இந்தக் கட்டுரை சுத்தமான பாலுற்பத்திச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய்கிறது. பால் அதிகளவான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உயிர்த் திரவமாகும். கறந்த பால் மிக விரைவாக பழுதடையக் கூடியது. பல நுண்ணங்கிகளின் செயற்பாட்டுக்கு மிகச் சிறந்த ஊடகமாக தொழிற்படக் கூடியது. இந்த நுண்ணங்கிகள் பல்கிப் பெருகி பாலின் கட்டமைப்பை பாதிக்க, பால் அதன் உறுதித் தன்மையில் இருந்து சிதையத் தொடங்குகிறது. இதன் காரணமாக பாலை சாதாரண சூழ்நிலையில் அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. பாலைக் கறக்கும் பண்ணையாளர்கள் பசுவிலிருந்து கறந்து சில மணி நேரங்களிலேயே பாவனைக்கு பயன்படுத்த வேண்டும் அல்லது முறையான களஞ்சியப் படுத்தலைச் செய்யவேண்டும். பாடுபட்டு பாலை உற்பத்தி செய்துவிட்டு பழுதடையச் செய்யவிடுதல் மிகப் பெரும் நட்டத்தையே பண்ணையாளருக்கு தரும். இந்தக் கட்டுரை பாலைக் கெடாமல் பாதுகாப்பது தொடர்பானது. முடிந்த வரை கறக்கும் முழுப் பாலையும் பயன்படுத்துவதற்கு உதவும் வழிகாட்டியாகும். அதாவது பாலின் ஆயுட்காலத்தை அதிகரித்தல் தொடர்பானது.
பாலை நுண்ணங்கிகள் மாத்திரம் பழுதடையச் செய்வதில்லை. நுண்ணுயிர் கொல்லிகள், மதுவ நஞ்சுகள், கலப்படங்கள், சூழல் மாசுகள் என பல காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. முடிந்தவரை இந்த காரணிகள் பாலைப் பாதிப்படையாமல் செய்ய வேண்டும். இதைத்தான் சுத்தமான பாலுற்பத்தி என்கிறோம். பாலுற்பத்தியை அதிகரிக்கப் போராடும் பலர் உற்பத்தி செய்யப்பட்ட பாலை பாதுகாப்பது தொடர்பாக கவனம் எடுப்பதில்லை என்பது கவலையான விடயமாகும். இது மனித உணவுப் பாதுகாப்புடன் தொடர்புபட்டது என்பதை மறந்து போய்விடுகிறோம்.
பாலைப் பாதிக்கும் காரணிகளை ஆராய்வோம்.
1. சுகாதாரமற்ற பால் கறத்தல் செயன்முறைகள் – இங்கு பால் கறக்குமிடம், மாடு, பால் கறப்பவர் போன்ற காரணிகள் அசுத்தமாக இருக்கும் பட்சத்தில் பாலை பழுதடையச் செய்யக்கூடிய ஏதுக்களாக அமைகின்றன. இதன் காரணமாக அழுக்குகள், நுண்ணங்கிகள் பாலை அடைந்து அதனை பழுதடையச் செய்யலாம்.
2. மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் – மாடுகள் மடியழற்சி போன்ற நோய்களுக்கு உட்படும் போது பால் பழுதடைகிறது. இதன் காரணமாக பாலிலுள்ள கலங்களின் (somatic cell count) எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது பாலின் தரத்தை அளவிடும் முக்கிய குறிகாட்டியாகும். நோயுள்ள மாட்டின் பால் ஏனைய மாட்டின் பாலுடன் கலக்கும் போது அந்தப் பாலும் பழுதடைகிறது.
3. பாலை முறையாக களஞ்சியப் படுத்தாமை – கறக்கும் பாலை முறையான வெப்பநிலையில் சேமிக்காமல் விட்டால் நுண்ணங்கிகளின் பெருக்கம் கூடி பால் பழுதடையும். மேலும் பாலை விரைவாகவும் சரியான பாதுகாப்பு வசதிகளிலும் கொண்டு செல்லாது போனாலும் பழுதடையும். கறக்கும், சேமிக்கும் பாத்திரங்களின் சுத்தம் மிக அவசியம். பல இடங்களில் வெளிக்களங்களில் பால் கறக்கப் பயன்படும் பாத்திரங்கள் முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. இதனாலும் பால் கெட்டுப்போகிறது.
4. சில இரசாயனப் பதார்த்தங்களின் சேர்வை / கலப்படம் – பண்ணைகளை சுத்தப்படுத்தும் திரவங்கள், களை கொல்லிகள், கிருமி நாசினிகள் போன்றவையும் மாடுகளுக்கு பயன்படுத்தும் நுண்ணுயிர் கொல்லிகள், குடற் புழு நீக்க மருந்துகள் போன்றனவும் பாலின் சுகாதாரத் தன்மையை பாதிக்கலாம். நுண்ணுயிர்க் கொல்லிகள் போன்ற கால்நடை மருந்துகளின் மீள்பெறுகை (withdrawal period) காலத்தை கணக்கில் எடுக்காமல் பாலை விற்றல் நுகர்வோரைக் கடுமையாக பாதிக்கக் கூடியது. அத்துடன் பாலின் உள்ளடக்கத்தை மாற்றவல்ல தண்ணீர், யூரியா, சீனி போன்ற பொருட்களும் பாலைப் பாதிக்கவல்லன.
5. சுகாதாரமற்ற தண்ணீர் – பால் பாத்திரங்கள், பால் கறக்கும் இயந்திரங்கள், கொட்டகைகள், மாடுகள் போன்றவற்றை கழுவவும் குடிக்கக் கொடுக்கவும் சுத்தமான, தேவையான தண்ணீர் அவசியம். இது கிடைக்காத போது பாலுற்பத்தியும் அதன் சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்.
6. பாலின் தரத்தை அடிக்கடி பரீட்சிக்காமை – பாலின் தரம், உள்ளடக்க விபரம், நுண்ணங்கிகளின் அளவு, தன்மை, கலப்படங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக பரிசோதனைகளைச் செய்து பார்க்காமை காரணமாக தரம் குறைந்த பால் சந்தைக்கு வரக்கூடும். இது மொத்தப் பாலின் தரத்தையும் பாதிக்கலாம்.
இப்படியான காரணிகளை விலாவரியாக ஆராய்ந்து அவற்றை சீர்செய்வதன் மூலம் சுத்தமான பாலுற்பத்தியை செய்ய முடியும்.
பால் கறப்பவரின் சுகாதாரம், பால் கறக்கும் முறைகள் பாலின் தரத்தை பாதிக்கும் வழிகள்
பால் கறப்பவர் பாலின் தரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவராகிறார். அவர் அழுக்கானவராக நோய்ப்பட்டவராக இருக்கும் போது அவர் கறக்கும் பாலின் தன்மையும் தரமும் கெட்டுப் போகிறது. பசுவின் முலைக் காம்பில் இருந்து கறக்கப்படும் பால் நோய்களற்று சுகாதாரமாகவே வருகிறது. பால் கறப்பவர் போன்ற வெளிக்காரணிகள் காரணமாகவே பாலின் தன்மை பெருமளவில் கெடுகிறது. சில முக்கியமான சுகாதார நடைமுறைகளைக் கைக் கொள்ளும் போது பால் பாதுகாக்கப்படுகிறது. அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
1. பால் கறப்பவரின் கைகளைச் சுத்தமாக பேணுதல் – பெரும்பாலும் மாடுகளின் முலைக் காம்புகளிலிருந்து வெறும் கைகளாலேயே கறக்கிறார்கள். அந்தக் கைகள் சுகாதாரமற்றதாக, நோய்க் கிருமிகளைக் கொண்டிருந்தால் அது கறக்கப்படும் பாலையும் பாதிக்கின்றது. எனவே ஒவ்வொரு மாட்டிலிருந்தும் பால் கறக்க முன் நன்கு சவர்க்காரமிட்டுக் கைகளைக் கழுவ வேண்டும். பால் கறப்பவரின் கையில் கூரிய நகங்கள் இருக்கக் கூடாது. காயங்கள் இருக்கக் கூடாது. ஒரு மாட்டில் பால் கறந்து ஏனைய மாட்டுக்கு பால் கறக்கச் செல்லும் முன் மீள கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும். இலங்கையில் பல திறந்தவெளி மாட்டுப் பண்ணைகளில் பால் கறப்பவர்கள் தனித்தனி மாடுகளுக்கு என்று கைச் சுத்தம் பேணுவதில்லை. மாடுகளைத் தொட்டு கட்டியபின் மீளவும் கைகளைக் கழுவுவது கிடையாது. இந்த மாதிரியான பண்ணைகளின் பாலின் தரம் குறைவாகவே காணப்படுகிறது. அந்தப் பால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாமல் பழுதடைகிறது. இதனால் பெருமளவு வருமானத்தை அவர்கள் இழக்கின்றனர். தற்போது தரமான கையுறைகள் விற்பனையில் உள்ளன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
2. பால் கறப்பவரின் உடைகள், ஏனைய சுகாதார நிலைகள் – இலங்கையில் பால் கறக்கும் பல பண்ணையாளர்கள் அழுக்கான உடையணிந்தும் சுகாதாரமற்றும் பால் கறப்பவர்களாகக் காணப்படுகின்றனர். பால் கறப்பவர் சுகாதாரமான ஆடை அணிந்திருக்க வேண்டும். குளித்து சுத்தமானவராக இருக்க வேண்டும். கறக்கும் பாலுக்குள் அவருடைய தலை முடி போன்றவைகளும் உமிழ்நீர், சளி போன்றனவும் கலக்காமல் பார்க்க வேண்டும். முக்கியமாக கறப்பவர் நோய்கள் அற்றவராக இருக்க வேண்டும். குறிப்பாக வயிற்றுப் போக்கு, காச நோய் போன்ற சுவாச நோய்கள் இல்லாது இருக்க வேண்டும். பால்கறப்பவர்கள் அடிக்கடி நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும். பாலில் அவரின் நேரடியான உடற் பாகங்களின் தொடுகை இருக்கக்கூடாது.
3. பொருத்தமான பால் கறத்தல் முறைகள் – பல வருடங்களாக பால் கறக்கும் பண்ணையாளர்களுக்கு மாட்டின் காம்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பால் கறக்கத் தெரியும். எனினும் புதிய தலைமுறைப் பண்ணையாளர்கள் கறக்கும் முறைகள் காரணமாக காம்புகள் பாதிக்கப்படுகின்றன. மடியழற்சி போன்ற நோய்கள் ஏற்படுகின்றது. பால்கறக்க முன் மாட்டை அதற்கு தயார்ப்படுத்த வேண்டும். ஒக்சிடோசின் எனும் ஓமோனின் சுரப்பு தூண்டப்பட்டால் தான் பால் வெளியேறும். அதனை தூண்டும் விதமாக மாட்டைத் தயார்படுத்த வேண்டும். முரட்டுத் தனமாக எடுத்தவுடன் முலையை கையாண்டால் மாடு மன அழுத்தத்துக்கு உள்ளாகி ஒக்சிடோசின் குறைந்து பால் வருவது குறையும். கன்றை காணும் போதும், பாத்திரங்களின் சத்தத்தின் போதும், மடியைக் கழுவும் போதும், சில அன்பான பால் கறப்பவரைக் காணும் போதுகூட மாடுகளில் ஒக்சிடோசின் அதிகம் சுரந்து பால் வெளியேறும். பெரிய பண்ணைகளில் இசையைக் கொண்டு மாடுகளை பால் கறக்கத் தயார்ப்படுத்துகின்றனர்.
பொதுவாக முதல் தடவை கறக்கும் பாலை வெளியே பீய்ச்சியடிக்க வேணடும். அதில் நுண் கிருமிகள் இருக்கலாம். பால் கறக்க முன்னும், கறந்த பின்னும் அதற்கெனவுள்ள தொற்று நீக்கிகளை பாவிக்கலாம். மாடுகள் பால் கறந்து சில நிமிடங்களுக்கு அவற்றின் முலைத்துவாரங்கள் திறந்தபடியே காணப்படுவதால் அவற்றை நிலத்தில் படுக்க விடக்கூடாது. வைக்கோல் புற்களை உண்ணக் கொடுத்தால் முலைத் துவாரங்கள் மூடுவதற்கு நேரம் கிடைக்கும். இல்லாது போனால் நுண் கிருமிகள் உள்ளே போகலாம். பாலின் நிறம், குணம் மாறும் போது உடனடியாக கால்நடை வைத்தியரிடம் செல்ல வேண்டும். சிகிச்சை பெற வேண்டும்.
சில வேளைகளில் ஒரு முலை மடியழற்சி நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் போது நாம் முறையற்ற விதத்தில் தொடர்ச்சியாக ஏனைய முலைகளையும் கையாண்டால் மற்றைய முலைகளுக்கும் ஏனைய மாடுகளுக்கும் நோய் பரவலாம். நோய்ப்பட்ட மாட்டையும் நோய்ப்பட்ட முலையையும் கடைசியாகக் கையாண்டால் நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
பால் பாத்திரங்கள் சுத்தமாக கழுவி தொற்று நீக்கப்பட்டு பாவிக்கப்பட வேண்டும். பால் பாத்திரங்களில் தேங்கும் பால் மீதிகள் நுண்ணங்கிகளின் தாக்கத்துக்கு உட்பட்டு அடுத்தநாள் பாலை பழுதாக்கலாம். பல பண்ணையாளர்கள் பிளாஸ்டிக் வாளிகளிலும் ஏனைய சுகாதாரமற்ற பாத்திரங்களிலுமே பால் கறக்கின்றனர். இதனால் பால் பாதிப்படையும் வாய்ப்பு ஏற்படுகிறது. அண்மைக் காலங்களில் அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்கள் பொருத்தமான பால் பாத்திரங்களை வழங்குவதைக் காணமுடிகிறது. பொருத்தமான பால் பாத்திரங்களில் கொண்டு வரப்படாத பால் நிராகரிக்கப்படுகிறது. இந்த பாத்திரக் கையாளல் பால் கறப்பவரின் தலையாய கடமையாகும்.
4. பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் – பால் கறப்பது தொடர்பாகவும் பாலை பால் பாத்திரங்கள் பேணுதல், நோய்த் தடுப்பு முறைகள் தொடர்பான பயிற்சிகளை பால் பண்ணையாளர்களுக்கு அவசியம் வழங்க வேண்டும். பல மாடுகள் வைத்திருக்கும் பண்ணையாளர்கள் பால் கறக்கும் இயந்திர முறைக்கு மாற வேண்டியதன் அவசியம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட வேண்டும். இயந்திரக் கறவை, நேர விரயத்தைத் தடுப்பதோடு பால் பழுதாகுவதையும் குறைக்கும். முறையான பால் கறத்தல் தொடர்பான கையேடுகள், இணைய காணொலிகளைப் பார்த்து, பல நுட்பங்களை அறிந்து கொள்ள முடியும். அண்மைக் காலத்தில் பால் சுகாதாரம் தொடர்பான பயிற்சிகள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படுவது சாதகமான முன்னேற்றமே.
மாட்டின் சுகாதாரமும் பால் சுத்தமும்
பாலின் தரத்தை தீர்மானிப்பதில் மாடுகளின் சுகாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மாடுகள் ஆரோக்கியம் தளர்ந்து காணப்படும் போது அது பால் உற்பத்தியைப் பாதிக்கிறது. பால் பழுதடைகிறது. அந்தப் பால் பல நோய்களை பரப்பும் காவியாக மாறுகிறது. மாடுகளின் சுகாதாரம் எவ்வாறு பாலைப் பாதிக்கிறது எனப் பார்ப்போம்.
1. மடியழற்சியும் அதன் பாதிப்பும் – பாலை உற்பத்தி செய்யும் மடியில்/முலைச் சுரப்பியில் ஏற்படும் நோய்த்தொற்றுதான் இந்த மடியழற்சி. மடியழற்சி ஏற்படும்போது பாலுற்பத்தி குறைவதோடு, கடுமையாக இந்த நோய் ஏற்படுமாயின் மடி பாலை உற்பத்தி செய்ய முடியாமல், பட்டுப்போகும் நிலை தோன்றும். மடியழற்சியை குணமாக்க கடும் மருத்துவச் செலவும் சுகாதார நடைமுறைகளும் தேவை. மடியழற்சி ஏனைய முலைகளுக்கும் ஏனைய விலங்குகளுக்கும் பரவக் கூடிய கடும் ஆபத்துமிக்கது. பண்ணையின் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைக்கக் கூடியது. வெளிநாடுகளில் மடியழற்சிக்கு தடுப்பூசிகள் உள்ளன. இலங்கை போன்ற நாடுகளில் வருமுன் காக்கும் வகையான நடைமுறைகளையே கடைப்பிடிக்க வேண்டும்.
2. தொற்று நோய்களை தவிர்த்தல் – சில நோய்கள் பால் மூலம் பரவக்கூடியன. குறிப்பாக காச நோய், brucellosis எனும் கன்று வீச்சு நோய், கால்வாய் நோய் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கால்வாய் நோய் போன்றவற்றை தடுப்பூசிகள் மூலம் தடுக்க முடியும். காச நோய், கன்று வீச்சு நோய்கள் மனிதனுக்கும் பரவக் கூடியதாகையால் கடும் அவதானம் தேவை.
3. மாடுகள் வாழும் சூழல் – மாடுகளின் தொழுவம் மற்றும் சுற்றுப்புறம் அசுத்தமாகவும், சேறு சகதியுடன் காணப்படும் போது பல நோய்கள் இலகுவாகத் தொற்றக் கூடும். இலங்கையின் உலர் வலயப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான தொழுவங்கள் நாட்கணக்கில் மாடுகளின் எரு, சிறுநீர் நிறைந்து சுத்தம் செய்யப்படாமல் இருப்பதைக் காணமுடியும். இதனால் நோய்கள், குடற்புழுக்கள், நுளம்பு, ஈக்கள் பெருக வாய்ப்பு உள்ளது.
4. சுத்தமான மாடுகள் – மாடுகள், சேறு சகதி இன்றி கழுவப்பட்டு சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறக்க முன்னும் பின்னும் மடியை கழுவி தொற்று நீக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் பால் கறவையின் போது அழுக்குகளால் பால் கெடாமல் பார்க்க முடியும்.
5. மாடுகளின் உடல் நிலை – மாடுகள் சரியாக உணவு உண்டு நோய்கள் அற்று இருக்க வேண்டும். சரிவர உணவு, ஊட்டச் சத்துக்களை உண்ணாத மாடுகள் மெலிந்தும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தும் காணப்படும் போது பாலுற்பத்தி குறைவதோடு பாலின் தரமும் குறையும். மடியழற்சி போன்ற நோய்களின் போது somatic cells எனும் கலங்கள் அதிகரிக்கும். somatic cell count எண்ணிக்கை அதிகரிக்கும் பால், கொள்வனவின் போது நிராகரிக்கப்படுவதோடு நுகர்வுக்கு தகுதியற்றதாகவும் மாறி விடுகிறது.
6. பயன்படுத்தும் தண்ணீரின் அளவும் தரமும் – பாலில் 87-88% தண்ணீரே உள்ள நிலையில் தேவையான சுத்தமான தண்ணீர் கிடைக்க வகை செய்ய வேண்டும். அசுத்தமான தண்ணீர் பல நோய்களைத் தர வல்லது. தண்ணீர் மாடுகளை குளிப்பாட்டவும், தொழுவத்தை கழுவவும் பயன்படுவதால் அதற்கும் தேவையான சுத்தமான தண்ணீர் அவசியமாகிறது.
7. மாடுகளின் மனநிலை – மாடுகள் நோய் மற்றும் ஏனைய புறக் காரணிகளால் அயர்ச்சிக்கு (stress) உள்ளாகின்றன. இதனால் பாலுற்பத்திக்கு தேவையான oxytocin, prolactin போன்ற ஓமோன்களின் அளவு குறைகிறது. இதனால் முடிந்த வரை அயர்ச்சியை குறைக்க வழி செய்ய வேண்டும். நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
8. கால்நடை வைத்திய சேவையின் அவசியம் – தொடர்ச்சியான நோய்த்தடுப்பு முறை, சிகிச்சைகளை கால்நடை வைத்தியரிடம் பெற வேண்டும். நோய் முற்றும் வரை காத்திராமல் ஆரம்ப நிலையிலேயே மடிநோய் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும். பொருத்தமான மருந்துகளை பாவிக்க வேண்டும். குறிப்பாக பாலின் மூலம் மருந்துகள் மனிதனை அடையாமல் தவிர்க்கும் படியான சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகள் அவசியம்.
9. நோய்ப்பட்ட, தேவையற்ற மாடுகள் – மடியழற்சி் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பலனற்ற மாடுகளை கழிக்க வேண்டும்.
இப்படியாக மாடுகள் சார்ந்த காரணிகள் பால் உற்பத்தியையும் அதன் சுகாதாரத்தையும் பாதிக்கின்றன.
பால் கறக்கும் சூழலும் பால் சுகாதாரமும்
சுத்தமான பாலுற்பத்திக்கு பால் கறக்கும் இடத்தினதும் மாடு வாழ்கின்ற இடத்தினதும் சுத்தம் மிக அவசியமானதாகும்.
1. சுற்றுச்சூழல் – மாடுகள் வளர்க்கப்படும் இடம் அழுக்கானதாகவும் நோய்கள் பரவக் கூடிய விதத்திலும் காணப்படுதல் பால் சுகாதாரத்தை பாதிக்கும். முடிந்தவரை தினமும் அந்த இடத்தை சுத்தம் செய்து வைக்க வேண்டும். அத்துடன் பால் கறக்கும் இடமும் பால் கறக்கும் இயந்திரங்களும் சுத்தமாகவும் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பால் கறவை இயந்திரம் மூலமும் மடியழற்சி போன்ற நோய்கள் பரவக்கூடும்.
2. எரு முகாமைத்துவம் – இலங்கையின் பெரும்பாலான கொட்டகைகளில் கால்நடைகளின் எரு தேங்கியிருப்பதைக் காண முடியும். எருக்களின் தொடுகை காரணமாக நோயுற்ற மாடுகளில் இருந்து சுகதேகி மாடுகள் தொற்றுக்கு உள்ளாக நேரிடும். மாடுகள், எரு காணப்படும் நிலத்தில் படுக்கும் போது குறிப்பாக முலைக்காம்பு தொடுகையுறும் போது மடியழற்சிக்கு உள்ளாக நேரிடும். எனவே முடிந்த வரை எரு முகாமைத்துவத்தை சரியாகச் செய்ய வேண்டும்.
3. பீடைகள் மற்றும் சிறிய விலங்குகள் – கொட்டகைகளுக்கு வரும் ஈக்கள், நுளம்புகள், உண்ணிகள், தெள்ளு, பூச்சிகள், எலிகள் போன்றவை பல நோய்களை பரப்பக் கூடியன. எனவே அவை வரக்கூடிய வழிகளை தவிர்க்க வேண்டும். பண்ணையை அண்மித்து அவை பெருகும் இடங்களை அழிக்க வேண்டும்.
4. தண்ணீர் தேங்குதல்/ தண்ணீர் முகாமைத்துவம் – மழை காலங்களில் கொட்டகைகளுக்குள் வரும் தண்ணீர் மற்றும் வெளியே தேங்கும் தண்ணீர் என்பன பல நோய் நுண்ணங்கிகளும் பீடைகளும் பெருகும் வாய்ப்பை வழங்கக் கூடியதால் அவற்றை சரியாக முகாமை செய்ய வேண்டும்.
5. காலநிலை – ஒப்பீட்டளவில் வெய்யில் காலத்தை விட மழை காலத்தில் தான் மடிசார்ந்த நோய்கள் வருவதால் அந்தப் பருவத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
6. உயிர்ப் பாதுகாப்பு – பண்ணைகளின் நுழைவுகளில் நோய் பரப்பக் கூடிய மனிதர்கள், வாகனங்கள், விலங்குகளை வரவிடாமல் தவிர்க்க வேண்டும். நுழையும் வாகனங்கள், வாகனச் சக்கரங்கள், உபகரணங்கள் தொற்று நீக்கப்பட வேண்டும். மனிதர்கள் மாற்று உடைகள், காலணிகளை பண்ணைக்குள் பாவிக்க வேண்டும்.
7. உணவு/ மணம் – கால்நடைகள் உண்ணும் உணவு மற்றும் தண்ணீரின் வாடை சில வேளை பாலிலும் வரும் என்பதால் அப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
8. வெளிக்களங்களில் பால் கறத்தல் – இலங்கையின் உலர்வலயப் பகுதிகளில் பெரும்பாலான கால்நடைகள் வெளிக்களங்களில் வளர்க்கப்படுவதால் பால் கறத்தலும் அங்கேதான் இடம்பெறுகிறது. இதனால் பால் கறத்தலின் சுகாதாரம் சரிவர கடைப்பிடிக்கப் படுவதில்லை. முடிந்தவரை அந்த நிலைமைகளில் குறைந்தபட்ச சுகாதார நடைமுறைகளையாவது கடைப்பிடிக்க வேண்டும்.
9. கலப்படங்கள் – இயற்கையான பாலின் உள்ளீடுகளை மாற்ற பலர் தண்ணீர், சீனி, யூரியா போன்றவற்றை கலக்கின்றனர். இதனாலும் பாலின் தரம் குறைகிறது. இது மனித சுகாதாரத்தை பாதிக்கவல்லது.
10. மேய்ச்சல் இடங்கள் மற்றும் வழங்கப்படும் உணவுகளின் தரம் – தரமற்ற புற்களைக் கொண்ட மேய்ச்சலிடங்களில் மேயும் பசுக்களின் பாலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தரம் குறைந்த பழுதடைந்த உணவுகளை வழங்கும் போதும் மாடுகள் சுகயீனம் அடைவதோடு பாலுற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. முடிந்தவரை தரமான புல், செறிவுணவு கிடைக்க வகைசெய்ய வேண்டும்.
பால் தொடர்பாக பயன்படும் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் தொடர்பான பால் சுகாதாரமும்
பாலை கறப்பது சேமிப்பது கொண்டு சேர்ப்பது என சகலதுக்கும் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் காரணமாகவும் பாலின் தரம் பாதிக்கப்படுகிறது.
1. பல இடங்களில் மேற்படி பால் பாத்திரங்கள் அரைகுறையாகவே கழுவப்படுகின்றன. முறையாக உலர்த்தப்படுவதில்லை. இதனால் பாலின் மீதிகள் தேங்கி பல நுண்ணுயிர்களுக்கான வாழ்விடமாக மாறுகின்றன. மறுநாள் சுத்தமான பாலை ஊற்றும் போது அதுவும் பழுதடைகிறது. இந்தப் பாலை கொள்முதல் செய்யும் போது ஏனையவர்களின் பாலும் பாதிப்படைகிறது. பால் பாத்திரங்களை பால் எடுத்த பின் நன்கு சுத்தமான தண்ணீரில் கழுவி தொற்று நீக்கி காயவிட வேண்டும். மறுநாள் எடுக்கும் போதும் சுத்தமாக கழுவ வேண்டும்.
2. கறக்கப்படும் பால் நுண்ணங்கிகள் வளர முடியாத வெப்பநிலையில் (4 பாகை செல்சியஸ் வெப்பம்) குளிர் சாதனங்களில் வைத்து சேமிக்கப்பட வேண்டும். பலரது, மாலை கறக்கப்படும் பால் மறுநாள் கொடுக்கப்படும் போது பழுதடைந்து போகிறது. முடிந்தவரை அதற்குரிய குளிர்சாதன வசதியில் சேமிக்கவேண்டும். சேமிக்கும் பாலை தூசி துணிக்கைகள், அழுக்குகள், எலி, பூச்சிகள் பாதிக்காமல் பார்க்க வேண்டும். அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் பண்ணையாளர்களுக்கு குளிர் சாதன வசதிகளை மானிய அடிப்படையில் அதிகளவில் வழங்க வேண்டும்.
3. பால் பாத்திரங்களை ஏனைய பாத்திரங்களில் இருந்து தள்ளி வைப்பதோடு பால் கறக்க பயன்படும் பாத்திரங்களை வேறு தேவைக்கு பயன்படுத்தக் கூடாது.
4. முடிந்தவரை தரமான ஊடகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களையே (stainless steel) பாவிக்க வேண்டும். நெளிந்த சிதைந்த பாத்திரங்களில் நுண்ணங்கிகள் ஒளிந்து மறையக்கூடியதால் அவற்றை அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பாத்திரங்கள் சிதைவடையக் கூடியதால் அந்த சிதைவுகளில் நுண்ணங்கிகள் காணப்படும்.
5. முதல் கறந்த மற்றும் பிறகு கறந்த பால் தொடர்பான அறிவுறுத்தலுடன் கூடிய லேபிள்களை பாத்திரங்களில் ஒட்டினால் முதல் கறந்த பாலை முதலிலேயே பயன்படுத்தலாம். நேரம் செல்லச் செல்ல பாலில் நுண்ணங்கிகள் பெருகுவதால் இந்த ஏற்பாடு பலன் தரும்.
6. பாலைப் பாதிக்கவல்ல இரசாயன பதார்த்தங்கள், தொற்றுநீக்கிகள் பாலுடன் தொடுகையுறாமல் பார்க்க வேண்டும்.
7. பாலை கொண்டு செல்லும் பாத்திரங்களும் பால் கறவை இயந்திரங்களும் சுகாதாரமாக இருப்பது அவசியம். முன்னர் சொன்ன நடைமுறைகள் இதற்கும் பொருந்தும்.
8. பக்கற்றில் அடைக்கும் பால் மற்றும் ஏனைய பெறுமதிசேர் பால் பொருட்கள் எனில் முறையான சேமிப்பு மற்றும் பொதியிடல் முறைகள் கையாளப்பட வேண்டும். தரமான சேமிப்பு, பொருத்தமான வெளி உறைகள் பாவிக்கப்பட வேண்டும். அடிக்கடி தரக் கட்டுப்பாட்டு பரிசோதனை அவசியம்.
சுத்தமான பால் உற்பத்தியின் பெரும்பாலான விடயங்களை ஆராய்ந்துள்ளேன். பால் சுகாதாரம், பாலின் தரத்தையும் மனித சுகாதாரத்தையும் உறுதி செய்கின்றது; கறக்கப்பட்ட பின்னர், பாலில் ஏற்படும் பாதிப்பினால் உண்டாகும் வருமான இழப்பையும் தடுக்கிறது. எனவே முடிந்தவரை பாலை சுத்தமாக உற்பத்தி செய்வோம்.
தொடரும்.