Arts
12 நிமிட வாசிப்பு

புதிய வேலை உலகும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவும் (Generative AI)

February 17, 2024 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச்
சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு”
-திருக்குறள் 358-

மு.வரதராசனார் விளக்கம் : பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

இன்றைய உலகில் தொழில்நுட்ப மாற்றங்கள் மிகவும் துரிதப்பட்டுக்கொண்டு வருகின்றது. முதலாவது தொழில்துறை புரட்சி (Industrial Revolution) 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1900ம் ஆண்டுகளின் முற்பகுதிகளிலும் தொடங்கி உலகில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது. 1900ம் ஆண்டுகளின் பின் பகுதிகளில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்ப புரட்சி உலகை இணைத்து இணையத்தளத்தை மையமாகக் கொண்டு பல முக்கியமான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க, பயன்படுத்த, அதன் மூலம் வியாபாரம் மற்றும் மக்களின் வாழ்வு நிலையை உயர்த்த மிகவும் உதவியாக அமைந்தது. அதனது அடுத்த கட்டம் தான் செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence), ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவும் (Generative AI).

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைப் பற்றி அறியாதவர்கள் இன்று இருப்பது அதிசயம். மனிதர்களது முன்னைய செயல்பாடுகளையும் அவர்களது முடிவுகளையும் வைத்து “மனிதர்களைப் போல சிந்திக்கக்கூடிய இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல்” என செயற்கை நுண்ணறிவு பற்றி ஒரு எளிய விளக்கத்தைக் கொடுக்கலாம். “ஆக்கமுறை” செயற்கை நுண்ணறிவு என்பது செயற்கை நுண்ணறிவின் ஓர் பகுதியாகும். ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு, செயற்கை நுண்ணறி தொகுத்த விடயங்களை அடிப்படையாக வைத்து உரை, படங்கள், ஒலி மற்றும் புதிய உள்ளடக்கங்களை உருவாக்குகிறது. ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுக்கு பயன்படுத்தப்படும் பயிற்சித் தரவுத்தொகுப்பு (Training Dataset), உலகம் முழுவதும் இணைத்தளத்தில் உள்ள சகல தகவல்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. அது மட்டுமன்றி அப்படியான தகவல்களை மிகவும் வேகமாக சேகரித்து, பகுப்பாய்ந்து, தொகுத்து கேட்பவருக்குக் கொடுக்கிறது.

AI 2

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவானது எமது உலகத்தின் எதிர்காலத்தில் பல மாற்றங்களை உருவாக்கப்போகிறது. இப்போதைய இளம் சந்ததி இணையத்தளத்தோடும் சமூக ஊடகத்தோடும் ஒன்றாக இருப்பதுபோல் எமது எதிர்காலத் தலைமுறை ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து வாழ்வது சாத்தியம். அதைத் தவிர்ப்பதென்பது சாத்தியம் இல்லை. அப்படியான சந்தர்ப்பத்தில் பெற்றோர்களான நாம் எமது பிள்ளைகளை இந்தச் சூழ்நிலையில் வளர்ப்பதைப் பற்றி சில கருத்துக்களை கூறலாம் என்று இருக்கிறேன்.

  • உருவாக்குவதெல்லாம் உண்மையென்றல்ல (Everything Generated are not true): ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவானது, உலகில் இதுவரை படைத்த ஆக்கங்கள், பத்திரிகைகள், கட்டுரைகள் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு, இயந்திரங்களை/கணனிகளை பாவிப்பதன் மூலம் அவற்றின் தொடர்புகளை புரிந்து புதிய விடயங்களுக்கு, கேள்விகளுக்கு பதில் உருவாக்குகிறது. இது, இந்த முறையில் அலசப்பட்ட புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை மட்டுமன்றி இணைத்தளத்தில் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாத விடயங்களையும் சேர்த்தே பதிலை உருவாக்குகிறது. இதனை எமது பிள்ளைகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறி, வரும் தகவல்களின் உண்மையறிந்து பாவிக்கச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
  • பகுப்பாய்வுத் திறன் (Analytical Skills): மேலே கூறியது போல், இணைத்தளத்திலும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவிலும் வரும் தகவல்களைக் கொண்டு, கடந்தகாலச் செயல்களை மனிதர்கள் எவ்வாறெல்லாம் தீர்த்து வைத்தார்கள் என்பதை வைத்து இது பதில் கூறுகிறது. இதற்கு பல விதமான கணித மற்றும் சிக்கலான கணக்கீட்டு கோட்பாடுகளை பயன்படுத்தி விடை சொல்லுகிறது. ஆனாலும் இதற்கு உள்ளீடாகப் பயன்படுத்தும் தகவல்கள் சரியானதா அல்லது பிழையானதா என்று இயந்திரங்களால் சுயமாகச் சிந்தித்து கண்டுபிடிக்க முடியாது. இது என்னைப் பொறுத்தவரையில் ‘சராசரி நுண்ணறிவு’ (Average Intelligence) ஆகும்.

ஆனால் இதனால் உருவாக்கப்படும் வெளியீடுகளை பகுத்தறிவைப் பயன்படுத்தி சரியான விடயங்களை மட்டும் தெரிவு செய்து, வாழ்க்கை அனுபவத்தைப் பாவித்து அதனை மேம்படுத்தி, பிழையான தகவல்களை அகற்றுவதன் மூலம் அவ் வெளியீட்டுக்கான மதிப்பைக் கூட்டமுடியும். இதனை சிறிய வயதிலிருந்தே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது அறிவைக் கூட்டலாம். அவர்களது சமூக வாழ்க்கையின் மதிப்புகளும் அதிகரிக்கும்.

  • மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்குமான வித்தியாசம் (Difference Between human and machines): மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்குமான வித்தியாசம் குறைந்துகொண்டு போவதாகச் சிலர் கூறுகிறார்கள். இதை தொழில் புரட்சி (Industrial Revolution) காலங்களில் இருந்தே பலர் சொல்லுகிறார்கள். ஆனால் இயந்திரங்களின் திறமையானது மனிதர் கண்டுபிடித்த வேலைகளை குறைவான பிழைகளுடன் திருப்பத் திருப்ப செய்வது; அதன் திறமைகளால் ஆற்றலைக் (Efficiency) கூட்டுவது. 

அடுத்த தலைமுறைகளின் தொழில் வாய்ப்பு, இயந்திரங்களுடன் சேர்ந்து வேலைகள் செய்யாமல் அவற்றை நிரலாக்கம் செய்து இயந்திரங்களை மேலும் திறமையாகச் செயற்பட வைப்பதாகவே இருக்கும். அதன் மூலம் அவர்கள் கூடுதலாகப் பணம் உழைக்க முடியும். அதற்கேற்ப எமது பிள்ளைகளை வளர்ப்பது, படிக்க வைப்பது, வருங்காலத்திற்கான அவர்களது மனப்பான்மையை சிறிய வயதிலிருந்தே தயார்ப்படுத்துவது முக்கியம்.

AI 1
  • பக்கவாட்டுச் சிந்தனை முறை (Lateral Thinking): எனது இரண்டாவது கட்டுரைத் தொடரில் பக்கவாட்டுச் சிந்தனை பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறேன். பக்கவாட்டுச் சிந்தனை என்பது, ஓர் சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காண, அந்தப் பிரச்சனையை நேரே அணுகாமல், வேறு ஓர் பிரச்சனையை தீர்த்த முறையைக் கொண்டு புதிய சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு காண்பது ஆகும். ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு பழைய தகவல்களை வைத்து சில புதிய முடிவுகள் கண்டாலும், மனிதர்கள் போல புதிய வழிகளை கண்டுபிடிப்பது அரிது. ஒவ்வொரு மனிதர்களும் வாழ்க்கையில் வெவ்வேறான அனுபவத்தால் வளர்ந்தவர்கள். அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் இணையத்தளத்திலோ புத்தகங்களிலோ இருக்காது. ஆகவே, தனிப்பட்ட அனுபவங்களைப் பெற பிள்ளைகளை அனுமதிப்பதும் அதனை அடிப்படையாகக் கொண்டு அவர்களை சிந்தனை செய்யப் பழக்குவதும் எமது கடமையாகும். 
  • அடிப்படை அறிவின் முக்கியத்துவம் (Importance of Foundational Knowledge) : ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு வழியில் மிகச் சிக்கலான அறிவியல் என்றாலும் அது ஓர் நுணுக்கமான கருவியும் ஆகும். அதைப் பயன்படுத்தி பல விடயங்கள் சுலபமாகச் செய்யலாம். ஆனால் அதன் அடிப்படையை அறிந்து கொள்வது, ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவு எப்படி விடை கொடுக்குமென்றும், அது கொடுக்கும் விடை சரியா அல்லது பிழையா என்றும் கணிக்க உதவியாக இருக்கும். அப்படியென்றால் எவ்வாறு அதன் அடிப்படையை அறிந்து கொள்வது? இதனைப் புரிந்துகொள்ள பள்ளிக் காலத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை அடிப்படையிலிருந்து படிப்பது முக்கியம். ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானத்தில் மட்டுமன்றி பல மொழிகளிலும் உள்ள கருத்துக்களைக் கணித்து விடை கொடுக்கக் கூடியது. கணக்கியல், பொருளியல், வைத்தியம், சட்டத்துறை என்று எல்லாத் துறைகளுக்கும் பாவிக்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆராய மனிதர்களுக்கு அடிப்படை அறிவு தேவை. நாங்கள் இயந்திரங்களை மட்டும் நம்பியிருக்க முடியாது. பிள்ளைகள் சுயமாக யோசிக்கவும் தாங்களாகவே முடிவுகளுக்கு வருவதற்கும் பழக வேண்டும்.

மேலே கூறியது கடினமான திறன்கள் (Hard Skills). அதைவிட சில மென்மையான திறன்களும் (Soft Skills) இந்த புதிய உலகத்தில் வாழ அவசியமாகும். 

  • புதிய கருவிகளைப் பாவிக்கும் திறமை (Skills for Utilizing New Tools): ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவானது மிகச் சக்தி வாய்ந்த கருவியாகும். அதைத் திறமையாகப் பாவிப்பதன் மூலம் பல விடயங்களை சுலபமாகவும் வேகமாகவும் செய்யலாம். முன்பு தேடு பொறி மேம்படுத்தப்படல் (SEO – Search Engine Optimization), சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர் (Social Media Influencer) என்று பல துறைகள் உருவாகின. அதேபோல் இப்போது ‘Prompt Engineering’ என்று ஓர் துறை உருவாகியிருக்கிறது. அதில் வெற்றிகரமாக இருக்க மேலே கூறியது போல் அடிப்படை அறிவைப் பெறுவது மிக்கியம். அதன் மூலம் கருவிகளை நுணுக்கமாகப் பாவிக்கக் கற்றுக்கொள்ளலாம்.
  • ஒவ்வொருவரின் தனித்துவமும் தன்மைத்துவமும் (Uniqueness and Individuality): நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நாம் எதிர்கொண்ட அனுபவங்களல் வடிவமைக்கப்பட்டவர்கள். ஆனால் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவானது மனிதர்கள் பலரின் அனுபவங்களை எடுத்து அவற்றினைச் சுருக்கி அதன் சாராம்சமான விடையைக் கொடுக்கும் செயலைச் செய்கிறது. அந்த விடை சரியாகப் பட்டாலும் அதற்கு தனித்துவம் இருக்காது. ஆகவே, இந்த இயந்திரங்களின் அறிவிற்கு மேல், மனிதர்களின் தனித்துவச் சிந்தனையும் அவசியம். இப்படித் தனித்துவ வழியில் அனுபவ அறிவு பெற்ற பிள்ளைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்.
  • ஆர்வமும் மற்றவர்களுடன் பழகும் திறன்களும் (Curiosity and Social Skills): மனித குலத்தின் தற்போதைய நிலைக்கு காரணம் அவர்கள் சகல விடயங்களிலும் காட்டிய ஆர்வங்களே. அந்த ஆர்வங்களால் பல புதிய தொழில்நுட்பங்களையும் வாழ்க்கை முறைகளையும் கண்டுபிடித்தார்கள். ஒவ்வோரு தலைமுறையும் அதற்கு முதல் இருந்த தலைமுறையிலும் பார்க்க ஒரு படி மேலே சென்றார்கள். அதற்கு காரணம் அவர்களது ஆர்வங்கள். அந்த ஆர்வங்களை மற்றவர்களுடன் கலந்துரையாடி குழுவாகச் சேர்ந்து புதிய விடயங்களைக் கண்டுபிடித்தார்கள். இப்போது எல்லோரும் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதால் ஏனையோருடன் பழகும் திறன்கள் குறைந்து கொண்டு செல்கிறது. ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை தொடர்ந்து முன்னேற்ற, மேலும் கோடிக்கணக்கான ஆவணங்கள் தேவை. அப்படியான ஆவணங்களை உருவாக்க எமது குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
  • பக்கச்சார்பற்ற நெறிமுறை (Unbiased Decision Making): பக்கச் சார்பற்ற நெறிமுறை மிக முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது. ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுக்கு பயன்படுத்தும் பயிற்சித் தரவுத்தொகுப்பு (Training Dataset) இணையத்தளத்திலிருந்தும் பத்திரிகைச் செய்திகளிலுமிருந்து எடுக்கப்பட்டவை. அவை இணையத்தை ஆதிக்கம் செய்யும் மொழிகளான ஆங்கிலம், மண்டறின் போன்ற சில மொழிகளாலும், ஆதிக்க இனங்களாலும் படைக்கப்பட்ட ஆவணங்களாகவே அமைகின்றன. அந்த ஆவணங்களில் இருக்கும் சார்புத்தன்மை ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு தரும் விடைகளிலும் சேர்ந்திருக்கும். இதனால் சிறுபான்மை மக்களின் பழக்க வழக்கங்களும் மற்றும் அவர்களது குணங்களும் தவறான நோக்கில் பார்க்கப்படக் கூடிய சாத்தியம் அதிகம். அதனைத் தவிர்க்க அடுத்த தலைமுறை முயல்வது அவசியம்; சிறிய வயதிலிருந்தே அவர்களை பகுப்பாய்வுத் திறனுடன் வளர்ப்பது முக்கியம்.

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவானது இப்போது அதன் குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது. வரும் இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு இது மேலும் மேலும் பெரும் மாற்றத்தை கொண்டுவர இருக்கின்றது. அதற்கு எமது பிள்ளைகளை தயார்ப்படுத்துவது எமது கடமை. எமது பிள்ளைகள் மட்டுமன்றி நாமும் அதற்கு எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் கடினமான திறன்களையும் மென்திறன்களையும் அறிந்து அதற்கேற்ப அடுத்த சந்ததிகளை தயார்ப்படுத்துவதன் மூலம் எமது சமுதாயத்தின் அறிவை மேலும் விருத்தி செய்ய முடியும். அதற்கு நான் மேலே கூறிய குறிப்புகளும் உதாரணங்களும் அதற்கு ஊக்கமாக இருக்குமென்று நம்புகிறேன்.

குறிப்பு: எனக்கு திருக்குறளில் இருக்கும் பற்று எல்லோருக்கும் தெரிந்ததே. திருக்குறளையும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவையும் இணைத்து இந்த வருடம் ஓர் கருவி வெளிவந்திருக்கிறது. அதை https://thirukural.ai எனும் தளத்தில் பாவித்து எமக்கு தேவையான கேள்விகளைக் கேட்டு அதற்குச் சம்பந்தமான குறளை அறிந்து கொள்ளலாம். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8177 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (1)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)