இலங்கையின் வடபகுதியில் பண்டைய காலத்தில் நாகர் வாழ்ந்தமை மற்றும் நாக வழிபாடு செய்தமை தொடர்பான சான்றுகள் பரவலாகக் காணப்படுகின்றன. சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு நாக இராச்சியம் சிறப்புற்று விளங்கியதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. இங்கு நாகதீபம் எனும் நாக இராச்சியம் இருந்ததாகவும், இங்கிருந்த மகோதரன், சூளோதரன் எனும் இரு நாக மன்னர்களின் மணிமுடி தொடர்பான பிணக்கைத் தீர்ப்பதற்காக புத்த பகவான் இலங்கைக்கு வந்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது.
வட இலங்கையில் பல இடங்களில் நாகர் கட்டிய குளங்களும், அவர்கள் அமைத்த கோயில்களும் உள்ளன. அவர்கள் கட்டிய குளங்களின் அருகில் தமது வழிபாட்டுச் சின்னமான மூன்று தலை, ஐந்து தலை கொண்ட நாகச் சிலைகளை அமைத்து அக் குளங்களுக்குக் காவலாக அமர்த்தினர். இவ்வாறான நாகச் சிலைகள் வட மாகாணத்தில், வன்னிப் பகுதியில் உள்ள பாவற்குளம், நெளுக்குளம், தண்ணிமுறிப்பு குளம், மதகுவைத்த குளம், சமளங்குளம் ஆகிய பண்டைய குளங்களின் அருகில் இன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தில் தற்போது உள்ள 5 மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை வவுனியா மாவட்டத்தில் உள்ள மகாகச்சக்கொடி, எருப்பொத்தான, பெரிய புளியங்குளம் ஆகிய இடங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இந் நான்கு இடங்களிலும் மொத்தமாக 54 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக் கல்வெட்டுகள் அனைத்தும் இங்குள்ள மலைப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள கற்குகைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பிராமிக் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
வவுனியா மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் உள்ள 54 பிராமிக் கல்வெட்டுகளில் 7 கல்வெட்டுகளில் மட்டுமே நாகர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் எழுதப்பட்டுள்ள விபரங்களைப் பார்க்கலாம்.
மன்னன் நாகன், சுட்டி நாகன், பக்தன் நாகன் ஆகியோர் பற்றிக் கூறும் பெரிய புளியங்குளம் கல்வெட்டுகள்
வவுனியா நகரில் இருந்து ஹொரவப் பொத்தானைக்குச் செல்லும் வீதியில் 2 கி.மீ தூரத்தில் உள்ள வெளிக்குளம் சந்தியில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதியில் 15 கி.மீ தூரத்தில், காட்டு மாங்காய் குளம், மாமாடு, மகாகச்சக்கொடி ஆகிய இடங்களைக் கடந்து செல்லும் போது பாதையின் வலது பக்கம் எருப்பொத்தானை குளம் காணப்படுகிறது. இக் குளத்தைக் கடந்து சற்று தூரம் சென்றதும் பெரிய புளியங்குளம் சந்தியை அடையலாம். இச் சந்தியின் அருகில் வலது பக்கம் ஒரு மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்குதான் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இவ் உயரமான கற்பாறைத் தொகுதியில் சுமார் 100 அடி உயரமான ஒரு நீண்ட பாறையின் மீது மூன்று பெரிய கற்பாறைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கற்பாறைகளும் தூக்கி வைத்தாற்போல் இயற்கையாகவே அமைந்துள்ளன. இவற்றிலே பெரிய பாறை ஒன்று முதலையின் வடிவில் காணப்படுகிறது. இதனால் இது முதலைப் பாறை (சிங்கள மொழியில் கிம்புலாகல) என அழைக்கப்படுகிறது. இப் பாறைத் தொகுதியில் இயற்கையான பல கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றின் மேற்பகுதியில் கற்புருவங்கள் வெட்டப்பட்டு அதன் கீழே கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
பெரிய புளியங்குளம் மலைப்பகுதியில் மொத்தமாக 39 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 35 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 4 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் அடங்குகின்றன. இக் கல்வெட்டுகளில் 6 கல்வெட்டுகள் நாகர் பற்றிக் குறிப்பிடுகின்றன. அவை பற்றிய விபரங்கள் பின்வருமாறு.
“ரஜ நாக ஜித ரஜ உதி ஜய அபி அனுரதி க ரஜ உதி க கரபிட செ இம லேன சட்டுதிசச சகய அகட்ட கட்டன பசு விகரயே அபரிமித லோகதட்டுய சட்டன சித சுகயே”
இதன் பொருள்; Princess Abi Anurathi, daughter of King Naga and wife of king Uttiya, and king Uttiya, caused this cave to be established, for the sangha of the four quarters, as comfortable abode of all that are come, and for the welfare and the happiness of beings in the boundless universe” என்பதாகும்.
தமிழில் இது பின்வருமாறு பொருள்படுகிறது;
“மன்னன் நாகனின் மகளும், மன்னன் உத்தியனின் மனைவியுமான இளவரசி அனுராதியின் இந்தக் குகை நாலாபுறமும் உள்ள சங்கத்தாருக்காகவும், வருவோர் அனைவருக்கும் வசதியான வசிப்பிடமாகவும், எல்லையற்ற பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்காகவும் வழங்கப்பட்டது.”
மேலும் 3 கல்வெட்டுகள் இதே மாதிரியாக, இதே அர்த்தத்துடன் பொறிக்கப்பட்டுள்ளன. இந் நான்கு கல்வெட்டுகளிலும் மன்னன் நாகன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நாக மன்னன் இப் பிரதேசத்தை ஆட்சி செய்த ஒரு சிற்றரசனா அல்லது இலங்கையை ஆட்சி செய்த நாக மன்னர்களில் ஒருவனா என்பது தெரியவில்லை. கல்வெட்டு பொறிக்கப்பட்ட இக் காலப்பகுதியில் கல்லாட்ட நாகன், சோர நாகன் எனும் இரு நாக மன்னர்கள் அநுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். மட்டக்களப்பு மான்மியத்தின் குறிப்புகளின்படி இக் காலப்பகுதியில் மண்டு நாகன், சேரர் நாகன், கொட்டியன் ஆகிய மூன்று நாகச் சிற்றரசர்கள் கிழக்கிலங்கையை ஆட்சி செய்துள்ளனர். கல்வெட்டு குறிப்பிடும் நாக மன்னன் இந்த மூவரில் ஒருவனாகக் கூட இருக்கலாம்.
பெரிய புளியங்குளத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தாவது கல்வெட்டின் வாசகங்கள் பின்வருமாறு :
“பருமக உதி புத சுடி நாகச லேனே”
இதன் பொருள் ஆங்கிலத்தில் “The cave of Cudi Naga, son of the chief Uttiya” என்பதாகும். இது தமிழில் “பெருமகன் உத்தியனின் மகனான சுட்டி நாகனின் குகை” எனப் பொருள்படும்.
நாகர் பற்றிக் கூறும் ஆறாவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு :
“உபசக நாகஹ லேனே சகச தினே”
இதன் பொருள் “பாமர பக்தன் நாகனின் குகை சங்கத்தாருக்கு வழங்கப்பட்டது” என்பதாகும். ஆங்கிலத்தில் இது “The cave of the lay devotee Naga, is given to the sangha” எனப் பொருள்படும்.
பெரிய புளியங்குளத்தில் நாகர் பற்றிக் குறிப்பிடும் மேற் சொல்லப்பட்ட ஆறு கல்வெட்டுகள் கூறும் செய்திகளின்படி, இப்பகுதியில் நாக மன்னனின் மகளான இளவரசி ஒருத்தி குகைகள் சிலவற்றைப் பயன்படுத்தியுள்ளமை தெரிகிறது. மேலும் இப் பகுதியில் சுட்டி நாகன் என்பவனும், நாகன் எனும் பெயர் கொண்ட பாமர பக்தன் ஒருவனும் இருந்துள்ளமையும் தெளிவாகத் தெரிகிறது.
நாக எனும் பெயர் கொண்ட பாமரப் பெண் பக்தை பற்றிக் கூறும் எருப்பொத்தான கல்வெட்டு
வவுனியா நகரில் இருந்து பெரிய புளியங்குளத்திற்குச் செல்லும் வழியில் எருப்பொத்தானை குளம் அமைந்துள்ளது. இக் குளத்தின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மலைப் பாறைகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கற்புருவங்கள் வெட்டப்பட்ட இக் குகைகளில் மொத்தமாக 12 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் உள்ள ஒரு கல்வெட்டில் நாகர் பற்றி கூறப்பட்டுள்ளது. அக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களின் விபரங்கள் பின்வருமாறு :
“பருமக ஹடகஹ பரிய உபாசிக நாகய க புத்த உபாசக திசஹ க உபாசக தேவஹ க லேனே அகட்ட அனகட்ட சட்டு திச சகச நியதே”
தொடரும்.