இலங்கையில் மொத்தமாக உள்ள 1.6 மில்லியன் கறவை மாடுகளில் 405,001 மாடுகள் வடக்கிலும்; 542,805 மாடுகள் கிழக்கிலும் உள்ளன. நாட்டில் மொத்தமாக உள்ள 476,050 எருமை மாடுகளில் 24,164 எருமைகள் வடக்கிலும்; 234,782 எருமைகள் கிழக்கிலும் உள்ளன (கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள புள்ளிவிபரம் – 2022). பெரும்பான்மையான மாடுகள் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற போதும் அவற்றின் உற்பத்தித் திறன் குறைவாகவே காணப்படுகிறது (நாட்டில் மொத்தமாக வருடம் 326 மில்லியன் லீட்டர் பால் உற்பத்தியாகிறது. வடக்கிலிருந்து 41 மில்லியன் லீட்டரும் கிழக்கிலிருந்து 22.5 மில்லியன் லீட்டரும் கிடைக்கிறது). இதன் காரணமாக இங்குள்ள பாற் பண்ணையாளர்கள் போதிய உற்பத்தியையும் வருமானத்தையும் இழக்கின்ற நிலையை பரவலாக அவதானிக்க முடிகிறது. இரு மாகாணங்களும் பாலுற்பத்தியில் குறைந்தளவு பங்களிப்பையே செய்கின்றன.
இதற்குரிய காரணிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்:
1. மரபியல் காரணிகள்
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான காரணிகள்
3. நோய் நிலைமைகள்
4. ஒழுங்கமைக்கப்படாத இனப்பெருக்க முறைகள்
5. போதிய பண்ணைசார் உட்கட்டமைப்பு வசதியின்மை
6. பண்ணையாளர்களின் விடய அறிவு மற்றும் நவீன தொழில்நுட்பம் தொடர்பான அறிவு போதாமை
மேற்படி குறைபாடுகள் காரணமாக பல பண்ணையாளர்கள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர பாற் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். வடக்கு – கிழக்கு மாகாணத்தில் 90% மேற்படி பண்ணையாளர்களாகவே காணப்படுகின்றனர். இதன் கூட்டு விளைவு பாலுற்பத்தியில் கணிசமான வீழ்ச்சியை உருவாக்குகிறது. உணவுப் பாதுகாப்பிலும் குறைபாட்டை உருவாக்குகிறது. இந்த விடயத்தை பல் பரிமாண ரீதியில் ஆராய வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அரச, தனியார் பண்ணையாளர்களின் ஒருங்கிணைவு அவசியமாகிறது. அது விஞ்ஞான பூர்வமாகவும், நடைமுறைச் சாத்தியமானதாகவும் காலத்திற்கேற்றதாகவும் அமைய வேண்டும். இந்தக் கட்டுரை அது தொடர்பானதே.
சவால்கள்
1. குறைந்த உற்பத்தித் திறன் மற்றும் மரபியல் தன்மை
இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதியிலுள்ள கறவை மாடுகள் மிகக் குறைந்த உற்பத்தித் திறனையே (Productivity) கொண்டவை. இவை உள்ளூர் மற்றும் உள்ளூர் கலப்பு (Local and local crosses) வகையின. இவை உண்ணும் உணவுக்கு ஏற்ப இவற்றால் அதிக பாலுற்பத்தியைத் தர முடியாது. இது பண்ணைகளின் வருமானத்தைக் குறைக்கிறது.
2. உணவுப் பற்றாக்குறை மற்றும் தரமான உணவு இன்மை
தரமான ஊட்டச்சத்து மிக்க புற்கள், இலை – தழைகள் சூழலில் கிடைக்காத தன்மை காணப்படுவதோடு, வருடம் முழுதும் உணவு கிடைக்கும் தன்மை சீராகவும் இருப்பதில்லை. தண்ணீர்ப் பற்றாக்குறை, வறட்சியான இந்த வலயத்தில் மிகப் பெரும் சவாலாக அமைகிறது. சில மேம்பட்ட பண்ணையாளர்கள் நவீன ஊட்ட முறைகளான TMR, Silage எனும் ஊறுகாய் புல் தயாரித்தல் போன்றவற்றையும் அடர்வு தீவன உணவு ஊட்டத்தையும் செய்கின்ற போதும் பெரும்பாலான, குறிப்பாக சிறு, நடுத்தரப் பண்ணையாளர்கள் மற்றும் திறந்த வெளிப் பண்ணையாளர்கள், மேற்படி நவீன முறைகளைக் கைக்கொள்வதில்லை. திறந்த வெளிப் பண்ணையாளர்கள் மேய்ச்சல் வெளிகளை நம்பியே உள்ளனர். அண்மைக் காலத்தில் அருகி வரும் மேய்ச்சல் வெளிகளால் மேற்படி மாடுகள் உணவு கிடைக்காமல் ஊட்டச் சத்துக் குறைபாட்டுக்கு உள்ளாகின்றன. மேலும், அடர்வு தீவன விலையேற்றம் மற்றும் அவற்றின் தரக் குறைவு காரணமாக அவற்றின் பாவனையும் குறைந்துள்ளது. மேற்கூறிய சகல ஊட்டச் சத்துக் காரணிகள் காரணமாக மாடுகளின் பாலுற்பத்தி, வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை ஆகியன பாதிக்கப்படுகின்றன.
3. சுகாதார முகாமைத்துக் குறைபாடு மற்றும் நோய்கள்
ஒழுங்கமைக்கப்படாத முகாமைத்துவ முறைகள் (Management practice) மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் (Disease control and prevention) இல்லாமையாலும் கறவை மாடுகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றன. இலங்கையின் கால்நடை வைத்திய அலுவலகங்களின் (Veterinary surgeons office) ஆளணிப் பற்றாக்குறை காரணமாகவும், மருந்துகளின் விலை ஏற்றம் காரணமாகவும், நவீன சிகிச்சை முறைகளுக்குரிய (Modern treatment facilities) வசதிகள் இல்லாமையாலும், வாகன வசதிகள் இல்லாமையாலும் கறவை மாட்டுப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய சரியான சிகிச்சையை பெறமுடியாது உள்ளனர். அத்துடன் விலங்குப் புலனாய்வுக் கட்டமைப்பு (Veterinary investigation Centers) நீண்டகாலமாக மேம்படுத்தப்படாமலும் நவீன ஆய்வு வசதியின்றியும் காணப்படுதல் நோய் நிலைகளின் துல்லியத் தன்மையை அறிவதில் சவாலை ஏற்படுத்துகின்றது. அண்மைக்காலத்தில் கறவை மாடுகளுக்கு ஏற்பட்ட லம்பி தோல் நோய், கால் வாய் நோய்களுக்குரிய தடுப்பூசிகள் போதியளவில் இல்லாமை காரணமாக ஆயிரக்கணக்கில் கறவை மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. மேற்படி தடுப்பூசிகள் உள்ளூரில் தயாரிக்கப்படுவது குறைவு என்பதுடன் வெளிநாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்தே இறக்குமதியாகின்றன. மேலும் வடக்கு மாகாணம் இந்தியாவுக்கு அருகில் இருப்பதால் பல நோய்கள் அங்கிருந்து இலகுவாக இங்கு பரவலடைகின்றன (LSD, FMD நோய்க் கிளர்ச்சி).
4. சரியான இனப்பெருக்க முறைகள் கடைப்பிடிக்கப்படாமை
ஓரிரு இடங்களைத் தவிர, வடக்கு – கிழக்கு பகுதிகளில் கறவை மாடுகளுக்கு இயற்கை முறையான இனப்பெருக்க செயன்முறையே (Natural Breeding) பரவலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பல பண்ணையாளர்கள் செயற்கை முறைச் சினைப்படுத்தலை (Artificial insemination) விரும்புவதில்லை என்பதுடன் கணிசமான இடங்களில் செயற்கை முறைச் சினைப்படுத்துநர்களின் பற்றாக்குறையும் ஆற்றலின்மையும் (Shortage and Unskilled) காணப்படுகிறது. இதன் காரணமாக மாடுகளின் உற்பத்தி சார்ந்த மரபுரிமையில் பாரிய மாற்றம் (Genetical improvement) நிகழ்வதில்லை. மேலும் நெருங்கிய மாடுகளுக்கிடையில் தொடர்ச்சியாக இனப்பெருக்கம் நிகழ்வதால் விரும்பத்தகாத உள்முக இனக்கலப்பும் (Inbreeding) நிகழ்கிறது.
5. உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடு
கறவை மாடுகளின் கொட்டகைகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாத நிலையே பெரும்பாலும் அவதானிக்கப்படுகிறது. அத்துடன் நவீன கால்நடை வளர்ப்பு தொடர்பான கருவிகளை இந்தப் பிராந்தியப் பண்ணையாளர்கள் பாயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. உதாரணமாக வெப்ப அயர்ச்சியைத் தவிர்க்கும் நவீன கட்டுப்பாடான கொட்டகைகள் இன்மை, நவீன கறவை இயந்திரங்கள் இன்மை, நவீன புல் அறுக்கும் இயந்திரங்கள் இன்மை, சுகாதாரமான பாற் கலன்கள் (Milk can) இன்மை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
6. மட்டுப்படுத்தப்பட்ட மூலதன வசதிகள்
பெரும்பாலான பண்ணையாளர்கள் சிறு மற்றும் நடுத்தர வகையினர் என்பதால் அவர்களின் வருமானமும் பாரியளவில் இருப்பதில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் வங்கிகள் மூலமான கடன் வசதிகளும் குறைவாகவே உள்ளது. திணைக்களங்களும் மட்டுப்படுத்தப்பட்ட மானிய உதவிகளையே செய்கின்றன.
7. மட்டுப்படுத்தப்பட்ட விரிவாக்கலும் பண்ணையாளரின் தொழில்நுட்ப அறிவுக் குறைவும்
இங்குள்ள கால்நடைப் பண்ணையாளர்கள் நவீன கால்நடை வளர்ப்புத் தொடர்பான தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பது குறைவு. அவர்கள் பாரம்பரிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் அதேவேளை நவீன முறைகளுக்கு மாற விரும்புவதும் கிடையாது. அத்துடன் கால்நடை வைத்தியர் அலுவலகங்களில் கால்நடை வைத்தியர் மற்றும் போதனாசிரியர் பற்றாக்குறை இருப்பதும் பண்ணையாளர்களுக்கான விரிவாக்கற் செயன்முறையைப் பாதிக்கிறது.
தீர்வுகள்
1. குறைந்த உற்பத்தித் திறன், மரபியல் தன்மையை உயர்த்துதல் மற்றும் பொருத்தமான இனப்பெருக்க செயன்முறையை நடைமுறைப்படுத்துதல்
அதிக உற்பத்தியுடையதானதும் காலநிலை வலயங்களுக்குப் பொருத்தமானதுமான கால்நடைகளை இறக்குமதி செய்தல் வேண்டும் (இந்தியாவின் தென் பகுதிகளிலுள்ள காலநிலை வடக்கு – கிழக்கை ஒத்திருப்பதால் பொருத்தமான மாடுகளை அங்கிருந்து இலங்கையின் நோய்க் கொள்கைகளுக்கு ஏற்ப இறக்குமதி செய்யலாம். ஏனெனில் இந்தியாவிலுள்ள சில நோய்கள் இலங்கையில் கிடையாது. அதனை சரிவர அவதானித்தே இறக்குமதி செய்ய வேண்டும்). அத்துடன் செயற்கைமுறைச் சினைப்படுத்தல் செயன்முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குரிய ஆளணி வசதிகளை மேம்படுத்த வேண்டும். செயற்கைமுறைச் சினைப்படுத்தலிலுள்ள நடைமுறைக் குறைபாடுகளை நீக்க குறித்தளவு பங்கை தனியாருக்கும் வழங்கலாம் (இஸ்ரேல் மாதிரி). சிறந்த உற்பத்தி இயல்புடைய காளைகளை இறக்குமதி செய்து பண்ணையாளருக்கு மானிய அடிப்படையில் வழங்க வேண்டும். சிறந்த இயல்புகளைக் கொண்ட காளைகளின் விந்தணுக்களை இறக்குமதி செய்து அவற்றை செயற்கைமுறைச் சினைப்படுத்தலில் பயன்படுத்த முடியும்.
2. சமச்சீர் உணவு வழங்கலை உறுதிப்படுத்தல்
எந்தக் காலத்திலும் சீராக உணவு கிடைக்கும் வகையிலும், அதிக உற்பத்தி தரவல்ல புல் வகைகளை பண்ணையாளர் உற்பத்தி செய்யும் வகையிலும் வசதிகளை ஏற்படுத்தல். மானியம் வழங்கல். புற்துண்டங்கள், புல் அறுக்கும் இயந்திரங்கள், நீர் இறைக்கும் மோட்டார், விசிறல் நீர்பாசன வசதிகள், சைலேஜ் செய்யும் வசதிகள் போன்றவற்றை வழங்கல். தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கல். TMR போன்ற நவீன உணவூட்டல் முறைகளை ஊக்குவித்தல்.
வர்த்தக ரீதியான புல் வளர்ப்புத் துறையை விருத்தி செய்து, பண்ணையாளருக்கு இலகுவாக குறைந்த விலையில் புற்கள் எப்போதும் கிடைக்குமாறு வகை செய்தல். வர்த்தக ரீதியில் அடர்வு தீவனங்களை உற்பத்தி செய்வோரை ஊக்குவித்தல். குறைந்த விலையில் மூலப் பொருட்களை இறக்குமதி செய்து கொடுத்தல். உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தல்.
மேய்ச்சலை நம்பிய கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரைகளைப் பெற்றுக் கொடுத்தல். விவசாய மீதிகளை உணவாகப் பயன்படுத்தத் தக்க வகையில் தொழில்நுட்பங்களை பயிற்சிகளின் மூலம் வழங்குதல். மனிதனின் நுகர்வுக்குப் போக எஞ்சிய அரிசி போன்றவற்றை கால்நடை உணவாகப் பயன்படுத்த வகை செய்தல்.
3. கால்நடை சுகாதாரத்தை உறுதிப்படுத்தல்
கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கும் கால்நடை வைத்திய அலுவலகங்களை நவீனப்படுத்தல். ஆளணி வசதிகளை அதிகரித்தல். நவீன சிகிச்சை உபகரணங்களை வழங்கல். அதிக கால்நடை வைத்தியர்கள், போதனாசிரியர்கள், ஏனைய சிற்றூழியர்கள், சினைப்படுத்துநர்களை அதிகரித்தல் (Carder creation). இவற்றை நாடளாவிய ரீதியிலும் மாகாண அடிப்படையிலும் செய்யமுடியும். நோய்களைக் கண்டறியும் விதமாக விலங்குப் புலனாய்வுக் கட்டமைப்பை மேம்படுத்தல். நவீன ஆய்வு வசதிகளைத் தாபித்தல். மருந்துகளை மானிய அடிப்படையில் குறைந்த விலையிலும் இலவசமாகவும் வழங்குதல். மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அதிகளவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வகையில் வசதிகளை மேம்படுத்தல். தரமானவற்றை உற்பத்தி செய்வோரை ஊக்குவித்தல். தரமான மருந்துகளை, தடுப்பூசிகளை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய வழி ஏற்படுத்தல். பண்ணைச் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்த தீவிரமாகப் பயிற்சிகளை வழங்குதல்.
4. பண்ணை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்
பண்ணையாளர்களுக்கு மாட்டுக் கொட்டில்களை புதிதாக அமைக்கவும் இருப்பவற்றை திருத்தி மேம்படுத்தவும் வழி செய்தல். Loose barn போன்ற முறைகளை அறிமுகப்படுத்தல். பாற் சேகரிப்பு நிலையங்களை அதிகளவில் உருவாக்குதலும் அவற்றின் சேமிப்பு வசதிகளை மேம்படுத்தலும் (குளிர்பதன வசதி). சுத்தமான பாற் சேகரிப்பை ஏற்படுத்த பாற் கொள்கலன்களையும் கறவை இயந்திரங்களையும் ஏனைய உபகரணங்களையும் வழங்குதல். இதற்கு அரச – அரச சார்பற்ற அமைப்புகள், புலம் பெயர்ந்தோர் இணைந்து ஒரு பொறிமுறையை ஏற்படுத்தலாம்.
5. சிறப்பான விரிவாக்கற் செயன்முறை மூலம் பண்ணையாளர்களை தொழில்நுட்ப ரீதியாக தரமுயர்த்தல்
தொடர்ச்சியான விரிவாக்கற் செயன்முறைகளான பயிற்சி வகுப்புகள், பண்ணைக் கள விஜயங்கள் மூலம் இதனைச் செய்ய முடியும். இதற்குரிய வளவாளர்களான கால்நடை வைத்தியர்கள் மற்றும் கால்நடை போதனாசிரியர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்குதல். தேவை ஏற்படின் மேம்பட்ட பண்ணைகள் உள்ள வெளிநாடுகளில் இதனைச் செய்யமுடியும். நவீன சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களின் துணையுடன் இந்த விரிவாக்கற் செயன்முறையைச் செய்ய முடியும். இதற்காக அரசு மட்டுமல்ல JICA, FAO போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் உதவிகளைச் செய்கின்றன. மேலும் செய்வதற்கு, அவர்களிடம் வேண்டுகோளை வைக்க முடியும்.
6. மூலதன உதவி
குறைந்த வட்டியிலான கடன்களை வழங்குதல். மானியம் வழங்குதல். மானிய அடிப்படையில் கால்நடைக் கொள்வனவு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்தல். கால்நடைக் காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்தி கால்நடை இழப்புகளின் போது நட்டத்தைக் குறைத்தல் போன்றவற்றைச் சொல்லலாம்.
இப்படியாக தொடர்ச்சியாக பண்ணைகள், விலங்குகள் மற்றும் பண்ணையாளர்களை மேம்படுத்தி பண்ணைகளின் உற்பத்தித் திறனை உயர்த்திக் கொள்ள முடியும்.