ஆங்கிலமூலம்: கேட் குரோனின் – ஃபர்மான்
சுருக்கம்
அடக்குமுறை அரசுகள் எதற்காக மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குகின்றன? தங்களுடைய பணத்தையும் மூலதனத்தையும் செலவழித்து, சர்வதேச விமர்சனங்களை அமைதிப்படுத்தத் தவறுகின்ற அமைப்புகளை ஏன் உருவாக்குகின்றன? ஐயத்துக்குரியவகையில் மனித உரிமை நடத்தையில் ஈடுபடும் இப்படியான அரசுகள் தாராளவாத மேற்கத்திய அரசுகளையும் சர்வதேச ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்த அல்லது ஏமாற்றுவதற்காக இப்படிச் செய்கின்றன என ஆய்வுகள் கருதுகின்றன. மேற்கத்திய நாடுகளில் மனித உரிமைகளை முன்னெடுத்து ஆதரிப்பவர்களை நோக்கியே இந்த அரைகுறை மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குவதற்கான இலக்கு இருந்தால், இந்த உத்தி குழப்பமான, தவறான கணிப்பீடாகத் தெரிகிறது. அடக்குமுறை அரசுகள் சர்வதேசக் கருத்துக்கு முன்னிலை கொடுப்பவை என்பதையும், அந்தக் கருத்துகள் அதிகரித்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள், முன்னர் கவனிக்கப்படாத நோக்கர்களை நோக்கிக் கவனம் செலுத்துகின்றன என்கிறார் ஆசிரியர்: மனித உரிமைகளைச் செயற்படுத்துவதற்கான பலதரப்பு முயற்சிகளில், தடுக்கும் ‘வீட்டோ’ புள்ளிகளாகச் செயற்படக்கூடிய ஊசலாடும் நாடுகளை இந்த முயற்சிகள் நோக்குகின்றன. போருக்குப் பிந்தைய நீதிக்கான சர்வதேச அழுத்தத்திற்கு இலங்கையின் பதில் குறித்த ஆய்வின் மூலத்தைக் கட்டுரை விளக்குகிறது. தொடர்ச்சியாகப் பலவீனமான புலனாய்வு ஆணையங்களை உருவாக்குவது, மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் அழுத்தத்தால் அரைகுறை அமைப்புகளை உருவாக்கத் தூண்டப்பட்டாலும், இவர்களைத் திருப்திப்படுத்தவோ அல்லது ஏமாற்றவோ எடுக்கும் முயற்சி இதுவல்ல என்பதையும் ஆசிரியர் காட்டுகிறார். மாறாக, சர்வதேச விசாரணையை உருவாக்குவதை எதிர்க்கவும், அவ்வாறு செய்வதற்கான அரசியல் மறைப்பை வழங்கவும், சமாதானப்படுத்தும் கூட்டணி – தடுப்பு உத்தியின் ஒரு பகுதியாக, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் உள்ள பிற வளரும் நாடுகளை ஈர்ப்பதாகவே இத்தகைய முனைப்புகள் உள்ளன.
அ: அறிமுகம்
நேர்மையற்ற மனித உரிமை நடத்தைகள் என்பது சர்வதேச அரங்கில் பொதுவான அம்சமாகும். கடப்பாடுகள் பற்றிய விரிவான அமைப்பாக்கம் அதிகரித்து வந்தாலும், செயலாக்கம் முழுமையாக நடப்பதில்லை. விதிகளைத் தவிர்க்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகுகின்றன. அரசுகள் ஒருபோதும் தாங்கள் இணங்க விரும்பாத ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன. இவ்வொப்பந்தங்கள் மூலம் அபராதங்களை விதிக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்து, அவற்றைப் புறக்கணிக்கத் திட்டமிடும் நோக்குடனேயே அரசுகள் பங்கேற்கின்றன. இந்தப்போக்கு மனித உரிமைகள், உறுதிமொழிகள் வெறும் மலினமான பேச்சு மட்டும்தான் என்ற முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆனால் அத்தகைய பேச்சு எப்போதும் மலினமானது அல்ல. அரசுகள் வழக்கமாக மனித உரிமை நடத்தையில் ஈடுபடுகின்றன. அவை குறிப்பிடத்தக்க செலவுகளையும் அந்த அரசுகளுக்கு ஏற்படுத்துகின்றன. ஆனால் அவற்றின் வழியாக எந்தக் கடமைகளையும் நிறைவேற்றுவதில்லை. இந்த நடவடிக்கைகளில் சில, போதுமான நல்லெண்ண முயற்சிகள் எனவும் விளக்கம் சொல்லப்படலாம். எதற்கும் இணங்குவதில்லை என்ற தெளிவான நோக்குடனேயே அரசுகள் பெரும்பாலும் இவற்றை மேற்கொள்கின்றன.
உதாரணமாக, 2009 ஆம் ஆண்டு ஓர் எதிர்க்கட்சிப் பேரணியில் பாதுகாப்புப் படையினர் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றதை அடுத்து, சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களை எதிர்கொண்ட கினியாவின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு, விசாரணை நடத்த ஒரு விசாரணை ஆணையத்தை உருவாக்கியது. இந்தக்குழுவில் முப்பத்தொரு ஆணையர்கள் இருந்தனர். இதில் பங்கேற்க விமானம்மூலம், நான்கு வெளிநாட்டு நீதிபதிகள் வரவழைக்கப்பட்டனர்; மற்றும் ஒரு காவல் புலனாய்வாளர் குழுவும் வரவழைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை கினியாவின் பாதுகாப்புத்துறையினருக்குப் பிடிக்கவில்லை. தாங்கள், நடைபெற்ற படுகொலைகளுக்காகக் குற்றம் சாட்டப்படலாம் என்று அஞ்சினர். மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான உண்மையான உறுதிப்பாட்டை, அல்லது குறைந்தபட்சம் சர்வதேசப் பார்வையாளர்களுக்குத் தங்கள் நேர்மைத்தன்மையைப் பறைசாற்றவே இது ஏற்படுத்தப்பட்டது. சர்வதேசம் பரிந்துரைத்த ஒரு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்ட இப்படிப்பட்ட ஆணையம், ஆட்சிக்கவிழ்ப்பு அபாயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் ஆட்சிதொடர்ந்து, படைக்கு ஆட்சேர்ப்பும் செய்து, அடக்குமுறைத்திறனை வெளிப்படையாக வளர்த்துக் கொண்டது. அதேபோல், 2011 இல் அரபு வசந்தம் எனச் சொல்லப்பட்ட ஆர்ப்பாட்டங்களை வன்முறைமூலம் அடக்கியதற்காகச் சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, பஹ்ரைன், காவல் சித்திரவதையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நோக்கத்துடன் மூன்று நிறுவனங்களை உருவாக்கியது: ஒரு குறைதீர்ப்பாளரின் அலுவலகம், ஒரு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஒரு கைதிகள் உரிமைகள் ஆணையம். இந்த நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டது. இருந்தபோதிலும் அதேநேரத்தில் அரசாங்கம் மாற்றுக்கருத்தாளர்களைத் தண்டிக்கக் கடுமையான சட்டங்களை இயற்றியது. போராட்டக்காரர்களுக்கு எதிராக அளவுக்கதிகமான ஒடுக்குமுறைச்சக்தியைப் பயன்படுத்தியது.

இரண்டு நிகழ்வுகளிலும், சர்வதேச உரிமைக் குழுக்கள் இந்த முயற்சிகளை நிராகரித்தன. வெளிப்படையான நடவடிக்கை முன்னெடுப்புகளில் தோல்வியுற்ற வெற்றுத் திரைச்சீலை அலங்காரங்கள் அவை என்று நிராகரித்தன. கினியாவின் விசாரணை ஆணையம், நடந்த படுகொலையின் இறப்பு எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துச்சொல்லி ஆட்சியைக் காப்பாற்றி விடுவித்தது. பஹ்ரைனின் புதிய நிறுவனங்கள் சித்திரவதை குறித்த அதன் பதிவை மேம்படுத்தவில்லை. இரண்டு நிகழ்வுகளிலும், இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியான சர்வதேச அழுத்தத்தைத் தடுக்கத் தவறிவிட்டன. பஹ்ரைன் அதன் சித்திரவதை எதிர்ப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து சில ஆண்டுகளில் மனித உரிமை அமைப்புகள், மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் ஐ.நா. ஆகியவற்றிலிருந்து அதிகரித்துவரும் கண்டனங்களை எதிர்கொண்டது. கினியா முதலில் ஐ.நா. பொதுச்செயலாளர் தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கும், பின்னர் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முதற்கட்ட விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது.
சர்வதேச மனித உரிமைகள் அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக விலையுயர்ந்த அல்லது அரசியல் ரீதியாக சிரமமான நடவடிக்கையை மேற்கொண்ட, ஆனால் தங்கள் கடப்பாடுகளுக்கு இணங்காத அரசுகளின் எடுத்துக்காட்டுகள் இவை. நடவடிக்கை கோருபவர்களைத் திருப்திப்படுத்தாத நிறுவனங்களை உருவாக்க ஏன் இவ்வளவு செலவுகளைச் செய்யவேண்டும்? அவ்வாறு செய்யும் அரசுகள் இந்த நடவடிக்கைகள் எவ்வாறு அணுகப்படும் என்பதைத் தவறாகக் கணக்கிடுகின்றனவா? அல்லது இத்தகைய நடத்தைக்கு இன்னும் நுட்பமான தர்க்கம் உள்ளதா?
இந்தக் கட்டுரையில், இந்த நிகழ்வை விளக்க ஒரு கோட்பாட்டை நான் முன்வைக்கிறேன். இதை நான் ‘அரைகுறை மனித உரிமைகள் நடவடிக்கைகள்’ என்று அழைக்கிறேன். இவைபற்றிய முந்தைய ஆய்வுகள், முழுமையடையாத மனித உரிமைகளை முன்னெடுப்பதற்கு அரசுகளின் செலவாகும் மானியத்தொகைகளைப் பற்றி ஆராய்கின்றன. இந்த ஆய்வுகள் பொதுவாக சர்வதேச சமூகத்தின் விதிமுறைகளை ஊக்குவிக்கும் அமைப்புகளை இணங்கச் செய்வதையோ அல்லது திருப்திப்படுத்துவதையோ நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், அரைகுறை நடவடிக்கைகளில் ஈடுபடும் பல அரசுகளின் பார்வையாளர்கள் மேற்கத்திய அரசாங்கங்களோ அல்லது மனித உரிமைகளை ஊக்குவிக்கும் மற்றும் கண்காணிக்கும் சர்வதேச அமைப்புகளோ மட்டும் அல்ல என முந்தைய ஆய்வுகள் கருதுகின்றன. மேலும் சில நாடுகள் அரைகுறை மனித நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய பார்வையாளர்களை உருவாக்குகின்றன. இந்த ஊசலாடும் நாடுகள் மனித உரிமைகள் மீதான பலதரப்பு நடவடிக்கையை ஆதரிக்கலாம் அல்லது தடுக்கலாம். எனவே, தங்கள் மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்கத்தயங்கும் அடக்குமுறை நாடுகள், ஒருங்கிணைந்த சர்வதேச அழுத்தம் மற்றும் தணிக்கை போன்றவற்றைத் தடுக்க அரைகுறை நடவடிக்கைகளை ஓர் உத்தியாகப் பயன்படுத்தும் என்று நான் வாதிடுகிறேன். உள்ளடக்கத்தில் இது ஒரு கூட்டணியான தடுப்பு முயற்சியாகும். இது ஊசலாடும் மாநிலங்களின் ஆதரவைப் பெறுவதையும், மனித உரிமை மீறுபவரை ஆதரிப்பதன் நற்பெயருக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து இந்தக் கண்காணிப்பாளர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையில் நீதிக்கான சர்வதேசக் கோரிக்கைகளுக்கான பதில் குறித்த ஒரு வழக்கு ஆய்வின் மூலம், இந்த இயக்கவியலை நான் விளக்குகிறேன். அங்கு அரசாங்கம் பாரிய அட்டூழியங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க மறுத்துவிட்டது. ஆனால் தொடர்ச்சியான பலவீனமான பொறுப்புக்கூறல் நிறுவனங்களை உருவாக்கியது. பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை கடுமையாக விரும்பாவிட்டாலும், சர்வதேச அழுத்தங்களுக்குப் பதிலளிக்க அது குறிப்பிடத்தக்களவு செலவுகளைச் செய்து இவ்வமைப்புகளை உருவாக்கிறது. இந்த நடவடிக்கை அதன் உள்நாட்டு அரசியல் ஆதரவுத்தளத்தைக் கோபப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியது என்ற போதிலும், அதைச் செய்தது. மேற்கத்திய அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகளால் தூண்டப்பட்டாலும், இணங்கமறுக்கும் நிறுவனங்களை மீண்டும் மீண்டும் உருவாக்குவதன்மூலம், வேறுபட்ட கண்காணிப்பாளர்களிடம் அது சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது. வளரும் இறையாண்மை நாடுகளில் நடக்கும் இத்தகைய அரைகுறை மனித உரிமை முன்னெடுப்புகள்தான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில், மனித உரிமைகள் குறித்துத் தலையீடு செய்வதற்குத் தயங்குவதற்குக் காரணம்.
மனித உரிமைகள் நடத்தைக்கான கவனிக்கப்படாத நோக்கர்களை அறிமுகப்படுத்துதல் இந்தக்கட்டுரையின் முக்கிய பங்களிப்பு எனலாம். பலதரப்பு நடவடிக்கைகளை ஆதரிக்கவோ அல்லது தடுக்கவோகூடிய நிலையில் உள்ள ஊசலாடும் பாசாங்குத்தனமான நாடுகளைச் சுட்டிக்காட்டுதல் இதில் அடங்கும். மனித உரிமைகளை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக இந்த ஊசலாடும் அரசுகள், தங்களுக்குப் பக்கபலமாக இருக்க உதவுவதற்கு, அரைகுறை நடவடிக்கைகளைப் பின்பற்றுகின்றன என்பது எனது வாதம். சர்வதேசச் சட்டத்துடன் இணங்குதல், மனித உரிமைகள் பற்றிய அழுத்தத்தின் செயற்றிறன், சர்வதேச அரசியலில் சொல்லாடல் போன்றவற்றின் பங்கு ஆகியவற்றைப் பற்றியும் இந்தக்கட்டுரை கவனம் செலுத்துகிறது. மனித உரிமைகளைமீறும் அரசின் நடத்தை மற்றும் சர்வதேச எதிர்வினை இரண்டையும் பாதிப்பதில், ஊசலாடும் நிலைப்பாடுள்ள அரசுகள் போன்ற நோக்கர்களின் பாசாங்குத்தன அரசியலைப் பற்றிய புதிய பார்வையை நான் வழங்குகிறேன்.
ஆ: கோட்பாடு
கடப்பாடுகள் பற்றிய மரபான கோட்பாடுகள், உலகளாவிய சட்டத்திற்கு அரசுகள் அளிக்கவேண்டிய பதில்களுக்கான கேள்வியானது, இணக்கத்துக்குரிய நிலையில் உள்ளதாகவும், இணக்கத்தை இழுத்தடித்துத் தவிர்ப்பதாகவும் இருமைநிலை கொண்டதாக உள்ளதெனக் கருதுகின்றன. இந்த இருமைப்பாட்டினால் ஏற்படும் பின்னடைவுநிலை, கடப்பாடுகளுக்குரிய நடைமுறையை மேலும் சிக்கலாக்குகின்றன. உயர்ந்த மற்றும் குறைந்த மதிப்புகளை உள்ளடக்கிய ஒரு அளவுகோலாக அவற்றைக் கருதுவதன்மூலமும் இந்நிலை ஏற்படுகிறது. தற்செயலானவை அல்லது நன்னம்பிக்கை, இணக்கம் போன்ற வகைப்பாடுகள் கடப்பாட்டுக்குரியநிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
உலகத்தரங்களை நிறைவுசெய்யத் தவறிய, நல்லெண்ண முயற்சிகளின் சாத்தியக்கூறுகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆனால் கடப்பாடுகளுக்கு இணக்கமின்மை உடைய நடவடிக்கைகள் குறைவான கவனத்தைப் பெற்றுள்ளன. நேர்மையற்ற உறுதிமொழிகளை அரசுகள் ஏன் செய்கின்றன என்பதில் இணக்கமின்மை குறித்த ஆய்வுகள் கவனம் செலுத்தியுள்ளன. அரசுகள் உள்நாட்டு நோக்கர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் அழுத்தம் அற்றுப்போனவுடன் வழமையான நிலைக்குத் திரும்ப விரும்புகின்றன.
சுட்டிக்காட்டப்பட்டு அவமானப்படுத்தலுக்கும் வெளிப்புற அழுத்தங்களுக்கும் ஆளாகக்கூடிய நாடுகள் தங்களிடையே தந்திரோபாய உடன்பாடுகளைச் செய்யலாம். அவை சொல்லாட்சி, ஒப்பந்தங்களில் கூட்டு ஒப்புதல் அல்லது உள்நாட்டுக் கொள்கைகளை அமல்படுத்துதல் போன்ற வடிவங்களில் அவற்றை முன்னெடுக்கலாம். இந்த நடவடிக்கைகள் முதலில் கள்ளமற்றமுறையில் எடுக்கப்பட்டாலும், காலப்போக்கில் அவை வழக்கமாக ஆகி, மனித உரிமைகள் விதிமுறைகளை உள்நாட்டுமயமாக்குவதற்கும் மற்றும் நிறுவனமயமாக்குவதற்கும் பங்களிக்கின்றன. இதன் விளைவு, ‘விளைவற்ற கொள்கை நடவடிக்கை’ எனக்கூடத் தோன்றலாம். இவை ஒடுக்குமுறை அரசுகளை கடப்பாடுகளுக்குள் தள்ளும் ஒரு பொறியாகவும் மாறிவிடலாம்.
உலகளாவிய கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் உறுப்பினர்களின் கடப்பாடுகளுக்கான இணக்கத்தைக் கண்காணிக்கும் சிலவற்றைச் செய்கின்றன. ஆனால் அவை பொதுவாக மீறல்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. ஆனால் அரசுகள் இதைச்செய்ய உடனடியான பரஸ்பர வழிமுறை எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக, அரசுகள் பொதுக்கண்டனங்கள் முதற்கொண்டு உதவி அல்லது வர்த்தகத்தைக் குறைத்தல், ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பது, இராணுவத் தலையீடு வரை பல நெருக்கங்களை எதிர்கொள்கின்றன.
அரைகுறை நடவடிக்கைகள் என்பதன் தர்க்கம், மூன்று முக்கிய விடயங்களைச் சுற்றி வருகின்றன. முதலாவதாக, மிக முக்கியமாக, உள்நாட்டு அல்லது ‘சர்வதேச மனித உரிமை ஊக்குவிப்பாளர்களை’ திருப்திப்படுத்தும் எதிர்பார்ப்புடன், அரைகுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இரண்டாவது, அரைகுறை நடவடிக்கைகள் உயர்ந்த மனித உரிமைகள் நடைமுறையில் ஈடுபடுவதற்கான உறுதியான தேர்வின் விளைவாகும்; அவை எளிதான பேச்சில் உருவான தற்செயலான விளைவு அல்ல. மூன்றாவது, அரைகுறை நடவடிக்கைகள் மேற்படி மாதிரியின் தந்திரோபாயச் சலுகைகளைக் கணக்கில்கொண்டு கற்பனை செய்யப்பட்ட இணக்கத்திற்கான முதற்படியாக இருக்க வாய்ப்பில்லை. பாதி நடவடிக்கைகள் என்பது, இணக்கத்தை நம்பவைக்கும் பாசாங்குத்தனமான தீவிர முயற்சிகளாக அல்ல; மாறாக, மனித உரிமைகளை மீறுபவரைப் பாதுகாப்பதுபோல் தோன்றுவதைத் தவிர்ப்பதாக அமைகின்றன.
இ. முறைகள்
இந்தக்கட்டுரையில் வழங்கப்படுகின்ற கோட்பாடு, காரணகாரியச் செயல்முறைகள் பற்றிய வெளிப்படையான கூற்றுகளை உள்ளடக்கியிருப்பதால், அதன் விளக்கமதிப்பை மதிப்பிடுவதற்கு, செயல்முறைத் தடமறிதல் அணுகுமுறை மிகவும் பொருத்தமானது எனலாம். ஒரு தனித்த ஆய்வுபற்றிய செயல்முறைத் தடமறிதல் மட்டுமே ஒரு கோட்பாட்டின் பொதுவான விளக்கத்தின் திறனை நிறுவ முடியாது என்றாலும், மாற்று விளக்கங்களுடன் ஒப்பிடும்போது அதன் வலிமையை மதிப்பிடுவதற்கு இது உதவுகிறது. காரணத்திற்கும் விளைவுக்கும் இடையிலான உறவு நியாயமான முறையில் நிறுவப்பட்டிருக்கும்போதும், விளைவின் அடிப்படையிலான துல்லியமான வழிமுறைகள் தெளிவாக இல்லாதபோதும் இது மிகவும் மதிப்புமிக்கது. சாத்தியமான காரணங்கள் மற்றும் கவனிக்கப்பட்ட விளைவுகளுக்கு இடையிலான தொடர்புகளைக் கண்டறிய நுண்ணிய விளக்கத்தரவுகள் தேவைப்படுகின்றன.
அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகளின் காரணத்தர்க்கத்தை ஆராய, போருக்குப் பிந்தைய இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான நிகழ்சம்பவங்கள் பற்றிய விரிவான நுண்நோக்கைப் பயன்படுத்துகிறேன். இலங்கை இந்தப் பிரதிவாதங்களைச் சோதிக்க மிகவும் பொருத்தமானது. ஏனெனில் அது மக்கள் மீதான அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறலை வழங்குவதற்கான வலுவான சர்வதேச அழுத்தத்தையும், தண்டணையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு ஆதரவாக வலுவான உள்நாட்டு அரசியல் ஆதரவுகளையும் எதிர்கொண்டுள்ளது. அரைகுறை மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று நாம் எதிர்பார்க்கும் நிலையில் இந்த அரசு உள்ளது. மனித உரிமைகள் கோட்பாடு மற்றும் நடைமுறைக்கும் இப்படியான நிகழ்சம்பவ நுண்நோக்குகள் முக்கியமானவை. இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசாங்கப் படைகளால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. எண்ணற்றவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்; பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்; காணாமல் போனார்கள். இது இருபத்தியோராம் நூற்றாண்டில் பொதுமக்களுக்கு எதிரான அரசாங்கத்தால் நடத்தப்பட்ட மிக மோசமான வன்முறையாக உள்ளது. சிரியா, டார்பூர் மற்றும் ரோஹிங்கியா நெருக்கடிகளுக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு மக்கள் மீதான அட்டூழியமாக இது இருக்கிறது. இருப்பினும், இலங்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லாததாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நடவடிக்கையிலிருந்து சீனாவால் பாதுகாக்கப்பட்டதாலும், இந்தக் கொடுமைகளுக்கு நீதி பெறுவதற்கு சர்வதேசச் செயற்பாட்டாளரிடையே விலையுயர்ந்த ஒருங்கிணைப்புத் தேவைப்படுகிறது. கடுமையான நிகழ்சம்பவங்கள் தொடர்பில் உள்ள மனித உரிமைகளைச் செயற்படுத்துவதற்கான முயற்சிகள் எவ்வாறு செயற்படுகின்றன என்று அறிவதற்கு போருக்குப் பிந்தைய இலங்கை சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.
இலங்கையில் போருக்குப் பிந்தைய நீதி குறித்த சர்வதேச விவாதங்கள், முதன்மையாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் நடைபெற்றன என்பது இந்த நிகழ்சம்பவத்தின் கனதியை அதிகரிக்கிறது. மனித உரிமைகள் கவுன்சில் பலவேளைகளில் ‘சக கூட்டாளிகளின் மதிப்பாய்வு நிகழ்விடமாக’ இருக்கிறது. பெரும்பாலும் இது, சக ஊசலாடும் நாடுகளின் பார்வையாளர்களிடம், மனித உரிமைகளை மீறுபவர்கள், தங்கள் நடத்தையைப் பாதுகாக்க முயற்சிகளில் ஈடுபடும் இடமாகும். இந்தக் கோட்பாடு எதிர்பார்க்கும் வகையான சட்டப் பந்தாடும் விளையாட்டுகளைக் கவனிப்பதற்கான ஒரு தளமாக இந்த இடம் இருக்கலாம். மனித உரிமைகள் கவுன்சிலின் (அதன் முன்னோடி அமைப்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்) அறிஞர்கள் கவனிப்பின்படி, ‘பலவீனமான நாடுகளின் பன்முகத்தன்மை மற்றும் நிறுவனச் செல்வாக்கைத் தங்கள் நன்மைக்காகப் பயன்படுத்தும் திறன்’ என்பது இங்கு விளையாடுகிறது. சக்திவாய்ந்த நாடுகளின் மனித உரிமை விருப்பங்களுக்கு எதிரான விளைவுகள் இங்கு நடந்தேறுவது மிகவும் சாத்தியமானதும் பொதுவாக நடப்பதுமாகும்.
தங்களை நிறுவும் போட்டியில் வெற்றிபெறும் குற்றவாளி நாடுகளுக்கே, உண்மையான நன்மை இங்கு கிடைக்கிறது. பலவீனமான நாடுகளுடன் கூட்டணி போட்டு சக்திவாய்ந்த, மனித உரிமைகளை ஊக்குவிப்பவர்களைத் தோற்கடித்த, தெளிவான முன்னுதாரணமும் இங்கே உள்ளது. மனித உரிமைகள் கவுன்சில் அதன் சொந்த உரிமைத்திறனை உணர்ந்துகொள்ள ஒரு முக்கியமான நிறுவனம்தான். மனித உரிமைகளிலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் இந்தக்காலத்தில், கவுன்சிலின் அரசியல், மிகப்பொதுவாகப் பொருந்திவரக்கூடிய பல்முனை மனித உரிமைகள் செயலாக்க மாதிரியை வழங்கக்கூடும்.
பல ஆண்டுகளாகச் செய்த தரம்காண் அணுகுமுறைமூலம் இந்த நிகழ்சம்பவ ஆய்வைக் கட்டமைத்தேன். இதுவரை ஒப்புக்கொள்ளப்படாத பாரிய கொடுஞ்செயல்களின் தன்மையை அறிய வேண்டியிருந்தது. அதைப்பற்றிய முக்கிய தகவலறிந்தவர்களுடன் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், ஆழமாக அரசியல்மயமாக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்த முரண்பாடான கூற்றுகளை மதிப்பிடுவதற்கும், விளக்குவதற்கும் தேவையான சூழல் அறிவை வளர்ப்பதற்கும், உள்ளடக்கத்தின் உணர்திறன் தன்மையை அறிய ஓர் ஆழம் பொதிந்த அணுகுமுறையொன்று தேவைப்பட்டது. பிற அறிஞர்கள் உற்றுநோக்கிய வகையில், இத்தகைய அணுகுமுறைகள் ‘முறையான நேர்காணல்களை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு செய்யும் ஆய்வைவிடவும் குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளன’.
இது ஒரு நேர்காணலின் ‘உள்ளார்ந்த நுணுக்கமான தரவுகளைப்’ பகுப்பாய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு இடமளிக்கிறது.’ தகவலறிந்தவர்களின் பேச்சு, பேசப்படாத எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் ஆகியவை இப்படிப்பட்ட நுணுக்கமான தரவுகளாகும். அவர்கள் எப்போதும் தங்கள் கதைகள் அல்லது நேர்காணல் பதில்களில் அவற்றை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அவை வேறுவழிகளில் வெளிப்படுகின்றன. போருக்குப் பிந்தைய இலங்கை போன்ற அடக்குமுறைச் சூழல்களில் இந்த அணுகுமுறையும் உற்றுநோக்கலும் மிகவும் முக்கியமானது. அங்கு உணர்திறன் வாய்ந்த தலைப்புகளில் உரையாடும்போது ஏற்படும் மௌனம், பேச்சில் சொல்லப்படுவதைவிடவும் அதிகமான தகவல்களைத் தெரிவிக்கும்.
வெளிப்புறமாகத் திணிக்கப்பட்ட மற்றும் சுயமாகத் திணிக்கப்பட்ட இத்தகைய மௌனங்களைப் புரிந்துகொள்ளும் திறன், இந்தச் சூழல்களில் நிறைந்த அரசியலைப் பகுப்பாய்வு செய்வதற்கு மிகவும் முக்கியமானது. எனவே கீழே வழங்கப்பட்ட கண்டுபிடிப்புகள், நேர்காணல்கள், பங்கேற்பாளர் கண்காணிப்புகள், களக் கண்காணிப்புகள் மற்றும் இலங்கைக்கான ஆறு பயணங்களின் போது மேற்கொள்ளப்பட்ட முதன்மை மூலமான ஆய்வுகள் ஆகியவற்றின் கலவையை அடிப்படையாகக் கொண்டவை.

இந்தக் களப்பணியில் சில சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. முதன்முறையாக நான் இலங்கைக்குச் சென்றபோது, ‘போர்க்குற்றங்கள்’ என்ற சொற்றொடர் பொதுமக்களிடையே அரிதாகவே அறியப்பட்டிருந்தது. போருக்குப் பிந்தைய நீதிபற்றிய விவாதங்கள், பேச்சுகள் கண்களை மூடிக்கொண்டு கிசுகிசுப்பாகவே நடத்தப்பட்டன. பொறுப்புக்கூறலை ஆதரித்த ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், துரோகிகள் என்று முத்திரைகுத்தப்பட்டு வன்முறையூடாக அச்சுறுத்தப்பட்டனர். இராணுவத்தால் கொடுமைப்படுத்தப்பட்டதாக குரல் எழுப்பிய சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் பயங்கரவாதத்தின் அனுதாபிகள் என்று கேலி செய்யப்பட்டன. இதற்கிடையில், ஆட்சியை விமர்சிக்கும் நபர்களை உயர் தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்கம் நேரடியாகவும் கண்காணித்தது.
இப்படிப்பட்ட தேவையான முன்னெச்சரிக்கைகள் இருந்தபோதிலும், முன்னாள் போர்வலயத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில், ஏழு மாவட்டங்கள் உட்பட, நாடு முழுவதும் பயணம்செய்து, போர்க்குற்றங்களுக்கான நீதிகுறித்து அனைத்துத்தரப்பு மக்களுடனும் பேச முடிந்தது. மொத்தத்தில், பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள், முன்னாள் இலங்கை இராணுவத் தலைவர்கள் மற்றும் சர்வதேச சிவில்சமூகத்தின் பிரதிநிதிகள் உட்பட சம்பந்தப்பட்டவர்களுடன், பொறுப்புக்கூறலில் உள்நாட்டு அரசியல் குறித்து, எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட முறையான நேர்காணல்களை நடத்தினேன்.
நியூயோர்க், வாசிங்டன் டி.சி, லண்டன், ஜெனீவா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பொறுப்புக்கூறலின் சர்வதேச அரசியல் குறித்துக் கூடுதல் நேர்காணல்களை நடத்தினேன். அத்துடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான கூட்டங்களில் நூற்றுக்கணக்கான மணிநேரப் பதிவு செய்யப்படாத உரையாடல்கள் மற்றும் பங்கேற்பாளர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மார்ச் 2014 இல், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 25 ஆவது அமர்வு கண்காணிக்கப்பட்டது. இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆர்வலர்களுடனான மாநாடுகள், கூட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளும் கண்காணிப்புச் செய்யப்பட்டன. இந்த முறைமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து, போருக்குப் பிந்தைய நீதிப்பிரச்சினையில் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான முன்னும் பின்னுமான ஐந்து ஆண்டுகால உறவுகள் பற்றிய விரிவான தரவுகளை வழங்கின.