்கள் மூன்று விதங்களில் நீரிழிவினைக் கட்டுப்படுத்துகின்றன.
- குருதியில் குளுக்கோசின் அளவினைக் குறைத்தல்
- இன்சுலின் சுரப்பினை கூட்டுதல்.
- இன்சுலின் சுரக்கும் கலங்களைப் சிதைவடைவதில் இருந்து பாதுகாத்தல்.
இவற்றைவிட முந்திரிகைப்பழமானது கண்கள், இதயத்தின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது. உடற்கலங்கள் சிதைவடைதலை அல்லது மூப்படைவதைத் தடுக்கின்றது. முந்திரிகைப்பழத்தில் உயிர்ச்சத்துக்களான B6, B2, C, K என்பனவும் மங்கனிஸ், பொற்றாசியம், செப்பு போன்ற கனிமங்களும் அதிகளவில் காணப்படுகின்றன. முந்திரிகைப்பழம் உண்ணும்போது கவனிக்கவேண்டியவிடயம், அதற்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லிகளே. எனவே முந்திரிகைப்பழத்தினை வாங்கிய பின்னர் ஓடும் நீரில் நன்கு கழுவி, முடிந்தால் அடுத்தநாளோ அல்லது அதற்கும் பிந்தியோ உண்பது சிறந்தது.
எலுமிச்சம் பழம் – பலாப்பழம்
“வயமாஞ்சம் பீர மேவும் வண்பழம் பித்தம் போக்கும்
கயமான விழிக்கு நன்றாங் கருதுமிவ் விலைபுண் ணுக்காம்
நயமான பலாப்ப ழங்காய் நண்ணுமை வாத பித்தம்
பயமான கரப்பன் றானும் பகர்வித்து வாதம் வாயு”
-பக்.76, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
எலுமிச்சம் பழத்துக்கு அதிகரித்த பித்த தோசமானது குறைவடையும் இதனால் உடல் குளிர்ச்சி பெறும். குறைவடையும் கண்பார்வை சீராகும். இதன் இலை புண்ணினை இலகுவாக ஆற்றும். இதில் அதிகளவு உயிர்ச்சத்து C உள்ளது.
அதிகளவில் தொடர்ச்சியாக உண்ணும்போது பலாப்பழம், பலாக்காய் என்பன மந்தத்தை ஏற்படுத்தி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோசங்களும், ஒன்றினை ஒன்று கேடடையச்செய்து நோயினை உண்டாக்கும். கரப்பன் போன்ற தோல் நோய்களையும் தோற்றுவிக்கின்றன. பலா வித்து ஆனது வாத தோசத்தினை அதிகரிப்பதுடன் உடலில் வாயுவையும் அதிகரித்துக் கொள்ளும்.
பேரீச்சம்பழம் – நெல்லி
“… செவ்வையார் பேரீஞ்சுள்ள செழுங்கனி வரட்சி தாகம்
கவ்வைவயார் பித்தம் போக்குங் களங்கமி னெல்லலிக் காயே
எவ்வமா ருழலை சேட மீனஞ்செய் வரட்சி யின்னும்”
-பக்.77, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
பேரீச்சம்பழமானது அதிகரித்த பித்த தோசத்தினை தன்னிலைக்கு கொண்டுவரும் அதன் மூலம் பித்த அதிகரிப்பினால் ஏற்பட்ட உடல் வரட்சி, தாகம் என்பன குறையும். பித்த தோசத்தினால் ஏற்படும் உபத்திரவங்களை நெல்லிக்காய் போக்கும். இது அதிகளவில் உயிர்ச்சத்து C ஐக் கொண்டுள்ளது. இதனால் கற்பமாக (Antioxidant) தொழிற்பட்டு உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களைத் தடுத்து ஆயுளை நீடிக்கும்.
“பேரிந் தெனுங்கனிக்குப் பித்தமத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் – பேரா
இரத்தபித்த நீரிழிவி லைப்பறும் அரோசி
உரத்தமலக் கட்டுமறும் ஓது”
-பக். 88, குணபாடம் மூலிகை வகுப்பு-
பேரீச்சம்பழமானது பித்த தோச அதிகரிப்பால் ஏற்படும் செருக்குநோய், மயக்கம், காய்ச்சல், நீர்க்கோவை (ஒருவகைச் சளி), அதீததாகம், உடலில் இருந்து குருதி வெளியேறும் நிலைகள், நீரிழிவு, பசியின்மை, மலக்கட்டு என்பனவற்றுக்கு உகந்தது. இது ஏனைய பழங்களைவிட சிறப்பானது. ஏனெனில் அதிகளவு நார்ச்சத்து (100g இல் 7g நார்ச்சத்து உள்ளது) பொற்றாசியம், அதிகளவு கற்ப இரசாயனங்கள் (Antioxidants) என்பவற்றைக் கொண்டது. அத்துடன் செலனியம், மக்னீசியம், மங்கனீஸ் செப்பு, இரும்பு போன்ற கனிமங்களையும் உயிர்ச்த்துக்களான B6, C, D என்பவற்றையும் குறிப்பிடத்தக்களவு கொண்டது. இதனால் பல்வேறுபட்ட நன்மைகளை உடலுக்குத் தருகின்றது.
இதிலிருந்து கிடைக்கும் சக்தியானது (100 கிராமில் 277 கிலோகலோரிகள்) புரக்ரோசு மற்றும் குளுக்கோசில் இருந்து கிடைக்கின்றது. அத்துடன் போதுமான அளவு நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால் இதிலிருந்து கிடைக்கும் குளுக்கோசின் அளவு மட்டுப்படுத்தப்படுகின்றது (low glycemic food). நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் உள்ள நோயாளிகள் ஒரு நாளைக்கு 1 – 2 பேரீச்சம்பழங்களை உண்பதன் மூலம் தேவையான சக்தியைப் பாதுகாப்பாகப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் கொழுப்புச் சத்தில் இருந்து பெறப்படும் சக்தியின் தேவைப்பாடு குறைக்கப்படுகின்றது.
போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதனால் மலக்கட்டு ஏற்படுவதைத் தடுக்கின்றது. ஏனைய பழங்களுடன் ஒப்பிடும்போழுது Carotenoids, Flavonoids, Phenolic acid போன்ற கற்ப இரசாயனங்களைக் (Antioxidants) கொண்டிருப்பதனால் உடற்கலங்கள் சிதைவடையாமல், அழிவடையாமல் பாதுகாப்பதன் மூலம் நரை, திரை, மூப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றது. ஞாபகசக்தி மற்றும் மூளையின் செயற்பாட்டுக்கு சிறப்பாக உதவுகின்றது.
மாம்பழம்
“வாகுள மாவின் பிஞ்சு வாதமை பித்த மாற்றும்
பாகமாங் கனிக ரப்பன் பகர் வாதம் பித்தந் தானும்
ஆகுங்காய் கிரந்தி வாத மாம்பூவித் திற்கு மந்தம்
ஆகமார்கிராணி வாயு வதிசாரஞ் சலரோ கம்போம்”
-பக். 78, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
மாவின் பிஞ்சானது உடலில் அதிகரித்த முத்தோசங்களினை சமநிலைக்கு கொண்டுவருவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தின் சமநிலையைப் பேணும். மாம்பழமானது கரப்பன் போன்ற தோல் நோய்கள், வாதம், பித்தம் சார்ந்த நோய்கள் என்பவற்றை தோற்றுவிக்கும். மாங்காய், கிரந்தி மற்றும் வாதத்தை அதிகரிக்கும். மாம்பூ, வித்து எற்பவற்றுக்கு மந்தம், கிராணி எனப்படும் வயிற்றுக் கழிச்சல், வாயு, சலரோகம் என்பன குறையும்.
மாம்பழத்தில் உயிர்ச்சத்துக்கள் A, B6, B9, C, E என்பன அதிகமாகக் காணப்படுகின்றன. அதேபோல் கனிமங்களில் செப்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றது. 165 கிராம் மாம்பழத்துண்டுகளில் இருந்து மேற்கூறப்பட்ட ஊட்டச்சத்துக்கள் ஒருவருடைய நாளாந்தத் தேவையில் குறைந்தது 10% ஐ நிறைவு செய்கின்றன.
விளாம்பழம்
“தீதிலா விளாம்ப ழத்தாற் றீராத வரட்சி தாகம்
ஓதிடுங் கிறுகி றுப்போ டோங்கியே சோகங் காய்ச்சல்
வாதைசெய் மலமும் போகும் வந்திடுங் குளிர்மை யென்ப
கோதிலாக் காய்வ யிற்றி னுளைவிற்குக் கொள்ளலாமே”
-பக்.78, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
தீராத உடல் வரட்சி, தாகம், தலைச்சுற்றல் இதனால் ஏற்படும் மனக்கவலை, காய்ச்சல், மலச்சிக்கல் என்பன குறைந்திடும். உடல் குளிர்ச்சியடையும். விளாங்காய்க்கு மலம் கட்டும்.
இலந்தைப்பழம்
“இலந்தையின் கனிக்குச் சேட மென்பது மிதனி னோடே
கலந்திடும் வாதந் தானுங் காய்ச்சலிற் சீதம் வாயு
மலஞ்சல மறிப்பு மந்தம் வாதத்தி லுவாந்தி யும்போம்…..”
-பக்.78, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
இலந்தைப் பழத்துக்கு, அதிகரித்த கபத்துடன் மூச்சுக்கஷ்டம் மற்றும் வாதம் அதிகரித்து ஏற்படும் குளிர்காய்ச்சல், வாயு, மலஞ்சலம் அடைத்தல், மந்தம், வாந்தி என்பன குறைந்திடும்.
கொய்யாப்பழம்
“பொருமன்மந் தங்க ரப்பன் புகல்கொய்யாப் பழத்திற் காகும் …”
– பக்.78, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
வயிற்றுப் பொருமல், மந்தம், தோல் நோய்கள் என்பன கொய்யாப்பழம் உண்பதால் ஏற்படும். ஒவ்வாமை இருப்பவர்கள், ஏற்கனவே தோல் நோய்கள் இருப்பவர்கள், ஒவ்வாமை இருப்பவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் கொய்யாப்பழம் உண்ணும்போது கவனமெடுத்தல் வேண்டும்.
எமக்கு ஒரு நாளைக்குத் தேவையான உயிர்ச்சத்து C ஐ விட 80g கொய்யாப்பழத் துண்டுகள் இரண்டுமடங்கு அதிகமான உயிர்ச்சத்து C ஐக் கொண்டுள்ளன. அதேபோல் நார்ச்சத்து, மற்றும் உயிர்ச்சத்து A குறிப்பிடத்தக்களவு கொண்டது. குறைந்த குளுக்கோஸ் அடைவுச்சுட்டி (Glycemic Index – 12 – 24) மற்றும் மிகக் குறைந்த குளுக்கோஸ் சேரல் அளவுச்சுட்டியைக் (Glycemic load – 1.3 – 5) கொண்டிருப்பதனாலும், 100g கொய்யாப்பழத்தில் இருந்து அண்ணளவாக 68 கலோரிகளே கிடைப்பதினாலும் நீரிழிவு நோயாளர்கள் அளவுடன் உண்ணலாம்.
நாவல் பழம்
“….நாவற்பூ மலத்தைக் கட்டு நவிறரு புகைச்சல் காய்ச்சல்
மேவுநீ ரழிவைப் போக்கு மிளிர்பட்டை சலரோ கத்தைத்
தாவவொட் டாதா மீதிற் சார்ந்திடு கனிக்கு ணங்கேள்”
-பக்.80, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
நாவற் பூ மலத்தை கட்டும். கண்புகைச்சல், காய்ச்சல், நீரிழிவினை நாவற்பட்டை குறைத்திடும். நாவற்பழம் நீரிழிவினை அதிகரிக்காது கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அனுசேபத் தொழிற்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்திக்கக்கூடியது. இதன்மூலம் அதிஉடற்பருமன், நீரிழிவு, கொலஸ்திரோல் போன்ற பல்வேறு நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் வர நாவற்பழத்தில் உள்ள Anthocyanins, Ellagic acid, Glucoside, Isoquercetin, Kaempferol and Myricetin போன்ற தாவர இரசாயனங்கள் உதவுகின்றன. துவர்ப்புச் சுவையை உடையதால் மலத்தைக்கட்டக் கூடிய தன்மை நாவற்பழத்துக்கும் உண்டு. குறிப்பிடத்தக்களவு இரும்புச்சத்து, உயிர்ச்சத்து C இனைக் கொண்டுள்ளது.
பனைசார் உணவுகள்
யாழ்ப்பாணத்தின் அடையாளங்களுள் பனை முக்கியமானதொன்றாகும். நிலத்தடி நீரை பாதுகாப்பது, கட்டடப் பொருட்கள், உணவு, பதநீர், கள்ளு, சமையல் உபகரணங்கள் செய்தல் எனப் பல்வேறு வழிகளில் யாழ். மக்களுடன் பின்னிப்பிணைந்து கற்பகதருவாக காணப்படுகின்றது.
பனைசார்ந்த உணவுப்பொருட்கள் குறிப்பிட்ட பருவகாலத்தில் கிடைத்தாலும் அனைத்து பருவ காலங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகுக்கின்றன.
கருப்பநீர் – நுங்கு – பழம் – பூரான்
“செப்பிதன் பதநீர் வெம்மை தீர்த்திடு நுங்க ருந்தில்
வெப்புநா வரட்சி பித்தம் விலகிடுங் குளிர்ச்சி யுண்டாம்
உப்பிச முறும்ப ழத்தை யுண்டிடி லுடல்க னக்கும்
தப்பிலாக் கொட்டை யுற்ற தகன்வாத மென்பர் மேலோர்”
-பக்.82, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
பனையின் பதநீருக்கு உடலில் ஏற்பட்ட வெம்மை குறைந்து உடலில் குளிர்ச்சி ஏற்படும். நுங்கானது உடல் வெம்மை, நாவரட்சி, பித்த தோச அதிகரிப்பு என்பவற்றைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியைத்தரும்.
நுங்கானது பொதுவாக வெப்பமான காலங்களிலேயே எமக்குக் கிடைக்கின்றது. இது இயற்கை எமக்கு அளித்த கொடை. பெரும்பாலும் வெப்பகாலங்களில் அதிகம் ஏற்படக்கூடிய மூலம், தோல் நோய்கள், வியர்வைக்குரு, வயிற்றுப்புண், மலச்சிக்கல் என்பவற்றைப் போக்கக்கூடியது.
நுங்கானது அதிக புரதச் செறிவு கொண்டது. 100 கிராம் பாலில் 3.3 கிராம் புரதமே உள்ளது. ஆனால் 100 கிராம் நுங்கில் 10.8 கிராம் புரதம் உள்ளது. அண்ணளவாக பாலைவிட நுங்கில் மூன்று மடங்கு புரதம் உள்ளது. அதிகளவு நீர்ச்சத்தையும் புரதத்தையும் கொண்டு, குழந்தைகள், சிறுவர்களுக்கான சிறந்ததொரு உணவாகக் காணப்படுகின்றது. அதேபோல் பனம்பழத்திலும் புரதம், உயிர்ச்சத்து A இரும்பு, கல்சியம் என்பன குறிப்பிடத்தக்களவில் அதிகம் உள்ளன.
பனம்பழமானது வயிற்றூதலை ஏற்படுத்தும், மந்தத்தை ஏற்படுத்தும். எனவே தொடர்ச்சியாக உண்ணுதல் ஆகாது. பனாட்டும் இக்குணங்களையே கொள்ளும் என்பதால் எம்முன்னோர்கள் இதனைத் தவிர்க்க பாணிப்பனாட்டு செய்து கொள்வார்கள். பாணிப்பனாட்டின் பாணியானது பதநீர், மிளகு, நற்சீரகம், எள்ளு, என்பன சேர்த்து காய்ச்சி பதமாக எடுக்கப்படுகின்றது. மேற்படி பாணியில் பனாட்டினை சிறுதுண்டுகளாக வெட்டி மூழ்கவிடப்படும். பாணிப்பனாட்டின் பாணிக்கான இச்சேர்வைகள் சில இடத்துக்கு இடம் மாறுபடலாம். பனங்கொட்டையினுள் இருக்கும் பூரான் (தகன்) வாததோசத்தை அதிகரிக்கும் தன்மையுடையது.
பனங்கிழங்கு – பிட்டு – கூழ் – பனங்கட்டி – கற்கண்டு
“கிழங்குநன் மதுர மாகுங் கெட்டியாய் மலத்தைப் போக்கும்
களங்கமில் பிட்டு மற்றே காமர்கூழ் மலத்தைப் போக்கும்
பழந்திரள் மலங்குன் மம்போம் பனங்கட்டி யுண்டாற் கண்டு
முழங்கிய சேடங் குன்ம முதிர்ந்திடா தடக்கு மன்றே”
-பக்.83, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி-
பனங்கிழங்கு அறுசுவைகளில் இனிப்புச் சுவையுடையது. மலக்கட்டை நீக்கக்கூடியது. ஒடியல் பிட்டு, கூழ் என்பனவும் மலத்தைப்போக்க கூடியன. பனங்கட்டிக்கு நீண்டநாள் மலக்கட்டு, வயிற்றுப்புண் இல்லாது போகும். பனங்கற்கண்டுக்கு சளி, வயிற்றுப்புண் என்பன அதிகரிக்காது குறைந்துபோகும்.
பனங்கிழங்கு என்பது உண்மையில் பனம்விதையின் முளையத்தின் பகுதி ஆகும். பனங்கிழங்கு அதிகளவு நார்ச்சத்தைக் கொண்டது. இதனால் நார்ச்சத்தினால் கிடைக்கக்கூடிய பயன்கள் பனங்கிழங்குசார் உணவுகளில் இருந்து கிடைக்கின்றன. செலுலோஸ் (Cellulose), லிக்னின் (Lignin) போன்ற நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் பனங்கிழங்கில் காணப்படுகின்றன. இதனால்,
- குடலசைவுகள் சீராக இயக்கப்படுவதுடன் மலம் சீராக வெளியேற உதவுகின்றது.
- வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் தேவைக்கு மேலதிகமாக உணவு உட்கொள்வது தடுக்கப்படுகின்றது. இதனால் அதிஉடற்பருமன், இரத்தத்தில் கொலஸ்திரோல், குளுக்கோசின் அளவு அதிகரித்தல் என்பன தவிர்க்கப்படுகின்றன.
இவற்றினால் இதயநோய்கள், புற்றுநோய்கள் என்பன வராது தடுக்கப்படுகின்றது. இவற்றினைவிட பனங்கிழங்கானது குறிப்பிடத்தக்களவு கல்சியம், இரும்பு, மக்னீசியம் கொண்டுள்ளது. பனங்கட்டி அதிகளவு இரும்புச்சத்தினைக் கொண்டது. ஒடியல் மாவில் இருந்து செய்யப்படும் ஒடியல்கூழ், ஒடியல்மா பிட்டு என்பன யாழ்ப்பாணத்து பாரம்பரிய உணவில் ஆரோக்கியமிக்கவையாகக் காணப்படுகின்றன.
இறுதியாக
“மாறுபாடில்லா உண்டி” என்னும் தலைப்பில், அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள எமது பாரம்பரிய உணவு மூலப்பொருட்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பான நன்மை தீமைகளை ஏனைய நூல்கள், மற்றும் நவீன உணவு விஞ்ஞான ரீதியிலான கட்டுரைகள், நூல்கள் என்பவற்றின் துணைகொண்டு எனது அனுபவத்துடன் பல்வேறு தலையங்கங்களின் கீழ் கடந்த ஒருவருடத்துக்கு மேலாக மாதாந்தத் தொடர்களாக தந்துள்ளேன்.
இங்கு உணவு மூலப்பொருட்களின் மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்துக்களின் பெறுமானங்கள் அவற்றின் தனியான நிலைகளிலேயே தரப்பட்டுள்ளன. இவை அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் உணவு வகை, உணவு தயாரிக்கும் முறை, அவற்றுடன் சேர்க்கும் பொருட்கள், அவ்வுணவுகளுடன் சேர்த்து உண்ணும் உணவுகள் மற்றும் உண்ணும் காலம், அளவுகள், தொடர்ச்சியான பாவனை என்பவற்றில் இவ்வுணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்துக்களின் பெறுமாணங்கள், ஒவ்வாமைத் தன்மைகள் என்பன மாறுபடலாம்.
எமது பாரம்பரிய உணவுப்பழக்கம் அல்லது பாரம்பரிய உணவு முறைமையானது நீண்டகால அவதானம், அதன்மூலம் பெறப்பட்ட அனுபவத்தின் மூலமும், சித்தர்கள், சித்த மருத்துவர்கள், நூலோர்கள் மூலம் பெற்றுக்கொண்ட அறிவு வாயிலாகவும் பெறப்பட்டவை. எமது பிரதேச பருவகாலங்களுக்கு ஏற்பவும் எமது தொழில்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்பவும், எமது பிரதேசங்களில் கிடைக்கும் உணவு மூலப்பொருட்களுக்கு ஏற்பவும் தொடர்மாற்றங்களுக்கூடாக உருவாகப் பெற்றவையே எமது பாரம்பரிய உணவுப்பழக்கங்கள்.
எனவே பாரம்பரிய உணவு முறைகள் ஆரோக்கியமானவையாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . அதேபோல் சில உணவு முறைகள் இக்கால வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபாடு அடைய வேண்டியது என்பதும் கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். முக்கியமாக அருகிவரும் அல்லது குறைந்து வரும் உடல் உழைப்புக்கு ஏற்ப உணவு முறையில் மாற்றம் இன்றியமையாததாகும். அதிகளவில் மாப்பொருளைக் கொண்ட தானியங்கள் எமது பாரம்பரிய உணவில் பிரதான இடத்தைக் கொண்டுள்ளன. இவற்றின் பயன்பாட்டு முறைமையும், அளவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகின்றது.
எனவே உணவுமுறைமைகளைக் கையாளும்போது உரிய மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டியது இன்றியமையாததாகும்.