1930 களை அடுத்து வந்த தசாப்தத்தில் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை பொறுத்தவரையில் சில சுவாரஸ்யமான அரசியல் மற்றும் தொழிற்சங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இத்தகைய நிகழ்வுகளில் ஜஹவர்லால் நேருவின் இலங்கைக்கான இரண்டு விஜயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது முதலாவது விஜயம் 1931 இலும் இரண்டாவது விஜயம் 1939 இலும் இடம்பெற்றன. இதற்கு முன் மகாத்மா காந்தி 1927ஆம் ஆண்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். மகாத்மா காந்தி அவர்களும் பண்டித நேரு அவர்களும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கெதிராக மேற்கொண்ட சுதந்திர போராட்டங்கள் காரணமாக உலகப் புகழ் பெற்றிருந்தார்கள். அதற்காக அவர்கள் பல தடவைகள் சிறை சென்றுள்ளார்கள்.
இந்தப் போராட்டங்களின் போது சுமார் 80,000 பேர் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். 1930 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் “டைம்ஸ்” சஞ்சிகை மகாத்மா காந்தியை “உலகின் முதன்மை மனிதன்” என்று பெயரிட்டது. இவர்களது புகழ் இலங்கையிலும் பெரிதாகப் பரவியிருந்தது. இலங்கை எங்கும் இவர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய பிரதேசங்களில் இவர்களைக் காண பெருந்திரளான மக்கள் கூடினர். அவர்களின் வருகையால் இலங்கை வாழ் இந்திய மக்களிடையே ஒரு எழுச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்பட்டது.
மகாத்மா காந்தியுடன் இணைந்து வந்திருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காந்தியை பார்க்கவந்திருந்த பெருந்திரளான இந்தியவம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் பற்றி குறிப்பிடும் போது “அவர்கள் திரள் திரளாகவும் கூட்டம் கூட்டமாகவும் வந்திருந்தார்கள். அந்தப் பெரும் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட ஆயிரமாயிரம் தலைகளுக்குமேல் எட்டி எட்டிப் பார்த்தார்கள். துள்ளிக் குதித்தார்கள். சிலர் கண்களில் நீர் பனித்திருந்தன. இந்த நாட்களில் தோட்டங்கள் பல இவர்கள் சென்று மகாத்மா காந்தியை பார்ப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்கியிருந்தார்கள். காந்தியின் கார் சென்ற பாதைகளில் எல்லாம் மக்கள் அடர்ந்து இருந்ததால் அவரது கார் முன்செல்ல மிகவும் சிரமப்பட்டது. அநேகமான தோட்டங்களில் இருந்து அனைத்து ஜனங்களும் வீதியில் வந்து மகாத்மா காந்தியை ஒருமுறை பார்த்து விடுவதற்காக குவிந்திருந்தார்கள். மகாத்மா காந்தி உரை நிகழ்த்தும் போது அவர் குறிப்பாக பௌத்த தத்துவம், இந்துதத்துவம், தீண்டத்தகாமை, மது ஒழிப்பு போன்ற தலைப்புகளிலேயே பேசினார். இதனால் முழு இலங்கையருமே அவர்பால் கவரப்பட்டனர்” என்று குறிப்பிடுகின்றார்.
மகாத்மா காந்தி அவர்களின் இலங்கை வருகையை விட ஜவகர்லால் நேருவின் வருகையே இந்திய தமிழர்களைப் பொறுத்தவரையிலும் தோட்டத் தொழிலாளர்களை பொறுத்தவரையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. நேருவின் முதல் வருகையின்போது அப்போது இலங்கை ,இந்திய காங்கிரசின் தலைவராக செயற்பட்ட ஜோர்ஜ் இ. டி. சில்வா (George E. de Silva) அவர்களும் அவரது பாரியாரான அக்னஸ் அவர்களும் கண்டியில் வரவேற்பு விருந்தளித்து உபசரித்தனர். இக்காலத்தில் இந்திய அரசின் அதிகாரத்துவ முகவராக செயற்பட்டு வந்த கே.பி.எஸ். மேனனும் அவரது துணைவியான சரஸ்வதி அம்மையாரும் இந்த வரவேற்பு வைபவங்களில் முன்னின்று செயற்பட்டனர். கே. பி. எஸ். மேனனும் அவரது பாரியாரும் இக்காலத்தில் தோட்டத் தொழிலாளரின் சமூக பொருளாதார உயர்வுக்காக பல்வேறு விதங்களில் குரல் கொடுத்தனர். 1927 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி சட்டத்தின் மூலம் அவர்களுக்கான வேதனம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதும் அது பின்னர் பல்வேறு காரணங்களைக்காட்டி குறைக்கப்பட்டது. அதனை மீண்டும் அதே அளவுக்கு வழங்க வேண்டும் என மேனன் கடுமையாக குரல் கொடுத்தார். அத்துடன் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக தோட்டப் பிரதேச பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமெனச் செயற்பட்டார். அவரது முயற்சியாலேயே புசல்லாவை சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் தோற்றுவிக்கப்பட்டது. அவர் இக்காலத்தில் மலையகத்தின் முதல் தொழிற்சங்கவாதி கோ. நடேசய்யரின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளித்து வந்தார். பின்னர் மலையக காந்தி என்று அழைக்கப்பட்ட கே.ராஜலிங்கம் அவர்களும் இவர்களுடன் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில் இலங்கை வாழ் இந்தியர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்காக பல்வேறு சங்கங்கள் அமைக்கப்பட்டு செயற்பட்டு வந்தன. அத்தகைய சங்கங்களில் ஒன்றுதான் இக்னேஷியஸ் சேவியர் பெரேரா என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சிலோன் இந்திய சங்கம் (சிலோன் இந்தியன் அசோசியேசன்) ஐ. எக்ஸ். பெரேராவும் அவருடைய தந்தையான எப். எக்ஸ். பெரேராவும் 1900 களில் தமிழ்நாடு தூத்துக்குடியிலிருந்து கொழும்பு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ. எக்ஸ். பெரேரா இலங்கையில் முதல் முறையாக இந்திய வம்சாவழியினர் சார்பில் ஒரு பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கு தெரிவுசெய்யப்பட்டார். அவர் தொடர்ச்சியாக இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சட்டசபையில் குரல் கொடுத்து வந்தார். அதன்பின்னர் சட்டசபை அரசாங்க சபையாக மாற்றப்பட்டபோது அதில் இந்திய வம்சாவழியினரின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அவர் அங்கிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இந்த மக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். இவர் செய்த சேவையை பாராட்டி இலங்கை அரசாங்கம் 1938 ஆம் ஆண்டு ஒரு தபால்முத்திரையையும் முதல்நாள் உரையையும் வெளியிட்டது.
இக்காலத்தில் இந்திய வம்சாவழியினருக்காக குரல்கொடுக்க பல்வேறு சங்கங்கள் தோன்றி செயற்பட்டன. இளம் இந்தியர்கள் சங்கம், மெஹ்ரேலி இளைஞர் லீக் (மெஹ்ரேலி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது), சிலோன் இந்தியன் அசோசியேசன், கள் உற்பத்தியாளர் சங்கம் போன்ற 16 சங்கங்கள் செயற்பட்டு வந்தன.
இவை அனைத்தும் ஒரே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த போதும் பல்வேறு உள்ளக வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் இணைத்து ஒரு சங்கமாக ஒன்றிணைக்க கூட்டம் ஒன்று 1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் கோவில் மண்டபத்தில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்திற்கு இந்திய வம்சாவழி சமூக மேம்பாட்டு செயற்பாட்டாளர் சத்தியவாகீஸ ஐயர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின்போது ஏனைய அனைத்து சங்கங்களின் இணக்கப்பாட்டின் மீது ஐக்கிய இலங்கை, இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது கொழும்பின் துணை மேயராக செயற்பட்ட எம். சுப்பையா இந்த அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்துல் அஸிஸ் செயலாளராகவும் எஸ். ஆர் எம். வள்ளியப்பச் செட்டியார் பொருளாளராகவும் மற்றும் சத்தியவாகீஸ்வர ஐயர், கோ. நடேச ஐயர் ஆகியோர் அரசியலமைப்பு சபைக்கும், எஸ். பி. வைத்திலிங்கம் செயற்குழு உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். எஸ். பி . வைத்திலிங்கம் 1931 ஆம் ஆண்டு மலையகத்திலிருந்து அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவராவார். அவருடன் பெரி.சுந்தரமும் சட்டசபைக்கு தெரிவாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
எனினும் இந்த சங்கங்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கத்தான் செய்தது. இச்சந்தர்ப்பத்தில் தான் 1931 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஜவகர்லால் நேரு இலங்கை வந்திருந்தார். ஜவஹர்லால் நேருவின் தலைமையில் மீண்டும் இந்த சங்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. அதற்கு ஐக்கிய இலங்கை இந்திய காங்கிரஸ் என்று பெயரிடப்பட்டது .(யுனைட்டட் சிலோன் இந்தியன் காங்கிரஸ் ) அதன் தலைவராக வி .ஆர் . எம் . லட்சுமணன் செட்டியார் தலைவராகவும், அப்துல் அசீஸ் மற்றும் எச்.எம். தேசாய் ஆகியோர் இணைச்செயலாளர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர். எனினும் அதற்குப் பின்னரும் கூட சிலோன் இந்தியன் காங்கிரஸ் , இந்திய தோட்டத் தொழிலாளர்கள் மேம்பாட்டுக்காக சுறுசுறுப்பாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை தன்தோள் மீது சுமந்து கொண்டுதான் இருந்தது.
தொடரும்.