நாகபர்வத மலை எனும் பம்பரகஸ்தலாவ மலையில் நாகர் பற்றிய கல்வெட்டுகள்
Arts
16 நிமிட வாசிப்பு

நாகபர்வத மலை எனும் பம்பரகஸ்தலாவ மலையில் நாகர் பற்றிய கல்வெட்டுகள்

September 22, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள உகந்தை மலையின் தென்மேற்கு பக்கத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் நாகபர்வத மலை அமைந்துள்ளது. இலங்கையில் இரண்டு பெரிய வன விலங்குகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று தீவின் வடமேற்கில் உள்ள வில்பத்து எனும் வனமாகும். அடுத்தது தென்கிழக்கில் உள்ள யால எனும் வனமாகும். யால வனத்தின் கிழக்குப் பகுதி குமண என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் நாகபர்வத மலை அமைந்துள்ளது.

நாகபர்வத மலைக்குச் செல்வதற்கு சீரான பாதைகள் எதுவும் கிடையாது. உகந்தையில் இருந்து குமண பறவைகள் சரணாலய நுழைவாயில் ஊடாக தெற்கு நோக்கிச் செல்லும் கிறவல் பாதையில் 4 கி.மீ தூரத்தில் உள்ள இராட்சத கல் அடுப்பைக் கடந்து, மேலும் 2 கி.மீ தூரம் வரை சென்றதும் காணப்படும் கிரிகள களப்புச் சந்தியில் இருந்து மேற்கு நோக்கிப் பிரிந்து செல்லும் ஒரு சீரற்ற, கரடுமுரடான பாதை வழியாக மேலும் 14 கி.மீ தூரம் பயணம் செய்தால் நாகபர்வத மலையை அடையலாம். இம்மலைப் பகுதிக்குச் செல்லும்போது அடர்ந்த காட்டின் மத்தியில் ஓடும் சிற்றாறுகளைக் கடந்தே செல்ல வேண்டும். அதுவும் குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே இப்பகுதிக்குச் செல்ல முடியும்.

நாகத்தின் தலை போன்ற அமைப்புடன் காணும் நாகபர்வத மலை

நாகபர்வத மலை மிகவும் வித்தியாசமான முறையில் காணப்படுகிறது. ஓர் இராட்சத நாக பாம்பு படமெடுத்த வண்ணம் இருப்பது போன்ற வடிவத்தில் இம்மலை அமைந்துள்ளது. இம்மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது கிழக்கில் உகந்தமலைக் கோயிலும், வடக்கில் குடும்பி மலையும், இவைகளுக்கு இடையில் சலவைக் களப்பும், அதை அடுத்து வங்கக் கடலும் அழகிய காட்சிகளாகத் தெரியும். இங்கு மேலும் சில சிறிய மலைக் குன்றுகளும் அமைந்துள்ளன. முட்டை வடிவில் ஒரு மலைக் குன்றும் இங்கு காணப்படுகிறது.

இம்மலைப் பகுதியில் பம்பர என்றழைக்கப்படும் பெரிய குளவிகள் அதிகளவில் மரங்களில் காணப்படுவதால் தற்போது இப்பகுதி பம்பரகஸ்தலாவ என அழைக்கப்படுகிறது. இங்குள்ள பிராமிக் கல்வெட்டு ஒன்றில் இதன் பெயர் ‘நாக பவத்த’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாக பவத்த என்பது நாக பர்வதம் எனும் சொல்லின் சுருக்கமாகும். இதன் காரணமாகவே இம்மலை நாகபர்வத மலை என பண்டைய காலத்தில் பெயர் பெற்று விளங்கியது.

நாகபர்வத மலைப்பகுதி ஜன சஞ்சாரமே இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியாகும். இங்கு மலைகளும், பாறைகளும் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலைகளிலும், பாறைகளிலும்  இயற்கையாகவே அமைந்துள்ள நூற்றுக்கணக்கான கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் கற்புருவங்கள் வெட்டப்பட்டு, அவற்றின் கீழே கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கற்குகைகள் கரடிகள் வாழும் உறைவிடங்களாக விளங்குகின்றன. மனித நடமாட்டம் இல்லாத இக்குகைகள் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் வாழ்வதற்கு உகந்த இடங்களாகக் காணப்படுகின்றன. இக் குகைகளுக்குச் செல்லும்போது மிகவும் அவதானமாகச் செல்ல வேண்டியுள்ளது.

நாகபர்வத மலையில் இராவணன் பற்றிய கல்வெட்டு

நாகபர்வத மலைப்பகுதி இராவணனின் உப இராஜதானிகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இராவண இராச்சியத்தின் உப நகராக உகந்தை, குடும்பிமலை ஆகிய இடங்கள் அமைந்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. மட்டக்களப்பு மான்மியமும் இவ்விரு இடங்களுக்கும் இராவணனுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி விபரிக்கிறது. இதன்படி இவ்விரு இடங்களுக்கு மிகவும் அருகில் உள்ள நாகபர்வத மலையும் இராவணனுடன் நெருங்கிய தொடர்புடைய இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

நாகபர்வத மலையில் காணப்படும் பிராமிக் கல்வெட்டொன்றில் இராவணன் தொடர்பான செய்தி பொறிக்கப்பட்டுள்ளமையை இக்கூற்றுக்கு ஆதாரமாகக் குறிப்பிடலாம். இக்கல்வெட்டில் “பெருமகன் இராவணனின் மகள் சொஹிலியின் குகை” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பேராசிரியர் எஸ். பரணவிதான அவர்களால் 1970 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Inscription of Ceylon – Vol.1 – Early Brahmi Inscriptions’ எனும் கல்வெட்டுகளின் தொகுப்பு நூலில் 515 ஆவது கல்வெட்டாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலில்  இக்கல்வெட்டு “பருமக வணிஜ திசஹ லேனே சகச” – “Parumaka vanijha Tisaha lene sagasa” எனவும், ஆங்கில மொழிபெயர்ப்பில் “The cave of the chief Tissa, the merchant [is given] to the Sangha” எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு உட்பட 16 கல்வெட்டுகளின் விபரங்கள் பிழையாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி சூரிய குணசேகர தான் எழுதிய சேத்திகாசிக்க ராவண எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். “ராவண ஜித சோஹிலி” (இராவணனின் மகள் சோஹிலி) என கல்வெட்டில் உள்ளதாகவும், அதை மாற்றி “வணிஜ திசஹ” (வணிகன் தீசன்) என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே விடயத்தை கலாநிதி மிரிண்டோ ஒபேசேகர, ஜயரத்ன பதிர ஆரச்சி, தனேஷ் கொடிப்பிலி ஆரச்சி, கே.டி.எஸ். சுதுசிங்க ஆகிய அறிஞர்களும் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இக்கல்வெட்டு மூலம் இராவணன் நாகபர்வத மலையுடன் தொடர்புபட்டிருந்தமை தெளிவாகத் தெரிகிறது. மேலும் கொழும்பு நகரின் அருகில் உள்ள பன்னிபிட்டிய என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தெவ்ரம் விகாரை வளாகத்தில் உள்ள ‘ஸ்ரீ ராவண மந்திரய’ எனும் பெயரில் அழைக்கப்பட்டு வரும் இராவணன் கோயிலின் முன்பாக இக்கல்வெட்டின் பிரதி ஒன்று நிறுவப்பட்டு, அதில் “பருமக ராவண ஜிதி சோஹிலி லேனே சகச” என எழுதப்பட்டுள்ளமை இங்கே சிறப்பாக உற்று நோக்கத்தக்கது.

இராவணனின் மகள் வாழ்ந்த குகை

இராவணனின் பெயர் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டில் இராவணனின் மகள் ‘சோஹிலி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் இராவணனின் ஆட்சி நிலவியமையும், அவனது பரம்பரையினர் வாழ்ந்திருந்தமையும் உறுதியாகிறது.

இராமாயணம் என்பது ஓர் காவியம் எனவும், கற்பனைக் கதை எனவும், இதற்கு சரித்திரப் பிண்ணனி கிடையாது எனவும், இதன் கதாபாத்திரங்கள் கவிஞர்களினால் படைக்கப்பட்டவை என்பதும் பலரின் கருத்தாக உள்ளது. ஆனால் இராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களான இராவணன், இந்திரஜித், விபீஷனன், கும்பகர்ணன், குபேரன், கைகேசி, விஸ்ரவசு, புலஸ்தியர் ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல இலங்கை முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இராவணன் இலங்கை வேந்தன் என்பதும், இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இராவணனின் நெருங்கிய உறவினர்கள் பற்றிய விடயங்கள் உண்மையானவை என்பதும் உறுதியாகிறது.

பிராமிக் கல்வெட்டுகளின் காலத்திற்கும் இராவணனின் காலத்திற்கும் குறைந்தபட்சம் 1500 ஆண்டுகால வேறுபாடு உள்ளது. இராவணன் மற்றும் அவனது நெருங்கிய உறவினர்கள் பயன்படுத்திய கற்குகைகளை இராவணன் இறந்த பின்பு அவனது பரம்பரையினர் அல்லது அரசப் பிரதானிகள், அல்லது விசுவாசிகள் பேணிப் பாதுகாத்து வந்திருக்க வேண்டும். அல்லது இக்குகைகளில் இராவணன் மற்றும் அவனது நெருங்கிய உறவினர்களை தெய்வங்களாகப் போற்றி பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்திருக்க வேண்டும். அல்லது இராவணன் மற்றும் அவனது நெருங்கிய உறவினர்களின் பெயர்களை அவனின் பரம்பரையினர், அரச பிரதானிகள், விசுவாசிகள் போன்றோர் தங்களுக்கு சூடிக் கொண்டிருக்க வேண்டும்.

இப்படியான மூன்று தரப்பினரின் பரம்பரையினர் இராவணன் மற்றும் அவனது நெருங்கிய உறவினர்கள் பயன்படுத்திய கற்குகைகளில், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட காலத்தில்  இவர்களின் பெயர்களை எழுதியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் குகையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டே நாகபர்வத மலையில் காணப்படுகிறது.

கதிர்காம பாண்டிய சத்திரிய மன்னர்களின் ஆட்சி நிலவிய இடம்

பொ.ஆ.மு 3 ஆம், 4 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் கதிர்காம பாண்டிய சத்திரியர்களின் இளைய சகோதரனாகிய மகாநாகனின் ஆட்சி அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பரந்திருந்தது. இக் காலப் பகுதியின் பின்பு பெளத்த மதம் இங்கு அறிமுகமாகியிருந்த போதும் கதிர்காமத்தை ஆட்சி செய்த இந்துக்களாகிய கதிர்காம சத்திரியர்களின் பரம்பரையில் சிலர் நாக வழிபாட்டைப் பேணி வந்துள்ளனர். கதிர்காமம், திஸ்ஸமகராமை ஆகிய பகுதிகளில் நாகவழிபாடு தொடர்ந்தும் பேணப்பட்டு வந்தமை பற்றி தொலமியின் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கிறிஸ்துவுக்கு பிற்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. எனவே இக் காலப்பகுதியில் நாக வணக்கத்தைப் பேணி வந்த கதிர்காம பாண்டிய சத்திரிய மன்னர்களால் நாகபர்வத மலைப் பகுதியிலும் நாகவழிபாடு பேணப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. யால வனப்பகுதியில் உள்ள கொட்டதாமுஹெல மலை, போவத்தகல மலை ஆகிய இடங்களில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் இப்பகுதியில் இவர்களின் ஆட்சியை உறுதி செய்கின்றன.   

உன்னரசுகிரி இராஜதானியின் முக்கிய பகுதி

அம்பாறை மாவட்டத்தில் புராதன காலத்தில் அமைந்திருந்த உன்னரசுகிரி இராஜதானி பற்றி மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் சன்னாசி மலையே என வி.சி. கந்தையாவும், குடும்பிமலையே என சி. கணபதிப்பிள்ளையும் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வாளர்களின் குறிப்புக்களின்படி பானமைக்கும், மாணிக்க கங்கைக்கும் இடையிலுள்ள ஓர் மலையே உன்னரசுகிரி இராஜதானி எனத் தெரிய வருகிறது பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை இவ்வாட்சிப் பிரிவு இப்பகுதியில் இருந்துள்ளது.

பானமைக்கும், மாணிக்க கங்கைக்கும் இடையில் மொத்தமாக 18 மலைகள் புராதன வரலாற்றுடன் தொடர்புபட்டுக் காணப்படுகின்றன. இவற்றில் ஓர் இராஜதானிக்குரிய புராதன இடிபாடுகளையும், அதிகமான கல்வெட்டாதாரங்களையும் கொண்ட 5 மலைகள் உள்ளன. ஒன்று குடும்பி மலை ஏனையவை நாகபர்வத மலை, போவத்தகல மலை, கொட்ட தாமுஹெல மலை, சித்துள்பவ்வ எனும் சித்தர் மலை ஆகியவையாகும். இவற்றில் குடும்பிமலை பற்றி சி. கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். அதேவேளை நாகபர்வத மலை, போவத்தகல மலை, கொட்ட தாமுஹெல மலை, சித்தர் மலை ஆகிய மலைகளுடன் உன்னரசுகிரி இராஜதானிக்கு இருக்கும் தொடர்பை யாரும் குறிப்பிடவில்லை. ஓர் இராஜதானிக்குரிய அமைப்புடன் காணப்படும் நாகபர்வத மலை, உன்னரசுகிரி ஆட்சிப் பிரிவின் ஓர் முக்கிய பகுதியாக விளங்கியிருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

பண்டைய நாகர் குடியிருப்பு

நாகபர்வத மலைப் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காட்டின் நடுவில் புராதன கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன. மலை மீதும், அடிவாரத்திலும், மலையைச் சுற்றிய பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. கற்தூண்களும், புராதன செங்கற்களும் ஆங்காங்கே தெரிகின்றன. மலை அடிவாரத்திலிருந்து உச்சிக்கு செல்வதற்கான இரண்டு பக்கங்களில் கற்படிகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை இடையிடையே மறைந்தும், சிதைந்தும் உள்ளன. மலையடிவாரத்தில் கற்தூண்களை மட்டும் கொண்ட கட்டிட அத்திவாரங்கள் சிலவும் காணப்படுகின்றன. இவற்றிடையே லிங்கக் கல்லைப் பொருத்தக் கூடிய வட்டமான குழியுடன் வட்ட வடிவில் ஆவுடையார் போன்ற கற்கள் சிலவும் காணப்படுகின்றன. இவை இங்கு காணப்பட்ட லிங்க வழிபாட்டுச் சின்னங்களின் சிதைவுகளாக இருக்கலாம்.

இப்பகுதியில் மலையாறு எனும் சிற்றாறு ஒன்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட புராதன அணைக்கட்டின் சிதைவுகளும் காணப்படுகின்றன. இவை யாவும் பண்டைய காலத்தில் இங்கு செல்வாக்குப் பெற்றிருந்த நாகர் குடியிருப்பின் அடையாளங்களாகும்.

நாகபர்வத மலையின் குகைகளும் இடிபாடுகளும்

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களில் இப்பகுதியில் வாழ்ந்த ஆதிக் குடிகளான நாகர்களால் இங்கு நாகவழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டிருக்க வேண்டும். நாக மலையிலிருந்து சுமார் 500 யார் தூரத்தில் அமைந்துள்ள சிறிய பாறைத் தொடரின் மத்தியில் வடக்குத் தெற்காக ஒரு குகை அமைந்துள்ளது. சுமார் 225 அடி சுற்றளவைக் கொண்ட இக்குகையில் ஆதிகால மக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. இவர்கள் வரைந்த ஓவியங்கள் சிலவும் இங்கு காணப்படுகின்றன. குகையின் மூன்று பக்கங்களிலும் சுவர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. செங்கட்டிகளைக் கொண்டு இச்சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுவர்களின் பின்னால் செங்கற்களைக் கொண்டு அன்னப் பறவை சிற்பங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. குகையின் முன்பக்கம் சுமார் 15 அடி அகலமும், 50 அடி நீளமும் கொண்ட மண்டபம் ஒன்றிருந்ததற்கான அடித்தளமும் காணப்படுகின்றது.

கற்தூண்கள் சிலவும், வாசற் படிக்கல்லும் இம்மண்டபத்தில் உள்ளன. மண்டபத்தின் வடக்குப் புறத்தில் தாழ்வாரம் இருந்ததற்கான அடையாளமும் உள்ளது. கிழக்கு நோக்கிய வாசலையுடைய இக்குகை மண்டபமே புராதன நாக வழிபாட்டுத் தலமாக இருந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. கிழக்கு நோக்கிய பிரதான வாசலும், மண்டபத்தின் வடக்கில் தாழ்வாரத்தின் பக்கம் இன்னுமொரு வாசலும் அமைக்கப்பட்டுள்ளது.

பெருந்தொகையான பிராமிக் கல்வெட்டுகள்

அம்பாறை மாவட்டத்தில் அதிகப்படியான பிராமிக் கல்வெட்டுகளை உடைய இடம் ரஜகல எனும் இராச மலையாகும். இங்கு 48 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக அதிக பிராமிக் கல்வெட்டுகளைக் கொண்ட இடமாக நாகபர்வத மலை காணப்படுகிறது. இங்கு மொத்தமாக 38 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் 21 கல்வெட்டுக்கள் 1970 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டன. மிகுதி 17 கல்வெட்டுகள் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.

நாகபர்வத மலை பற்றியும், இங்குள்ள பிராமிக் கல்வெட்டுகள் பற்றியும் முதன் முதலாக சி.டபிள்யூ. நிக்கலஸ் எனும் ஆங்கிலேய அறிஞர் ஆராய்ந்து குறிப்புகளை வெளியிட்டார். 1963 ஆம் ஆண்டு ரோயல் ஆசியக் கழக அறிக்கையில் இவை தொடர்பான விபரங்கள் வெளிவந்தன. பொ.ஆ.மு 2 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ரோகண இராச்சியத்தை ஆட்சி செய்து வந்த கோதாபயன் என்பவனால் இங்கு நாகபப்பத்த விகாரை அமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குள்ள பெரிய கற்குகையில் 26 அடி நீளமான படுத்த நிலையில் உள்ள புத்தர் சிலை ஒன்று காணப்படுகிறது. புதையல் பிரியர்களால் இதன் தலை உடைக்கப்பட்டு, வயிற்றுப்பகுதி சிதைக்கப்பட்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

சிவன், நாகர் பற்றிய கல்வெட்டுகள்

இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் நாகர் பற்றிய 3 கல்வெட்டுகளும், சிவன் பற்றிய 3 கல்வெட்டுகளும், சுதர்சன எனும் சொல் பொறிக்கப்பட்ட 3 கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர தமிழ் பிராமிக்கே உரிய ‘பருமகன்’ எனும் சொல் பொறிக்கப்பட்ட நான்கு கல்வெட்டுகள் நாகபர்வத மலையில் காணப்படுகின்றன. அத்துடன் இராவணனின் பெயர் பொறிக்கப்பட்ட ஓர் கல்வெட்டும் இங்கே உள்ளது. இக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை இங்குள்ள 200 அடி நீளமான ஓர் மலைக்குகையில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை பொ.ஆ.மு. 3 ஆம், 2 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவையாகும். இவற்றில் சில பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டுக்குரியவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பெருமகன் எனும் பட்டத்தையுடைய நாகர் தலைவன் இங்குள்ள குகைகளுக்குச் சொந்தக்காரனாக இருந்தமையும் சில கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.

இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சுதர்சன’ என்பது மகா விஷ்ணுவின் சக்கரத்தின் பெயராகும். இலங்கையில் சுதர்சன சக்கரத்தை மூலமூர்த்தியாகக் கொண்ட இரு கோயில்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் ஒன்று யாழ். மாவட்டத்தில் உள்ள வல்லிபுரம் என்னுமிடத்தில் உள்ளது. இரண்டாவது ஆலயம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாணந்துறையில் அமைந்திருந்தது. இவை போன்ற சுதர்சனச் சக்கர வழிபாடு நாகமலையிலும் நிலவியிருக்க வேண்டும் என்பது இக்கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.

நாகர் குலம் பற்றிக் கூறும் கல்வெட்டு 

இங்கு காணப்படும் நாகர் பற்றிய மூன்று கல்வெட்டுகளில் ஒன்றிலே தான் ‘நாகபர்வதம்’ எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் மூலம் பம்பரகஸ்தலாவ மலைப்பகுதியில் நாக வழிபாடு, சிவ வழிபாடு மற்றும் விஷ்ணுவின் சுதர்சனச் சக்கர வழிபாடு போன்றவை காணப்பட்டுள்ளன என்பதை உறுதியாகக் கூறலாம்.

இங்கு பொறிக்கப்பட்டுள்ள நாகர் பற்றிய மூன்று கல்வெட்டுகளில் முதலாவது கல்வெட்டு நாகரின் குலம் பற்றிக் கூறுகிறது. இதன் விபரங்கள் பின்வருமாறு:

பருமக படகரக நாக குலஹக கோதி மதஹக லேனே

இது தமிழில் “அரச சமையல் கூடத்தின் தலைமை அதிகாரியான பெரு மகன் நாகனின் குலத்தவரினதும், கோதி மாதாவினதும் குகை” எனப் பொருள்படும். ஆங்கிலத்தில் இதன் பொருள், “The cave of the family of the chief Naga, the Superintendent [of the] royal kitchen, and of Goti mata” என்பதாகும்.

இக்கல்வெட்டு நாகரைப் பற்றிய மிக முக்கியமான குறிப்பாகும். இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குலம் எனும் பதத்தை பேராசிரியர் பரணவிதான குடும்பம் என குறிப்பிட்டுள்ளார். இதனால் இது நாக வம்சத்தைக் குறிப்பதற்குப் பதிலாக நாக வழிபாட்டைத் தமது குல வழிபாடாகக் கொண்டிருந்த குடும்பத்தையே குறிப்பிடுகிறது என பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன்படி நாகபர்வத மலைப்பகுதியில் நாக வழிபாடு நிலவியமை உறுதியாகிறது.

கிராமத் தலைவன் நாகன் பற்றிய கல்வெட்டு

நாகர் பற்றிய இரண்டாவது கல்வெட்டில் பின்வரும் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:

கமிக நாக புத யச தேரச லேனே சுதசன [சட்டு] திச சகச தினே   

இதன் பொருள், “கிராமத் தலைவன் நாகனின் மகனான யச எனும் தேரரின் சுதஸ்சன எனும் பெயருடைய கற்குகை நாலா திசைகளிலும் இருந்து வரும் சங்கத்தாருக்கு வழங்கப்பட்டது” என்பதாகும். ஆங்கில மொழியில் இது “The cave [named] Sudassana, of the elder Yasa, son of the village councillor Naga, is given to the sangha, of the four quarters” எனப் பொருள்படுகிறது.

நாகபர்வத மலை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு

இங்கு காணப்படும் நாகர் பற்றிய மூன்றாவது கல்வெட்டு இப்பகுதியில் முக்கிய கல்வெட்டாகும். இக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:

படத மிதென மபிட நாக பவத செனசனே

இதன் பொருள், “மரியாதைக்குரிய மித்தவினால் நாக பர்வதத்தில் கட்டப்பட்ட குடியிருப்பு” என்பதாகும். ஆங்கிலத்தில் இது “The residence at Nagapabbata, caused to be built by the Venerable Mitta” எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இங்குள்ள மலையின் பெயர் நாகபர்வதம் என்பது இக்கல்வெட்டின் மூலமே எமக்குத் தெரியவருகிறது.


ஒலிவடிவில் கேட்க

5486 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்