யாழ்ப்பாணத்தின் நிலவியல், நில அமைப்பியல், ஆதிக் குடியிருப்புகள்
Arts
26 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தின் நிலவியல், நில அமைப்பியல், ஆதிக் குடியிருப்புகள்

March 5, 2025 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ எனும் இக்கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பவற்றின் பரந்த காட்சிப் பதிவாக விளங்கும்.

நிலவியல்

பண்டைய யாழ்ப்பாணம் நாகநாடு (மணிமேகலை), நாகதீவு (வல்லிபுரப் பொற்சாசனம்), நாகதீப (மகாவம்சம்), நாகதீபோய் (தொலமி) ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய யாழ்ப்பாணத்தில் நாகர்கள் வாழ்ந்தமையால் இப்பெயர்கள் யாவும் ‘நாக’ என ஆரம்பிக்கின்றன. அன்றைய நாகநாடு யாழ்ப்பாணக் குடாநாடு, அதற்கு மேற்கேயுள்ள சிறுதீவுகள், வடக்கிலுள்ள இலங்கையின் தாய் நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆகிய நிலங்களைக் கொண்டிருந்தது.

மகாவில்லாச்சியின் (மதவாச்சி) மேற்குக் கரையிலிருந்த அரிப்பிலிருந்து மகாவில்லாச்சியூடாக நாகபொக்கணைவரையும் ஒரு கோடு வரைந்து, அக்கோட்டை திரிகூடத்திற்குத் (திருகோணமலை) தெற்கே மகாவலி கங்கையின் தெற்குக்கிளை கடலில் சங்கமிக்கும் துறைவரை வரைந்தால் அக்கோட்டிற்கு வடக்கேயுள்ள பகுதி அனைத்தும் நாகதீப நாட்டின் நிலப்பகுதி ஆகும் (Parker, H. 1909: 14; Geiger, W. 1960: 108). இந்நிலப்பகுதி சூளவம்சம் போன்ற நூல்களில் உத்தரதேச (வடநாடு) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சில காலங்களில் நாகதீபத்தின் எல்லைக் கோட்டிற்கு வெளியே மேற்குக் கடற்கரையிலிருந்த குதிரைமலை, சிலாபம் ஆகிய பகுதிகள் வடஇலங்கை நாகர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கின்றன.

இடைக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கையின் தாய் நிலத்திலிருந்து கடலால் பிரிந்த வேறான தீவாக இருந்து வந்தது. காலப்போக்கில் அதனிடையே மிகச் சமீபமாக இருந்த சுண்டிக்குளத்தில் படிந்த மணற்செறிவினால் இரு தீவுகளும் ஒன்றாகி பெரிய இலங்கைத் தீவாக உருவெடுத்தன.

யாழ்ப்பாணக் குடாநாடு இன்றைய இலங்கைத் தீவின் வடக்கில் அமைந்துள்ளது. இது தீர்க்கரேகையின் (Longitude) 79°54′-80°2’e கோட்டில், அட்சரேகை (Latitude) 9°30′-9°50n கோட்டில் 1062 சதுர கி.மீ. பரப்பைக் கொண்டு அமைந்திருக்கிறது. இக்குடாநாடு அதன் அகன்ற பகுதியில் 65 கி.மீ. நீளமும், 23 முதல் 6.5 கி.மீ. அகலமும் கொண்டது. இக்குடாவின் வடக்கிலும் தெற்கிலும் பாக்கு நீரிணையும், கிழக்கே வங்காள விரிகுடாவின் தென்கடலும், தெற்கே யாழ்ப்பாணக் கடல்நீரேரியும் (Jaffna Lagoon) உள்ளன. இக்குடாநாட்டின் மேற்கே பாக்கு நீரிணையில் சிறிய தீவுகளான காரைநகர், எழுவைதீவு, அனலைதீவு, புங்குடுதீவு, வேலணை, மண்டைதீவு, நெடுந்தீவு ஆகியன அமைந்திருக்கின்றன.

தொல்லியல் ஆய்வுகள் தரும் தகவல்களின்படி நாகநாட்டின் உத்தரதேசப் பகுதி தென் ஆசியாவிற்கு நவீன மனித இனங்கள் வர ஆரம்பித்த காலத்திலிருந்தே அவர்களின் குடியேற்றங்களைக் கொண்டிருக்கிறது. பண்டைய யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொ.யு.மு.1 1300 ஆண்டுக் காலத்திலிருந்து பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்களின் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. இக்குடிமக்கள் விட்டுச்சென்ற பாவனைப் பொருட்களின் தொல்லியல் எச்சங்களும், அவற்றின் காலக்கணிப்புகளும் இப்பிரதேசங்களில் அவர்களின் பரந்த குடியேற்றங்களுக்குச் சான்றாக அமைகின்றன.

பாக்கு நீரிணைக்கும், வங்காள விரிகுடாவிற்கும் நடுவே தென்கிழக்காசிய வர்த்தகக் கடற்பாதையான தீர்க்கரேகை பத்தாவது பாகைக்கு அருகே நாகநாடு அமைந்துள்ளபடியினால் அதன் மூன்று திசைகளிலுமிருந்த துறைகளின் வழியாக இந்தியாவிலிருந்தும், மற்றைய நாடுகளிலிருந்தும் வர்த்தக, பண்பாட்டுத் தொடர்புகள் அன்றைய நாகநாட்டை அடைந்த வண்ணம் இருந்தன. இந்தியாவிலிருந்து வந்த பெருங்கற் பண்பாடும், இந்து – பௌத்த மதங்களும் நாகநாட்டின் துறைகளின் ஊடாகவே முதலில் இலங்கையை வந்தடைந்தன.

பனிப்படிவு யுகங்கள் (Ice Ages)

நமது பூமியில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களால் பூமி உருவான காலத்திலிருந்து இதுவரை நான்கு பனிக் கல்பகாலங்கள் (Ice Epochs) நடைபெற்றிருக்கின்றன. இறுதியான பிளிஸ்ரொசீன் (Pleistocene Ice Epoch) கல்பத்தில் மட்டும் 17 பனிப்படிவு யுகங்களும் (பனியுகங்களும்) 17 பனியிடைக் காலங்களும் இடம்பெற்றன. கடந்த 12,000 ஆண்டுகளாக நாம் 17ஆவது பனியிடைக்காலத்தில் (Interglacial Period) வாழ்ந்துகொண்டிருக்கிறோம் (Peter Clark 2002).

மைல்

பனிப்படிவு யுகங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பூமியின் மேற்பாகம் குளிர்ந்துபோய் வட, தென் பூகோளப் பகுதிகளில் பல உயரத்திற்கு பனி உறைந்து பனிமலைகளாக இருந்தன. பூமியின் மத்திய பகுதியை அண்டிய நாடுகளைத்தவிர மற்றைய கண்டங்களில் ஆறுகள் உறைந்து நிலங்களில் பனிக்கட்டி பாளம்பாளமாகப் படர்ந்திருந்தது. கடல்நீர் ஆவியாக மேலே போய் பின்னர் மழையாக வந்தபோது, பெரும்பாலான நிலங்களில் பனிக்கட்டிகளாக உறைந்து போனதனால், கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 130 மீட்டர் முதல் 135 மீட்டர் வரை தாழ்வாக இருந்தது.

இற்றைக்கு முன் (இ.மு.) 115,000 ஆண்டு முதல் இ.மு. 12,000 ஆண்டுவரை நீடித்த கடைசிப் பனியுக காலத்தில் கடல் மட்டம் இன்றிருப்பதை விட 130 முதல் 135 மீட்டர் வரை தாழ்வாக இருந்த காலப்பகுதியில் இலங்கை இந்தியாவோடு இணைக்கப்பட்ட நிலப்பகுதியாக இருந்தது. இந்நிலத்தின் நீள – அகலப் பரிமாணங்களும் இன்றிருப்பதைவிடப் பெரியதாகவே இருந்தன. இந்நிலம் ‘இந்திய-இலங்கை’ என்ற ஒரே நிலமாகும் (Peter Clark 2002, Rohling 1998).

இற்றைக்கு 19,000 ஆண்களுக்கு முன்னர் கடைசிப் பனியுகம் உச்சநிலையை அடைந்திருந்த சமயம் கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 135 மீட்டர் தாழ்வாக இருந்த காலப்பகுதியில் உலகம் முழுவதிலும் நாடுகளெல்லாம் இன்றிருப்பதைக் காட்டிலும் மிகவும் பெரியனவாக இருந்தன. இந்தியக் கடலோரம் இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றிவர பல கி.மீ. தொலைவிற்கு அகன்றிருந்தது.

இ.மு. 12,000 ஆண்டு முதலாக கடைசிப் பனியுகம் முடிவிற்கு வந்த காலத்திலிருந்து உலகைச் சூழ்ந்திருந்த பனிப்படலங்கள் உருகி, கடல் மட்டம் சிறிது சிறிதாக மேலெழுந்த போது இந்திய-இலங்கையின் கரையோர நிலப்பகுதிகள் சிறிது சிறிதாக கடலினுள் அமிழ்ந்து போயின. இ.மு. 7,000 காலப்பகுதியில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த இலங்கை, இந்தியாவிலிருந்து தனித்தீவாகப் பிரிந்து போயிற்று. அதுவரை காலமும் இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இருந்த நிலத் தொடர்பால் மக்களின் நடமாட்டம் தொடர்ந்து நடைபெற்றிருக்கும். அடுத்த ஆயிரம் ஆண்டுகாலப் பகுதியில் – பனிப்படலங்கள் உருகி ஆறுகள் வழியாகப் பெருகி வரும் நீரினாலும், மழையினாலும் ஏற்படும் கடல் பெருக்கமும், கடல்நீர் ஆவியாகப்போவதால் ஏற்படும் கடல்மட்டக் குறுக்கமும் சமநிலை அடைந்த நேரத்தில் – கடல் மட்டம் சீர்நிலை அடைந்தது.

யாழ்ப்பாணத்தின் அமைவிடம் (Jaffna Topography)

பனியுக காலத்தில், இன்றைய கடல் மட்டம் இப்போது இருப்பதைவிட 135-130 மீட்டர் தாழ்வாக இருந்த காலத்தில் அன்றைய யாழ்ப்பாண நிலம் இந்தியத் துணைக்கண்டத்துடனும், இலங்கையின் பெருநிலப்பரப்புடனும் இணைந்திருந்தது மட்டுமல்லாது, இன்று அதன் மேற்கே காணப்படும் தீவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய பெருநிலமாகவும் இருந்திருக்கிறது. பனியுகம் முடிந்து கடல் மட்டம் மேலெழுந்தபோது பள்ளமாக இருந்த நிலப்பகுதிகள் அனைத்தும் கடலினுள் அமிழ்ந்துபோக எஞ்சிய நிலப்பகுதிகள் அனைத்தும் இன்று அக்கடலினுள் துருத்திக்கொண்டிருக்கும் தீவுகளாக உள்ளன. அந்தவகையில் இன்றைய யாழ்ப்பாணக் குடாநாட்டை மூன்று தீவுகள் இணைந்த ஒரு நாடாகக் கொள்ளலாம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடிவமைப்பைத் தீர்மானிப்பது அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் கடற் கால்வாயாகும். பனியுகத்தின் இறுதியில் கடல் மட்டம் உலகெங்கும் மேலெழுந்த சமயம் பள்ளமாக இருந்த நிலப்பகுதியில் கடல்நீர் புகுந்ததால், இன்று கால்வாயாகக் காட்சியளிக்கிறது. வடக்கே தொண்டைமானாறில் கடலிலிருந்து உட்புகும் இக்கால்வாயின் முக்கிய பகுதி குடாநாட்டை இரு பாதியாகப் பிளந்து தெற்கே அரியாலையில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியுடன் (Jaffna Lagoon) சங்கமிக்கிறது. இக்கால்வாயின் மிக ஒடுக்கமான பகுதிகள் தொண்டைமானாறுக் கடலுடன் சேரும் இடத்திலும் நாவற்குழியிலும் காணப்படுகின்றன. நாவற்குழியிலுள்ள தொடர்வண்டி, வீதிப் பாலங்கள் இக்கால்வாயின் மேலாகச் செல்கின்றன. தொண்டைமானாற்றிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கிளைக் கால்வாய், யாழ்ப்பாணத்தின் கிழக்குப் பகுதியை இரு கூறாகப் பிரித்துக்கொண்டு கிழக்கே வங்காளக் கடலின் தென்பகுதியில் இணைகிறது.

கீரிமலையிலிருந்து தெல்லிப்பழைவரை கடல் மட்டத்திலிருந்து 10-12 மீட்டர் உயரமாக உள்ள யாழ்ப்பாண நிலப்பரப்பு மிகுதிக் குடாநாட்டில் தட்டையாக உள்ளது. குடாநாட்டின் வடகிழக்கிலும், தெற்கிலும் உள்ள மணற்கும்பிகள் கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்தரை சிவப்பு, மண்ணிறச்சிவப்பு, மண்ணிறக் களிமண், மணற்படிவு ஆகிய தோற்றங்களைக் கொண்டிருக்கிறது. மேற்தரை அமைப்பைக்கொண்டு குடாநாட்டை இரு விவசாய-பொருளியல் பகுதிகளாகப் பிரிக்கலாம் (Agro-Ecological Zones). குடாநாட்டின் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் காணப்படும் சிவந்த செம்பாட்டு மண் இரும்புத்தாதைக் கொண்டு நெல், தாவரப் பயிர்கள், புகையிலை, பழ மரங்கள் ஆகியவற்றைப் பயிரிடுவதற்கு உகந்த பிராந்தியமாக அமைந்திருக்கிறது. தெற்கே கொடிகாமத்திற்கும் ஆனையிறவுக்குமிடையே உள்ள தட்டையான மணல் நிலம் ஏதும் விளைவிக்க முடியாத தரிசு நிலமாக உள்ளது. இந்த இரு பிராந்தியங்களின் தரைகளிலும் பனையும் தென்னையும் வளர்கின்றன.

யாழ்ப்பாணத்தில் ஆறுகள் ஏதுமில்லை. ஆதலால் வீட்டுப் பாவனைக்கும் விவசாயத்திற்கும் உகந்த மேலக நீர்நிலைகள் அருகியே உள்ளன. ஆனாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குளங்களும், கந்தரோடையிலும் நந்தாவிலிலும் உள்ள இரு பெருங் குளங்களும், பல்லாயிரம் கிணறுகளும் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மேல்நிலத்தின் கீழே உள்ள சுண்ணாம்புக் கற்பாறையில் தோண்டப்படும் கிணறுகள் வடிகட்டிய தெளிந்த தண்ணீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

கந்தரோடையும் சூழல் மையங்களும்

இன்றைய கந்தரோடை, புராதன வட இலங்கைத் துறைமுகங்களான சம்புத்துறையிலிருந்து (Jambukola) 5 கி.மீ. தூரத்திலும், காங்கேசன்துறையிலிருந்து (பண்டைய காயாத்துறை) 6 கி.மீ. தூரத்திலும் உள்ள ஆரவாரமற்ற ஓர் எளிய கிராமம். கடல் மட்டத்திலிருந்து 2.6 மீட்டர் உயரத்தில் அமைந்த இக்கிராமம் இலக்கியச் சான்றுகளால் பண்டைய நாகநாட்டின் தலைநகரமாக அறியப்பட்டு தொல்லியல் ஆய்வுகளால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலை இப்பிராந்தியத்தின் தலைநகரை கதிரமலை என்ற பெயரால் குறிப்பிடுகிறது. இன்றைய சுன்னாகம் சந்தைக்கும் கந்தரோடைக்கும் இடையிலுள்ள மேட்டு நிலம் ‘கதிரமலை’ என்ற பெயரால் இன்றைக்கும் அழைக்கப்படுகிறது. சுன்னாகம் தொடர்வண்டி நிலையத்திற்கு (புகையிரத) அருகாமையிலிருக்கும் சிவன்கோயில் ‘கதிரமலைச் சிவன்கோயில்’ என அழைக்கப்படுகிறது. இப்பிரதேசத்தை சிங்களமொழியில் குறிப்பிடும் ‘கதுறுகொட’ என்ற சொற்பதம் ‘கதிரமலை’ என்ற சொல்லின் நேரடியான சிங்கள மொழிபெயர்ப்பாகும். ‘கந்தரோடை’ என்ற சொற்பதம் எப்போது, எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ‘கந்தரின் ஓடை’ என்ற கருத்து சரியானதாகத் தெரியவில்லை. ‘கந்தக் கோட்டை’ என்ற பெயர் காலப்போக்கில் மருவி ‘கந்தரோடை’ ஆனது என்கிறார் வரலாற்றாசிரியர் சி.எஸ். நவரத்தினம். எப்படியிருந்தாலும் இந்த ஆதிநகரை ‘கந்தரோடை’ என்றே குறிப்பிடுவோம்.

கந்தரோடைக் கிராமம், கந்தரோடைக் குளம் என அழைக்கப்படும் ஏரியைக் கொண்ட பரந்த நெல்வயல்களின் அருகேயுள்ள உயரமான மேட்டு நிலத்தில் அமைந்திருக்கிறது. அக்கிராமத்தினூடே செல்லும் வழுக்கை ஆறு என்ற பெயர் கொண்ட கால்வாய் அருகிலுள்ள உடுவில் கிராமத்தின் வழியாகச் சென்று, பின்னர் மேற்கு நோக்கித் திரும்பி ஆனைக்கோட்டை வழியாக மேற்கே நாவாந்துறை அருகே யாழ்ப்பாணக் கடலை அடைகிறது. மக்களின் மரபு ஞாபகங்களின்படி அக்காலத்தில் இந்த வழுக்கை ஆறு ஊடாக, நாவாந்துறையிலிருந்து சிறிய படகுகள், கடல் மூலமாக வரும் பொருட்களை கந்தரோடைக்கும், அப்பாலும் எடுத்துச்சென்றன. இன்று இந்த ‘ஆறு’ மழைநீரை யாழ்ப்பாணத்தின் மேற்குக் கடல்வரை எடுத்துச் செல்லும் கால்வாயாகச் செயற்படுகிறது.

இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் கந்தரோடை திராவிடரின் பெருங்கற் பண்பாட்டைப் பேணிய நடுவமாகவும், தென்னாசியக் கடல் வர்த்தக வலைப்பின்னலில் முக்கிய பங்கெடுத்துக்கொண்ட பெரும்பத மையமாகவும் விளங்கியிருக்கிறது. அது மட்டுமல்லாது அன்றைய தென்னிந்திய நாடுகளான ஆந்திரப் பிரதேசம், தமிழகம், கேரளநாடு ஆகியவற்றுடன் இணைந்து இந்துமத – பௌத்தமத நடவடிக்கைகளின் மையமாகவும் பரிணமித்திருக்கிறது.

கந்தரோடையைத் தவிர ஆனைக்கோட்டை, சிங்கைப் பட்டினம், கீரிமலை, யம்புகோளப் பட்டினம், வல்லிபுரம், நாகர்கோயில் ஆகியன பொதுயுகத்திற்கு முற்பட்ட காலத்தைய நகரங்களாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிங்கைத்துறை (பொங்கொலி நீர்ச் சிங்கை நகர்), யம்புத்துறை, காயாத்துறை (இன்றைய காங்கேசன் துறை, அன்று புத்தகாயாவிற்குச் செல்லும் பௌத்த யாத்திரிகர்கள் கப்பலெடுத்துச் சென்ற துறையாதலால் பெற்ற பெயர்), நாவாந்துறை ஆகியன தென்னாசிய இந்துமாகடல் வர்த்தகத்தில் பங்கெடுத்த பெருந்துறைகளாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மேற்கேயுள்ள தீவுகளான காரைநகர், வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு என்பன பெருங்கற் பண்பாட்டைப் பேணிய பண்டைய மக்கள் வாழ்ந்த இடங்கள். யாழ்ப்பாணக் குடாவிலிருந்து இத்தீவுகளைப் பிரித்த யாழ்ப்பாணக் கடல்நீரேரி இப்பெருங்கற்காலப் பண்பாட்டின் பரிமாறலுக்கும், அக்கால மக்களின் பொருளாதாரப் படிநிலை வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

குடாநாட்டுக்கு வெளியே உள்ள இலங்கையின் பெருநிலப்பகுதியின் மூன்றில் ஒரு பங்கு நாகநாட்டின் (Nāgadipa) ஆட்சிப் பரப்பின் கீழ் இருந்தது (Geiger, W. 1960: 108). சில காலங்களில் மேற்குக் கடற்கரையிலிருந்த குதிரைமலையும், சிலாபமும் நாகநாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தன. அப்பரப்பிலிருந்த பூநகர் (இன்றைய பூநகரி), மாந்தை, திரிகூடம் (திருகோணமலை) என்பன அக்காலத் துறைமுக நகரங்களாகும். பெருங்கற் பண்பாட்டைப் பேணிய இப்பட்டினங்களில் மாந்தையும், திரிகூடமும் வரலாற்றுப் பெருமைமிக்க மிகப்பழமையான நகரங்கள். பெருங்கற் பண்பாட்டுக் காலத்தில் மாந்தை பெரியதொரு வர்த்தகச் சந்தையைக் கொண்டிருந்தது. அத்துறையினூடாக இடம்பெயர்ந்த மக்களின் பெரியதொரு குடியிருப்பு பொம்பரிப்பில் உருவானது.

நாகநாட்டின் நிலப்பரப்பு அதன் கடற்கரை நகரங்களில் மூன்று புராதன சிவதலங்களைக் கொண்டிருந்தது. வடக்கே கீரிமலையிலிருந்த திருத்தாம்பலேஸ்வரம் (நகுலேஸ்வரம்), கிழக்கே திரிகூட மலைக்குன்றிலிருந்த திருக்கோணேஸ்வரம், மேற்கே மாந்தையிலிருந்த (மாதோட்டம்) திருக்கேதீஸ்வரம் என்பவையே அவையாகும்.

நில அமைப்பியல்

யாழ்ப்பாணக் குடாநாடும், இலங்கையின் பெருநிலப்பரப்பின் வட பகுதியும் மூன்று வகையான கற்பாறை அமைப்புகளின் மேல் அமர்ந்திருக்கின்றன. அவையாவன: 1. தொல்லூழிக்கு முற்பட்ட அடித்தளப் பாறை (Pre-Palaeozoic Basement Rocks), 2. மன்னார் மணற்பாறை (The Mannar Sandstone), 3. யாழ்ப்பாண சுண்ணாம்புக் கற்பாறை (The Jaffna Limestone). இப்பாறை அமைப்புகளை மேல்நில மண்படுகை மூடியிருக்கிறது. வெவ்வேறு கனதிகளில் உள்ள இந்த மண் அடுக்கு இடத்திற்கு இடம் களிமண்ணாகவோ, இரும்பு கலந்த வண்டல் கலந்த கருமண்ணாகவோ அல்லது வெறும் மண்ணிறமான மண்ணாகவோ செம்மண்ணாகவோ, காட்சி தருகிறது.

தொல்லூழிக்கு முற்பட்ட அடித்தளப் பாறை (Pre-Palaeozoic Basement Rock) என்பது மிகக் கனதியான, பளிங்கு இயல்புடைய, தீச்சார்ந்த, இயன்மாறுபாடு கொண்ட (Massive, Crystalline, Igneous And Metamorphic) பாறைத்தளம் என வருணிக்கப்படுகிறது. நிலத்திற்குக் கீழே 240 மீட்டர் ஆழத்தில் இந்த அடித்தளப்பாறை காணப்படுகிறது. இதற்கு மேலாக குவாட்சைட் கற்கள் கொண்ட அடுக்கு, அல்லது மன்னார் மணற்பாறை அடுக்கு, அல்லது யாழ்ப்பாண சுண்ணாம்புக் கற்பாறை அடுக்கு என்பனவும், அதற்கு மேலாக மண் அடுக்குகளும் காணப்படுகின்றன.

இற்றைக்கு 35 மில்லியன் (350 லட்சம்) ஆண்டுகளுக்கு முற்பட்ட மீயோசீன் யுகத்தில் (Miocene Age) புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாடுவரை தென்னிந்தியப் பகுதியோடு இணைந்த நிலம் ஆதிப் பனியுகங்களின் இடைக்காலத்தில் கடலினுள் அமிழ்ந்து கிடந்ததனால் வளிமண்டலத்திலிருந்த கரியமிலவாயு கடல்நீரில் கலந்து சுண்ணாம்புக்காபனேற்றாக மாற்றமடைந்தது. கடலில் வாழ்ந்த உயிரினங்கள் இதை உட்கொண்டு இறந்த பின்னர், அவை அடியில் சுண்ணாம்புக் கல்லாகப் படிந்தன. காலப்போக்கில் அதன் மேல் படிப்படியாகப் படிந்த கற்களின் பளுவினால் அது இறுக்கமடைந்து, பின்னர் பூமியின் நடுப்பகுதி வெப்பத்தினால் இப்பகுதி மேலெழுந்து கெட்டியான பூமியின் மேற்பகுதியை அடைந்திருக்கிறது (Mathanakaran, R. 1987: 189).

மன்னார் மணற்பாறை (The Mannar Sandstone) சாம்பல் நிறமாகவும், மேற்பகுதி பருவெட்டான, முரட்டுத்தனமான குருணிகளைக் கொண்டதாகவும் காணப்படுகிறது. பளையில் மேற்கொள்ளப்பட்ட துளைக்கருவி ஆய்வு இப்பாறையின் ஆழத்தை 130 மீட்டர் வரையும் எடுத்துச் சென்றது. பளையில் உள்ள பாறைக்கல்லின் இடையிடையே களிமண்ணும், வண்டல் சேற்றுப் படிவும் காணப்பட்டன. மன்னாரில் எண்ணெய் தேடலுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த மணற்பாறையினிடையே கடல் களிக்கல் தகடுகளும் (Marine Shales), மணலும், களிமண்-கற்களும் (Claystones) காணப்பட்டன (Mathanakaran, R. 1987: 190).

யாழ்ப்பாண சுண்ணாம்புக் கற்பாறை (The Jaffna Limestone) வெளிறிய மஞ்சள் நிறமாகவோ, அல்லது மெல்லிய மண்ணிறமாகவோ, அல்லது வெண்ணிறமான பளிங்கு இயல்புடைய படிகக் கல்லாகவோ காட்சிதரும். இக்கல்லின் இறுக்கமான பகுதி பளிங்கிலாலான மியோசீன் யுகத்திற்குரிய (Miocene Epoch: 23-5.3 Million Years Ago) மூன்றாம் ஊழிப் பாறையாகும் (Cooray, 1950: 135). இப்பாறை ஏறக்குறைய 90 மீட்டர் கனதி கொண்டது. இப்பாறைக்கு மேலாக பிளிஸ்ரொஸீன் காலத்தைய மண் அடுக்கு காணப்படும். சில இடங்களில் பிளிஸ்ரொஸீன் காலத்தைய மணல் அல்லது பவளப்பாறையினால் (Coral Reef) மூடப்பட்டிருக்கும். இம்மண் அடுக்கு அல்லது மணல் அடுக்கு ஒரு மீட்டரிலிருந்து பதினைந்து மீட்டர்வரை ஆழம் கொண்டதாக உள்ளது (Ground Water Survey In Jaffna 1968; Rajeswaran, S.T.B. 2008).

இச்சுண்ணாம்புக் கற்பாறையில் பல ஊழிக்காலங்களாக ஏற்பட்ட மேலும் கீழுமான நில அசைவுகளால் சில இடங்களில் மடிப்புகள் (Anticlines And Synclines) ஏற்பட்டிருக்கின்றன. இவ்விடங்களில் வெட்டப்படும் சுண்ணாம்புக்கற்களில் இம்மடிப்புகள் விழுந்திருப்பதைக் காணலாம். இச்சுண்ணாம்புக் கற்பாறை வெளியில் தெரியும் இடங்களில் கீரிமலை, கீரிமலையை அண்டிய காங்கேசன்துறை என்பன முக்கியமான இடங்கள். கீரிமலையில் காணப்படும் சுண்ணாம்புக்கற்பாறை 30 அடி உயரம் உள்ளது. கீரிமலையிலிருந்து கிழக்கே காங்சேகன்துறை வரையிலான கடற்கரை இப்பாறை நிலமாகும். ஆங்காங்கே கடல் அரிப்பினால் ஏற்பட்ட சுவடுகள் இப்பாறைகளில் காணப்படுகின்றன (Mathanakaran, R. 1987: 191).

யாழ்ப்பாணத்தில் காணப்படும் மணற்பரப்பு நான்கு தெளிவான நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கிறது. இம்மணற்பரப்புகள் வடமேற்கிலுள்ள சுண்ணாம்புப்பாறை நிலத்தை அடுத்து வடக்கு-மேற்காகவும், தெற்கு-மேற்காகவும் பரந்திருக்கின்றன. இம்மணற்பரப்பிற்கு அடியிலே சுண்ணாம்புப்பாறை அடுக்குக் காணப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக கடல் நீரோட்டமும் அலைகளும் கொண்டுவரும் மணற் திட்டுகளை வடகிழக்கு வாடையும், தென்மேற்குச் சோழகக் காற்றுகளும் பல மைல் தொலைவிற்குப் பரந்திருக்க வைத்திருக்கிறது. இம்மணற்பரப்புகள் பெரும்பாலும் விளைவற்ற, தாவரவளர்ச்சி ஏதுமற்ற, நிலையற்ற நிலங்களாக இருப்பதனால் நகர்ந்து செல்லும் மணற்கும்பிகளாகக் காணப்படுகின்றன. மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை குடாநாட்டின் கிழக்குக் கரையிலிருந்து அடிக்கும் வடகிழக்குப் பருவக்காற்று, கடல் அலைகளைக் கொண்டு, நீரடி மணலை (Spits) கடலின் அடியே நகரச் செய்கிறது. இலங்கையின் பெருந்தீவிற்கு வடக்கே யாழ்ப்பாணத் தடாகக் கடலினால் (Jaffna Lagoon) தனித்தீவாக பிரிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத் தீவகத்தை, சுண்டிக்குளத்தில் படிந்த மணல் அடுக்கு இலங்கைப் பெருந்தீவினோடு இணைத்து வைத்தது (Jeyasingham, W.L.1951; Mathanakaran, R.1987).

யாழ்ப்பாணத்தின் பருவநிலை (The Jaffna Climate)

மாரி – கோடைப் பருவநிலை

பூமியின் பூமத்திய ரேகையின் வடக்கே அட்சரேகை பத்தாம் பாகைக்குள் யாழ்ப்பாணக்குடாநாடு அமைந்திருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்திற்கு அருகே பாக்குத் தொடுவாயினாலும், வங்காள விரிகுடாவினாலும் இக்குடாநாடு அதனின்று பிரிக்கப்பட்டிருக்கிறது. 1,230 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இக்குடாநாடு இந்தியக் கரையிலிருந்து 32-40 கி.மீ. (20-25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இக்குடாநாட்டின் மிக உயர்ந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 15.2 மீட்டர் (50அடி) உயரமாகவே இருந்தது. இதன் அமைவிடமும், அங்கு நிலவும் ‘பூமத்தியரேகை-வளிமண்டல’ நிலைகளுமே அதன் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிக்கின்றன. இப்பருவம் ‘வெப்பமண்டல-மழைக்காலப்’ பருவநிலை (Tropical Monsoon) என அழைக்கப்படுகிறது (Mathanakaran, R. 1987: 193).

யாழ்ப்பாணப் பருவநிலை மாரி, கோடை என வகுக்கப்பட்டிருக்கிறது. ஐப்பசி முதல் மார்கழி மாதம் வரை நிகழும் வடகிழக்குப் பருவமழைக்காலம் ஆண்டின் 90 சதவிகிதமான மழையைக் கொண்டுவருகிறது. இதுவே மாரிகாலம் என அழைக்கப்படுகிறது. சித்திரை-வைகாசி மாதங்களில் வீசும் தென்மேற்குப் பருவமழைக்காலம் மிகுதி 10 சதவிகித மழையைக் கொண்டுவருகிறது. இது மென்மழைக்காலம் என்றும் அழைக்கப்படும். வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கும், தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கும் இடையே ஆனி முதல் புரட்டாசி மாதம் வரையும் உள்ள காலப்பகுதி உலர்ந்த கோடைப் பருவமாகும்.

யாழ்ப்பாணத்தின் வருடாந்த மழைவீழ்ச்சி பாரிய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. ஆண்டிற்குச் சராசரி 1300 மி.மீ. மழைவீழ்ச்சியைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு 1988 – 2004ஆம் ஆண்டுகளுக்கிடையே 1903 மி.மீட்டருக்கும் 847.8 மி.மீட்டருக்கும் இடைப்பட்ட மழைவீழ்ச்சியைக் காட்டுகிறது. 1944ஆம் ஆண்டில் கார்த்திகை (நவம்பர்) மாதத்தில் மட்டும் 1118 மி.மீ. மழையைக் கண்ட யாழ்ப்பாணம், 1974 முழு ஆண்டிலும் 635 மி.மீ. மழையை மட்டுமே கண்டிருக்கிறது (Jaffna District Statistical Handbook 2003).

வெப்பநிலை

பூமியின் அட்சரேகை (Latitude) 9°30′-9°50n இல் யாழ்ப்பாணக் குடாநாடு அமைந்திருப்பதனால் வருடம் முழுவதும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் அங்கே படிந்திருக்கும். ஆனால் மழைக்காலங்களில் கவியும் மேகத்திரள்கள் கதிரவன் ஒளியை நிலத்திற்கு வரவிடாமல் தடுக்கும். வடகிழக்கிலிருந்து வீசும் வாடைக்காற்று குளிரைக் கொண்டுவரும். இக்காற்றினால் ஏற்படும் நீர் உறைவும் (Condensation) வெப்பநிலையை வெகுவாகக் குறைக்கும். யாழ்ப்பாணத்தின் சராசரி வெப்பம் 26.2 சென்ரிகிரேட் பாகையாகும். சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரை வெப்பம் 28 சென்ரிகிரேட் பாகை முதல் 30 சென்ரிகிரேட் பாகை வரை உயர்வாக இருக்கும் (Jaffna District Statistical Handbook 2003).

நாகநாட்டின் ஆதிக்குடியிருப்புகள்

உத்தரதேசக் குடியிருப்புகள்

இந்தியத் துணைக்கண்டத்தில் இற்றைக்கு ஒன்றரை மில்லியன் (15 லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆதிகால மனித இனங்கள் வாழ்ந்து வந்தமைக்கான ஆதாரங்களாக அவர்கள் உபயோகித்த கல்லாயுதங்களின் அறிவியல் ரீதியான காலக்கணிப்புகள் காணப்படுகின்றன. அக்காலகட்டத்தின் 99 சதவிகிதமான காலத்தில் இலங்கை, இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தமையால் தென்னிந்தியாவரை வந்த மனித இனங்கள் இலங்கைக்கு நடந்து வந்திருப்பார்கள். இற்றைக்கு 65,000-60,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் நவீன மனிதர்களான ஹோமோ சேப்பியன்ஸ் இனங்கள் தென்னிந்தியாவையும் இலங்கையையும் வந்தடைந்து விட்டன என்பதை இன்றைய மரபணுவியல் ஆய்வுகள் அறியத் தருகின்றன (Thiagarajah, S. 2015). இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஆய்வுகளில் இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லாயுதங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வட இலங்கையின் (உத்தர தேசத்தின்) கிழக்கே முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து வடக்குக் கரைநிலம் வழியாக மேற்குக் கரையில் புத்தளம் வரையிைல் சரளைக் கற்களும் மணலும் கலந்து பரந்திருக்கும் சிவந்த நிறமான ‘தேரி மணல் மேடு’ இரணைமடு அடுக்கமைவு (Iranamadu Formation) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இரும்புத்தாது கொண்ட இந்நிலம் மணலுடன் கலந்து நீண்டகால தட்பவெப்ப நிலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு செந்நிறம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த இரணைமடு அடுக்கமைவின் இரு இடங்களில் கண்டெடுத்த கல்லாயுதங்களில் மேற்கொள்ளப்பட்ட வெப்பேற்று-ஒளிஉமிழும் காலக் கணிப்புகள் (Thermoluminescence Dating) இற்றைக்கு முன் (இ.மு.) 125,000 ஆண்டுகளையும் (Abeyaratne, M. 1996), இ.மு. 80,000 ஆண்டுகளையும் (Deraniyagala, S., 1992: 686-688) காட்டியிருக்கின்றன.

வட இலங்கையின் இரணைமடு அடுக்கமைவில் கண்டெடுத்த காலத்திற்குரிய கற்கருவிகள் தென் இலங்கையில் பந்துல என்ற இடத்திலும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கற்கருவிகளைத்தவிர அக்காலகட்டத்தைய மனிதர்களின் எலும்புகளோ, மற்றைய பாவனைப் பொருட்கள் எதுவுமோ கண்டுபிடிக்கப்படவில்லை. காலயுகத்தின் அழிவுகளாலும், வெப்பமண்டலச் சிதைவுகளாலும் இம்மனிதர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் என்றைக்கோ அழிந்துபோய்விட்டன. தென்னாசியாவிற்கு ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதர்கள் ஆபிரிக்காவிலிருந்து வந்தடைந்த காலம் இ.மு. 65,000-60,000 எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் நவீன மனிதர்களுக்கு முன்பு இங்கே வாழ்ந்த ஹோமோ இரக்டஸ் எனப்படும் ஆதி மனிதர்கள் உபயோகித்த கற்கருவிகளாகவே இருக்கும். தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த ஆதிமனிதர்களின் கல்லாயுதங்கள் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கணிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆதிமனிதர்கள் மிருகங்களை வேட்டையாடியும், கிழங்குகள், பழங்கள், விதைகள் ஆகிய உணவுப் பொருட்களைச் சேகரித்து உணவாகவும் கொண்டு, பெரும்பாலும் காட்டுப் பகுதிகளிலும், ஆற்றங்கரைகளிலும் வாழ்க்கை நடத்தினார்கள். வட இலங்கையின் வறண்ட பிராந்தியத்தில் 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சதுர கி.மீ. பரப்பில் 1.5 முதல் 0.8 மனிதர்களே வாழ்ந்திருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. தென்னிலங்கையில் ஈரப்பிரதேசத்தில் மிக அடர்த்தி குறைவாக ஒரு சதுர கி.மீட்டருக்கு 0.1 அல்லது அதற்கும் குறைவான ஆதிமனிதர்களே வாழ்ந்திருப்பர் (S.U. Deraniyagala 1996).

இலங்கையின் இடைக்கற்கால மக்கள், இ.மு. 60,000 ஆண்டுகளில் தென் ஆசியாவை வந்தடைந்த நவீன ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களாவர். கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து வெளிவந்து அவுஸ்திரேலியாவை அடைந்த அவர்களது முதலாவது இடப்பெயர்வு கடற்கரையோரமாக நடைபெற்றதனால் அவர்களது நகர்வு இலங்கையின் கரையோரப் பகுதியூடாகவே நடைபெற்றிருக்கும். அக்காலகட்டத்தில் இலங்கை இந்தியாவோடு இணைந்து ஒரே நிலமாக இருந்தது என்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இம்மனிதர்களின் வாழ்வியல் பற்றி விவரமாக இனிவரும் ஓர் இயலில் கூறப்படும்.

1970ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளகத்தின் அகழாய்வுக் குழு கந்தரோடையில் முதல் தடவையாக ஓர் அறிவியல் ரீதியிலான அகழாய்வை மேற்கொண்டது. இக்குழுவுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் விமலா பேக்ளி அம்மையார் இங்கே ஆதியில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டைப் பேணிய மக்கள் எனத் தெரிவித்தார் (Begley, V. 1973).

இக்கால கதிரியக்கத் தேதிக்கணிப்புகளின்படி (Radiocarbon And Thermoluminescence Dating) பெருங்கற் பண்பாடு, தென்னிந்தியாவில் பொ.யு.மு. 1500ஆம் ஆண்டளவில் தோற்றம்பெற்று திராவிட மொழிகளைப் பேசும் கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், மலையாள நாடுகளிலெல்லாம் பரவி, அப்பால் இலங்கைத்தீவு எங்கும் பரவியது (Moorthy, U.S. 1994; Possehl, G.L. 1994).

பெருங்கற் பண்பாடானது முக்கியமாக இறந்த மக்களை அடக்கம் செய்யும் பெருங்கற்களைக் கொண்ட கல்லறைகளை உள்ளடக்கியது. இறந்தவர்களை அடக்கம் செய்த பின்னர் பெரிய கற்பாறைகளை கற்பலகைகளாக வெட்டியோ அல்லது அடக்கத்தைச் சுற்றிவர நட்டுவைத்தோ, மேலாக மற்றொரு கற்பலகையால் மூடிவிடுவார்கள். இந்த அடிப்படை முறையிலிருந்து பலவகையான மாறுபாடுகளும் காணப்படும். இம்மாதிரி பெருங்கற்களைக் கொண்ட சமாதிகளும், வழிபாட்டு நடுகற்களும் பண்டைய உலகின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தைப் பொறுத்தவரையில் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழிகளைப் பேசும் மக்களே இந்த அடக்கமுறைகளைக் கடைப்பிடித்தவராவர்.

பெருங்கற் பண்பாடு என்பது மேற்கூறப்பட்ட பெருங்கற்களைக்கொண்ட கல்லறைகளோடு இரும்பின் தொழில்நுட்பம், குளம் மற்றும் அணைக்கட்டு ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன விவசாயம், உழுவதற்கான ஏர், நெற்பயிர்ச்செய்கை, மட்பாண்டம் வனையும் சில், கறுப்பு-சிவப்பு மட்பாண்டம், அம்மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்துகள் ஆகிய பண்புகளை உள்ளடக்கியதாகும்.

தென்னிந்தியாவின் நகரமயமாக்கம், குறுநில மன்னர்களினதும் அரசுகளினதும் எழுச்சி, சங்கத்தமிழ் இலக்கியங்களை உருவாக்குவதற்கேற்ற மொழியின் படிநிலை வளர்ச்சி ஆகிய அனைத்தும் பெருங்கற் பண்பாட்டின் உச்சநிலைச் சாதனைகளாகும் (Ragupathy, P. 1987:180).

பண்டையத் தமிழகத்திலும் இலங்கையிலும் காணப்படும் தாழிப் புதையல்களில் – இறந்தவர்களின் சடலங்களை நான்கடி உயரமான பெரிய பானைகளில் இட்டுப் புதைக்கும் பண்பு – பெருங்கற்கள் இடம்பெறாது போயினும், அதனோடு மேற்குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் காணப்படுவதால், அவையும் ‘பெருங்கற் பண்பாடு’ என்ற குடையின் கீழே அமைகின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் இப்புதையல்களோடு வைக்கப்படும் கல்லறைப் பொருட்கள், கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களினுள் வைக்கப்பட்டு, தாழிகளோடு பெருங்கற்குழிகளில் புதைக்கப்பட்டன.

தென்னாசியச் சூழமைவில், கறுப்பு-சிவப்பு மட்பாண்டம், புதிய கற்கால, ஆதி இரும்புக்காலங்களில் திராவிட மக்களுக்குரிய தனித்துவமான முத்திரைப் பாண்டமாக விளங்கியது (இந்தத் தொடரில் இடம்பெறும் திராவிட மக்கள் என்ற பதம் திராவிட மொழிகளைப் பேசும் மக்ளைக் குறிக்குமே ஒழிய, அவர்கள் ஓர் இனம் என்ற கருத்தாக்கம் ஆதாரமற்றது). இந்த வகையான மட்பாண்ட உபயோகம் பொ.யு.மு 5000 ஆண்டளவில் சிந்துவெளிக் குடியிருப்புகளில் ஆரம்பமாகி, இந்தியாவெங்கும் வாழ்ந்த தொல்-திராவிட மக்களிடையே பரவி, தென்னகமெங்கும் இலங்கையெங்கும் பரவி, ஏறக்குறைய பொ.யு.மு. 200ஆம் ஆண்டளவில் (இரண்டாம் நூற்றாண்டில்) முடிவுக்கு வந்திருக்கிறது. ஒருசில மையங்களில் அதற்குப் பின்னரும் இம்மட்பாண்டம் உபயோகத்தில் இருந்திருக்கிறது.

பொ.யு.மு. 1800 ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் துணைக்கண்டத்திற்கு வந்த இந்திய-ஆரிய மக்கள் முதலில் பொ.யு.மு. 1500-800 ஆண்டுக்காலத்தில் ‘சாயம் பூசப்பட்ட சாம்பல்நிற’ மட்பாண்டங்களையும் (Painted Grey Ware: Pgw), தொடர்ந்து பொ.யு.மு. 700-200 ஆம் ஆண்டுகளில் ‘வடஇந்திய மெருகுக் கறுப்பு’ மட்பாண்டங்களையும் (Northern Black Polished Ware: Nbpw) உபயோகித்து வந்தார்கள். வட இந்தியாவில் இடம்பெறும் அகழாய்வுகளில், பொது ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில், மேல் தட்டுகளில் ‘வடஇந்திய மெருகுக் கறுப்பு மட்பாண்டங்களையும்’, அதன் கீழே ‘சாயம் பூசப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டங்களையும்’, கீழே அடித்தளத்தில் ‘கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களையும்’ காணமுடிவதை தாப்பர் போன்ற ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் (Thapar, B.K. Et Al. 1967).

சிந்துவெளி அகழ்வுகளில் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்ட இந்த மட்பாண்டங்களுக்கு ‘கறுப்பு-சிவப்பு மட்பாண்டம்’ என்ற பெயரைக் கொடுத்தவர் பிரித்தானிய தொல்லியலாய்வாளரான ஸேர். மோட்டிமர் வீலர் ஆவார். “இந்த மட்பாண்டம் தனித்துவமான உருவத்தையும் கட்டுமானப் பொருளையும் கொண்டு, மெல்லச் சுற்றும் சில்லில் வனையப்பட்டு, மெருகேற்றப்பட்டு, மட்பாண்டத்தைத் தலைகீழாகப் புரட்டி சூளையில் சுடவைத்த படியினால், அதன் உட்பக்கம் கறுப்பாகவும், வெளிப்பக்கம் பெரும்பாலும் கறுப்பும் சிவப்புமாகவும், கறுப்பு அதன் மேற்பக்கத்தில் (கழுத்துப்பக்கம்) வரையறுக்கப்பட்டும் காணப்படுகிறது.”

“The Pottery Is Distinctive In Shape And Fabric, It Is Turned On A Slow Wheel, Polished And Is Characteristically Black Inside And Black And More Often Black And Red Outside, With Black Confined To The Upper Part Of The Vessel, Resulted From Inverted Firing” (Wheeler, R.E.M. 1947).

1916ஆம் ஆண்டில் J.P. லூயிஸும் (வட மாகாண அரசாங்க அதிபராக இருந்த ஆய்வாளர்), 1917-1919 ஆம் ஆண்டுகளில் போல் பீரிஸும், இலங்கையின் வடமாகாணத்தில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வுகளில், யாழ்ப்பாணத்தில் வரலாற்றிற்கு முற்பட்ட முக்கியமான இரு குடியேற்ற மையங்களாக கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய இரு இடங்களும் காணப்பட்டன எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். 1970ஆம் ஆண்டில் அமெரிக்க பென்ஸில்வேனிய பல்கலைக்கழக தொல்லியலகத்தின் ஆதரவில் நடைபெற்ற அறிவியல் ரீதியான அகழாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களின் கதிரியக்கக்-கரிம திகதிக் கணிப்பில் (Radiocarbon Dating) கந்தரோடை மையத்தின் பெருங்கற்காலக் குடியேற்றங்களின் ஆரம்பகாலம் பொயு.மு. 1290±60 ஆம் ஆண்டுக்காலம் எனத் தெரியவந்தது.

1980-1983ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் இரகுபதி (பிந்நாள் பேராசிரியர்) யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொண்ட 41 தொல்லியல் மையங்களின் ஆய்வில் கந்தரோடை, ஆனைக்கோட்டை, காரைநகர் ஆகிய மையங்கள் ஆரம்ப காலத்திலிருந்தே பெருங்கற்காலப் பண்பாட்டைப் பேணிய இடங்கள் என்பதையும், வல்லிபுரம், வேலணை, மண்ணித்தலை ஆகிய இடங்கள் ஆரம்ப வரலாற்றுக்கால மையங்கள் என்பதையும் இனங்கண்டு கொண்டார் (Ragupathy, P. 1987)

1993இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த பரமு புஷ்பரட்ணம் (பிந்நாள் பேராசிரியர்) பூநகரியில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளின் மூலம் ஆரம்ப வரலாற்றுக்காலத்தில் அது பல நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு பட்டினமாக விளங்கியது என்பதை எடுத்துக்காட்டினார்.

கந்தரோடைக்கும், வல்லிபுரத்திற்கும் அடுத்தபடியாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள, கோட்டகமவில் கண்டெடுத்த கல்வெட்டுப் பேசும் ‘பொங்கொலிநீர்ச் சிங்கைநகர்’ முக்கியமானதொரு பட்டினமாகக் கருதப்பட்டது. பல ஆண்டுகளாக குடாநாட்டின் வடக்கிலும், அல்லது பூநகரியிலும் சிங்கைநகர் இருந்திருக்கலாம் என்ற கருத்துகளுக்கு 2011-12ஆம், 2017-18 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடைபெற்ற அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகள் முற்றுப்புள்ளி வைத்தன.

பொது யுகத்திற்கு முற்பட்ட இரண்டாயிரத்தாண்டின் பிற்பாதியில் அறிமுகமான பெருங்கற் பண்பாட்டைப் பேணிய ஆதி மையங்கள், யாழ்ப்பாணக் கடல்நீரேரிக்குச் சமீபமாக உள்ள பிராந்தியங்கள் என்பதை நோக்குமிடத்து, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இப்பண்பாட்டின் சமுத்திரவழி வருகையைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது.

இனித் தொடரும் இயல்களில், பெருங்கற் பண்பாட்டோடு கறுப்பு – சிவப்பு மட்பாண்டத்தை உபயோகித்த ஆதிக்குடிகள் வாழ்ந்த பண்டைய யாழ்ப்பாணத்தின் தலைநகரான கந்தரோடையினதும், அதைத் தொடர்ந்த துணைக்குடியிருப்பு மையங்களான (Satellite Settlements) ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணக் கோட்டை, வல்லிபுரம், நாகர்கோயில், பூநகரி, காரைநகர், சாட்டி, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய மையங்களினதும் தொல்லியல் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

அடிக்குறிப்பு

  1. முந்தைய ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் கிறிஸ்தாப்த காலத்தை மையமாகக் கொண்டு ‘கிறிஸ்துவுக்கு முன்’ (கி.மு.), ‘கிறிஸ்துவிற்குப் பின்’ (கி.பி.) என வரலாற்றை அமைத்தார்கள். வரலாற்று எழுத்தில் நடுநிலை பேண வேண்டிய தேவையை உணர்ந்த இன்றைய தொல்லியலாளர்கள் கிறிஸ்தாப்த காலத்திற்குப் ‘பொது யுகம்’ (Common Era) என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள். இன்று நாம் பொது யுகத்தின் தொடரில் வாழ்கிறோம். இன்றைய காலண்டர் பொது யுகத்தின் ஆண்டுகளைக் காட்டும் நாட்காட்டியாகும். இதன்படி இக்கால எழுத்துகளில் வரலாற்று ஆண்டுகள் ‘பொது யுகத்திற்கு முன்’ (கி.மு.=பொ.யு.மு.) என்றும் அல்லது ‘பொது யுக’ ஆண்டுகள் (கி.பி.= பொ.யு.) என்றும் குறிப்பிடப்படுகின்றன.

உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்

  1. Abeyaratne, M. (1996): Multi-Dating Studies Of Archaeological Sites, Unpublished Ph D. Dissertation, Australian National University, Canberra.
  2. Begley, Vimala (1967): Archaeological Exploration In Northern Ceylon, Expedition, Summer 1967, (9) 4, Bulletin Of The University Museum, University Of Pennsylvania, Philadelphia.
  3. Begley, Vimala (1973): “Proto-Historic Material From Sri Lanka And Indian Contacts” In (Eds.) K.A.R. Kennedy & G.L.Possehl: Ecological Backgrounds Of South Asian Prehistory, Occasional Papers And Thesis, Cornell University.
  4. Cooray, P.G. (1967): An Introduction To The Geology Of Ceylon, National Museum Publication, Colombo.
  5. Deraniyagala, S.U. (1992): Prehistory Of Sri Lanka: An Ecological Perspective, Sri Lanka Department Of Archaeological Survey, Colombo.
  6. Deraniyagala, S.U. (1996): Pre- And Protohistoric Settlement In Sri Lanka; Xiii Th Congress Proceedings Of The International Union Of Prehistoric And Protohistoric Sciences, Forli, Italy., 8-14 Sept. 1996. Vol 5, Section 16, Pp 277-285.
  7. Geiger, Wilhelm (1960): Culture Of Ceylon In Medieval Times, (Ed.) Heinz Bechert, Harrassowitz Publishing House, Germany.
  8. Jaffna (1968): Groundwater Survey In Jaffna 1968, Municipal Council, Jaffna.
  9. Jaffna (1984): Jaffna Market Town Water Supply Project 1984, Municipal Council, Jaffna.
  10. Jaffna (2003): Jaffna District Statistical Handbook 2003, Jaffna
  11. Mathanakaran, R. Dr. (1987): Jaffna: Its Geographical Background In P. Ragupthy: Early Settlements In Jaffna, Madras.
  12. Moorti, U.S. (1994): Megalithic Culture Of South India, Ganga Kaveri Publishing House, Varanasi.
  13. Parker, H. (1909): Ancient Ceylon, Luzac & Co., London.
  14. Pieris, Paul E. (1917): Nagadipa And The Buddhist Remains In Jaffna, Part I, Journal Of The Royal Asiatic Society (C.B), Vol. Xvii, No.70, Colombo.
  15. Possehl, G.L. (1994): Radiometric Dates For South Asian Archaeology, University Museum, University Of Pennsylvania, Philadelphia.
  16. Pushparatnam, P. (1993): Poonakari: An Archaeological Survey, (In Tamil), Tirunelvely, Jaffna.
  17. Ragupathy, P. (1987): Early Settlements In Jaffna, Thillimalar Ragupathy, Madras.
  18. Rajeswaran, S.T.B.(2008): Jaffna Urban Governance Support Project, Jaffna.
  19. Tharpar, B.K. Et Al. (1967): ‘prakash 1955: A Chalcolithic Site In The Tapti Valley’ Ancient India 20-21 (1967).
  20. Thiagarajah, Siva (2011): Peoples And Cultures Of Early Sri Lanka, Tic, Kingston- Upon-Thames, Uk.
  21. Thiagarajah, Siva (2015): Genetic Origins Of The Tamils, Kumaran Book House, Colombo.
  22. Wheeler, R.E.M., Ghosh, A., Deva, K. (1946): Arikamedu: An Indo-Roman Trading Station On The East Coast Of India, Ancient India 2: 17-124.(1946).
  23. Wheeler, R.E.M. (1947): Brahmagiri And Chandravalli: Megalithic And Other Cultures In Mysore State, Ancient India 4: 180-310 (1947-48).

ஒலிவடிவில் கேட்க


About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்