ரிதி விகாரை மலையில் நாக மகாராஜன் பற்றிய கல்வெட்டு 
slide-1
slide-2
slide-3
previous arrow
next arrow
Arts
9 நிமிட வாசிப்பு

ரிதி விகாரை மலையில் நாக மகாராஜன் பற்றிய கல்வெட்டு 

February 22, 2025 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

குருநாகலில் இருந்து கிழக்கு நோக்கி ரம்பொடகல என்னுமிடத்திற்குச் செல்லும் வீதியில் சுமார் 15 கி.மீ. தூரம் சென்றதும் காணப்படும் சிறிய வீதியினூடாக மேலும் 2 கி.மீ தூரம் பயணம் செய்தால் ரிதிகம என்னுமிடத்தை அடையலாம். இங்கு செல்வதற்கு இன்னுமோர் வழியும் உண்டு. குருநாகல் – கண்டி வீதியில் 19 கி.மீ தூரத்தில் உள்ள மாவத்தகம சந்தியின் வடக்கில் 14 கி.மீ தூரம் சென்றும் ரிதிகமவை அடையலாம்.

இங்குள்ள சிறிய மலைப்பாறையின் மீது ரிதிவிகாரை அமைந்துள்ளது. ரிதிகமவிலிருந்து மலைக்குச் செல்ல இரு வழிகள் உள்ளன. ஒன்று புராதனப் படிக்கட்டுகள் உள்ள பாதை. அடுத்தது புதிதாக அமைக்கப்பட்ட பாதை. இப்பாதை வழியே மலைப்பாறையின் உச்சிப் பகுதிக்குச் சென்றவுடன் அங்கு பெளத்த விகாரை, தூபி போன்றவை காணப்படுகின்றன. இம்மலையின் சரிவுகளிலும், உச்சிப் பகுதியிலும் கல்வெட்டுகள் உட்பட பல புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவை பொ.ஆ.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டுக்குரியவையாகும். 

இங்கு அழகிய இந்துக் கோயில் ஒன்றும் காணப்படுகிறது. இதில் கல்லினால் அழகிய வடிவில் செதுக்கப்பட்டுள்ள எட்டுத் தூண்களுடன், சிறிய மண்டபமொன்றும், அதை அடுத்துக் கருவறையும் காணப்படுகின்றன. கருவறை இயற்கையாக அமைந்துள்ள கற்பாறையைக் கூரையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்களில் திராவிடக் கட்டடக்கலை மரபுடன் செதுக்கப்பட்ட நடனமாடும் பெண்கள்  மற்றும் ஆயுதங்களுடன் ஆண் வடிவங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பொ.ஆ.11 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில், இந்து சமயம் இலங்கையில் செல்வாக்குப் பெற்று விளங்கிய காலப்பகுதியில் இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இன்றும் இலங்கையில் பேணப்பட்டுள்ள முழுமையாகவே கல்லினால் கட்டப்பட்ட ஓரிரு கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

தற்போது இக்கோயில் ‘வரக்கா வெலந்து விஹாரை’ என அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் அனுராதபுரக் காலத்தில் இந்திரகுப்தன் எனும் பிரதானி பலாப்பழம் விற்பனை செய்தானாம். அதனால் இக்கோயிலுக்கு இப்படி ஒரு பெயர் வந்ததாம். ரிதி விகாரை வளாகத்தில் முற்றிலும் கருங்கல்லில் அமைக்கப்பட்ட, மிக அழகிய சிற்பக் கருவூலமாகத் திகழும், வரலாற்றுச் சிறப்புமிக்க திராவிடக் கட்டடக்கலை மரபுடன் கட்டப்பட்ட இவ்வழகிய கட்டடத்திற்கு இப்படி ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

பிரதான ரிதிகம விகாரை

எல்லாள மன்னன் காலத்தில் இப்பகுதியில் இந்து சமயம் மேலோங்கிக் காணப்பட்டுள்ளது என நம்பக் கூடியதாக உள்ளது. எல்லாள மன்னனை வென்று, பொ.ஆ.மு. 101-77 வரை ஆட்சி செய்த துட்டகைமுனு ரிதிவிகாரையை அமைத்துள்ளான். இங்குள்ள பழமை வாய்ந்த ஓலைச்சுவடி ஒன்றில் இந்த இடத்திற்கு முதன்முதலாக துட்டகைமுனு வந்தபோது 500 பெளத்த பிக்குகளையும், 1500 இந்து பிராமணர்களையும் அழைத்துச் சென்றான் என எழுதப்பட்டுள்ளது. பெளத்த பிக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாகப் பிராமணர்கள் இங்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ரிதிகம பகுதியில் பெளத்தர்களை விட இந்துக்களின் செல்வாக்கு அதிகமாகக் காணப்பட்டிருக்க வேண்டும் என யூகிக்கக் கூடியதாக உள்ளது. எல்லாளன் காலத்தில் இப்பகுதி பிராமணர்களின் செல்வாக்கு மேலோங்கியிருந்த இடமாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் இங்கு இந்துசமய வழிபாடு நிலவியிருக்க வேண்டும்.  இதன் தொடர்ச்சியாகவே சோழர் காலத்தில் இங்கு கற்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என நம்ப இடமுண்டு. இக்கோயிலில் காணப்படும் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் பற்றி ஹென்றி பார்க்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கலாநிதி இந்திரபாலா இந்தக் கோயில் பற்றிக் குறிப்பிடுகையில் இது விஜயநகரக் கட்டடக் கலைப்பாணியில் கட்டப்பட்டிருப்பதாகப் குறிப்பிட்டுள்ளார். இக்கோயிலில் உள்ள சிற்பங்களும், தூண்களும் விஜயநகரக் கட்டடக்கலை மரபில் கட்டப்பட்ட கடலாதெனிய விகாரை மற்றும் கோயில் மண்டபத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றன.  

ரிதி விகாரையின் பிரதான வழிபாட்டிடம் மகாவிகாரை என அழைக்கப்படும் சிலை மனைகளாகும். இதில் பாத விகாரை, உட விகாரை என இரு சிலை மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. உயரமான ஒரு பாறையின் மேற்பகுதியில் முன்பக்கமும், வலது பக்கமும் கற்புருவங்கள் வெட்டப்பட்டு, அவற்றின் கீழே உள்ள உட்குழிவான பகுதியில் முன்பக்கம் ஒரு சிலை மனையும், இப்பாறையின் வலது பக்கம் சற்று உயரத்தில் உள்ள மேல் தளத்தில் இன்னுமோர் குழிவான பகுதியில் இன்னுமோர் சிலை மனையும் அமைக்கப்பட்டுள்ளது. இவை துட்டகைமுனு மன்னனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. புத்த பகவானின் பல்வேறு சிலைகள் இச்சிலைமனைகளில் காணப்படுகின்றன.  

இவற்றின் மேற்தளத்தில் உள்ள சிலைமனையின் வாசலில் காணப்படும் வாசல் படிக்கல், அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட கஜ வடிவ கைப்பிடி வரிசையைக் கொண்ட வாசல் படியாகும். பண்டைய காலத்தில் கல்லில் வடிவமைக்கப்பட்ட இதன் கைப்பிடி வரிசையின் கீழே எங்கும் காணக் கிடைக்காத அரிய புடைப்புச் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இடது பக்கம் யானை ஒன்றும், வலது பக்கம் பன்றி ஒன்றும் நிற்க, மரத்தின் கீழே அமர்ந்திருக்கும் ஒரு முனிவரின் சிற்பமே அந்த அரிய சிற்பமாகும். அதன் வடிவமைப்பைப் பார்க்கும் போது இது குள்ள முனிவர் என அழைக்கப்படும் அகத்திய முனிவரின் சிற்பமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

இப்படியில் உள்ள சந்திர வட்டக்கல் அனுராதபுரத்தில் அபயகிரி விகாரை வளாகப்பகுதியில் காணப்படும் சந்திர வட்டக்கல்லை ஒத்ததாகக் காணப்படுகிறது.  இதில் யானை, சிங்கம், குதிரை ஆகியவற்றுடன் பசுவின் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிலைமனையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் ஒன்று இராவணனின் யுத்தம் தொடர்பானது எனக் கூறப்படுகிறது. மூன்று இராட்சத மனிதர்கள் கையில் ஆயுதங்களுடன் காணப்படும் இவ் ஓவியத்தில், மத்தியில் இரண்டு கைகளிலும் போர் ஆயுதங்களுடன் காணப்படுபவர் இராவணன் எனக் கூறுகின்றனர்.

மேலும் இங்கு இன்னும் சில அபூர்வமான ஓவியங்களும் உள்ளன. சுமார் நூறு வட்டமான பீங்கான் கல் வடிவங்கள் இங்குள்ள சிலைமனையில் உள்ளன. இவற்றில் இயேசு கிறிஸ்துவின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை ஒல்லாந்தரினால் இவ்விகாரைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவையாகும். 

ரிதி விகாரை மலையில் மொத்தமாக 10 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் 8 முற்கால பிராமிக் கல்வெட்டுகள் இயற்கையான கற்குகைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஏனைய இரண்டும் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள பிற்கால பிராமிக் கல்வெட்டுகளாகும். பிற்காலக் கல்வெட்டுகளில் ஒன்று நாகர் பற்றிக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு சரசுங்கல எனும் மலைப்பாறை முகட்டில், மலையில் உள்ள தூபிக்குச் செல்ல வெட்டப்பட்டுள்ள கற்படிகளுக்கு அருகில் பொறிக்கப்பட்டுள்ளது. 1930 ஆம் ஆண்டு பேராசிரியர் பரணவிதான இக்கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.

இரண்டு வரிகளில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. முதலாவது வரி 25 அடி 6 அங்குல நீளத்திலும், இரண்டாவது வரி 2 அடி 7 அங்குல நீளத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 10 அங்குல உயரத்தில் ஒவ்வொரு எழுத்துகளும் எழுதப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டு பொ.ஆ.மு. 109 – 103 இலங்கையை ஆட்சி செய்த நாக மன்னனான கல்லாட நாகனின், பேரனான குட்டைகண்ண தீசனின், மகனான மகாதாத்திய மகாநாகனின், மகன் அமந்த காமினி அபயனால் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பெயர்களை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறது. இக்கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:

“தேவனபிய திச ரஜஹ மருமனக்கே திச மஹாரஜஹ மருமனக்கே நாக மஹாரஜஹ புத காமினி அபய தினே குலகம சஹ படகமகே சொவன கடுறேகே”

இதன் பொருள் ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “கடவுளின் நண்பனும், தீசனின் பேரனுமான, திச மகாராஜனின் பேரனான, நாக மகாராஜனின் மகன் காமினி அபயன், குலகம மற்றும் படகம ஆகிய கிராமங்களுக்கு நன்கொடையாக தங்கக் குவளையை வழங்கினான்” என்பதாகும்.

ரிதி விகாரைப் பகுதி 2000 ஆண்டுகளுக்கு முன்பு நாகர் மற்றும் பிராமணர்களின் செல்வாக்குடனும், சோழர் காலத்தில் இந்துசமயச் செல்வாக்குடனும் விளங்கியுள்ளது என்பது இங்கு காணப்படும் கல்வெட்டு, கட்டடங்கள், சிற்பங்கள் மற்றும் பண்டைய ஓலைச் சுவடிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் விடயமாகும். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்