அனுராதபுரம் மாவட்டத்தில் ஹந்தகல மலைக் குகைகள் அமைந்துள்ளன. மதவாச்சியில் இருந்து ஹொரவப்பொத்தானைக்குச் செல்லும் வீதியில் 16 கி.மீ தூரத்தில் பிஹிம்பியாகொல்ல நீர்த்தாங்கி கோபுரம் அமைந்துள்ளது. இதை அடுத்து காணப்படும் சந்தியில் இருந்து வட கிழக்குப் பக்கமாக செல்லும் கிறவல் பாதையில் சிறிது தூரத்தில் காணப்படும் உரபிணுவெவ சந்தியைக் கடந்து 4 கி.மீ தூரத்தில் ஒரு முச்சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து வலது பக்கமாகச் செல்லும் வீதியில் சுமார் 400 மீட்டர் தூரத்தில் ஹந்தகல கந்த விகாரையும், அதன் பின்பக்கம் ஹந்தகல மலைக் குகைகளும் காணப்படுகின்றன. இது ஹந்தகல கந்த விகாரைக்குச் செல்லும் குறுக்குப் பாதையாகும்.
அடுத்த பாதை பிஹிம்பியாகொல்ல நீர்த்தாங்கி கோபுரத்தைக் கடந்து மேலும் 4 கி.மீ தூரம் சென்றதும் காணப்படும் ரத்மல்கஹவெவ சிவன் கோயிலை அடுத்து உள்ள ரத்மல்கஹவெவ நாற்சந்தியில் இருந்து வடக்குப் பக்கம் செல்லும் பாதையாகும். இச்சந்தியில் இருந்து 2 கி.மீ தூரம் சென்றதும் ஹிந்தகலகந்த சந்தியை அடையலாம். இங்கிருந்து இடது பக்கமாகச் செல்லும் பாதையில் மேலும் இரண்டரை கி.மீ தூரத்தில் பாதையின் இடது பக்கம் ஹந்தகல கந்த விகாரை காணப்படுகிறது.
இம்மலைப் பாறைகள் நிறைந்த பகுதி ஹந்தகல எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இதன் பொருள் நிலாப்பாறை என்பதாகும். இப்பெயர் இதற்கு வருவதற்கு ஒரு காரணமும் உள்ளது. இங்குள்ள பாறைகளில் சில முழு நிலவைப் போல வட்டவடிவில் காணப்படுவதால் இப்பகுதிக்கு ஹந்தகல அதாவது நிலாப்பாறை எனப் பெயர் உண்டானது.
இங்கு காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் பல இயற்கையான கற்குகைகள் அமைந்துள்ளன. இக்கற்குகைகள் தரைமட்டத்தில் இருந்து 150 அடி உயரம் வரை வெவ்வேறு அளவில், வெவ்வேறு வடிவில் வெவ்வேறு உயரத்தில் காணப்படுகின்றன. சில கற்குகைகள் எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் அமைந்துள்ளன.
இவற்றில் கற்புருவங்கள் வெட்டப்பட்ட 45 குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் மொத்தமாக 30 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் 14 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 16 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன.
1878 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது இலங்கையில் உள்ள பண்டைய கல்வெட்டுகளை ஆய்வு செய்து பதிவு செய்யும் பணிக்கு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் முல்லர் எனும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் அமர்த்தப்பட்டார். இவராலேயே முதன் முதலாக ஹந்தகல மலைக் குகைகளில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர் 1880ஆம் ஆண்டு ஹந்தகல மலைப்பகுதிக்குச் சென்று அங்கு மலைப்பறைகளில் காணப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்து, அங்கு காணப்பட்ட மூன்று கல்வெட்டுகள் பற்றிய விவரங்களை 1883ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Ancient Inscriptions in Ceylon’ எனும் நூலில் உள்ளடக்கியிருந்தார்.
டாக்டர் எட்வர்ட் முல்லருக்குப் பின் எச்.சி.பி. பெல் எனும் ஆங்கிலேய அதிகாரி ஹந்தகல கல்வெட்டுகளை ஆய்வு செய்தார். ஆங்கிலேயரின் சிவில் சேவை அதிகாரியான இவர் முதலாவது தொல்லியல் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்ட பின் இலங்கையின் பண்டைய தொல்லியல் மையங்களைக் கண்டறிந்து, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் 1892 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் ஹந்தகல மலைப்பகுதியில் காணப்பட்ட பண்டைய இடிபாடுகளை ஆய்வு செய்த போது அங்குள்ள மலைக் குகைகளில் காணப்பட்ட சில பிராமிக் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தார். இதுபற்றி அவரது 1892 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“Spent two full days at Handagala-kanda. This rocky ridge lies three and a half miles southwest of Wattewa. It is depressed about the center, with bare boulders crowning the wooded activity left and right. There is at least a score of caves with inscriptions on this comparatively insignificant hill… The several tiers of steps mounting the hill, the ‘pansala’ halfway up, the ruined dagoba mound on the summit, and the numerous caves, forcibly recall the Mihintale hills to which Handagala-kanda yields only in picturesqueness. Epigraphically, in a profusion of cave inscriptions of distinctly different ages, found side by side in a very perfect state of preservation, it equals Mihintale. The library of the temple is said to be one of the richest in the District in ola manuscripts, mainly religious works.”
ஹந்தகல கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்த பெருமையைக் கொண்டவர் சி.டபிள்யூ. நிக்கோலஸ் எனும் ஆங்கிலேய அதிகாரியாவார். கல்வெட்டு ஆய்வாளரான இவர் 1942 ஆம் ஆண்டு பலத்த சவால்களுக்கு முகம் கொடுத்து, மிகவும் சிரமத்தின் மத்தியில் அங்குள்ள மலைக் குகைகள் எல்லாவற்றிற்கும் சென்று அங்கு பொறிக்கப்பட்டிருந்த 30 பிராமிக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார். இவற்றை ஆராய்ந்து அவை பற்றிய விவரங்களைப் பதிவு செய்தார். இக் கல்வெட்டுகளில் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட 14 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், பொ.ஆ.மு. 1ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட 14 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும், பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட 2 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளதாக நிக்கோலஸ் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டுகள் பற்றிய விவரங்களை பேராசிரியர் எஸ். பரணவிதான 1970 இல் வெளியிடப்பட்ட ‘Inscriptions of Ceylon- Vol.1’ எனும் நூலில் வெளியிட்டார்.
ஹந்தகல மலைக் குகைகளில் காணப்படும் 30 பிராமிக் கல்வெட்டுகளில் 6 கல்வெட்டுகள் நாகர் பற்றியும், ஒரு கல்வெட்டு சிவன் பற்றியும், 3 கல்வெட்டுகள் வேலன் பற்றியும் குறிப்பிடுகின்றன. நாகர் பற்றிக் குறிப்பிடும் 6 கல்வெட்டுகளில் உள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பெருமகன் நாகனின் மகன் தீசன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு
நாகர் பற்றிக் குறிப்பிடும் பிராமிக் கல்வெட்டுகளில் ஒன்றில் ‘பெருமகன் நாகனின் மகன் தீசன்’ எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு,
“பருமக நாக புத திசஹ லேனே சகச”
இது ஆங்கிலத்தில் “The cave of Tissa, Son of the chief Naga [is granted] to the Sangaha” எனப் பொருள்படுகிறது. தமிழில் இது “பெருமகன் நாகனின் மகனான தீசனின் குகை சங்கத்தார்க்கு” எனும் அர்த்தம் கொண்டதாகும்.
பரத நாகன் பற்றிக் குறிப்பிடும் மூன்று கல்வெட்டுகள்
ஹந்தகல மலைக் குகைகளில் காணப்படும் நாகர் பற்றிய கல்வெட்டுகளில் மூன்று கல்வெட்டுகள் பரத நாகன் பற்றிக் குறிப்பிடுகின்றன. அக்கல்வெட்டுகளில் முதலாவது கல்வெட்டில் உள்ள வாசகங்கள் பின்வருமாறு,
“பத நாகஹ லேனே சகச மதலிகமிக புத கமிக திசஹ லேனே”
இதன் பொருள், “The cave of Lord Naga, [is given] to the sangha. The cave of the village councilor Tissa, son of the village councilor of Mathaligama.” என்பதாகும். இது தமிழில் “பரத நாகனின் குகை சங்கத்தார்க்கு…. மதலிகம எனும் கிராமத்தின் தலைவனின் மகனான கிராமத் தலைவன் தீசனின் குகை.” எனப் பொருள் கொள்ளப்படும்.
பரத நாகன் பற்றிக் குறிப்பிடும் இரண்டாவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு.
“பத நாகஹ லேனே”
இதில் “பரத நாகனின் குகை” என மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இக்குகை சங்கத்தார்க்கு தானமாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆங்கில மொழியில் “The cave of Lord Naga” எனப் பொருள்படுகிறது.
பரத நாகன் பற்றிய மூன்றாவது கல்வெட்டில் “பரத நாகனின் கற்குகை என எழுதப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு,
“பத நாகஹ லேனே சகச”
நாகனின் குகை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு
ஹந்தகல மலைக் குகைகளில் காணப்படும் நாகர் பற்றிய அடுத்த கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு,
“நாகஹ லேனே சகச”
இது “நாகனின் குகை சங்கத்தார்க்கு” எனப் பொருள்படுகிறது. இதன் பொருள் ஆங்கிலத்தில் “The cave of Naga, [is given] to tha sangha” என்பதாகும்.
நாக நகரம் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு
ஹந்தகல மலைக் குகைகளில் காணப்படும் நாகர் பற்றிய கல்வெட்டுகளில் ஒன்று பொ.ஆ.மு 1ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். அக்கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு,
“நாக நகரக வபி ஹமிக உபசக ததஹ லேனே உபசக ஹும க லேனே சகச”
ஆங்கில மொழியில் இதன் பொருள், “The cave of the lay devotee Datta, proprietor of the tank of Naga-Nagaraka, and the cave also of the lay devotee Huma, [is given] to the sangha.” என்பதாகும். இது தமிழில் “நாக நகரத்தில் உள்ள குளத்திற்கு சொந்தக்காரனான பாமர பக்தன் தத்தவினதும், பாமர பக்தன் ஹூமவினதும் குகை சங்கத்தார்க்கு” எனப் பொருள்படுகிறது.
இக்கல்வெட்டு நாகர் பற்றிய ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறது. அச்செய்தியானது ஹந்தகல பகுதியில் நாகரின் நகரம் ஒன்று இருந்தமை பற்றியதாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நாகர் அதிகளவில் வாழ்ந்துள்ளனர் என்பதும், அவர்களுக்கென ஒரு நகரம் இங்கு இருந்தது என்பதும் இக்கல்வெட்டு மூலம் நாம் தெரிந்து கொள்ளும் முக்கிய விடயமாகும்.