தமிழில் மருத்துவம் கற்பிக்கும் கிறீனது தளராத முயற்சியும் கொழும்பு மருத்துவக்கல்லூரியின் ஆரம்பமும்
Arts
6 நிமிட வாசிப்பு

தமிழில் மருத்துவம் கற்பிக்கும் கிறீனது தளராத முயற்சியும் கொழும்பு மருத்துவக்கல்லூரியின் ஆரம்பமும்

May 4, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆபத்துக்கு உதவி வைத்தியசாலையின் (FINS Hospital) தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிய மருத்துவர் கிறீன் செப்ரெம்பர் 1868 இல் தலைமை நிருவாகி என்ற பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஆபத்துக்குதவி வைத்தியசாலை நிருவாகத்துக்கு அனுப்பினார்.  

கிறீன் கடிதத்திலே பின்வரும் விண்ணப்பங்களையும் முன்வைத்திருந்தார்.

  • தனது மாணவர்கள் மருத்துவப் பயிற்சியை ஆபத்துக்குதவி வைத்தியசாலையில்  பெற்றுக்கொள்வதற்கு அனுமதித்தல்.
  • மானிப்பாய் மருத்துவமனையும் ஆபத்துக்குதவி மருத்துவமனையும் மருந்துகளையும் ஏனைய பொருட்களையும் பரிமாறிக் கொள்வது.
  • மருந்துகள் மற்றும் இதர பொருட்களுக்கான விலையை இலண்டனில் அவற்றுக்கான பெறுமதியுடன் யாழ்ப்பாணத்துக்கான போக்குவரத்துச் செலவையும் ஈடுசெய்யக் கூடியதாக மேலதிகமாக 75 சதவீதத்தையும் சேர்த்துக் கணக்கிடல்.
  • அமெரிக்க மிசனரியினர் பரிந்துரைக்கும் பரம ஏழையான நோயாளிகளுக்கு (Pauper Sick Patients) ஆபத்துக்கு உதவி வைத்தியசாலையில் சிகிச்சை அளித்தல்.

கிறீன் மாணவர்களுக்கு மருத்துவத்தைக் கற்பிப்பதிலும், மருத்துவ நூல்களை மொழிபெயர்ப்பதிலும் மானிப்பாய் மருத்துவமனையிலும் தனது முழுமையான கவனத்தைச் செலுத்த விரும்பியே  ஆபத்துக்கு உதவி மருத்துவமனையின் தலைமை நிருவாகப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்தார்.

கிறீனது கோரிக்கையைப் பரிசீலித்த மருத்துவமனை நிருவாகம் அவரது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு பதிற் கடிதத்தை அனுப்பியது. அக்கடிதத்திலே கிறீனது சேவை குறித்துப் பின்வரும் பாராட்டு மொழிகள் காணப்பட்டன.

“யாழ்ப்பாணம் ஆபத்துக்குதவி வைத்தியசாலையை இன்றைய (1868 இல்) உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்த தங்களுக்கு எந்த ஒரு சலுகையையும் அல்லது எந்த ஒரு வெகுமதியையும் வழங்குவதற்கு ஆபத்துக்குதவி நண்பர்கள் கழகம் தயாராக இருக்கிறது. தங்களுக்கு மீண்டும் வசதியான போது வைத்தியசாலையின் தலைமை நிருவாகத்தை வழங்குவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம். எமது கழகம் தங்களது மீள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. தங்களைப் போன்ற தகுதியான ஒருவர் கிடைக்கும் வரை தலைமைப் பதவி வெற்றிடமாகவே இருக்கும்.”

இந்தக் கடிதத்துக்கு கிறீன் அனுப்பிய பதிலில் தனது நன்றியைத் தெரிவித்திருந்ததுடன் தன்னிடம் மருத்துவம் பயின்ற முதல் அணி (1848-1851) மாணவனாகிய மருத்துவ கலாநிதி ஜோசுவா இடன்போர்த் (Resident Surgeon) கடந்த 10 வருடங்களாக ஆபத்துக்குதவி வைத்தியசாலையில் முழுநேரமாகப் பணிபுரிந்து வருவதையும் 2 வருடங்களாக அவர் வைத்தியசாலையில் பாரிய சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருவதையும் குறிப்பிட்டு ஜோசுவா இடன்போர்த் அவர்களது திறமையையும் அனுபவத்தையும் கருத்திற்கொண்டு வைத்தியசாலையின் தலைமை அதிகாரியாக அவரை நியமிக்குமாறு கிறீன் பரிந்துரைத்தார்.

தமிழில் வெளிவந்த கூப்பரின் வைத்தியர் கைவாகடம்

மருத்துவர் கிறீன் அமெரிக்கப் பல்கலைக்கழங்களில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில மருத்துவ நூல்களில் மிகச் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்தார். இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற மருத்துவ நிபுணரான  றொபேட் கூப்பர் MD (1773-1835) 1809 இல் எழுதிய THE PHYSICIAN’S VADE-MECUM: Containing the Symptoms, Causes, Diagnosis, Prognosis, and Treatment of Diseases; Accompanied by a Select Collection of Formulae and a Glossary of Terms என்ற நூல் இங்கிலாந்தில் வெளிவந்த அதே ஆண்டில் அமெரிக்காவிலும் அச்சிடப்பட்டது. குறிப்பிட்ட சில ஆண்டுகளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையான இந்நூல் பல்வேறு பதிப்புக்களாக வெளிவந்திருந்தது. 1865 இல் வெளிவந்த  பதிப்பை மருத்துவர் கிறீன்  தமிழில் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்தார். மருத்துவர் கிறீனது 5 ஆவது அணி மாணவனாகிய வில்லியம் பவுலிடம் (Dr. William Paul) இந்நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியை ஒப்படைத்தார். இந்நூலைத் தமிழிலே மொழிபெயர்த்து வெளியிடும் போது தேவையான விளக்கப்படங்களுக்கான மின்னச்சு வார்ப்புக்களை  மூலநூல் பதிப்பாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள 25 ஸ்ரேலிங் பவுண் தேவைப்பட்டது. கிறீனுடைய நண்பர்களும் ஸ்கொட்லாந்து நாட்டிலிருந்த நலன் விரும்பிகளும் தேவையான நிதியைத் திரட்டி மருத்துவர் கிறீனிடம் கொடுத்தனர்.

19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் தமிழில் ஆங்கில மருத்துவ நூல்களை வெளியிடும் போது மூல நூல்களில் உள்ள படங்களை தமிழ்ப்பதிப்பில் கொண்டுவருவது என்பது கற்பனை செய்யக் கூடிய இலகுவான பணியல்ல. இப்படங்களைப் பெற்றுக் கொள்ள ஆங்கிலத்திலமைந்த நூல்களைப் பதிப்புச் செய்த அச்சகத்தாரை, மூல நூலாசிரியரைத் தொடர்பு கொண்டு மரச் செதுக்கு அச்சுருக்களைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். இவற்றுக்கும் பெருந்தொகைப் பணம் தேவைப்படும். டேவிட் ஏ. வெல்ஸ் எழுதிய கெமிஸ்ரி என்ற நூலை கெமிஷ்தம் என்ற பெயரில் மருத்துவர் கிறீன் மருத்துவர்களான டானியல் சப்மன் வைத்திலிங்கம் மற்றும் எஸ். சுவாமிநாதன் ஆகியோரது உதவியுடன் மொழிபெயர்த்தார்.  இது நாகர்கோயிலில் உள்ள இலண்டன் மிசன் அச்சகத்தில் 1875 இல் அச்சிடப்பட்டது. இந்நூலில் இடம்பெற்றுள்ள படங்களை அச்சிடத் தேவையான மரச்செதுக்கு அச்சுருக்களுக்கான  செலவை அமெரிக்காவில் வசித்த கிறீனது சகோதரி மேரி வழங்கினார் என்ற தகவலை இங்கு நினைவு கூரல்  பொருத்தமானது.

PHYSICIANS-VADE-MECUM
PHYSICIANS-VADE-MECUM-2

1869 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க மிசன் ஆண்டறிக்கையில் மருத்துவர் கிறீனது தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சிக்கான அயராத உழைப்பும் கிறீனது விலைமதிப்பற்ற தன்னார்வப் பணியும்  சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழில் மருத்துவ நூல்களை வெளியிடுவதற்கு கிறீன் எடுத்துள்ள முயற்சியானது அளவிடற்கரிய பெரிய பணி. ஆங்கில மருத்துவ நூல்களில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒவ்வொரு வசனத்திலும் கிறீன் வேண்டிய திருத்தங்களைச் செய்து மீள அமைத்தார். மூல நூலின் கருத்து தமிழில் சரியாக வெளிப்படல் வேண்டும் என்பதற்காக கிறீன் தனிப்பட்ட முறையில் கூடிய கவனம் எடுத்திருந்தார். புதிய பல சொற்பதங்கள் உருவாக்கப்பட்டன அல்லது ஏற்கனவே இருந்த சொற்கள் மேலும் மெருகூட்டப்பட்டன. தமிழிலே மருத்துவ நூல்களைக் கொண்டு வரவேண்டும் என்பதுபதற்காக கிறீன் இடைவிடாது தினமும், வாராந்தம், மாதாந்தம் என்று வருடம் முழுவதும் இந்தப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்தார். இது மிகவும் கடினமான ஒரு பணி. ஒரு நாள் மருத்துவம் தொடர்பில் உண்மையான செய்தி மக்களைச் சென்றடையும் என்ற உயரிய நோக்குடன் மருத்துவ நூல்களை தமிழாக்கம் செய்யும் பெரும் சவாலை கிறீன் நிறைவேற்றினார்.”

கொழும்பு மருத்துவக் கல்லூரியின் ஆரம்பம்

Dr.James-loose

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசனரி மருத்துவர் கிறீன் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து 22 வருடங்களுக்குப் பின்னர் 1870 இல் கொழும்பு மருத்துவக் கல்லூரி பிரித்தானிய காலனிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு மருத்துவப் பீடத்தில் ஆங்கில மொழிமூலம் மருத்துவக் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டதால் மானிப்பாயில் தமிழில் கற்பதை விடுத்து மாணவர்கள் கொழும்பு நோக்கிச் செல்வார்கள் என்ற அச்சம் கிறீனுக்கு ஏற்பட்டது. இதனால் மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகையை அதிகரித்தார்.

கொழும்பு மருத்துவப் பீடம் ஆரம்பிக்கப்பட்டபோது முதலாவது அணியில் 25 மாணவர்கள்  சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இங்கும் 3 வருடங்களைக் கொண்டதாகக் கற்கை நெறியிருந்தது. மருத்துவர் ஜேம்ஸ் லூஸ் முதலாவது அதிபராக நியமிக்கப்பட்டார். மருத்துவர் ஜேம்ஸ் லூஸ், மருத்துவர் அந்ரே மற்றும் மருத்துவர் ஈ. எல். கொச் ஆகியோர் விரிவுரையாளர்களாக இருந்தனர். இங்கு கற்பதற்கு மாணவர்களிடம் கட்டணம் அறவிடப்பட்டது. ஒவ்வொரு தவணையின் ஆரம்பத்திலும் 2 ஸ்ரேலிங் பவுணை மாணவர்கள் கட்டணமாகச் செலுத்தினர். அதேவேளை மானிப்பாயில் மருத்துவர் கிறீனது மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் இலவசமாகக் கற்றதுடன் அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்