தலைநிமிர்ந்த சமூகம்
Arts
6 நிமிட வாசிப்பு

தலைநிமிர்ந்த சமூகம்

January 12, 2024 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையக தமிழ் மக்களின் இந்த வரலாற்றுத் தொடர் இந்த அத்தியாயத்துடன் ஒரு முடிவுக்கு வருகிறது. எனினும் அவர்களது வரலாறு அதன் பின்னரும் இந்த அத்தியாயத்திலிருந்து இன்று வரை தொடரத்தான் செய்கிறது. அது புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ என்ற கதையைப் போல ஒரு துன்பியல் வரலாறு.

நான் இந்த வரலாற்று தொடரை எழுத முற்பட்டபோது இதற்கு என்ன தலைப்பை இடலாம் என்று பெரிதும் சிந்தித்தேன். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து 74 வருடங்களாக, இந்த மக்களை நாட்டில் இருந்து விரட்டிவிட இந்த அளவுக்கு அரசியல் சதிச் செயல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது என் மனக்கண்ணில் ஒவ்வொன்றாக துல்லியமாகத் தோன்றின. அதை மையமாகக் கொண்டே ‘சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு’ என்று இதற்கு தலைப்பிட்டேன். அதன்பின் அவர்கள் செய்த சதிகளையும் சூழ்ச்சிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதி ஒரு பட்டியல் தயாரித்தேன். இருந்தாலும் அந்த பட்டியல் இத்தனை நீளமானதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவை சுமார் 50 தலைப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பின்னரான காலத்தில் இவர்கள் மீது ஏவி விடப்பட்ட சதிகளும் சூழ்ச்சிகளும் என்ற பட்டியலில் பின்வரும் விடயங்களும் சேர்க்கப்பட வேண்டும்.

1980 களின் பிற்பகுதிகளில் இம்மக்கள் தமது பிரஜா உரிமையை மீளப்பெற்று ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையில் இருந்து மீண்டதன் பின்னர் தாம் படித்த சமூகமாக மாறினால்தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கருதி படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அவர்கள் படித்து முன்னேறி விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்த ஆட்சியாளர்கள் பாடசாலைகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்காது விட்டார்கள். குறிப்பாக கணித, விஞ்ஞானப் பாடங்களைக் கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவியது. ஆசிரியர்களை நியமிக்காது விட்டால், அவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரிட்சையில் சித்தி எய்த மாட்டார்கள் என்றும் அதனால் அவர்களால் மேற்படிப்பு படிக்க முடியாது என்றும் திட்டம் போட்டார்கள். ஆனால் இன்று அவர்கள் அதனை எல்லாம் மீறி ‘படித்த சமூகத்தினர்’ என்ற அடைமொழியைச் சுமந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறி உள்ளனர்.

Malayaka children

ஆரம்பத்தில் இருந்தே பொது சுகாதாரத்துறை மிகப் பின்தங்கியதாகவே இருந்தது. தாய்சேய் மரணம் மிக அதிகரித்த நிலையில் காணப்பட்டதுடன் பிள்ளைகளிடத்தில் மந்தபோஷணை நிலமை ஏற்பட்டது. முழுச் சமுதாயமுமே ஆரோக்கியமற்றதாக மாறிய நிலைமை தோன்றியது. மருத்துவமனைகள் நீண்ட தூரத்துக்கு அப்பாலே இருந்தன. அவற்றை சென்றடைய போக்குவரத்து வசதிகளோ வசதியான பாதைகளோ இருக்கவில்லை. அநேகமான சந்தர்ப்பங்களில் மருத்துவமனையை அடையும் முன்னரே பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன. குழந்தை பிறந்ததை பதிவு செய்யும் உரிமையும்கூட தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. அதனைக்கூட தோட்டத்துரைமாரே செய்ய வேண்டும் என்று பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கடின உழைப்பால் இவற்றையெல்லாம் தாண்டி இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் என்ற வரையறையைக் கடந்து இன்று ‘மலையக தமிழ் மக்கள்’ என்ற சிறப்பு அடையாளத்தைப் பெற்றுள்ளனர். சுமார் 18 லட்சம்  (உத்தியோக பூர்வமற்ற கணிப்பீட்டின்படி) சமூக அங்கத்தவர்களை கொண்டு இந்த நாட்டின் நான்காவது தேசிய இனமாக இவர்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். எதிர்காலத்தில், நாட்டில் சிறுபான்மையினரை அடிப்படையாகக் கொண்டு தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்ற அடிப்படையில் ஏதேனும் தீர்வுகள் எட்டப்படும் போது ‘மலையக தமிழ் தேசிய இனம் – அவர்களுக்கான பிரச்சனைகளும் தீர்வுகளும்’ என்ற அடிப்படையில் அவர்கள் முன்வைக்கின்ற அரசியல் உரிமைகள் ஆராயப்பட்டு அவர்கள் எதிர்கொள்கின்ற சகல அரசியல், பொருளாதார, சமூக, மொழிப் பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்