இளந்தாரி வழிபாடு
Arts
20 நிமிட வாசிப்பு

இளந்தாரி வழிபாடு

March 17, 2025 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

அறிமுகம்

எந்த உயிரியின் பரிணாமத்திலும் வளர்ச்சியிலும் இளமைப் பருவம் முக்கியமானதாகும். மனிதரில் இளைஞர்களை வாலிபர், இளைஞர் – இளந்தாரி என்று சுட்டுதல் வழக்கம். போர், காதல், உழைப்பு என எல்லாத்தளங்களிலும் இளமை தவிர்க்க முடியாத பிரதானமான அம்சமாகத் திகழ்கிறது. வாழ்வில் துடுக்குத்தனமும் அளவற்ற செயற்பாடுகளும் உடைய அப்பருவம் ஒவ்வொரு மனிதராலும் மறக்க முடியாத ஒன்றாகும். போரிலும் வீரத்திலும் ஆற்றலிலும் இளந்தாரிப் பருவம் தவிர்க்க முடியாத பருவமாகின்றது. மண், பொன், காதல் என்பவற்றுக்காகத் தன்னை அழித்துக் கொள்கின்ற – தியாகித்துக் கொள்கின்ற பருவமும் இதுதான். அதீத கோபம் இதன் தவிர்க்க முடியாத குணமாகின்றது. ஆதலால் விபரீத முடிவுகளையும் இது எடுத்துவிடுகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வில் ஈழத்துப்புலத்தின் தனித்துவமான தெய்வங்களுள் ஒன்றாக இளந்தாரி காணப்படுகின்றார்.

இளந்தாரி எனும் தெய்வம்

இளந்தாரி எனும் சொல்லை வாலிபனைக் குறிக்கும் சொல்லாகவே அகராதிகள் சுட்டுகின்றன. ஆனால் பஞ்சவன்னத் தூது ‘குலதேவன், ஊரை என்றும் காக்கும் தெய்வம், செஞ்சடா முடித்தேவன், மாதர் போற்றும் அண்ணல், கரந்தை சூடி அருள்புரிதூயன், கறையர் கண்டன், அருள் பெற்ற தெய்வம், கந்தமாமலரப் பொற்பதன், நற்றவர் போற்றும் மெய்த்தெய்வம், எத்திசையும் புகழ் – கருணை சேரும் கைலாயன்’ எனப் பலவாறு சுட்டுகிறது.

இளந்தாரி வழிபாடு இடம்பெறும் இடங்கள்

பொதுவில் இணுவிலில் மட்டுமே இளந்தாரி வழிபாடு காணப்படுவதாக நூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இளந்தாரி வழிபாட்டுக்கான பெருங்கோயில் இணுவைப் பேரூரிலேயே இருப்பதாக தமிழ்வேள் க.இ.க. கந்தசாமி குறிப்பிடுவது உண்மைதான். ஆயினும் இளந்தாரி வழிபாடு வன்னியில் – பூநகரியில் இருந்து மன்னார் செல்லும் வழியில் உள்ளமைந்திருக்கும் ஊர்களான கிராஞ்சி, வேரவில், கல்லாவில் போன்றவற்றிலும் காணப்படுகின்றது.

சாமுவல் லிவிங்ஸ்ரன் (Samuel Livingston) தனது ‘The Sinhalese of  Ceylon and The Aryan Theory’ எனும் நூலில் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ‘கலாவெவ’ குளம் உள்ளிட்ட குளங்களுக்குக் காவல் தெய்வமாக ‘Kadavara, Ilandari deviyo’ என்பன காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். இங்கு குறிப்பிடப்படும் இளந்தாரி தெய்யோ என்பது குளத்தோடு தொடர்புபட்டதாகவும், அவ்வழிபாடு அனுராதபுரத்தில் நிகழ்ந்ததாகவும் காணப்படுகின்றது (P.34). தவிர, இங்கு இடம்பெறும் காடவர – காட்டுவைரவராகச் சுட்டப்படுகின்றார். வரணியில் உள்ள குருநாத சுவாமி கோயிலில் ‘இளந்தாரி’ வைரவர் எனும் தெய்வம் பரிவாரமாக இருப்பதை அந்த ஆலயத்தின் பூசாரியும் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளருமான சி.கா. கமலநாதன் எமக்கு உறுதிப்படுத்தினார். அது காவல் தெய்வமாகவே கருதப்படுகிறது.

அதுபோல புங்குடுதீவில் இளந்தாரி நாச்சியார் கோயில் என்கின்ற மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில் இன்றும் சிறப்புடன் திகழ்கிறது. நானூறு வருடப்பழமை கொண்ட இக்கோயில் இளந்தாரி நாச்சியார் கோயில் என அழைக்கப்பட்டமைக்கான தெளிவான காரணமெதனையும் அறிய முடியவில்லை.

மட்டக்களப்புத் தேசத்தில் வழக்கத்தில் உள்ள வதனமார் வழிபாட்டோடு இணைந்த இலக்கியங்களில் ஒன்றாகவும், வழிபாட்டில் பாடப்படுவதாகவும் உள்ள ‘வதனமார் குழுமாடு கட்டு அகவலில்’ பத்துப்பாலர் பிறந்த பாடலின் பின் “பிறந்து வளர்ந்தாரோ பெரிய இளந்தாரி பத்து வயதும் பதினாறுஞ் சென்ற பின்பு” என வரும் வரிகள் மங்கலனாரை பெரிய இளந்தாரியாகச் சுட்டி வழிபடுதலைக் குறிக்கின்றது. குழு மாடுகளைப் பிடித்து பட்டியில் உள்ள ஏனைய மாடுகளோடு இணைத்து விடுதல் வழக்கம். இது ஒரு வீர விளையாட்டாகவும் கருதப்படுகின்றது. குழுமாட்டினைப் பிடிக்கச் செல்லும் வதனமாரை ‘இளந்தாரிமார் கூட்டம்’ எனச் சொல்வதாக ஈழத்துப் பூராடனார் (2000) குறிப்பிடுதல் கவனத்திற்குரிய ஒன்றாகும்.

ஆக இளந்தாரி எனும் வழக்காறு இளைஞர்களைக் குறிக்கின்றது எனப் பொதுவில் குறிப்பிடப்படினும் இது இளந்தாரியான தெய்வத்தைக் குறிக்க நாட்டாரியலில் பயன்படுத்தப்படுகின்றமையையும், இளந்தாரி தெய்வம் ஈழத்துக்கே உரிய தெய்வமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இணுவில் இளந்தாரி கோவில் பற்றிய ஆய்வை நண்பர்களான கோ. விஜிகரன், கு. டனிஸ்ரன் ஆகியோருடனும், கிராஞ்சி, வேரவில் பிராந்திய இளந்தாரி கோவில்கள் பற்றிய கள ஆய்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் சி. செரஞ்சன், ஆய்வு ஆர்வலர் கோ. விஜிகரன் ஆகியோரின் துணையோடும்  மேற்கொண்டோம்.

இளந்தாரி பற்றிய கதைகள்

1. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கியவர் காலிங்கராயன் என்பவர். காலிங்கராயனின் பின் ஆட்சிக்கு வந்த அவனுடைய மகனே கைலாயநாதன் என்கின்ற இளந்தாரி ஆவான். உடலுறுதி உள்ள துடிப்பான இளைஞர்களை இளந்தாரி என்று அழைப்பர். இவனது வீரம், கொடை, விருந்தோம்பல், ஆட்சித் திறன், இறைவழிபாடு ஆகிய சிறந்த பண்புகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது நூலாலும் செவிவழிச் செய்திகளாலும் அறிய முடிகிறது. இளந்தாரி, தனது உலகு நீத்தலை மக்களுக்கு முன்பே குறிப்பாக உணர்த்தியிருந்தார் எனவும், ஒருநாள் ஒரு புளியமரத்தின் வழியே உருக்கரந்து விண்ணுலகு சென்றார் எனவும் கூறப்படுகிறது. அதனை அறிந்த மக்கள் அங்கு அவரைத் துதித்தனர் என்றும், இளந்தாரி அம்மக்கள் முன் தோன்றி அருளினார் என்றும் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய ‘கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது’ நூலில் கூறப்படுகிறது.

2. சாதாரண சனங்களை நேர்கண்டபோதும், இணுவில் இளந்தாரி கோயில் பூசாரியாக இருந்த ஆறுமுகராசாவின் மனைவி சின்னாச்சி (வயது 94) என்பவரை நேர்காணல் செய்த போதும் கூறப்பட்ட கதை வேறாக இருந்தது. இணுவில் கிழக்கில் கிணறு வெட்டுவதற்காக ஒரு குடும்பம் ஏழாலையிலிருந்து துலா கொண்டுவந்து வேலை செய்தார்கள். தாய் – தந்தையர், இரு இளந்தாரி மகன்கள் என அந்தக் குடும்பம் காணப்பட்டது. ஒருநாள் வீட்டில் நின்ற கன்று தாய்ப் பசுவில் பாலைக் குடித்துவிட்டது. தாயார் குளிப்பதற்கு இவர்கள் கிணற்றிலிருந்து நீரும் அள்ளிக் கொடுக்கவில்லை. இதனால் இரு இளந்தாரி மகன்மாரையும் தந்தையார் கடிந்து கொண்டார். இதனால் இவ்விரு இளந்தாரிகளும் கோபித்துக்கொண்டு புளியமரத்தில் ஏறிக் காணாமல்போன அற்புதம் நிகழ்ந்தது. இவர்களுக்கு உதவியாளராக இருந்தவர் “நான் என்ன செய்ய” என அவர்களிடம் கேட்க “நீ பனையில் ஏறு” என்று அந்த இருவரும் கூற, அவரும் சற்றுத் தூரத்தில் இருந்த பனை மரத்தில் ஏறிக் காணாமல் போனார். மக்கள் யாவரும் திகைத்து வணங்கி நிற்க “எமக்கு காய்மடை, பூமடை வைத்து வழிபடுங்கள் நல்லன நிகழும்” என புளிய மரத்தடியில் அசரீரி கேட்டது. அன்றிலிருந்து இவ்வழிபாடு நிகழ்ந்து வருகின்றது.

இங்கு இளந்தாரிகள் இருவரும் வேளாளர் சமூகத்தவராகவும் பனையில் ஏறியவர் பள்ளர் சமூகத்தவராகவும் இருந்தனர். தாமேறிய மரத்தில் அவரை ஏற்றாதது அக்காலச்சமூகத்தில் இருந்த அடுக்கமைவின் இறுக்கத்தை தெற்றெனப் புலப்படுத்துகிறது. இளந்தாரிகளை வேளாளரும், பனையில் ஏறியவரை அவரது சமூகத்தவரும் ஆதரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று பனைமரம் இல்லை. அதில் வளர்ந்த ஆலமரமே உண்டு. அவர் அண்ணமாராக பொல்லு வைத்து வழிபடப்படுகின்றார். இளந்தாரி கோயிலில் புளியமரம் பரந்து நிற்கிறது. அதன் அடியில் பாதம் வழிபடப்பட்டதாகக் கூறப்படினும் இன்று அது இல்லை. நடுகல் வழிபாடு தொடர்ந்து காணப்படுகின்றது. வேல், சூலம் என்பனவும் உள்ளன (நேர்காணல் – பரமானந்தராசா வாகீசன்).

கிராஞ்சி, வேரவில், அனுராதபுரம் கிழக்குப் பிராந்தியங்களில் இவ்வாறான கதைகள் எதனையும் அறிய முடியவில்லை.

இணுவில் இளந்தாரி கோயில்

இணுவில் பகுதியை ஆட்சி செய்த அரச வம்சத்தவராகவும், அருளாளராகவும் தனது உயிர் நீத்தலை முன்பே அறிந்திருந்த தீர்க்கதரிசியாகவும் கருதப்படுகின்ற கைலாயநாதன் வாழ்ந்த அரண்மனையாகவும், வேளாள இளந்தாரிகளின் வீடாகவும் கருதப்படும் வளவில் சிறுகோயில் அமைத்து வழிபடப்பட்டு வந்துள்ளது. அவர்கள் தம் உருவை மறைத்த (உருக்கரந்த) தினம் பெருவிழாவாகக் கொண்டாட்டப்பட்டு வந்துள்ளது. (கந்தசுவாமி,க.இ.க.(பதி), (1998), பஞ்ச பஞ்சவன்னத் தூது, பக், 62 – 74)

காலப்போக்கில் இளந்தாரிகள் மறைந்த புளிய மரத்தடியில் இவ்வழிபாடு நிகழ்த்தப்பட, இவர்களது உதவியாளரது வழிபாடு பனை மரத்தடியில் நிகழ்த்தப்பட்டது. இப்புளியமரத்தடி வழிபாடு வைத்திலிங்கம் அவர்களால் கொட்டிலமைத்து தொடக்கிவைக்கப்பட்டது. அவரது மகன் நாகலிங்கம், பின்னர் ஆறுமுகராசா, பரமானந்தபிள்ளை இன்று கானமூர்த்தி மற்றும் சகோதரர்கள் என ஆண்வழிப் பூசாரிகளை கொண்ட வழிபாட்டு முறையாக நிகழ்ந்து வருகிறது. சிறுகொட்டிலாக ஆரம்பித்து 1968 இன் பின்னர், 2024இல் பிராமணர்களால் கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டதாயினும், இப்பூசாரிகளே நாளாந்தப் பூசை தொட்டு வருடாந்த மடை வரை யாவற்றையும் செய்து வருகின்றனர்.

இந்த ஆலயத்தின் சிறப்பு, நடுகல் வழிபாடு காணப்படுதலாகும். கருவறையில் புளியமரத்தின் ஒரு பகுதி, நடுகல், வேல், சூலம் போன்றன காணப்படுகின்றன. அருகில் பனைமரத்தடியில் உள்ள அண்ணமார் கோயில் கிருஷ்ணன் கோயிலாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலும் கிருஷ்ணன் சிலை வைக்கப்பட்டிருந்தாலும், இது ஆகமமயப்படவில்லை; கிருஷ்ணர் மூலமூர்த்தியாக்கப்படவுமில்லை.

கிராஞ்சி குறிப்பன் இளந்தாரி கோயில்

கிராஞ்சி, பிருந்தாவனம் பகுதியில் இரண்டு இளந்தாரி கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று கிராஞ்சி பிருந்தாவன சந்தியில் புளிய மரத்தடியின் கீழ் அமைந்துள்ளது. குறிப்பன் இளந்தாரி கோயில் நீண்ட காலமாக அமைந்திருக்கும் கோயிலாயினும் வீரன், கந்தையா, செல்வரத்தினம் , இளையராசா எனும் நான்கு தலைமுறைப் பூசாரிகளையே அறியமுடிகிறது. இதில் கந்தையா என்பாரின் மனைவி பூரணம், யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் (தகவல் ஜீவமலர் விக்னேஸ்வரன், செல்வரத்தினம் பூசாரியின் மகள்). இன்றும் ஓலைக் கொட்டிலாலான சிறு கோயிலாகவே அமைந்துள்ளது. முன்புறம் நான்கு  தூண்கள் கூரையின்றிக் காணப்படுகின்றன. விழாக்காலத்தில் பந்தலிடப்படும். மூலத்தில் சூலம் மூன்று வெவ்வேறு அளவுகளில் நாட்டப்பட்டிருந்தது. மையத்தில் இருந்த சூலம் உயரமாகவும், திருசூல இடைவெளியில் கண்ணாடி வைக்கப்பட்டும் இருந்தது. சூலத்தின் இடைப்பகுதியில் இரு கொம்புகள் அல்லது கொழுக்கிகள், ஒன்று மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும், இருபுறமாகவும் காணப்படுகின்றன. இந்த ஆலயத்துக்கு எதிர்ப்பக்கத்தில் புதிய இளந்தாரி ஆலயம் அமைக்கப்பட்டிருப்பினும், ஒரு வருடமே பூசை நடாத்தப்பட்டது. இன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

இளந்தாரி கோயிலுக்கு மடைப்பண்டம் வைக்கப்படுகின்ற கிராஞ்சி பட்டிமோட்டை நாகபூசணியம்மன் ஆலயம், இவ்வாலயத்திலிருந்து 100M அளவு தூரத்தில் உள்ளது. அவ்வாலய முன்றலில் உள்ள ஆலமரத்தின் கீழ் குறிப்பன் கோயில் உள்ளது. அங்குள்ள குறிப்பன் தெய்வத்துக்கான சூலம் இளந்தாரி சூலத்துடன் ஒத்திருப்பதும், இவை பட்டிமாட்டுடன் இணைந்த வழிபாடாக சிறுகுடி வேளாள சமூகமான பள்ளர் சமூகத்துடன் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கிராஞ்சி இளந்தாரி ஆலயத்தை ஒத்த மரபுகளே வேரவில், கல்லாவில் ஆலயங்களிலும் காணப்படுகின்றன.

வழிபாட்டு மரபுகள்

இணுவில் ஆலயத்தில் நாளாந்தம் விளக்கு வைத்து சிறு படையல் இட்டு வழிபடும் முறை காணப்படுகிறது. கிராஞ்சி கோயிலில் வெள்ளிக்கிழமைகள் தோறும் விளக்கு வைக்கப்படுகிறது. இதைவிட தைப்பொங்கல், சித்திர வருடப்பிறப்பு மற்றும் வருடாந்த மடை உள்ளிட்ட விசேட தினங்களில் விசேட பூஜை உண்டு. இணுவில் இளந்தாரி ஆலயத்தில் மரத்தில் ஏறி உரு மறைப்புச் செய்த நாளினை மையமாகக்கொண்டு வருடாந்த மடை நடைபெறுகிறது. வருடாந்தப் பொங்கலுக்குரிய நாளை மூ. சிவலிங்கம் சித்திரை வருடப் பிறப்புக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமை எனவும், கந்தசாமி வருடப் பிறப்புக்கு பின்பு வரும் செவ்வாய்க்கிழமை எனவும் தத்தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இதில் வருடப்பிறப்புக்கு முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமையில் முதலாம் மடை என்கின்ற முதலியார் மடை நடைபெறும். இதுவே பெருவழிபாடாக, பெருவிழாவாகக் கொண்டாடப்படும். வருடப் பிறப்புக்கு பின்பு வரும் செவ்வாய்க்கிழமை எட்டாம் மடையாக அமையும். இது பெரிய அளவில் நிகழ்த்தப்படாமல் சிறப்பு வழிபாடாக நடைபெறும் என ஆலயத்தின் பரிபாலகர்கள் விளக்கம்  தருகின்றனர்.

முதல் மடை நிகழும் நாளை ஒரு மாதத்திற்கு முன்பே பூசாரி ஊரவர்க்கு அறிவிப்பார். அடியவர்கள் கூடி வீடுகள் தோறும் சென்று காணிக்கை பெற்று வருவர். பணம், அரிசி, மரக்கறிகள், தேங்காய், பழம், இளநீர் உள்ளிட்டவை காணிக்கையாகக் கிடைக்கப்பெறும். ஆலயமுன்றலில் மண்பானையில் வளந்து வைக்கப்பட்டு பொங்கல் இடம்பெறும். இதன்போது வாத்தியங்கள் இசைக்கப்பட்டு பூசை நடைபெறும். பூசாரி உருவேறி தெய்வமாடுவார். ஒரு கையில் பிரம்பும் மறுகையில் தீபமும் ஏந்தி வருவார்; கையில் கற்பூரமேற்றி அதனை அடுப்பில் இட்டு பொங்கலை ஆரம்பித்து வைப்பார். அதன்பின் வளந்துப் பானைக்கு அருகே சோறு, கறிகளுக்கான அடுப்புகளும் மூட்டப்பட்டு படையலுணவு ஆக்கப்படும். பலகாரங்களும் படைக்கப்படும். மக்களும் நேர்த்திக்கடனுக்கான பொங்கலைப் பொங்குவர். வளந்து கட்டலின் பின் சின்னத்தம்பிப்புலவரின் பஞ்சவன்னத் தூது ஏடு படிக்கப்படும். இன்று பஞ்சவன்னத் தூது ஏடு நூலுருப் பெற்று இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது.

இதன்பின் இளந்தாரி வழிபட்ட சிவகாமியம்மன், காளியாச்சி, வைரவர் தெய்வங்களுக்கு படையல்கள் எடுத்துச் செல்லப்படும். அந்தப் பயணத்தில் சங்கு, பறை, முழவு, சேமக்கலம் முதலிய வாத்தியங்கள் இசைக்கப்படும். இளந்தாரி திருவீதியுலாப் பாடல், திருமுறைகள் என்பன பாடப்படும். அந்த ஆலயங்களில் படையல் முடிந்தபின் இளந்தாரியின் ஏவலின்வழி பனைமரத்தில் ஏறிக் காணாமல்போன உதவியாளரின் ஆலயத்திற்குச் (அண்ணமார்) சென்று படையல் படைத்து வழிபாடு இயற்றப்படும். அதன்பின்பே இளந்தாரி கோயிலுக்கு வந்து படையல் வைக்கப்படும். சோறு கறியோடு பழம், வெற்றிலை, பாக்கு, பலகார வகைகள் படைக்கப்பட்டு பூசை இடம்பெறும். பூசாரி தெய்வமேறி, கலையாடி, குறி சொல்லி, விபூதி இடுவர். இறுதியில் கும்ப நீரினை இளந்தாரியின் காலடி இருந்ததாக நம்பப்படும் புளிய மரத்தடியில் ஊற்றி வழிபடுவர். இது காலடி நீர் வார்த்தலாக – காலடி வழிபாடாகச் சொல்லப்படுகின்றது.

இவற்றைவிட தீமிதித்தல் முக்கிய வழிபாட்டு முறையாக இன்றுவரை காணப்படுகிறது. கடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தெய்வத்தை வழிபட்டு நோய் நீக்கம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதேபோல கிராஞ்சி கோயிலிலும் தனித்துவமான வழிபாட்டு மரபு காணப்படுகிறது. காட்டுப் பிள்ளையார், அம்மன், குறிப்பன், இளந்தாரி எனும் தெய்வங்களுக்கான வளந்துகள் குறிப்பன் கோயிலில் வைத்தெடுக்கப்பட்டு முதலில் பிள்ளையாருக்கும் பின்பு அம்மனுக்கும் பொங்கலிடப்படும். பின்பு குறிப்பன் முன்றலில் குறிப்பனுக்கும் இளந்தாரிக்கும் பொங்கலிடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் வெற்றிலை மடை வைக்கப்படும். இளந்தாரிக்கான படையல், குறிப்பன் முன்றலில் இருந்தே எடுத்துச் செல்லப்படும். அதில் பொங்கல் இடம்பெறுவதில்லை. இணுவில் இளந்தாரி கூறியது போல காய்மடை, பூமடையே வைக்கப்படுகிறது. பழங்கள் சிறப்பாகப் படைக்கப்படுகின்றன. இங்கும் பறை, சங்கு, சேமக்கலம் முதலான இசைக்கருவிகளின் இசையோடு பூசை நடாத்தப்படுகிறது. அதன்போது பூசாரி தெய்வமேறிக் கலையாடுவார். குறிசொல்லி விபூதியிடுவார். இந்தக் கோயிலின் பூசாரியாக இருந்த செல்வரத்தினம் உருவேறி, கும்பம் ஏந்திச் சென்றபோது (2006) பகைவர் மந்திரத்தால் கட்டியதால் கும்பத்தை இறக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், பின்பு அவரது தம்பியே கும்பம் இறக்கியதாகவும் கூறப்படுகிறது.

இணுவில் இளந்தாரி கோயில் போலவே இங்கும் வருடப்பிறப்பை ஒட்டி மடை வைக்கப்படுகிறது. மடையில் ‘நிறைமணி’யாக மோதகம், பழம், பஞ்சாமிர்தம் என்பன வைக்கப்படும். சித்திரை வருடப்பிறப்புக் கழிய வரும் திங்களில், விளக்கு வைப்பர். செவ்வாய் தினத்தில் பொங்கல் வைப்பர். மூன்றாம் நாளே எட்டாம் மடை வைக்கப்படுகிறது. இணுவிலில் எட்டாம் நாளே எட்டாம் மடை வைக்கப்படுகிறது. இளந்தாரி கோயிலில் நீத்துக்காய், இளநீர் என்பன வெட்டிக் கழிப்புச்செய்யும் முறையுண்டு. ஏனைய நாட்களில் நீத்துக்காய் வெட்டும் மரபு இல்லை. தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் நீத்துக்காய் வெட்டப்படாது குத்தி உடைக்கப்படும். இம்மரபு இணுவிலில் இல்லை. கிராஞ்சியில் கழிப்புக் கழித்தல் பிரதான சடங்காக, சாதாரண நாட்களிலும் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பலியிடல் காணப்பட்டாலும், இப்போது பலியிடப்படுவது இல்லை.

வழிவெட்டல் சடங்கு நிகழ்த்தும் காலத்தில் தூளி குடித்தல், தூளி பிடித்தல் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. பிரம்பு, பொல்லு, பாவாடை, கெண்டையம் அணிந்து வரும் பூசாரி தெய்வமேறிய நிலையில் ஒன்பதுமுறை மடையை வலம்வந்து இறுதியில் மடைகளை அள்ளி ஒன்றாக முகர்ந்து பார்த்து, பின் அள்ளி எறிந்தபடி ஓடுதல் தூளி குடித்தல் எனப்படுகிறது. அதேபோல எல்லாப் பரிகலங்களையும் அழைத்து, பச்சரிசி எறிந்த பின், நீரைத் தெளித்துத் தெளித்து, எல்லாத் தெய்வங்களும் ஒன்றாக நின்றாடுதல் தூளி பிடித்தல் எனப்படுகிறது. வழிவெட்டல் சடங்குகளில் இன்றும் பெண்கள், சிறுவர்கள் என்போருக்கு அனுமதி இல்லை.

எல்லா இளந்தாரி ஆலயங்களிலும் இரண்டாம் மடையாக ஆனித்திங்களில் விழா நடைபெற்று வருகின்றது. பட்டிமோட்டை அம்மனிற்கு, இளந்தாரி உருவேறிய பூசாரியே கொடித்தடி தேடி வெட்டி எடுத்து வருவார். பின்பு இளந்தாரி கோயிலில் வைத்து வேப்பமிலை, அம்மன்கொடி, மாலை என்பன கட்டி பறை மேளத்தோடு எடுத்துச் செல்லப்படும் வழக்கம் கிராஞ்சியில் இன்றும் காணப்படுகிறது.

சிங்கள இளந்தாரி

கிராஞ்சியில் உள்ள கரும்புக்காரன் கோயிலில் பொங்கல் விழாக்காலத்தில் உருவேறி நின்றாடும் தெய்வங்களில் ஒன்றாக சிங்கள இளந்தாரித் தெய்வம் காணப்படுகின்றார். இவர் ஏனைய தெய்வங்களோடு தெய்வமாடுவதோடு பூசையில் பயன்படுத்தப்படும் மாட்டை இனங்காட்டும் தெய்வமாகவும் விளங்குகிறார். இந்த சிங்கள இளந்தாரி வெள்ளை, சிவப்பு இணைந்த ஆடைகளோடே தெய்வமாடுவார். இவர் தெய்வமாடும் போது பேசுகின்ற பாஷை யாருக்குமே புரிவதில்லை என்பதனால் அவர் சிங்கள இளந்தாரி எனப்படுகின்றார் (தகவல் பா. செல்வம்,  கிராஞ்சி, வயது 66). சிங்கள மக்கள், பிறருக்கு விளங்காமல் கதைப்பதை தமிழைப் போல் இருக்கிறது எனக் கூறுவதாக பேராசிரியர் கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்தில் ‘தானறியாச் (தானடாச்) சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்’ என்ற பழமொழி நின்று நிலவுகிறது.

சில அவதானிப்புகள்

  • இளந்தாரி பற்றிய இருகதை மரபுகள் காணப்படுகின்றன. அரச பரம்பரையோடு இணைந்த கதையை இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் பஞ்சவன்னத் தூதிலேயே காணமுடிகிறது. சாதாரண சனங்களின் கதை நிலவுடமைச் சமூக மனிதர்களின் கதையாக, இரு இளைஞர்களினதும் அவர்களது உதவியாளரதும் கதையாகவே நின்று நிலவுகிறது.
  • இளந்தாரி, இணுவிலில் வேளாளரின் தெய்வமாகக் காணப்படினும் ஏனைய இடங்களில் சிறுகுடி வேளாளரின் தெய்வமாகவே விளங்குகிறது.
  • இளந்தாரி ஆலயங்கள் யாவற்றிலும் பூசாரிகளே இன்றும் பூசை செய்கின்றனர். இணுவில் அண்ணமார் கோயில் மேனிலையாக்கமுற்ற போதும் இளந்தாரி வழிபாடு நாட்டாரியல் மரபோடு தான் விளங்குகிறது.
  • இளந்தாரி என்ற சொல் பல தெய்வங்களோடு இணைந்த சொல்லாகக் காணப்படினும் தனித்தெய்வமாக வணங்கப்படுவதற்கு இக்கோயில்கள் சான்றாகின்றன.
  • கறிசோறு மடை, பழமடை,  வெற்றிலை மடை என்பனவே முதன்மை பெறுகின்றன. பொங்கல் இடம்பெறுவதில்லை.
  • பூசாரி, கலையாடி குறிசொல்லும் மரபு இக்கோயில்களில் காணப்பட்டபோதும் இன்று இணுவிலில் அது இல்லாமல் போய்விட்டது.
  • இணுவில் இளந்தாரி மடை இன்று சிவகாமி அம்மன், காளி, வைரவர், அண்ணமாருக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதன் பின்னணியில் சூழல், நேரம், சமூக மாற்றம் எனப் பல காரணிகள் காணப்படுகின்றன.
  • கிராஞ்சி, கல்லாவில், வேரவில் இளந்தாரி கோயில்கள் மந்திரம், சடங்கு என்பனவற்றோடும் கழிப்புக்கழித்தல் மற்றும் தீய கட்டுக்களுடனும் பின்னிப்பிணைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. நாம் சென்றபோது, கிராஞ்சி இளந்தாரி கோயிலில் கழிப்புக்கழிக்க பயன்பட்ட தேசிக்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் ஆலய முன்றலில் எங்கும் பரவிக் கிடந்தன.
  • சிங்கள இளந்தாரி எனும் சொல்லாடல் இனத்துவ, மொழி சார் பண்பாடு பற்றிய மனப்பாங்கின் சொல்லாடலாக விளங்குகிறது.

முடிவுரை

ஈழத்துப் புலத்துக்கேயான தனித்துவமான நாட்டார் தெய்வமாக இளந்தாரி விளங்குகின்றது. இளந்தாரி பற்றிய கதைகள் சமூக அடுக்கமைவினதும் மனப்பாங்கினதும் வெளிப்பாடாக அமைந்துள்ளன. இத்தெய்வத்தை கயிலைநாதன் எனும் ஓர் இளந்தாரியாக பஞ்சவன்னத் தூது கூற, மக்கள் வாய்மொழிக் கதைகளோ அண்ணன், தம்பி ஆகிய இருவரே இளந்தாரிமார் என உரைப்பதும் (கோயிலின் பின்புறத்தில் மரத்தின் கீழ் இருவருடைய சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன). பனையில் ஏறியவரை மெய்ப்பாதுகாவலர் எனத் தூதிலக்கியம் கூற, மக்களின் வாய்மொழிக் கதைகளோ சிறுகுடி வேளாளர் என உரைப்பதும் மேற்சொன்ன கூற்றைத் தெளிவுபடுத்துகிறது. சமூக மேனிலையாக்கம் மற்றும் சாதிய நீக்கத்தின் வழி அண்ணமார் வேணுகோபாலனாக மாற்றப்பட்டார். இளந்தாரி இன்றும் நாட்டார் தெய்வமாகவே நின்றுநிலவுகிறார். பூசாரி உருவேறி ஆடும்போது பிரம்பேந்தி வருவது விவசாய – கால்நடைத் தெய்வ வழிபாட்டு மரபுடன் இது இணைவதைத் தெளிவுபடுத்துகிறது. முன்பு பலியிடல் காணப்பட்டபோதும் இன்று எவ்வாலயத்திலும் அது நிகழ்வதில்லை. தீமிதித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் தீர்த்தல் மரபுகள் பல காணப்படுகின்றன. கிராஞ்சி, வேரவில், கல்லாவில் போன்ற இடங்களில் துதிப்பாடல்கள் இல்லையாயினும்; மந்திரக்கட்டு, சடங்காசாரங்கள் நின்றுநிலவும் இடங்களாக அவை காணப்படுகின்றன. இளந்தாரி வலிமையின் – வீரத்தின் அடையாளம். ஆதலால் அது நடுகல்லின் வழியும் சூலத்தின் வழியும் நின்று நிலவுகின்றது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

தி. செல்வமனோகரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்