ஹபரண சந்தியிலிருந்து வடமேற்கு நோக்கி மரதன் கடவல ஊடாக அனுராதபுரத்திற்குச் செல்லும் வீதியில், 11 கி.மீ. தூரத்தில், பாதையின் வலது பக்கத்தில் ரிட்டிகல மலை அமைந்துள்ளது. வடஇலங்கைப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான மலை எனக் கருதப்படும் ரிட்டிகல மலை தரை மட்டத்தில் இருந்து 600 மீற்றர் உயரமுடையதாகும். இம் மலை வடக்கு தெற்காக 6.5 கி.மீ நீளமும், கிழக்கு மேற்காக 4 கி.மீ அகலமும் கொண்ட நீண்ட, பெரிய மலைத் தொடராகும். 26 சதுர கி.மீ பரப்பளவில், அடர்ந்த காடுகளைக் கொண்ட இம்மலைத் தொடரில் நான்கு மலைச் சிகரங்கள் காணப்படுகின்றன. ரிட்டிகல பண்டைய காலத்தில் அரிட்ட பர்வதம், அரிட்ட பப்பத்த (அரிட்ட மலை) எனும் பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளது.
இராமாயணத்தில் இலட்சுமணனின் உயிர்காக்க இமயமலைக்குச் சென்று அனுமன் தூக்கிக் கொண்டு வந்த சஞ்சீவி மலையின் துண்டுகளில் ஒன்று ரிட்டிகல மலைப் பகுதியில் விழுந்ததாகவும், இதனால் இம்மலையில் வேறு எங்கும் கிடைக்காத அரிய பல மூலிகைகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தீர்த்த யாத்திரை வந்த முனிவர்கள் பலர் இம்மலையில் உள்ள குகைகளில் தங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அரிட்ட பர்வதம் எனும் பெயர் இம்மலைக்கு வழங்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. தேவநம்பியதீசன் இலங்கையை ஆட்சி செய்துவந்த பொ.ஆ.மு. 187-177 காலப்பகுதியில், இலங்கையில் முதன் முதலாக பெளத்த தர்மத்தைத் தழுவிய அரிட்டன் எனும் இளவரசன் இம்மலைப் பகுதியைப் பரிபாலனம் செய்து வந்ததாகவும், இவனின் பெயரில் இம்மலை அரிட்ட பப்பத எனப் பெயர் பெற்றதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.




அரிட்டன் பெளத்த தர்மத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவன் நாக, சிவ வழிபாடுகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். ஏனெனில் இம்மலையில் சிவ, நாக எனும் பெயர்களைக் கொண்ட பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கிருந்த பிராமிக் கல்வெட்டு பற்றி பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் குறிப்பிடுகையில் இக்கல்வெட்டு சிவ வழிபாட்டுடன் தொடர்புபட்டது எனவும், சிவனால் பாதுகாக்கப்பட்டவன் எனும் பொருளுடைய “சிவகுத்த” எனும் பதம் இக்கல்வெட்டில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேவநம்பியதீசனின் தம்பியான சூரதீசன் அரிட்ட பர்வத மலை அடிவாரத்தில் மங்குலக எனும் விகாரையை அமைத்தான் என மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இது மகுலக எனவும் அழைக்கப்பட்டது. இவ்விடம் எல்லாள மன்னனின் 32 கோட்டைகள் இருந்த இடங்களில் ஒன்றான மகிளநகரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சூரதீசனின் பின் சேனன், குத்திகன் ஆகிய தமிழ் மன்னர்களும், இவர்களுக்குப் பின் அசேல எனும் மன்னனும் இலங்கையை ஆட்சி செய்த பின்பே எல்லாளன் அனுராதபுரத்தைக் கைப்பற்றி இலங்கையை ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாள மன்னனின் பலம் வாய்ந்த கோட்டையான விஜிதநகரக் கோட்டையை துட்டகாமினியின் படைகள் நான்கு மாதங்கள் போர் செய்து கைப்பற்றிய பின், அங்கிருந்து கிரிலகம் எனும் இன்னுமோர் இடத்தை அடைந்தன. அங்கு எல்லாளனின் சிற்றரசனான கிரியன் எனும் தமிழ் மன்னனைக் கொன்றபின், அங்கிருந்து மகிளநகரத்திற்கு படைகள் சென்றன. மூன்று அகழிகளால் சூழப்பட்ட இக்கோட்டைக்கு ஒரே ஒரு கோட்டைக்கதவு மட்டுமே இருந்ததாகவும், மூன்று மாதங்கள் மகிளநகரக் கோட்டையை முற்றுகையிட்ட பின் அந்நகரத்தின் படைத் தலைவனை துட்டகாமினி கொன்றதாகவும் மகாவம்சம் கூறுகிறது.
ரிட்டிகலவில் நான்கு மலைக் குன்றுகளும், ஏராளமான மலைப் பாறைகளும் காணப்படுகின்றன. இம்மலையில் 6 இடங்களில் கற்குகைகளும், கல்வெட்டுகளும் உள்ளன. இவை ஆண்டியாகந்த (ஆண்டிமலை), நா உள்பொத்த, மறக்கல உள்பொத்த, வேவல்தன்ன, கரம்ப ஹின்ன, ஹித்தரகம ஹின்ன ஆகிய இடங்களாகும். இவ்விடங்களில் மொத்தமாக 70 க்கும் மேற்பட்ட இயற்கையான கற்குகைகள் அமைந்துள்ளன. இவற்றில் 59 கற்குகைகளில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. கற்புருவங்கள் வெட்டப்பட்ட பல குகைகளில் பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கற்குகைகளில் மொத்தமாக 34 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 3 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
இவற்றில் ஆண்டியாகந்தவில் 21 கற்குகைகளும், 13 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன. நா உள்பொத்தவில் 18 கற்குகைகளும், 9 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 3 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும், மறக்கல உள்பொத்தவில் 13 கற்குகைகளும், 8 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், வேவல் தன்னவில் 2 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், கரம்ப ஹின்னவில் 2 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், ஹித்தரகம ஹின்னவில் 7 கற்குகைகளும் காணப்படுகின்றன.
பெருமகன் நாகன் பற்றிய மூன்று கல்வெட்டுகள்
மறக்கல உள்பொத்தவில் காணப்படும் 8 கல்வெட்டுகளில் நாகர் பற்றிய 4 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை பற்றிய விபரங்கள் பின்வருமாறு,
“பருமக மஹாரேதச புத பருமக நாகச லேனே அகட்ட அனகட்ட சட்டு திச சகச தினே”
இதன் பொருள், The cave of the chief Naga, son of the chief Mahareta, is given to the Sangha of the four quarters present and absent என்பதாகும். தமிழில் இது “பெருமகன் மஹாரேதனின் மகன் பெருமகன் நாகனின் குகை நாலா திசைகளிலும் இருந்து வரும் சங்கத்தார்க்கு அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் வழங்கப்பட வேண்டும்” எனப் பொருள்படும்.
இரண்டாவது கல்வெட்டும் மேலே உள்ள கல்வெட்டைப் போலவே எழுதப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு,
“பருமக நாக புதஹ பருமக மஹாரேதஹ லேனே அகட்ட அனகட்ட சட்டு திச சகச தினே”
இதன் பொருள், The cave of the chief Mahareta, son of the chief Naga, is given to the Sangha of the four quarters present and absent” என்பதாகும். தமிழில் இது “பெருமகன் நாகனின் மகன் பெருமகன் மஹாரேதனின் குகை நாலா திசைகளிலும் இருந்து வரும் சங்கத்தார்க்கு அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் வழங்கப்பட வேண்டும்” எனப் பொருள்படும்.
மூன்றாவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு,
“பருமக நாக புத பருமக ரேவதச லேனே”
இதன் பொருள், “பெருமகன் நாகனின் மகன் பெருமகன் ரேவதசனின் குகை” என்பதாகும். இது ஆங்கிலத்தில் “The cave of the chief Revatha, son of the chief Naga” எனப் பொருள்படும்.



பெருமகன் சூள நாகன் பற்றிய கல்வெட்டு
நாகர் பற்றிக் குறிப்பிடும் நான்காவது கல்வெட்டு இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள மூன்று கல்வெட்டுகளிலும் பெருமகன் நாகன் என எழுதப்பட்டுள்ள போதும் நான்காவது கல்வெட்டில் பெருமகன் சூள நாகன் என்றே எழுதப்பட்டுள்ளது. இதன் விபரங்கள் பின்வருமாறு,
“பருமக கதலி புத பருமக சூட நாகஹ க
பருமக புசமித ஜித உபசிக சுமய க லேனே சகச”
இதன் பொருள், “பெருமகன் கதலியினதும், பெருமகன் பூஷ மித்தவின் மகளும், பாமர பெண் பக்தை சும்மாவினதும் மகனான பெருமகன் சூளநாகனின் குகை” என்பதாகும். ஆங்கிலத்தில் இதன் பொருள், The cave of the chief Culanaga, son of the chief Kadali, and of the female lay devotee Summa, daughter of the chief Pussamitta, is given to the Sagasha” என்பதாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்து பார்க்கையில் ரிட்டிகலவில் உள்ள மறக்கல உள்பொத்த பகுதியில் சூள நாகன், நாகன் எனும் இரண்டு நாகர் குலத்தவர்கள் பெளத்த சமயம் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்பு வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேலும் இவர்கள் இருவரும் இப்பகுதியை பரிபாலனம் செய்து வந்த தலைவர்கள் என்பது இவர்களுக்கு வழங்கப்பட்ட பெருமகன் எனும் பட்டத்தின் மூலம் உறுதியாகத் தெரிகிறது.









நாகர் பற்றிக் குறிப்பிடும் பிராமணயாகம கல்வெட்டுகள்
அனுராதபுரம் மாவட்டத்தில், அனுராதபுரம் நகரின் வடகிழக்கில் அமைந்துள்ள ஹொரவபொத்தானையின் தெற்கில் பறங்கியாவாடி என்னுமிடம் காணப்படுகிறது. இவ்விடத்தின் மேற்கில் 4 கி.மீ. தூரத்தில் பிராமணயாகம என்னுமிடம் அமைந்துள்ளது. பிராமணயாகம எனும் பெயரில் இன்னும் சில பண்டைய இடங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள பிங்கிரிய எனும் நகரத்தின் அருகிலும் உள்ள பிராமணயாகம எனும் இடம் இவற்றில் குறிப்பிடத்தக்கது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனுராதபுர மாவட்ட பிராமணயாகமவில் பண்டைய காலம் முதல் பிராமணர்கள் வாழ்ந்து வந்ததோடு இங்கிருந்த கற்குகைகளில் சிவனையும், நாகத்தையும் வழிபட்டு வந்துள்ளனர் என்பது இங்கு பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது. இங்குள்ள இயற்கையான மலைக்குகைகளில் கற்புருவங்கள் செதுக்கப்பட்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தமாக 19 முற்கால பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இக்கல்வெட்டுக்களில் சிவன் எனும் பெயர் பொறிக்கப்பட்ட 3 கல்வெட்டுகளும், சிவனின் வாகனத்தைக் குறிக்கும் நந்தி எனும் பெயர் பொறிக்கப்பட்ட 2 கல்வெட்டுகளும், நாக எனும் பெயர் பொறிக்கப்பட்ட 3 கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
கிராமத் தலைவன் நாகன் பற்றிய இரண்டு கல்வெட்டுகள்
இவற்றில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கல்வெட்டுகளின் விபரங்களைப் பார்க்கலாம். முதலாவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு,
“கமிக நாகக லேனே சகச துபதக”
இதன் பொருள், “The cave of the village councillor Naga, [is given] to the Sangha. (Granted also are) two allotments.” என்பதாகும். தமிழில் இது “கிராமத் தலைவன் நாகனின் குகை சங்கத்தார்க்கு…இரண்டாகப் பங்கிட்டு வழங்கப்பட்டது.” எனப் பொருள்படும்.
நாகர் பற்றிக் குறிப்பிடும் இரண்டாவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு,
“கமிக நாக புத சுமனஹ லேனே பதக்க சயே”
இதன் பொருள், “The cave of Sumana, son of the village councillor Naga. Six allotments.” தமிழில் இது, “கிராமத் தலைவன் நாகனின் மகனான சுமணவின் குகை. ஆறு பகுதிகளாகப் பங்கிடப்பட்டுள்ளது.” எனப் பொருள்படுகிறது.


சுவாமி அல்லது பரத குல நாகன் பற்றிய கல்வெட்டு
நாகர் பற்றிக் குறிப்பிடும் மூன்றாவது கல்வெட்டு 5 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு,
“ப[த] நா[க]ஹ க பத சுமனஹ க பத சுமன- குதஹ க
பருமக தத ஜிய உபசிக ராம லேனே சகச அக[ட]
அனகட
சமணி பலய க அச தம குதஹ க
.. .. .. ரஹ க”

இதன் பொருள் ஆங்கில மொழியில், “The cave of lord Naga, and of lord Sumana, and of lord Sumanagutta, and of the female lay devotee Rama, daughter of the chief Datta, is given to the Sangha, present and absent. Also of the nun Pala, and of the venerable Dhammagutta and of .. .. .. raha” என்பதாகும்.
தமிழில் இது “சுவாமி நாகனினதும், சுவாமி சுமனவினதும், சுவாமி சுமனகுத்தவினதும், பாமர பெண்பக்தை இராமவினதும், பெருமகன் தத்தவின் மகளினதும் குகை சங்கத்தார்க்கு அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் மாடக்கன்னி பாலாவினதும், மரியாதைக்குரிய தம்மகுத்தவினதும், .. .. .. ரஹவினதும்.. ..” எனப் பொருள்படும்.