நாக குலத்தவர் பற்றிக் கூறும் ஹிபவுவ கல்வெட்டு
Arts
8 நிமிட வாசிப்பு

நாக குலத்தவர் பற்றிக் கூறும் ஹிபவுவ கல்வெட்டு

March 30, 2025 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

குருநாகல் நகரில் இருந்து தம்புள்ளைக்குச் செல்லும் வீதியில் இப்பாகமுவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து வடக்குப் பக்கமாக புல்னாவைக்குச் செல்லும் வீதியில் சுமார் 10 கி.மீ சென்றதும் பாதையின் இடது பக்கம் அதாவது மேற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மலைத்தொடரைக் காணலாம். இதுவே தொழுகந்த எனும் மலையாகும். இம்மலையின் கிழக்குப்பக்க அடிவாரத்தில் ஹிபவுவ எனும் காட்டுப்பகுதி அமைந்துள்ளது.

மலைப்பறைகள் நிறைந்த இக்காட்டுப்பகுதி நாகலேன என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஓர் இயற்கையான மலைக்குகையில் கற்புருவம் வெட்டப்பட்டு, பிராமி எழுத்துகளில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

“உதியஹ அயக பருமக நாக குலஹ லேனே சகச”

இதன் பொருள் “The cave of the family of the chief Naga, of prince Uthi, [is given] to the Sangha” என்பதாகும். இது “இளவரசன் உதியவின், பெருமகன் நாகவின் குலத்தவரின் குகை சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது” என்பதாகும்.   

இம்மலைக்குகை நாக குலத்தவர்களுக்குச் சொந்தமானது என்பது இக்கல்வெட்டின் மூலம் தெரியவரும் அரிய செய்தியாகும்.  இக்குகையைப் பயன்படுத்தி வந்த நாக குலத்தவர்கள் பின்பு இக்குகையை சங்கத்தார்க்கு தானமாக வழங்கியுள்ளனர்.

நாகனின் குகை பற்றிக் குறிப்பிடும் கும்புறுலேன கல்வெட்டு

குருநாகல் நகரில் இருந்து வடகிழக்குப் பக்கமாக தொடங்கஸ் லந்தைக்குச் செல்லும் வீதியில் 17 கி.மீ தூரத்தில் கும்புறுலேன ரஜமகா விகாரை சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து கிழக்குப்பக்கமாகச் செல்லும் வீதியில் உள்ள முத்துமாரி அம்மன் கோயிலைக் கடந்து, சுமார் 100 மீற்றர் தூரத்தில் கும்புறுலேன ரஜமகா விகாரை காணப்படுகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் ரிதி விகாரை மலை அமைந்துள்ளது.

இவ்விகாரையின் அருகில் உள்ள மலைப் பாறைகளில் இயற்கையாக அமைந்துள்ள கற்குகைகள் சிலவற்றில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. இக் கற்புருவங்களின் கீழே பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கற்குகைகளில் மொத்தமாக 8 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டில் நாகர் பற்றி எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:

“நாகஹ .. .. .. லேனே [உபச]க உதிய லேனே”

இதன் பொருள், Of Naga, the cave .. .. .. the cave of the [lay worshipper] Uttiya என்பதாகும். தமிழில் இது, “நாகவின் .. .. .. குகை பாமர பக்தன் உத்தியவின் குகை” எனப் பொருள்படும்.        

நாகதத்தன் பற்றிக் குறிப்பிடும் நுவரகந்த கல்வெட்டு

குருநாகல் மாவட்டத்தில் உள்ள வாரியப்பொல நகரிலிருந்து கிழக்கு நோக்கி ஹிரிபிடிய என்னுமிடத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள அமுணுகம எனும் ஊரின் வடக்கில் 5 கி.மீ தூரத்தில் நுவரகந்த மலைக் குகைகள் காணப்படுகின்றன. 

இங்குள்ள கற்குகைகளில் மொத்தமாக 20 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கல்வெட்டு நாகர் பற்றிக் கூறுகிறது. அதில் எழுதப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:

“பருமக உதயஹ நாகததஹ லேனே சகச”

இதன் பொருள், The cave of the chief Udaya [and] of Nagadatta [is given] to the Sangha. தமிழில் இது “பெருமகன் உதயவினதும், நாக தத்தவினதும் குகை சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது” எனப் பொருள்படுகிறது. நாகதத்த எனும் சொல்லின் அர்த்தம் ‘நாகத்தால் அளிக்கப்பட்டவன்’ என்பதாகும்.

பெருமகன் நாகன் பற்றிக் கூறும் பட்டஹமுல்லே விகாரைக் கல்வெட்டு

குருநாகல் மாவட்டத்தில் உள்ள வாரியப்பொல நகரில் இருந்து கிழக்கு நோக்கி ஹிரிபிடிய என்னுமிடத்துக்குச் செல்லும் வழியில் பிரதான வீதியில் இருந்து சற்றுத் தூரத்தில் காணப்படும் காடும், மலைப்பாறைகளும் நிறைந்த இடத்தில் பட்டஹமுல்லே விகாரை அமைந்துள்ளது.

இங்கு காணப்படும் இயற்கையான கற்குகைகளில் மொத்தமாக 4 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரு கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகர் பற்றிய முதலாவது கல்வெட்டில் இரண்டு வரிகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

“பருமக நாக புத பருமக அசலிய லேனே
அகட்ட அனகட்ட சட்டு திச சகச”

இதன் பொருள் “The cave of the chief Asali, son of the chief Naga, [is given] to the Sangha of the four quarters, present and absent” என்பதாகும். தமிழில் இது “பெருமகன் நாகவின் புதல்வனான பெருமகன் அசலியின் குகை நாலா திசைகளிலும் இருந்து வரும் சங்கத்தாருக்கு அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் வழங்கப்பட்டுள்ளது” எனப் பொருள்படும்.   

நாகர் பற்றிய இரண்டாவது கல்வெட்டின் நடுப்பகுதியில் உள்ள எழுத்துகள் சில சிதைந்துள்ளன. அக்கல்வெட்டில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“பத நாக ரஜ .. .. .. .. ஹ லேனே”

இதன் பொருள் “The cave of Lord Naga, King .. .. ..” என்பதாகும். இது “சுவாமி நாகவின் குகை, மன்னன்  .. ..” எனப் பொருள்படும். இக்கல்வெட்டுகள் இரண்டினதும் படியெடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கவில்லை.    


ஒலிவடிவில் கேட்க


About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்