அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரின் தெற்கில் 13 கி.மீ. தூரத்தில் இறக்காமம் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் மாயக்கல் எனும் சந்நியாசி மலை காணப்படுகிறது. இதை அடுத்து மாணிக்கமடு எனும் சிறிய கிராமமும், ஓட்டுத் தொழிற்சாலையும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்தவுடன் குடிவில் எனும் கிராமம் காணப்படுகிறது.
இக்கிராமத்தின் வடகிழக்கில் குடிவில் குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு சற்று தூரத்தில் கல்லோயா எனும் பட்டிப்பளை ஆறு ஓடுகிறது. கிராமத்தின் இடது பக்கமாக கல்லோயா ஆற்றுக்குச் செல்லும் பாதையில், ஆற்றுக்கு அருகில் மலைப்பாறைகள் நிறைந்த ஒரு காடு காணப்படுகிறது. இங்கு இயற்கையான கற்குகைகள் சில காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கற்குகையில் கற்புருவம் வெட்டப்பட்டு அதன் கீழே பிராமி எழுத்துக்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் தான் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் வணிகன் மற்றும் அவனது மனைவி பற்றிய விபரம் காணப்படுகிறது.
இக்கல்வெட்டில் “திகவாபி பொரண வனிஜஹ …..ய புதஹ பரியய தமெத திசய லேன” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதை பேராசிரியர் பரணவிதான “The cave of the Merchants who are the citizens of Dighavapi, of the sons of .. .. .. and of the Wife Tissa, the Tamil” என மொழி பெயர்த்துள்ளார். இது “தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் …. மனைவி திசவின் குகை” எனப் பொருள்படுகிறது. இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volum-1 எனும் நூலில் 480 ஆவது கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு காணப்படும் மலைப்பகுதியில் இரண்டு கற்குகைகள் உள்ளன. இவற்றில் ஒன்றில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இம்மலைப்பாறைப்பகுதி பெருமளவில் உடைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கற்குகைகளில் ஒன்று உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு காணப்படும் கற்குகையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள பகுதியும் சேதமாக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் மட்டுமே தற்போது இங்கு காணப்படுகின்றன.
இவ்விடம் மட்டுமல்லாது இப்பிரதேசத்தில் உள்ள பண்டைய வரலாற்று, தொல்லியல் சின்னங்கள் அடங்கிய மலைப்பாறைகள் பல முற்றாக உடைக்கப்பட்டு பாரம்பரியச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கைகாட்டி மலைப் பகுதி. இக்குடிவில் கிராமத்தில் இருந்து சம்மாந்துறைக்குச் செல்லும் வீதியில் 6 கி.மீ தூரத்தில் கல்லோயா ஆற்றின் கரையில் மல்கம்பிட்டி என்னுமிடம் உள்ளது. இவ்விடத்தைக் கடந்து மேலும் 6 கி.மீ தூரத்தில் உடங்கை ஆற்றுப் பாலம் உள்ளது. இப்பாலத்தின் மேற்குப் பக்கத்தில் வயல் வெளிகளுக்கு மத்தியில் ஒரு மலைப்பகுதி காணப்படுகிறது. இதுவே கைகாட்டி மலையாகும்.
உடங்கை ஆற்றுப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றவுடன் கைகாட்டி சந்தி உள்ளது. இச்சந்தியின் மேற்குப் பக்கமாகச் செல்லும் பாதையில் சுமார் ஒரு 700 மீற்றர் தூரத்தில் இம்மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வடக்கு ,தெற்காக மூன்று மலைகள் உள்ளன. இவற்றில் வடக்குப் பகுதியில் உள்ள மலை அளவில் பெரியதாகும். இம் மலை சுமார் ஒரு கி.மீ நீளமும், 400 மீற்றர் அகலமும் கொண்டதாகும். இங்கிருந்து 400 மீற்றர் தெற்கில் அடுத்த மலை அமைந்துள்ளது. இது 300 மீற்றர் நீள, அகலம் கொண்ட சிறிய மலையாகும். இங்கிருந்து தெற்கில் 400 மீற்றர் தூரத்தில் உடங்கை ஆற்றின் அருகில் அடுத்த மலை அமைந்துள்ளது. இது 400 மீற்றர் நீள, அகலம் கொண்ட மலையாகும்.
இம்மூன்று மலைகளும் தமிழரின் பாரம்பரிய, தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களைக் கொண்ட மலைகளாகும். இம்மலையில் பாண்டியர் கால நாணயங்கள், லக்ஷ்மி வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மலைப்பகுதி பண்டைய காலத்தில் பாண்டியர் ஆட்சி நிலவிய இடமாக இருந்துள்ளது எனலாம். இம்மூன்று மலைகளின் பெரும்பகுதி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. இம்மலைகள் நிறைந்த பகுதியும், இவற்றைச் சுற்றியுள்ள பிரதேசமும் பண்டைய தமிழர் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புபட்ட பகுதிகளாகும்.
சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு கூத்திக மன்னன் (சேனன்-குத்திக்கன்) இலங்கையை ஆட்சிசெய்த காலத்தில் இந்தியாவில் காளி கட்டம் என்னுமிடத்தில் இருந்து மக்களை அழைத்து வந்து இப்பகுதியில் குடியமர்த்தியதாகவும், இம்மக்கள் மட்டக்களப்பு நகரை அமைக்க மண் மற்றும் கல் மலையாய் இருந்த இடத்தை வெட்டிக் களப்பை மூடி கூத்திக மன்னனுக்கு ஒரு மாளிகையை அமைத்துக் கொடுத்ததாகவும், மண், கல் எடுத்த புட்டியே மண்கல்புட்டி எனப் பெயர் பெற்றதாகவும், மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. தற்போது இது மல்கம்பிட்டி எனத் திரிபடைந்துள்ளது. கூத்திக மன்னன் ஆட்சி செய்த காலப்பகுதியே தமிழர் பற்றிய இப்பிராமிக் கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இம் மல்கம்பிட்டி என்னும் இடம் கைகாட்டி மலையின் அருகில் அதன் தென்மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.
மேலும் மல்கம்பிட்டி எனும் இவ்விடம் ஆதி தமிழ் மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய இடமாகும். இலங்கையில் ஆதி தமிழ்மக்கள் வளர்த்த பெருங்கற்காலப் பண்பாடு மல்கம்பிட்டியிலும் நிலவியமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பொ. ஆ. மு 1000 முதல் 500 வரையான காலப்பகுதியில் இப்பண்பாடு தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் நிலவியது. ஆதிதமிழரின் இப்பண்பாட்டுக்குரிய பெருங்கற்கால இடுகாடுகள் அமைந்திருந்த இடங்களில் அவர்களின் ஈமத் தாழிகள் கிடைத்துள்ளன. அப்படிப்பட்ட ஈமத்தாழி ஒன்றின் கல்லால் ஆன மூடி ஒன்று மல்கம்பிட்டியில் கிடைத்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள குடிவில், கைகாட்டி மலை, மல்கம்பிட்டி ஆகிய இடங்கள் அனைத்தும் முற்றிலும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளாகும்.
தொடரும்.