காய்க்குக் கபம்தீரும் காரிகையே இவ் இலைக்கு
வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் – தீக்குள்
அணக்கிடு வற்றல் உறுபிணியோர்க்கு ஆகும்
மணத்தக்காளிக்கு உள்ளவாறு
– பதார்த்த குணவிளக்கம் –
மணத்தக்காளியின் காய்க்கு சளி தீரும். இதன் இலைக்கு வாயில் ஏற்படும் கிரந்தி, சூடு என்பன மாறும். இதன் வற்றல், நோயாளிகளுக்கு நல்ல பத்திய உணவாகும் என்பது மேற்காணும் பாடல் தரும் செய்தி.
‘மணத்தக்காளி’ என்னும் ஒரு கீரை பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் மருத்துவக் குணங்கள் மிகுந்த இந்தக் கீரை கிடைத்தால் அதனை விரும்பிச் சமைத்து உண்ணத் தயாராக இருப்பவர்களும் உள்ளனர். “ மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி ” என்னும் ஒரு பழமொழியும் உண்டு. நோய் எதிர்ப்புச்சக்தியை ஊக்குவிக்க மணத்தக்காளி உதவும் என்கிறார்கள். இதன் காரணமாகவே இந்தப் பழமொழி உருவாகியிருத்தல் கூடும்.
சொலனேசீ (Solanaceae) தாவரக்குடும்பத்தைச் சேர்ந்த மணத்தக்காளியின் தாவர விஞ்ஞானப்பெயர் Solanum nigrum என்பதாகும். தக்காளியும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் தான். மணத்தக்காளி அல்லது மணித்தக்காளி என்று அறியப்படும் கீரைபற்றி பதார்த்த சூடாமணி, பதார்த்த குணவிளக்கம் ஆகிய பழந்தமிழ் மருத்துவ நூல்களில் பேசப்படுகிறது. அதேசமயம் தக்காளி பற்றி எவ்வித குறிப்பும் காணப்படவில்லை. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனெனில் பதினாறாம் நூற்றாண்டின் பின்னர் ஐரோப்பியரால் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறிகளுள் தக்காளியும் ஒன்றாகும். இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர்தான் தக்காளி இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் அறிமுமாயிற்று. மேற்கு நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மிளகாய் எவ்வாறு இன்று எமது சமையலில் அத்தியாவசியமான ஒரு சுவையூட்டியாக மாறிவிட்டதோ அவ்வாறே எமக்கு மிகவும் வேண்டிய காய்கறிகளுள் ஒன்றாகத் தக்காளியும் இடம்பிடித்துக்கொண்டுள்ளது. இந்தியாவில், அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் தக்காளி இல்லையேல் சமையலும் இல்லை என்னும் ஒரு நிலைதான் இன்று உள்ளது.
தக்காளியின் பிறப்பிடம் தென்னமெரிக்காவில் உள்ள மெக்சிக்கோ அல்லது பெரு நாடாக இருத்தல் வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மெக்சிக்கோ நாட்டின் நாகுவா (Nahuatl) மொழியில் தக்காளியின் பெயரான ரொமற்றில் (tomatl) என்னும் பெயரிலிருந்து பிறந்ததே, ஆங்கிலத்தில் இதனைக் குறிக்கும் ரொமேற்றோ (tomato) என்னும் பெயராகும்.
பொது ஆண்டு 1521 இல் மெக்ஸிகோவின் ஆஸ்டெக் நகரமான டெனோச்சிட்லானைக் கைப்பற்றிய ஸ்பானியத் தளபதியான ஹெர்னான் கோர்டெஸ் என்பவரே தக்காளியை ஐரோப்பாவிற்கு எடுத்துச்சென்ற முதல் நபராக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. 1540 களின் முற்பகுதியில் ஸ்பெயின் நாட்டில் தக்காளிப் பயிர்ச்செய்கை ஆரம்பமாகிற்று. எனினும் மற்ற ஐரோப்பிய நாடுகள் தக்காளியை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இத்தாலியின் புளோரன்ஸ் மக்கள் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தக்காளியை வெறும் மேசை அலங்காரமாகப் பயன்படுத்தினர். தக்காளியின் சொலனேசீ (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த டெட்லி நைட்ஷேட் அல்லது பெலடோனா (Belledona) என்று அறியப்படும் நச்சுத்தாவரம் ஒன்றின் இலைகளைத் தக்காளியின் இலைகள் ஒத்துக் காணப்பட்டதால் மக்கள் இதனை உண்பதற்குப் பயந்தனர். தக்காளிக்கு ” விஷ ஆப்பிள் ” என்னும் பெயரும் அக்காலத்தில் வழங்கப்பட்டது.
தக்காளி ஏழைகளைப் பாதிப்பதில்லை என்றும் உயர்குடியினர் அதை சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுவார்கள் என்றும் அக்காலப்பகுதியில் நம்பப்பட்டது. இதில் உண்மை என்னவென்றால், பணக்கார ஐரோப்பியர்கள் ஈயம் அதிகமுள்ள உணவுத் தட்டுகளைப் பயன்படுத்தினார்கள். தக்காளியில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், இந்தக் குறிப்பிட்ட தட்டுகளில் வைக்கப்படும் போது, தக்காளிப்பழம் தட்டில் உள்ள ஈயத்தை கசியவிடும். இதன் விளைவாக ஈய நச்சுத்தன்மையால் பலர் இறக்க நேரிட்டது. “ பழி ஓரிடம் பாவம் ஓரிடம் ” என்னும் பழமொழிக்கேற்ப ஈயத்தட்டில் பிறந்த விஷத்துக்கான பழி தக்காளி மேல் விழுந்தது. மரத்தால் செய்யப்பட்ட தட்டுகளில் தக்காளியை வைத்து உண்ட ஏழை மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. 1800 கள் வரை குறிப்பாக இத்தாலியில் தக்காளியை ஏழை மக்கள் மட்டுமே சாப்பிட்டதற்கு இதுவே காரணம்.
தக்காளி 1597 இல் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இத்தாலியில் ஏற்பட்ட நிலையே இங்கும் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் தக்காளியின் சிவப்பு நிறத்தை விரும்பியபோதும் அதன் நச்சுத்தன்மை குறித்த சந்தேகம் அவர்களிடம் தொடர்ந்து இருந்தது. இதன் காரணமாகவே அமெரிக்கர்களும் 1835 ஆம் ஆண்டு வரை தக்காளியை அறுவடை செய்யத்துணியவில்லை.
ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தில் பல முன்னேற்றங்களுக்குப் பிறகு 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தக்காளி பற்றிய பார்வை மாறியது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தக்காளி ஆசியாவிற்கு வந்தது. சிரியாவில் இருந்த இங்கிலாந்து தூதர் ஜான் பார்கர் என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் முதலாவது தக்காளிப் பயிர்ச்செய்கை அங்கு தொடக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சிரியா, ஈரான் மற்றும் சீனாவில் தக்காளி மிகவும் பிரபலமடைந்தது.
போதிய ஆதாரங்கள் இல்லாததால், இந்தியாவில் தக்காளி எப்போது, எங்கிருந்து பயிரிடப்பட்டது என்பது பற்றித் தெளிவாக அறியமுடியவில்லை. எனினும் ஆங்கிலேயர்களே தக்காளியை இந்தியாவிலும் இலங்கையிலும் பரவலாக அறிமுகப்படுத்தினர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இன்று இந்தியா 12 மில்லியன் தொன்களை உற்பத்தி செய்து தக்காளி உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. சிறிய சாறு நிறைந்த ‘ செர்ரி தக்காளி ’யில் (cherry tomato) இருந்து பெரிய நார்த்தன்மை உடைய ‘ பீவ்ஸ்டீக் தக்காளி ’ (beefsteak tomato) வரை பலதரப்பட்ட தக்காளி வகைகள் பயிரிடப்பட்டுவருகின்றன.
எம்மவர்களால் சமைத்து உண்ணப்படும் பிரதான காய்கறிகளுள் ஒன்றாக தக்காளி உள்ளது. கறிக்குழம்புகளில் பழப்புளிக்குப் பதிலாகத் தக்காளியைச் சேர்ப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. மேற்கு நாட்டவரின் சலாட்டுகளில் தக்காளிப் பழம் பச்சையாக உண்ணப்படுகின்றது.
இவற்றைத் தவிர இன்று உலகில் விளையும் தக்காளியின் பெரும்பகுதி பதப்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படும் பல்வேறு உணவுகளின் மூலப்பொருளாகப் பயன்படுகின்றது. பதப்படுத்தப்பட்ட தக்காளி, தக்காளிச் சாறு, தக்காளி கெட்ச்அப் (tomato ketchup), தக்காளி சோஸ் (tomato sauce), தக்காளி ப்யூரி (puree), தக்காளி பேஸ்ட் (paste) மற்றும் சூரிய ஒளியில் உலர்த்தப்பட்ட தக்காளி பல்ப் (pulp) என்பவற்றின் தயாரிப்புக்கு பயன்படுகின்றது.
ஏனைய பழங்கள், காய்கறிகளுடன் ஒப்பிடும்போது தக்காளி அதிகமாக தகரப் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதற்கு அதில் உள்ள அதிக அமிலத்தன்மை முக்கியமான காரணமாகும். பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்புகளில் முன்னணி வகிக்கும் H. J. HEINZ கொம்பனி பென்சிலிவேனியாவின் பிற்ஸ்பேர்க் நகரில் தொடங்கப்பெற்ற பின்னர், விற்பனைக்கு வந்த மிகப்பிரபலமான உற்பத்திப் பொருள் ஹெய்ன்ஸ் தக்காளி கெட்ச்அப் (HEINZ TOMATO KETCHUP) ஆகும். இந்த நிறுவனம் 1876 ஆம் ஆண்டில் இருந்து தக்காளி கெட்ச்அப் விற்பனையைத் தொடங்கியது. இப்போது தக்காளி கெட்ச்அப், ஓஹியோ மற்றும் அயோவாவில் உள்ள ஹெய்ன்ஸ் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
1897 ஆம் ஆண்டில் ஜோசப் காம்ப்பெல் (Joseph A. Campbell) என்பார் கெட்டிப்படுத்தப்பட்டு தகரப் பெட்டியில் அடைக்கப்பெற்ற தக்காளி சூப்பை (tomato soup) விற்பனைக்குக் கொண்டு வந்தார். இந்த சூப் மூலம் காம்ப்பெல்லின் வருவாய் பெருமளவில் அதிகரித்தது. பொதுமக்கள் இந்தத் தக்காளி சூப்புக்கு மிகுந்த வரவேற்புக் கொடுத்தனர். தகரப்பெட்டிக்குள் அமுக்கப்பட்ட காம்ப்பெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு உலகம் சூப்பை அணுகும் முறையை மாற்றியது. தகரப்பெட்டிக்குள் சேமித்து வைப்பதால் சூப்கள் திடீரென மலிவு விலையிலும், அணுகக்கூடியதாகவும் மாறின.
தக்காளி விட்டமின் சி (vitamin C) மற்றும் லைகோபீன் (lycopene) ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது உடலின் இயற்கையான பாதுகாப்பை வலுப்படுத்த உதவுகிறது. தக்காளி புரோஸ்டேட் புற்றுநோயைத் (prostrate cancer) தடுக்கிறது. தக்காளியில் நிறைந்துள்ள லைகோபீன் மற்றும் கரோட்டினாய்ட் நிறமிகள் செல்களை, குறிப்பாக புரோஸ்டேட் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
தக்காளி ஆரோக்கியமான கண்பார்வை, தோல் மற்றும் கூந்தலைப் பராமரிக்கிறது. தக்காளியில் நிறைந்துள்ள கரோட்டினாய்டுகள் உடலில் விட்டமின் ஏ (Vitamin A) ஆக மாற்றப்படுகின்றன. விட்டமின் ஏ நல்ல பார்வை, பளபளப்பான கூந்தல் மற்றும் மென்மையான, நன்கு ஈரப்பதமான சருமத்திற்கு வேண்டிய ஊட்டச்சத்து ஆகும். இதய நோய்கள் வராமல் தடுக்க தக்காளி உதவும். ஒட்சியெதிரிகள் (antioxidants) நிறைந்துள்ள தக்காளி ஆரோக்கியமான இரத்தநாளங்களைப் பேண உதவுகிறது. மேலும், உணவு நார்ச்சத்து (dietary fibre) நிறைந்துள்ள தக்காளி கெட்ட கொலெஸ்ரெறோலின் (LDL – cholesterol) அளவைக் குறைக்க உதவுகிறது. தக்காளியில் ஹிஸ்டமைன் (histamine) என்ற வேதிப்பொருள் உள்ளது, இது தோல் அரிப்பு (skin rashes) மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டும். Solanum lycopersicum என்பது தக்காளியின் தாவர விஞ்ஞானப் பெயராகும்.
தொடரும்.