ஆங்கில மூலம் : லக்ஸ்மன் மாறசிங்க
அதிகாரப் பகிர்வுக்கான கொள்கையைத் தீர்மானித்தல், அதிகாரத்தைப் பெறும் அலகுகளைத் தீர்மானித்தல் என்ற முதலிரு படிநிலைகள் பற்றி இதுவரை எடுத்துக் கூறினோம். பெல்ஜியம், கனடா, அவுஸ்திரேலியா, நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளின் அனுபவங்களை உதாரணம் காட்டி இவ்விரு படிநிலைகளிலும் அதிகாரத்தைப் பகிர்வு செய்யும் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க எடுத்துக் கூறினார். இதற்கு அடுத்ததாக நாம் அதிகாரத்தை ஏற்பவர்களின் தேவைகளின் அடிப்படையிலும், தகைமைகளின் அடிப்படையிலும், அதிகாரத்தை ஏற்பவர்களை (Recipient) தெரிவு செய்தல் எனும் விடயத்தை நோக்குவோம்.
அதிகாரத்தை ஏற்பவர்களைத் தெரிவு செய்தல்
அதிகாரத்தை ஏற்பவர்கள் (Recipients) என்ற சொல் ‘அரசுகள்’ (States), மாநிலங்கள் (Provinces) என்னும் அலகுகளைக் குறிப்பிடும் சொல்லாகும். அத்தோடு இச்சொல் அந்நிறுவன அமைப்புகளிற்குக் கீழ் உள்ளடங்கும் மக்கள் சமூகங்களையும் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். அதிகாரப் பகிர்வு செயன்முறை மூலம் அதிகாரத்தை ஏற்பனவான அலகுகள், பகிரப்பட்ட அதிகாரங்களை (Devolved Powers) மக்களிற்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, அரச இயந்திரத்தைப் பிராந்திய மட்டத்தில் கொண்டியக்கும் இயந்திரங்கள் போன்று செயற்படுவனவாய் அமைகின்றன. இவ் அலகுகளிற்கு பகிரப்பட்ட அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்குரிய அரசியல் திறனும் (Political Ability), விருப்பமும் (Willingness) இருத்தல் வேண்டும். என்ன நோக்கத்திற்காக அதிகாரம் பகிரப்படுகிறதோ அந்நோக்கத்தை அடைவதற்கான இலக்குகளை எய்துவதற்குரிய தகைமை உடையனவாக அலகுகள் இருத்தல் வேண்டும். குறித்த இலக்குகளை அடைவதற்கான அதிகாரங்கள் வழங்கப்படாதவிடத்து அல்லது போதிய அளவினதாக இல்லாதவிடத்து அதிகாரப் பகிர்வின் நோக்கத்தை நிறைவேற்றுதல் இயலாததாகிவிடும்.
தகைமையுடைய அலகுகளைத் தேர்வு செய்வதில் தெரிவு செய்யப்படும் அலகுகளில் உள்ளடக்கப்படும் இனத்துவக் குழுமங்கள் எவை, அவற்றின் இனத்துவ அடிப்படையிலான கட்டமைப்பு (Ethnic Composition), உருவாக்கப்படும் பிரதேசத்தின் பொருளாதாரம், அப்பொருளாதாரம் வளர்ச்சி நோக்கி பயணிக்கும் ஆற்றல் உடையதாக இருத்தல் (Economic Feasibility) ஆகியன கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய காரணிகளாகும். தேர்வு செய்யப்பட்ட அலகின் எல்லைக்குள் வாழும் மக்களிடையே சமூக ஒருங்கிணைவுப் பிணைப்பு (Social Cohesion) உள்ளதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட அலகுகள் சமூக, பொருளாதார, அரசியல் இலக்குகளை (Social, Economic and Political Goals) அடையக் கூடியனவாக இருத்தல் வேண்டும். மேற்கூறியன கவனிப்பைப் பெறும்போதுதான், அதிகாரப் பகிர்வு வெற்றி பெறுதல் முடியும். முற்பகுதியில் எடுத்துக் கூறப்பட்ட கொள்கை வகுத்தல், அலகுகளின் தெரிவுக்கான அளவு கோல்களை வகுத்தல் ஆகியவற்றுடன், மூன்றாவது படிநிலையான அதிகாரத்தை ஏற்பவர்களைத் தெரிவு செய்தல் என்னும் விடயம் தொடர்புபட்டதாக இருப்பதையும் காணலாம்.
கனடா 1867 ஆம் ஆண்டில் பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம் 1867 (B.N.A Act) மூலம் சமஷ்டியாக உருவாக்கம் பெற்றது என்பதை மேலே எடுத்துக் கூறினோம். ஆனால் கனடாவின் மாகாணங்களை ஒன்டாரியோ, குயுபெக் எனப் பிரித்ததன் வரலாறு 1627 இல் ஆரம்பித்துவிட்டது. 1759, 1763, 1774 ஆகிய ஆண்டுகளின் சட்டங்கள் மூலம் இப்பிரிப்பு உறுதி செய்யப்பட்டது என்னும் வரலாற்றை லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் 23-25 வரையான 3 பக்கங்களில் விரிவாக எடுத்துரைக்கிறார். இவ்வரலாறு கனடாவில் ஒன்டாரியோ, குயுபெக் என்னும் இரு மாகாண அலகுகளைப் பிரிக்க வேண்டியதற்கான தேவையை விளக்குவதாக உள்ளது. இந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே இன்று கனடா பின்வரும் பத்து மாகாண அரசுகளைக் கொண்ட சமஷ்டியாகப் பரிணாமம் பெற்றுள்ளது.
- அல்பேர்ட்டா
- பிரிட்டிஷ்கொலம்பியா
- மனிட்டோபா
- நியுபிறவுண்விஸ்க்
- நியுபவுண்லாந்தும் லபரடோரும்
- நோவா ஸ்கோஷியா
- பிரின்ஸ் எட்வார்ட் ஐலன்ட்
- ஒன்டாரியோ
- குயுபெக்
- சஸ்கெற்சுவன்
இவற்றை விட 1. வடமேற்குப் பிரதேசங்கள் (North West Territories) 2. நுனாவுட் (Nunavut), 3.யுகொன் (Ukon) ஆகிய பிரதேசங்களும் (Territories) அதிகாரப் பகிர்வுக்குரிய அலகுகளாக உருவாக்கம் பெற்றுள்ளன. குயுபெக் பகுதி பிரான்சில் இருந்து குடியேறியவர்களால் ‘புதிய பிரான்ஸ்’ (New France) என்னும் பெயருடன் தீவிர கத்தோலிக்க மத விசுவாசிகளின் குடியேற்றமாக அமைக்கப்பட்டது. பிரித்தானியா 1759 இல் இராணுவ நடவடிக்கை மூலம் குயுபெக் பகுதியைக் கைப்பற்றியது. பின்னர் 1763 இல் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை (Peace Treaty) மூலம் பிரித்தானியாவின் ஆட்சிக்குரிய பகுதியாகியது. பிரித்தானியர்கள் பிரஞ்சுக் கனடியர்களை கொடிய அடக்குமுறைகளின் மூலம் அடக்கி ஆட்சி செய்தனர் என்பதை வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். ஒன்டாரியோவின் மக்கள் ‘வெள்ளையர், ஆங்கிலோசக்சன், புரட்டஸ்தாந்தியர்’ (White, Anglo Saxon, Protestants) என்பதும் பிரஞ்சு கத்தோலிக்கர்களிடமிருந்து சமூக, சமய, பண்பாட்டு வேறுபாடு உடையவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
‘வெள்ளை ஆங்கிலோ சக்சன் புரட்டஸ்டன்ஸ்’ என்ற தொடர் ‘WASP’ என்ற சுருக்க எழுத்துகளால் அழைக்கப்படுவது. இச்சுருக்கப் பெயரில் அமைந்துள்ள இகழ்ச்சியான சிலேடை (WASP – குளவி) கவனிப்புக்குரியது. பிரித்தானிய நிர்வாகத்தில் வெள்ளை ஆங்கிலோ சக்சன் புரட்டஸ்டன்ஸ் பிரிவினர் அதிகாரம் பெற்றிருந்தனர். கியுபெக்கியர்களின் வாழ்வு தொடர்ந்து துன்பம் நிறைந்ததாகவே இருந்து வந்தது. இப்பின்னணியில் நோக்கும்போது குயுபெக்கின் அரசியல் வாழ்வில் அண்மைய ஆண்டுகளில் பிரிவினைவாதத்தின் இதயவலிகள் வெளிப்பட்டதில் ஆச்சரியம் இல்லை (It is therefore little wonder that pangs of separatism has pervaded the political life of Quebec in recent years) என லக்ஸ்மன் மாறசிங்க குறிப்பிடுகிறார் (பக். 25).
இக்கட்டுரையின் தொடக்கத்தில் அழுத்திக் கூறப்பட்ட பின்வரும் மூன்று விடயங்கள் முக்கியமானவை. மாறசிங்க அவர்களின் வார்த்தைகளில் அவையாவன :
“First, the structuring of policies for devolution. Second, the identification of the need for devolution. Third, the selection of suitable territorial unit for devolution“ இதன் பொருள்: முதலாவது, அதிகாரப் பகிர்வு பற்றிய கொள்கையை வகுத்துக் கொள்ளுதல். இரண்டாவது, அதிகாரப் பகிர்வுக்கான தேவையை அடையாளம் காணுதல். மூன்றாவது, அதிகாரத்தை ஏற்பதற்குப் பொருத்தமான அலகுகளைத் தேர்வு செய்தல். இம் மூன்று விடயங்களும் முக்கியமானவை.” இவ்வாறு கூறிய பின்னர் கனடாவின் சமஷ்டிமுறை இம்மூன்று அம்சங்களிலும் அதிகாரப் பகிர்வுச் செயல்முறைக்கான மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறது என லக்ஸ்மன் மாறசிங்க குறிப்பிடுகிறார். அவர் கூற்று வருமாறு:
“The Canadian federalism affords, perhaps the best study of power devolution from all three aspects” (பக். 25)
எவ்வதிகாரங்களைப் பகிரவேண்டும்?
நான்காவதான முக்கியமான விடயம் எவ்வதிகாரங்களை அலகுகளிற்குப் பகிர வேண்டும் என்பதாகும். மத்தியில் வைத்திருக்க வேண்டிய அதிகாரங்கள் எவை? மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய அதிகாரங்கள் எவை? என்பன தீர்மானிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளாகும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் இவ்வினாக்கள் அதிகாரப் பகிர்வின் உள்ளடக்கம் (Substance of Devolution) சார்ந்தவையாகும். அதிகாரப் பகிர்வின் உள்ளடக்கம் பற்றிய தீர்மானம் அரசியல் கொள்கை (Political Policy) சார்ந்த விடயம். அத்தோடு சமுதாயத்தின் அவசியத் தேவை (Social Necessity) சார்ந்து எழுவதுமாகும். அரசு எவ்வெவ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முடிவு செய்கிறது என்பது கொள்கை சார்ந்த முடிவுகளாகும். பகிரப்படும் அதிகாரங்கள் எவை, அவற்றின் இயல்புகள் எவை என்பதை பயன்பாட்டுக் கொள்கை (Utilitarianism) மூலம் விளக்கலாம் என லக்ஸ்மன் மாறசிங்க குறிப்பிடுகிறார். இயற்றப்படும் சட்டங்கள் சமூகத்தில் வாழும் மக்களில் ஆகக்கூடிய எண்ணிக்கையினரின் அதியுச்ச அளவான நன்மைகளைத் தருவனவாக இருக்க வேண்டும்.
அதிகாரப்பகிர்வு வெற்றியடைய வேண்டுமானால் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட அலகு தனது இலக்குகளை அடையக்கூடிய அளவிற்கு பொருளாதார அல்லது நிதி இயலுமையை உடையதாக இருத்தல் வேண்டும். அலகுகளிற்கு கொடுக்கப்படும் அரசியல் யாப்புச் சட்ட அதிகாரங்களைப் பிரயோகித்து வரிகளைத் தனது பகுதி மக்களிடமிருந்து அறவிடுவதன் மூலம் சுயமாக நிதிகளைத் திரட்டும் (Self Generation of Funds) அதிகாரம் உடையதாக இருத்தல் வேண்டும். மத்தியில் இருந்து பெறப்படும் சமப்படுத்தல் நிதி (Equalization Fund) அலகுகளின் நிதிவளத்தைப் பெருக்க உதவவேண்டும். நிதி ஆதாரம் கிடைக்காவிட்டால் அதிகாரப் பகிர்வு பயனற்றதாகிவிடும்.
அடுத்துவரும் பகுதியில் அதிகாரப் பகிர்வுக்கான வெவ்வேறு அரசியல் யாப்பு மாதிரிகள் (Constitutional Paradigms) ஆராயப்படவுள்ளன.
அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் யாப்பு மாதிரிகள்
அரசியலமைப்புகளை வடிவமைப்பதில் நடைமுறையில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், பல்வகையான அதிகாரப் பகிர்வு முறைகளை வடிவமைத்துச் செயற்படுத்தினர். இதன்மூலம் உருவான அதிகாரப் பகிர்வு மாதிரிகளுக்கு அரசியல் யாப்புச் சட்டவாளர்கள் (Constitutional Lawyers) பல சட்ட ‘லேபல்களை’ (Labels) வழங்கினர். இவ்வாறான ‘லேபல்களில்’ முக்கியமானவையாக சிலவற்றைச் சட்டவியல் நூல்கள் குறிப்பிடுகின்றன.
- ‘A unitary state with devolved powers’ – அதிகாரப் பகிர்வுடைய ஒற்றையாட்சி அரசு
- ‘Confederation ’ – கொன்பெடரேஷன்
- ‘Federalism’ – சமஷ்டி முறை
என்பன முக்கியமான ‘லேபல்களாகும்’. இவை அதிகாரப் பகிர்வுக்கான முக்கிய மாதிரிகளைக் குறித்து நிற்கின்றன. ஒற்றையாட்சி மாதிரிகளிலும், முடியாட்சிமுறை ஒற்றையாட்சி முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு, குடியாட்சி (Republic) ஒற்றையாட்சி முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு என இரு பிரிவுகள் உள்ளன. சமஷ்டி முறையிலும், மத்தியில் அதிகாரங்களைக் கூடியளவு குவிக்கும் இயல்புடைய அதிகாரப் பகிர்வு (Centripetal Federalism), மாநில அரசுகளிற்கு கூடியளவு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் இயல்புடைய அதிகாரப் பகிர்வு (Centrifugal Federalism) என இருவகைகள் உள்ளன. 1948 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட முறை இருந்தது. காலப்போக்கில் இந்தியாவின் மாநில அரசுகள் கூடிய அதிகாரம் உடையனவாய் மாறும்போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் இருந்தே சமஷ்டியின் அலகுகளான அரசுகளிற்கு கூடிய அதிகாரங்களை கொண்டதாக இருந்து வந்துள்ளது.
ஒற்றையாட்சி அரசு, சமஷ்டி அரசு என்ற மாதிரிகள் பற்றி மிகுந்த காரசாரமான விவாதங்கள் அரசியல் சட்ட அறிஞர்களிடம் நடைபெற்றன. ஒற்றையாட்சியும், சமஷ்டியும் பின்வரும் அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டு பிரித்தறியப்படுகின்றன.
1. ஒற்றையாட்சி முறையில் அதிகாரப் பகிர்வை ஏற்கும் அலகுகள் (Recipients) மத்திய அரசுக்குக் கீழ்ப்பட்டனவாகும் (Subordinate to the Centre).
2. சமஷ்டி ஆட்சி முறையில் சமஷ்டியின் உறுப்பு அலகுகள் மத்திய அரசுக்கு சமதையானவையாகும். அத்தோடு ஏனைய உறுப்பு அலகுகளிற்கும் சமதையானவையாகும். மத்தியும் ஏனைய உறுப்புகளும் சமத்துவமுடையனவாய் இருத்தலை ‘Coordinates’ என்ற சொல்லால் குறிப்பிடுவர்.
இலங்கையின் அரசியல் யாப்பின் உறுப்புரை 154Q, 154L, 154M என்பவற்றின்படி, மாகாண சபைகள் மத்திய அரசுக்குக் கீழ்ப்பட்டன என்பது சட்ட அறிஞர்களாலும், நீதிமன்றாலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சமஷ்டிகள் பல வகையினவாக உள்ளன. கனடாவின் சமஷ்டியை எடுத்துக் கொண்டால் ஒட்டாவில் உள்ள மத்திய அரசாங்கம் கூடியளவு அதிகாரங்களைக் கொண்டுள்ளதைக் காணலாம். இவ்வாறு மத்தியை நோக்கி அதிகாரங்களை நகர்த்தும் தன்மையுடைய சமஷ்டிகளை ஆங்கிலத்தில் ‘Centripetal Federations’ என அழைப்பர். சமஷ்டியின் அதிகாரப் பகிர்வுக்கான முறைகளில் கனடாவின் முறையும் ஒன்றாகும்.
அவுஸ்திரேலியா, கனடாவிற்கு மாறானது. அவுஸ்திரேலியாவில் பல அரசுகள் உள்ளன. அங்கு மத்தியில் உள்ள அதிகாரங்கள் உறுப்புகளான அரசுகளை நோக்கி நகரும் ‘Centrifugal Federation’ என்னும் இயல்பினை அவதானிக்கலாம். அவுஸ்திரேலிய அரசியல் யாப்பின் உறுப்புரைகள் 51, 52 என்பன சட்ட ஆக்க அதிகாரங்களை அவுஸ்திரேலியாவின் அரசுகளுக்கு கொடுத்துள்ளன. இதனால் மத்தியில் உள்ள கன்பரா அரசாங்கத்தை விட அரசுகளின் அரசாங்கங்கள் விரிந்த சட்டவாக்க அதிகாரங்களைக் கொண்டனவாய் உள்ளன. கனடாவையும் அவுஸ்திரேலியாவையும் ஒப்பீடு செய்து இக்கட்டுரையின் முற்பகுதியில் கூறியுள்ளோம்.
சமஷ்டிகளின் அரசியல் கட்டமைப்புகள் பல்வேறு வடிவங்களைப் பெறுவதற்கு இந்தியா சிறந்த உதாரணமாக விளங்குகிறது. சட்ட அறிஞர்கள் சிலர் இந்தியாவை ஒற்றையாட்சி முறையின் கீழ் சமஷ்டிக் கூறுகள் சிலவற்றை உள்ளீர்த்துக் கொண்ட அரசுமுறை என்று வருணித்தனர். வேறுசிலர் அதனைச் சமஷ்டி முறைக்குள் ஒற்றையாட்சிக் கூறுகளை உள்ளீர்த்துக் கொண்ட அரசுமுறை என வருணித்தனர். இவ்விதமாக இரு வகையில் இந்திய அரசியல் யாப்பை வருணிக்கும் நிலை, இந்திய சமஷ்டி, நாட்டின் மாற்றமுறும் நிலைகளால் எழும் தேவைகளுக்கு (Changing Needs) தகவமைத்துக் கொள்ளும் (Adaptability) தன்மையுடையதாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது எனலாம்.
சமஷ்டி அரசியல் முறை தொடர்பான இன்னுமொரு கட்டமைப்பு மத்திய அரசு, மாநில அரசுகள் என்பனவற்றை ஒன்று கலக்கும் ‘கலப்புமுறை’ (Hybrid Form) எனக் கூறப்படுகிறது. கலப்புமுறையில் சட்ட ஆக்கச் செயல்முறையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயற்படுகின்றன எனவும், அவை நான்கு விதமான சட்டங்களை இவ்வாறு இணைவதன் மூலம் இயற்றுகின்றன எனவும் லக்ஸ்மன் மாறசிங்க கூறுகிறார்.
- சட்டங்களை ஆக்குதலும், அவற்றை செயற்படுத்துவதும் (Enforce the Laws) என்ற இரண்டிலும், மத்திய அரசாங்கத்திற்கு முழுமையான அதிகாரங்கள் உடைய விடயங்கள் அரசியல் யாப்பில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
- சட்டங்களை ஆக்குவதற்குரிய அதிகாரம் முழுமையாக மத்திய அரசிடம் இருக்கும்; அவற்றை செயற்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் முழுமையாக இருக்கும். இத்தகைய விடயங்கள் அரசியல் யாப்பில் பட்டியல்படுத்தப்பட்டிருக்கும்.
- சில விடயங்களில் சட்டம் இயற்றுதல் (Enacting Laws), அவற்றை செயற்படுத்துதல் (Enforcing Laws) இரண்டும் முழுமையாக மாநில அரசுகளிடம் இருக்கும். இத்தகைய விடயங்களும் அரசியல் யாப்பில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
- சில விடயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் முழுமையாக (Exclusively) மாநில அரசுகளிடம் இருக்கும். ஆனால் இச்சட்டங்களைச் செயற்படுத்தும் அதிகாரம் முழுமையாக மத்திய அரசிடம் இருக்கும். இவ்விடயங்களும் அரசியல் யாப்பில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
இவ்வாறான ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட அரசியல் யாப்பு உத்திகள் கலப்புமுறை சமஷ்டியின் முக்கிய இயல்பு எனலாம். ஆங்கிலத்தில் இதனை ‘Inter Locking Constitutional Devices’ என்ற தொடரால் விளக்கலாம். இத்தகைய கலப்புமுறையில் ஐக்கியம் வளர்வதற்கு இடமுள்ளது. சமஷ்டியில் இருந்து பிரிந்து செல்வதற்கான அச்சம் நீக்கப்படுகிறது (பக். 31).
ஒற்றையாட்சி முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு
ஒற்றையாட்சி முறையின் கீழ் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்திய நாடுகளுக்கு பின்வரும் மூன்று நாடுகளை உதாரணங்களாகக் காட்டலாம் என லக்ஸ்மன் மாறசிங்க குறிப்பிடுகிறார்.
- இலங்கையின் 1978 அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தம் மூலமான அதிகாரப் பகிர்வு.
- தென்னாபிரிக்காவின் இன்றைய அரசியல் யாப்பு. அந்நாட்டில் இன்று நடைமுறையில் உள்ள அதிகாரப் பகிர்வு.
- இந்தியாவில் ஒற்றையாட்சிமுறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மாநில அரசுகள், பஞ்சாயத்துகள், முனிசிப்பல் சபைகள் என்னும் மூன்று நிலைகளில் (Three Levels of Government) நடைமுறைப்படுத்தப்படும் அதிகாரப் பகிர்வு
இம்மூன்று உதாரணங்கள் குறித்தும் மாறசிங்க அவர்கள் கூறியிருப்பனவற்றை அடுத்து நோக்குவோம்.
இலங்கை
இலங்கையின் 1978 அரசியல் யாப்பு ஒற்றையாட்சி முறையின் கீழ் அதிகாரப் பகிர்வை செய்திருப்பதற்குச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. உறுப்புரை 154Q மூன்று அட்டவணைகளைக் (Three Lists) குறிப்பிடுகிறது. மத்தியின் அதிகாரங்கள் ஒற்றையாட்சி முறையில் குவிந்திருந்ததையும் அவற்றை மூன்று அட்டவணையின் மூலம் பகிர்வு செய்திருப்பதையும் இவ்வுறுப்புரை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மாகாண ஆளுநர்கள் என்ற பதவிப்பெயரை உடையவருக்கு 1978 அரசியல் யாப்பு எந்த அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவுஸ்திரேலியாவின் அரசுகளின் தலைவர்களான ஆளுநர்களிற்கு அந்நாட்டு அரசியல் யாப்பு அதிகாரங்கள் சிலவற்றைப் பகிர்ந்தளித்துள்ளது. இதே போன்றே கனடாவின் மாநில ஆளுநர்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் அரசியல் யாப்பின்படி மாகாண ஆளுநர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஜனாதிபதியின் நிருவாக அதிகாரத்தை பிரயோகிப்பவர்களாகவே உள்ளனர். மாகாண ஆளுநர்களின் மேற்படி அரசியல் யாப்பு அந்தஸ்தை அரசியல் யாப்பின் 154 B (9), 154 C, 154 F (2) ஆகிய உறுப்புரைகள் எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.
13 ஆவது திருத்தம் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது. அதனை விரித்துரைக்கும் தேவையில்லை. 13 ஆவது திருத்தம் 1978 அரசியல் யாப்பின் பாகமாக அமைந்துள்ளது. அதனைத் திருத்த வேண்டுமாயின் 1978 அரசியல் யாப்பின் வேறு எந்த உறுப்புரையை திருத்துவதற்கான நடைமுறை எதுவோ அதனையே பின்பற்ற வேண்டும். உறுப்புரை 83 இல் குறிப்பிடப்படும் திருத்த நடைமுறை 13 ஆவது திருத்தத்திற்குப் பொருந்தாது. 83 உறுப்புரை, பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், சர்வசன வாக்கெடுப்பின் (Referendum) மூலமும் திருத்தப்பட வேண்டிய உறுப்புரைகளைக் குறிப்பிட்டுள்ளது. 83 உறுப்புரையில் 13 ஆவது திருத்தம் சேர்க்கப்படவில்லை. இதனைத் திருத்துவதற்கு சர்வசன வாக்கெடுப்புத் தேவையற்றது. 13 ஆவது திருத்தத்தின் திருத்த நடைமுறை உறுப்புரை 82 (5) இற்கு அமைவாக பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தப்படுதல் முடியும்.
தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்காவின் ஒற்றையாட்சி முறையின் கீழ், அரசாங்க ஆளுகையின் மூன்று நிலைகளான தேசிய நிலை அரசாங்கம், மாகாணநிலை அரசாங்கம், ஊரக/ உள்ளூர் அரசாங்கம் (National, Provincial and Local Governments) ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தங்கியிருப்பனவாக (Interdependent) அமைந்துள்ளன. இம்மூன்றும் தனித்துவமானவை; ஒன்றோடொன்று தங்கியிருப்பவை; தொடர்புடையவை என தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பின் பிரிவு 40 குறிப்பிட்டுள்ளது. அப்பிரிவு வருமாறு:
”In the republic, government is constituted as national, provincial and local spheres of government, which are distinctive Interdependent and interrelated”
தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பு ஒழுங்கமைப்பை ‘கூட்டுறவு அரசாங்கம்’ (Cooperative Government) எனக் கூறுவர். மேற்காட்டிய பிரிவு 40 அரசாங்க அலகுகளின் தனித்துவம், தங்கியிருத்தல், ஒன்றோடொன்றான தொடர்பு என்னும் கூட்டுறவு அரசாங்க இயல்புகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதைக் காணலாம். மேலும் தேசிய மட்ட அரசாங்கம், மாகாண அரசாங்கம், உள்ளூராட்சி அரசாங்கம் என்ற மூன்று நிலை அரசாங்கங்களிற்கும் தென்னாபிரிக்காவின் ஒற்றையாட்சி முறையின் கீழ் அதிகாரங்கள் பகிரப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பின் 41 ஆவது பிரிவு ‘கூட்டுறவு அரசாங்கமும், அரசாங்கங்களுக்கிடையிலான உறவுகளும்’ பற்றிய தத்துவங்களை (Principles of Cooperative Government and Intergovernmental Relations) விளக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக பிரிவு 41(h) இவ்விடயத்தைப் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளது.
மூன்று நிலையில் உள்ள அரசாங்கங்களும் பரஸ்பர நம்பிக்கையினதும் நல்லெண்ணத்தினதும் (Mutual Trust and Good Faith) அடிப்படையில் செயலாற்றுதல் வேண்டும்.
- அரசாங்கங்களிற்கிடையே நட்புறவை வளர்த்தல் வேண்டும்.
- ஒன்றுக்கொன்று உதவ வேண்டும்; ஆதரவு வழங்க வேண்டும்.
- எல்லா அலகுகளதும் பொது நலன் சார்ந்த விடயங்களில் தகவல்களை பிறவற்றுக்குக் கொடுத்தல்; ஒன்றுக்கொன்று ஆலோசனை வழங்கல் ஆகிய முறைகளில் ஒத்துழைக்க வேண்டும்.
- தத்தம் நடவடிக்கைகளிலும், சட்ட ஆக்கச் செயற்பாட்டிலும் பிற அலகுகளிற்கு உதவ வேண்டும்.
- பொதுவான, ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
- ஒன்று மற்றதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும்.
தென்னாபிரிக்க அரசியல் யாப்பின் 41(h) என்னும் மேற்குறிப்பிட்ட பிரிவு, மூன்று நிலைகளில் உள்ள அரசாங்கமும், அதிகாரப் பகிர்வு நடைமுறையில் தோல்வியடையாமல் அதனைப் பாதுகாப்பதற்கு உதவும் முறையில் செயற்பட வேண்டும் என்ற கடப்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. பிரிவு 154 முனிசிப்பல் சபைகளின் நிர்வாகத்தைப் பலப்படுத்துவதற்குச் செய்ய வேண்டியன பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
‘தேசிய அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும், சட்டங்களை இயற்றுவதன் மூலமும் வேறு வழிகளிலும், முனிசிப்பல் சபைகள் தமது சொந்த விடயங்களைத் தாமே நிர்வகிப்பதற்கும், நிர்வாக அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கும், தமது செயற்பாடுகளை ஆற்றுவதற்கும் தேவையான ஆற்றலை (Capacity) மேம்படுத்த உதவ வேண்டும்.
பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் குறிப்பிடும் இந்தக் குறிப்பிட்ட பிரிவு பற்றி நாம் பின்வரும் கருத்தினை அழுத்திக் கூறுதல் பொருத்தமுடையது. தென்னாபிரிக்கா கைத்தொழில் வளர்ச்சியிலும் நகரமயமாக்கலிலும் துரிதமாக முன்னேறி வரும் நாடாகும். அங்கு முன்னர் நடைமுறையில் இருந்த இன ஒதுக்கல் கொள்கை கறுப்பர் இனத்தவர்களையும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களையும் சமூக வாழ்விலும், முனிசிப்பல் சபைகளின் நிருவாகத்திலும் இருந்து ஒதுக்கி வைத்தது. முனிசிப்பல் சபைகளைப் பலப்படுத்துதல், வளர்ந்து வரும் தென்னாபிரிக்க நகரங்களின் சமுதாய மட்டத்தில் (Community Level) அதிகாரப் பகிர்வின் நன்மைகளை மக்கள் அனுபவிப்பதற்கு உதவுவதாக அமையும். மூன்றாம் நிலை அரசாங்கத்தை தேசிய மட்ட அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும் பலப்படுத்த உதவ வேண்டும் என்பதை இச்சட்டப் பிரிவு அழுத்திக் கூறுவதாக அமைகிறது.
தென்னாபிரிக்க அரசியல் யாப்பு மூன்று வகை முனிசிப்பல் சபைகளை வகைப்படுத்திக் கூறுகிறது. வகை A (Category A): இவ்வகை முனிசிப்பல் சபை தனது எல்லைப் பகுதியில் முழுமையான நிருவாக, சட்டவாக்க அதிகாரத்தைக் (Exclusive Authority) கொண்டதாக இருக்கும். வகை B (Category B): இவ்வகை முனிசிப்பல் சபை தனது எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ள ‘வகை C’ முனிசிப்பல் சபைகளுடன் நிருவாக, சட்டவாக்க அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு செயலாற்றும். வகை C (Category C): தனது எல்லைப் பகுதிக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பல முனிசிப்பல் சபைகளுள் ஒன்றாகவும், நிருவாக, சட்டவாக்க அதிகாரங்களைச் செயற்படுத்துவதாகவும் இருக்கும். தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பு,
- தேசிய அரசாங்கம்
- மாகாண அரசாங்கங்கள்
- உள்ளூராட்சி அரசாங்கங்கள்
என்ற மூன்று நிலை அரசாங்கங்களிற்கும் அரசியல் யாப்பின் பிரிவு 43 மூலம் சட்டங்களை ஆக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துள்ளது (Devolves Legislative Powers). இது புதுமையானதொரு அதிகாரப் பகிர்வு முறையென்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வது அவசியம். தென்னாபிரிக்கா ஒற்றையாட்சி அரசு; அதன் ஒற்றையாட்சித் தன்மைக்கு பாதகம் இல்லாத வகையில் சட்டவாக்க அதிகாரத்தை அரசியல் யாப்பு பகிர்ந்தளித்துள்ளது. இலங்கையின் 13 ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தை நாம் தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்புடன் ஒப்பிட்டு வேறுபாட்டை அறிந்து கொள்ளலாம். 13 ஆவது திருத்தம் 154Q பிரிவு, இலங்கையின் பாராளுமன்றம் சட்டங்களை இயற்றுவதன் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் எனக் கூறுகிறது. ஆகையால் பாராளுமன்றத்தின் அதிகாரக் கையளிப்பின் (Delegation) மூலம் இலங்கையின் மாகாணசபைகள் அதிகாரத்தைப் பெறுவனவாக உள்ளதைக் காணலாம்.
தென்னாபிரிக்கா, ஒற்றையாட்சி வரை-சட்டத்திற்குள் (Unitary Framework), மூன்று நிலை அரசாங்கங்களுக்கும் சட்ட ஆக்க அதிகாரத்தை, அரசியல் யாப்பின் பிரிவு ஒன்றின் ஊடாகப் பகிர்ந்தளித்துள்ளதை லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார் (பக். 31).