கறவை மாடுகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சி குறித்த அறிவூட்டலும் தடுப்பு நடவடிக்கைகளும்
Arts
14 நிமிட வாசிப்பு

கறவை மாடுகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சி குறித்த அறிவூட்டலும் தடுப்பு நடவடிக்கைகளும்

February 21, 2024 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

கோடை காலத்தில் கறவை மாடுகள் பல்வேறு அசெளகரியங்களைச் சந்திக்கின்றன. இந்த நாட்களில் ஏற்படும் அதிகரித்த வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக ஏற்படும் நீர் மற்றும் தீவனத்தின் பற்றாக்குறை கால்நடைகளின் வழமையான உடலியல்  தொழிற்பாடுகளை கடுமையாகப் பாதிக்கின்றன. இவற்றின் காரணமாக பால் உற்பத்தி குறைதல், இனப்பெருக்க ஆற்றல் குறைதல், உடல் எடை குறைதல் போன்ற துர் விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் இவற்றை நம்பி வாழும் பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்திக்கின்றனர்.

Image 2

கறவை மாடுகள் போன்ற கால்நடைகள் காலநிலைக்கு தம்மை இயல்பாகவே தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் மிக்கவை. அதிகரித்த வெப்பம் வெளிச் சூழலில் காணப்படும் போது தமது உடல் தொழிற்பாடுகளை குறைத்தும் உணவு உண்பதை குறைத்தும் தமது உடல் வெப்ப உற்பத்தியைக் குறைக்கின்றன. இதே போல் குளிர் நிறைந்த நாட்களில் அதிக தீவனம் உண்டு தமது உடல் வெப்ப செயற்பாடுகளை அதிகரித்து வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன.

இலங்கை, தமிழகம்  போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான  மாதங்கள் பொதுவாக கோடை காலமாக கருதப்படுகின்றன. இந்தப் பருவத்தில் மழை குறைந்து, வெப்பம் அதிகரிக்கிறது. இந்த நாட்களில் மனிதர்கள் மட்டுமின்றி  மாடுகள் போன்ற கால்நடைகளும் வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரை கறவை மாடுகளுக்கு வெப்பக் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்குரிய தீர்வு மேலாண்மை முறைகளையும் ஆராய்கிறது.

சூழல் வெப்பநிலை, சாரீரப்பதன், காற்றின் வேகம், காற்றழுத்தம் போன்ற சூழல் காரணிகள் கால்நடைகளில் வெப்ப அயர்ச்சியை கூட்டாக ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக அவை கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. கறவை மாடுகளின் சராசரி உடல் வெப்பநிலை 38.6 பாகை செல்சியஸ் [101.5 F] ஆகும். இது மாற்றமுறாமல் வைத்து பேணப்பட வேண்டும். சுற்றுச் சூழலில் வெப்பம் அதிகரிக்கும் போது அது உடலையும்  பாதிக்கிறது. பொதுவாக சராசரி உடல் வெப்பநிலை அளவிலேயே சூழல் வெப்பநிலை காணப்படும் போது கால்நடைகள் தமது உடல் தொழிற்பாடுகளை சீராக வைத்திருக்கும். வெப்பமானது அதிகரித்த இடத்தில் இருந்து குறைந்த இடத்துக்கு கடத்தப்படுகிறது. அதாவது வெளி வெப்பம் அதிகமாயின் அதனை விட வெப்பநிலை குறைந்த கால்நடைகளின் உடலுக்கு  அது கடத்தப்படும். மேலும் உடல் தொழிற்பாடுகளால் கால்நடைகள் கணிசமான வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. அவை உடலால் உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தை  சுவாசம், வியர்வை மூலம் உடலை தளர்த்தி வெளியேற்றுகின்றன. உடலால் உற்பத்தி செய்யப்படும் வெப்பம் மற்றும் சூழல் வெப்பம் என்பன ஒன்று சேர்ந்து ஒருமித்த அதிகரித்த வெப்பத்தை தோற்றுவிக்கின்றன.

கோடை காலத்தில் ஏற்படும் அதிகரித்த வெப்பம் சுற்றுப் புறத்தில் உள்ள நீர்நிலைகள் செடி – கொடிகள், மரங்கள் ஏனைய உயிரினங்களில் இருந்து நீரை ஆவியாக்குகிறது. இதனால் அந்தப் பகுதியின் சாரீரப்பதன் அதிகரிக்கிறது. இதனால் வியர்வையை வெளியேற்றும் திறனும் குறைகிறது. உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட, அது உடலைப் பாதிக்கிறது.

வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பது குறைந்து விடுகிறது. மேய்ச்சல் தரைகளில் புற்களின் அளவு குறைவதால் அவை அதிக தூரம் பயணிக்க வேண்டி ஏற்படுகிறது. இதனால் அதிக சக்தியும் தண்ணீர் செலவும் ஏற்பட்டு அவற்றின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைகிறது.

மேலும் இக் காலப் பகுதியில் உடல் வெப்ப உற்பத்தியை குறைக்கும் விதமாக மாடுகள் தமது தீவன உட்கொள்ளலைக் குறைப்பதால் புரதம் போன்ற உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் குறைவடைகின்றன. இதனால் உடல் வளர்ச்சி பாதிப்படைவதோடு இனப்பெருக்க ஆற்றலும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் போன்ற இனப்பெருக்க ஓமோன்களின் சுரப்பு, அதிகரித்த வெப்ப நிலையில் குறைகிறது. இதனால் மாடுகள் வேட்கை / சினைப்பருவ அறிகுறிகளைக் காட்டுவது சரியாக தெரியாது. கருவுறும் பசுக்களுக்கு சில வேளைகளில் கருச்சிதைவு  ஏற்பட வாய்ப்பும் ஏற்படுகிறது. கருவின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். பொதுவாகவே கால்நடைகள் வெப்ப காலங்களில் சினையாகும் விகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பத்தை குறைக்க உட்புற உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம், தோல் போன்ற வெளிப்புற உறுப்புகளுக்கு செல்லும்படி திருப்பப்படுகிறது. இதனால் கருப்பை, சூலகம், கருப்பைக் குழல் போன்ற உறுப்புகளுக்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்காது. இதனால் அவற்றுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களும் குறைவதோடு வெளியேற வேண்டிய கழிவுகளும் தேங்கி விடுவதால் அவற்றின் வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஒன்றுக்கு மேற்பட்ட சினை ஊசி போட்டும் சில வேளைகளில் பசுக்கள் சினைப்பிடிக்காத நிலை ஏற்படுகிறது. அத்துடன் சினை மாடுகளின் கன்றின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. கிடைக்கும் பசுந்தீவனங்களில் தகுந்த சத்துகள் குறைதல், போதிய நீர் கிடைக்காமையால் வளர்ச்சி பாதிப்படைதல் போன்றன காரணமாக பாலுற்பத்தி குறைவதோடு பாலின் கொழுப்பு மற்றும் கொழுப்பில்லா இதர சத்துகளும் குறைவடைகிறது. அத்துடன் இரப்பையில் காணப்படும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அமிலத்தன்மை அதிகரிப்பதால் கால்நடைகள் இறக்கவும் நேரிடும்.

மேலும் நீர்நிலைகளில் மீன்கள், பாசிகள் மற்றும் அல்காக்கள் இறப்பதால் மாசுபட்ட அவற்றை அருந்தும் பசுக்கள் நோய்வாய்ப்படுகின்றன. அத்துடன் கால்நடைகளின் நிர்ப்பீடன நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கால்வாய் நோய், கருங்காலி நோய் போன்றனவும் இலகுவாக ஏற்படுகின்றன. புற மற்றும் அக ஒட்டுண்ணிகள் இலகுவில் இவற்றைத் தாக்குவதால் இவை பலவீனமடைகின்றன. 

வெப்ப அயர்ச்சி 

அதிக சூடான சூழலுக்கு கால்நடைகள் உட்படுவதால் ஏற்படும் அசெளகரியமான நிலை வெப்ப அயர்ச்சி எனப்படும்.

வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள் 

  • மாடுகள் நிழலான பகுதியில் தஞ்சமடையும்.
  • அதிக அளவில் தண்ணீர் குடிக்கும்
  • அதிக உமிழ் நீர் வடிக்கும் 
  • வேகமான மூச்சு விடுதல் காணப்படும் அதேவேளை மூச்சுவிடச் சிரமப்பட்டு வாயாலும் சுவாசிக்கும்.
  • உடலின் வெப்பம் அதிகரித்துக் காணப்படும்.
  • நடமாடும் திறன் குறையும். 
  • கடும் வெப்ப அயர்ச்சியின் போது அவை நடுங்கி கீழே விழுந்து விடும்.
Image 6

பொதுவாக உள்ளூர் மாடுகளை விட வெளிநாட்டு ரக மற்றும் கலப்பின மாடுகளே வெப்ப அயர்ச்சிக்கு உட்படுகின்றன.

வெப்ப அயர்ச்சியை குறைக்க சிறப்பான மேலாண்மை முறைகளைச் செய்ய வேண்டும்.

கொட்டகை மேலாண்மை 

வெக்கை காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க சிறந்த கொட்டகை மேலாண்மை அவசியமாகிறது. வெளி வெப்பநிலையை விட கொட்டகையினுள் வெப்பநிலை குறைவாக அமைய வேண்டும். கொட்டகை நல்ல காற்றோட்டம் மிக்கதாகவும் சூரிய ஒளி நேரடியாக விழாதவாறு அகலப் பக்கம் கிழக்கு மேற்கு நோக்கியதாக அமைய வேண்டும். கொட்டகையின் அகலம் அதிகமாக இருந்தால் காற்றோட்டம் தடைப்படும். அகலம்  25 – 30 அடிக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். நீளம் மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடலாம் எனினும் அதிக பட்சம் 100 அடிக்கு மேல் இருப்பது கவனிப்பில் சிரமத்தை ஏற்படுத்தலாம். உயரத்தை 12 அடிக்கு மேல் வைத்திருப்பது பிரயோசனமற்றது. ஒரு மாட்டுக்கு 50-60 சதுர அடி வரும் வகையில் பார்க்க வேண்டும். ஒரு கொட்டகைக்கும் மற்றைய கொட்டகைக்கும் இடையில் இடைவெளியை குறைந்து இருந்தால் காற்றோட்டம் சிறப்பாக இருக்கும்.

Image 3

பனை,தென்னை ஓலை மற்றும் வைக்கோல் கொண்டு கூரையை அமைப்பது சிறப்பானது. தகரம் மற்றும் அஸ்பெஸ்டோஸ் கொண்டு கூரையை அமைக்கும் போது அதற்கு மேல் ஓலைகள், வைக்கோலை போட வேண்டும். கீரைக் கொடி, பயறுக் கொடி, அழகு மலர்க் கொடி போன்ற படர் தாவரங்களை வளர விடலாம். தண்ணீர் தெளிப்பான்களை பயன்படுத்தலாம். கொட்டகையைச் சுற்றி நிழல் மரங்களை நட வேண்டும். வெயில் நேரங்களில் ஈரச் சாக்குகளை சுவரின் இரு பக்கமும் தொங்க விடலாம். கொட்டகையின் உள்ளே தெளிப்பான்களையும் மின் விசிறிகளையும் உபயோகிக்கலாம். நவீனப் பண்ணைகளில் நவீன நீர் தெளிப்பான்கள் பாவிக்கப்படுகின்றன. பகல் வேளையில் மர நிழல்களில் மாடுகளைக் கட்டி வைக்கலாம். இரவு வேளையில், வலுக் குறைந்த அதிகம் வெப்பத்தை வெளிவிடாத மின் குமிழ்களைப் பாவிக்கலாம்.

கொட்டகை இல்லாத மற்றும் மிகக் குறைந்த மாடுகளைக் கொண்டவர்களுக்கு மர நிழல்கள் மிகவும்  பயன்மிக்கவை.

மேய்ச்சலுக்கு விடும் நேரத்தை காலை 7 மணி  தொடக்கம் 10 மணி வரையும் மாலை 4  தொடக்கம் 6 மணி வரையும் ஒழுங்குபடுத்தலாம். அதிக வெப்பமுள்ள மதிய வேளையில் மேய்ச்சலில் விடுவது சாதகமற்றது.

Image 4

வெப்பம் அதிகமுள்ள நாட்களில் குறைந்தது இரண்டு முறையாவது மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும். எருமை மாடுகளை குறைந்தது ஐந்து முறையாவது குளிப்பாட்ட வேண்டும். எருமை மாட்டுக்கு வியர்வைச் சுரப்பிகள் அதிகம் இல்லாததாலும் அவற்றின் நிறம் கருப்பு நிறமாகையாலும் வெப்பத்தால் கடுமையாகப் பாதிப்படைகின்றன.

தீவன மேலாண்மை 

சூழலின் வெப்பநிலை அதிகரித்தால் மாடுகள் தீவனம் உட்கொள்வது குறைவடைகிறது. கோடையில் வறட்சி காணப்படுவதால் பசும் புல் கிடைப்பது சிரமமாகிறது. போதிய நீர் இல்லாத காரணத்தால் புற்களில் உள்ள ஊட்டச்சத்துகள் குன்றி நார்சத்து அதிகரிக்கும். இதனை மாடுகள் உண்பதால் உடல் எடை குறையும்; பால் உற்பத்தியும் குறையும். எனவே அதற்குத் தகுந்தது போல பசுக்களுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம், செறிவுத் தீவனம் வழங்கி கனியுப்பு இழப்பை ஈடு செய்ய வேண்டும்.

அதிக மாடுகள் காணப்படும் பண்ணைகளில் வயதான உற்பத்தி குறைந்த, சினைப்பட சிரமப்படும் மாடுகளை கழிக்க வேண்டும். இல்லாது போனால் அவை ஏனைய மாடுகளுடன் உணவு, தண்ணீருக்கு போட்டி போடலாம். இதனால் ஆரோக்கியமான விலங்குகளுக்கு தகுந்த உணவு, தண்ணீர் கிடைக்காது.

பண்ணையைச் சுற்றி மா, பலா, பூவரசு, அரசு, ஆலமரம், கிளுவை போன்ற மரங்களை நட்டு வைத்தால் புல் கிடைக்காத வறட்சி நாட்களில் இவற்றின் இலைகளை வழங்கலாம். இவற்றில் கணிசமான அளவு புரதச்சத்து காணப்படுகிறது.

வைக்கோல், கடலை, உளுந்துக் கொடி, கரும்புத் தோகை, சக்கை போன்றன அதிகம் கிடைக்கும் காலப் பகுதிகளில் அவற்றைச் சேமித்து வைத்தால், அவற்றை வறட்சிக் காலத்தில் மாற்றுத் தீவனமாகப் பாவிக்கலாம்.

சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தீவனப்பயிர் வளர்ப்பில் ஈடுபட்டு நீர் விரயத்தை தவிர்க்கலாம். காணியின் உயரமான இடத்தில் கொட்டகையை அமைத்தால் கொட்டகையைக் கழுவும் நீர் தீவனப்பயிர்  வளரும் பகுதிக்கு வடிந்து வரும்;  நீர் விரயம் தவிர்க்கப்படும்.

புற்களை வழங்கும் போது புல் வெட்டும் இயந்திரம் மூலம் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொடுப்பதால் விரயமாதல் கணிசமாகக் குறைக்கப்படுகிறது.

அசோலா மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் [hydroponics] எனும் மண்ணில்லாப் பயிர்ச் செய்கையைச் செய்து மாடுகளுக்கு வழங்க முடியும். அத்துடன் புற்கள் அதிகமாக கிடைக்கும் காலத்தில் அதனை உலர்த்தி உலர் புல்லாகவும் [hay], பதப்படுத்தி ஊறுகாய்ப் புல்லாகவும் [silage] வறட்சிக் காலத்தில் கொடுக்க முடியும். நவீனத் தீவன முறையான TMR உணவூட்டலைச் செய்யலாம்.

Image 5

அதிகமாக தீவன மூலப்பொருட்கள் கிடைக்கும்போது அவற்றைப் பாதுகாக்கும் அதே வேளை, அவை நஞ்சாகாமலும் பாதுகாக்க வேண்டும். 

கோடையில், மாடுகள் வெப்ப உற்பத்தியைக் குறைக்கும் விதமாக அடர்வு தீவனத்தை குறைத்தே உண்கின்றன. எனவே உட்கொள்ளும் அடர்வு தீவனம் சத்துக்கள் நிறைந்ததாக பார்த்துக்கொள்ளும் அதே வேளை அதனை  காலை, மாலை என்று பிரித்து வழங்கலாம்.

புற்களின் சத்து குறைவதாலும் ‘அசையூன்’ வயிற்றில் வாழும் நுண்னுயிர்களின் வளர்ச்சி பாதிப்படைவதாலும் ஏற்படும் அமில அதிகரிப்பை ஈடுசெய்ய சோடா உப்பு மற்றும் மக்னிசியம் பால் கொடுக்கலாம். தாது உப்புகளையும் கொடுக்க வேண்டும்.

நோய் மேலாண்மை 

கோடை காலத்தில் உணவின்றி, கால்நடைகள் மெலிவதோடு நிர்ப்பீடன நோய் எதிர்ப்பு சக்தியையும் இழப்பதால் இலகுவில் நோய்த்தாக்கத்துக்கு உட்படுகின்றன. இதனால் கால்வாய் நோய் [foot and mouth] கருங்காலி நோய் [black quarter] போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை தகுந்த நேரத்தில் போட வேண்டும். மேலும், சிறந்த அக ஒட்டுண்ணி மருந்துகளை சரியான அளவில் கொடுப்பதோடு புற ஒட்டுண்ணிகளை இல்லாது செய்யவும்  வேண்டும். நீர் வற்றிய குளம், குட்டைகளில் ஒட்டுண்ணிப் பெருக்கம் அதிகம் காணப்படுவதால் அவற்றை அங்கு நீர் அருந்த விடக்கூடாது. 

மேற்கூறிய சகல மேலாண்மை முறைகளையும் சரியாகக் கையாண்டு கோடைகாலத்தில் கறவை மாடுகளில் ஏற்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைத்து சிறந்த உற்பத்திகளைப் பெறமுடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்