அசமத்துவச் சுயாட்சி சமூக முறைமை
அரசியல் யாப்பை வரைவதற்கான சபையில் கருத்து வேறுபாடுகள் பல எழுந்தன. உணர்வுகளை தூண்டக்கூடியதான பிராந்திய சுயாட்சி என்ற விடயமே இக்கருத்து வேறுபாடுகள் யாவற்றிலும் முதன்மையானது. பஸ்க், கற்றலன், ஹலீசியா ஆகிய தேசிய இனங்கள் மொழியிலும் பண்பாட்டிலும் நாட்டின் பிறபகுதியினரை விட வேறுபட்டதாய் இருந்தன. அது மட்டுமன்றி அவை கடந்த காலத்தில் சுயாட்சி உடைய சுதந்திரமான சமூகங்களாகச் செயற்பட்டன. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்த பிராங்கோவின் மத்தியபடுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியினால் மக்களின் சுயாட்சிக்கான அபிலாசைகளை மழுங்கடிக்க முடியவில்லை. பிராந்தியங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்ற விருப்பு நீண்ட காலமாக அம்மக்களின் மனங்களில் பதிந்திருந்தது. ஸ்பானியாவின் தேசிய இனங்களிற்கும் பிராந்தியங்களுக்கும் ஏதாவது வகையில் சுயாட்சிக்கான வழிமுறைகளை அரசியல் யாப்பில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து யாப்பினை வரைந்த குழுவின் பெரும்பான்மை உறுப்பினரின் ஏற்புடைமையைப் பெற்றிருந்தது. ஆயினும் அவர்களிடம் எவ்வகையான அதிகாரப் பகிர்வு மாதிரியைச் செயற்படுத்த வேண்டும் என்பது பற்றி தெளிவான சிந்தனையயோ, திட்டமோ இருக்கவில்லை. அத்தோடு பிளவுபடுத்தப்படாத ஐக்கிய ஸ்பானியா என்பதனை ஓர் இலட்சியமாக கொள்ள வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்தது. தாயகம் என்பதை ஏற்றுக் கொள்வதோடு தேசிய இனங்களினதும் பிராந்தியங்களினதும் சுயாட்சிக்கான உரிமையை ஏற்படுத்தி அங்கீகரித்தல் என்ற கொள்கையைப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கொண்டிருந்தனர். ஒரே ஒரு தேசிய இனமே உள்ளது. அத்தேசிய இனம் ஸ்பானியர்கள் என்று கூறும் அதே வேளை, ஏனைய தேசிய இனங்களினதும், பிராந்தியங்களினதும் சுயாட்சியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியும் அவர்களிடம் காணப்பட்டது.
முன்னர் குறிப்பிட்டது போல் சில தேசிய இனங்கள் குறிப்பாக பஸ்க், கற்றலன் என்ற இரண்டும் சுயாட்சிக்கான கோரிக்கையில் தீவிரம் காட்டின. இவ்விரு பகுதிகளிலும் பிராந்திய சுயாட்சி இயக்கங்கள் பலமாக இருந்தன. பஸ்க் பகுதியின் இடதுசாரிகள் பிரிவினைவாதத்தையும் தனியான நாட்டை அமைப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டனர். ஏனைய தேசிய இனங்களும் பிராந்திய குழுக்களும் இவை போன்று தீவிரம் காட்டாத போதும் வெவ்வேறு மட்டங்களிலான அதிகாரப் பகிர்வைக் கோரின. பஸ்க், கற்றலன், ஹலீசியா ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சுயாட்சியை வழங்குவதே ஆரம்பத்தில் நோக்கமாக இருந்தது. ஏனெனில் இம்மூன்று பகுதிகளினதும் சுயாட்சிக்கான உரிமை ஏலவே ஏற்பட்டிருந்தது. ஏனைய பகுதிகளுக்கு குறைந்தளவு அதிகாரப் பகிர்வை நிர்வாகப் பரவலாக்கம் மூலம் வழங்கலாம் எனக் கருதப்பட்டது. ஆகையால் வரலாற்றுத் தேசிய இனங்கள், பிற சமூகங்கள் என்ற வகைப்பாடு பிராந்திய சுயாட்சியின் அளவைத் தீர்மானிப்பதற்கான அளவு கோலாகக் கருதப்பட்டது. பன்முகப்பட்டதும் உணர்வுகளைத் தூண்டக் கூடியதுமான இச்சிக்கலான விடயங்களை அரசியல் யாப்பில் வெளிப்படுத்துவது எப்படி என்ற குழப்பம் இருந்து வந்தது. சுயாட்சி சமூக முறை (System of Autonomous Communities) என்ற கருத்து இதற்கோர் தீர்வாக அமைந்தது.
சமஷ்டி முறைகளின் அங்கங்களான அலகுகளிற்கு ஒப்பானவையான அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்டவையே ஸ்பானியாவின் சுயாட்சிச் சமூகங்கள் ஆகும். இவற்றின் கட்டமைப்புகள் சட்டங்களை இயற்றவும் அவற்றை நிறைவேற்றவும் துணை செய்வன. மத்திய அரசில் உள்ள கட்டமைப்புகளை இவை ஒத்தவை. பின்வரும் அடிப்படை அமைப்புகள் ஒவ்வொரு சுயாட்சி சமூகங்களிலும் இருக்கும்.
அ). விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் தெரிவு செய்யப்பட்ட சட்டசபை
ஆ). நிறைவேற்று அதிகாரத்தையும் நிர்வாக அதிகாரத்தையும் கொண்ட ஆட்சி சபை (Governing Council)
இ). அரசரால் நியமிக்கப்பட்ட, தெரிவுசெய்யப்பட்ட தலைவர் ஒருவர் தலைமை வகிப்பார்
ஆட்சி சபை சட்டசபைக்குப் பொறுப்புக் கூறுவதாக இருக்கும். அரசியல் யாப்பு மேற்குறித்த கட்டமைப்புகளுக்கு உரிய அதிகாரங்களையும் பொறுப்புகளையும் வகுத்துரைத்துள்ளது. ஒவ்வொரு சமூகமும் பின்வரும் மூன்று விடயங்களை தெளிவாக குறிப்பிடும் நியதிச்சட்டத்தை வரைந்து பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
- சமூகத்தின் பெயர்: இப்பெயர் சமூகத்தின் வரலாற்று அடையாளத்தை (Historical Identity) தெளிவாக எடுத்துக் கூறுவதாக இருக்கும்.
- அச்சமூகத்தின் புவியியல் எல்லைகள் எவை எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- அரசியல் யாப்புக்கு அமைவாக அச்சமூகத்திற்குரிய இயலுமைகள் (Competencies) எவை எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இவ்வாறு வரைந்து சமர்ப்பிக்கப்படும் ஆவணம் சுயாட்சி நியதிசட்டம் (Statue of Autonomy) எனப் பெயர் பெறும். இது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதும் சட்டமாகும்.
இந்நியதிச் சட்டம்,
அ) ஒவ்வொரு சுயாட்சிச் சமூகத்தினதும் நியம விதிகளாக இருக்கும்.
ஆ) இவற்றை அரசு (ஸ்பெயின்) அங்கீகரிப்பதோடு தனது நிதி முறையினதும் சட்ட ஒழுங்கினதும் அங்கமாக இவற்றை மதித்து பாதுகாத்தல் வேண்டும்.
அரசியல் யாப்பில் மத்திய அரசுக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் (Reserved Powers) குறிப்பிட்டுள்ளன. இவ்வாறான ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் அல்லாத பிற அதிகாரங்களை முழுவதுமாகவோ, பகுதியாகவோ தேர்ந்தெடுத்து தமக்குரிய அதிகாரங்களாக நியதிச்சட்ட வரைவில் குறிப்பிடல் வேண்டும். மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் அரசியல் யாப்பின் உறுப்புரை 149 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தோடு இவ் உறுப்புரையில் 32 விடயங்கள் அரசின் இயலுமைகள் (Competencies) எனப் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வாறு இயலுமைகள் என குறிப்பிட்ட அதிகாரங்கள் அரசின் துணை அதிகாரங்கள் (Optional Powers) எனவும் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள், பிறவற்றுக்குரியதல்லாத தனித்த அதிகாரங்கள் (Exclusive Powers) என்றும் கூறப்பட்டுள்ளன. இவை பின்வரும் பிரதான விடயங்களை உள்ளடக்கியுள்ளன.
- குடிவரவு
- சர்வதேச உறவுகள்
- பாதுகாப்பு
- நீதி நிர்வாகம்
- சுங்கமும் தீர்வைகளும்
- வெளிநாட்டு வர்த்தகம்
- நாணய முறை
- நிலுவைகளும் அளவைகளும்
- விஞ்ஞான ஆராய்ச்சி வளர்ச்சி
- இயைபாக்கம்
- சமூக பாதுகாப்பு
- கடல் மீன் பிடிப்பு
- கப்பல் போக்குவரத்து (பொது)
- துறைமுகங்களும் விமான நிலையங்களும்
- தபால் சேவையும் தொலைத்தொடர்பும்
- சூழல் பாதுகாப்பு
- பொது வேலைகள் – (ஒன்றுக்கு மேற்பட்ட பிராந்தியங்களுடன் தொடர்புபட்டவை)
- கல்வித்துறை பட்டங்கள் வழங்குதலை தரப்படுத்தலும் ஒழுங்கமைத்தலும்
- ஸ்பானியாவின் பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்கள்
சூழலியல் கொள்கை, பத்திரிகை, தொலைக்காட்சி, பிற ஊடகங்கள், நீர்வளம், சமூகப் பாதுகாப்பு என்பன சுயாட்சி சமூகங்களுடன் இணைந்தும் பகிர்ந்தும் பிரயோகிக்கப்படும் அதிகாரங்களாகும்.
உறுப்புரை 148 சுயாட்சிச் சமூகங்களின் இயலுமைகளாக 22 விடயங்களை நிரைப்படுத்தியுள்ளது. இதனுள் சேர்க்கப்பட்டுள்ள இயலுமைகளில் சில வருமாறு:
- பொது வேலைகள்
- ரயில் போக்குவரத்து நெடுஞ்சாலைப் போக்குவரத்து – (பிராந்தியங்களுக்குரியவை)
- வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடாத துறைமுகங்கள், விமான நிலையங்கள்
- விவசாயமும் கால்நடை வளர்ப்பும்
- காடுகளும் வனப் பகுதிகளும்
- பிராந்தியத்துக்குரிய நீர் வளங்கள், கால்வாய் திட்டங்கள்
- உள்ளக மீன்பிடி
- கைவினைத் தொழில்கள்
- சமூகங்களின் நினைவுச் சின்னங்கள்
- பண்பாட்டு வளர்ச்சி
- சுற்றுலாத்துறை
- சமூக உதவி, சுகாதாரமும் உடல் நலனும்.
பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தேசிய கொள்கைகளுக்கு உட்பட்டவையாகும். உதாரணமாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் என்ற விடயம் பொதுவான பொருளாதாரத் திட்டமிடலுக்கு அமைவானதாக இருக்கும். பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுதல் பற்றி சுயாட்சிச் சமூகங்களுக்கு உள்ள இயலுமை தேசிய பொருளாதாரக் கொள்கை நோக்கங்களிற்கு உட்பட்டதாக இருக்கும். நிரலில் இறுதியாக குறிப்பிட்ட விடயமாக சுயாட்சிச் சமூகங்களின் மேற்பார்வையிலும் பாதுகாப்பிலும் உள்ள கட்டிடங்கள், அலுவலகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் சட்டத்திற்கு அமைவாக உள்ளூர் பொலிஸ் சேவையினை ஒருங்கிணைத்தலும் ஏனைய அதிகாரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயினும் அரசியல் யாப்பு சுயாட்சி சமூகங்களுக்கு நீதி அதிகாரங்கள் எதனையும் குறித்துரைக்கவில்லை.
அரசியல் யாப்பில் குறிப்பிட்ட சுயாட்சி சமூகங்களின் இயலுமைகள் யாவற்றையும் தமக்குரியதாக ஏற்றுக்கொள்ளலாம்; அல்லது அவற்றின் ஒரு பகுதியினை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். இக்காரணத்தினால் சுயாட்சி சமூகங்களிடையே அதிகாரப் பகிர்வில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஐந்து வருடங்கள் சென்ற பின் ஒரு சுயாட்சிச் சமூகம் தன் சுயாட்சி நியதிச் சட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இத்தகைய திருத்தங்களை செய்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமை அசமத்துவ அதிகாரப் பகிர்வை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகிறது. ஏனெனில் கொள்கை அளவில் வெவ்வேறு சுயாட்சி சமூகங்கள் தத்தமது சுயாட்சி நியதிச் சட்டங்களை வெவ்வேறு வகையில் திருத்திக் கொள்ளலாம்.
1979 ற்கும் 1983 ற்கும் இடைப்பட்ட காலத்தில் எல்லா பிராந்தியங்களும் சுயாட்சி சமூகங்களாக ஆக்கப்பட்டன. மொரக்கோவின் வடபகுதியில் உள்ள நகரங்களான Ceuta, Melilla என்ற இரு நகரங்களும் தமது சுயாட்சி நியதிச் சட்டங்களை இயற்றியதுடன் இச்செயல் முறை முற்றுப்பெற்றது. சுயாட்சிக்காக எந்த அடிப்படையில் ஒரு சுயாட்சி பிராந்தியம் தகுதிப் பெறுகிறது என்ற அளவுகோலும் பிராந்தியங்களிடையே வேறுபடுகின்றது. கற்றலோனியா, பஸ்க், ஹலிசியா என்ற மூன்று பிராந்தியங்களும் சுயாட்சி அந்தஸ்தை விரைவு வழியில் (Fast Track or Rapid Route) பெற்றுக் கொண்டன. இவை வரலாற்று தேசிய இனங்களாகவும் இரண்டாவது குடியரசின் போது அந்த அந்தஸ்தை பெற்றவையாதலாலும் விரைவு வழியிலும் சுயாட்சியை நோக்கிச் சென்றன. அண்டலூசியா மேற்குறித்த மூன்றினையும் போன்று வரலாற்றுத் தேசியமாக இருக்கவில்லை. ஆயினும் அப்பிராந்தியம் சுயாட்சிக்கான உரிமையை வேறுபடுத்தி தானே பெற்றுக் கொண்டது. அண்டலூசியாவில் இலட்சக் கணக்கான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தம் பிராந்தியத்திற்கு சுயாட்சி வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அண்டலூசியாவும் வரலாற்று தேசிய இனங்களைப் போன்று விரைவு வழியில் சுயாட்சியை பெற்றது (உறுப்புரை 143). மத்திய தரைக் கடலில் ஒரு தீவு கூட்டமும் அத்திலாந்திக் கடலில் இன்னொரு தீவுக் கூட்டமும் சுயாட்சி அந்தஸ்தை பெற்றன. இவை தீவுப் பகுதிகள் (Insular Territories) எனப்பட்டன. இவை ஸ்பானியாவுடன் நிலத் தொடர்ச்சியுடையன அல்ல என்பதாகும். மட்றிற் நகரமும் சுயாட்சி அந்தஸ்தை பெற்றது. ஒரு மாகாணம் என்றோ அல்லது தேசிய இனம் என்றோ வரையறுக்க கூடியது அல்லவாயினும், கஸரில் பிராந்தியத்தின் பகுதியாக இருந்த மட்றிற் நகரத்திற்கும் சுயாட்சி வழங்கப்பட்டது.
உறுப்புரை 137, பிராந்திய மட்டத்தில் சுயாட்சி சமூகங்கள் தாமாக உருவாக்கப்படலாம் என்று கூறுகிறது. இது அதிகாரப் பகிர்வு முறையின் நெகிழ்ச்சித் தன்மையைக் காட்டுகிறது. ஒரு தேசிய இனமோ அல்லது பிராந்தியமோ தன்னை சுயாட்சி சமூகமாக ஆக்கிக் கொள்வதும் அவ்வாறு ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடாமல் விடுவதும் அதன் சொந்த முடிவே ஆகும் என்பதை இது குறிப்பிடுகிறது. சுயாட்சியைப் பெறுவது சுயாதீனமான சுயவிருப்புப் படியான ஒரு விடயம் என்பதே ஸ்பெயின் அரசியல் யாப்பின் முக்கிய அம்சம்; சுயாட்சி திணிக்கப்படுவது அல்ல. மாகாணங்களும் தீவகப்பகுதிகளும் தத்தமது வரலாறு, பண்பாடு, பொருளாதாரம் ஆகிய தனித்துவ இயல்புகளின் படி தமக்கு சுயாட்சி வேண்டுமா ? இல்லையா ? என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் ஸ்பானிய அதிகாரப் பகிர்வு முறையின் கீழ் பல சுயாட்சி அலகுகள் இருக்கும். ஒரு பகுதி மக்கள் தமக்கு சுயாட்சி அலகு தேவையில்லை எனக் கருதலாம். அது பற்றிய தீர்மானத்தை எடுக்க வேண்டியவர்கள் அம் மக்களேயாவர். இவ்வாறு எத்தகைய சுயாட்சி என்பதை அலகுகள் முடிவு செய்வதால் அலகுகளுக்கிடையே அதிகாரப் பகிர்வில் சமத்துவமின்மை இருக்கும். மேலும் அரசியல் யாப்பு, வரலாற்றுத் தேசிய இனங்கள் வரலாற்று தேசிய இனங்கள் அல்லாதவை என்ற பிரிப்பை செய்திருப்பதும் சமத்துவமின்மைக்கு காரணமாகியுள்ளது. பஸ்க், கற்றலோனியா, ஹலீசியா என்ற மூன்றுமே விரைவுப் பாதையால் சுயாட்சியை நோக்கிச் செல்ல முடிந்தது. ஏனையவை வேகம் குறைந்த பாதையில் சென்றன. நகர, மாகாண அரசாங்கங்கள் முதலில் சுயாட்சி நியதிச் சட்டத்தை ஆக்க வேண்டும். இறுதியில் பாராளுமன்றம் அதனை அங்கீகரிக்க வேண்டும். வரலாற்று தேசிய இனங்களின் சுயாட்சி அதிகாரங்கள் மற்றயவற்றை விட அளவில் கூடியதாக இருக்கும்.
சுயாட்சியைப் பெறுவதற்குச் சென்ற பாதையும், சுயாட்சியின் அளவும் அலகுக்களிக்கிடையே வேறுபட்டனவாக இருந்ததால் சமத்துவமின்மை ஏற்பட்டது. வட மொரக்கோவின் குயுரா (Ceuta), மெலிலா (Melilla)) என்பவை சுயாட்சி நகரங்களாகின. அத்தகைய அந்தஸ்து சுயாட்சி சமூகம் முனிசிபல் சபை என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றாக இருந்தது. அவை சாதாரண சுயாட்சி சமூகங்கள் போன்று சட்டங்களை இயற்ற முடியாது. அவை பிரமாணங்களை மட்டுமே இயற்றிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். இவ்வகையில் பிற முனிசிபல் சபைகளை விட தம் அலுவல்களை ஒழுங்கமைப்பதில் கூடிய அதிகாரங்களை உடையவை.
வரலாற்றுத் தேசிய இனங்களின் சுயாட்சி சமூகங்கள் பிறவற்றை விடக் கூடிய அதிகாரங்களைக் கொண்டவை. உதாரணமாக அவற்றின் தலைவர் தமது அலகின் தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதை ஒரு தேர்தல் நடந்து நாலாண்டுகள் கடந்த பின் எவ்வேளையிலும் தேர்தலுக்கு உத்தரவிடலாம் என்று கட்டுப்பாட்டுக்கு அமைய தீர்மானிக்கலாம். ஏனைய சுயாட்சி அலகுகளின் தலைவர்களுக்கு இவ்வித அதிகாரம் இல்லை. பஸ்க், நவரே (Navarre), கற்றலோனிய என்பனவற்றிற்கு முழுமையான பொலிஸ் அதிகாரங்கள் உள்ளன.
அண்டலூசியாவிற்கும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளன. ஆயினும் சில மட்டுப்பாடுகள் அதற்கு உள்ளன. பஸ்க், நவரே ஆகிய இரு பகுதிக்களுக்கும் வருமான வரிகளை அளவிடும் அதிகாரம் இருந்தது. இந்த உரிமையை இப்பகுதியின் மரபு வழி ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் அனுபவித்து வந்தனர் என்பதால் இவ்வதிகாரம் இவற்றுக்கு கிடைத்தது. வருமான வரி தொடர்பான இவ்வொழுங்கு விசேட நடப்பு முறை எனப்பட்டது. இவ்வாறு அறவிடும் வரி வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட விதாசாரத்தை பஸ்க், நவரே என்பன மத்திய அரசு இப்பகுதியில் மேற்கொள்ளும் சேவைகளுக்கான செலவாகக் கொடுக்க வேண்டி இருந்தது. சுயாட்சி சமூகங்கள் நிறுவப்பட்ட பின்னர் பாராளுமன்றம் அரசியல் யாப்பின் உறுப்புரை 150 (1) க்கு அமைவாக மேலதிக அதிகாரங்களை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வகையில் பாராளுமன்றம் வழங்கும் அதிகாரத்தாலும் சுயாட்சி சமூகங்களிடையே அதிகாரப் பகிர்வில் சமத்துவமின்மை ஏற்படுகின்றது. அரசியல் யாப்பின் உறுப்புரை 150 இன் உப பிரிவு 2 இன் கீழ் பாராளுமன்றத்திற்கு சட்டம் இயற்றுவதன் மூலம் அதிகாரங்கள் சிலவற்றை சுயாட்சி சமூகங்களுக்கு மாற்றவும் கையளிக்கவும் முடியும். இப்பிரிவின் கீழ் நன்மை பெறுதல் ஒரு சில சுயாட்சிச் சமூகங்களுக்கே சாத்தியமானது. தேசியக் கட்சிகளுக்கும் பிராந்திய கட்சிகளுக்கும் இடையே தொடர்புகள் வலுப்படுத்தப்பட்ட போது இப்பிரிவின் கீழான அதிகார மாற்றங்களும் கையளிப்பும் ஸ்பானிய அதிகாரப் பகிர்வு முறையில் செயற்படத் தொடங்கியுள்ளது.
ஸ்பெயின் சுயாட்சி சமூகங்கள்
சுயாட்சி சமூகங்களுக்குரியதான இயலுமைகளும் சுயாட்சி அதிகாரங்களும் ஒருங்கே அட்டவணைப்படுத்தப்படும் நிரல் அரசியல் யாப்பில் இல்லை. ஸ்பெயினில் உள்ள அதிகார பகிர்வு நிறைவானதொரு முறையாகும். அத்தோடு அது நெகிழ்ச்சியுடையதும் ஆகும். சமூகங்களின் அதிகாரங்கள் காலத்திற்கு காலம் மாற்றிக் கொண்டே இருக்கும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. சுயாட்சி சமூகங்களின் சுய முனைவினால் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட முடியும். பாராளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படுவதன் மூலமும் அதிகாரத்தை மாற்றவும் கையளிக்கவும் முடியும். இதனாலும் வெவ்வேறு சுயாட்சி சமூகங்களின் அதிகாரங்கள் அளவில் வேறுபடுகின்றன. தொடக்கத்தில் வரலாற்று தேசிய இனங்களின் சுயாட்சி சமூகங்களுக்கும் பிறவற்றிற்கும் இடையே வேறுபாடுகள் காணப்பட்டன. இப்போது வரலாற்றுத் தேசிய இனங்கள் அல்லாத பிற சமூகங்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதால் இவ்விரு பிரிவுகளுக்கும் இடையே வேறுபாடுகள் குறைந்துள்ளன.
தொடரும்.