ஓர் அரசியற் கருவியாக கூட்டுறவு ஏன் வலுவிழந்தது? : கூட்டுறவின் அடையாளம் மற்றும் அரசியல்
Arts
17 நிமிட வாசிப்பு

ஓர் அரசியற் கருவியாக கூட்டுறவு ஏன் வலுவிழந்தது? : கூட்டுறவின் அடையாளம் மற்றும் அரசியல்

May 1, 2024 | Ezhuna

2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

கூட்டுறவின் தனித்துவ அடையாளம், அதன் அரசியல் மொழி தொடர்பான கருத்துரைகள் மிக அவசியமானவை. ஏனெனில், கூட்டுறவின் இன்றைய தேக்க நிலையைப் படம் பிடிக்கவும் அதன் தொடரும் நெருக்கடிகளை ஆராய்ந்து நாடி பிடிக்கவும் இவைகளைப் பற்றிய தெளிவு மிக அவசியம். கூட்டுறவின் ஆரம்ப நிலை, அதன் அடையாளம், சிறப்புத் தன்மைகள் மற்றும் இன்றைய செல்நெறி வழி நோக்கின், ஓர் அரசியற் கருவியாக கூட்டுறவு ஏன் வலுவிழந்தது? என்பதைத் தெளிவுறக் காணலாம்.  

இலங்கையின் கூட்டுறவு இயக்கம் ஒரு வரலாற்று நிகழ்வாகும். பிரித்தானியக் காலனித்துவ சகாப்தத்தின் பிற்பகுதியில் தோன்றியதிலிருந்து, இந்த இயக்கம் இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் ஒரு தனித்துவமான அமைப்பை உருவாக்கி வருகிறது. இலங்கையில் கூட்டுறவு இயக்கத்தின் வரலாற்றை 1904 ஆம் ஆண்டு மணிக்கிண்ணத்தில் விவசாயக் கடன் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆராயலாம். 1911 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் முதல் கூட்டுறவுச் சங்கம் கூட்டுறவுக் கடன் சங்கமாக நிறுவப்பட்டது. கூட்டுறவு அமைப்பின் கருத்து என்ன? ஒரு கூட்டுறவு அமைப்பு என்பது ஒரு பொதுவான, புறநிலையாக இல்லாவிட்டாலும், தகவல் அல்லது பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் பல ஆற்றல்மிக்க நிறுவனங்களின் அமைப்பாக வரையறுக்கப்படுகிறது. ஒரு கூட்டுறவு அமைப்பு (system) என்பது  உடல், உயிரியல் மற்றும் சமூகக் காரணிகளின் ஒருங்கிணைப்பு ஆகும்; அதன் நோக்கம் வரம்புகளை கடப்பதாகும். ஒரு கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்படும் போது, அது அதன் சொந்த நோக்கத்தையும், தன்னைத்தானே பராமரிக்கும் சிறப்பு உறுப்பையும் உருவாக்க வேண்டும். கூட்டுறவு,  ஒரு அமைப்பு (system) என்னும் கருத்துநிலை சரியாக புரியாவிட்டால். காலப்போக்கில் அது செயலிழக்கும்.

சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் சட்ட ஆராய்வு அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: 

“இலங்கையில் கூட்டுறவுச் சட்டங்கள் கூட்டுறவுக் கோட்பாடுகளை (Cooperative Principles) முழுமையாக உள்ளடக்கியிருக்கவில்லை. கூட்டுறவுப் பிரகடனத்திற்கு முன்னரே சட்டங்கள் உருவாக்கப்பட்டமை இதற்கான காரணமாகும். 1995 ஆம் ஆண்டின் கூட்டுறவு அடையாள அறிக்கை (Cooperative Identity Statement), கூட்டுறவுக் கொள்கைகளின் தனித்தன்மையை வரையறுத்துக் கூறினாலும், தற்போதுள்ள  கூட்டுறவுச்   சட்டத்திற்குள்ளே இன்னும் அதன் மதிப்புகள் மதிப்பூட்டப்படவில்லை. பதிவு செய்வதற்கான தேவையின் நிமித்தம், ஒரு சடங்காக, குறிப்பிடப்பட்ட கூட்டுறவுக் சட்டங்களுக்கு இணங்க முன்மொழியப்பட்ட சங்கங்கள், அதன் பொருளாதார – சமூக – கல்வி மற்றும் கலாசார நலனுக்குப் பங்களிக்கும் சேவைகள் மட்டும் எனக் குறிப்பிடப்பட்டு  கூட்டுறவு பற்றிய முழுமையான பார்வை மற்றும் அதன் சிறப்பு நிலை அறியாது இயங்கும் போக்கு, கூட்டுறவின் தேய்பிறைக் காலத்துக்கு மிக முக்கிய காரணங்களின் ஒன்றானது எனலாம். தொடக்கமே பிழையான பிள்ளையார் சுழி கூட்டுறவு பற்றிய போதிய தெளிவின்மைக்கு வித்திடுகிறது.”

sri lanka

கூட்டுறவின் மிக உயிரான பகுதி அதன் உள்ளடக்கிய தன்மை (Inclusiveness) ஆகும். உள்ளடக்கிய தன்மை என்பது ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் நிற்பது; ஒடுக்கப்படுபவர்களின் குரலாக மாறி அவர்களின் வளர்ச்சிக்குப் பாடுபடுவது; உடல் அல்லது அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள் அல்லது பிற சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகம் அல்லது ஒடுக்கப்பட்ட நபர்களுக்கு வாய்ப்புகள் மற்றும் வளங்களில் சமமான வாய்ப்பை உறுதிசெய்வது; கொள்கைகளை அமைப்பாக இயக்கி நடைமுறைப்படுத்தப் பாடுபடுவது. உள்ளடங்கிய தன்மை நீர்த்துப்போகும் நிலையில் கூட்டுறவு அதன் உயிரை தானே எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

கூட்டுறவு என்பது மக்களை மையமாகக் கொண்ட நிறுவனங்களாகும். கூட்டுறவு அமைப்புகள் கூட்டுறவுத் திணைக்களத்தின் நீட்சி இல்லை; கூட்டுறவுத் திணைக்களம் தான் கூட்டுறவு அமைப்புகளின் நீட்சி. இந்நிலை மாறும் போது கூட்டுறவு தன் நிலையை இழந்து வீரியமற்று மடியும் நிலையை அடையும். கூட்டுறவுகள் மக்களை ஜனநாயக மற்றும் சமமான வழியில் ஒன்றிணைக்கின்ற அதற்கான கருவிகள் மட்டுமே. இலாபம்  மட்டும் அல்ல, மதிப்புகளால் இயக்கப்படும் வணிகமாக, கூட்டுறவுகள் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஒத்துழைப்பின் மூலம் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க ஒன்றாகச் செயற்படுகின்றன. கூட்டுறவு நிறுவனத்தின் இதயத்தில் நியாயம், சமத்துவம் மற்றும் சமூக நீதியை வைத்து, உலகெங்கிலும் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் நீண்ட கால வேலைகள் மற்றும் செழிப்பை உருவாக்கும் நிலையான நிறுவனங்களை உருவாக்க மக்கள் ஒன்றிணைந்து செயற்பட அனுமதிக்கின்றன. இவைதான் கூட்டுறவின் வெற்றிக்கான பாதை ஆகும்.  

கூட்டுறவு வழங்கும் நடைமுறை அல்லது கொள்கைக் கற்றலின் ஐந்து முக்கிய கூறுகள்:

  1. நேர்மறையாக ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல் (Positive interdependence). 
  2. ஒரு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக மூழ்கி நீந்துவதைப் புரிந்து கொள்ளும்போது ஒரு குழு இலக்கை அடைதல் (A group achieves this element when all team members understand that they sink or swim together).
  3.  தனிநபர் மற்றும் குழுப் பொறுப்பு வகித்தல் (Individual and group accountability).
  4. தனிப்பட்ட மற்றும் சிறிய குழுத் திறன்கள் அபிவிருத்தி (Interpersonal and small group skills) நேருக்கு நேர் தொடர்பு (Face-to-face interaction). 
  5. குழுச் செயலாக்கம் (Group processing). 

இவையாவும் கூட்டுறவு அமைப்புகள் செயல்படும் நிலையில் அக, புற முரண்பாடுகளைக் களைந்து கூட்டுறவின் அடையாளத்தை நிலை நிறுத்த உதவுகின்றன.

கூட்டுறவுக் கோட்பாடுகள் யாவை? கூட்டுறவுக் கொள்கைகள் என்பது கூட்டுறவுகள் தங்கள் மதிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் ஆகும். கூட்டுறவுகள் சுய உதவி, சுய பொறுப்பு, ஜனநாயகம், சமத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. தங்கள் நிறுவநர்களின் பாரம்பரியத்தில், கூட்டுறவு உறுப்பினர்கள் நேர்மை – வெளிப்படைத்தன்மை – சமூகப் பொறுப்பு மற்றும் பிறரைக் கவனித்துக்கொள்வது போன்ற நெறிமுறை மதிப்புகளை நம்புகிறார்கள்.

1. தன்னார்வ மற்றும் திறந்த உறுப்பினர் : கூட்டுறவு என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாக, பாலின – சமூக – இன – அரசியல் அல்லது மதப் பாகுபாடு இல்லாமல், தங்கள் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய அனைத்து நபர்களுக்கும் சமமாகவிருக்கும் உறுப்பினர் பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளது.

2. ஜனநாயக உறுப்பினர் கட்டுப்பாடு : கூட்டுறவு என்பது அவர்களின் உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படும் ஜனநாயக அமைப்புகளாகும். அவர்கள் தங்கள் கொள்கைகளை அமைப்பதிலும் முடிவுகளை எடுப்பதிலும் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகப் பணியாற்றும் ஆண்களும் பெண்களும் உறுப்பினர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். முதன்மைக் கூட்டுறவுகளில் உறுப்பினர்களுக்குச் சமமான வாக்குரிமைகள் (ஒரு உறுப்பினர், ஒரு வாக்கு) வழங்கப்படுகின்றன. பிற மட்டங்களில் உள்ள கூட்டுறவுகளும் ஜனநாயக முறையில் ஒழுங்கமைக்கப்படுகின்றன.

3. உறுப்பினர் பொருளாதாரப் பங்கேற்பு : உறுப்பினர்கள் தங்கள் கூட்டுறவு மூலதனத்திற்கு சமமாகப் பங்களிக்கிறார்கள்; ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்துகிறார்கள். அந்த மூலதனத்தில் குறைந்தபட்சம் ஒரு பகுதி கூட்டுறவுச் சொத்தாக இருக்கும். உறுப்பினர்கள், வழக்கமாக வரையறுக்கப்பட்ட இழப்பீட்டை (ஏதேனும் இருந்தால்), உறுப்பினர் நிபந்தனையாக, சந்தா செலுத்தப்பட்ட மூலதனத்தில் பெறுவார்கள். 

4. சுயாட்சி மற்றும் சுதந்திரம் : கூட்டுறவு என்பது தன்னாட்சி பெற்ற, தங்கள் உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படும் சுய உதவி நிறுவனங்கள் ஆகும். அவர்கள் அரசாங்கங்கள் உட்பட பிற அமைப்புகளுடன் ஒப்பந்தங்களில் நுழைந்தால் அல்லது வெளிப்புற மூலங்களிலிருந்து மூலதனத்தை திரட்டினால், அவர்கள் தங்கள் உறுப்பினர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை உறுதிசெய்து, தங்கள் கூட்டுறவுச் சுயாட்சியை நிலை நிறுத்தும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள். 

5. கல்வி, பயிற்சி மற்றும் தகவல் : கூட்டுறவுகள் தங்கள் உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மேலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சியை வழங்குகின்றன. இதனால் அவர்கள் தங்கள் கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கு திறம்பட பங்களிக்க முடியும். அவர்கள் பொது மக்களுக்கு – குறிப்பாக இளைஞர்கள் மற்றும் தலைவர்களுக்கு – ஒத்துழைப்பின் தன்மை மற்றும் நன்மைகள் பற்றி தெரிவிக்கின்றனர்.

6. கூட்டுறவு அமைப்புகளிடையே ஒத்துழைப்பு : கூட்டுறவுகள் தங்கள் உறுப்பினர்களுக்கு மிகவும் திறம்பட சேவை செய்கின்றன. உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச கட்டமைப்புகள் மூலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துகின்றன. 

7. சமூகத்தின் மீதான அக்கறை : கூட்டுறவின் மந்த நிலைக்கு, மூல காரணங்கள் பல உண்டு; கூட்டுறவு அமைப்புகளிடையே ஒற்றுமையின்மை, ஒத்துழைப்பின்மை அவற்றுள் மிக முக்கியமானவை. கூட்டுறவு ஒரு அடர்ந்த காடு; எல்லாம் அடங்கிய ஒரு இராச்சியம். ஆனால், அவை தனிமரங்களாக இருப்பதால் அதன் பலத்தை அறிவதில்லை.    

statistic

வட மாகாணத்தின் சிக்கனக் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை பற்றி ஆராய்ந்தால்  அதன் அங்கத்துவப் பலம் பரந்து, விரிந்து, செறிவானதாக உள்ளதைக் கண்டு அதிர்ச்சியே அடைய வாய்ப்புண்டு. 2015 ஆம் ஆண்டு முதல், வட மாகாணக் கூட்டமைப்பாக (சம்மேளனமாக – Federation) உருவாக வட மாகாணத்தின் சிக்கனக் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. வட மாகாணச் சம்மேளனத்தில் ஐந்து மாவட்ட சமாஜங்கள் உள்ளன. 1983 முதல் யாழ்ப்பாணம், 1986 முதல் கிளிநொச்சி, 1987 முதல் முல்லைத்தீவு, 1986 முதல் வவுனியா மற்றும் 1986 முதல் மன்னார் ஆகிய மாவட்டங்களில் சமாஜங்கள் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் 39,290 உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்துச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் ஆகியவை கூட்டுறவுத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை அவர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து ஆலோசனைகளை வழங்குகின்றன.

  • யாழ்ப்பாணத்தில் 560 சங்கங்கள் உள்ளன. 285 செயலில் உள்ளன மற்றும் 275 செயற்படவில்லை.
  • கிளிநொச்சியில் 118 சங்கங்கள் உள்ளன. 54 செயலில் உள்ளன மற்றும் 64 செயற்படவில்லை.
  • முல்லைதீவு 134 சங்கங்கள் உள்ளன. 65 செயலில் உள்ளன மற்றும் 69 செயற்படவில்லை.
  • வவுனியாவில் 196 சங்கங்கள் உள்ளன. 102 செயலில் உள்ளன மற்றும் 94 செயற்படவில்லை.
  • மன்னாரில் 125 சங்கங்கள் உள்ளன. 73 செயலில் உள்ளன மற்றும் 52 செயற்படவில்லை.

வட மாகாண சிக்கனக் கூட்டுறவுச் சம்மேளனத்தில் வட மாகாணத்திலுள்ள 05 மாவட்டச் சிக்கனக் கடனுதவுச் சமாஜங்களும் அங்கத்துவம் பெற்றுள்ளன. இவற்றில் அங்கத்துவம் வகிக்கும் சங்கங்கள் 1,095 ஆகும். இதில் இயங்கும் சங்கங்கள் 559 ஆகும். மொத்தமாக இயங்கும் அங்கத்தவர்கள் 30,703.

vavuniya

மாகாண மட்ட சிக்கன மீன்பிடி, தெங்கு – பனை பலநோக்கு கூட்டுறவுச் சம்மேளனங்கள் ஒரு அமைப்பின் அல்லது ஒரு இணைவுக் கட்டமைப்பிற்குள் வரும் போது ஒரு தனி அடையாளம் உருவாக்கப்படலாம். இதனால் உருவாக்கப்படும் அடையாள அட்டை, சகல கூட்டுறவாளர்களையும் இணைக்கும் புள்ளியாகத் தொழிற்படும். உத்தேசக் கணிப்பின்படி, அனைத்துச் சம்மேளனங்களும், அங்கத்தவர்களும் ஒரு இணைவில் வலம் வரும் போது அதே ஒரு பெரிய சந்தையாக மாறலாம். அது, நாமே பொருளை உருவாக்கி, நமக்குரிய நுகர்வை நாமே பேணும் ஒரு உத்தியாக அமையும். உண்மை யாதெனில், கூட்டுறவுத் திணைக்களத்துக்கு இவ்விடயம் நன்கு தெரியும். ஆனால், அரசியல் உள்நோக்கம் காரணமாக செயற்படுத்த மாட்டார்கள். ஆனால், மாகாண நியதிச் சட்டங்களால் இதனை அழகாகச் செய்யமுடியும். 13 ஆவது யாப்புத் திருத்தம் இங்கு உதவ முடியும். வட மாகாணக் கூட்டுறவு அமைச்சு இதற்குரிய அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அதிகாரம் பூச்சியம்.

கூட்டுறவு என்றால் என்ன?

கூட்டாக மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தின் மூலம் அவர்களின் பொதுவான பொருளாதார, சமூக மற்றும் கலாசாரத் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய தன்னார்வமாக ஒன்றுபட்ட நபர்களின் தன்னாட்சிச் சங்கமே கூட்டுறவாகும். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் ஆறு அடிப்படை வகையான கூட்டுறவுகள் உள்ளன:

1. தயாரிப்பாளர் கூட்டுறவு : பண்ணைகள், கலைஞர் ஸ்டூடியோக்கள் அல்லது மீன்பிடிப் படகுகள் போன்ற தனித்தனி நிறுவனங்களின் உறுப்பினர்கள் உற்பத்தியில் ஈடுபடுவர். இந்தக் கூட்டுறவுகள் ஏனைய சேவைகளுடன், பொருட்கள், சந்தைப்படுத்தல், செயலாக்கம் அல்லது காப்பீடு ஆகியவற்றை வழங்கலாம் (Producer Cooperatives).

2. தொழிலாளர் கூட்டுறவு : இது சில அல்லது அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சொந்தமானது. வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், உணவகங்கள், பகல்நேரப் பராமரிப்பு மற்றும் பலவற்றின் சிறிய குழுக்களில் இது பிரபலமாக உள்ளது (Worker Cooperatives).

3. கடன் சங்கம் : கடன் சங்கக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்யும் ஒவ்வொரு நபரும் உறுப்பினர் – உரிமையாளராய் இருப்பர். சமீபத்திய நிதி நெருக்கடியை அடுத்து, பலர் பெரிய இலாபம் ஈட்டும் வங்கிகளுக்கு மாற்றாக கடன் சங்கங்களை நோக்கி திரும்புகின்றனர் (Credit Union).

4. நுகர்வோர் கூட்டுறவுகள் : இவை கூட்டுறவு நிறுவனத்தில், வாங்கும் நபர்களுக்குச் சொந்தமானது. பலசரக்குப் பொருட்கள் முதல் மின்சாரம், சுகாதாரம் வரை மக்கள் விரும்பும் எதையும் இந்தக் கூட்டுறவுகளால் வழங்க முடியும். நுகர்வோர் கூட்டுறவுகள் மிகவும் சிறியதாக இருக்கலாம்; ஒரு கிராமப்புற உணவு வாங்கும் கடை முதல் நகரத்தின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் வரை (Consumer Cooperatives).

5. சில்லறை அல்லது கொள்முதல் கூட்டுறவு : இது பகிரப்பட்ட சேவைக் கூட்டுறவு என்றும் அழைக்கப்படலாம். சிறந்த மேற்கத்தேய மோட்டல்கள், ஏஸ் ஹார்டுவேர் மற்றும் கார்பெட் ஒன் போன்ற நீங்கள் அங்கீகரிக்கக்கூடிய வணிகங்களை இந்த வகை உள்ளடக்கியுள்ளது. இந்தச் சுயாதீன வணிகங்கள் பொருட்களை வாங்குதல் அல்லது சேவைகளை வழங்குவதில் செயற்திறனை அதிகரிக்க கூட்டுறவுகளை உருவாக்கியது (Retail or Purchasing Cooperative).

6. சமூகக் கூட்டுறவுகள் : வளர்ந்து வரும் இந்த வகையான கூட்டுறவு, பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது போன்ற சமூக நோக்கத்தைக் கொண்டுள்ளது (Social Cooperatives).

கூட்டுறவு அமைப்புகளில் மிக மிக வளர்ச்சி அடைந்தது சமூகக் கூட்டுறவுகள் ஆகும். இது மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிகவும் பலமாக உள்ளது. ஆனால், எம்மிடம் இவை இன்னும் முறையாக வளரவில்லை. உலக வங்கி அறிமுகப்படுத்திய கட்டமைப்புச் சரி செய்தலானது (Structural Adjustment Program – SAP) பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கைக் குறைப்பதற்கும் சந்தைப் பொருளாதாரத்திற்கு நெருக்கமாக நகர்த்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் தொடராக விளங்குதல் இதற்கான காரணமாகும். SAP இன் குறிக்கோள், பற்றாக்குறையைக் குறைப்பதும் சமூகத்தின் திருப்தியை அதிகரித்து அவர்களின் வரம்பற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதுமாகும். உண்மையில், கூட்டுறவுக்கு இது பாதகமில்லை; கூட்டுறவாளர்கள் இதை எதிர் கொள்வதற்கு மாற்று மூல உபாயத்தை  கொண்டுவரவில்லை என்பதே பிரச்சினை. பிரச்சினைகளை எதிர்கொள்ள மாற்றுத் தந்திர உபாயம் இல்லாமல் நவ தாராளவாத சுனாமில் மாட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.    

நவதாராளவாத இலங்கையில் கூட்டுறவு நிறுவனங்களின் பங்கு

சுதேச பொருளாதார அரசு, 1977 முதல், கூட்டுறவு வீழ்ச்சிக்கு அடித்தளம் இட்டது. திறந்த பொருளாதாரம் அதை மேலும் படுகுழிக்கு தள்ளியது. 1961 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி வர்த்தகம், உணவு மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.பி. இளங்கரத்னவினால் மக்கள் வங்கியானது திறந்து வைக்கப்பட்டது. முதலாவது கிளை கொழும்பு டியூக் வீதியில் திறக்கப்பட்டது. பலமாக, மேலும் சிறப்பாக வரக்கூடிய ஆரம்பகால கூட்டுறவு வங்கிச் செயற்பாட்டை, மக்கள் வங்கி முடிவில் சிதைத்து விட்டது. கூட்டுறவு அரசின் கருவியாகி, பலம் இழக்கும் நிலைக்கு வழிவகுத்தது. சீனாவினால் மக்கள் வங்கி ‘கறுப்புப் பட்டியலில்’ சேர்க்கப்படும் முன்னரே மக்கள் வங்கி அதன் பெறுமதியைத் தானே அழித்தது. இது கூட்டுறவுத் துறையை ஒரு அரசு எப்படிச் சிதைக்கலாம் என்பதுக்கு நல்ல உதாரணம்.

jaffna

1977 இல் இலங்கை தனது பொருளாதாரத்தைத் திறந்தவுடன், கூட்டுறவுகளின் சமூக, பொருளாதாரப் பாத்திரமான ‘இரட்டை இயல்பு’ (பொருளாதார இலாபமும் சமூக வளர்ச்சியும் இணைந்த செயற்பாடுகள்) ஒரு தெளிவற்ற, சவாலான சூழ்நிலைக்குச் சென்றது. அக் காலம் முதலே, தடையற்ற சந்தை நிலைமைகளில் உள்ள சவால்களைச் சமாளிக்க முடியாமல் திணறி வருவதால், இலங்கையின் கூட்டுறவு நிறுவனங்கள் சந்தையில் தங்கள் வேகத்தை தொடர்ந்து இழந்து வருவதைக் காண முடிகிறது. இலங்கை கூட்டுறவு இயக்கம் எதிர்காலத்தில் தொடர வேண்டுமானால், ‘தன்னார்வ மக்கள் இயக்கமாக’ அது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; கூட்டுறவின் அடையாளத்தை நாட வேண்டும்.

மூன்றாம் பகுதி, ‘கூட்டுறவின்  தனித்துவம் – பிற நாடுகளில் அதன் வளர்ச்சின் போக்கு’ பற்றி மிக விரிவாக ஆராய்கிறது.  

உசாத்துணை

  1. சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் சட்ட ஆராய்வு அறிக்கை (LEGAL FRAMEWORK ANALYSIS
  2. withintheICA-EUPartnershipNationalReport-SriLanka,page-04Downloaded https://coops4dev.coop/sites/default/files/202106/Sri%20Lanka%20Legal%20Framework%20Analysis%20National%20Report.pdf

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11713 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)