நியூகினியாவை பூர்வீகமாகக் கொண்ட ஈரப்பலா பழங்காலத்திலிருந்தே மலாய் தீவுக்கூட்டத்திலும், பசுபிக் தீவுகள் முழுவதும் பயிரிடப்பட்டு வந்துள்ளது. பண்டைய காலங்களில் சேப்பங்கிழங்கு மற்றும் தேங்காயுடன் ஈரப்பலா சேர்ந்த உணவு பூர்வீகக்குடிகளின் ஆரோக்கியத்தைப் பேணிவந்துள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்பு, இந்த மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுகளைக் கைவிடும் வரை ஊட்டச்சத்துக்குறைபாடு, உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோயைத் தவிர்க்க உதவிய உணவின் ஒரு பகுதியாக ஈரப்பலா இருந்துள்ளது.
1778 ஆம் ஆண்டில் ஹவாய் தீவுகளைக் கண்டுபிடித்த இங்கிலாந்து நாட்டவரான கப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook) பசுபிக் தீவுகளில் ஈரப்பலாவைப் பார்த்தபோது அது மேற்கிந்தியத் தீவுகளில் அடிமைகளாக வேலை செய்தோருக்கு மலிவான சத்துணவாகப் பயன்படும் என்று கருதினார். ஜேம்ஸ் குக்கின் பரிந்துரைப்படி ஈரப்பலாவை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.
எச்.எம்.எஸ். பவுண்டி (HMS Bounty) எனப்படும் பிரிட்டிஷ் ரோயல் கடற்படைக் கப்பலில், கப்டன் வில்லியம் ப்ளிக் ((William Bligh) என்பவரும் அவரது குழுவினரும் தென் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள தீவுகளில் ஒன்றான டஹிடியை (Tahiti) அடைந்தனர். அங்கு அவர்கள் உள்ளூர் மக்களுடன் ஈரப்பலாவைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்தத் திட்டங்கள் திடீரென ஏப்ரல் 1789 இல் கைவிடப்பட்டன. கப்டன் ப்ளிக் தலைமையில் பணியாற்றிய எச்.எம்.எஸ். பவுண்டியின் குழுவினர் கப்பலின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதோடு ப்ளிக்கையும் அவரது 18 விசுவாசிகளையும் சிறு படகு ஒன்றில் ஏற்றிக் கடலில் விட்டனர். எனினும் ப்ளிக் உயிர் பிழைத்தார். (இந்த வரலாற்று நிகழ்வை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட Mutiny on the bounty என்னும் ஆங்கிலத் திரைப்படம் முதலில் 1935 ஆம் ஆண்டிலும் பின்னர் 1962 ஆம் ஆண்டிலும் இரண்டு முறை வெளிவந்துள்ளது.)
தனது முதலாவது முயற்சியில் தோல்வியுற்ற கப்டன் ப்ளிக் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரப்பலாவை எடுத்துவரும் நோக்கில் எச்.எம்.எஸ். பிரோவிடன்ஸ் (HMS Providence) என்னும் கப்பலில் மீண்டும் பயணித்தார். ஈரப்பலாவைக் கரீபியன் தீவுகளுக்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் இம்முறை கப்டன் ப்ளிக் வெற்றி பெற்றார்.
1793 ஆம் ஆண்டில், கரீபியன் கடலில் உள்ள ஒரு சிறிய தீவு நாடான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் கிங்ஸ்டவுனில் ஈரப்பலாக்கன்றுகளால் நிரப்பப்பட்ட HMS பிரோவிடன்ஸ் கப்பல் வந்தடைந்தது. ஈரப்பலா கரீபியன் தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும் அங்கு அடிமைத் தொழிலாளர்கள் ஈரப்பலாவுக்குப் பதிலாக வாழைப்பழங்களையே விரும்பியதால் காலனித்துவ மேலாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. இன்று இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, பசுபிக் பெருங்கடல், கரீபியன், மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் சுமார் 90 நாடுகளில் வளர்க்கப்படுகிறது. புதிதாக சுடப்பட்ட ரொட்டியைப் போன்ற பழத்தின் அமைப்பிலிருந்து ஈரப்பலாவின் ஆங்கிலப்பெயரான Breadfruit பெறப்பட்டது.
ஐரோப்பியரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஈரப்பலாவானது இலங்கை மக்களின், குறிப்பாகச் சிங்கள மக்களின் அன்றாட உணவில் உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பதை நாம் அறிவோம். இலங்கையர்களின் பிரதான உணவு அரிசி என்றாலும் பல கிராமவாசிகள் இன்னமும் அரிசிக்கு பதிலாக இந்த ஈரப்பலாவையே உண்கின்றார்கள். இந்த ஈரப்பலா சிங்கள மொழியில் ‘பத்-கச’ அதாவது சோற்றுமரம் என்றுகூட சொல்லப்படுகின்றது.
ஈரப்பலாவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஒல்லாந்தர்கள். 1796 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்கள், காலிக் கோட்டையில் முதலாவது ஈரப்பலா மரத்தை நட்டு, நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். ஏறக்குறைய 2 நூற்றாண்டுக்கு முன்னதாக நாட்டப்பட்டதாக கருதப்படும் இந்த மரமானது இன்னமும் காய்த்தபடி உள்ளதாக அறியமுடிகின்றது.
ஈரப்பலா நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது குளுக்கோஸ் அகத்துறிஞ்சலைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கையான வழிகளில் ஈரப்பலா ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஈரப்பலாவில் பொட்டாசியம், விட்டமின் C என்பன நிறைந்துள்ளன. ஒரு கப் ஈரப்பலாவில் சுமார் 1080 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. வயது வந்த ஆண் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 3,400 மில்லிகிராம் பொட்டாசியம் தேவைப்படுகின்றது. வயது வந்த பெண்களுக்கு தினசரி 2,600 மில்லிகிராம் தேவைப்படுகிறது. எனினும் பலர் இந்தச் சத்தைப் போதுமான அளவில் உட்கொள்வதில்லை.
ஒரு கப் ஈரப்பலா கிட்டத்தட்ட 64 மில்லிகிராம் விட்டமின் C யை வழங்குகிறது. இது வயது வந்த பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் 85% உம், மற்றும் வயது வந்த ஆண்களுக்கு 71% உம் ஆகும். இவற்றுடன் தேவையான அளவான 37 மில்லிகிராம் கல்சியத்தையும் தருகின்றது. ஈரப்பலாவில் உள்ள பிற விட்டமின்களில் பன்ரோதெனிக் அமிலம், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் K, விட்டமின் A மற்றும் ஃபோலேட் ஆகியவை அடங்கும். மற்ற தாதுக்களில் மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் செலினியம் ஆகியவை அடங்கும். ஈரப்பலாவில் கணிசமான அளவு மாச்சத்து (starch) உள்ளது. எனினும் இது பச்சையாக உண்ணப்படுவதில்லை. ஏனெனில் முறையாகப் பதப்படுத்தப்படாத அல்லது சமைக்கப்படாத ஈரப்பலா உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
ஈரப்பலா ரோஸ்ட் கறி இலங்கையில் மிகவும் விரும்பப்படும் ஓர் உணவாகும். ஈரப்பலா ரோஸ்ட் கறி செய்யும் முறை :
குறைந்த வெப்பத்தில் கொத்தமல்லி, சீரகம், மிளகு, மிளகாய், வெங்காயம், ஜாதிக்காய், இலவங்கப்பட்டை (கறுவா) மற்றும் கறிவேப்பிலை போன்ற மசாலாப் பொருட்கள் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். இவற்றுடன் தேங்காய்ப்பால் மற்றும் நறுக்கிய ஈரப்பலா சேர்த்து, பழம் மென்மையாகும் வரை கொதிக்க வைக்கவும். தொடர்ந்து கிளறி, கெட்டிப்படுத்துவதற்குத் தேவையான தேங்காய்ப்பால் சேர்க்கவும். ஒரு எண்ணெய்ச் சட்டியில், கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து ஈரப்பலாக் கறியுடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்கள் ஈரப்பலா சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் குடும்ப வைத்தியரை அணுக வேண்டும். ஏனெனில் ஈரப்பலா இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக வாழைப்பழங்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஈரப்பலா ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். விதையில்லா ஈரப்பலா மரங்கள் ட்ரிப்ளோயிட் (triploid 3n) ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவற்றில் இரண்டிற்குப் (diploid 2n) பதிலாக மூன்று குரோமோசோம்கள் உள்ளன.
சேந்தன் திவாகரம் உள்ளிட்ட மிகப்பழைய தமிழ் நிகண்டுகளில் ஆசினி என்னும் பெயர் ஈரப்பலாவுக்கு உரியதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கிழக்கே பசுபிக் தீவுகளில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே இந்தியாவுக்கு அறிமுகப்பட்டிருத்தல் வேண்டும். அல்லது நிகண்டுகள் கூறும் ஈரப்பலா வேறு ஒரு தாவரமாயிருத்தல் வேண்டும். இது ஆராயப்படவேண்டிய விடயம். பலாப்பழக் குடும்பத்தைச் சேர்ந்த ஈரப்பலாவின் தாவர விஞ்ஞானப் பெயர் Artocarpus altilis என்பதாகும். பலாமரத்தின் பெயர் Artocarpus heterophyllus என்பதாகும்.
தொடரும்.