“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
– திருக்குறள் (664) –
மு. வரதராசனார் விளக்கம் : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
இன்றைய உலக – உள்ளூர் சமூகங்களை அவதானித்தால் எமது கண்ணில் தெரிவது வெற்றிபெற்றவர்களின் கடைசி முடிவுகளே. இது ஐந்தாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வாக இருக்கலாம். அல்லது அதன் பின்னான பல்கலைக்கழகப் படிப்பாகவோ, தொழில் முயற்சியாகவோ இருக்கலாம். அங்கெல்லாம் எமது கண்களுக்குத் தெரிவது அவர்களது பெறுபேறுகளும் பட்டங்களுமே. அவற்றை அடைவதற்கு அவர்கள் அடைந்த கஷ்டங்கள், தியாகங்கள், முயல்வுகள், தோல்விகள், அவமானங்கள், வலிகள் என்பனவெல்லாம் எவருக்குமே தெரியாது.
ஆங்கிலத்தில் ஒரு கூற்றொன்று இருக்கிறது : ” The Harder you Work , the Luckier You Get ” (நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு அதிர்ஷ்டம் கிடைக்கும்.)
இப்படியான கடின முறைகளை மனதில் கொண்டு இறுதி முடிவைக் குறிவைத்து வேலைகள் செய்வதன் மூலம் நினைத்ததை அடையலாம். அதற்கான சில முறைகள் உள்ளன.
- நேர்மறை அணியினர் (Positive Teammates) : வாழ்க்கையில் எந்தச் செயலையும் செய்யும் போது அதற்குப் பல இடர்கள் வரும். அப்படியான நேரங்களில் இலகுவான வழி அந்த வேலையை செய்வதைவிட்டு, நாம் விலகி இருப்பது தான். அத்தகைய தருணங்களில் குழுக்களில் இருக்கும் மற்றையவர்களின் உதவி தேவைப்படும். எல்லோருமே எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்தால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. எந்த இடர் வந்தாலும், அவற்றைச் சமாளித்து வெற்றி பெறலாம் என்ற தன்னம்பிக்கை தரக்கூடிய ஒருவராவது நம்முடன் இருப்பது அவசியம்.
இதற்கு என் வாழ்வில் நடந்த விடயமொன்றை உதாரணமாகச் சொல்லலாம். எனது முதலாவது நிறுவனத்தைத் தொடங்கும்போது எனக்கு 28 வயது. நான் அப்போது எமது நிறுவனத்தின் பொறியியல் குழுவுக்கு தலைமை தாங்குபவனாக இருந்தேன். எமது நிறுவனம் மற்றவர்களிடமிருந்து பெற்ற முதலீட்டில், அரைவாசிக்கு மேலான நிதி (ஏறக்குறைய ஐந்து மில்லியன் டொலர் ; அதாவது நூறு கோடி ரூபா) எனது பிரிவினால் பொருட்களை உற்பத்தி செய்ய செலவழிக்கப்படும். அது மிக அழுத்தத்தைக் கொடுத்தது. அந்த நேரம் எனக்கு உதவி செய்தவர்கள் எனது அணியில் இருந்த ஆலோசனைக் குழுவினரே. அவர்கள் நான் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு ஊக்கம் கொடுத்தும், அதைவிட மற்ற விடயங்களில் ஏற்படும் தடைகளைத் தாண்டிப் போவதற்கு நேர்மறை ஆலோசனைகளைக் கூறி வெற்றிபெற வைத்தார்கள். இப்படியான நேர்மறையானவர்களை அணியில் சேர்ப்பது மிக முக்கியம்.
- பிரச்சனை தீர்ப்போர் (Problem Solvers) : ஆரம்ப நிறுவங்களை தொடங்குவது வாழ்க்கையைச் சுலபமாக வாழ நினைப்பவர்களுக்கு பொருத்தமான செயலல்ல. அதைத் தொடங்கி, அரசாங்கத்தில் பதிவு செய்து ஒரு சட்ட நிறுவனமாக்குதல் தொடக்கம், முதலீடு சேர்ப்பது, பொருள்- சந்தை உடன்பாடு காணுவது, வாடிக்கையாளரைப் பிடிப்பது வரை என்று ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். இதற்கு ஒவ்வொரு துறையிலும் திறைமையான அணியினரை எமது பார்வை நோக்கத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி இணைக்க வேண்டும். நான் மேலே கூறியபடி நேர்மறையான மனப்பாங்குடன் இருப்பவர்கள் தேவை. அதன்பின், அவர்களுக்கு சிக்கலான பிரச்சினைகளை பகுதிகளாகப் பிரித்து, அதற்குத் தீர்வு காணுபவர்களை குழுவில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்படியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுபவர்களைக் தேர்ந்தெடுக்க இப்போதைய பெருநிறுவனங்கள் பல திறன் சோதனைகளை மேற்கொள்கிறார்கள். அது எவ்வளவு வீதம் உதவி செய்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் எனது அணியினரை தேர்வு செய்யும் போது இரண்டு விதமாகப் பரிசோதிப்பேன். முதலாவது, ஒரு உண்மையான பிரச்சினையைக் கொடுத்து, அவர்கள் அதை எப்படி அணுகுவார்கள் என்று பார்ப்பேன். அவர்களுக்கு சரியான விடை தெரியாமல் இருந்தாலும், சரியான அணுகுமுறை மூலம் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதே எனக்கு முக்கியம். இரண்டாவது, அவர்கள் இதற்கு முதல் செய்த வேலையிடத்தில் சந்தித்த ஒரு கடினமான பிரச்சினையை எப்படி அணுகித் தீர்த்தார்களென்று பார்ப்பேன். இதன் மூலம் சரியான அணியினரைச் சேர்த்தேன்.
- அனுபவத்தால் அடிபட்டவர்கள் (Been there, Done that) : ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கும்போது சாதாரணமாக இளைய பருவத்தினரையும் அனுபவம் குறைந்தவர்களையும் நிறுவனத்தில் சேர வைப்பது சுலபம் என்பதோடு செலவும் குறைவு. ஆனால் புத்தகப்படிப்பை விட அனுபவத்தால் கற்பது நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கியம். அதற்கு சில அனுபவமுள்ள ஆட்களை வேலைக்குச் சேர்ப்பது அவசியம். அவர்களது அனுபவம் இரண்டு விதமாகவும் இருக்கலாம். ஒரு பக்கம் வெற்றிகரமான திட்டங்களில் வேலை செய்தவர்கள். மற்றையது, சில திட்டங்கள் வெற்றியின்றி தோல்வியாக முடிந்த அனுபவம் உள்ளவர்கள். இதன் மூலம் எப்படியான பிழைகள் விடக்கூடாதென்று கற்றுக்கொள்ளலாம்.
எனது இரண்டு நிறுவனங்களிலும் எனக்கு நெருங்கிய தொழிலாளிகள், நண்பர்கள், ஆலோசகர்கள் 20 – 30 வருட அனுபவம் கொண்டவர்கள். அவர்களிடம் கலந்துரையாடுவதன் மூலம் பல தவறுகளை நிகழாமல் தவிர்த்துக்கொண்டேன். அப்படி அவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் அவற்றைக் கண்மூடித்தனமாகக் கேட்பதில்லை. அவர்களது ஆலோசனை தற்போதைய நிலைமைக்கு பொருந்துமாவென்று ஆராய்ந்து செயற்படுவேன்.
- புதிய / வித்தியாசமான அணுகுமுறையை ஊக்குவித்தல் : பல கால நிறுவங்களுக்கும் புதிய நிறுவங்களுக்குமான ஒரு பெரிய வித்தியாசம், ஒரு வேலையைச் செய்வதற்கு அணுகும் முறையே. பழைய நிறுவனங்கள் பல கட்டுப்பாடு காரணமாகவும் வேலை செய்பவர்களின் அனுபவத்தாலும் எல்லோருக்கும் தெரிந்த பழைய முறையிலேயே செய்வார்கள். அதனால் அவர்களால் அந்த வேலையின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்படாது. ஆனால் புதிய நிறுவனங்கள் மரபார்ந்த முறைமைகளைக் கைவிட்டு, தேவைக்கேற்ப பயனுள்ள புதிய முறைமைகளைக் கைக்கொள்ளலாம். இதன் மூலம் பல மடங்கு மதிப்பு அதிகரிக்கும் விதமாக வேலைத்திட்டங்களைச் செய்துமுடிக்கலாம்.
- நுணுக்கமான அணுகுமுறை (Nuances) : நான் மேலே கூறியவையெல்லாம் பெரிய விடயங்கள். அவற்றை மிகவும் புரிந்து செயற்படுவதால் பெரிய பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம். இவற்றுக்கும் மேற்பட்ட விடயமே நுணுக்க அணுகுமுறை. ஏதாவது வேலை செய்யும்போது பல முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். அப்போது சில விடயங்கள் முக்கியமானதாகத் தெரியாது. ஆனால் அது தொடர்பில் நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்வில், தொழிலில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதைப் பொருட்படுத்திச் செய்வதுதான் நுணுக்கமான அணுகுமுறை.
சிலிக்கன் வலியைப் பார்த்தீர்களானால், அனைத்து ஆரம்ப தொழில்நுட்ப நிறுவனங்களும் பிரம்மாண்டமான யோசனைகளுடன் தான் தொடங்கும். அதில் பலரும் கடைசியில் அவர்களது இலக்கை அடையாமல் நிறுவனங்களை மூடிச்செல்வார்கள். எனது அவதானத்தின்படி அவர்கள் இப்படியான நுணுக்கமான கருத்துக்களை பொருட்படுத்தாது, முக்கியமாக வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்காமல் உதாசீனப்படுத்தி தமது சொந்தப் பாதையில் போவார்கள். இருக்கிற பணத்தையெல்லாம் செலவழித்த பின்புதான் அவர்களுக்கு ஞானம் பிறக்கும். ஆனால் அது காலங்கடந்த ஞானமென்பதால், எல்லாமே கைமீறிப் போயிருக்கும்.
- சிறிய வெற்றிகளில் மாடி கட்டிடுங்கள் (Build on Small Wins) : புதிய நிறுவனங்கள் வெற்றி பெறுவதற்கு அவர்கள் ஒரு பெரிய பிரச்சினைக்கு தீர்வுகண்டு, அந்தத் தீர்வால் கண்டுபிடித்த பொருட்களை அளவுக்கு மேல் செய்து, விற்றுப் பணம் சம்பாதிப்பார்கள். அதைப் பெரிய பொருளாக மட்டும் வைத்திருந்தால் செய்து முடிப்பது கடினமாக இருக்கும். முதல்படியாக பெரிய பிரச்சனைகளை சிறிய விடயங்களாக, பகுதி பகுதியாக உடைப்பது அவசியம். அந்தப் பகுதிகளைப் பலரிடம் பிரித்துக்கொடுத்து, நன்றாக அவதானித்து, ஒவ்வொருபடியாக முடிப்பதன் மூலம் வேலையால் உண்டாகும் மனஅழுத்தம் குறையும். அத்தோடு ஒவ்வொரு சின்ன வெற்றிகளையும் அடையும் போது அதைக் குழுவுடன் சேர்ந்து கொண்டாடுவதன் மூலம் நேர்மறைச் சமூகத்தை உருவாக்க முடியும்.
எனது அனுபவத்தின்படி, அணிக்குள் இருக்கும் வேதியல் (Team Chemistry), அணியின் மனத்துவம் (Team attitude) மற்றும் அணி எவ்வாறு ஒற்றுமையாக இருப்பது (Team Togetherness) என்பன மிக முக்கியமான நுணுக்கங்கள். அவற்றை அறிந்து அவதானித்து செயல்கள் புரிவதன் மூலம் வெற்றிகரமான நிறுவனங்களாக மாற்றமுடியும். என் அனுபவத்தின்படி வெற்றி மனப்பான்மையுடன் மேல்கூறிய ஆறு விடயங்களையும் கொண்ட அணியை அல்லது குழுவினரைச் சேர்ப்பதன்மூலம் எப்படியான சிக்கலையும் எதிர்கொண்டு வெற்றி கொள்ளலாம். அதிலும், அணியில் உள்ளோர் இவற்றை உணர்ந்து அதன்பின் குழுவாகச் சேர்ந்து முடிவெடுத்து, மேலுள்ள திருக்குறள் கூறியதுபோல் செய்து முடித்தால் வாழ்வில் வெற்றியடைவது நிச்சயம்.
தொடரும்.