பிரசவ செவிலி கொத்தியாத்தை
Arts
18 நிமிட வாசிப்பு

பிரசவச் செவிலி கொத்தியாத்தை

June 10, 2024 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

அறிமுகம்

இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தக்க, விரும்பத்தகாத அல்லது நன்மை, தீமையின் பாற்பட்ட அனுபவத்தின் வழி தன்னால் கட்டியமைக்க முடியாத விடயங்களை இயல்பிறந்த ஆற்றல்களாகக் கருதத் தலைப்பட்டான். ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணமாக தெய்வங்கள் உருப்பெறத் தொடங்கின. நன்மை செய்யும் தெய்வங்கள், தீமை செய்யும் தெய்வங்கள் என அவை உரைக்கப்பட்டன. நிலத்தெய்வம், ஐம்பூதங்களின் தெய்வம், மரத்தெய்வம், உருவம் உள்ள தெய்வம், உருவம் அற்ற தெய்வம், முன்னோர், அவலச்சாவுற்ற மனிதர், ஆவியாய் இயல்பிறந்த ஆற்றல் பெற்று தெய்வமாதல் அல்லது பேயாதல் எனப் பல்வேறு தெய்வங்களும் நம்பிக்கைகளும் காணப்பட்டன, காணப்படுகின்றன. மக்களின் வாழ்வியலோடு இணைந்து பயணிக்கும் தெய்வங்களும் பேய்களும் பற்றிய உரையாடல்களும் உள்ளன. இந்நாட்டார் தெய்வங்கள், அவற்றின் ஆற்றல்கள் பற்றி பல கதைகள், பாடல்கள் இன்றும் நின்று நிலவி வருகின்றன. ஆதிகாலத்தில் இயல்பிறந்த பல ஆற்றல்களை உடைய இராட்சதன் ஒருவன் வாழ்ந்து வந்ததாகவும், அவன் தன் ஆற்றல்களால் நாட்டார் தெய்வங்கள் பலவற்றை வருத்தி அழித்தான் என்றும், அதனால் அத்தெய்வங்கள் அவனைக் கண்டு அஞ்சி ஒளிந்தன என்றும் கூறப்படுகிறது (சிவபெருமானிடம் எதைத் தான் தொட்டாலும் சாம்பலாகும் வரம் பெற்ற பஸ்மாசுரனைக் கண்டு வரங்கொடுத்த சாமியான சிவபெருமானே ஓடியொழித்த வரலாற்றை இது ஞாபகப்படுத்துகின்றது). சில தெய்வங்கள் மக்களிடம் சென்று அடைக்கலம் பெற்றன. அத்தெய்வங்கள் அவ்வவ் மக்களின் குல தெய்வங்களுமாயின. இவற்றுள் ‘கொத்தி’ எனும் தெய்வம், பிள்ளை பெறும் வீடு ஒன்றினுள் சென்று ஒளித்தது. பிள்ளைப்பேறுக்கு மருத்துவிச்சிக்கு உதவியது. இதனால் மருத்துவிச்சியின் தெய்வமாகவும் பிரசவ தெய்வமாகவும் கொத்தி கருதப்படுகின்றார்.

கொத்தி

கொல் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த சொற்களே கொற்றி, கொற்றவை, கொத்தி எனத் திரிபடைந்திருக்க வேண்டும். தமிழர் மரபில் கொற்றவைக்குத் தனியிடமுண்டு. தமிழரின் வாய்மொழி வழக்காறு காலத்திலிருந்து கொற்றவை வழிபடுதெய்வமாக இருந்து வருகிறாள். இயற்கை நெறிக்கால திணையியலில் பாலை நிலத்தெய்வமாக வீரம் தீரம் நிறைந்த, கொடூரமான தெய்வமாக, பேயாக அவள் சித்திரிக்கப்படுகின்றாள். கலிங்கத்துப்பரணி அவளை பேயாகவே ஆக்கிவிடுகிறது. கொற்றவை, கொற்றி, துர்க்கை, காளி, காடுகாள், சூர், சூரீ, பழையாள், தொல்குடி குமரி எனப் பலவாறு அமையும் ஒரு பொருட்பன்மொழிகளாகவே இவை கருதப்படுகின்றன. தாய்மை மிக்கவள், அவள் மகன் வேலன், காட்டிடை வாழ்பவள், பேய் முழிகளை (கண்கள்) உடையவள், நஞ்சருந்தியும் சாவாதிருப்பவள் என அவள் பலவாறு இலக்கியங்களில் சித்திரிக்கப்படுகின்றாள்.

ஈழத்துப்புலத்தில் காலனிய காலத்தொடக்கத்தில் போர்த்துக்கேயர் சமய ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வழிபாட்டிடங்களை இடித்தழித்தனர். பின் ஆட்சிக்கு வந்த ஒல்லாந்தர் சமயவழிபாடுகளையும் அனுட்டானங்களையும் தடைசெய்தனர். இதற்கு மாற்றீடாக நாட்டார் வழிபாட்டில் கல், சூல, வேல் வழிபாடுகள் முதன்மை பெறத்தொடங்கின. உருவமற்ற அரூபத்தெய்வங்கள் மக்கள் மனங்களை வென்றெடுத்தன. அவற்றுள் பிறப்பு – இறப்பு சார்ந்த பெண் தெய்வமாக கொத்தி முதன்மை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொத்தித் தெய்வம் பற்றிய தொல்கதை ஒன்று உண்டு. “அன்று நல்ல மழை, நீர் சூழ்ந்து விட்டது. ஒரு பெண்ணின் பேறுநாள் அன்று. வலியால் அவள் துடிக்கிறாள். ஊர் மருத்துவிச்சிக்கு சொல்லிவிட்டாயிற்று. சிறிது நேரத்தில் மருத்துவிச்சி மட்டும் வருகின்றாள். பிரசவ வேதனையால் பெண் துடிக்கின்றாள். வந்த மருத்துவிச்சி உரிய வகையில் மருத்துவம் பார்க்கின்றாள். குழந்தை சுகமாகப் பிரசவிக்கப்படுகின்றது. தாயும் சேயும் நலம். மருத்துவச்சி புறப்பட்டுவிட்டாள். சிறிது நேரத்தின் பின் மருத்துவிச்சியை அழைக்க சென்றவனும் மருத்துவிச்சியும் வருகிறார்கள். நீர் குறுக்கிட்டதால் வரத் தாமதமாகிவிட்டது எனக்கூற, வீட்டில் இருந்தவர்கள் திகைக்கிறார்கள். அப்படியாயின் ‘உங்களைப் போன்றே ஒரு பெண் வந்து மருத்துவம் பார்த்தாளே’ என்கின்றனர். உண்மை விளங்குகின்றது. அது தெய்வ அருள்; அவள் கொத்தித்தெய்வம் என்கிறாள் மருத்துவிச்சி.” 

மக்கள், பிள்ளை பெறுதலின் போது அது சுகநலமாக நடைபெறவும் மருத்துவிச்சிகள் பிள்ளைகளை சுகமாகப் பெறச் செய்யவும் – தொழில் நிமித்தமும் கொத்தியை வழிபட்டனர். கொத்தி கொத்தியாச்சியாகவும், கொத்தியாத்தையாகவும் வழிபடப்பட்டார். ஆத்தா, ஆத்தை என்பன தாயைக் குறிக்கும் சொற்கள் (கோத்தை என்ற வழக்கம் யாழ்ப்பாணத்தில் உண்டு). ஆச்சி, அம்மளாச்சி என அம்மனைக் குறிப்பிடுவதும் உண்டு.

கொற்றவையை தெய்வீக உணர்வுடன் வணங்கும் அதேவேளை கொடூரமான, அச்ச உணர்வினை ஊட்டுகின்ற தெய்வமாகப் பார்ப்பதைப் போலவே கொத்தியும் வணங்கப்பட்டார். பிள்ளைப்பேறு காலத்தில் தாய்க்கும் அக் குடும்பத்திற்கும் பிள்ளைப்பேறைப் பார்க்கும் மருத்துவிச்சிக்குமான நம்பிக்கைத்தெய்வமே கொத்தி. சமூகத்துக்கும் அத்தெய்வத்துக்குமான உறவுநிலை என்பவற்றின் வழி கொற்றவையில் இருந்து தனித்த ஒரு தெய்வமாகவே இவளைப் பார்க்க முடிகின்றது.

கொத்திப் பேய்

கொத்தித் தெய்வம், குறித்த காலகட்டத்தின் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில், கொத்திப்பேயாகவே பார்க்கப்பட்டாள். அது அவளின் கொடூரப் பண்பை முன்னிறுத்தியதன் விளைவாகவிருக்கலாம். பிற்காலத்தில் கொத்திப்பேய் குழந்தைகளைத் துன்புறுத்தும், நோய்க்குள்ளாக்கும் என்ற கருத்துகளும் காணப்பட்டது.

கருத்தரித்த பெண்ணுக்குள் காவலாய், இரத்தப்பெருக்கு ஏற்படாமலும், குறைப்பிரசவம் நிகழாமலும், உடனிருந்து அருள்பவள் கொத்தியாத்தை; குழந்தையை சுகமாகப் பிரசவிக்கச் செய்பவளும் கொத்தியாத்தை; அதே அவள் நலமாகப் பிறந்த குழந்தையின் அழகினில் மயங்கி, குழந்தையின் மேல் ஆசை கொண்டு அதைத் தூக்கிக் கொண்டு ஓடுவதற்குப் பார்ப்பாள். தூக்கிச் செல்ல முடியாத இடத்து, காத்திருந்து காத்திருந்து ‘அலுத்துப் போய்’ (சலிப்பு), ஏமாற்றமுற்று, கோபம் கொண்டு குழந்தையை துன்புறுத்தவோ, நோய்நொடி ஏற்படுத்தவோ முற்படும் போது கொத்திப்பேய் எனப்படுகின்றாள்.

கொத்திப்பேய் விரட்டல்

நவீன வைத்தியசாலைகள் உருவாவதற்கு முன் அவரவர் வீடுகளிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. வீடுகளில் தனியறை அல்லது தனியிடம் ஒதுக்கப்பட்டு அது தூய்மையாகப் பேணப்படும். பிரசவவலி பெண்ணுக்கு ஏற்பட்டவுடன் மருத்துவிச்சியை அப்பெண்ணின் கணவன் அழைத்துவருவான். அவள் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தவுடன் அதனைக் குறியீட்டு ரீதியில் குடும்பத்தார்க்கு அல்லது வீட்டுக்கு வெளியில் நிற்பவர்களுக்குத் தெரிவிப்பாள். அதனை:

“பன்னீர்க் குடமுடைந்து பாலகன் பிறந்திடவே

நன்னீர்பை கொண்டு நயந்து நயந்து எல்லோரும்

பெண்பிள்ளையல்ல இது பேருலகில் எங்களுக்கு

ஆண் பிள்ளை யென்றே அகமகிழ்ந்து கூரை தட்டி

வாயார வாழ்த்தி வரிசையுடன் கோலெறிந்து……”

எனும் நாட்டார் பாடல் (கனகரத்தினம், இரா.வை., 1991) உணர்த்தி நிற்கின்றது. இதில் ஆண்பிள்ளை வேண்டிநிற்கும் மனப்பாங்கும், ஆண்பிள்ளை பிறந்தால் கூரையின் மேல் தட்டுதல், கூரையின் மேல் கோலெறிதல் எனும் செயற்பாடுகளின் மூலம் அறிவிக்கும் சம்பிரதாயமும் கூறப்பட்டுள்ளது. பெண்பிள்ளை பிறத்தல் அம்மியில் தட்டுதல், கூரையின் மீது விளக்குமாறு எறிதல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து ஐந்தாம் நாள் மருத்துவிச்சி தாயை முழுக வைப்பாள். குழந்தையைச் சுத்தப்படுத்துவாள். அவ்வீட்டில் சோறு சமைத்து பலவகைக் கறிகள் ஆக்கப்படும். அவற்றோடு ஒடியல் மா, குரக்கன் மா போன்றவற்றில் பிட்டு அவிக்கப்படும். மச்ச உணவு (மீன்கறி, பொரியல்) விசேடமாகச் செய்யப்படும். வடமராட்சிப் பிரதேசத்தில் மேற்சொன்ன உணவு வகைகளோடு கோழிக்கறி, கருவாடு, வெள்ளைக்கறி எனும் மிளகாய்த்தூளிடாத கத்தரிக்காய், வாழைக் காய்கறிகள், முட்டைப் பொரியல் மற்றும் மீனை வாலுடன் பொரித்த பொரியல், சுறாச்சுண்டல், கோழிக்குஞ்சு விறாத்துக்கறி என்பனவும் ஆக்கப்படுகின்றன (இரகுவரன், பா. 2012). இவ்வுணவு வகைகள் யாவற்றையும் மருத்துவிச்சி அல்லது அவளிடத்துக்கு ஒரு வயதான பெண் சுளகில் (முறம்) இட்டு கொத்திக்குப் படையல் வைப்பார்.

இதேவேளை பிள்ளை பிறந்து முதல் ஐந்து நாளும் தாய்க்கு வழங்கப்பட்ட உணவில் சிறிதை எடுத்து தாய் படுத்திருக்கும் பாயின் கால்மாட்டின் கீழ் வைப்பர். ஆனால் நெடுந்தீவில் இது ‘கொத்தி கிண்டல்’ எனும் தனிச்சடங்காகக் காணப்படுகின்றது. (விஜயரங்கன், நேர்காணல்,2024.06.04) வீட்டுமுற்றத்தின் ஒதுக்குப்புறமாக சிறு கிடங்கு ஒன்று வெட்டப்பட்டு பிரசவித்த தாய்க்கு வழங்கப்படும் உணவில் சிறிதளவை எடுத்து முதலில் கொத்திக்கு என்று இட்ட பின்பே ஒவ்வொரு நாளும் உண்ணக் கொடுக்கும் மரபு காணப்படுகிறது. இந்த உணவையும் ஐந்தாம் நாள் சுளகுப் படையலோடு இணைத்துக் கொள்வர். இது ‘கொத்திப்படையல்’ எனப் பொதுவில் சொல்லப்படுகின்றது. இப்படையலில் சிறப்பாகக் கொத்திக்கு அதிகம் பிடித்த பொருட்களாக வெற்றிலையும் சுருட்டும் படைக்கப்படுகின்றது.

இப்படையலின் பின் தாய், சேயை வீட்டின் தலைவாசலுக்கு இட்டுவந்து புதுப்பாயினாலோ புதுச்சேலையாலோ புதுச்சுளகாலோ வசதிக்கேற்ப மூடிவிடுவர். அதன்பின் தென்னம்பாளையைக் கீறிக் கட்டி, தீப்பந்தம் (சூள்) தயாரித்து, அதனைக் கொளுத்தி மறைப்புள் மறைத்துள்ள தாயையும் சேயையும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தபின் பிரசவம் நிகழ்ந்த இடத்தில் ஒளியூட்டுவர். ‘தாயும் சேயும் சுகம் சுகம்’ என்று பாடியோ கூறியோ வாழ்த்துவர். மருத்துவிச்சி, பின்னர் வீட்டின் மூலை முடக்கெல்லாம்:

“ஓடாதே கொத்தி ஒளியாதே கொத்தி

பாங்காதே கொத்தி பதுங்காதே கொத்தி

கொத்தி புறப்படு கொத்தி புறப்படு”

என்ற பாடலையோ

“செத்தைக்க பத்தைக்க நில்லாத

எங்கட பிள்ளைய எங்கும் எடுக்காத

கொத்தியாத்தே நில்லாம வோடு

ஊர விட்டோடு கொத்தியாத்தே”

என்ற பாடலைப் பாடியபடி படையலையும், பிரசவத்தின் போது பயன்படுத்திய பாய், தலையணை, தாய் குழந்தை பயன்படுத்திய துணிமணிகள் உள்ளிட்டவற்றோடு கொத்திப் பேயையும் (ஐதீகப்படி) அழைத்துக் கொண்டு ஆளரவமில்லா இடத்துக்கு மருத்துவிச்சி போவார். அங்கு உள்ள பால்மரங்களில் அவற்றை வைப்பார். குறிப்பாக ஆலமரத்தில் கொத்தி உறைவதாக நம்புவதால் அம் மரத்தடியையே தேர்வு செய்வர். கொண்டு சென்ற பொருட்கள் யாவற்றையும் அங்கே ‘கழிப்பு’ கழித்துவிட்டு, நெருப்பினையும் (சூள்) அணைத்துவிட்டு, காறி உமிழ் நீரைத் துப்பியபின் மருத்துவிச்சி திரும்புவார். கொண்டு சென்ற நெருப்பை அணைக்காவிட்டால் கொத்தி திரும்பவும் அவ்வீட்டுக்கு வந்து விடுவாள் என்பது ஐதீகம் (அனந்தராஜ்,2022). இதன்பின் மருத்துவிச்சி தன்வீடு திரும்புவார். ஆனால் சில இடங்களில் அவ்வாறில்லை.

சடங்கை முடித்துவிட்டு வரும் மருத்துவிச்சி கிணற்றடியில் அல்லது வாசலில் வைக்கப்பட்டுள்ள நீரில் கைகால், முகம் அலம்பிக் காறித்துப்பி வீட்டினுள் வரவேண்டும்.  அதன் பின்பு மருத்துவிச்சி அவ்வீட்டுக் கூரையினைத் தட்டி ‘தாயும் பிள்ளையும் சுகமா?’ என மூன்று முறை வினாவுவார். வீட்டில் உள்ளவர்கள் ‘தாயும் பிள்ளையும் சுகம் சுகம்’ என்று விடையளிப்பர். அதன்பின் மருத்துவிச்சி நான்கு பக்கமும் மும்மூன்று முறை காறித் துப்புவார். மறைப்பை நீக்கி தாயையும் பிள்ளையையும் வெளியே வரச் சொல்லி வாழ்த்திப் பாடுவார். இத்தோடு மருத்துவிச்சியின் பணி முடிவுற்று, அவருக்குத் தக்க சன்மானம் வழங்கி மகிழ்வுடன் அனுப்பி வைப்பர். அதேவேளை நெடுந்தீவில் பிள்ளை பிறந்து 15 ஆம் நாள் கொத்திக்குக் காவல் செய்து காப்புக்கட்டும் வழக்கம் இருந்துள்ளது. இது ‘பௌமானம் காட்டல்’ எனப்படுகின்றது.

கொத்தியை விரட்டும் அல்லது கழித்தல் பாடல்கள் சிலசில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. நெடுந்தீவில்:

“வீட்டைக் காராதே கொத்தி

பாலைக் காராதே கொத்தி

படுக்கையைக் காராதே கொத்தி”

எனத்தொடங்கி படுக்கையில் தலைமாடு, கால்மாடு, விளக்கு, அம்மி, அடுப்படி, சோத்துப்பானை, காயச் சட்டி, மஞ்சள், உள்ளி, இஞ்சி, எண்ணெய் என்பவற்றைக் காராதே எனக்கூறிக் கூறி இறுதியில்,

“பிள்ளையைக் காராதே கொத்தி

கொத்தி புறப்படு கொத்தி புறப்படு”

எனப் பாடி முடிப்பர். யாழ்ப்பாணத்தில்:

“செத்தேக்க நிற்கிறேன் என்று சொல்லாத கொத்தியாத்தை

பத்தேக்க நிக்கிறேன் என்று சொல்லாத கொத்தியாத்தை”

எனச் சாக்குப்போக்குச் சொல்லிப் பாடி வீட்டில், வீட்டுச் சூழலில் தங்கிநிற்கும் கொத்தியாத்தையை விரட்டுவர். கொத்திப் படையலைப் அப்படியே கழிப்பிடத்தில் கொண்டு சென்று கொட்டிவிடும் அல்லது போட்டுவிடும் வழக்கமே காணப்படுகிறது. ஆயினும் சில இடங்களில் படையலில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றிலும் சிறிது சிறிது கிள்ளியெடுத்து மூடுபெட்டியில் கொண்டு சென்று ஆலில் வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. சடங்கு யாவும் முடிந்த பின் படையலுக்கு நீர் தெளித்துவிட்டு அதனை மூத்தவர்கள் வயதானவர்கள் உண்ணும் வழக்கமும் உண்டு.

கிழக்கிலங்கையில் கொத்தி

வட இலங்கையைப் போலவே பிரசவ காலத்தில் மருத்துவிச்சி அழைக்கப்படுவாள். அதேபோன்று ஊர்க் குடிமகனான சலவைத் தொழிலாளிக்குப் பிரசவம் அறிவிக்கப்படும். அவனது வீட்டுப்பெண் மாத்துச்சேலை (மாற்றுச்சேலை) கொண்டு வருவார். இது அவரது உரிமையாகக் கருதப்படுகிறது. இன்றும் இந்த வழக்கம் மட்டக்களப்பில் உள்ளது. (மேகலா,சி.,2022) அக்கரைப்பற்று, ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் முன்பு கொத்தி வழிபாடு காணப்பட்டதாகவும் இப்போது வழக்கொழிந்து விட்டதாகவும் (நேர்காணல், அபிசனா, களுவாஞ்சிக்குடி) அறிய முடிகின்றது.

ஆனால் கொத்தியாத்தியை ஒத்த தெய்வமாக ‘குத்துக்கிழவி’ காணப்படுகிறார். அம்மன் ஆலயச் சடங்குகளில் கலையாடுகின்ற தேவாதியானவர் குத்துக்கிழவியாக உருமாறி அலங்கரித்து வந்து, சேலை மறைப்பில் மருந்தரைத்து, வந்திருக்கும் பக்தருக்கு வழங்குவார். அம் மருந்து தீரா நோயையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி சனாதன முனிவர்களுக்கு அவர்கள் கேட்ட வரத்திற்கமைய கொடுத்துவிட்டு, பின் கிழவி ரூபத்தில் குடிசையொன்றில் காத்திருந்து, அவ்வழி வந்த இம் முனிவருக்கு நீரைக் கொடுத்துவிட்டு சிவனை மீட்டதாகவும், அவரே குத்துக்கிழவி ஆனதாகவும் கூறப்படுகிறது. பிரசவம் பார்த்துவிட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடும் என்ற கொத்தியின் கதையும் இதற்குச் சமமாக உள்ளது.

இதேவேளை அக்கரைப்பற்றில் நூறு வருடங்களுக்கு முன், ‘குத்துக்கரையாக்கன்’ என்ற பேய் குழந்தை பிறந்து பன்னிரு நாட்களுக்குள் தூக்கிச் சென்று விடும் என்றும் அல்லது நோய் நொடியைக் கொடுக்கும் என்றும் கருதி ‘கடப்படியில்’ (தாய்பிள்ளை இருக்கும் அறை வாசல்) வேப்பிலை, இரும்பாலான பொருட்களைக் கட்டிவிடுவர். பூசாரியிடம் நீரோதிப் பெற்று காவலுக்கு வைப்பர். தற்போது இப்பேயின் பெயர் வழக்கற்றுப் போய், ‘காத்தணவு’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது.  

ஈழத்தில் கொத்தி வழிபாட்டிடங்கள்

இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும்  தீவுப்பகுதிகளில் கொத்தி வழிபாடு காணப்பட்டுள்ளது. ஏலவே கூறியது போல கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்று, ஆரையம்பதி போன்ற இடங்களில் முன்பு கொத்தி வழிபாடு காணப்பட்டுள்ளது. மலையகம், திருகோணமலை போன்ற இடங்களில் கொத்தி வழிபாடு இருந்ததா என்பதை அறிய முடியவில்லை. கொத்தித் தெய்வத்துக்கோ அன்றி பேய்க்கோ தனி உருவம் எதுவும் இல்லை. அது பெண்ணாகவே கூறப்படுகிறது. அக்கறைப்பற்றில் ‘குத்துக்கரையாக்கன்’ எனும் தெய்வப்பெயர் ஆண் பெயராகவும், பிற்காலத்தில் வழங்கும் ‘காத்தணவு’ எனும் சொல் (நேர்காணல் – சந்தோசனா, அக்கரைப்பற்று) பொதுப்பெயராகவும் உள்ளது.

கொத்தி ‘பால்’ மரங்களில் உறைகின்றாள் என்பதே ஐதீகம். குறிப்பாக ஆலமரங்களில் அவள் விரும்பி உறைவதாகக் கூறப்படுகிறது. கொத்தி உறையும் ‘ஆல்’ கொத்தியால் எனப்படுகிறது. வடமராட்சியில் கொத்தியாலடி என ஒரு இடம் உண்டு. சுன்னாகத்தில் ‘றொட்டியாலடி’ எனுமிடமுண்டு. அதன் அர்த்தத்தை நேர்காணலில் கேட்டபோது யாவரும் தெரியாது என்றே கூறினர். கொத்தியாலடி என்பதே இவ்வாறு திரிபடைந்திருக்கலாம். கொத்தி சென்ற வீதிகள், இருந்த இடங்கள் என்பன இன்றும் கொத்தியொழுங்கை, கொத்தித்தெரு எனப்படுகின்றன. பொதுவாக வீட்டில் இருண்ட மூலை, ஆட்கள் அதிகம் புழங்காத இடம் கொத்தி மூலை எனப்படுகிறது. அதேபோல் ஆளரவமற்ற அமைதியான இடங்கள் ஊர் வழக்கில் கொத்திமூலை எனப்படுகின்றது. அது பய உணர்வின் அடிப்படையில் அமைந்ததாகும்.

கொத்திக்கான வழிபாடு பொதுவில் பிள்ளைப்பேறு நடந்த வீடுகளிலேயே நடைபெறுகின்றது. ஆயினும் வடமராட்சி, கரவெட்டிக்கு வடக்கே ஒரு கொத்தியார் கோயிலும், நெடுந்தீவில் குருக்கள் மடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் மூன்றாம் வட்டாரத்தில் ஒரு கொத்தியார் கோயிலும் காணப்படுகின்றன. இதில் கரவெட்டிக் கோயிலை எம்மால் அடையாளப்படுத்த முடியவில்லை.

வழிபாட்டு முறைகள்

பிரசவ வீடுகளில் குழந்தை பிறந்து ஐந்தாம்நாள்; சோறு, பிட்டு என்பவற்றோடு மரக்கறி, மச்சம், மாமிசம் என்பன படைத்து வழிபடப்பட்டுப் பின் கொத்தியைக் கழித்து ஆளரவமற்ற பொது இடத்தில், ஆலமரத்தில் விட்டுவருதல் எனும் சடங்கு நடைபெறும். இச்சடங்கு பரியெரித்தல் அல்லது மருக்கைச்சடங்கு எனச் சுட்டப்படுகிறது.

நெடுந்தீவு கொத்தியம்மன் கோயிலில் பூசாரிகளாக உள்ளவர்கள் ‘உடுக்கர் பரம்பரை’ எனக் கூறப்படுகின்றனர். இவ்வாலயக் கொத்தியம்மன் சூலவடிவிலேயே வழிபடப்படுகிறாள். இங்கு சித்திரா பௌர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் சடங்குகளில் பூரண கும்பம் வைத்தல், நிறைநாழி வைத்தல், சரக்குப் பொருட்கள் (பத்தியத்துக்கானது) வைத்துப் பாடல் பாடுதல் ஆகியன இடம்பெறும். பின் ஆலய பரிபாலனத்தவர்களால் நாயகப் பானையும் மற்றவர்களால் தனித்தனிப் பானைகளும் வைத்து பொங்கல் பொங்கப்படும். அன்று பந்தலமைத்து சித்திரபுத்திரனார் கதை, அபிராமி கதை போன்றன படிக்கப்படுகின்றன. தயிரடியன் கூட்டத்தினர் மாதா மாதம் மாறிமாறி விளக்கேற்றுகின்றனர். இங்கு ‘கல் போட்டு’ வணங்கும் முறை காணப்படுகின்றது. இது சாத்தானார் வழிபாட்டை ஒத்துள்ளது. மேலும் பிறந்த குழந்தையை முற்பத்தோராம் நாள் கோயிலில் கிடத்தி, பொங்கல் பொங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் காணப்படுகின்றது.

சமகாலப் பயில்வு

இன்று வீடுகளில் பிரசவங்கள் நடைபெறுவதில்லை. அதனால் ஊர் மருத்துவிச்சிகளும் இல்லாது போயினர். கொத்தி வழிபாடும் வழக்கிழந்து காணப்படுகின்றது. பேய்கள் பற்றிய நம்பிக்கையும் வலுவற்று வருகிறது. மரங்களின் கீழ் மயங்குதல், பயமுறுத்தும் ஓலம் முதலியனவற்றுக்கு அறிவியல் விளக்கங்கள் கூறப்படுகின்றன.

முன்பே கொத்திக்கு கோயில்கள் இல்லை. நெடுந்தீவுக் கோயிலில் சித்திராப் பௌர்ணமி பூசைக்கு சமஸ்கிருத மந்திரம் சொல்லும் குருக்களை அழைக்கும் வழக்கம் உருவாகிவிட்டது. ஆயினும் கொத்தி, நாட்டார் நம்பிக்கைகளுக்கு உரிய தெய்வமாகவும் பேயாகவுமே கருதப்படுகின்றாள். மேன்னிலையாக்கம் பெறவில்லை; மாறாக செல்வாக்கு இழந்து வருகின்றாள். அவளின் பெயரிலான சொற்கள், வழக்காறுகள் தமிழில், தமிழ்ப் பண்பாட்டில் வழக்கொழிந்து வருகின்றன.

நிறைவுரை

பிறப்பு, இறப்புச் சார்ந்த மருத்துவ வசதிகள் குறைந்த காலத்தில் கடவுளை மட்டுமே நம்பிய தமிழ்ச் சமூகம் இருந்தது. அது கொத்தியை ஆத்தையாக வணங்கியது. பேயாக விரட்டியது; கழிப்புக் கழித்தது. இதில் உள்ள சமூகச் சிக்கலை நாம் முடிச்சவிழ்க்கலாம். பிரசவ காலத்தில் தாயாகக் கொண்டாடி, பின்பு பேயாக்கி விரட்டும் சடங்கு கொத்திக்கு நடைபெற்றது. அதேபோல வீடு குடிபுகுதல் போன்ற பிரவேசச் சடங்கில் வீட்டு வேலைகள் முடிந்து குடி புகுவதற்கு முதல்நாள், தச்சுப்பொங்கல் பொங்கி ‘தச்சன் காளி விரட்டல்’ நடைபெறும். இரு சடங்கிலும் உரியவர் படையல் படைப்பார். அவரே கொண்டு செல்வார். தகுந்த சன்மானம் வழங்கப்படும். அதன் பின் அவர்கள் வீட்டினுள் வருவதில்லை; வரமுடியாது. பிரசவத்தோடு தொடர்புறும் மருத்துவிச்சியும், மாத்துச்சேலை கொண்டுவரும் குடிமையும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். தீட்டுக்காலத்தில் தேவையின் பொருட்டு வீட்டினுள் விடப்பட்ட இவர்கள், தேவை நிறைவேற்றப்பட்ட பின் கொத்திப்பேயோடு சேர்ந்து வீட்டினுள் வராது தடுக்கப்பட்ட சமூக வரலாற்றின் ஆவணமாக கொத்தியாத்தை திகழ்கின்றாள். கொத்தி வழிபாட்டின் வீழ்ச்சியை சாதியத்தின் வீழ்ச்சியாகவும் கருதலாம். மனித வாழ்வியலில் நம்பிக்கைகள், வழக்காறுகள் உருவாவதும், தேய்வடைவதும் தவிர்க்க முடியாததுதான்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5083 பார்வைகள்

About the Author

தி. செல்வமனோகரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (2)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)