பிராமணன் திவக்கனின் தங்கத் திருமலையில் நாகர் பற்றிய கல்வெட்டு
slide-1
slide-2
slide-3
previous arrow
next arrow
Arts
13 நிமிட வாசிப்பு

பிராமணன் திவக்கனின் தங்கத் திருமலையில் நாகர் பற்றிய கல்வெட்டு

January 24, 2025 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

அனுராதபுரத்தின் வடக்கில், மல்வத்து ஓயாவின் மேற்குப் புறத்தில் தந்திரிமலை எனும் பண்டைய கிராமம் அமைந்துள்ளது. அனுராதபுரத்திலிருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் 18 கி.மீ தூரத்தில் உள்ள ஒயாமடு சந்தியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதியில் மேலும் 14 கி.மீ தூரம் சென்றால் தந்திரிமலையை அடையலாம்.

இங்கு மலைப்பாறைகள் நிறைந்த சிறிய காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த போதிமரமும், கட்டடங்களும், குடைவரை சிலைகளும், இயற்கையான கற்குகைகளும் காணப்படுகின்றன. இப்பகுதி தந்திரிமலை ரஜமகா விகாரை என அழைக்கப்படுகிறது. இச்சிறிய காட்டின் வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் ஒயாயமடு – செட்டிக்குளம் வீதி அமைந்துள்ளது. கிழக்குப் பக்கத்தில் தொடன்வில குளமும், வயல்வெளிகளும் அமைந்துள்ளன. தந்திரிமலையின் மேற்குப் பக்கத்தில் காடுகள் நிறைந்த, ஜனசஞ்சாரமற்ற வில்பத்து வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

தந்திரிமலை 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் பிராமணர் குடியிருப்பாக விளங்கியுள்ளது. இது திவக்கனின் பிராமணகாமம் (திவக்க பமுனுகம) என்ற பெயருடன் அழைக்கப்பட்டுள்ளது. பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இது இந்துக்கள் குடியிருந்த பகுதிகளில் மிக முக்கியமான இடமாகக் காணப்பட்டுள்ளது. பொ.ஆ.மு. 247-207 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பியதீசன் பெளத்த மதத்திற்கு மாறுவதற்கு முன்பு அவனது ஆட்சிப் பகுதியின் முக்கிய இடங்களில் ஒன்றாக திவக்கனின் பிராமணகாமம் விளங்கியுள்ளது. திவக்கன் எனும் பிராமணன் தேவநம்பியதீசன் காலத்தில் இருந்த முக்கிய பிரதிநிதிகளில் ஒருவனாகத் திகழ்ந்துள்ளான்.

பிராமணன் திவக்கன் பரிபாலனம் செய்து வந்த இப்பிரதேசத்தில் நாக வழிபாடும், சிவ வழிபாடும் சிறப்புற்று விளங்கியிருக்க வேண்டும் என்பது தந்திரிமலையிலும் இதன் அருகில் உள்ள பில்லாவேகல என்னுமிடத்திலும் உள்ள கற்குகைகளிலும் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது. இக்கூற்றுக்கு மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் வலுச்சேர்க்கின்றன.

அனுராதபுரக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த பிராமணர்கள் சிவ வழிபாட்டை கடைப்பிடித்தனர். இதனால் இக்காலகட்டத்தில் இருந்த சிவன் கோயில்களை ‘Temples of the Brahmanical Gods’ என மகாவம்சம் குறிப்பிடுகிறது. மகாசேனன் அழித்த மூன்று கோயில்கள் பற்றிய மகாவம்சக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றிய அடிக்குறிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“Everywhere in the Island of Lanka, he established the doctrine of the Buddha, having destroyed the Temples of unbelievers, i.e. having abolished the Phallic symbols of Siva and so forth”.

பிராமணன் திவக்கன் பரிபாலனம் செய்துவந்த தந்திரிமலைப் பிரதேசம் அக்காலகட்டத்தில் மிக முக்கியமான இடமாக இருந்தமையால் தான் தேவநம்பியதீசன் இந்தியாவில் இருந்து சங்கமித்தை கொண்டுவந்த அதி முக்கிய பொக்கிஷமான போதிமரக் கிளையை இங்கு ஒருநாள் வைத்திருந்து, அதன்பின் இங்கிருந்து ஊர்வலமாக அனுராதபுரத்திற்குக் கொண்டு சென்றான்.

தேவநம்பியதீச மன்னன் பெரும் பொக்கிஷமாகக் கருதிய போதிமரக் கிளையை சங்கமித்தை  கொண்டுவந்த போது அதை பிராமணன் திவக்கனின் கிராமத்து வாசலில் இறக்கி வைத்தான் எனவும், இங்கிருந்து அனுராதபுரம் வரைக்கும் வெள்ளை மணலையும், மலர்களையும் தூவியபடி போதிமரக் கிளையைக் கொண்டு சென்றான் எனவும் மகாவம்சம் கூறுகிறது.

அத்துடன் போதிமர நடுகை விழாவுக்கு மிக முக்கிய மூன்று இடங்களிலிருந்து பிரபுக்களை அழைத்திருந்தான். அம்மூவரில் ஒருவன் பிராமணன் திவக்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கமித்தை கொண்டுவந்த எட்டு போதிமரக் கன்றுகளில் ஒன்று பிராமணன் திவக்கனின் கிராமத்தில் நடப்பட்டதாக மகாவம்சம் மேலும் கூறுகிறது.

பிராமணன் திவக்கனின் வீடு அல்லது மடப்பள்ளியின் இடிபாடுகள் இன்றும் தந்திரிமலையில் காணப்படுகின்றன. பாறையின் மீது படிகளுடன் கூடிய இந்த மடப்பள்ளியின் உயர்ந்த அத்திவாரம் மட்டும் எஞ்சியுள்ளது. இக்கட்டிடத்தின் மத்தியில் நீள்சதுர வடிவில் மேடை அமைக்கப்பட்டு, அதன்மேல் சதுர வடிவில் கல்லினால் கட்டப்பட்ட நீர்த்தொட்டி ஒன்றும் காணப்படுகிறது. தேவநம்பியதீசன் காலத்திற்கு முன்பு இந்து வழிபாட்டுத் தலமாகவும், பிராமணர் குடியிருப்பாகவும் இருந்த இந்த இடம் அதன் பின்பு பெளத்த வழிபாட்டுத் தலமாக மாறியது.

வயல்வெளிகளாலும், மக்கள் குடியிருப்புகளாலும் சூழப்பட்ட, சிறிய அடர்ந்த காட்டின் மத்தியில் மூன்று நிரையாக ஒரே சீராகக் காணப்படும் இருபதுக்கும் மேற்பட்ட தட்டையான மலைப் பாறைகள் நிறைந்த பகுதியே தந்திரிமலை என அழைக்கப்படுகிறது. இங்கு முதலாவது நிரையின் வலது பக்கத்தில் உள்ள முதலாவது மலைப்பாறையின் மத்தியில், அதன் உச்சிப் பகுதியில் பிராமணன் திவக்கனால் நடப்பட்ட புனித போதிமரம் காணப்படுகிறது. இம்மலையின் கிழக்குப் பக்கம், தாமரைக் குளத்தின் அருகில் பிராமணன் திவக்கனின் வீடு அல்லது மடப்பள்ளியின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இம்மலையின் இடது பக்கம் உள்ள இரண்டாவது மலைப் பாறையில், அதன் மேற்குப் பக்கத்தில் உள்ள உயரமான இடத்தில் தூபி கட்டப்பட்டுள்ளது. இம்மலைப் பாறைகள் இரண்டும் முற்றிலும் நீரினால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படுகினறன. இரண்டாவது நிரையில் உள்ள பெரிய தட்டையான மலைப்பாறையின் தெற்குப் பக்கத்தில், தாமரைக் குளத்தின் கிழக்கில் பண்டைய நூல் நிலையத்தின் சிதைவுகளும், இம்மலையின் மேற்குப் பக்கத்தில் கற்சுனையும், பாறைக் கல்வெட்டும், கிழக்குப் பக்க அடிவாரத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட இயற்கையான கற்குகைகளும் காணப்படுகின்றன.   

போதிமரம் அமைந்துள்ள மலையில் உள்ள போதிமரத்தின் அருகில் பாறையில், திவக்க பமுணுகம பற்றிக் குறிப்பிடும் பாறைக் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் இக்கல்வெட்டை தற்போது அடையாளம் காண முடியவில்லை. இம்மலைப் பாறையின் வடக்குப் பக்க அடிவாரத்தில் உள்ள மலைச்சரிவில் புத்த பகவான் சயன நிலையில் படுத்திருக்கும் சிலை ஒன்று  செதுக்கப்பட்டுள்ளது. 40 அடி நீளமும், 10 அடி உயரமும், 5 அடி ஆழமும் கொண்ட பாறையைக் குடைந்து, தலை முதல் பாதம் வரை 38 அடி நீளம் கொண்ட இச்சிலையை வடித்துள்ளனர். மழை, வெயிலில் இருந்து இச்சிலையைப் பாதுகாப்பதற்காக கல்லில் அத்திவாரமிட்டு, அதன்மேல் செங்கல்லில் சுவர் அமைத்து, ஒரு மண்டபத்தைக் கட்டி, கூரை அமைத்துள்ளனர். பல நூற்றாண்டுகள் கைவிடப்பட்ட நிலையில் இக்கூரை முற்றாக அழிந்து விட்டது. இச்சிலை இரண்டாவது மலையில் உள்ள தூபியை நோக்கிய வண்ணம் காணப்படுகிறது. இச்சிலையின் தலை, தலைக்குக் கீழே இருந்த வலது கை மற்றும் தலையணை ஆகியவை புதையல் கொள்ளையர்களால் முற்றாக உடைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவை சுதையினால் மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது.

போதிமரம் உள்ள மலையின் தெற்குப் பக்க அடிவாரத்தில் உள்ள சிறிய பாறையின் சரிவில் சமாதி நிலையில் இருக்கும் புத்த பகவானின் சிலை ஒன்று காணப்படுகிறது. 9 அடி அகலமும், 8 அடி உயரமும், ஐந்தரை அடி ஆழமும் கொண்ட பாறையை உட்பக்கமாகக் குடைந்து மிகவும் நேர்த்தியாக இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. 9 அடி நீளமும், மூன்றரை அடி அகலமும் கொண்ட ஆசனத்தில், 8 அடி உயரமான இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் இரு பக்கங்களிலும் இரு கால்களைத் தூக்கிய வண்ணம் இரண்டு சிம்ம உருவங்களும், அதற்கு மேலே இரண்டு மகர வடிவங்களும், அதற்கு மேலே சாமரம் வீசும் இரு மனிதர்களின் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை போதி மரத்தை நோக்கிய வண்ணம் காணப்படுகிறது.

இக்குடைவரையின் வெளிப்பக்கம், இடது பக்கத்தில் இரண்டு சிறிய புத்தரின் சிலைகளும், வலது பக்கம் ஒரு புத்தர் சிலையும் செதுக்கப்பட்டு, முழுமை \ பெறாமல் காணப்படுகின்றன. குடைவரையின் முன்பக்கம் இரண்டு கற்தூண்களும், அதற்கு முன்பாக ஒரு கற் கதவு நிலையும் காணப்படுகின்றன. குடைவரையின் முன்பக்கம் உள்ள இரு தூண்களையும், கற்கதவு நிலையையும் இணைத்து செங்கட்டிகளினால் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இத்தூண்களுக்கு மேலே கூரை அமைத்து சிறிய முன்மண்டபம் ஒன்று கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கூரை முற்றாக அழிந்துவிட்டது.

இலங்கையில் இரண்டு குடைவரைக் கோயில்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் காலத்தால் முற்பட்டது இந்தக் குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. தந்திரிமலையில் உள்ள சிலைகள் இரண்டும் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலக் குடைவரைக் கோயில்களின் சாயலை ஒத்தவையாகக் காணப்படுகின்றன. இவை செதுக்கப்பட்ட காலமும் பல்லவர் காலமே. தென்னிந்தியாவில் சிறப்புற்று விளங்கிய பல்லவரின் குடைவரைக் கட்டிடக்கலை இலங்கையிலும் அக்காலப்பகுதியில் பரவியிருந்தமைக்கு தந்திரிமலையில் காணப்படும் இச்சிலைகள் இரண்டும் முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன.

அனுராதபுர யுகத்தின் இறுதிக் காலமான பொ.ஆ. 8 ஆம், 9 ஆம் நூற்றாண்டில் இக்குடைவரைகள் இரண்டும் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அனுராதபுர நகரமும், அதன் அருகில் இருந்த ஏனைய முக்கிய இடங்களும் சோழர் படைகளினால் அடிக்கடி தாக்கப்பட்டபோது, தந்திரிமலையில் இருந்தவர்கள் இவ்விடத்தைக் கைவிட்டுவிட்டு வேறு பகுதிகளுக்குச் சென்றதாகவும், இதனால் அன்று முதல் பல நூற்றாண்டு காலமாக இவ்விடம் கைவிடப்பட்டு, காடு மண்டி, மக்கள் கண்களில் இருந்து மறைந்துபோய் விட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

சுமார் 850 ஆண்டுகள் காட்டில் மறைந்து கிடந்த தந்திரிமலை இடிபாடுகளை முதன் முதலாக 1883 ஆம் ஆண்டு எஸ். ஹவுஜ்டோன் (S. Haughton) எனும் ஆங்கிலேய ஆய்வாளர் கண்டுபிடித்து அவை பற்றிய விபரங்களை தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருந்தார். இவரைத் தொடர்ந்து டபிள்யூ.எஸ்.ஜே. போக் (W.S.J. Boake- 1886), ஜி.எம். பெளலர் (G.M. Fowler- 1886), சி.ஏ. முர்ராய் (C.A. Murray-Government Agents Diary, December 18, 1889), ஜே.பி. லூயிஸ் (J.P. Lewis- 1890), ஆர்.டபிள்யூ. லெவர்ஸ் (R.W. Levers-1891) ஆகிய ஐரோப்பிய அறிஞர்கள் தங்கள் நாட்குறிப்புகளில் தந்திரிமலை பற்றிய விபரங்களைப் பதிவு செய்தனர்.

அதன் பின்பு 1896 இல் இலங்கைத் தொல்லியல் திணைக்கள ஆணையாளரான எச்.சி.பி. பெல் (H.C.P. Bell- 1896) தொல்லியல் திணைக்கள ஆண்டறிக்கையில் தந்திரிமலை பற்றி குறிப்பிட்டார். 1909 ஆம் ஆண்டு ஹென்றி பார்க்கரும் (Henry Parker- 1909) தந்திரிமலை பற்றி தனது நூலில் எழுதியிருந்தார்.

பிராமணன் திவக்கனின் பிராமணகம எனும் பெயர் இன்று தந்திரிமலை என அழைக்கப்படுகின்றது. இப்பெயர் வருவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆரம்பத்தில் இது ‘தங்கத் திருமலை’ என்ற தமிழ்ப் பெயரைப் பெற்று விளங்கியதாகவும், இதுவே காலப்போக்கில் ‘தங்திரிமலை’ எனத் திரிபுபட்டு, பின்பு தந்திரிமலை ஆகியதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

புனித போதிமரக் கிளை ஜம்புகோளப் பட்டினத்திலிருந்து கொண்டுவரப்பட்டு மன்னனும், சங்கமித்தையும் இங்கிருந்த மலையில் தங்கிச் சென்ற காரணத்தால் இது புனிதமான இடமானது. இதன் காரணமாக இவ்விடம் பெறுமதிமிக்கதாக விளங்கியதால் ‘தங்கத்திருமலை’ என்ற பெயர் ஏற்பட்டது. இப்பெயர் வர இன்னுமோர் காரணமும் கூறப்படுகிறது. எல்லோரும் தங்கிச் சென்ற புனிதமான மலை என்பதால் தங்கிச் சென்ற புனிதமான மலை எனும் பொருள்பட தங்கத் திருமலை என்ற பெயர் வந்தது எனவும் கூறப்படுகிறது. தங்கத் திருமலை, தங்கிச் சென்ற மலை ஆகிய பெயர்கள் தூய தமிழ்ப் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தந்திரிமலையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஆதி மனிதர் வரைந்த சித்திரங்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு சித்திரத்தில் சூரியனும், மனித உருவங்களும் மாடு, குதிரை ஆகிய மிருகங்கள் மற்றும் பறவைகள், அம்பு – வில்லு போன்றவை வரையப்பட்டுள்ளன. இச்சித்திரங்கள் மூலம் இங்கு பொ.ஆ.மு. 10,000 – 7000 ஆண்டுகால வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் வாழ்ந்தமை தெரியவருகிறது.

தந்திரிமலையில் இரண்டாவது நிரையில் உள்ள பெரிய தட்டையான மலைப்பாறையின் கிழக்குப் பக்க அடிவாரத்தில் அடர்ந்த காடு அமைந்துள்ளது. இக்காட்டுப் பகுதியிலும், இதன் வடக்குப் பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதியிலும் பல இயற்கையான கற்குகைகள் அமைந்துள்ளன. இதில் 12 குகைகளில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றில் 3 குகைகளில் பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இங்குள்ள மலைப்பாறைகளில் 2 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன.    

இவற்றில் இரண்டு கல்வெட்டுகள் பரதர் பற்றிக் கூறுகின்றன. இவ் இரண்டு கல்வெட்டுகளிலும் பத சுமணன், பத தீசன் ஆகிய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பத எனும் சொல் பரத குலத்தவரைக் குறிப்பதாக சில அறிஞர்களும், சுவாமி என்பதைக் குறிப்பதாக வேறு சில அறிஞர்களும் கூறியுள்ளனர்.

அடுத்த கல்வெட்டு நாகர் பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டுக்கள் மூன்றிலும் ‘சகச’ எனும் பதம் காணப்படவில்லை. இதன்படி இக்கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ள கற்குகைகள் மூன்றும் சங்கத்தார்க்கு தானமாகக் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. நாகர் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:

“அதி அஜரிய பதிய மத உபசிக நாகய”

இதன் பொருள், “யானைப் பாகனான பதியின் தாயான பாமர பெண் பக்தை நாகவின்…” என்பதாகும். ஆங்கிலத்தில் இது, “Of the female lay-devotee Naga, mother of Bati, the elephant trainer…” எனப் பொருள்படுகிறது.

தந்திரிமலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூலம் இங்கு நாகர், பரதர் ஆகிய குலத்தவர்கள் வாழ்ந்துள்ளனர் என அறியக் கூடியதாக உள்ளது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்