தலித் எழுச்சியில் ஹரிஜனங்கள்
Arts
22 நிமிட வாசிப்பு

தலித் எழுச்சியில் ஹரிஜனங்கள் 

August 19, 2024 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

இந்த இயலுடன் இருபதாம் நூற்றாண்டு வரையான தமிழ்ப் பண்பாட்டுச் செல்நெறி நிறைவுக்கு வரும். இங்கிருந்தான பயணிப்புக்கான தேடல் குறித்து அடுத்த பகுதிக்குரிய நான்கு இயல்கள் பேசவுள்ளன. இங்கே பேசுபொருளாக உள்ள தலித் – ஹரிஜன் என்பன தமிழகத்துக்கு அப்பாலான விடயங்களாக இருந்த போதிலும் தமிழ்ப் பண்பாட்டில் ஆழத் தடம் பதித்தவை. எந்தவொரு மக்கள் பிரிவினரும் ஏனைய பகுதியினரது தாக்குறவு இல்லாமல் சுயமாக விருத்தி பெற்றதும் இல்லை, அவற்றின் வாயிலாக ஏற்படும் ஊடுருவல்களை நிராகரித்துத் தூய்மை காத்ததுமில்லை.

இன்றைய இலங்கை இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட தேசமாக மட்டுமன்றி விடுதலைக் கொந்தளிப்பில் போர்க்குணத்துடன் இருந்த இந்தியாவைக் கண்காணித்துக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பின்தளம் என்றவகையில் வலுவான உட் கட்டமைப்புடைய நாடாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த நாடு இலங்கை. ஏகாதிபத்திய எதிர்ப்பில் தீவிர முனைப்புடன் இந்தியா பல முனைப் போராட்டங்களைக் கொந்தளிப்புடன் முன்னெடுத்த போதிலும் அந்தப் போராட்ட அணிகள் ஒவ்வொன்றினுள்ளும் ஊடறுத்த ஏகாதிபத்தியக் கருத்தியலின் வலுமை காரணமாக பூரண விடுதலை வெற்றி கொள்ளப்படுவது சாத்தியப்படாமலாயிற்று. சுதந்திரத்துக்கு தலைமையேற்ற அரை நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவக் குணாம்சத்துடன் இயங்குவதாக அமைந்த தாராளவாத அரைப் பிராமணியத் தேசியம் இன்றைய இந்துத்துவ மேலாதிக்கத்துக்கு வழிவிட்டுள்ளது. அதன் பேறாக, தொடர்ந்து முன்னேற இயலாமல் தளர்வடையும் உலக ஏகாதிபத்தியத் திணைக்குத் தலைமை தாங்கும் சக்தியாக இந்தியாவை இயக்குவதற்கு ஏற்ற செயலொழுங்குகள் முன்னிலை பெற்றுள்ளன.

விடுதலைத் தேசிய முனைப்பில் இருந்த இந்தியாவுக்கு எதிராகப் பின் தளமாக இலங்கையைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஏகாதிபத்தியத் திணையின் நம்பிக்கைக்குரிய தளமாக விருத்தி பெறும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாத இலங்கையை ஏகாதிபத்தியம் நாடி நிற்கிறது. பனிப்போர் நிலவிய எண்பதாம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சமவலுவுடைய போட்டியாளராக இயங்கி வந்தது சோவியத் யூனியன். அதனுடன் ஏகாதிபத்தியத்திணை அரசியல் மோதலில் ஈடுபட்டு இருந்த போது தமிழீழக் கோரிக்கை வலுவுடன் இங்கே செயற்பட்டவாறிருந்தது. பிரிவினையை நியாயப்படுத்தும் கருத்தியலைச் சுயநிர்ணயக் கோரிக்கையுடன் மார்க்சிஸ – லெனினிஸம் முன்னிறுத்திய காரணத்தால் இளைஞர் இயக்கங்களில் இணைந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இடதுசாரி மனப்பாங்கை வளர்த்தெடுத்தனர். சோவியத் யூனியன் – இந்திய ஆதரவு என்பன அப்போது அவர்களிடம் நிலவின.

அன்றைய இலங்கையின் ஐ.தே.க அரசு, ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் ஞான பிதாவான ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையில் இயங்கியது. சிங்களப் பேரினவாதத்தை வளர்த்தபடி ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியச் சார்பை முன்னெடுப்பவராக அவர் இருந்தார். ஈழத் தமிழ்த் தேசிய விடுதலை மனப்பாங்கை மேவியதாக மேட்டுக்குடியினரின் மேலாதிக்கத் தமிழ்த் தேசிய அணியாகிய விடுதலைப் புலிகள் அமைப்பு வன்முறை பிரயோகத்தில் தனித் தலைமையை எண்பதாம் ஆண்டுகளின் பிற்கூறில் கைப்பற்றி இருந்தது. அந்தவகையில் போராடும் இரு பகுதிகளுமே அமெரிக்க அணிக்குரியனவாக ஆகின. அதன்பேறாக, இஸ்ரவேலில் பயிற்சி பெற்ற ஒரே தமிழ் அமைப்பெனும் ‘பெருமை’ விடுதலைப் புலிகளுக்கு. ஒரு பக்கத்தில் புலி, மறுபக்கத்தில் அதனை முறியடிக்கும் இராணுவம் எனும் அணிகள் தம்மால் எவ்வகையில் பயிற்சி வழங்கி வளர்க்கப்பட்டன என்பதை இஸ்ரவேல் இராணுவத் தலைவர் பின்னர் தனது சுயசரிதை நூல் வாயிலாக வெளிப்படுத்தியும் இருந்தார்.

விடுதலை நாட்டத்துக்கு மாறாக மேலாதிக்க அபிலாசையே மேலோங்கி இருந்த காரணத்தால், அதுவரை இடதுசாரித் தமிழ்த் தேசியச் சக்திகளும் இணைந்து முன்னெடுத்த போராட்டங்களின் பயனாக 1987 இல் கிட்டிய கிழக்கும், வடக்கும் ஒன்றிணைக்கப்பட்ட மாகாண சபையையும் நிராகரித்து ‘அடைந்தால் தமிழீழம்’ என்ற கானல் நீருக்கு இரையாகிப் போயினர் விடுதலைப் புலிகள். அவர்களாவது ஆயுத பலத்தில் காலூன்றி நின்ற படி தமிழீழத்தை வெற்றி கொள்வோம் என்ற நம்பிக்கையுடன் கிழக்கும் வடக்கும் இணைந்த மாகாண அரசு எனும் வாய்ப்பைக் காலில் போட்டு மிதித்து அழித்தனர். அடித்தளமற்ற புலி வழிபாட்டை முன்னிறுத்தியவாறு மாகாண சபைகளே வேண்டியதில்லை, சமஷ்டியே எமது கோரிக்கை என்பதாக அரசியல் நடாத்தும் இன்றைய வாய்ச் சொல் வீரர்கள் எந்த நம்பிக்கையைக் கொண்டு இயங்குகிறார்கள்?

அரசியல் தீர்க்க தரிசனமற்ற விடுதலைப் புலிகளின் அதிதீவிர கற்பனாவாதச் சக்தியைப் பயன்படுத்தித் தமிழர் தாயக இருப்பு மெல்ல மெல்ல அரித்து இல்லாமலாக்கப்படுவதற்கு முன்னதாக ‘வடக்கு – கிழக்குத் தமிழர் தாயகம்’ என்பது அர்த்தபூர்வமான ஒரு நிதர்சனம். ஒன்றிணைந்த தமிழ் இளைஞர் இயக்கங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர் தாயகக் கோரிக்கையை முன்வைத்த போதிருந்த நிலை புலிகளின் தவறான ஆயுதப் போராட்ட முனைப்பால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது; வடக்கு – கிழக்கு மாகாண சபையைக் கூட மீளக் கட்டமைக்க இயலாது எனும் போது இவர்கள் முன்னிறுத்துகிற சமஷ்டி எப்படிச் சாத்தியமாகும்?

பேராசையின் உந்துதலில் ‘தமிழர் தாயகம்’ தொலைந்து போக வழிவகுத்ததைப் போலவே, கானல் நீரான சமஷ்டியை முன்னிறுத்தி மாகாண சபை என்ற நிதர்சனத்தையும் அழித்து விடுவதற்கு ஏகாதிபத்தியத் திணை முடிவு செய்து விட்டது. இன்று அதற்கு அமைவான செயலொழுங்குகளையும் இயக்க முறைமைகளையுமே மேலாதிக்கத் தமிழ்த் தேசியர்கள் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். 

மட்டுமன்றி, இலங்கையின் நான்கு இனத் தேசியங்களினது தலைமைகளுமே மேலாதிக்கத் தரப்பினரால் கைவசப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் மற்றைய இனத் தேசியத்தால் அச்சுறுத்தல் எனக் காட்டியவாறு, ஒன்றிலிருந்து மற்றைய இனத் தேசியம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் தலைமையைக் கையகப்படுத்தியுள்ள நான்கு இனத் தேசியங்களின் மேலாதிக்கச் சக்திகள் ஒரே குறிக்கோளுடன் இயங்குகின்றனர். இலங்கையை ஏகாதிபத்தியப் பிணைப்புக்குள் ஆட்படுத்துவதன் வாயிலாக சோசலிச மாற்றியமைத்தலை நிர்மூலமாக்குகின்றனர். தமிழர் தாயகம் மட்டுமல்ல, இலங்கைத் தேசம் என்பதும் காணாமலாகி ஏகாதிபத்திய அணியின் இராணுவ வல்லாதிக்கச் சக்தியாக இலங்கையின் எதிர்காலம் அமையும் வகையிலான மாற்றத்தைக் கண்டுணர இயலாத வகையில் இனவாத முனைப்பு இங்கே மேலோங்கியுள்ளது!

காலனிய – முதலாளித்துவ ஜனநாயகம் 

ஏகாதிபத்தியச் சுயநிர்ணயம் வடிவப்படுத்தியிருந்த தேசங்களின் இருப்பும் அவற்றிடையே ஏற்படுத்தி வரும் மாற்றங்களும் எவ்வளவு பெரும் வினோதங்கள்? இலங்கையர்கள் மட்டுமே இவ்வாறு ஏகாதிபத்தியச் சூத்திரக்கயிறால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக இருக்கவில்லை. உலகளவில் எந்தவொரு நாட்டையும் விட அதிகமாகவே விடுதலை வேட்கைக்கு மிகப்பெரும் அர்பணிப்புகளை நல்கிய இந்தியர்களும் கூட வேடிக்கைப் பொம்மைகளாக ஆடுகிறவர்களானதாலேயே ஏகாதிபத்தியத் திணையின் தலைமைக் கேந்திரமாக இன்று இந்தியா மாறிக்கொண்டிருக்கின்றது.

ஆட்ட நாயகர்களின் பாடு பற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக ஆட்டுவிக்கும் சக்தியான ஏகாதிபத்தியம் உருப்பெற்ற கதையைத் தெரிந்து கொள்வது அவசியம். ஐரோப்பிய நிலப்பிரபுத்துவம் வணிகத்தை – அறிவியல் தேடல்களை – மானுட ஆற்றல்களை முடக்கியவாறு பிரபுக்களின் நலன்களைப் பேணுவதனை மட்டுமே செயலுருப்படுத்தி வந்தது. அவ்வகையில் நிலப்பிரபுக்கள் பெற்றிருந்த தனியுரிமைகளைத் தகர்த்து ஜனநாயக சுதந்திரம், அறிவியல் நாட்டம், புத்துலகங்களைலப் வெற்றுகொள்ளும் வணிக உரிமை என்பனவற்றை வென்றெடுக்கும் புதிய சமூக சக்தியாக முதலாளித்துவம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து  ஐரோப்பாவில் தோன்றி வளர்ந்து வந்தது. நான்கு நூற்றாண்டுகளாக நிலப்பிரபுத்துவ ஆட்சி முறைக்குள் உழன்ற முதலாளித்துவம் பூரண விருத்தியை எட்டிவிட்ட பின்னரே நிலப்பிரபுத்துவத்தை அடியோடு களைந்தெறியும் தனக்கான அரசை வெற்றிகொள்ள இயலுமாக இருந்தது. அதனை 1789 இல் பிரான்சியப் புரட்சி வாயிலாக அந்தப் புதிய சமூக சக்தி சாதித்திருந்தது. மானுடம் கட்டுண்டு பேதலித்திருந்த இருண்ட யுகம் அங்கே தகர்க்கப்பட்டு, பிறப்பால் எவரும் தனியுரிமை பெற்றவர்களல்ல என்று ஓங்கி முழக்கமிட்டது பிரான்சியப் புரட்சி. அதன் வாயிலாக, அனைவருக்குமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பனவற்றைப் பிரான்ஸ் உலகின் முன்னால் பிரகடனப்படுத்திக் கொண்டது .

முன்னதாக மூன்று நுற்றாண்டுகளாக ‘புதிய கண்டங்கள்’ வரையிலும் காலனித்துவ ஆட்சிகளை ஏற்படுத்திய முதலாளித்துவம் தமது சொந்த மண்ணின் முடி மன்னருக்குக் கட்டுப்பட்ட வடிவத்திலேயே அந்தக் காலனிய ஆட்சியை இயக்கி வந்தது. பிரான்சியப் புரட்சியின் சுதந்திர வேட்கை ஏற்படுத்திய வீச்சுக் காரணமாக குடியேற்ற நாடுகளின் ஆக்கிரமிப்புகளைக் கைவிடுவதாகவும் காலனி நாடுகளுக்கான சுதந்திரத்தையும் பிரான்ஸ் அறிவித்திருந்தது. இந்த ‘உசார்மடமை’ மிகக்குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடித்தது. புதிதாகக் கட்டமைக்கப்பட அரசின் கீழ் முதலாளித்துவ அதிகாரம் வலுப்பட்ட போது ‘ஒடுக்கப்பட்ட தேசங்கள்’ மீண்டும் காலனித்துவ அடிமை விலங்கில் பிணைக்கப்படுவதற்குத் தடை ஏதும் இருக்கவில்லை. பூரண ஜனநாயகத்தை முன் மொழிந்த புரட்சிக் குறிக்கோள் இவ்வாறு குறுகத்தறிக்கப்பட்டது. அங்கே தனக்கான தேசத்தை வடிவப்படுத்திய கையுடன் தனது தேசிய நலனைப் பெருக்க வேண்டுமாயின் காலனி நாடுகளை மேலாதிக்கம் புரிந்து ஒடுக்கப்படும் தேசங்களாக நடாத்தியாக வேண்டிய தேவை முதலாளித்துவத்தை உந்தித்தள்ளியிருந்தது.

மூலதன அபகரிப்பு ஏற்படுத்திய தேசம் பிற தேசங்களை மேலாதிக்கம் புரிந்து மென்மேலும் அபகரிப்பை விரிவாக்க வேண்டிய உந்துதலை வழங்கிய படியே இருந்தமையால் முதலாளித்துவத்துக்கான தேசியம் ஆரம்பம் முதலாகவே ஏற்றத் தாழ்வுடன் இயங்கும் நிர்ப்பந்தத்தைப் பிறப்புரிமையாக வரித்துக் கொண்டிருந்தது.

முன்னதாக, திணை மேலாதிக்கம் விவசாயப் பெருக்கத்தின் பேறாக இருந்து, தொடர்ந்தும் விவசாய விருத்தியைப் பெருக்குவதன் பொருட்டு ஒடுக்கப்பட்ட திணைகளைச் சாதிகளாக ஆக்கி ஆயிரம் ஆண்டுகளின் பின்னர் நிலப்பிரபுத்துவ உச்சத்தைத் தொட்டு இருந்தமையை எமது வரலாறு எடுத்துக் காட்டியிருந்தது. அந்த வரலாறு பற்றிப் பேசி வரும் இந்தத் தொடரின் முதல் பகுதியில் திணை வாழ்வியல் தகர்ந்து உருவாகிய சாதிய ஏறாத்தாழ்வை நிலைநிறுத்துவதன் பொருட்டு அரசுருவாக்கம் புதிய பரிணமிப்பை எட்டி இருந்தது எனப் பேசி வந்துள்ளோம். அவ்வகையில் கட்டமைக்கப்பட்ட சாதிய வாழ்வியல் இரண்டாம் பகுதியாக அமைந்திருந்தது. இப்போது இறுதி நிலை அடைந்துள்ள மூன்றாம் பகுதியில் ஐரோப்பியச் சிந்தனைத் தாக்கம் ஊடறுத்த வேளை சாதியத் தகர்ப்புக் கருத்தியல்கள் தோற்றம் பெற்று வலுப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் கூறினையும் இருபதாம் நூற்றாண்டின் முன் அரைப் பகுதியையும் பார்த்து வருகின்றோம்.

சுதந்திரப் போராட்டம் தேசிய விடுதலையைச் சாத்தியப்படுத்திய பின்னர் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை தனக்கான முதன்மைப் பணியாகக் கொண்டியங்கிய அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டஇந்திய அரசியல் யாப்பு ‘தீண்டாமை தேசியக் குற்றம்’ என வலியுறுத்திச் சாதி பேதம் பாராட்டுவதற்கு எதிரான சட்டங்களை உருவாக்கி இருந்தது. தேசிய விடுதலைக்கான உணர்வுந்தலுடன் மூன்று தசாப்தங்கள் (எழுபதாம் ஆண்டுகள் வரை) சாதியம் தகர்வடையும் போக்கு வளர்வதாயிருந்தது. அந்த வளர்ச்சி முறிவடைந்து, எண்பதாம் ஆண்டுகளில் இருந்து சாதியவாதம் உக்கிரம் பெற்று வந்த நிலையில் இன்று சாதி பேதம் பல தளங்களிலும் தலைவிரித்தாடக் காண்கிறோம். இன்றைய நிலை பற்றி அடுத்த பகுதியில் பேசிக் கொள்ளலாம். இங்கு, சாதியத் தகர்வுக்கான சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இயக்க முறைமையின் பலம் – பலவீனம் என்பவை குறித்துப் பேசுவது அவசியம்.

அப்போது பல தளங்களில் சாதியத் தகர்ப்புச் செயற்பாடுகள் முனைப்புடன் இயங்கின. அவற்றில் மிகப் பலமான தலைமைச் சக்தியாக அம்பேத்கரின் தலித் அரசியல் முன்னெடுப்பு இருந்தது. சாதிய ஒடுக்குமுறை இன்னமும் தொடர்வதன் பேரில் சாதியத்துக்கு எதிரான இன்றைய போராட்டங்கள் தலித் இயக்கமாகப் பரிமாணம் பெற்றதில் அம்பேத்கரது ஆளுமைப் பலம் வெளிப்படக் காண்போம்!

அதேவேளை, இன்றைய தலித் அரசியல் முன்னெடுப்புகள் எந்த வகையிலும் இந்திய மக்களின் விடுதலைக்கு வழிவகுக்காததுடன் தலித் மக்களுக்கான விமோசனத்தையும் பெற்றுத்  தந்து விடவில்லை. மட்டுமன்றி, இந்தியா  இன்னும் தீவிரத்துடன் ஏகாதிபத்திய அணித் தலைமைக்கு முன்னேறிச் செல்வதனை உந்தித்தள்ளும் ஊக்க சக்தியையே தலித் அரசியல் (இந்துத்துவத்துக்கு எதிர் நிலையில் இயங்கும் தரப்பு உட்பட) வழங்கி வருகிறது. இத்தகைய தவறான வழித்தடம் இன்றைய தலைமைகளுக்கு மட்டும் உரியதன்று. இவர்கள் பின்பற்றும் அம்பேத்கரியக் கோட்பாடு, அம்பேத்கரின் முன்னுதாரணம் என்பவற்றிலும் இந்தப் பலவீனத்தின் அம்சத்தைக் காண இயலும். மராட்டியரான அம்பேத்கர் சென்ற நூற்றாண்டின் இருபதாம் ஆண்டுகளில் அரசியல் பிரவேசத்துக்கு வரும்போது இந்தியா முழுமையிலும் முதல் நிலைக் கல்வித் தராதரம் பெற்றவராக இருந்தார். சாதிய இழிவுபடுத்தல்கள் பலவற்றினூடாக அவற்றை முறியடித்து முன்னேறிய பின்னரும் சாதியப் புறக்கணிப்புகளைச் சந்தித்தார். அதன் காரணமாக ‘சாதி ஒழிப்பு’ அவருக்கு முன்னுரிமைப் பணியாக்கப்பட்டதில் வியப்பிருக்க இயலாது. 

அவரது அரசியல் பிரவேசம் ஏற்பட்ட இருபதாம் ஆண்டுகள் காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டம் வெகுஜன மயப்பட்டு வீறுகொள்ளத் தொடங்கியிருந்தது. இந்தியா விடுதலை பெற வேண்டுமாயின் ‘சாதி ஒழிப்பு’ முன் நிபந்தனையாக இருக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாட்டையும் மீறி சாதிகள் அற்றுப் போவதற்கு முன்னதாக நாடு விடுதலை பெற வேண்டும் என்ற காந்தியின் தலைமையிலான சுதந்திரப் போராட்டத்தில் மிகப் பெரும்பாலான தலித் மக்கள் அணிதிரண்டனர். தங்களை ‘ஹரி (விஷ்னு) ஜனங்கள்’ என அழைத்த காந்தியின் தலைமையை ஏற்றுவிட்ட தலித் மக்களாலும் நிராகரிக்கப்பட்டு, தான் தனிமைப்பட்டதான உணர்வுடன் பௌத்த மதத்துக்கு அம்பேத்கர் மாறியபோது இலட்சக்கனக்கான அவரது மஹர் சாதி மக்களும் 1956 ஆம் ஆண்டு அவருடன் பௌத்தத்தைத்  தழுவினர். ஒட்டுமொத்தமான ஒடுக்கப்பட்ட மக்களின்  விடுதலைக்கு மார்க்சியத்தை அவரால் அப்போது முன்மொழிய இயலவில்லை!

உலகளவிலான ஜனநாயக மீட்சியின் நாயகனாகத் தன்னை வெளிப்படுத்தியவாறு காலனி நீக்கத்துடன் ஓரம் கட்டப்படும் நிலைககு ஆட்பட்ட ஐரோப்பிய வெற்றிடத்தை நிரப்பும் ஏகாதிபத்திய அணிக்குரிய தலைமைச் சக்தியாக ஐக்கிய அமெரிக்கா வந்தவாறு இருந்த காலகட்டம் அது. தாம் முன்னிறுத்தும் விடுதலையின் மாற்று வடிவம் எனப் பௌத்தத்தை அமெரிக்கச் சிந்தனையாளர்கள் முன்னிறுத்திக் கொண்ட சூழலில் தான் அம்பேத்கர் நவ – பௌத்தராகப் பரிணமித்தார். அமெரிக்கா முன்னிறுத்தும் ஜனநாயக விடுதலை அளவுக்கு சோவியத் யூனியன் முன்னிறுத்திய பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார முன்னெடுப்பிலான சோசலிசத்தை அவரால் ஏற்க இயலவில்லை. அவர் எப்போதுமே பிரான்சியப் புரட்சி முன்னிறுத்திய ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பதையே பரப்புரை செய்து வந்தார். ருஷ்ய அக்டோபர் புரட்சியை மட்டுமன்றி மார்க்சியம் சமூக மாற்றத்துக்காக வலியுறுத்தும் மருத்துவச்சிக்கான பணி அளவிலான வன்முறைப் பிரயோகத்தையும் நிராகரித்தார். பிரான்சியப் புரட்சியின் குரலாக இருந்த சமத்துவத்துக்குரிய சோசலிசம் பற்றி அவர் அவ்வப்போது பேசியபோது ‘முதலாளித்துவ ஜனநாயகச் சோசலிசம்’ என்ற வடிவத்தையே கருத்தில் கொண்டிருந்தார். அடிப்படையில் சாதியத்தை வலியுத்திய இந்திய நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான காலனிய முதலாளித்துவ ஜனநாயகம் என்ற எல்லைக்கு உட்பட்டது அம்பேத்கரின் சமத்துவ நாட்டம்!

நிலப்பிரபுத்துவ முதலாளித்துவம் 

இந்திய வாழ்வியல் அவமான வடுக்களையே சுமத்தியபடி உள்ளது எனக் கண்டு நவீன மேலைத்தேச ஜனநாயகச் சிந்தனைகளைத் தொடக்கி வைத்த பிரான்சியப் புரட்சியால் கவரப்பட்ட அம்பேத்கர் அதுவரை எந்த நாட்டையும் காலனித்துவப் படுத்தாத அமெரிக்கா முன்னிறுத்திய சிந்தனைத் தேடல்களில் ஒன்றான பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார். அன்றைய ஜனநாயக கல்வியியலின் தலைசிறந்த ஆளுமையான ஜோன்டூயிடம் ஐக்கிய அமெரிக்காவில் பயின்றவர் அம்பேத்கர். அதற்காகப் பின்னால் உலகின் முதல் நிலை மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு உரியதாகிவிட்ட இன்றைய ஐக்கிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வார் எனக் கருதவேண்டியதில்லை. அன்று பல அம்சங்களில் விடுதலை, ஜனநாயகம் என்பவற்றைப் பேசியபடி அமெரிக்கா முன்னிறுத்திய பௌத்தம் அவரால் வரித்துக் கொள்ளப்பட்டமையானது இந்திய வாழ்வியலின் ஆன்மிகத் தள விடுதலைச் சிந்தனையை பௌத்தம் இரண்டாயிரத்தைநூறு வருடங்களுக்கு முன்னர் இங்கே விதைத்திருந்தது என்பதனாலேயே. இடையிட்டு நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு வழிபடுத்திய பௌத்த மதத்தை நிராரிக்க வேண்டி இருந்தமையாலேயே தனக்கான பௌத்தத்தை நவ – பௌத்தம் என வடிவப்படுத்தியிருந்தார் அம்பேத்கர்.

இந்திய வாழ்வியலில் இடையிட்டு வந்த சாதியத்தை கைவிட்டு இந்து மதம் வேதத்தின் வாயிலாக முன்னிறுத்திய வர்ணாசிரம தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய காந்தியுடன் தொடர்ந்தும் அரசியல் – கருத்துப் போராட்டத்தை நடாத்தி வந்தவர் அம்பேத்கர். இந்து மதம் வலியுறுத்தும் சாதிய வாழ்வியலுக்கான தீண்டாமை எனும்  நடைமுறையைக் கட்டிக் காப்பதற்கானதே வர்ணக் கோட்பாடு என்று அவர் அழுத்தி உரைத்தார். அத்தகைய இந்து மதத்தை ஒழிப்பதே சாதியம் நீங்க வழி என்றார். வர்ணக் கோட்பாடு உருப்பெற்று நீண்ட காலத்தின் பின்னரே தீண்டாமைக் கொடுமை மேலெழுந்தது. இடையிட்டு வந்த அதனையும் சாதியத்தையும் கைவிட்ட வர்ணக் கோட்பாட்டுக்குரிய இந்து மதம், சமூக நீதியை வழங்கி நீடித்து நிலவும் எனக் காந்தி வலியுறுத்தினார்.

இந்து மதம் இருக்கும் வரை தீண்டாமை தொடர்ந்து நிலவும் என்ற அம்பேத்கரின் தர்க்கத்துக்கு மாறாக பொது இடங்களில் தீண்டாமை பேணப்படுவதும் சாதிபேதம் பாராட்டுவதும் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னரும் இந்து மதம் வலுவுடன் இயங்கிவரக் காண்கின்றோம். இந்த அம்சத்தில் இந்து மதத்தை விட்டு நீங்க வேண்டியதில்லை என்ற காந்தியின் கருத்து வலுவுடையதாக இருந்தது (அவர் உயிருடன் இருந்த வரை அம்பேத்கர் மதம் மாறாமல் இருந்தமைக்கு ‘எந்த மதத்தைக் தேர்ந்தெடுப்பது’ என்ற தேடுதலில் ஈடுபட்டு இருந்ததே காரணமாகும்). காந்தி வலியுறுத்திய வர்ணக் கோட்பாடு அவர் விரும்பிய சமூக நீதிக்கு எதிரானது என்பதை இன்றைய வாழ்வியல் எடுத்துக்காட்டி வருகிறது. சாதி பேதத்தை வலுவிழக்கச் செய்யும் ஒரு நடைமுறையாகிய இட ஒதுக்கீட்டினை மிக வக்கிரத்துடன் எதிர்ப்பவர்களாக வர்ணப் பிரிவினர் (பிராமணர்கள் மட்டுமன்றி சூத்திரர்களான இடைச் சாதியினரும்) இயங்கி வரக் காண்கின்றோம்.

நிலப்பிரத்துவக் காலப் பண்ணை ஒடுக்குமுறையில் கல்வி – பண்பாட்டு விருத்திக்கு இடமளிக்காதிருந்த தொடர்ச்சியை ஏதோவொரு வடிவத்தில் நீடிக்கவே நால் வர்ணத்தவரும் முற்பட்டு வருகின்றனர். இந்த வர்ண தர்மத்தைக் காக்க வாளேந்தியவர் இராமர். அதன் பொருட்டு இந்துத்துவ வாதிகள் இராமருக்குக் கோயிலெடுத்து மக்களிடையே இராமராச்சியத்தை வலியுறுத்த முற்படுகின்றனர். இதே போன்ற இராமராச்சியத்தையே காந்தியும் வலியுறுத்தினார் எனக் கூறி அம்பேத்கர் – காந்தி இடையிலான கருத்தியல் மோதலை, ஒற்றைப் பரிமாணப்படுத்த முனையும் தவறு இன்று வளர்ந்து பூதாகரமாகி உள்ளது.

காந்தி முன்னிறுத்திய இராமராச்சியம் இந்துத்துத்துவ வாதிகளினதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ‘ஈவாரும் இல்லை, இரப்பாரும் இல்லை’ எனக் கூறும் வகையில் அனைத்து வர்ணப் பிரிவினரும் தத்தம் தொழில்களை ஆற்றிச் சமூக நீதியுடன் வாழ்ந்ததாகக் காட்டப்பட்ட இராமர் ஆட்சித் திறத்தையே காந்தி முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார். தம்மை புனிதராயும் பிறரை எதிரிகளாயும் கட்டமைத்த இந்துத்துவத்துக்கு எதிராக விட்டுக் கொடுக்காத போராட்டத்தைக் காந்தி முன்னெடுத்து வந்தமையாலேயே கோட்சே என்ற இந்துத்துவ வாதியால் கொல்லப்பட்டார் என்பது வலுமையான ஒரு வாழ்வியல் எடுத்துரைப்பு.

காந்தி தனக்கான ஆன்மிக அரசியலை எமக்கான பழமைச் சிந்தனைகளின் ஊடாகப் பெற்றவரல்ல. பிரதானமான அவரது அகிம்சை நெறி சமணத் துறவிகள் வாயிலாக அவருடன் ஏற்கனவே ஊடாட்டம் பெற்றிருந்த போதிலும் நவீன அரசியல் போராட்டக் கருவியாக அதனை வரிக்கும் தூண்டுதலை டால்ஸ்டாய் வாயிலாகவே அவர் பெற்றிருந்தார். நவீனத்துவத்தை இவ்வகையில் காந்தி ஏற்றுக் கொண்ட போதிலும் ஒட்ட அபகரிக்கும் மூலதன வெறியை நீக்கிய முதலாளித்துவ ஜனநாயகத்தை வேண்டி நின்றார். அவ்வாறே, நிலப்பிரபுத்துவம் வளர்த்தெடுத்த சாதி பேதங்களை அவர் நிராகரித்த போதிலும் அதற்கான அடித்தளத்தை வழங்கிய வர்ணக் கோட்பாட்டை அவரால் கைவிட இயலவில்லை. அந்த வகையில், நிலப்பிரபுத்துவ முதலாளித்துவம் எனும் நிலைப்பாட்டுக்கு உரியவர் காந்தி என வரையறுப்பது பொருத்தமானதாக இருக்கும்!

முதலாளித்துவச் சோசலிசம்

எமக்கான விடுதலைக்காகப் போராடிய மகத்தான ஆளுமைகள் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புமிக்க பல தியாகங்களுடன் தம்மை அர்ப்பணித்துப் போராடியவர்களே. இருப்பினும், ஏகாதிபத்தியம் விரித்த எல்லைக்கோடுகளில் இயங்க நிர்ப்பந்திக்கப்பட்ட காரணத்தால் நிலப்பிரபுத்துவத்தை முற்றாகத் தகர்க்க முற்படுபவர் காலனித்துவச் சாய்வுக்கு ஆட்படுவதும், காலனித்துவத்துக்கு எதிராக விட்டுக் கொடுப்பற்ற போராட்டத்தை முன்னெடுப்பவர் நிலப்பிரபுத்துவச் சாய்வுக்கு ஆட்படுவதும் என்ற நியதிகள் நிலவிய காரணத்தால் எமக்கான விடுதலையும் அரைக் கிணறு தாண்டிய கதையாக ஆயிற்று!

சாதியச் சமூகம் ஒன்றில் நவீன முதலாளித்துவம் முன்மொழிந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதும் கூட காலனிய முதலாளியமாகவோ நிலப்பிரபுத்துவ முதலாளித்துவமாகவோ வடிவம்பெற வேண்டியிருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று தொடர்ந்தும் சுதந்திர இந்தியாவை சமூக நீதியுடன் வல்லமை பொருந்திய சோசலிச சித்தாந்தத்தில் கட்டியெழுப்ப விரும்பிய ஜவகர்லால்நேரு மேற்படி இருதரப்பு ஆளுமைகளது பங்களிப்புகளையும் கையேற்று வளர்க்க முற்பட்டார். அவரும் கூட முதலாளித்துவ சோசலிசத்தையே நடைமுறைப்படுத்தினாரே அன்றிப் பாட்டாளி வர்க்க நோக்கிலான சமத்துவ சமூகம் நோக்கிய பயணிப்புக்கு எத்தனிக்கவில்லை!

இத்தகைய கலப்பு அரசியல் வடிவக் கையேற்பு எமக்கான திணை அரசியல் இயங்கு முறைக்கான பிரத்தியேகப் பண்பாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கம் கட்டியெழுப்புவதன் வாயிலாக மேலெழவுள்ள விஞ்ஞான சோசலிச முறை பற்றிப் பேசிய போது நிலப்பிரபுத்துவ சோசலிசம், சிறுமுதலாளி வர்க்க சோசலிசம் போன்ற கற்பனாவாதங்கள் நிலவியமை பற்றி மார்க்சும் எங்கெல்சும் தமது ‘கொம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ எனும் நூலில் பேசியிருந்தனர். ஆயினும் அவற்றினின்றும் வேறுபட்டது திணை அரசியலில்  நிதர்சனமாக இயக்கம் கொண்டிருக்கும் மேற்படியான கலப்புவடிவங்கள்.

அடுத்து வரும் நாலாவது பகுதியாகிய ‘சாதிகள் – இனத் தேசியங்கள் – தேசங்கள் இடையே சமத்துவமும் ஒப்பில்லாத பொதுவுடமைப் புத்துலகும்’ என்ற பேசுபொருள் இவற்றுக்கான அடிப்படைகள் குறித்து விவாதிக்கும்! 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4342 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)