பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்
Arts
24 நிமிட வாசிப்பு

பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்

February 25, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ எனும் இக்கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பவற்றின் பரந்த காட்சிப் பதிவாக விளங்கும்.

அறிமுகம்

இலங்கையில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முற்பட்டகால யாழ்ப்பாண வரலாற்றிற்கான சரித்திரச் சான்றுகள் மிக அருகியே காணப்படுகின்றன. புராணக் கதைகள், ஐதீகங்கள், ஆதாரமற்ற பழங்கதைகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் ‘யாழ்ப்பாண வைபவமாலை’யின் ஆரம்பப் பகுதிகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பண்டையகால யாழ்ப்பாணம் தொடர்பான மிகவும் குறைவான செய்திகளையே தருகின்றன. வையா பாடல், கைலாய மாலை ஆகிய ஏடுகளும் யாழ்ப்பாணத்தின் தொடக்க காலத்தைப் பற்றிப் போதுமான தகவல்களை வழங்கவில்லை. ஆனால், அதே சமயம் தமிழ்க் காப்பியமான மணிமேகலை, யாழ்ப்பாணத்தின் பண்டைய பெயரான ‘நாக நாட்டின்’ மக்கள், அவர்களது வாழ்க்கை முறை, நாட்டை ஆண்ட அரசன், அவர்களது காலம் பற்றிய சில தகவல்களைத் தருகிறது. மணிமேகலையைத் தவிர, பாளி மொழியில் அமைந்த காலவரன்முறை வரலாற்று நூலான மகாவம்சம், வல்லிபுரம் பொன்னேட்டுச் சாசனம், கிரேக்க நாட்டவரான தொலமியின் ‘நில இயல்’ (Geographia) என்பனவும் பொதுக் காலத்தின் (கி.பி.) தொடக்க நூற்றாண்டுகளில் நாகநாடு பற்றிய சில தகவல்களைத் தருகின்றன.

‘நாகதீவு’ அல்லது ‘நாகநாடு’ (பாளி மொழியில் ‘நாகதீப’) என்பது யாழ்ப்பாணத்தின் பண்டைய பெயராகும். இதை சங்கம் மருவிய கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை என்பனவும், பாளி மொழியில் அமைந்த மகாவம்சம், வீரசோழியம், வல்லிபுரப் பொற்சாசனம் ஆகியவையும், இலங்கையின் புராதன பிராமிக் கல்வெட்டுகளும், அன்றைய நாக நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன.

பொது ஆண்டின் பின் மூன்று முதல் ஐந்தாம் நூற்றாண்டு (கிபி. 300-500) வரையான காலத்தைச் சேர்ந்த செவ்விலக்கியமான மணிமேகலை இலங்கையின் வேறுபட்ட இரு நாடுகளைப் பற்றிக் கூறுகிறது. அவை வடக்கில் அமைந்த நாகநாடும், தெற்கில் புனித பாதச் சுவடுகளுடன் கூடிய சிவனொளிபாத மலை அமைந்திருக்கும் ‘இரத்தின துவீபமும்’ ஆகும்.

நாகதீபம் அல்லது நாகநாடு என்ற பெயர், நாகர்கள் வாழும் தீவு, அல்லது நாகர்களின் நாடு எனப் பொருள் தரும். இப் பகுதியில் நாக இன மக்கள் வாழ்ந்தமையால் அவர்கள் வாழ்ந்த நாட்டுக்கு இப் பெயர்கள் ஏற்பட்டது எனக் கொள்ளலாம். யாழ்ப்பாணத்தின் பண்டைய நாகர்களை தமிழ் மொழி பேசும் பௌத்தர்கள் என மணிமேகலை இனம் கண்டு கொள்வதனால், இவர்களை திராவிட மொழிக் குடும்பத்தினராகக் கொள்ளலாம். நாகர்கள் வட-இந்தியா, தென் இந்தியா உட்பட தென்னாசியா முழுவதும் ஒரு காலகட்டத்தில் பரவி இருந்தமையால் இவர்கள் இந்திய – ஆரிய மொழிக் குடும்பத்தினராகவும் இருக்கலாம் என்ற கருத்து சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. இந்தியாவில் நாகர்முனை, நாகப்பட்டினம் ஆகிய நாகர்களின் பெயர் கொண்ட இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இலங்கையில் நாக அரசர்களின் பெயர் கொண்ட கல்வெட்டுகள் தமிழ்ப்பிராமி (தமிழி) எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன (இவற்றை அடுத்து வரும் அத்தியாயங்களில் காணலாம்). மேலும், மரபணுவியல், மொழியியல் சார்ந்த நவீன ஆய்வுகளும் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்புகளும் ஆஸ்திரலோயிட்டுகளும், முந்து-திராவிடர்களும் (proto- Dravidians) இந்திய-ஆரியர்களின் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தென்னாசியாவில் பரவியிருந்த அடிமூல மக்கள் குழுக்கள் என்பதை அறுதியாக நிறுவியுள்ளன.

மகாவம்சம், தீபவம்சம் போன்ற இலங்கையின் பாளிமொழி நூல்கள், இலங்கையில் விஜயனும், அவனது தோழர்களான இந்திய-ஆரியர்களும் முதன்முதலாக வந்திறங்கிய காலத்தில் இந்தத் தீவகத்தில் ஏற்கனவே நீண்டகாலமாக வாழ்ந்த இயக்கர்களையும், நாகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்றன. எனவே, இவர்கள் இந்திய-ஆரியரல்லாத மக்கள் எனக் கருதப்பட வேண்டும். தமிழ் நாட்டின் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு நாகதீவின் நாகர்களும், தென்னிந்தியாவில் நாகபட்டினம் போன்ற பல இடங்களில் வாழ்ந்த நாகர்களும் ஓரினத்தவரே எனக் கொள்ளலாம். மரபணுவியல் ஆய்வுகளின்படி இன்று தமிழ்நாட்டில் தமிழ் பேசும் ஆண்களிடையே 5% சத (விழுக்காடு) விகிதத்தினரும், பெண்களிடையே 60% சத விகிதத்தினரும் ஆஸ்திரலோயிட் மக்களின் வம்சாவளியினரே எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

நமது முன்னோர்களின் காலத்தைப் பற்றியும், வாழ்க்கை முறை பற்றியும், அவர்கள் வாழ்ந்த சூழலைப் பற்றியும் ஆராய்வதற்குப் பயன்படும் தலைசிறந்த நவீன கருவிகளில் தொல்லியல் ஒன்றாகும். குறிப்பாக, யாழ்ப்பாண அரசு தோன்றுவதற்கு முந்தைய காலம் பற்றிய முறையான ஆதாரபூர்வமான எழுத்துமூல வரலாறு இல்லாத இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு தொல்லியல் ஒரு தலை சிறந்த வரப்பிரசாதமாகும். மேலும் மரபணுவியல், உயிரியல்சார் – மானிடவியல், சமூக மானிடவியல், கல்வெட்டியல், தொல்லெழுத்தியல், நாணயவியல் ஆகிய சாதனங்களை இணைத்து – வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து நவீன காலம் வரையிலான உண்மையான, நம்பகத்தன்மையான ஆதாரபூர்வமான இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை இன்று நம்மால் எழுத முடிகிறது.

நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற கருவூலப் பொருட்கள் காட்டும் அவர்களின் வாழ்வியல், பண்பாடு, நாகரிகம் பற்றிய தகவல்கள், அறிவியல் ரீதியான தொல்லியல் ஆய்வின் அடிப்படைத் தரவுகளாகும். இத் தரவுகளில் அவர்கள் உபயோகித்த அன்றாடப் பாவனைப் பொருட்கள், கல்லாயுதங்கள், மட்பாண்டங்கள், குடியிருப்பு அடுக்குகள், கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், எழுத்து வடிவங்கள் என்பன உள்ளடங்கும்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்துக் கலையை மனிதன் கண்டுபிடிப்பதற்கு முற்பட்ட காலமாகும். எழுத்துக்கலை கண்டுபிடிக்கப்பட்டு களிமண் வில்லைகளிலும், கல்லிலும், மட்பாண்டங்களிலும், ஏடுகளிலும், உலோகத் தகடுகளிலும், இன்னோரன்ன பொருட்களிலும் மனிதன் தனது எண்ணங்களை எழுத்து வடிவில் பதிவு செய்த காலத்திலிருந்து வரலாற்றுக் காலம் ஆரம்பமாகிறது. மொசப்பத்தேமியா (இன்றைய தென்மத்திய ஈராக்), எகிப்து, இலம் (இன்றைய தென்மேற்கு ஈரான்) ஆகிய நாடுகளில் இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுத்துக் கலை உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. எனவே, அந்தக் காலகட்டத்திலிருந்து அந்த நாடுகளின் வரலாறு ஆரம்பமாகிறது. தென் ஆசியாவில் சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் அதே காலகட்டத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் – சிறிய வில்லைகளில் பதிவு செய்த எழுத்து வடிவங்கள் இன்றுவரை வாசிக்கப்படவில்லை. இன்று இந்தியாவில் கல்வெட்டியலாளர்களால் வாசிக்க முடிந்த பிராமி எழுத்து வடிவங்கள் கி.மு. 600 ஆம் ஆண்டு முதலாக தென்னிந்திய மட்பாண்டங்களில் காணப்படும் பிராமி எழுத்துகளாகும். ஆதலால், இந்திய வரலாற்றுக் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு எனக் கொள்ளவேண்டும். வாசிக்கப்படாத சிந்து வெளி எழுத்துகளுக்கும், வாசிக்க முடிந்த பிராமி எழுத்துகளுக்கும் இடைப்பட்ட காலம் வரலாற்று உதயகாலம் என அழைக்கப்படுகிறது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்; கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கற்காலம் மேலும் மூன்று பிரிவுகளாக பழைய கற்காலம், இடைக்கற் காலம், புதிய கற்காலம் எனப் பிரிவாகியிருக்கிறது. இக்காலப் பகுதி, கல்லாயுதங்கள் ஆரம்பத்திலிருந்து சிறிது சிறிதாக தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த காலங்களாகும். பொருளாதார ரீதியாக பழைய கற்காலம், இடைக்கற்காலம் இரண்டும் மக்கள் நாடோடிகளாக காடுகளில் அலைந்து உணவை வேட்டையாடியும், சேகரித்தும் (Hunter-Gatherer way of life) வாழ்க்கை நடத்திய காலங்களாகும். புதிய கற்கால மக்கள் ஓரிடத்தில் குடியேறி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உணவை உற்பத்திசெய்த காலப்பகுதியாகும்.

இற்றைக்கு 12,000 – 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மொசப்பத்தேமியா, சீனா ஆகிய நாடுகளில் ஆரம்பமான நீர்ப்பாசன விவசாய நடவடிக்கைகளும் – அங்கிருந்து சிறிது சிறிதாக இந்தியாவுக்கும், இலங்கைக்குமான அதன் பரவலும் – மக்கள் சமுதாயத்தில் பொருளாதாரம், தொழில்நுட்பம், பரவலான குடியேற்றம் ஆகிய துறைகளில் சடுதியான மாற்றங்கள் ஏற்படக் காரணமாயின. வேட்டையாடி உணவு சேகரித்த காலங்களில் மிருகங்களும், தன்னிச்சையான தாவரங்களும் அடர்த்தியாகவிருந்த காட்டுப் பகுதிகளிலும், மலைச்சாரல்களிலும் வாழ்ந்திருந்த மக்கள், விவசாயம் அறிமுகமானதும் நீர்வளமும், செழிப்பான நிலவளமும் கொண்ட நிலப்பகுதிகளில் குடியேற ஆரம்பித்தார்கள். சூரிய வெப்பத்தையும், மழையையும், காற்றையும், புயலையும் எதிர்கொள்ளக்கூடிய வதிவிடங்கள் தோற்றம் பெறலாயின. ஒரு காலத்தில் மக்களைக் கவர்ந்த வாழ்விடங்களான மலைகளும், குகைகளும், வனங்களும், காடுகளும் கவனிப்பாரற்ற தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்கிடங்களாயின.

விவசாயத்தின் வருகையைத் தொடர்ந்து சிற்றூர்களும், கிராமங்களும், நகரங்களும், தலைநகரங்களும் தோற்றம் பெற்றன. அதன் தொடர்ச்சியாக சமுதாயத்தில் தொழில் ரீதியான சமூகப் பிரிவுகள் உருவாயின.

தென்னாசியாவின் முதலாவது நகரமயமாக்கம் – முதலாவது நாகரிகம் – வெண்கலக் காலத்தில் (Bronze Age) வறண்ட நிலமான வடமேற்கு இந்தியாவின் (இன்றைய பாகிஸ்தான்) சிந்துவெளித் தாழ்நிலத்தில், சிந்து நதிக்கரையில் நடைபெற்றது. ஆனால், இந்த நாகரிகம் இந்தியாவின் மற்றைய பகுதிகளுக்குப் பரவியதற்கான ஆதாரங்கள் அருகியே காணப்படுகின்றன. ஆனாலும், அங்கே பரவியிருந்த அறிவியல் விவசாயம் இந்தியப் பெருநிலப் பரப்பில் இரு பாதைகளில்,

1. சிந்து வெளியிலிருந்து கிழக்கு நோக்கி சிந்து – கங்கை இடைவழியாக கங்கை நதிப் பிரதேசங்களுக்கும்,

2. தெற்கு நோக்கி தெக்காணத்திற்கும், குஜராத், மகாராஷ்டிர நிலங்கள் வழியாக துங்கபத்ரா – கிருஷ்ணா – கோதாவரி – காவேரி – வைகை – வடிநிலங்களுக்கும், அங்கிருந்து தண்பொருநை – தாமிரபரணி ஆற்றுப்படுகை நிலங்களுக்கும், இலங்கையின் நதிப்படுகை, ஏரிக்கரை, குளக்கரை நிலங்களுக்கும் பரவியது.

கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில் அறிமுகமான இரும்பின் தொழில்நுட்ப வருகையானது நீர்ப்பாசன விவசாயத்தின் மிகைப்பெருக்க வளர்ச்சிக்கு அடிகோலி, தென்னாசியாவின் இரண்டாவது நகரமயமாக்கத்திற்கு வழிவகுத்தது. தொடர்ந்து மக்கள் குழுக்கள், இனப்பிரிவுகள், மதங்கள், கிராமங்கள், நகரங்கள், பட்டினங்கள், அரசுகள், பேரரசுகள், எழுத்துகள், இலக்கியங்கள், நாணயங்கள், வர்த்தகங்கள் என்பன உருவாகி வரலாற்றுக்காலம் ஆரம்பமானது.

இலங்கையின் முதற்குடிகள் யார் என்பது நீண்டகாலமாக மக்கள் மத்தியில் நடைபெற்றுவரும் விவாதமாகும். இலங்கையை ஆண்ட ஐரோப்பியர்கள் கண்டுபிடித்து பிரசுரித்த மகாவம்சம், தீபவம்சம் ஆகிய பாளி இலக்கியங்களும், அவற்றின் மொழிபெயர்ப்புகளும், அவை இலங்கையின் உண்மையான வரலாறு என்ற ஐரோப்பியர்களின் திறனாய்வற்ற முடிவும், “இலங்கையின் முந்தைய குடிமக்கள் சிங்கள மொழி பேசும் மக்கள் என்றும், தமிழர்கள் பின்னர் இங்கே ஆக்கிரமிப்பாளர்களாக வந்தவர்களின் வம்சாவளியினர்” என்ற காலனியாதிக்க எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு வழியமைத்தன. வெகுவிரைவில் சிங்கள மொழி பேசும் மக்கள் ‘ஆரியர்கள்’ என்றும், தமிழ் மொழி பேசுவோர் ‘திராவிடர்’ என்றும் முத்திரை குத்தப்பட்டது.

தற்கால மரபணுவியல் கற்கைகள் இலங்கையில் இன்று சிங்களம், தமிழ் மொழிகளைப் பேசும் மக்களில் 85% சதவிகிதமான (விழுக்காடு) மக்களின் நேரடி மூதாதையர்கள் இந்த நாட்டில் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இடைக்கற்கால மக்களின் வம்சாவளியினர் என அறியத்தருகின்றன. அக்காலகட்டம், பனியுகம் பரவியிருந்த காலப்பகுதி – தென்னிந்தியாவும் இலங்கையும் ஒரே தொடர் நிலமாக இருந்த காலம். மக்கள் நடமாட்டம் இரு பகுதிகளுக்கும் நில மார்க்கமாகவே நடைபெற்றிருக்கும். அக்காலத்தோடு ஒப்பிடுகையில் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளும், இந்து மதம், பௌத்தம் ஆகிய மதங்களும் மிகப் பிற்காலத்தைச் சேர்ந்தவை. இந்த மொழிகளும் மதங்களும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் அவற்றை அவர்கள் மேற்கொண்டார்கள் என்பதே அறிவியல் காட்டும் உண்மை. இதை அறியாதவர்களே இலங்கைக்கு யார் முதலில் வந்தார்கள் என வாதிடுவர்.

இத்தனை அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் பின்னரும், இன்றைக்கும், கி.பி. 13ம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ் மொழி பேசும் மக்களின் நிரந்தரமான குடியேற்றங்கள் இலங்கையில் இருக்கவில்லை என எழுதிவரும் சிங்கள வரலாற்றாசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள். பாளி இலக்கியமான மகாவம்சத்தை மூலமாகக் கொண்டு வரலாறு படைக்கும் இந்தக் ‘கல்விமான்கள்’ அந்த இலக்கியத்தை முழுமையாக எடுத்துரைப்பதில்லை. தாம் கொண்ட கொள்கைகளுக்குச் சாதகமானவற்றை மட்டுமே எடுத்தாள்கிறார்கள்.

மகாவம்சம் வரிசைப்படுத்தும் அநுராதபுரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த அரசர்களில் பத்து அரசர்கள் தமிழர்கள்: 1. சேனன், 2. குத்திகன், 3. எல்லாளன், 4. புலஹத்தன், 5. பாகியன், 6. பனையமாறன், 7. பிலையமாறன், 8. தாத்திகன், 9. வடுகன், 10. நூலியன். இவர்களைத் தவிர, துட்டகாமினி அநுராதபுரத்தைக் கைப்பற்றும் பொருட்டு உருகுணையிலிருந்து கி.மு. 160ம் ஆண்டில் பெரும் சைனியத்துடன் படையெடுத்து வந்தபோது வழிப்பட்ட பிரதேசங்களில் 32 தமிழ் குறுநில மன்னர்களைக் கொலைசெய்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இவ்வாறு கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட ஆண்டுகளில் இலங்கையில் 42 தமிழரசர்கள் ஆட்சி புரிந்ததாக மகாவம்சமே குறிப்பிடுகிறது.

சமீப காலத்தில் எழுதப்பட்ட இலங்கை வரலாற்று நூலை வாசித்த ஒரு ஐரோப்பிய பல்கலைக்கழகப் பேராசிரியர் கேலியாகக் கேட்டார்: “ஒரு நாட்டை ஆளும் மன்னன் அந்த நாட்டின் நிரந்தர குடியேற்றவாசி இல்லையானால், யார் நிரந்தரக் குடியேற்றவாசி?” கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட மூன்றில் ஒரு பங்கு ஆட்சிக் காலத்தில் அநுராதபுரத்தை ஆட்சி செய்தவர்கள் தமிழ் மன்னர்கள். அவர்களின் ஆட்சிப்பரப்பில் தமிழ் பேசும் பிரசைகள் இல்லாமலா அவர்கள் ஆண்டிருப்பார்கள்? வரலாற்றுக் காலம் முதலாக இலங்கையில் தமிழ் மொழியும், பிராகிருத மொழியும் பேசும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதே அறிவியல் ஆதாரங்கள் காட்டும் உண்மை.

பாளி இலக்கியங்களைப் பொறுத்த வரையில் வட இலங்கையை (நாகதீப அல்லது உத்தரதேச) அவை ஓர் அயல் நாடாகவே பாவிக்கின்றன. ‘நாகதீப அநுராதபுர அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது’ என்பதற்கு இப்பாளி இலக்கியங்களில் எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. இப்பிரதேசத்தில் சிலகாலங்களில் அநுராதபுர அரசர்கள் பௌத்தமத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மட்டுமே இவ்விலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

  1. மகாவம்சத்தின் கூற்றுப்படி அசோகச் சக்கரவர்த்தியின் மகளான, பௌத்த பிக்குணியான சங்கமித்தை, ஒரு போதி மரக்கிளையோடு வட இலங்கையின் பிரபல துறைமுகமான யம்புகோளத்தில் வந்திறங்கியபோது, அநுராதபுர அரசனான தேவநம்பிய தீசன் (கி.மு. 247-207) அவளை வரவேற்க வந்திருந்தான். அநுராதபுர அரசன் ஒருவன் நாகதீபத்திற்கு (நாகநாடு) வருவது இதுவே முதல் தடவையாகக் கூறப்படுகிறது (மகாவம்சம் XX: 25).
  2. இரண்டாவது வரலாற்றுக் குறிப்பு அநுராதபுர அரசன் மாகல்லநாகன் (கி.பி. 193-199) நாகதீபத்தில் சாலிப்பத்த என்ற பௌத்த விகாரையைக் கட்டுவித்தான் எனப் பதிவிடுகிறது (மகாவம்சம் XXXV: 125).
  3. மூன்றாவது வரலாற்றுக் குறிப்பு அரசன் கனித்ததீசன் (கி.பி. 223-241) நாகதீபத்தில் ஒரு கோவிலைத் திருத்தி அமைத்ததாகக் குறிப்பிடுகிறது (மகாவம்சம் XXXVI: 10).
  4. நான்காவது குறிப்பு அரசன் வொகரிக்க தீசன் (கி.பி. 263-285) நாகதீபத்திலிருந்த ஒரு விகாரைக்கு சுவர் (pakara) கட்டியதை எடுத்துரைக்கிறது.
  5. சூளவம்சம் (Culavamsa) நூலில் காணப்படும் ஐந்தாவது மேற்கோள்: அரசன் இரண்டாம் அக்கபோதி (கி.பி. 601-611) ‘உன்னலோகமகிரக’ என்ற கோவிலைக் கட்டுவித்ததையும், அமலசேதியத்திற்கு ஒரு குடை வழங்கியதையும் குறிப்பிடுகிறது.

இதன்படி தேவநம்பிய தீசனுக்கும் மாகல்ல நாகனுக்குமிடையே 400 ஆண்டுகால மௌனமும், தொடர்ந்து வொஹரிக்க தீசன் – அக்கபோதி வரை மேலும் 400 ஆண்டுகால மௌனமும் இந்த இலக்கியங்களில் காணப்படுவதால், நாகதீபம் அநுராதபுர அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது என்ற சில சிங்கள வரலாற்றாசிரியர்களின் வாதம் வலுவிழந்து போகிறது. இந்த ஐந்து குறிப்புகளும் அநுராதபுர அரசர்கள் பௌத்தமதக் கோயில் கட்டியதையும், பௌத்தமதத் தூதரைச் சந்திக்கச் சென்றதையும் கூறுகின்றனவே ஒழிய, அங்கே ஆட்சி புரிந்ததையோ, அரச கருமங்களில் ஈடுபட்டிருந்ததையோ பற்றிக் கூறவில்லை.

மேலும், வட இலங்கையில் காணப்படும் கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட நீர்ப்பாசனக் குளங்களான பிரம்மாண்டமான அரக்ககுளம் (Giants Tank), கந்தளாய் குளம், பதவியா குளம் ஆகியன பற்றியோ, அங்கே நடைபெற்ற விவசாய, நீர்ப்பாசன நடவடிக்கைகள் பற்றியோ இந்தப் பாளி இலக்கியங்கள் எதுவுமே கூறாது விட்டதை எண்ணும் போது, வட இலங்கையில் இடம்பெற்ற நடவடிக்கைகள் எதையுமே இந்த நூல்களை எழுதியவர்கள் அறிந்திருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

அநுராதபுர அரசுகளுக்கும் வட இலங்கைக்குமிடையே இருந்த உறவை, இப்பாளி இலக்கியங்கள் வட இலங்கையை உத்தரதேசம் (Uttaradēsa) என அழைப்பதனாலேயே உணர முடிகிறது. ‘உத்தரதேசம்’ என்றால் வடநாடு என்று பொருள். அது அவர்கள் கூறும் வரலாற்றிற்கு வெளிப்பட்ட பிரதேசமாகவே கூறப்படுகிறது.

சூளவம்சம், மூன்றாம் மொகலானன் (கி.பி. 611-617) (Moggalana III) அரசனின் படையெடுப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது, உத்தரதேசத்தில் வாழ்ந்த தமிழர்களோடு மொகலானன் சண்டையிட்டான் எனக் குறிப்பிடுகிறது (Culavamsa Ch.48:83- 84,95,112; Ch.50:14; Ch.70:92). இந்தப் பதிவுகள் ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் உத்தரதேசம் தமிழர் வாழ்ந்த பிரதேசம் என உறுதி செய்கிறது.

இலங்கையின் வரலாற்றில் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளாத பகுதி அதன் மொழியியல் ஆகும். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட எழு மொழி (பாளியில் எலு) சிங்கள மொழியின் மூல மொழிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. சிங்கள மொழியின் முதல் இலக்கண நூலான ‘சிதற்சங்கராவ’ சிங்கள மொழியின் இரு வகையான எழுத்து வடிவங்களைப் பற்றிக் (alphabets) குறிப்பிடுகிறது. அதன் ஆதி எழுத்து வடிவமான எழு – (Elu alphabet) பாளி, சமஸ்கிருத மொழிகளின் ஒலிப்பிரமாணம் அற்ற எழுத்து வடிவங்களைக் கொண்டது. பின்னால் வந்த கலப்பு வடிவம் (Mixed alphabet) பாளி, சமஸ்கிருத மொழிகளுக்குரிய ஒலிப்பிரமாண எழுத்து வடிவங்களைக் கொண்டது. இந்தக் கூற்றின்படி ‘எழு’ இந்தோ – ஆரியன் அல்லாத ஒரு மொழி என்பதும், பின்னர் வந்த இந்தோ – ஆரிய மொழிகளோடு அது கலப்புற்று சிங்கள மொழி உருவானது எனவும் கொள்ள முடிகிறது.

1970ம் ஆண்டுகளில் கலாநிதி J.T. சேவியர் (Dr J.T. xavier) ‘எழு’ மொழியானது தென் ஆசியாவில் பேசப்பட்ட முந்து – திராவிட (proto-Dravidian) மொழியின் பெயர் என்றொரு கோட்பாட்டை (hypothesis) முன்வைத்தார். இதற்கு ஆதாரமாக அவர் முன்வைத்தவை:

  1. இந்தியத் தென்னகத்தில் பேசப்பட்ட எழு மொழி ‘தெம்-எழு’ ஆயிற்று. ‘தெம்’ என்றால் தெற்குப் பக்கம் என்று பொருள். பாண்டிய மன்னனை ‘தெம்மவன்’ என அழைப்பதுண்டு. அர்த்தமகதி, மற்றும் பாளி மொழிகளில் தமிழ் மொழி ‘தெமெழு’, ‘தெமெலு’ என அழைக்கப்படுகிறது. இந்த ‘தெம்-எழு’ காலப் போக்கில் ‘தமிழ்’ ஆனது.
  2. ‘எழு’ மொழியின் வரி வடிவம் (alphabet) ‘எழுத்து’ எனப்பட்டது. அதை வரையும் பணி ‘எழுது’ ஆனது. இந்த மொழி வடிவங்கள் இன்று தமிழில் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து தமிழின் தாய்மொழி ‘எழு’ எனப் பெறப்படுகிறது.
  3. பண்டைய திராவிட மக்கள் வாழ்ந்த சிந்துவெளிப் பிரதேசம் (Indus Valley) அவர்கள் பேசிய எழு மொழி காரணமாக ‘மாஎழு அகம்’ என அழைக்கப்பட்டது. இதையே சுமேரிய களிமண் சாசனங்கள் ‘மாஎழுகா’, ‘மெழுகா’ (Maeluhha, Meluhha) எனக் குறிப்பிடுகின்றன.         

இன்னொரு கருத்தியலானது, சில யாழ்ப்பாணத்துக் கிராமங்களின் புராதன பெயர்கள் தமிழ் மொழிக்கு முற்பட்ட ‘முண்டா’ மொழிச் சொற்களாக இருக்கலாம் என்பதாகும். ‘முண்டா மொழிகள்’ என்பவை இற்றைக்கு 3500 – 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடம்பெயர்ந்த புதிய கற்கால மனிதர்கள் பேசிய ஆஸ்திரோ – ஆசிய மொழிக் குடும்பத்திற்குரிய ஒரு மொழியாகும்.

உதாரணமாக, பல ஆண்டுகளாக நமது கல்விமான்களும், பேராசிரியர்களும் இராமாயணத்தில் கூறப்படும் இலங்கையைக் குறிப்பிடும் ‘லங்கா’ என்ற பதம், திராவிட மொழிப் பதமா, இந்தோ – ஆரியப் பதமா? என்ற வாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சிலர் இது சிங்கள மொழிப் பதம் என வாதிட்டார்கள். சமீப காலங்களில்தான் இது முண்டா மொழிப்பதம் என்பது உறுதியாயிற்று. முண்டா மொழியில் ‘லங்கா’ என்றால் நீரினால் சூழப்பட்ட ஒரு தீவு என்று பொருள்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் மொழி ஆய்வாளரான M.W.S. டி சில்வா சிங்கள மொழியில் உடலின் பல பாகங்களுக்கு உபயோகப்படுத்தும் சொற்பதங்கள், ஒலுவ (தலை); பெல்ல (கழுத்து); கக்குல (கால்); கலாவ (தொடை) போன்ற சொற்களின் மூலம் சமஸ்கிருதமோ, பிராகிருதமோ, திராவிடமோ அல்ல. இதன் மூலம் நாம் அறிந்திராத ஒரு மொழி எனக் கூறியிருந்தார். இந்தோ – ஆரியம், பிராகிருதம், திராவிடம், ஆஸ்திரோ – ஆசிய மொழிகளில் புலமை பெற்ற ஒரு வரலாற்று மொழியியலாளர் முன்வந்து சொல்லாக்க (etymological) ஆய்வுகளை மேற்கொண்டாலொழிய இதற்கான உண்மை வெளிவராமலே போய்விடும்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில், முக்கியமாக கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களில், பல வகையான பௌத்த மத எச்சங்களும், கட்டடப் பாகங்களும், புத்த பிரானின் உருவச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கந்தரோடையிலும், வல்லிபுரத்திலும், யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் பௌத்த மத சின்னங்கள் காணப்பட்ட ஒரே காரணத்தினால் இச் சின்னங்கள் சிங்களப் பண்பாட்டிற்கு உரியவை எனப் பிரசாரம் செய்யப்பட்டன. அதே சமயம் அதே அகழ்வுகளில் பௌத்த மத சின்னங்களுடன் காணப்பட்ட திராவிடப் பண்பாட்டிற்குரிய கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களை எவருமே குறிப்பிட்டுக் கூறவில்லை. சிங்களக் கல்விமான்கள் எனத் தம்மைக் கூறிக் கொள்பவர்களே கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னரும், தொடர்ந்த ஆரம்ப நூற்றாண்டுகளிலும் தமிழ் மக்கள் பௌத்த மதத்தைக் கடைப்பிடித்திருந்தார்கள் என்பதை உணராதபோது சாதாரண மக்களின் அறியாமையை நாம் குறைகூற முடியாது.

கந்தரோடையை முதன்முதலாக அகழாய்வு செய்த அறிஞர் போல் பீரிஸ் கூட கந்தரோடையில் காணப்பட்ட பௌத்த சின்னங்களைக் கொண்டு அப்பிரதேசம் ‘சிங்களக் குடியிருப்புகளுக்கும்’, ‘சிங்கள மேலாண்மைக்கும்’, ‘சிங்கள அரசர்களின் மேலாதிக்கத்திற்கும்’ உட்பட்டிருந்ததாகக் கூறியிருக்கிறார் (Pieris, P.E. 1917; pages 12, 14). வட இலங்கையில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ரீதியான ஓர் அகழாய்வு அறிக்கை உண்மையான வரலாற்றை அறிய முற்படாமல் இவ்வாறு வகுப்புவாத முலாம் பூசப்பட்டிருக்கிறது.

பீரிஸினாலும் அவரைத் தொடர்ந்த சிங்களக் கல்விமான்களாலும் வட இலங்கையில் தமிழர்கள் பேணிய ஒரு பௌத்தப் பாரம்பரியத்தை எண்ணிப் பார்க்க இயலவில்லை. பேராசிரியர் செனரத் பரணவிதான, தொல்லியலாய்வில் பீரிஸ் ஆரம்பித்த வகுப்புவாதப் போக்கை மேலும் முன்னெடுத்துச் சென்றார். வல்லிபுரம் பொற்சாசனத்தில் கண்ட எழுத்துப் பொறிப்பை தவறாக வாசித்து, அது சிங்கள மொழியில் எழுதியிருப்பதாக எல்லோரையும் ஏமாற்றினார். அதை ஆதாரமாகக் கொண்டு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பேசப்பட்ட மொழி சிங்களம் எனக் கூறினார்.

பின்னர் இந்தியக் கல்வெட்டு நிபுணர்களாலும், மற்றைய கல்வெட்டியலாளர்களாலும் வல்லிபுரப் பொற்சாசனத்தில் காணப்பட்ட மொழி கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குரிய ஆந்திரப் பிராகிருதம் எனக் கூறப்பட்டது. அக்காலகட்டத்தில் பௌத்தமத சாசனங்களை பிராகிருத மொழியில் பதிவு செய்வது வழக்கம். அப்படியிருந்தும் அப்பிராகிருத மொழிச் சாசனத்தில் ‘வடகரை’, ‘ராயன்’, ‘நாகதீவு’ ஆகிய தமிழ்ச் சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது அப்பகுதியில் தமிழ் மொழி வழக்கிலிருந்ததை உறுதிப்படுத்துகிறது.

உலகில் அவர்களது வரலாறு எழுத்தில் பதிவு செய்யப்படாத மக்களின் வரலாற்றை, அவர்களது பண்டைய காலத்தைய குடியிருப்புகள், நகரமயமாக்கம், விளைபொருளாக்கம், வர்த்தகம் ஆகிய பண்பாட்டு அம்சங்களை தொல்லியல், புதைபடிவ ஆய்வுகள், கல்வெட்டியல், பிறநாட்டினர் குறிப்புகள் ஆகிய கற்கைத் துறைகளைக் கொண்டே கணிப்பிட முடிகிறது. இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த சில கல்விமான்கள் தமது பூர்வீகம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் பொருட்டு இலங்கை அரசின் தொல்பொருளகத்தை வட இலங்கையில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு வேண்டியிருந்தார்கள். கந்தரோடையில் அகழ்வுகளை மேற்கொண்ட இலங்கை அரசின் தொல்லியல் துறையினர் ஆழமான அகழ்வு எதையும் மேற்கொள்ளவில்லை. கந்தரோடையில் காணப்பட்ட வட்டவடிவான அடித்தளங்களின் மேல், தென் இலங்கையில் காணப்படும் பௌத்த தாதுகோபங்களைப் போன்ற கவிகைகளை (dome) அமைத்து, அவை பண்டைய யாழ்ப்பாணத்தின் சிங்களக் குடியிருப்புகளுக்கான ஆதாரங்கள் என அறிவித்தார்கள்.

யாழ்ப்பாணக் கல்விமான்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அறிவியல் ரீதியான கந்தரோடைத் தொல்லியல் அகழாய்வு, 1970 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் பென்ஸில்வேனியப் பல்கலைக்கழக தொல்பொருளகத்தைச் சேர்ந்த விமலா பேக்ளி அம்மையாரின் தலைமையில் தொல்லியலாய்வாளர்களான பென்னெற் புரொன்ஸன், நோர்மன் ஓற்றன் ஆகியோர் இந்த அகழாய்வில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இவர்களோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா, கலாநிதி சிற்றம்பலம் ஆகியோரும் இணைந்து கொண்டார்கள்.

இந்த அகழாய்வின் போது கந்தரோடையில் குடியிருப்புகள் ஆரம்பமான காலத்தில் அன்றைய மக்கள் உபயோகித்த கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள், இரும்புப் பொருட்கள், நெற்பயிர்ச் செய்கை, அன்று பழக்கப்படுத்தி வளர்க்கப்பட்ட பிராணிகள் என்பன வெளிக்கொணரப்பட்டன. ‘கந்தரோடையின் அன்றைய குடியிருப்புகள் தென்னிந்திய பெருங்கற் பாண்பாட்டின் ஒரு பரம்பல்’ என கலாநிதி விமலா பேக்ளி அறிவித்தார். (Dr Vimala Begley declared that the Kantharodai settlements were an extension of the Megalithic Culture of South India). கந்தரோடையில் கண்டெடுத்த மட்பாண்டங்களின் ஆரம்ப காலம் கி.மு. 1300 ஆண்டுகாலம் என கதிரியக்கக் கரிம ஆய்வுகள் தெரிவித்தன.

கந்தரோடையின் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியை ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்ட தொல்லியலாளர்களும், வரலாற்றாசிரியர்களும் எடுத்துரைத்து வந்திருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள் போல் பீரிஸ், C. கொடகும்புர, விமலா பேக்ளி, பென்னெற் புரொன்ஸன், கார்த்திகேசு இந்திரபாலா, S.K. சிற்றம்பலம், பொன்னம்பலம் இரகுபதி, செல்லையா கிருஷ்ணராஜா, பரமு புஷ்பரட்ணம், பார்பரா ஹெல்விங், நிமால் பெரேரா ஆகியோராவர். இவர்களைத் தவிர வடஇலங்கை பற்றிய கல்வெட்டுகளை வாசித்துக் கூறிய பேராசிரியர்கள் ஆ. வேலுப்பிள்ளை, சி. பத்மநாதன், எஸ். குணசிங்கம் ஆகியோரும், மாந்தையில் அகழ்வாராய்ச்சி நிகழ்த்தி அக்கண்டுபிடிப்புகளை பெரியதொரு நூல் வடிவில் வெளியிட்ட இலண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோன் காஸ்வெல் அவர்களும், 2011 – 12ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணக் கோட்டையை அகழ்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களும், 2017 – 18ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணக் கோட்டையை அகழ்ந்து அறிக்கை வெளியிட்ட பிரித்தானிய டர்ஹாம் பல்கலைக்கழகத் தொல்லியல் பேராசிரியர் ரொபின் கொனிங்ஹாம் அவர்களும் பண்டைய வடஇலங்கை பற்றிய நமது அறிவை மேம்படுத்திய ஆய்வாளர்களாவர்.

யாழ்ப்பாண மக்களின் வரலாற்றிற்கு முற்பட்டகால வாழ்வியலை வெளிக்கொணர்ந்த ஆய்வுகளில் 1987ல் வெளிவந்த கலாநிதி பொன்னம்பலம் இரகுபதியின் (பின் நாள் பேராசிரியர்) ‘யாழ்ப்பாணத்தின் ஆரம்பக் குடியிருப்புகள்’ (Early Settlements in Jaffna) என்ற ஆய்வு நூல், யாழ்ப்பாண மக்களின் ஆதி வரலாற்றினை கற்கைநெறி பேணி எடுத்துரைத்த தன்னிகரற்ற ஆய்வாகும். யாழ்ப்பாணக் குடா நாட்டிலும், அதைச் சூழ்ந்த தீவுப் பகுதிகளிலும் 41 தொல்லியல் மையங்களை அடையாளம் கண்டு, அவ்விடங்களில் மேலாய்வுகளும், அகழாய்வுகளும் மேற்கொண்டு தரப்பட்ட பெரும் படைப்பு இது. அவரது ஆய்வு முடிவாக கந்தரோடை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தின் அனைத்து ஆதிக் குடியிருப்புகளும் பெருங்கற் பண்பாட்டைப் பேணியே நகரமயமான வாழ்க்கைக்கு முன்னேறின என்பதாகும். அது மட்டுமல்லாது ஆனைக்கோட்டை அகழ்வில் கண்டெடுத்த அரச முத்திரையை ‘கோவேதன்’ என முதலில் வாசித்தவரும் இவரே (இது பற்றி பின்னர் விரிவாகப் பேசப்படும்).

இலங்கையின் தொல்லியல் ஆய்வாளர்கள், தொல்லியல் வரலாற்றாய்வில் ஒரு புதிய கற்காலம் பற்றிய தெளிவான கருத்தியலைக் கொண்டிருக்கவில்லை. சிலர் புதிய கற்காலம் நடைபெறாது இலங்கையில் இரும்புக்காலம் இடைக்கற்காலத்திலிருந்து நேரடியாக இடம்பெற்றுவிட்டதாகக் கூறிவந்தார்கள். பிரித்தானிய டர்ஹாம் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் ரொபின் கொனிங்ஹாம் இடைக்கற்காலத்திற்கும் ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்குமிடையே இலங்கை எங்கும் பரவிக்கிடந்த பெருங்கற்பண்பாட்டை எடுத்துரைக்கும்வரை, இந்த வரலாற்று இடைவெளி தீபவம்சம், மகாவம்சம் ஆகிய பௌத்த பாளி நூல்கள் கூறும் பாரம்பரிய வரலாற்றுக் கதைகளைக் கொண்டே நிரப்பப்பட்டு வந்திருக்கிறது. தொல்லியல் கண்டுபிடிப்புகள் கூட இப் பாளி நூல்கள் கூறும் சம்பவங்களுக்கு ஏற்றதாக இருந்தாற்றான் சிங்களக் கல்விமான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாரம்பரிய வரலாற்றிற்கொவ்வாத தொல்லியல் கண்டுபிடிப்புகள் ஒன்றில் கவனிக்கப்படவில்லை, அல்லது (வல்லிபுரப் பொற்சாசன வாசிப்பிற்கு நடந்தது போல) அவரவர் தனிப்பட்ட கொள்கைகளுக்கேற்ப தவறாகப் பொருள் கூறப்பட்டன.

இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினரால் யாழ்ப்பாணப் பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்கள் எதுவும் யாழ்ப்பாண அரும்பொருட் காட்சிமனையில் வைக்கப்படுவதில்லை. அவை ஒன்றில் அநுராதபுர அரும்பொருட் காட்சிச்சாலைக்கு அல்லது கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுவதுண்டு (2017-18 களில் யாழ் கோட்டை அகழ்வு மட்டும் இதற்கு விதிவிலக்கு). இதன் காரணமாக யாழ்ப்பாண மக்களுக்கு தங்களது சொந்தப் பாரம்பரியமான கருவூலப் பொருட்களைப் பார்க்க முடிவதில்லை. மேலும், இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட பல முக்கியமான தொல்பொருட்கள் காணாமல் போவதுமுண்டு.

1960ஆம் ஆண்டுகளிலிருந்து இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினர் கந்தரோடையில் காலத்திற்குக் காலம் அகழாய்வுகளை நிகழ்த்தி வருகிறார்கள். ஆனால் இன்றுவரை அந்த அகழாய்வு அறிக்கைகள் வெளிவரவில்லை. 1970ஆம் ஆண்டில் கந்தரோடையில் ஆய்வு செய்த பென்சில்வேனிய பல்கலைக்கழகத் தொல்பொருளக ஆய்வாளர் திருமதி. விமலா பேக்ளி சமர்ப்பித்த ஆய்வறிக்கையை இதுவரை இலங்கைத் தொல்லியல் திணைக்களம் வெளியிடவில்லை. 2018-19ம் ஆண்டுகளில் கந்தரோடையில் ஆஸ்திரேலிய, சிட்னி பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நடாத்திய அகழ்வின் அறிக்கை மட்டும் வெளிவந்திருக்கிறது.

2016ம் ஆண்டில் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஓர் ஆய்வு நூலை எழுதியிருந்தேன். அதை அன்று எழுதுவதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தேன். முதலாவதாக, கந்தரோடையின் நகரமயமாக்கலுக்கான பரிணாம வளர்ச்சியையும், அதைச் சூழ்ந்து பண்டைய யாழ்ப்பாணத்தில் முகிழ்த்த குடியிருப்புகள் பற்றியும், அவை எவ்வாறு படிநிலை வளர்ச்சி அடைந்தன என்பதையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அநுராதபுரத்திற்கு இணையான ஒரு நாகரிகம் வடஇலங்கையில் உருவாகி இருந்தது என்பதையும் உலகிற்கு எடுத்துரைப்பது ஒரு குறிக்கோள்.

இரண்டாவதாக, கந்தரோடை பற்றி அதுவரை காலமும் வெளிவந்த ஆய்வறிக்கைகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி ஒரு உசாத்துணை நூலாக வெளியிடவேண்டும் என்ற ஆவல்.

மூன்றாவதாக, நமது இளம் தலைமுறையினருக்கு மறைக்கப்பட்ட – மறந்து போய்விட்ட ஒரு பொற்காலத்தை எடுத்துக்காட்டி, தொல்லியலில் ஆர்வமுண்டாக்கி, அவர்களில் ஒரு சிலரையாவது நமது கடந்தகாலத்தை மேலும் அகழாய்வு செய்து வெளிக்கொணரக்கூடிய தனித்துறை வல்லுநர்களாக ஆக்க வேண்டும் என்ற அவா.

இலங்கையின் பாரம்பரியச் சரித்திராசிரியர்கள் அநுராதபுரத்தைத் தலைநகராககக் கொண்ட ஒரு வரலாற்றை எழுதுமிடத்து, இலங்கையில் கந்தரோடையைத் தலைநகராகக் கொண்ட ஒரு மாற்று நாகரிகத்தைப் பற்றி எழுதுவது மதிவிவேகமான செயலா என்ற கேள்வியை யாராவது எழுப்பலாம். அநுராதபுரம் மத்திய இலங்கையில் புகழ்மிக்க ஒரு தலைநகரமாக விளங்கிய அதே காலகட்டத்தில் அதற்கு நிகரான ஒரு புகழ்பெற்ற நகர நாகரிகம் வட இலங்கையில் கொடிகட்டிப் பறந்ததை இன்று நம்மால் உணர முடிகிறது. இத்தொடரில் அடுத்து வரும் இயல்களில் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக – பொ.யு.மு. 500 ஆண்டிலிருந்து பொ.யு. 800ஆம் ஆண்டு முடிவுவரை, இப் பிராந்தியத்தில் வாழ்ந்த மனித சமுதாயம் முதிர்ச்சி பெற்ற ஒரு கலாசார, அரசியல், வர்த்தக, சமய, சட்ட பாரம்பரியத்தை உருவாக்கி அம் மக்களின் அறிவியல், பண்பாட்டு, நீதிமுறை நடத்தையை மேம்படுத்தி, இது ஒரு நாகரிகம் என்ற அடிப்படைத் தத்துவத்தை நிறைவுசெய்திருக்கிறது என்ற வரலாறு முறையான ஆதாரங்களின் துணையோடு நிறுவப்படும்.

புராதன பண்பாட்டு எச்சங்களும், நவீன நகர நாகரிக அம்சங்களும் அருகருகே உய்ந்து வாழ்ந்து வரும் இடங்களில் இன்றைய யாழ்ப்பாணமும் ஒன்று. விலத்திக்கொண்டு விரைந்து செல்லும் நவீன மோட்டார் வண்டிகளுக்கு இடம் கொடுத்துவிட்டு வீதிகளில் காளைகள் இழுத்துச் செல்லும் கட்டை வண்டில்களை ஓட்டிச் செல்லும் மனிதர்கள்; பக்கத்துப் பண்ணையில் மோட்டார் ‘பம்ப்’ தண்ணீரைப் பீச்சியடித்துக்கொண்டிருக்கும் போது, தங்களது வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றுத் துலாக்களிலேறி மிதிக்கும் மனித உடலங்கள்; சமையலறைகளில் சுவாலைவிடும் மின்சார அடுப்புகளில் வசதியான பெண்கள் ‘பிரெஷர் குக்கர்களில்’ சமையல் செய்துகொண்டிருக்கும் சமயம், பல மைல் தூரம் நடந்து தலையிலே காட்டு விறகு சுமந்து கொண்டு வரும் பெண்கள் என ஆயிரமாயிரம் ஆண்டுக்கால இடைவெளி கொண்ட பண்பாடுகளும், மனித சமுதாயச் சூழலும் அருகருகே பரிணமிக்கும் பூமி இது.

நாங்கள் வாழும் இக்காலம் மனித சமுதாயம் மானிடப் பெறுமானங்களை இழந்துவிட்ட காலம். பல நூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட மனித இன அடையாளங்கள், நாகரிகங்கள், பண்பாடுகள், மரபுரிமைகள், குலமரபுகள், ஊர்கள், தனிமனிதர்கள் எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்தொழிக்கப்படும் காலம் இது. இப்பண்டைய தொடர்புகளைக் கொண்ட பண்பாடுகளை நேரடியாகக் காணக்கூடிய கடைசித் தலைமுறையினர் நாங்களாகத்தான் இருக்க முடியும். இந்த அழிவுகளைத் தடுக்க எங்களால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கும் காலமும் இது. இக் கலாசாரங்களும் பண்பாடுகளும் கால வெள்ளத்தில் கரைந்து போவதற்கு முன்னர், வருங்காலச் சந்ததியினருக்காக இதை எழுத்தில் பதிய வைக்கத்தான் எங்களால் முடியும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்