இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் : தோட்டத் தொழிலாளர் விடுதலைக்கான வழிகாட்டி
Arts
13 நிமிட வாசிப்பு

இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் : தோட்டத் தொழிலாளர் விடுதலைக்கான வழிகாட்டி

February 13, 2025 | Ezhuna

மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.  நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.

தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்குப் பெருந்தோட்டக் கட்டமைப்பு, அரசியற்கொள்கை, தொழிலாளர் சட்ட ஏற்பாடுகள், ஊதியமுறை முதலானவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ள கோ. நடேசய்யர், அம்மேம்பாட்டுக்குத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வையும் சமூக சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துதலும் இன்றியமையாதன என்பதைத் தன் கள அனுபவங்களூடே கண்டறிந்து, அவற்றை நிறைவு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதனொரு வெளிப்பாடாகவே ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற சிறுநூல் அமைந்துள்ளது.

‘தொழிலாளர்கட்கு இன்னல் புரிகின்ற முதலாளி ஆட்சி ஒழிக! ஒழிக! ஒழிக!’ என்ற சுலோகத்துடன் 1928ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இந்நூலை, பொன்னுலகம் பதிப்பகம் 2022ஆம் ஆண்டு ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற தலைப்பில் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது. நூலின் முகவுரையில் இடம்பெறும் பின்வரும் குறிப்புகள், இந்நூலாக்கத்துக்கான தேவையையும் நோக்கத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன:

“இலங்கை இந்தியத் தொழிலாளர்களைப் பற்றி இந்தியாவிலும் இலங்கையிலும் பல சட்டங்கள் செய்திருக்கிறார்கள்… இச்சட்டங்கள் பெரும்பான்மையும் தமிழில் பிரசுரிக்கப்படாதவை. பிரசுரிக்கப்பட்ட சிலவும் சாதாரண படிப்புள்ளவர் அறிந்துகொள்ளக் கூடாதவையாயிருக்கின்றன. தொழிலாளிகளோ ஏழைகள். படிப்பில்லாதவர்கள். கடமை, உரிமை ஆகிய இரண்டுண்டென்பதையும் அறியார்… மற்ற நாட்டுத்தொழிலாளர்கள் இவ்விதம் நடந்து வருகிறார்கள் என்பதை அறிய இவனுக்கு வசதியே இல்லை. அறியாமை இருளில் அகப்பட்டு தடுமாறி அலைகிறான்…

சட்ட புஸ்தகம் வாசித்து நியாய வாதியாய் தொழிலாளி ஆகவேண்டும் என்பது எனது நோக்கமல்ல. தனக்குக் கஷ்டம் வருங்காலத்தில் செய்யவேண்டியது என்னவென்பதை அறியாமல் வீண்செலவும் வீண்கஷ்டமும் படுவதைக் கவனித்திருக்கிறேன். எழுத்துக்கூலிக்காரர்களிடமும், பிறரிடமும் அகப்பட்டு கைப்பொருளையும் தோற்றுக் கஷ்டப்படுவதையும் கவனித்திருக்கிறேன். தொழிலாளிகளுக்கு ஆகவேண்டிய பல காரியங்களும் அதிகப்பொருட் செலவில்லாமல் செய்துகொள்ள வசதிகளுண்டு. அவற்றைத் தொழிலாளர்கள் அறிந்து கொள்ளாததே கஷ்டங்களுக்குக் காரணமாகும். தனது கடமை இது, உரிமை இது என்பதாகத் தொழிலாளி அறிந்துகொள்ள இப்புஸ்தகம் உபயோகமுள்ளதாயிருக்குமாயின் அதுவே நான் செய்த பாக்கியம் எனக்கொள்வேன்”.

கொழும்புத் தொழிலாளர் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்நூலை ஆரு. முத்தையா அம்பலம் பிரிசுரித்திருக்கிறார். தோட்டத் தொழிலாளர் ஒவ்வொருவரிடமும் இந்நூல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏழரை இலட்சம் பிரதிகள் அச்சிடத் திட்டமிட்டு, முதற் கட்டமாக 50 000 பிரதிகள் அச்சிட்டுள்ளனர்.

‘தோட்டத்தொழிலாளர்கள் எல்லோரும் ஒவ்வொரு புத்தகத்தை வாங்கி, தமது உரிமைகளையும் கடமைகளையும் சரிவரத் தெரிந்து, தொழிலாளர்களை அடக்கும் முதலாளித்துவ (சயித்தான்) ஆட்சிக்குப் பயப்படாமல் இருக்கவேண்டியதே அவர்களின் கடமை’ என்பதைத் தனது விண்ணப்பமாகப் பதிவுசெய்துள்ள ஆரு. முத்தையா அம்பலம், தொழிலாளர்கள் தீவிர சுரண்டலுக்கு உள்ளாகி, பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைவில் வாழ்வதால் மிகக்குறைந்த விலையில் நூலினைப் பிரசுரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நூலின் தனிப்பிரதியை பத்து சதத்துக்கும், நூறு புத்தகங்களை ஏழு ரூபாவுக்கும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால், திட்டமிட்டபடி மிகுதி ஏழு இலட்சம் பிரதிகள் அச்சிடப்படாததோடு அச்சிடப்பட்ட நூல்கள் முழுதும் உடனடியாக விற்பனை செய்யமுடியாத நிலையும் தோன்றியுள்ளது. இதனை பி.ஆர்.எம். பழனியப்ப செட்டியாருக்கும் நடேசய்யருக்கும் இடையிலான கொடுக்கல் – வாங்கல் தகராறு குறித்த வழக்குப் பதிவிலிருந்து கண்டுகொள்ள முடிகின்றது. அவ்வழக்குத் தொடர்பான செய்தி, இலங்கை இந்தியன் பத்திரிகையில் பின்வருமாறு வெளிவந்துள்ளது:

“கிணறுவெட்டப் பூதம் புறப்பட்டது

கொழும்பு ஜில்லாகோர்ட்டில் மிஸ்டர் வி.எம். பெர்னாண்டோ, ஜில்லா ஜட்ஜ் முன்பாக சென்ற 3-ஆம் திகதி திரு. பி.ஆர்.எம். பழனியப்ப செட்டியார் (செட்டித்தெரு) சட்டசபையில் இந்தியப் பிரதிநிதியான கௌரவ நடேசய்யர் தமக்கு 1928 ஜனவரி 13-ம் திகதி எழுதிக்கொடுத்த பிராமிஸரிநோட்டின்படி அசலும் வட்டியுமாக ரூ. 1,138.50 செலுத்தவேண்டியிருப்பதாக வழக்குத் தொடுத்திருக்கிறார். பிரதிவாதி நோட்டெழுதிக் கொடுத்ததை ஒப்புக்கொண்டு, தாம் எழுதிய புஸ்தகமொன்று அச்சிடப்பட்டதில் விற்றுவரும் லாபத்தில் 5-ல் 2 பாகம் தமக்குக்கொடுப்பதாய் வாதி சென்ற மார்ச் மாத முடிவில் ஒப்புக்கொண்டிருப்பதாயும், புஸ்தகங்களை விற்றுத் தமக்கு உரிய பாகத்தைக் கொடுப்பதாய்ச் சொல்லியிருப்பதாயும் கூறினார். 50,000 பிரதிகள் அடிக்கப்பட்டதில், வாதி 10, 000 விற்றதுபோக 40, 000 வைத்திருப்பதாயும் பாக்கியுள்ளதையும் விற்றபின்பே வாதி வழக்கிடலாமென்றும் பிரதிவாதி தாவா சொல்லியிருக்கிறார்… வழக்கில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள புஸ்தகங்கள், நாம் விசாரித்ததில், ‘இந்தியத் தொழிலாளரின் கடமைகளும் உரிமைகளும்’ என்று தெரிகின்றது…(இலங்கை இந்தியன், 05.12.1928).”

நடேசய்யர் எத்தகைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியற் சமூக செயற்பாடுகளிலும் பத்திரிகை மற்றும் நூல் வெளியீட்டு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பதை இப்பதிவிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது.

இச்சிறுநூலானது, இந்தியாவில் ஆள் சேர்த்தலும் மண்டபம் காம்பும், மண்டபம் காம்பிலிருந்து தோட்டம் சேர்வது, தோட்ட வாழ்க்கை, ஊருக்குத் திரும்புதல், தொழிலாளர் சங்கங்கள் எனும் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஆள் திரட்டுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள நடைமுறைகள், மண்டபம் காம்பில் இடம்பெறுகின்ற செயற்பாடுகள் முதலியவற்றை விளக்குவதாக அமைந்துள்ள முதல் இயலில், மண்டபம் காம்பில் தொழிலாளர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம், மண்டபம் காம்பில் நிலவுகின்ற குறைபாடுகளைத் தீர்ப்பதற்கான வழிகள் முதலியனவும் எளிமையாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. மண்டபம் காம்பிலிருந்து தோட்டம் சேர்வது வரை பின்பற்றப்படுகின்ற நடைமுறைகளும் அவை தொடர்பாகத் தொழிலாளர்கள் அறிந்திருக்க வேண்டிய விடயங்களும் இரண்டாவது இயலில் விளக்கப்பட்டுள்ளன.

தோட்ட வாழ்க்கை என்ற மூன்றாது இயல் ஒரு மாத ஒப்பந்தம், சம்பளப் போர்டுகள், சம்பளம், தினச்சம்பளமும் கண்டிராக்ட் வேலையும், சம்பளம் போடுவது, பேன்ஸு காசு, வைத்திய வசதி, கல்வி வசதி, விடுமுறை நாட்கள், அண்டியிருப்பவர் முதலிய உபதலைப்புகளைக் கொண்டுள்ளது. மேற்படி விடயங்கள் குறித்த சட்ட ஏற்பாடுகள், தோட்ட நடைமுறைகள், தொழிலாளர்கள் அறிந்திருக்க வேண்டிய அம்சங்கள், தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுமிடத்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் முதலானவை தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சான்றுகளுடன் எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

நான்காவதாக அமைந்துள்ள ஊருக்குத் திரும்புதல் என்ற இயலில் தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், நாடு திரும்புவதற்குத் தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் முதலியன விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குடியகல்வு நிதியுதவியுடன் எவ்வாறு நாடு திரும்பலாம் என்பது விபரமாக விளக்கப்பட்டுள்ளதோடு, பிச்சைக்காரர்களின் சட்டத்தின் பிரகாரமும் தொழிலாளர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டமை குறித்தும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இலங்கையில் பிச்சை வாங்குவது அக்காலத்தில் சட்டவிரோதமாக இருந்ததால், தோட்டங்களில் தொழில்செய்ய முடியாதநிலைக்குத் தள்ளப்பட்டு, கொழும்பை வந்தடைபவர்கள், பிச்சைக்காரர் சட்டத்தின்படி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இம்முறையை ஆதரிக்காத நடேசய்யர், கட்டுப்பாட்டாளருக்கு அறிவிப்பதன் மூலம் தோட்டங்களிலிருந்தே நேரடியாக நாடு திரும்புவதை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் குடியகல்வு நிதியுதவியுடன் நாடுதிரும்பும் ஏற்பாடு கொண்டுவரப்பட்ட பின்னர், அது தொடர்பான அறிவுறுத்தல்களை நடேசய்யர் தொடர்ந்தும் வழங்கி வந்துள்ளதைக் காணமுடிகின்றது. சான்றாக, 1925ஆம் ஆண்டு தேசபக்தன் பத்திரிகையின் பல இதழ்களில்,

“இந்தியத் தொழிலாளர்களே!

நீங்கள் சரீரசுகமில்லாவிட்டாலும் சரி, உங்களுக்கு வேலையும் இடமும் பிடித்தமில்லாவிட்டாலும் சரி, நீங்கள் இந்தியாவிற்குப் போகலாம். உங்களை கவர்ன்மெண்டு கணக்கில் உங்கள் ஊருக்கு அனுப்பி வைக்கலாம். விவரங்களுக்கு எழுதுங்கள்,

S. ரெங்கநாதன் M.A, I.C.S.
இந்தியா கவர்ன்மெண்ட் ஏஜன்ட்
பேராதனை ரோட், கண்டி.”

என்ற விளம்பரம் முன்பக்கத்திலேயே பெரிய எழுத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளமையைக் கூறலாம்.

இறுதி இயலில் தொழிலாளர்கள் தமது நலவுரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்குத் தமக்குள் ஒன்றுபட்டு சங்கங்கள் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள நடேசய்யர், தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் தொழிலாளர்களின் மேல்நோக்கிய அசைவுக்கும் தொழிலாளர் சங்கங்களால் மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளைச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளதுடன், தொழிலாளர் சார்பாகச் செயற்பட முனைபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை,

“தொழிலாளர் சார்பாக யாராவது உண்மையுடன் உழைக்கவருவார்களானால், முதலாளிமார்கள் பணம் கொடுத்து புதிய தேசாபிமானிகளைக் கிளப்பிவிட்டு உங்கள் மனத்தைக் கெடுப்பார்கள். உங்களுக்காகப் பாடுபடுபவர் போல் நடிக்கச் செய்வார்கள். ஏற்கனவே உழைத்துவருபவர்களைக் கண்டபடியெல்லாம் திட்டுவார்கள். உண்மையை உணராத நீங்களும் மனக்கிலேசம் கொள்வீர்கள். இந்நிலைமை ஏற்படும் என்பது நிச்சயம். உங்களுக்காகப் பாடுபடுபவர் உள்ளவரையில்தான் அக்காலிக் கூத்தர்களும் தாண்டவமாடுவார்கள். அவரை அழுத்திவிட்டால் இவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள்.”

எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இது நடேசய்யரின் நேரடி அனுபவச் சாட்சியமெனலாம். தோட்ட முதலாளிகள், பெரிய கங்காணிகள் முதலானோரும் அவர்களின் அடிவருடிகளும் அக்காலத்தில் நடேசய்யர் மீது பல அவதூறுகளைக் கிளப்பிவிட்டிருந்துள்ளமையைக் காண முடிகின்றது. அவற்றுள் ‘பார்ப்பன முத்திரை’ முதன்மையான இடம் வகித்துள்ளது. தேர்தல் காலங்களில் நடேசய்யரை வீழ்த்தும், வெளியொதுக்கும் முதன்மையான ஆயுதமாக அதனைச் சிலர் கைக்கொண்டுள்ளனர். அத்தகைய அவதூறுகளுக்கான எதிர்வினைகளை நடேசய்யரும் மீனாட்சியம்மாளும் அவ்வப்போது நிகழ்த்தி வந்துள்ளனர். சான்றாக, சாரல்நாடன் சுட்டிக்காட்டியுள்ள மீனாட்சியம்மாளின் பின்வரும் பாடல் வரிகளைக் குறிப்பிடலாம்:

“பார்ப்பான் பார்ப்பானென்று நீங்கள்
பல தடவை சொன்னாலுமே
பார்ப்பான் அல்ல வென்று அய்யர்
பறையடித்துச் சொல்லலையே…
பனையைச் சேர்ந்தானோ அல்லது
பழங்கள் விற்றானோ
தொழிலாளர் கஷ்டங்களை
தொலைக்கப் பாடுபட்டவரை
பழியாகப் பேசி நீங்கள்
பச்சை நோட்டீஸடித்து மெத்தப்
பசப்புவதேனோ சும்மா
உசுப்புவதேனோ”

தொழிலாளர்கள் தமது உரிமைகளை இழக்கக்கூடாது, அவற்றை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ள நடேசய்யர், தொழிலாளர்சார் சட்ட ஏற்பாடுகள், தொழிலாளர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் என்பவற்றுடன், உரிமைகள் மறுக்கப்படும்போது அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளையும் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக, தொழிலாளர்களை அழைத்து வருதல் முதல் மீண்டும் தொழிலாளர்கள் நாடு திரும்புதல் வரை எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம், குறைபாடுகளை யார் யாருக்கு அறிவிக்க வேண்டும் என்பதை மீள மீளக் குறிப்பிட்டுள்ளார். குறைபாடுகளை அறிவிக்க வேண்டியவர்களின் பட்டியலில் தன்னையும் நடேசய்யர் இணைத்துள்ளமை தனித்துச் சுட்டிக்காட்ட வேண்டியதாகும். தொழிலாளரின் நலவுரிமையில் அவர் கொண்டிருந்த அதீத அக்கறைக்கு இதுவுமொரு சான்றாகும். அத்துடன் சில விடயங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான மாதிரிகளும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஒரு தோட்டத்தில் வேலையைவிட்டு நீங்குவதற்குக் கொடுக்க வேண்டிய நோட்டீஸின் அமைப்பு, நோட்டீஸை அஞ்சலில் அனுப்பும்போது அஞ்சல் சான்றிதழ் கோரும் முறை முதலியவற்றுக்கான மாதிரிகள் நூலில் இடம்பெற்றுள்ளன.

தொழிலாளர்கள் தம் உரிமைகளைக் காத்துக்கொள்ளவும் அவற்றைப் பூரணமாக அனுபவிக்கவும் தமக்கான சங்கங்களை ஒன்றுபட்டு அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை இந்நூல் முழுதும் வலியுறுத்தியுள்ளார், நடேசய்யர். தனது முகவுரையை,

“சட்டம் செய்வதால் யாதொரு பயனும் இல்லை. அந்தச்சட்டம் யாருக்காகச் செய்யப்பட்டதோ அவர்கள் இதனை அறிந்திருந்தாலன்றி யாதொரு பயனும் ஏற்படாது. சட்டத்தை அறிந்திருந்தும் பலன் இல்லை. அச்சட்டத்தை உபயோகித்துக் கொள்ளக்கூடிய சக்தி தொழிலாளிக்கு வேண்டும். அச்சக்தி தனித்திருப்பதால் ஏற்படாது… தொழிலாளர்கள் ஒன்றுகூடித் தொழிலாளர் சங்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அக்காலமே, இலங்கை இந்தியத் தொழிலாளர்களுக்கு நற்காலம் என்று சொல்லுவேன்”

என நிறைவு செய்துள்ளதுடன் தொழிலாளர் சங்கங்கள் என்ற இறுதி இயலை,

“நீங்கள் கூடிய சீக்கிரம் ஒன்றுகூடுங்கள். தொழிலாளர் சங்கங்களை ஏற்படுத்துங்கள். உங்கள் நலவுரிமைகளைக் காத்துக் கொள்ளுங்கள்… எல்லாவற்றிற்கும் முயற்சியே காரணம். ஒற்றுமையே சாதனம். ஒன்றுபட்டால் நீங்கள் வாழ்வீர்கள். அது நீங்கிவிட்டால் நீங்கள் வீழ்வீர்கள். இது ஓர் எச்சரிக்கை.”

என்ற எச்சரிக்கையுடன் நிறைவுசெய்துள்ளார். இவைதவிர, முகவுரையின் முடிவுக்குப் பின்னர்,

“தொழிலாளர்களே!
ஒவ்வொரு இடத்திலும்
தொழிலாளர் சங்கங்களைக் கூட்டுங்கள்
அதுவே உங்களுக்குச் சஞ்சீவி போன்றது”

என்ற வாசகம் பெரிதாக அச்சிடப்பட்டுள்ளது. நூலின் உள்ளேயும் பல இடங்களில் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதன் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளார். இந்த அவசியத்தைக் கருத்திற்கொண்டே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை (1931) நடேசய்யர் தோற்றுவித்துள்ளார் எனலாம். அத்துடன் அத்தகைய அமைப்பினைத் தோற்றுவிப்பதற்கான பின்னணிக்களத்தை உருவாக்கும் முயற்சியை இந்நூல் மூலம் மேற்கொள்ள முயன்றுள்ளார் எனவும் கொள்ளலாம்.

பெருந்தோட்ட நடைமுறைகள், சட்ட ஏற்பாடுகள் முதலியவற்றுடன் தொழிலாளர்களின் பலவீனங்கள் மற்றும் நடத்தைக் குறைபாடுகள் முதலானவற்றையும் சுட்டிக்காட்டி, தொழிலாளர்கள் தமது நடத்தைக் கோலங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் நடேசய்யர் வலியுறுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக, பின்வரும் பதிவினைக் குறிப்பிடலாம்:

“எவ்விதச் சட்டம் செய்தும் பலன் இல்லை. தோட்டக்காரர்கள் எவ்வித சௌகரியங்களைச் செய்தும் பலன் இல்லை. நீங்கள் புத்தியுடன் நடந்துகொள்ளாவிட்டால் தோட்டக்காரர்களைக் குறை கூறுவதில் பலன் இல்லை. ஜன்னல் வைத்து வீடு கட்டிக்கொடுத்தால் காற்று நுழையாத மாதிரியாக நீங்கள் அடைத்து விடுகிறீர்கள். அதனால் வியாதி உங்களுக்கு ஏற்படும். வீட்டுக்கருகாமையில் மலம், ஜலம் கழிக்கும் வழக்கத்தை விட்டுவிடுங்கள். அதனால் உங்கள் இருப்பிடங்களை அசுத்தமாகச் செய்வதுடன் வியாதிக்கும் ஆஸ்பதமாகச் செய்கிறீர்கள். இதனால் அந்நியர் உங்களை மிகவும் கேவலமாக எண்ணுகிறார்கள்… கள்ளுக்கடையில் கொண்டு செலவிடும் தொகையை நன்றாய் உண்ணவும், உடுக்கவும் செலவிடலாகாதா… நீங்கள் மற்றவர்களைப் போல் நாகரீகமாய் நடந்து கொள்ள வேண்டாமா? இவ்விதமான செய்கைகளினாலேயே உங்களிடம் வெறுப்பு ஏற்படுகிறது”.

பெருந்தோட்ட அமைப்பு, அதன் இயக்கம், அங்கு தொழில்புரியும் மக்களின் நிலை, அவர்கள் தொடர்பாக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் முதலியன தொடர்பாக விரிந்த தேடலும் ஆழமான அறிவும் நடேசய்யரிடம் இருந்துள்ளதை இந்நூலின் மூலம் கண்டுகொள்ள முடிகின்றது.

இந்நூலில் சில விளம்பரங்களும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சுந்திரம் அல்லது அந்தரப்பிழைப்பு என்ற நூல் பற்றிய பின்வரும் விளம்பரம் மிகுந்த கவனிப்புக்குரியதாகும்:

“வெளிவருகின்றது! வெளிவருகின்றது!

‘சுந்திரம் அல்லது அந்தரப்பிழைப்பு’

கௌரவ கோ. நடேசய்யரால் இயற்றப்பெற்றது

உடனே ஆர்டர் செய்யுங்கள்

தனிப்பிரதி விலை சதம் 30, 4 புத்தகங்களின் விலை ரூபா 1.00.

ஆரு. முத்தையா அம்பலம்

154, செட்டித்தெரு, கொழும்பு”

இவ்விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ‘சுந்திரம் அல்லது அந்தரப்பிழைப்பு’ என்ற நூல் வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஒருசிறிய இடைவெளிக்குப் பின்னர், 1937ஆம் ஆண்டு கமலா பிரஸினால் வெளியிடப்பட்டுள்ள நடேசய்யரின் ‘இலங்கைத்தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு’ நாடகத்தை அந்நூலாகக் கொள்ளலாம். நாடகம் வெளிவரத் தாமதமாகியமையாலேயே அந்நாடகத்துக்கென மீனாட்சியம்மாளால் எழுதப்பட்ட பாடல்கள், ‘இலங்கையில் இந்தியத் தொழிலாளர் அந்தரப்பிழைப்பு’ என இரு தனிப்பிரசுரங்களாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ‘இந்தியத் தொழிலாளரின் கடமைகளும் உரிமைகளும்’ என்ற நூல் வெளியீட்டுக்குப் பின்னர் பழனியப்ப செட்டியாருக்கும் நடேசய்யருக்கும் ஏற்பட்ட கொடுக்கல் – வாங்கல் தகராறினால் மேற்படி விளம்பரத்துக்கு அமைய அந்நூல் பிரசுரம் பெறவில்லை எனலாம்.

நூலின் முன்னட்டையில் இடம்பெறும் ‘தொழிலாளர்கட்கு இன்னல் புரிகின்ற முதலாளி ஆட்சி ஒழிக! ஒழிக! ஒழிக!’ என்ற முழக்கம், ‘நெற்றிவியர்வை நிலத்திற் சிதற நித்தம் பாடுபட்டு, தாம் பசிப்பிணியால் வாடி மடிய, பிறர் தின்று கொழுக்கச் செய்துவரும் எனது ஏழைத்தொழிலாளர்களது அருமைக்கும் பெருமைக்கும் அவர்களது உழைப்பிற்கும் நன்றி அறிதலாக இச்சிறிய நூலை அர்ப்பணம் செய்கின்றேன்’ என்ற அர்ப்பணம், நூலின் உள்ளடக்கம், தொழிலாளர்கள் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான நடை முதலியன யாவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடத்தில் நடேசய்யர் கொண்டிருந்த நேயத்தையும் அத்தொழிலாளர்களின் மீட்சியில் அவர் கொண்டிருந்த அக்கறையையும் வெளிக்காட்டுவனவாக அமைந்துள்ளன.

தொழிலாளர்களின் கடமைகளையும் உரிமைகளையும் வெறுமனே தொகுத்துக் கூறாமல், அத்தொழிலாளர்களிடத்தில் பாதுகாப்பு உணர்வையும் தன்நம்பிக்கையையும் வளர்க்கும் வகையில் அவற்றை எடுத்துரைத்துள்ள நடேசய்யர், நம்பிக்கைமிகுந்த எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கான வித்துகளையும் இந்நூலில் ஆங்காங்கே ஆழமாக விதைத்துள்ளார். அவ்வகையில் ஒரு நூற்றாண்டுகால இருளைக் கிழித்துக்கொண்டு வெளியேறுவதற்கான கைத்தீபத்தை, இந்நூலின் மூலம் நடேசய்யர் தொழிலாளர்களுக்குக் கையளிக்க முனைந்துள்ளார் எனலாம்.


ஒலிவடிவில் கேட்க

2106 பார்வைகள்

About the Author

எம். எம். ஜெயசீலன்

எம்.எம். ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி, முதுதத்துவமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், இந்தியப் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் (தஞ்சாவூர்) கலாநிதிப் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார். கல்வெட்டியல், பண்பாட்டு வரலாறு, இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுள்ள இவர், அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்து வருவதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதிவருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்