வாய்விளங்கம்
போய்விளங்கும் வாயுவையே போக்கும்புகல ரிய
வாய்விளங்கம் தனையே வகையாக்கேள்-நீவிளங்க
எண்பது வாதம் போம் ஏந்திழையீர்கேளீர்
உண்பதற்கு நல்லதென்றே யோது
இதன் பொருள்: வாய்விளங்கம் வாய்வைப்போக்கும். எண்பது வகையான வாதங்களையும் போக்கும். உண்பதற்கும் நல்லது.
வாய்விளங்கத்தின் மிக முக்கியமான மருத்துவப்பயன் ஒன்றை இரசவர்க்கம் குறிப்பிடத்தவறிவிட்டது. நாடாப்புழு (tapeworm), கொக்கிப்புழு போன்ற குடற்புழுக்களுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகக் கூறப்படுகிறது. உலகப்பிரசித்திபெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செற்’ (The Lancet) 1887 ஆம் ஆண்டிலேயே நாடாப்புழுவுக்கு வாய்விளங்கம் சிறந்த மருந்தாகப்பயன்படக்கூடியது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
வாய்விளங்கமும் கொன்றைப்பட்டையும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட குடிநீரை இளஞ்சூட்டுடன் 40 தொடக்கம் 60 மில்லி லீட்டர் வரை ஒருநாளைக்கு மூன்று தடவைகள் குடிக்கக்கொடுத்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அகற்றப்படும்.
வாய்விளங்கமும் திரிபலையும் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) சேர்த்துத் தயாரிக்கப்பட்ட தூளை தேனுடன் அருந்தினால் தோல் வியாதிகள், புழுக்கள், நீரிழிவு என்பன தீரும் என்று கூறப்படுகிறது. முரசு வீக்கம், பற்சூத்தை போன்றவற்றைத் தவிர்க்கும் வாய்கழுவி (mouth wash) தயாரிக்க வாய்விளங்கம் பயன்படும்.
False black pepper என்பது இதன் ஆங்கிலப்பெயர். Vidang என்பது இதன் வர்த்தகப் பெயர். Embelia ribes Burm.F. என்பது இதன் லத்தீன் விஞ்ஞானப்பெயர்.
அதிமதுரம்
அதிமதுரம் பித்தம் அகற்றுமே அம்புவியில்
கொதியதொருவெட்டைதனைக்கூட்டுமே-மதியாமல்
பித்தவெட்டைபோக்குமே பேருலகில் மானிடர்க்கு
சித்தர்நிலை நிறுத்தும் செப்பு
இதன் பொருள்: அதிமதுரம் பித்தத்தினால் ஏற்படும் வயிறெரிச்சலைக் கட்டுப்படுத்தும். இரத்தக்கொதிப்பைக்கூட்டும்.
சுவாசக்குழாயின் சளியமென்சவ்வுகளைச் சீர்செய்து சளியச்சுரப்பை ஊக்குவிப்பதன் மூலம் வரட்டு இருமலைக் குணமாக்கும். வயிற்றுப்புண், நெஞ்செரிவு என்பவற்றுக்கான மருந்துகளிலும் அதிமதுரம் சேர்க்கப்படுகின்றது. வாய்ப்புண், தொண்டைப்புண் என்பவற்றைச் சீர்செய்யும்.
அதிமதுரத்தில் 24% ‘கிளிசெறைஸின்’ (Glycyrrhizin) என்னும் இரசாயனம் உள்ளது. இந்த இரசாயன மருந்துப்பொருள் வேறுபல பக்க விளைவுகளை ஏற்படுத்துமாதலால் இந்த ‘கிளிசெறைஸின்’ நீக்கப்பட்ட அதிமதுரத் தயாரிப்புகளை (de glycyrrhizinated licorice-DGL) இன்று சில மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
தொண்டை நோவு, தொண்டைக்கரகரப்பு அல்லது வரட்டு இருமல் இருக்கும்போது 1 கிராம் முதல் 5 கிராம் வரையிலான அதிமதுரவேர்த்தூளில் குடிநீர் காய்ச்சிக்குடிக்கவும் அல்லது ஒருநாளைக்கு மூன்று தடவைகள் ஒரு துண்டு வேரை வாயில் போட்டும் சுவைக்கலாம்.
அதிமதுரப்பொடியை நீரில் கலந்து ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து ,காலையில் அரிசிக்கஞ்சியுடன் அதிமதுரம் ஊறிய நீரைக்கலந்து குடித்துவந்தால் குடல்புண் (Peptic ulcer) குணமாகும்.
குடல்புண்ணுக்கு கிளிசிறசின் நீக்கப்பட்ட அதிமதுரச்சாறு ஒருநாளைக்கு மூன்று தடவைகள் எடுக்கலாம். அதிமதுரத்தை தொடர்ந்து ஒரு கிழமைக்குமேல் பயன்படுத்தல் கூடாது. குழந்தைகளுக்கு அதிமதுரக்குடிநீர் கொடுக்கவே கூடாது.
உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் பொட்டாசியம் பற்றாக்குறை, கடுமையான ஈரல் வியாதிகள் உள்ளவர்கள் அதிமதுரத்தைப் பயன்படுத்தல் கூடாது. சிறுநீர்க்கழிவை ஊக்குவிக்கும் மருந்துகளினால் (thiazide diuretics) ஏற்படும் நீரிழப்பை அதிமதுரம் மேலும் அதிகரிக்க வைக்கும்.
Licorice (Liquorice) என்பது அதிமதுரத்தின் ஆங்கிலப்பெயர். Glycyrrhiza glabra L என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்
[இலங்கையிலும் தமிழகத்திலும் அதிமதுரத்துக்குப் பதிலாக வெள்ளைக் குன்றிமணி (Abrus precatorius L, white variety) என்னும் செடியின் வேரை ‘நாட்டுஅதிமதுரம்’ என்னும் பெயரில் ஆயுர்வேத மருந்துக்கடைகளில் விற்கின்றார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் உண்மையான அதிமதுரத்தில் உள்ள இரசாயனமான ‘கிளிசெறைஸின்’ சற்றுக்குறைந்த அளவில் குன்றிமணியிலும் காணப்படுவதுதான்.]
திப்பிலிமூலம்
ஒப்பிலையே காயத் தொருதோஷம் கிட்டாது
திப்பிலிமூலம் தேயாது-இப்புவியில்
வாயுவலி குன்மம் வளர்சன்னியைத் துரத்தும்
நீயும் அறிவாய் நிலை
இதன்பொருள்: உடம்பில் முத்தோஷங்களால் ஏற்படும் நோய்களைத் திப்பிலிமூலம் தவிர்க்கும். வாய்வு, குன்மம், சன்னி என்பவற்றுக்கும் இது மருந்தாகும்.
திப்பிலிமரத்தின் வேர் திப்பிலிமூலம் என்று அறியப்படும். திப்பிலிமூலத்தை நன்றாகக் காயவைத்து இடித்து அரித்து எடுத்த தூளை ஒரு போத்தலில் அடைத்துவைத்துப் பயன்படுத்தவேண்டும். சாதாரண தலைவலிக்குத் திப்பிலிமூலம் சிறந்த மருந்தாகும். இருமல், தடுமல், நெஞ்சில் சளிக்கட்டு என்பவற்றுக்கும் திப்பிலிவேர் மருந்தாகும்.
திப்பிலிவேர்த்தூள் பெரியவர்களுக்கு 2 அல்லது 3 கிராம் என்ற அளவிலும் சிறுவர்களுக்கு 250 அல்லது 500 மில்லிகிராம் என்ற அளவிலும் ஒரு நாளைக்கு இரு தடவைகள் வெறும் வயிற்றில் 3 அல்லது 5 தேன் அல்லது நெய்யுடன் சேர்த்து எடுக்கவேண்டும். மருந்தை அருந்தியதும் இளஞ்சூடான வெந்நீர் அல்லது பால் அருந்த வேண்டும்.
தாளீசபத்திரி
தாளீசபத்திரிக்குத் தாபமுள்ள அத்திசுரம்
மாளீசல் போலே மடியுமே-யாளிதையே
பித்தமயக்கம் பிரமேகம் வாந்திவிக்கல்
பத்தத்து நோய் அகலும் பார்
இதன் பொருள்: தாளீசபத்திரிக்கு எலும்பு மச்சையில் கோளாறு காரணமாகத் தோன்றும் காய்ச்சல் தீரும். பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் மற்றும் நீரிழிவு வாந்தி, விக்கல் என்பனவும் சுகமாகும்.
தாளீசபத்திரி இலைச்சாறு இரத்தத்தைச் சுத்தம் செய்யும் குணம் உடையது. இதன் இலைகளைக் காயவைத்து, அரைத்து எடுத்த தூளினால் பல்துலக்கி வந்தால் பல்வலி தீரும் என்று கூறப்படுகிறது.
முட்டு, இழுவை போன்ற ஆஸ்துமாக் குறிகுணங்களைக்காட்டும் சுவாசத் தொகுதி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தாளீசபத்திரி மருந்தாகப் பயன்படுகிறது. இதுபற்றி இரசவர்க்கம் எதுவும் கூறாவிடினும் பதார்த்த குணசிந்தாமணி இந்தப்பயன்பாட்டை எடுத்துரைக்கின்றது.
நாசிகளுக்குப் பிணிகள் நாட்பட்டகாசஞ்சு
வாசமருசி வமனங்கால்-வீசிவரு
மேகமந்த சத்திசுரம் விட்டேகும் தாளிசத்தா
லாகுஞ் சுகப்பிரசவம்
(பதார்த்த குணசிந்தாமணி)
தாளிசபத்திரிக்கு சுவாசக்குழாய்களை விரிவுபடுத்தும் குணம் இதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் சளியைக் குறைத்து சுவாசத்தை இலகுவாக்கின்றது. குரல் கம்மலைச் சீராக்கவும் இது உதவுகிறது.
பசியின்மையைப்போக்கி உணவில் விருப்பத்தை ஏற்படுத்துகிறது. மீண்டும் மீண்டும் காக்கைவலிப்பு ஏற்படுவதைக்குறைக்கவும் தாளீசபத்திரி உதவுகிறது.
தாளீசாதிச் சூர்ணம் என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துக்கடைகளில் இதனைப் பெற்றுக் கொள்ளமுடியும். 125 மில்லி கிராம் தொடக்கம் 1 கிராம் வரையில் இம்மருந்தை எடுக்கலாம்.
Himalayan fir என்பது தாளீசபத்திரியீன் ஆங்கிலப்பெயர். Talispatra என்பது இதன் வர்த்தகப் பெயர். Abies webbiana LINDL என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.
சடாமாஞ்சில்
தேடாதொரு பித்தம் சிதறும் கிறுகிறுப்பு
ஆடாது உட்டணங் கண்டகலுமே-சடாமாஞ்சில்
நல்லகுணம்மெத்த நாட்டில்இதையறியும்
சொல்லவும் வேணும் சுகம்
இதன் பொருள்: சடாமாஞ்சில் என்னும் மூலிகையினால் பித்தத்தினால் ஏற்படும் தலைச்சுற்று மாறும். உடலில் உள்ள சூடு தணியும்.
மூளைக்கு ஊட்டச்சத்தை அளிப்பதாக அறியப்படும் இந்த மூலிகை உடலுக்கும் உள்ளத்திற்கும் சாந்தியையும் அமைதியையும் கொடுக்கிறது. பதற்றம், மன உளைச்சல் என்பவற்றைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. மனத்தளர்ச்சியைத் தவிர்க்க உதவும் இந்த மூலிகை செரொட்டினின் (serotonin) என்னும் ஹோர்மோனின் அளவைக் கூட்டுகின்றது. படிப்பு, மனநிலை, தூக்கம், தலைவலி, வாந்தி, பசி போன்ற பலவிடயங்களைச் சமநிலைப்படுத்துவதில் இந்த ஹோர்மோன் முக்கியமான பங்கு வகிக்கின்றது.
spikenard என்பது இதன் ஆங்கிலப்பெயர். Jatamansi என்பது இதன் வர்த்தகப்பெயர். Nardostachys jatamansi DC. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.
அக்கரகாரம்
அக்கரகாரத்தை ஆர்அறியப்போறார்கள்
உக்கிரமிகும் தோசத்தையோட்டும்-திக்கிரபேர்
கொண்டாற்சீலமுறும் கொம்பனையீர்கேளீர்
கண்டாலக்குணதோசமில்லைக் காண்
இதன் பொருள்: அக்கரகாரத்தின் பெருமையை யார் அறியப்போகிறார்கள். வெப்பத்தினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும். திக்குவாய் உள்ளவர்கள் இம்மருந்தினால் குணம் அடைவார்கள். இதனைப்பெற்றுக்கொண்டால் திக்குவாய்க்குண தோஷம் இல்லாமல் போய்விடும்.
பாடபேதம்
அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக்கால்
உக்கிரகாலத் தோடம் ஓடுங்காண்-முக்கியமாய்க்
கொண்டால் சலம் ஊறுங் கொம்பனையே தாகசுரம்
கண்டால் பயந்தோடும் காண்
(பதார்த்தகுணசிந்தாமணி)
இதன் பொருள்: அக்கரகாரத்தின் பெயரைக் கேட்டாலே வெப்பகாலத்துத் தோஷங்கள் போய்விடும். முக்கியமாக இதனை வாயில் போட்டுக்கொண்டால் உமிழ்நீர் அதிகரிக்கும். தாகத்தை ஏற்படுத்தும். காய்ச்சலைக் குணமாக்கும்.
மேலதிக விபரம்: சரகம், சுஸ்ருதம், வாகடம் போன்ற புராதன ஆயுள்வேதநூல்களில் இடம்பெற்றிராத, அரபு நாட்டுக்குரிய இந்தமூலிகை 13ஆம் நூற்றாண்டளவிலேயே இந்திய ஆயுள்வேத மருத்துவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
செகராசசேகர தொகுப்பின் இரசவர்க்கப்பிரிவில் இடம் பெற்றுள்ள அக்கரகாரம் பற்றிய பாடலில் இம்மூலிகை திக்குவாய்க்கு மருந்தாகும் என்ற விபரம் தரப்பட்டுள்ளது. எனினும் இவ்விடயம் பதார்த்தகுண சிந்தாமணியில் இடம்பெறவில்லை என்பதை கவனிக்கலாம். மாறாக உமிழ்நீர்ச் சுரப்பை அதிகரிக்கச்செய்யும் என்ற அவதானிப்பே தரப்பட்டுள்ளது. இந்தவகையில் இரசவர்க்கத்தில் இடம்பெற்றுள்ள பாடல் முழுமையானதாக காணப்படுவதை அவதானிக்கலாம்.
ஒருதுண்டு அக்கரகார வேரை சிறிதளவு நீருடன் கல்லில் தேய்ப்பதால் பெறப்படும் பசையில் மிகச்சிறிய அளவை தினந்தோறும் திக்குவாய் உடையவர்களின் நாக்கில் தடவிவரத் திக்குவாய் குணமாகும் என்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த எல்சூரி (Dr. Elchuri) என்னும் ஆயுள்வேத வைத்தியர். அக்கரகார வேர்த்தூள், மிளகுத்தூள் மற்றும் தேன் சேர்ந்த கலவையில் ஒரு கிராம் எடுத்து நாக்கில் தடவிவர, நாக்கு வரட்சி நீங்கி கொன்னை தட்டுவது அல்லது திக்குவாய் குணமாகும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து 4 முதல் 6 வாரம் வரை இதனை செய்யவேண்டும்.
அக்கரகாரமும் கற்பூரமும் சம அளவில் எடுத்துச் சேர்த்தரைத்த பற்பொடியினால் பல்துலக்கிவந்தால் சகலவிதமான பல்வலிகளும் குணமாகும் என்று கூறப்படுகிறது. Pellitory root அல்லது Pyrethrum root என்பது அக்கரகாரத்தின் ஆங்கிலப்பெயர். Anacyclus pyrethrum DC. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.
தொடரும்.