வடக்கு கிழக்கின் ஆடு வளர்ப்புத் தொழிற்றுறை
வடக்கு கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நிற்கும் மற்றொரு வாழ்வாதாரத் துறையாக, ஆடு வளர்ப்பைக் குறிப்பிடமுடியும். மிருக வளர்ப்பில் குறுகிய காலத்தில் நன்மை பெறக்கூடியதும் பராமரிப்புத் தொடர்பில் ஒப்பீட்டளவில் இலகுவானதுமான ஆடு வளர்ப்புத் தொழில் துறையானது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நன்கு பிரபல்யமான ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தில் 254,066 ஆடுகளும் வட மாகாணத்தில் 192,779 ஆடுகளுமாக, இவ்விரு மாகாணங்களிலும் 446,845 ஆடுகள் உள்ளதாக 2021 இன் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இவற்றுள், உள்ளூர் இன ஆடுகள் வடக்கில் 82,502 உம், கிழக்கில் 187,797 உம் காணப்படுகின்றன. கலப்பின வர்க்க ஆடுகள், கிழக்கில் 66,449 உம், வடக்கில் 110,277 உம் காணப்படுகின்றன.
இந்தத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களையும் அவர்களின் உடைமையமைப்பையும் ஆராயும் போது, கிழக்கு மாகாணத்தில் 17,629 குடும்பங்களும் வடமாகாணத்தில் 21,978 குடும்பங்களும் ஆடு வளர்ப்பில் நேரடியாக ஈடுபட்டுள்ளன. அவர்கள் கொண்டிருக்கும் கால்நடையின் அளவின் அடிப்படையில் நோக்கும் போது, வடமாகாணத்தில் 25 இற்கும் குறைந்த ஆடுகளின் எண்ணிக்கையைக் கொண்ட 14,461 குடும்பங்களும், 26 – 50 வரையான ஆடுகளின் எண்ணிக்கையைக் கொண்ட 4,932 குடும்பங்களும், 51 – 100 வரையான ஆடுகளின் எண்ணிக்கையைக் கொண்ட 2,084 பேரும், 101 – 500 வரையான ஆடுகளின் எண்ணிக்கையைக் கொண்ட 470 பேரும், 501 – 1000 வரையான ஆடுகளின் எண்ணிக்கையைக் கொண்ட 24 பேரும், 1000 இற்கும் மேல் ஆடுகளை உடைமையாகக் கொண்டவர்கள் 07 பேரும் காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் 05 வரை ஆடுகளை உடைமையாகக் கொண்டவர்கள் 5727 பேரும், 5 – 15 இற்கு கீழ் ஆடுகளை உடைமையாகக் கொண்டவர்கள் 5483 பேரும், 15 – 25 இற்கும் உட்பட்டவர்கள் 2938 பேரும் காணப்படுகின்றனர். இவ்வகையில் வட மாகாணத்திலேயே ஆடு வளர்ப்பு தொழிற்றுறை முன்னிலை பெற்றிருப்பதுடன் பண்ணை முறையிலான ஆடு வளர்ப்பு முறை விருத்தியடைந்திருப்பதனையும் நாம் அவதானிக்க முடியும்.

ஆடுவளர்ப்பு என்பது இறைச்சி மற்றும் பால் ஆகிய இரு தேவைகள் குறித்தே பெருமளவுக்கு இடம் பெறுவதனால் குடிசைமுறைத் தொழிலாக இவ்வளர்ப்பு இடம்பெறுகிறது. ஆடு வளர்ப்பின் அடிப்படையை நோக்கும் போது, வளர்ப்புச் செலவீனம் மிகக் குறைந்த வளர்ப்பு முறையாக திறந்த வெளி வளர்ப்பு முறையே சிறப்பானதாக உள்ளது. சூழலிலுள்ளவற்றை தானே தேடி உண்ணும் வழக்கத்தைக் கொண்ட இந்த முறையில், பாதுகாப்பான மேய்ச்சல் முறையை உறுதி செய்வதில், மேய்ப்பாளர் ஒருவர் நேரடியாக ஈடுபட்டிருக்கும் போதே இது சிறப்பான வருவாயை பெற்றுக் கொடுக்கிறது. இதனால் திறந்த வளர்ப்பு முறையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது 25 இற்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்தால் தான், இந்த ஆளணிக்கான காணியை வழங்க முடியும் என்பதுடன் பாதுகாப்பான வாழ்வாதார வளர்ப்பு முறையாகவும் இதனை மாற்றியமைக்கவும் முடியும்.
கிழக்கு மாகாணத்தை விட, வட மாகாணத்திலேயே பண்ணை முறை ஆடு வளர்ப்பு வளர்ச்சி பெற்றுள்ளது. பால் உற்பத்திக்காக ஆடுகளை வளர்க்கும் போது, தரமுயர்த்தப்பட்ட வர்க்கங்களை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் சிறப்பான உற்பத்தியைச் சாத்தியப்படுத்த முடியும். இவ்வாறான தரமுயர்த்தப்பட்ட வர்க்கங்களும் கிழக்கை விட வடக்கிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உற்பத்தி அடிப்படையில் ஆடு வளர்ப்புத்துறையை நோக்கும் போது, கிழக்கு மாகாணத்தில் நாளாந்தம் 3,837 கிலோ ஆட்டு இறைச்சியும் 159 லீற்றர் பாலும் பெறப்படுகின்றது. வடமாகாணத்தில் 1,894 லீற்றர் ஆட்டுப்பாலும் 3,283 கிலோ இறைச்சியும் நாளாந்தம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,750 லீற்றர் ஆட்டுப்பால் பெறப்பட்டு வருவதானது, ஆடுவளர்ப்பானது யாழ்ப்பாணப் பாரம்பரிய பொருளாதாரப் பண்பாட்டின் அடையாளமாக இருப்பதை உணர்த்துகின்றது. உண்மையில் இம் மாவட்டத்தில் மட்டும் பாலுக்காக 61,106 தரமுயர்த்தப்பட்ட நல்லின ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் ஆடு வளர்ப்பு என்பது அனைத்துத் தர மக்களினதும் முயற்சி என்பதனால் வீட்டுக்கொரு ஆடு வளர்க்கப்படுகிறது. வீட்டிலுள்ள கழிவுகளும் வேலிகளிலுள்ள குழைகளும் தீனின் உள்ளீடாக கொடுக்கப்படுகின்றன. ஆடுகளிலிருந்து பெருமளவிலான வீட்டுத்தேவைக்கான பால் பெறப்படுகின்றது. அதிக புரதச் செறிவை கொண்ட ஆட்டுப்பால் உற்பத்தியானது ஏனைய மாவட்டங்களில் எதிர்பார்ப்புக்கு அப்பால் வளர்ச்சியடையவில்லை. யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஆடு வளர்ப்புக்கான உள்ளீடுகள் பெருமளவு காணப்பட்டிருந்தும் கூட வளர்ப்பாளர்களின் அக்கறையின்மை காரணமாக இது விருத்திடையவில்லை என்பது தான் மிக முக்கியமானது.

வாய்ப்புமிக்க வாழ்வாதாரத் தொழில்களில் ஒன்றான குடும்ப மட்ட ஆடு வளர்ப்புத் துறை, பொருத்தமான சூழலுடன் இவ்விரு மாகாணங்களிலும் விரிவடைந்து காணப்படுகின்றது. குடும்ப மட்ட ஆடு வளர்ப்பு என்பது பால், இறைச்சி என்பவற்றுக்கு அப்பால் மனநிறைவையும் பொழுதுபோக்கையும் வழங்கி வருவதுடன் சூழலில் கிடைக்கும் இலை, குழை, குசினிக் கழிவுகளுக்கும் உத்தமப் பயன்பாட்டைப் பெற்றுத்தருவது யாழ்ப்பாணப் பண்பாட்டு ஆடு வளர்ப்பின் ஒரு அனுபவமாகும்.
கிளிநொச்சியில் 7,781 நல்லின ஆடுகளும், மன்னாரில் 5,192 நல்லின ஆடுகளும் வவுனியாவில் 4,110 நல்லின ஆடுகளும் காணப்பட்ட போதும், இந்தமாவட்டங்களின் பாலுற்பத்தி இரட்டை இலக்கத்தில் மட்டுமே அமைவதானது, ஆடுகளிலிருந்து உரிய அக்கறையுடன் பயன் பெறப்படவில்லை என்பதனை உறுதி செய்கிறது.
வடக்கு – கிழக்கின் எருமை வளர்ப்பு தொழிற்றுறை
கால்நடை வளர்ப்பின் உட்பிரிவுகளில் ஒன்றான எருமை வளர்ப்பானது வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பிட்ட அளவில் இடம் பெற்று வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் பிரதான வளர்ப்பு மிருகமாக எருமை மாடுகள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. சனத்தொகை அளவின் அடிப்படையில், கிழக்கில் 229,014 எருமைகளும், வடக்கில் 24,648 எருமைகளும் காணப்படுகின்றன. கிழக்கில் – மட்டக்களப்பில் 95,232 எருமைகளும் திருகோணமலையில் 81,731 எருமைகளும் அம்பாறையில் 52,051 எருமைகளும் உள்ளதோடு, வடக்கில் – முல்லைத்தீவில் 13,417 எருமைகளும் வவுனியாவில் 4,652 எருமைகளும், கிளிநொச்சியில் 2,613 எருமைகளும் மன்னாரில் 3,966 எருமைகளும் காணப்படுகின்றன. பால் தரக்கூடிய நிலையில் கிழக்கில் 6,989 எருமைகளும் வடக்கில் 12,275 எருமைகளும் காணப்படுகின்றன.
பால் உற்பத்தியின் பங்களிப்பு என்ற வகையில் நோக்கும் போது, வட மாகாணத்தில் 6,545 பால் தரும் எருமைகளிலிருந்து நாள் ஒன்றுக்கு 6,536 லீற்றர் பால் பெறப்பட்டு வருகிறது. மாவட்ட மட்டத்தில், கிளிநொச்சியில் 598 எருமைகளிலிருந்து 462 லீற்றர்களும், மன்னாரில் 1,054 எருமைகளிலிருந்து 490 லீற்றர்களும், முல்லைத்தீவில் 3,089 எருமைகளிலிருந்து 1,819 லீற்றர்களும், வவுனியாவில் 1804 எருமைகளிலிருந்து 3,765 லீற்றர்களும் நாளாந்தம் பெறப்பட்டு வருகிறது. இவ்வகையில் வடக்கில், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எருமை வளர்ப்பானது வாழ்வாதாரத் தொழில் முனைவாக வளர்ச்சியடைந்துள்ளதுடன் முழு நேரமாக பலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை உறுதி செய்யும் வகையில் உடைமையடிப்படையிலான பண்ணையாளர்களின் தரவுகளை ஆராயும் போது, வவுனியாவில் 235 முழு நேரப் பண்ணையாளர்களும், மன்னாரில் 77 முழு நேரப் பண்ணையாளர்களும் கிளிநொச்சியில் 33 முழு நேரப் பண்ணையாளர்களும் முல்லைத்தீவில் 323 முழு நேரப் பண்ணையாளர்களும் நேரடியாக இந்தத் தொழில்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரிய எண்ணிக்கையில் பட்டிமுறையில் எருமை வளர்ப்பில் ஈடுபட்டு வருமானம் பெறுபவர்களாகக் காணப்படுகின்றனர்.
வவுனியாவில் 5 இற்கும் குறைவான எருமைகளைக் கொண்டவர்கள் 80 பேரும், 6 – 10 வரையான எருமைகளைக் கொண்டவர்கள் 51 பேரும், 11 – 50 வரையான எருமைகளைக் கொண்டவர்கள் 59 பேரும், 51 – 100 வரையான எருமைகளைக் கொண்டவர்கள் 35 பேரும், 100 இற்கும் மேல் எருமைகளைக் கொண்டவர்கள் 100 பேரும் காணப்படுகின்றனர். இதே போல் முல்லைத்தீவில் 5 வரையான எருமைகளைக் கொண்ட உடைமையாளர்கள் 65 பேரும், 6 – 10 வரையான எருமைகளைக் கொண்ட உடைமையாளர்கள் 54 பேரும், 11 – 50 வரையான எருமைகளைக் கொண்ட உடைமையாளர்கள் 110 பேரும், 51 – 100 வரையான எருமைகளைக் கொண்ட உடைமையாளர்கள் 53 பேரும், 101 இற்கும் மேல் எருமைகளைக் கொண்ட உடைமையாளர்கள் 32 பேரும் காணப்படுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தின் எருமைப் பால் உற்பத்தியின் பங்களிப்பை மதிப்பிடும் போது, அம்பாறை மாவட்டத்தில் 14,409 பால் தரும் எருமைகளிலிருந்து 38,085 லீற்றர் பால் நாளாந்தம் பெறப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 30,582 பால் தரும் எருமைகளிலிருந்து 46,923 லீற்றர் பாலும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 260,901 பால் தரும் எருமைகளிலிருந்து 38,085 லீற்றர் பாலும் நாளாந்தம் பெறப்பட்டு வருகிறது. இந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் 69,982 பால் தரும் எருமைகள் காணப்படுவதுடன் இதிலிருந்து நாளாந்தம் 52,779 லீற்றர் பால் பெறப்பட்டு வருகிறது. இது இம்மாகாணத்தில் மொத்தமாக நாள் ஒன்றுக்கு கிடைக்கும் 154,505 லீற்றர் பாலில் 30 சதவீதமானது எருமைப்பாலின் பங்களிப்பே என்பதைக் காட்டுகிறது.
உடைமை அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் எருமை வளர்ப்புத் துறையை நோக்கும் போது, 11,625 பண்ணையாளர்கள் இந்தத்தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளதுடன், மாவட்ட அடிப்படையில் திருகோணமலையில் 4292 குடும்பங்களும் மட்டக்களப்பில் 4874 குடும்பங்களும் அம்பாறையில் 2458 குடும்பங்களும் இதனைத் தமது தொழிலாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. மாகாணமட்டத்தில், 5 வரையான எருமைகளைக் கொண்ட பண்ணையாளர்கள் 2,680 பேரும், 5 – 15 வரையான எருமைகளைக் கொண்டவர்கள் 3,594 பேரும், 15 – 25 வரையான எருமைகளைக் கொண்டவர்கள் 2,857 பேரும், 25 இற்கும் மேற்பட்ட எருமைகளைக் கொண்டவர்கள் 2,494 பேரும் காணப்படுகின்றனர். இவ்வகையில் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, எருமை வளர்ப்புத்துறை பாரியளவில் வளர்ச்சியடைந்து மக்களுக்கு வாழ்வாதாரம் தரும் பிரதான தொழிற்றுறையாக உருவாகி வருவதனை நாம் அவதானிக்க முடியும்.

எருமை வளர்ப்புத் தொழில்துறையானது பலராலும் இலகுவில் ஆரம்பிக்க முடியாத ஒரு தொழிற்றுறையாகும். ஏனெனில் இந்த உயிரின வளர்ப்பில் சூழல் சார்ந்த அம்சம் மற்றும் பராமரிப்புக்கான வலு ஆகிய இரண்டு முக்கியமான விடயங்கள் நிர்ணயக் காரணிகளாக இருந்து வருகின்றன. நீர்நிலைகள், சிறு குளங்கள, குட்டைகள், நீர் வடியும் வாய்க்கால்கள் போன்ற பசுமையான பிரதேசங்களிலேயே இவ்வளர்ப்பை இலகுவாக மேற்கொள்ள முடியும். அத்துடன், இப்படிப்பட்ட சூழலிலேயே இது செலவீனம் எதுவுமற்ற திறந்த வளர்ப்பு முறைக்கு உகந்ததாகக் காணப்படுவதனால் தான், கிழக்கில் பெரும்பாலான பிரதேசங்களிலும் வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் இது பெரியளவில் இடம் பெற்று வருகிறது. இவ்வகையில் எருமை வளர்ப்புக்கான வாய்ப்புக்கள் பற்றி ஆராயும் போது, வட மாகாணத்தில் 1,740 பெரிய – சிறிய குளங்களும் 1,605 குட்டைகளும் 60 அணைக்கட்டுக்களும் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 1,613 சிறிய குளங்களும் 28 பாரிய குளங்களும் காணப்படுகின்றன.
இக்குளங்களின் சுற்றாடல் எருமை வளர்ப்புக்கான மிகச் சிறந்த சூழலாகும். நீர்ப்பிரதேசங்களில் வளரும் இலை – குழைகள், தாமரைகள், பெரியளவிலான சம்புப்புற்கள் என்பன இவற்றின் பிரதான உணவாக அமைந்திருக்கின்றன. குறுகிய நேரத்தில் உணவு உண்டபின், அதிக நேரத்தை நீரில் நீந்திக் கழிக்கும் பண்புடைய எருமைகளுக்கு ஏற்ற இந்தச் சதுப்பு நிலச் சூழலை நாம் முழுமையாக இன்னமும் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

அதிக புரதம், கொழுப்பைக் கொண்ட எருமைப் பாலில் இருந்தே தயிர், யோக்கட், நெய் என்பனவற்றை இலகுவில் பெற்றுக்கொள்ள முடிகிறது. வட மாகாணத்தில் நாள் ஒன்றுக்கு 2,626 லீற்றர் தயிர் உற்பத்தி செய்யப்படுவதுடன் 128 லீற்றர் நெய், 1,413 லீற்றர் யோக்கட், 114 கிலோ பால் ரொபி என்பன நாளாந்தம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவை மாடு, எருமை என்பவற்றின் பாலின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 21,471 லீற்றர் தயிரும் 640 லீற்றர் நெய்யும் 7,736 லீற்றர் யோக்கட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த பெறுமதி சேர் உற்பத்தியின் மூலம் பெருமளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகரித்துச் செல்லும் போது உள்ளூரில் தேவையான பால் மற்றும் பால் சார்ந்த துணை உணவுப் பொருட்களை நிரம்பல் செய்யக்கூடியதாக இருப்பதுடன் சுய சார்பும் நிலைத்து நிற்கும் புதிய பல வாழ்வாதாரத் தொழில்களை உறுதி செய்யக்கூடியதாகவும் அமைகிறது.
தொடரும்.